திங்கள், 31 ஆகஸ்ட், 2009

தங்கமணியும் தமிழ் இலக்கணமும்

காதலிக்கும்போது அவள் மைவிழிகளில்
ஒரு தண்மை இருந்தது அது அவள்
பண்புத்தொகையென நான்
பரவசமடைந்திருந்தேன்

படபடவென சலசலவென அவள்
இரட்டைக்கிளவியாய் பேசிய பாங்கில்
என் இதயத்தினை இழந்திருந்தேன்.

என்னங்க ஏங்க எப்படிங்க என்று
எப்போதும் வியங்கோள் வினைமுற்றாய்தான்
என்னை அவள் விளித்திருப்பாள்.

உவமைகளாலும் உவமேயங்களாலும்
அவளை நான் அவளை புகழ்கையில்
இன்னிசையளபடையாய்
புன்னகை புரிந்திருந்தாள்.

தெரிந்தே ஒருநாள் வினைமுற்றிற்று.
திருமணம் நடந்தது
காலமும் கடந்தது

பண்புத்தொகை வினைத்தொகையாயிற்று
திட்டினாள்
திட்டுகிறாள்
திட்டுவாள்

இரட்டைக்கிளவி
அடுக்குத்தொடராயிற்று
தினம் தினம்
ஆயிரம் ஆயிரம் கேள்விகள்

என்னங்க ஏங்க எனும்
வியங்கோள் வினைமுற்று
ஏய் ஓய் என
ஈறு கெட்ட எதிர்மறை பெயரெச்சமானது.

இன்னிசையளபடை தினம்
சொல்லிசையளபடையாயிற்று

வசந்தம் என்பதே என் வாழ்வில்
இறந்த கால வினைமுற்று ஆயிற்று

வடிவேலும் பார்த்திபனும் போல
தாமிராவும் ரமாவும் போல
என் வாழ்வும் பகாபதமாயிற்று.
6 கருத்துகள்:

துபாய் ராஜா சொன்னது…

அருமை நண்பரே.தங்கமணியும் தமிழ் இலக்கணமும் ஒப்பீடு அழகு.

//இரட்டைக்கிளவி
அடுக்குத்தொடராயிற்று
தினம் தினம்
ஆயிரம் ஆயிரம் கேள்விகள்

என்னங்க ஏங்க எனும்
வியங்கோள் வினைமுற்று
ஏய் ஓய் என
ஈறு கெட்ட எதிர்மறை பெயரெச்சமானது.

இன்னிசையளபடை தினம்
சொல்லிசையளபடையாயிற்று

வசந்தம் என்பதே என் வாழ்வில்
இறந்த கால வினைமுற்று ஆயிற்று

வடிவேலும் பார்த்திபனும் போல
தாமிராவும் ரமாவும் போல
என் வாழ்வும் பகாபதமாயிற்று.//

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை.

காதலி மனைவியானதே கலகங்களுக்கு காரணம்.
காதலி நல்ல மனைவியாகலாம். மனைவி நல்ல காதலியாக இருக்கமுடியாது.

கிட்டப்போனால் முட்டப்பகைன்னு பெரியவங்க சும்மாவா சொல்லியிருக்காங்க.....

கவிதைகள் தொடரட்டும்.வாழ்த்துக்கள்.

தங்கராசு நாகேந்திரன் சொன்னது…

முதல் வருகைக்கும் உங்கள் ரசனைமிக்க கருத்துக்கும் நன்றி ராஜா

பழமைபேசி சொன்னது…

வாழ்த்துகள்!

வலைப்பூவை அறிமுகப்படுத்திய சரவணன் ஐயா அவர்கட்கும் நன்றி!

தங்கராசு நாகேந்திரன் சொன்னது…

வாங்க பழமை பேசி அண்ணா
உங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி

உங்களுக்கு எனது வலைப்பூவை அறிமுகப்படுத்திய அய்யா சரவணன் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி

பெயரில்லா சொன்னது…

//தாமிராவும் ரமாவும் போல
என் வாழ்வும் பகாபதமாயிற்று.//

தங்கமணி தாமிரா உங்களையெல்லாம் நல்லா மூளைச்சலவை செஞ்சிருக்காரு. :)

//பண்புத்தொகை வினைத்தொகையாயிற்று//

நல்லா எழுதியிருக்கீங்க

தங்கராசு நாகேந்திரன் சொன்னது…

வாங்க சின்ன அம்மினி
உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

தங்கமணி தாமிரா உங்களையெல்லாம் நல்லா மூளைச்சலவை செஞ்சிருக்காரு. :)

அவ்வ்வ்வ்வ் உள்ளதைதான் சொல்லுறோம்

கருத்துரையிடுக

ஏதாவது சொல்லிட்டு போங்க