திங்கள், 31 ஆகஸ்ட், 2009

தங்கமணியும் தமிழ் இலக்கணமும்

காதலிக்கும்போது அவள் மைவிழிகளில்
ஒரு தண்மை இருந்தது அது அவள்
பண்புத்தொகையென நான்
பரவசமடைந்திருந்தேன்

படபடவென சலசலவென அவள்
இரட்டைக்கிளவியாய் பேசிய பாங்கில்
என் இதயத்தினை இழந்திருந்தேன்.

என்னங்க ஏங்க எப்படிங்க என்று
எப்போதும் வியங்கோள் வினைமுற்றாய்தான்
என்னை அவள் விளித்திருப்பாள்.

உவமைகளாலும் உவமேயங்களாலும்
அவளை நான் அவளை புகழ்கையில்
இன்னிசையளபடையாய்
புன்னகை புரிந்திருந்தாள்.

தெரிந்தே ஒருநாள் வினைமுற்றிற்று.
திருமணம் நடந்தது
காலமும் கடந்தது

பண்புத்தொகை வினைத்தொகையாயிற்று
திட்டினாள்
திட்டுகிறாள்
திட்டுவாள்

இரட்டைக்கிளவி
அடுக்குத்தொடராயிற்று
தினம் தினம்
ஆயிரம் ஆயிரம் கேள்விகள்

என்னங்க ஏங்க எனும்
வியங்கோள் வினைமுற்று
ஏய் ஓய் என
ஈறு கெட்ட எதிர்மறை பெயரெச்சமானது.

இன்னிசையளபடை தினம்
சொல்லிசையளபடையாயிற்று

வசந்தம் என்பதே என் வாழ்வில்
இறந்த கால வினைமுற்று ஆயிற்று

வடிவேலும் பார்த்திபனும் போல
தாமிராவும் ரமாவும் போல
என் வாழ்வும் பகாபதமாயிற்று.




சனி, 29 ஆகஸ்ட், 2009

குழந்தைகளுக்கு சூட்ட தமிழ் கடவுள் முருகனின் பெயர்கள்

உங்கள் குழந்தைகளுக்குச் சூட்ட தமிழ் கடவுளாம் அப்பன் முருகனின் திருப்பெயர்கள்
1.அமரேசன் 2.அன்பழகன் 3.அழகப்பன் 4.பால முருகன் 5. பாலசுப்ரமணியம் 6.சந்திரகாந்தன் 7.சந்திரமுகன் 8.தனபாலன் 9.தீனரீசன் 10.தீஷிதன் 11.கிரிராஜன் 12.கிரிசலன் 13.குக அமுதன் 14.குணாதரன் 15.குருமூர்த்தி 16.ஜெயபாலன் 17.ஜெயகுமார் 18.கந்தசாமி 19.கார்த்திக் 20. கார்த்திகேயன்.

21.கருணாகரன் 22.கருணாலயன் 23.கிருபாகரன் 24.குலிசாயுதன் 25.குமரன் 26.குமரேசன் 27.லோகநாதன் 28.மனோதீதன் 29.மயில்பிரீதன் 30.மயில்வீரா 31.மயூரகந்தன் 32.மயூரவாஹனன் 33.முருகவேல் 34.நாதரூபன் 35.நிமலன் 36.படையப்பன் 37.பழனிவேல் 38.பூபாலன் 39.பிரபாகரன் 40.ராஜசுப்ரமணியம்

41.ரத்னதீபன் 42.சக்திபாலன் 43.சக்திதரன் 44.சங்கர்குமார் 45.சரவணபவன் 46.சரவணன் 47.சத்குணசீலன் 48.சேனாபதி 49.செந்தில்குமார் 50.செந்தில்வேல் 51.சண்முகலிங்கம் 52.சண்முகம் 53.சிவகுமார் 54.சிஷிவாகனன் 55.செளந்தரீகன் 56.சுப்ரமண்யன் 57.சுதாகரன் 58.சுகதீபன் 59.சுகிர்தன் 60.சுப்பய்யா.

61.சுசிகரன் 62.சுவாமிநாதன் 63.தண்டபானி 64.தணிகைவேலன் 65.தண்ணீர்மலயன் 66.தயாகரன் 67.உத்தமசீலன் 68.உதயகுமாரன் 69.வைரவேல் 70.வேல்முருகன் 71.விசாகனன்.

72.அழகன் 73.அமுதன் 74.ஆறுமுகவேலன் 75.பவன் 76.பவன்கந்தன் 77.ஞானவேல் 78.குகன் 79.குகானந்தன் 80.குருபரன் 81.குருநாதன் 82.குருசாமி 83.இந்திரமருகன் 84.ஸ்கந்தகுரு 85.கந்தவேல் 86.கதிர்காமன் 87.கதிர்வேல் 88.குமரகுரு 89.குஞ்சரிமணாளன் 90.மாலவன்மருகன் 91.மருதமலை 92.முத்தப்பன் 93.முத்துக்குமரன் 94.முத்துவேல் 95.பழனிநாதன் 96.பழனிச்சாமி 97.பரமகுரு 98.பரமபரன் 99.பேரழகன் 100.ராஜவேல்.

101.சைலொளிபவன் 102.செல்வவேல் 103.செங்கதிர்செல்வன் 104.செவ்வேல் 105.சிவகார்த்திக் 106.சித்தன் 107.சூரவேல் 108.தமிழ்செல்வன் 109.தமிழ்வேல் 110.தங்கவேல் 111.தேவசேனாபதி 112.திருஆறுமுகம். 113.திருமுகம். 114.திரிபுரபவன் 115.திருச்செந்தில் 116.உமைபாலன் 117.வேலய்யா 118.வெற்றிவேல்.


"முருகா முருகா என்று மூச்செல்லாம் விட்டிடுவேன்
உள்ளும் புறமும் ஒரு முருகனையே காண்பேன்"


வியாழன், 27 ஆகஸ்ட், 2009

தமிழ்நாட்டின் தலையெழுத்து இதுதான்

என் நண்பன் ஒருவன் என் வலைப்பூவைப் படித்து விட்டு எனக்கு ஒரு மின் மடல் அனுப்பியிருந்தான். அதில் நான் வலையுலகில் புகழ் பெற ஒரு உருப்படாத யோசனையையும் சொல்லியிருந்தான்.

அது என்னன்னா நம்ம பேருலஏதாவது வடமொழி எழுத்து வருகிறமாதிரி பேரு வச்சிக்கனுமாம். அப்பத்தான் தமிழ்நாட்டில புகழ் அடைய முடியுமாம். உதாரணத்துக்கு
அரசியல்
காமராஜ்
எம்ஜியார் (ராமசந்திரனா புகழ் அடையவில்லையாம்)
கருணாநிதி (உண்மை பெயரு தஷ்ணா மூர்த்தியாம்)
ஜெயலலிதா
ராம்தாஸ்
விய்காந்த்

கலைத்துறை
தியாகரா பாகவதர்
சிவாஜி
ஜெமினி
ஜினி
கமல்ஹாசன்
விஜய்
ஜித்

எழுத்தாளர்கள்
சுஜாதா
ஜெயகாந்தன்
ராஜேஸ்குமார்
சுரேஷ்பாலா

இப்படி அடுக்கிட்டுப் போனான். இந்தமாதிரி வடமொழி எழுத்து இல்லாததால்தான் அண்ணாத்துரை பிரபலமாகியும் அல்பாயுசல போயிட்டாராம். அப்புறம் நம்ம நல்ல கண்ணு ,வைகோ இவுங்கள்ளாம் அரசியல்லயும் விக்ரம் சூர்யா கலையுலகிலும் திறமை இருந்தும் சூப்பர் ஸ்டார் ஆக முடியலையாம்.

அட ஙொப்புரானேன்னு நினச்சுகிட்டு வலையுலகில் யாரு சூப்பர் ஸ்டாருன்னு யோசிச்சுப்பாத்தா யுவகிருஷ்னா,கிருஷ்னகுமார்(பரிசல்காரன்),அவிய்ங்க ராமாணிக்கம்,நட்புடன் மால்,சுஷ்மலா ன்னு இந்த பேருங்க மட்டும் ஞாபகத்துக்கு வருது.
யோசிச்சு பார்க்கையில தமிழ்நாட்டின் தலையெழுத்து தமிழ் எழுத்தா இல்லைன்னு மட்டும் பிடிபடுது.

இல்லைன்னா


தமிழைத் தாய்மொழியா கொள்ளாதவனை(ளை) எல்லாம் தலையில தூக்கி வச்சு கொண்டாடிகிட்டு இருப்பமா?




புதன், 26 ஆகஸ்ட், 2009

இவ்வளவும் தாங்கினோம் ஆனால் இதை மட்டும் தாங்க முடியலியே

எங்கள் வீட்டில் அண்மைக்காலமாக ஒருவர் செய்து வரும் அடாவடிகள்

1.வறண்டுபோன கிணற்றிலிருந்து பலமணித்துளிகள் போராடி மேல்நிலைத்தொட்டியில் தேக்கி வைத்துள்ள நீரினை யாரும் எதிர்பாரா நேரத்தில் குழாய்களை திறந்து வெளியேற்றுதல்.

2.பல மணி நேரம் செலவழித்து அழகுடன்(?) என் மனைவி போட்ட வாயிற்கோலங்களை சில நிமிடங்களில் அழித்தல்.

3.குடம் 3 ரூபாய் வீதம் வாங்கிய குடிநீரில் கோல மாவினைக் கொட்டுதல்.

4.வீட்டில் போதுமான அளவு கழிப்பறை இருந்தும் படுக்கையறை மற்றும் அடுமனையை கழி(ளி)வறையாக பாவித்தல்.

5.மதிய நேரத்தில் உணவருந்தி ஓய்வெடுக்கும் பெரியவர்களை முகத்தில் அறைந்து அல்லது முடியைப் பற்றி இழுத்து தூக்கம் கலைத்தல்.

6.ஆர்வமுடன் தொலைக்காட்சித் தொடர்களை கண்டுகளிக்கும் போது சேய்மை கட்டுப்படுத்தி (REMOTE CONTROL) மூலம்
தொலைக்காட்சியை அணைப்பது.

7.வீட்டிற்கு வரும் பால் தயிர் நெய் வியாபாரிகளிடமிருந்து தான் மட்டுமே பொருட்களை வாங்குவேன் என அடம் பிடிப்பது.

8.தொலைபேசி மணி அடித்தால் பாய்ந்து சென்று எடுத்து எதுவும் பேசாமல் எதிர்முனையினரை மிரள வைப்பது.

9.எந்நேரமும் வீட்டில் நிர்வாணமாக அலைதல்.உடைகளை அணிவித்தால் பக்கத்துத் தெருவில் கழட்டி எறிந்து உடையை காணவில்லை என கூறுதல்

10.சலவை சோப்பு குளியல் சோப்பு பற்பசை என அனைத்து பொருட்களின் மேலுறையை தான் மட்டுமே அகற்றுவேன் என அடம் செய்வது

இவை சில மாதிரிகள் மட்டுமே இது போல இன்னும் சொல்லவொன்னா பல தொல்லைகளை இவர் கொடுத்துவந்தாலும் இதுவரை தாங்கிக் கொண்டோம். ஆனால் இப்போது புதிதாக இவர் செய்யும் எல்லை கடந்த தொல்லை ஒன்றை மட்டும் தாங்க முடியவில்லை.அது




விஜய் பட பாடல்களை மட்டும் தொலைக்காட்சியில் பார்ப்பது குறிப்பாக வில்லு மற்றும் குருவி படப் பாடல்களை மிக துணிவுடன் பார்த்து ரசித்து வீட்டில் உள்ளவர்களையும் தொலைக்காட்சித் தொடர்களை பார்க்க வரும் அக்கம் பக்கத்தினரையும் மிரள வைப்பது.

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2009

இது ஒரு சவுதி ஆதியின் கதை

இடம்:சவுதி அரேபியா தம்மாம் நாள் 10-08-09 நேரம்: காலை 9.00

"வாங்க மூர்த்தி என்ன விசயம்"

"சார் போனவாரம் நம்ம ஆர்டர் பண்ணுன ஸ்டீல் பிளேட் கிடைக்கலியாம். பர்சேஸ் டிபார்ட்மெண்ட்டுலருந்து போன் பண்ணுனாங்க.அது வந்தாத்தான் பேப்ரிகேசன் முடிக்க முடியும். இந்த வாரம் புரடக்சன் ரேட்டு கொடுக்கலின்னா புராஜக்ட் மேனேஜர் திட்டித்தீர்த்துடுவாரு. அதான் உங்ககிட்ட ஐடியா கேட்கல்லாமுன்னு"

"என்ன பிளேட் மூர்த்தி,ஸ்பெசிபிகேசன் என்ன?"

"A333 சார்"

"கெமிக்கல் காம்போசிசன் பாருங்க மூர்த்தி, A333க்கு பதிலா A516 வாங்கலாம்.516 மார்க்கெட்டுல சுலபமா கிடைக்கும்.அத வாங்கி வேலையை முடிங்க. அப்படியே கிளையண்டுக்கும் இன்பார்ம் பண்ணிச்சொல்லிடுங்க."

"சரி சார் அப்படியே பண்ணிடுறேன் சார். அதெப்படி சார் எதையும் ரெபர் பண்னாம கரக்டா சொல்லுறிங்க."

"பர்சேஸ்ல பத்து வருசம் அனுபவம் மூர்த்தி. எந்த பொருள எப்படி வாங்கனும்னு நமக்கு அத்து படி"
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இடம்:சவுதி அரேபியா தம்மாம் நாள் 12-08-09 நேரம்: மாலை 7.00

"அட பாஸ்கர் என்ன இந்தப்பக்கம்"

"அடுத்த மாசம் ஊருக்கு போறேன் சார் அதான் பர்சேஸ் பண்ணலாம்னு வந்தேன், நீங்க கூட அடுத்த வாரம் ஊருக்குப் போறிங்கன்னு கேள்விப்பட்டேன்"

"ஆமா பாஸ்கர் பட் நான் எல்லா பர்சேஸையும் முன்னாடியே முடிச்சிட்டேன்."

"உங்களப்பத்திதான் தெரியுமே சார் எனக்கு நீங்கதான் எந்த பொருளையும் பார்த்து பார்த்து வாங்கிறதுல கில்லாடியாச்சே"

"ரொம்ப புகழாதிங்க பாஸ்கர், கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறோம் அந்த காசுக்கு சரியான பொருளை வாங்குனாத்தானே நம்மல்லாம் விவரமான ஆளுன்னு அர்த்தம்"

'எனக்கு கூட இப்ப ஒரு லேப்டாப் வாங்கனும் சார், உங்களுக்கு நேரமிருந்தா வரமுடியுமா சார்"

"அதுக்கென்ன பாஸ்கர் வாங்க நல்ல லேப்டாப்பா பாத்து வாங்கிடுவோம் எனக்குத் தெரியாததா?"
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இடம்:தமிழ்நாடு கீழக்கரை நாள்:19-08-09 நேரம்:காலை 11.00

"மீனு வாங்கப்போயி இவ்வளவு நேரமா? இந்நேரத்துக்கு கடல்லய போயி மீன புடிச்சு கொண்டாந்திருக்கலாம்"

"கடைல்ல கூட்டமா இருந்துச்சு புள்ளே, அதான் லேட்டு"

"எங்கயாவது கூட்டாளிகளோட வெட்டி அரட்டை அடிச்சுட்டு வந்துட்டு கடையில கூட்டமுன்னு ஏன் பொய் சொல்லுறிங்க கொண்டாங்க அந்த மீன குழம்பக் கூட்ட"

"இந்தா, என்னைக் குறை சொல்லாம உனக்கு பொழுது விடியாதே"

"அய்யய்யே என்ன மீனு இது எந்தக் கடையில வாங்கினிங்க"

"ஏன் எல்லாம் தெரிஞ்ச கடைதான் இப்ப என்ன அதுக்கு"

"இப்ப என்ன அதுக்கா? பாருங்க எல்லா மீனும் நொந்து போயிருக்கு. மீனு வாங்கும் போது செவுள திறந்து நல்லா சிவப்பா இருக்கான்னு பாத்து வாங்கனும் அந்த திறமைல்லாம் உங்ககிட்ட இருந்தாதான் உள்ளூரிலயே பொழைப்பிங்களே.என்னை ஏமாத்துங்கன்னு நெத்தில எழுதி வச்சிகிட்டுதான் கடைக்கு போவிங்களோ, நீங்கள்ளாம் சவுதில எப்படி பொழைக்கிறிங்கன்னே தெரியல்லியே.......-@#$$%$$##@@##$@#@@#"
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

வியாழன், 20 ஆகஸ்ட், 2009

காங்கிரீட் 1:2:4

கலவையாக பல விசயங்கள் எழுதலாம் என நினைத்தேன். காலையில் அண்ணன் "அவிய்ங்க" ராசா ஜூஸ் மிக்சர் என எழுதியிருந்தார். ஏற்கனவே கேபிள் அண்ணன் கொத்து புரோட்டா என எழுதுகிறார். வடகரை அண்ணாச்சி கதம்பம் என பேர் வைத்திருக்கிறார். எனவே எனது அவியலுக்கு காங்கிரீட் என பேர் வைத்து விட்டேன். ஏன்னா நமக்குத் தெரிஞ்சதெல்லாம் கல்லு மண்ணு சிமிட்டிதான்.
காங்கிரீட் உறுதியாகனும்னா தண்ணி ஊத்தனும்.அதே மாதிரி இந்த காங்கீரீட் உறுதியாகனும்னா உங்க ஓட்டு வேணும்னு கூறி கலவையை போடுறேன்.
------------------------------------------------------------------------------------------------
சென்னையில முன்னாடி வேலைப் பார்க்கும்போது என் நண்பன் ஜாபர் அலி இவர் ஒரு கவிஞர் அம்பத்தூர் மன்னூர்பேட்டையில் வசிப்பவர் என்னைக் கூட்டிக்கொண்டு அண்ணாசாலையில் ஆயுள் காப்பீட்டு கழகத்தின் எதிரே உள்ள ஒரு கட்டிடத்தில் வாரந்தோறும் சனி இரவு நடைபெறும் கவிதை இரவு என்னும் கவிஞர்களின் கலந்துரையாடல் நிகழ்சிக்கு அழைத்துச் செல்வார். நிகழ்சியின் சிறப்பம்சம் "உடனடி கவிதை வாசித்தல்" அரை மணிநேரத்துக்கு முன்பாக ஒரு தலைப்பு கொடுப்பார்கள் அந்த தலைப்புக்கேற்ப நீங்கள் கவிதை சொல்ல வேண்டும். புல்லின் மேல் பனித்துளி, மேகம் கலையுது,நாடு அதை நாடு, பாஞ்சாலி பத்தினி என்று ஒரு இலக்கில்லாமல் தலைப்பு இருக்கும்.
ஒருநாள் போனபோது தலைப்பு 'எனக்கும் ஒரு இடம் வேண்டும்'. அனைவரும் விண்ணிலே இடம் வேண்டும் மண்ணிலே இடம் வேண்டும் என பக்கம் பக்கமாக வாசித்தனர். ஒரு கவிதாயினி மட்டும் இரத்தின சுருக்கமாக மூண்றடிகளில் ஒரு கவிதையை வாசித்து பரிசையும் பாராட்டையும் தட்டிச்சென்றார். அந்த கவிதை
"ராணி மங்கமாள்
ஜான்சி ராணி
இந்திரா காந்தி வரிசையில்
எனக்கு ஒரு இடம் வேண்டும்"
அதற்கப்புறம் என் நண்பன் அந்த கவிதை இரவு நிகழ்சிக்கு போவதில்லை.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்த செய்தி சிறு வயதில் செய்தித் தாளில் படித்தது.
புருஷோத்தமன் என்று ஒரு கல்லூரி ஆங்கில பேராசிரியர் ஆங்கிலப்பாடத்தைப் பற்றி ஒரு நூல் எழுதி வெளியிட்டிருக்கிறார். விற்பனை மந்தமாகவும் இவர் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பும் இல்லாமல் இருந்திருக்கிறது.புத்தகத்தின் உள்ளடக்கத்தில் எந்த குறையும் இல்லை.கொஞ்சக்காலம் கழித்து அந்த புத்தகத்தில் ஒரே ஒரு மாற்றத்தினை மட்டும் செய்து மறுபதிப்பு வெளியிட விற்பனை சூடு பிடித்திருக்கிறது. அந்த மாற்றம் இதுதான்.

ஆசிரியர் தன் பெயரான புருஷோத்தமன்(PURUSOTHAMAN) என்பதை ஆங்கிலத்தில் தலைகீழாக எழுதி (NAMAHTOSURUP) வெளியிட்டுள்ளார். நமஹ்டோசுருப் என்னும் போது யாரோ வெளிநாட்டினைச் சேர்ந்தவர் எழுதியது போல் உள்ளது அல்லவா எப்படி இந்த யுக்தி.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

சென்னையில் மந்தை வெளி இராமகிருட்டின மட சாலையில் தொழிற்கல்வி பயின்றவர்களுக்கான வேலை வாய்ப்பு அலுவலகம் உள்ளது. தமிழ் நாடு முழுமைக்கும் அது ஒன்றே அலுவலகம். மூண்றாண்டுகளுக்கு ஒருமுறை மறுபதிவு செய்ய வேண்டும். ஒருநாள் நான் மறுபதிவு செய்ய போயிருந்தேன். படிவத்தை பூர்த்தி செய்து அலுவலரிடம் கையொப்பம் பெற காத்திருக்கும் போது என் அருகில் இரண்டு பேர் அவர்கள் படிவத்தில் ஒரு சந்தேகம் கேட்டனர். இருவரும் மருத்துவ படிப்பு படித்த மருத்துவர்கள்.படிவம் முழுவதும் தமிழிலேயே இருந்ததால் அவர்களுக்கு பூர்த்தி செய்வதில் சிரமம் இருந்ததாக புரிந்தது. படிவத்தினைப் பார்க்கும்போது அதில் ஏற்கனவே சில விபரங்களை பூர்த்தி செய்திருந்தனர். அதில் சமயம் என்பதற்கு நேராக 11.10AM என்று எழுதியிருந்தனர். நான் சிரித்துக்கொண்டே அவர்களிடம் அதற்கு விளக்கம் கேட்டபோது அவர்கள் சொன்னது "இது வேலைவாய்ப்பு அலுவலகம் என்பதால் பதிவு மூப்பு அடிப்படையில் வேலை கொடுப்பதற்காக நாங்கள் நேரத்தை குறிப்பிட்டிருக்கிறோம்' என விளக்கமளித்தார்கள். பின் அவர்களுக்கு சமயம் என்றால் தமிழில் மதம் என்னும் பொருள் உண்டு என விளக்கி அவர்களை படிவத்தை திருத்தச் செய்தேன்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

தமிழில் பல்வேறு மொழிகளின் கலப்பு இருப்பது போல ஆங்கிலத்திலும் மற்ற மொழிகளின் கலப்பு இருக்க வேண்டும் என நான் கருதுகிறேன். அந்த வகையில் ஆங்கிலத்தில் இந்த வார்த்தைகளுக்கு ஆதிமூலமாக இருப்பது தமிழே என நான் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறேன்.
பூப்பெய்தல் = Pubertal
பெற்றோர் ஒத்தல்/சம்மதித்தல் (நிச்சயதார்த்தம்)=Betrothal
நாவாய் (கடல் படை) =Navy
கட்டுமரம் (சிறுபடகு)=Catamaran
இதிலிருந்து முதலில் கடல் கடந்தவனும் கலாச்சாரமும் ஒழுங்கும் உடைய முதல் மனிதன் தமிழனே என புரிகிறது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

புதன், 19 ஆகஸ்ட், 2009

இன்னைக்கும் புளிச்சாறும் பொட்டுக்கடலை துவையலும்தானா

கடைசி கொச்சைக் கயிற்றை கரண்டியால் வெட்டி சாரக்கம்பை எடுத்து கீழே போட்டான் இன்பராசு.ரெண்டு எட்டு விலகி தலையை அண்ணாந்து அவன் கொஞ்சம் முன்னாடி பூசுன சுவத்த ஏற இறங்க ஒரு பார்வை பாத்தான்.
"ம்ம்" ஒரு திருப்தியோட மண்டைய ஆட்டிக்கிட்டு கைலில்ல சட்டையில ஒட்டிக்கிட்டு இருந்த சிமிட்டிக் கலவையை ஒரு உதறு உதறினான். டவுசர் பாக்கட்லருந்து செய்யது பீடி ஒன்னு எடுத்து பத்த வச்சு ஆழமா புகையை ஒரு இழுப்பு இழுத்தான்.

"கலவை கொஞ்சம் மிஞ்சியிருக்கே என்னங்க பண்ணுறது"சித்தாள் ஆராயி இன்பாவை கேட்டாள்."நாலு சட்டி மண்ணப்போட்டு பிறட்டி வை.நாளைக்கு சேத்து பிறட்டிக்கலாம்" னு சொல்லிட்டு பக்கத்துல இருந்த குடத்துல தண்ணி எடுத்து கை கால் முகம் கழுவி கைலியிலேயே முகத்த துடைச்சிகிட்டான்.

மறுபடியும் டிரவுசர் பாக்கட்ல கையை விட்டு பணத்த எடுத்து எண்ணிப்பார்த்தான்."இருநூத்திப்பத்துதான் இருக்கு வீட்டுல அமுதாவுக்கு காசு கொடுத்து நாலு நாளாச்சு நாளக்கி மேஸ்திரிகிட்ட காசு வாங்கனும்"னு நினைச்சுகிட்டு ஆராயிக்கு கூலி கொடுத்தான். "நாளைக்கு வெள்ளன வா எப்பவும் மாதிரி ஒம்போதரைக்கு மேல ஆடி அசைஞ்சு வராதே"ன்னு சொல்லிட்டு அங்கன காம்பவுண்ட் சுவத்துல சாத்தியிருந்த சைக்கிள எடுத்து மிதிச்சு செக்கடிக்கு வந்தான்.

செக்கடி எப்பவும் போல கசகசன்னு கூட்டமா இருந்தது.வேலை முடிஞ்சு வீட்டுக்குப் போறதுக்காக சித்தாளு கொத்தனாரு,நிமிந்தாளு வேலை பார்க்குறவுங்க பஸ்ஸ எதிர்பார்த்து நின்னுகிட்டு இருந்தாங்க. தெரிஞ்சவுங்களப் பாத்து சிரிச்சுக்கிட்டே இன்பா சைக்கிள மனிஸு பேக்கரி முன்னாடி நிறுத்தினான். ஒவ்வொரு மேஸ்திரிக்கும் வேலைக்கு ஆளு பிரிச்சு விடறுத்துக்கு ஒரு டீக்கடை இருக்கும் வேலைக்கு ஆளு பிரிச்ச மாதிரியும் ஆச்சு வேலை பாத்து வர்றவுங்களுக்கு டீ வாங்கி கொடுத்த மாதிரியும் ஆச்சு.மேஸ்திரிய பார்க்க முடியாட்டா ஊருக்குப் போறதுக்கு அஞ்சு பத்து கடன் கூட கடையில கிடைக்கும். இன்பாவோட மேஸ்திரிக்கு மனிஸ் பேக்கரிதான் ஆளுங்கள பிரிச்சு விடுற இடம்.

"டீ போடவா இன்பா"ன்னு டீ மாஸ்டர் முனியசாமி கேட்டான். "வேனாம் முனி காலயிலருந்து சாரத்துல நின்னு உடம்பு பூரா வலிக்குது பெரிய டீ சாப்பிட்டாத்தான் சரியா வரும். என் சைக்கிள சித்தப் பாத்துக்க இந்தா வந்துற்றேன்'னு சொல்லிபுட்டு இன்பா நாலு கடை தள்ளியிருக்கிற டாஸ்மாக் கடைக்குப் போனான்.

"ஒரு எம்சி குடுங்க"ன்னு வாங்கி கடைஒரமா சந்துவிட்டு உள்ள இருந்த பாருக்குப் போனான்."அண்ணே ஒரு அவிச்ச முட்ட, தண்ணி ப்பாக்கட்டு ஒன்னு கொடுங்க"ன்னு கேட்டு வாங்கினான். பெரிய சர்பத்து கிளாஸ்ல பாட்டில் தலைய திருகி எல்லாத்தியும் ஊத்தினான். கிளாஸ் விளிம்புலருந்து ரெண்டு இஞ்சு மட்டும் குறைவா இருந்த சரக்குமேல கொஞ்சூண்டு தண்ணிய ஊத்தினான்.ஒரு கையில் கிளாசயும் இன்னொரு கையில முட்டையையும் எடுத்து கிளாஸ மோந்து பாத்து முகத்த ஒரு சுளிப்பு சுளிச்சு கடகடன்னு சரக்க வாயில கவுத்தி அதுக்கு பின்னாடியே அவுச்ச முட்டையையும் அனுப்பினான்."எவ்வளவு ஆச்சுனே" ன்னு பார் வச்சிருந்தவருட்ட கேட்டான் காச கொடுத்துபுட்டு "நாளைக்கு பாப்போன்னே"ன்னு சொல்லி வெளியே வந்தான்.

மனிஸ் பேக்கரி முன்னாடி இப்ப கூட்டம் இல்லை. பஸ்ஸு வந்து போயிருக்கும்ன்னு நினைச்சுகிட்டு 'வர்றேன் முனி நாளக்கு பாப்போம்"ன்னு சைக்கிள எடுத்தான் டீ பட்டறையை விளக்கி சுத்தம் பண்ணிகிட்டு இருந்த முனியசாமியின்"டெய்லி குடிக்கிற பாத்துக்கப்பா உடம்ப"ன்னு வந்த கரிசனத்த அலட்சியப்படுத்தி சைக்கிள மிதிக்க ஆரம்பிச்சான்.
இன்பாவோட ஊருக்கு பஸ்ஸு ஏழு மணிக்கு மேல கிடையாது. நினைச்ச நேரத்துக்கு சுத்திப்புட்டு ஊருக்குப் போகமுடியாது.சைக்கிள்ள போனா ரொம்ப லேட்டாகும்னாலும் அதான் அவனுக்கு வசதி.

வீட்டுக்கு வந்து சைக்கிள நிறுத்தி முள்ளு வேலியில பனைமட்டயால அமுதா செஞ்சி வச்சிருந்த படலைத்தள்ளி சைக்கிளை நிப்பாட்டி ஸ்டாண்ட போட்டு பூட்டினான். வீட்டுக்கதவு ஒருக்களிச்சு சாத்தியிருந்தது.குழந்தைகளோட தூங்கிகிட்டுருந்த அமுதா புருசன் சத்தம் கேட்டு கண்ணு முழிச்சா. "ஒம்போது மணிக்குள்ள என்ன தூக்கம் பொம்பளக்கி வந்து சோத்தப்போடு பசி வயித்த கிள்ளுது"ன்னு இன்பா சத்தம் போட்டுக்கிட்டே சட்டையை கழட்டி சுவத்துல ஆணியில மாட்டிப்புட்டு சாப்பிட உட்கார்ந்தான்.

அமுதா தட்டுல சோத்தப்போட்டு மூடி வச்சுருந்த வெஞ்சன கிண்ணத்த எடுத்து இன்பா பக்கத்துலா வச்சா."லூசு சிறுக்கி இன்னைக்கும் புளிச்சாறும் பொட்டுக்கடலை துவையலும்தானா? மீனு கருவாடு ஆக்கக்கூடாது ஒரு கருவாட கிருவாட சுட்டு வச்சா குறைஞ்சா போயிடுவே" இன்பா பசி ஆத்திரத்துல கத்துனான்."எங்க மறுபடியும் சொல்லு. எத்தன நாளிக்கு முன்னாடி நீ செலவுக்கு காசு கொடுத்த தெரியுமா நாலு நாளிக்கு முன்னாடி அதுவும் நூறு ரூவா.ரெண்டு பிள்ளகள வச்சிகிட்டு அது எவ்வளவு நாளக்கி வரும்.காலையில ஐஸ் வண்டிக்காரன் வந்து வாங்கிதரலேன்னு சின்னவன் எப்புடிக் கத்துனான்னு உனக்கு தெரியுமா பச்ச பிள்ளங்களுக்கு ஒரு பண்டம் பச்சனம் வாங்கி தர்றதுக்கு கூட நீ தர்ற காசு பத்தாது ஒரு நா ஒரு பொழுது குடிக்காம இருந்துருக்கியா குடிச்சு கொள்ளயில போற காச கையில கொடுத்தா ஆக்கிப் போட மாட்டேன்னா சொல்லுறேன் மீனு வேனுமாம்ல மீனு இஷ்டமிருந்தா சாப்பிடு இல்ல பொத்திக்கிட்டு படு"ஆங்காரமாய் அமுதா சாமியாடினாள்.அதோடு அவன சட்டை பண்ணாம பாயில் புள்ளங்களோட மறுபடியுடி படுத்துகிட்டா.


"இந்த கருமத்த யாரு தின்பா"பசி ஆத்திரத்தில் இன்பா வெஞ்சனக் கிண்ணத்த எடுத்து சுவத்துல எறிஞ்ச்சான். பொட்டுக்கடலை தொவயலு சுவத்துல பல்லி மாதிரி ஒட்டிக்கிருச்சு.பக்கத்துலயே அவனும் சுருண்டு படுத்துக்கிட்டான்.
கொஞ்ச நேரத்துக்கப்புறம் யாரோ தட்டுகள உருட்டுற மாதிரி சத்தம் கேட்டு அமுதா தலய தூக்கிப் பாத்தா.இன்ப ராசுதான் தட்டுல சோத்த அவதி அவதியா அள்ளி வாயில போட்டுக்கிட்டுருந்தான்.தலைய திருப்பி சுவத்த பாத்தா அமுதா.

அதுல தொவயல் இல்ல. வழிச்ச தடம் மட்டும் இருந்தது.



செவ்வாய், 18 ஆகஸ்ட், 2009

எல்லோரும் தண்ணி அடிக்கனும்

எல்லோரும் நல்லா தண்ணி அடிக்கனும்னே.

ஆம்பளை பொம்பளை பெரியவுக சின்னவுக பேதமில்லாம எல்லோரும் தண்ணி அடிக்கனும்.

காலையிலயே தண்ணி அடிக்கணும்னே அதுதான் ரொம்ப நல்லது.

தண்ணி எவ்வளவுக்கு எவ்வளவு அடிக்கிறிங்களோ அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது.

நீங்க தண்ணி அடிச்சா உங்களுக்கு மட்டுமில்ல எனக்கும் நல்லது.

என்னடா இப்புடி சொல்லுறானே நான் யாருன்னு பாக்கனுமானே.....




நாந்தான்னே நீங்க கட்டிக்கிட்டிருக்கிற வீடு


CURING தண்ணி அடிச்சாத்தான்னே

நீங்க கட்டுற வீட்டுக்கு நல்லது.காங்கீரிட் பூச்சு செங்கல் கட்டுமானம் இப்படி சிமிட்டி கலந்து செய்யுற எந்த வேலையானாலும் வேலை முடிந்த மறுநாள் கண்டிப்பா அது மேல தண்ணி அடிங்க. அப்பத்தான் சிமிட்டி வேதியியல் வினை (HYDRATION) மூலமா மணல் மற்றும் ஜல்லியோட பின்னிப்பினைஞ்சு வலிமையா மாறும்.விரிசல் வெடிப்பு ஏதும் கட்டிடத்தில் வராது.

காங்கீரிட்டா இருந்தா குறைஞ்சது 14 நாளும் மற்ற வேலைகளுக்கு குறைந்தது 1வாரமும் தண்ணி அடிங்க.உத்திரம்(beam),தூண்(column) போன்ற கட்டுமானத்தில் கோனிச்சாக்கை சுத்தி வைச்சு அதுமேல தண்ணி அடிங்க.

அப்புறம் நீங்க எதிர்பார்த்து வந்தது எதுவும் இல்லைன்னு எம்மேல கோச்சுக்காதிங்கன்னே.என்னை ஏதாவது பண்ணும்னு நினைச்சா கீழே தமிழிஷில்ல ஒரு குத்து குத்திட்டு போங்கன்னே.


தும் ஹிந்துஸ்தானி லெகின் ஹிந்தி நஹி மாலும்

"தும் ஹிந்துஸ்தானி லெகின் ஹிந்தி நஹி மாலும்"
மேல உள்ள கிரகம் புடிச்ச வார்த்தையைத்தான் பருப்புபயலுக(வடக்கத்தானுக்கு வளைகுடாவில உள்ள பட்டப்பேரு) தமிழனப் பாத்ததும் முதல்ல கேட்பாய்ங்க.
எனக்கு உடனே கோபம் பொத்துக்கிட்டு வந்துறும். உடனே கீழே உள்ள கேள்வியெல்லாம் அவங்களப் பாத்து கேட்பேன்.

1.நீ தமிழ் படிக்கிறியாடா? நானும் இந்தி படிக்கிறேன்.

2.இப்ப ஹிந்தியை கண்டிப்பா பேசனும்கிறதுக்கு நம்ம ரெண்டு பேரும் வட இந்தியாவிலயாடா வேல பாக்குறோம்?

3.நான் ஹிந்தி பேசுனா உனக்கு லாபம் எனக்கு என்னடா லாபம்?

4.ஹிந்தியப் பேசி பேசி உன் தாய் மொழி பீகாரி குஜராத்தியல்லாம் நீயும் உன் சந்ததிகளும் மறந்து திரியுற மாதிரி என்னையும் தமிழை மறந்து திரியச் சொல்லுறியா?

5.ஹிந்தி ஹிந்தின்னு பேசுறியே ஹிந்தி இந்தியாவின் பூர்விக மொழியாடா? 1000 வருசத்துக்கு முன்னாடி இந்தியாவில் ஹிந்தி இருந்துச்சுடா?

6.Isometric Drawing, Specification AISC, ASTM,ANSI STANDRD மாதிரி வேலை விபரமெல்லாம் ஹிந்தியிலயாடா வருது?.

7.நீ எப்பத்தாண்டா நல்லா இங்கிலீஷ் பேசி எங்கள மாதிரி நல்ல வேலை பார்ப்பே? எவ்வளவு நாளைக்கு இப்படி இங்கே கக்கூஸ் கழுவிகிட்டு இருப்ப?

அதுக்கு மேல எவனும் ஒன்னும் பேச மாட்டான்.

இவிங்கள மறுபடியும் கனக விசயர் தலைல்ல கல்லு வச்சமாதிரி கல்லு வச்சி சுமக்க வச்சு தமிழ் நாட்டுக்கு கொண்டு வந்து கண்ணகிக்கும் திருவள்ளுவருக்கும் சிலை செய்யனும்னே..


சின்ன வீட்டுக்கு ஒரு சின்ன யோசனை

சின்னதா வீடு கட்டப் போகிறவர்களுக்கு ஒரு சின்ன ஆலோசனை
வீடு கட்டுவதற்கு மிகவும் அத்தியாவசியமான பொருட்கள் செங்கல்,சிமிட்டி,கம்பி,மரம்,கருங்கல்ஜல்லி,மணல் போன்றவை.
இவற்றை எவ்வளவு வாங்க வேண்டும் என்பதற்கு கீழ்கண்ட அட்டவனை உதவியாக இருக்கும்.


அட்டவனையில் A என்பது கட்டப்போகும் வீட்டின் பரப்பளவு(Plinth Area) இது கண்டிப்பாக சதுர அடியில் கணக்கிடப்பட வேண்டும்.

அட்டவனை அடிப்படை, தரைத்தளம் மற்றும் முதல் தளம் மட்டும் உள்ள வீட்டிற்கு மட்டும் பொருந்தும். அதற்கு மேல் கட்டப்படும் வீடுகளுக்கு அடிப்படைக்கு (Foundation) மட்டும் கூடுதல் பொருள் செலவாகும்.

Axial loaded column Footing foundation காங்கீரிட் தூண்கள் கொண்ட அடிப்படை வீடுகளுக்கு மட்டும் இது பொருந்தும்.கருங்கல் கொண்டு போடப்படும் அடிப்படைக்கு (RR Masonry Foundation) இது பொருந்தாது.

முதல் தளத்திற்கான சூத்திரத்தில் உள்ள A முதல் தளத்தில் கட்டப்போகும் வீட்டின் அளவு மட்டுமே.(First floor plinth Area only) .எனவே அடிப்படைக்கும் தரைத்தளத்திற்கும் வீட்டின் பரப்பளவை சதுர அடியில் உள்ளிட்டுக. முதல் தளத்திற்கு நீங்கள் எவ்வளவு பரப்பளவு கட்டப்போகிறிர்களோ அதை மட்டும் உள்ளிடவும்.

பதிவு பிடித்திருந்தால் ............

வேறு என்ன உங்க தங்க கையால் ஒரு வாக்கு அளிக்கவும்.


திங்கள், 17 ஆகஸ்ட், 2009

கணக்குப்புலி மரக்கடையில் தடி எடுத்த கதை

இந்தக்கதை சொந்தமா வீடு கட்டிக்கிட்டு இருக்குறவுங்க எல்லோருக்கும் ரொம்ப உதவியாக இருக்கும்.
எங்க ஊருல ஒரு ரொம்ப படிச்சவன் ஒருத்தன் இருந்தான். எப்பப் பாத்தாலும் பாக்குறவுங்ககிட்ட அல்ஜீப்ரா,போரியர் சீரிஸ்,இண்டகரல் கால்குலேசன்,டிப்பரன்சியல் கால்குலேசன்,லேப்லாஸ் டிரான்ஸ்பார்ம்ன்னு விளங்காத கிரகமெல்லாம் பேசிக்கிட்டு இருப்பான். அதுனால அவன எல்லோரும் கணக்குப்புலின்னு ஊருல கூப்பிடுவோம்.
அப்ப எங்க ஊருல ஒரு வெள்ளந்தி மனுசன் சொந்தமா வீடு கட்டிக்கிட்டு இருந்தாரு. வீட்டுக்கு நிலை ஜன்னல் கதவுக்குல்லாம் மரம் விலை கம்மியாக எடுக்கனும்னு நினைச்சாரு. செங்கோட்டை அல்லது கேரளா பார்டர் போனா மரத்த தடியா எடுத்து அறுத்து ரொம்ப கம்மியா வாங்கிடலாம்னு யாரோ அவரு காதுல ஓதுயிருக்கானுக. இவரும் அதக்கேட்டுட்டு செங்கோட்டை போகலாம்னு முடிவு செஞ்சாரு. ஆசாரியக் கூப்பிட்டுட்டு போனா கமிசன் செலவுல்லாம் ஆகும்னு நினச்சு வேற யாரை விவரமான ஆளக் கூப்பிட்டு போகலாம்னு நினைக்கும் போது நம்ம கணக்குப்புலி ஞாபகம் அவருக்கு வந்துச்சு.
போயி நம்ம கணக்குப்புலியை துணைக்கு கூப்புட்டாரு. கணக்குபுலியும் "பெரிய கணக்குல்லாம் போடுற என்ன போயி ஒரு சின்ன கண அடி கணக்கு போட கூப்புடுறியே பெருசு'ன்னு ரொம்ப பிகு பண்ணி ஒத்துக்கிட்டான்.
ரெண்டு பேரும் சேர்ந்து செங்கோட்டையில ஒரு பெரிய மரக்கடைக்கு போனாங்க.கடைக்காரர் பலதடியெல்லாம் காட்டுன பின்னாடி 2அடி விட்டமும் 10 அடி நீளமும் உள்ள ஒரு தடியை வாங்கிடலாம்னு பெருசு முடிவு செஞ்சாரு.விலை கேட்கும் போது ஒரு குழி (1 கண அடி) ஆயிரம் ரூபான்னு மரக்கடைக்காரர் சொல்லியிருக்காரு.அந்த மரம் எத்தனை குழிங்கன்னு கேட்க கடைகாரர் மனசுல கணக்கு போட ஆரம்பிக்கும்போது நம்ம கணக்குப்புலி அங்கிருந்த கால்குலேட்டர டப்பு டுப்புனு தட்டி 31.429 ன்னு ரொம்ப பின்னச்சுத்தமா விடையைச் சொல்லியிருக்கான்.

மரக்கடைக்காரரு சட்டுனு ஆச்சர்யமாப் பாத்து பெருசுகிட்டே யாரு இந்த தம்பி ரொம்ப புத்திசாலியா இருக்காரேன்னு பெருசுகிட்ட கேட்டாரு பெருசும் நம்ம ஊருதான் எங்க ஊருலயே ரொம்ப படிச்ச புள்ளன்னு சொல்லியிருக்காரூ "அட படிச்ச புள்ளன்னு பாத்தவுடனயே தெரியுதுன்னு சொல்லி யாருக்காகவும் விலைய குறைச்சதில்ல தம்பிக்காக ஒரு நூறு ரூவா குறைச்சு குழி தொள்ளாயிரம்னு தர்றேன்னு சொன்னாரு. பெருசும் பரவாயில்ல பயல கூட்டிட்டு வந்ததுக்கு நமக்கு 3000 ரூபாய் மிச்சம்னு சந்தோசப்பட்டுக்கிட்டே மரத்த வாங்கி அறுத்து ஒரு வண்டி புடிச்சு ஏத்தி ஊரு வந்து சேந்தாங்க.

வந்தவுடனே மறுநாளு மரத்தையெல்லாம் இழைக்குறதுக்காக உள்ளூருலயே உள்ள இழைப்புப் பட்டறைக்கு கொண்டு போனாரு பெருசு. இழைப்புக்கடைக்காரர் "எங்க எடுத்திங்க என்ன விலைனு விபரம் கேட்டுருக்காரு. பெருசும் தடி நீளம் அகலம்லாம் சொல்லி கணக்கு புலி தனக்கு 3000 ரூபாய் மிச்சம் புடிச்சு தந்தான்னு பீத்திக்கிட்டாரு.மனசுலயே கணக்குப் போட்ட இழப்புக்கடைக்காரர் கணக்குப்புலி கணக்குக்கும் மரக்கடைக்காரரோட கணக்குக்கும் உள்ள வித்தியாசத்தையும் சொன்னாரு.

கணக்குப்புலியின் கணக்கு





மரக்கடைக்காரரின் கணக்கு

"மரக்கடைக்காரர் போக்குலய கணக்குப் போட விட்டிருந்தா கூட குழி 1000 ருபாயின்னு வச்சுகிட்டாலும் உனக்கு 4000 ரூபாய் மிச்சமாயிருக்கும் வட்டத்துல சதுரம் போக எதுக்கும் உதவாத விறகுக்கும் கண அடி ரேட்டு போட்டு வாங்கிட்டு வந்துருக்குற உன்னை என்னனு சொல்லுறது"ன்னு இழப்புக்கடைக்காரர் பெருசுக்கு டோஸ் விட்டாரு. அதுலயிருந்து பெருசு நம்ம கணக்கு புலியை தேடிக்கிட்டு இருக்காரு.யாரும் பாத்தா சொல்லுங்கப்பு அப்படியே எனக்கு ஒரு ஓட்டையும் போட்டுட்டு போங்கப்பு.

பின் குறிப்பு: சத்தியமா அந்த கணக்குப்புலி நான் இல்லிங்க.


ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2009

வெள்ளை எம்ஜியாரு நல்லவரான கதை

ரொம்ப காலத்துக்கு முன்னாடி ஒரு காட்டுல ஒரு வழிப்பறி திருடன் இருந்தான்.ஆளு வெள்ள வெள்ளேருன்னு சிவப்பா அழகா இருந்ததுனால அவன எல்லோரும் வெள்ள எம்சியாருன்னு கூப்பிடுவாங்க.அவனுக்கு ஒரு மகன் அவன் கருப்பா கொஞ்சத்துக்கு கொஞ்சம் களையா இருப்பான் அதுனால அவன கருப்பு எம்சியாருன்னு எல்லோரும் கூப்புடுவாங்கன்னு நினைச்சிங்கன்னா அது தப்பு. ஆனா அவன் மட்டும் தன்னைத்தானே கருப்பு எம்சியாருன்னு கூப்பிட்டுக்கிட்டுருந்தான்.

அந்த காட்டுப்பக்கம் வண்டி கட்டிக்கிட்டு போற ஆளுகங்கிட்ட ஒரு அட்டைக்கத்தியைக் காட்டி வழிப்பறி பண்ணுறது வெள்ளை எம்சியாரோட தொழிலு. காசு பணத்த பறி கொடுத்தவுங்க அவன திட்டி தீர்ப்பாங்க, ஊருல்ல அவனுக்கு நல்ல பேரும் கிடையாது. இப்படி இருக்கையில ஒருநாளூ அவனுக்கு உடம்பு ரொம்ப முடியாம போயிடுச்சு.சாகுற நிலைமையில இருக்கும் போது அவன் மகன் கருப்பு எம்சியாரா நினைச்சுகிட்டு இருக்குறவன கூப்பிட்டு "அட கருப்பா நான் சாகப்போறேன் நானோ ஒரு திருடன் அதுனால இந்த சனமெல்லாம் என்ன கெட்டவன்னு கூப்புடுது நீ என்ன செய்வியோ ஏது செய்வியோ எனக்குத் தெரியாது. ஆனா இந்த உலகம் என்னை நல்லவன்னு கூப்புடனும்"ன்னு சொல்லிட்டு கண்ண மூடிப்புட்டான்.

என்னடா அப்பா இப்படிச் சொல்லிட்டாங்க அவுகளோ பக்காத் திருடன் அவுகளப் போயி எப்படி நல்லவனாக்குறதுன்னு கருப்பன் தன்னோட புள்ளிவிபரம்ல்லாம் உளர்ற வாயில டாஸ்மாக் சரக்க ஊத்திக்கிட்டே யோசிச்சான். பளிச்சுனு அவனுக்கு ஒரு ஐடியா வந்தது.

மறுநாள் இவனும் அவுங்க அப்பன மாதிரியே காட்டுல வழிப்பறிக்கு யாரோடயும் கூட்டுச் சேர்க்காம ஒத்தையாளா கிளம்புனான்.காட்டு வழியே வந்தவுங்கள கால சுழட்டி சுழட்டி அடிச்சு எல்லாத்தையும் புடுங்குனான். அத்தோட அவங்கப்பன் பண்ணாத இன்னோரு வேலையும் செஞ்ச்சான் காசு பணத்த பறி கொடுத்தவுங்க கோவனத்தையும் உறுவி எடுத்துக்கிட்டான்.

இப்ப ஊருல்ல எல்லோரும் என்ன சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க 'அப்பன்காரன் வெள்ளை எம்சியாரு ரொம்ப நல்லவன் காசு பணத்த மட்டும்தான் புடுங்குனான். ஆனா இந்த கருப்பன் இருக்கிற கோவணத்த கூடல்ல உறுவுறான் ரொம்பக் கெட்டவனா இருக்கானே"ன்னு புலம்ப ஆரம்பிச்சிட்டாங்க.
இப்படி ஒருவழியா கருப்பன் அவன் அப்பன ரொம்ப நல்லவனாக்கிட்டான்

பின் குறிப்பு: இது முழுக்க முழுக்க கற்பனைக் கதையே யாரையும் குறிப்பிடுவது அல்ல.நீங்க யாரையும் கற்பனை பண்ணிக்கிட்டிங்கனா அதுக்கு நான் பொறுப்பு இல்லை, என கரம் சிரம் தாழ்த்தாமல் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.


வியாழன், 13 ஆகஸ்ட், 2009

எங்கப்பா மட்டும் பாம்பனுக்கு அந்த பக்கம் வேலை பார்த்திருந்தா...

இராமநாதபுரம் மாவட்டத்துக்கு பெருமை சேர்க்கும் பல விடயங்களில் ராமேஸ்வரம் கோவிலுக்கு அடுத்தபடியாக உள்ளது பாம்பன் பாலம் என்று எம் மாவட்ட மக்களால் அழைக்கப்படுகிற இந்திராகாந்தி பாலம்.
2.345 கீ மீ நீளமும் 72 தூண்களையும் ஆங்கர் ஜோன்,நேவிகேசன் ஜோன்,சஸ்பென்சன் ஜோன் எனும் வகைகளாக 5 பாகங்களாக பிரிக்கப்பட்டு வேலை முடியும் தறுவாயில் தலைமை பொறியாளரையே காவு கொண்டு (கடலில் தவறி விழுந்து இறந்தார்) கிட்டத்தட்ட இந்தியாவில் உள்ள அனைத்து பொறியியல் கட்டுமாண நிறுவனங்களும் வேலைப் பார்த்து பல்வேறு தலைவர்களின் பேரை பாலத்திற்கு வைக்க கோரி இராமநாதபுரம் மாவட்டத்தையே சுவரொட்டிகளால் மறைத்து இறுதியில் சேதுபதி பாலம் என வைக்கப்படும் என மாநில ஆட்சியாளர்களால் உறுதிமொழி வழங்கப்பட்டு இறுதியில் எல்லோருக்கும் ஆப்பு வைக்கும் விதமாக "எங்கம்மா பேரையே வச்சுடுறேனு" ராஜிவ் காந்தியால் பேர் வைக்கப்பட்டு இப்படி பல அல்லல் பட்டு இண்ணல் பட்டு கிடந்த இராமேஸ்வர தீவு மக்களுக்கு ஒரு தீர்வாக வந்த இந்தியாவின் மிக நீண்ட கடல் பாலம்தான் எம் பாம்பன் பாலம்.
தலைப்புல சொல்லியிருக்கிற விசயத்துக்கு போகும் முன் கண்ணுக்கு குளிர்ச்சியாய் எங்க ஊரு பாலத்தப் பாருங்க.
முதல்ல பழைய இருப்புப்பாதை பாலம்














இப்ப பார்க்கப் போறதுதான் சாலைவழிப்பாலம்
















இப்ப தலைப்புக்கு வர்றேன்.


பத்து வருசத்துக்கு முன்னாடி ஒருநாள் மதுரை போயிட்டு எங்க ஊரு கீழக்கரை போறதுக்காக ராம்னாடு பேருந்து நிலையத்துக்கு வந்தேன். அங்கப் பாத்தா எல்லா பஸ்ஸையும் பஸ்ஸ்டாண்டுலேயே நிறுத்தி வைச்சுருந்தாங்க.என்னடான்னு கேட்டா ஏதோ ஒரு ஊரில (வேற மாவட்டத்துல) ஒரு தலைவரு சிலைய அவமதிச்சுட்டாங்களாம். அதுனால பிரச்சினையான பகுதியில்லாம் பஸ்ஸை நிறுத்தி வைக்கச்சொல்லி மேலிடத்து உத்தரவுன்னுட்டாய்ங்க.


அப்பன்னா இராம்நாடு பூராவுமே பிரச்சினையான பகுதிதாண்டான்னு தலையில கைய வச்சுக்கிட்டு எப்ப பஸ்ஸ விடுவாய்ங்கனு கொள்ளச்சனம் பஸ்ஸ்டாண்டுலேயே உட்காந்துருக்கு.அதுல ஒரு பேருந்து ராணி மங்கம்மாள் போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமானது. 6 1/2 மணிக்கு ராமேஸ்வரம் போகவேண்டிய பஸ்ஸு 8 மணிவரைக்கும் பஸ்ஸ்டாண்டுலேயே நிக்குது. ரொம்ப நேரம் பஸ்ஸ்டாண்டுலயே நின்னதால த்ரூ டிக்கட் போட்ட ஒரு பத்து பதினோரு பேரு மட்டும் அதுல உட்காந்திருந்தாங்க.

81/2 மணிக்கு மேல மதுரை ராமேஸ்வரம் மட்டும் வண்டி போகும் மத்த ஊருல பிரச்சினை முடியலன்னு எங்க ஊருக்கு போற வண்டியல்லாம் நிறுத்திட்டாங்க.மதுரைக்கும் ராமேஸ்வரத்துக்கு மட்டும் வண்டி கிளம்புச்சு.காலையில முழிக்கும் போது எங்கப்பா சொன்னாங்க 'திண்டுக்கல்லுல இருந்து வந்த பஸ்ஸு ஒன்னு பாம்பன் பாலத்துல கைபிடிச்சுவர உடைச்சி கவுந்துறுச்சாம் பஸ்ஸுல இருந்த எல்லோரும் செத்துப்போயிட்டாங்க"ன்னு. நானும் தூக்கக் கலக்கத்துல "எந்த பஸ்ஸுப்பா"ன்னு கேட்டேன் அதுக்கு எங்கப்பா சொன்னாங்க "ராணி மங்கம்மாடா"ன்னு

ஒரு நிமிசம் எனக்கு தூக்கி வாரிப் போட்டுடுச்சு.உடம்புல்லாம் விதிர் விதிர்த்து நடுங்குது. இருக்காதா பின்னே?

கீழக்கரைக்கு வண்டி போகாததாலே ராத்திரி பொழுது சாப்பிடவும் தூங்கவும் என்ன பண்ணலாம்னு நினைச்சு எங்கப்பா அப்ப மண்டபத்துல (பாம்பன் பாலத்திலருந்து சரியா 2 கீ மீ முன்னாடி உள்ள ஊரு) மின் வாரியத்துல வேல செஞ்சுகிட்டு இருந்ததாலே நானும் அந்த ராணி மங்கம்மாள் பஸ்ஸுலதான் ஏறி மண்டபத்துல இறங்கிட்டேன்.

இப்ப சொல்லுங்க எங்கப்பா மட்டும் பாம்பனுக்கு அந்தப் பக்கம் வேலைப் பாத்திருந்தா?

ஒன்னும் ஆயிருக்காது இந்த பதிவ மட்டும் நீங்க படிச்சுக்கிட்டு இருக்க முடியாது. அவ்வளவுதான். அவ்வ்வ்வ்வ்வ்


செத்தும் கொடுத்தான் சீதக்காதி-கதை அல்ல காதை


ஒருநாள் அர்ச்சுனனும் கிருஷ்ணரும் பேசிகிட்டு இருக்கும் போது அர்சுனனுக்கு தீடிர்னு ஒரு சந்தேகம் வந்துச்சு. "மச்சான் எங்கன்னனும் பேருக்கேத்த மாதிரியே தருமமெல்லாம் பண்ணுறான். ஆனா இந்த உலகம் கருணன மட்டும் கொடைவள்ளல்னு சொல்லுதே அதுக்கு என்ன காரணம்"னு கேட்டான். கண்ணன் சிரிச்சுகிட்டே "வா மாப்பிளே அதுக்கு காரணத்த உனக்கு நேரயே காட்டுறேன்"னு ரெண்டு பேரும் அந்தணருங்க மாதிரி வேசம் போட்டுக்கிட்டு முதல்ல தருமரோட அரண்மனைக்கு போனாங்க.
போனதும் தருமர்கிட்ட அந்தணரு வேசம் போட்ட கண்ணன் கேட்டான். "அய்யா தருமராசா எங்கம்மா செத்துப்போயிட்டாங்க சாகுறதுக்கு முன்ன அவுங்கள சந்தணக்கட்டையிலதான் எரிக்கனும்னு சொல்லிட்டுச் செத்துட்டாங்க நாங்களோ ஏழைங்க அதனால எங்கம்மாவ எரிக்கிறதுக்கு ஒரு வண்டி சந்தணக்கட்டை கொடுப்பா"னு கேட்டான்.அந்த நேரமோ கடுமையான மாரிக்காலம். பத்து நாளா மழ நிக்காம ஊத்துகிட்டுருந்துச்சு. தருமரும் அவன் காவலருங்கள பாத்து "நம்ம கிட்டங்கில எங்கினியாச்சும் காஞ்ச மரம் இருந்தா எடுத்து ஒரு வண்டி கொடுங்கப்பா"னு உத்தரவ போட்டான். கொஞ்சநேரம் கழிச்சு காவலருங்களும் வீசின கையும் வெறுங்கையுமா திரும்பி வந்துட்டாய்ங்க. தருமரு இந்த ரெண்டு அந்தணருங்களையும் பாத்து "அப்புகளா என்ன மன்னிச்சிருங்க வேற மரக்கட்டைன்னா தர்றேன்" அப்படின்னுட்டான்.இவிய்ங்க ரெண்டு பேரும் சரீ மன்னா பரவாயில்ல"ன்னு திரும்பி வந்துட்டாய்ங்க.
வந்ததும் நேர கர்ணங்கிட்ட ரெண்டு பேரும் போயி தருமருகிட்ட சொன்னது மாதிரியே கதைய விட்டாய்ங்க.கர்ணனும் அவன் சிப்பாய்ங்கள விட்டு தேட சொன்னான். அவியிங்களும் முன்ன மாதிரியே கைய வீசிக்கிட்டு வந்தாய்ங்க..வந்தவய்ங்கிட்ட கர்ணன் கேட்டான் என்னப்பா ஆச்சுன்னு "மன்னா எல்லா ஈரமரமா இருக்கு காஞ்சது ஒன்னு கூட தேறல" கர்ணன் ஒரே ஒரு நொடி யோசிச்சான் உடனே அந்த சிப்பாய்ங்கிட்ட சொன்னான். "நம்ம அரண்மனையில சந்தண மரத்துல என்ன சாமான் இருந்தாலும் அது கதவானாலும் சரி சன்னலானுலும் சரி பெட்டி பேழை ஒன்னு விடாதிக எல்லாத்தியும் உடச்சு இவங்களுக்கு ஒரு வண்டி சந்தண கட்டை கொடுங்கப்பான்னு சொன்னான் அதே மாதிரி கொடுக்கவும் ரெண்டு பேரும் வாங்கிட்டு வந்துட்டாய்ங்க.
இப்ப கண்ணன் சொன்னான் "என்னப்பா அர்ச்சுனா உன் கேள்விக்கு விட கெடச்சாதா"னு பார்த்திபன் சொன்னான் "புரிஞ்சுகிட்டேன் மச்சான்"னு இது கதை

கீழக்கரையை சேர்ந்தவரு சீதக்காதி பெரிய வள்ளல்.18 ம் நூற்றாண்டு காலத்து பாரி அவரு.சீறா புராணம் எழுதுன உமரு புலவரு கடிகை முத்து புலவருல்லாம் இவரு ஆதரவிலதான் வாழ்ந்தாங்க. வீட்டுக்கு யாரு வந்தாலும் இல்லைன்னு சொல்லாம கொடுக்குற வெள்ள மனசுக்காரரு ஒருநாள் வியாபார விசயமா ஒரு ஊருக்கு போனாரு. போன இடத்துல ஒரு வயசாளி வீட்டுல சமைஞ்ச குமரு உள்ளவரு சீதக்காதியப் பாத்து 'அய்யா நானோ வயசாளி வீட்டுல குமரு ஒன்னு இருக்கு அதுக்கு மாப்பிள்ள பாத்துகிட்டு இருக்கேன் கல்யாண செலவு கைக்கூலின்னு நிறய பணம் தேவப்படுது"ன்னாரு.உடனே வள்ளலும் எவ்வளவு காசு வேணும்"ன்னாரு அதுக்கு அந்த வயசாளி "இப்ப வேணாம் வீட்டுல வறுமையா இருக்குறதுனால கொடுத்தா செலவாயிடும் மாப்பிள பாத்து பேசி முடிச்சதும் தாங்க"ன்னாரு. வள்ளலும் "எப்ப வேணும்னாலும் என் வீட்டுக்கு வாங்க"ன்னு ஊருக்கு வந்துட்டாரு.
வந்து கொஞ்ச நாளுல உடம்புக்கு முடியாம போயி சீதக்காதி வள்ளல் மவுத்தாயிட்டாக.இந்த நேரம் பாத்து அந்த வயசாளி மாப்பிள்ளை பேசி முடிச்சிட்டு காசு வாங்குறதுக்காக கீழக்கரை வந்து சீதக்காதி வீட்ட விசாரிச்சுருக்காரு."காக்கா மவுத்தாய்ட்டாக அடக்கம் பண்ணுறதுக்கு மையவாடி கொண்டு போயிட்டாங்கனு கேள்விப்பட்டு "அட நமக்கு கொடுப்பினை இல்லையே"ன்னு மனசுல நினைச்சுகிட்டு அவரும் மைய வாடி போயி சேந்தாரு.அங்க போனா அடக்கம் முடிஞ்சு எல்லாரும் திரும்பிக்கிட்டு இருந்தாங்க. இவரு மொள்ளமா போயி மய்யத்துகிட்ட கண்ண மூடி சீதக்காதிக்காக துவா கேட்டுருக்காரு பாருங்க அதிசயத்த அடக்கம் பண்ண குழியிலருந்து சீதக்காதியோட ஒரு கை வெளியே வந்துருச்சு (சரியா குழிய மூடாம விட்டுறுக்கலாம்) அதுல ஒரு முத்து பதிச்ச மோதிரம் ஒன்னு இருந்துருக்கு. இதப்பாத்ததும் ஊர்காரங்கள்ளாம் "என்னப்பு நீங்க எந்த ஊரு அப்புடின்னு விசாரிச்சுருக்காங்க வயசாளி சீதக்காதி அவுக ஊருக்கு வந்தது இவரு காசு கேட்டது எல்லாத்தையும் சொன்னாரு ஊர்காரவுகளும் உங்களுக்கு கொடுக்கத்தான் அவரு கையி மய்யத்திலிருந்து வந்துருக்குன்னு சொல்லி அந்த மோதிரத்தை கழட்டி கொடுத்துட்டங்க வயசாளியும் அந்த மோதிரத்த வச்சு மகள் கல்யாணத்த எந்த பிரச்சினையில்லாம முடிச்சுட்டாரு. அதுல இருந்துதான் வள்ளல் சீதக்காதி செத்தும் கொடை கொடுத்த சீதக்காதி ஆனாரு.
மேல உள்ள படம் தான் செத்தும் கொடை கொடுத்த சீதக்காதியோட கபர். இது காதை

கதைக்கும் காதைக்கும் என்ன வித்தியாசமுனு அண்ணன் பழமை பேசி கிட்ட கேட்டு தெரிஞ்சுக்குங்க
(எனக்கு தெரியும்னாலும் பழமைபேசி அண்ணன் மாதிரி சிறப்பா சொல்லத் தெரியாது)
இதுலருந்து என்ன தெரியுதுன்னா
இரப்பவருக்கு இல்லை எனாது கொடுப்பவருக்கு
இறந்த பின்னும் இறவாப் புகழ் கிடைக்கும்
அதுனால நம்மால முடிஞ்சவரை மத்தவுகளுக்கு உதவி செய்யனும்



புதன், 12 ஆகஸ்ட், 2009

பாகிஸ்தானியை வெட்டிக் கொண்று தின்ற பிலிப்பைன்ஸ் நாட்டினர்

தயவு செய்து இதய பலகீனம் உள்ளவர்கள் இதைப் படிக்க வேண்டாம். சவுதி அரபியாவில் ஜுபைல் நகரில் எண்ணைக்கிணறு கட்டுமான பணியாளருக்கான பல்வேறு தங்கும் முகாம்கள் உள்ளன. இங்கு பல்வேறு நாட்டினரும் தங்கி வேலைப் பார்த்து வருகின்றனர். இவற்றுள் ஒரு முகாமில் கடந்த பத்து தினங்களுக்கு முன்பு நடந்த பயங்கரம் இது.
ஏழு பிலிப்பைன்ஸ் நாட்டினைச் சேர்ந்த இளைஞர்கள் ஒரு பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவரை வெட்டிக் கொண்றதாக காவலர்களால் கைது செய்யப்பட்டனர். அவர்களது அறையினை காவலர்கள் சோதனையிட்ட போது கிடைத்த கோரக்காட்சிகள் இவை.
இதே முகாமில் கடந்த ஆண்டு ஒரு நேபாள் நாட்டைச் சேர்ந்த நபரை நான்கு பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த நபர்கள் ஓரின பாலியல் வல்லுறவு கொண்டு பின் கொண்றதற்காக கைது செய்யப்பட்டு தலை வெட்டிக் கொல்லப்பட்டு தண்டனை நிறைவேற்றப் பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.












செவ்வாய், 11 ஆகஸ்ட், 2009

வீரபாண்டிய கட்டபொம்மனும் ஜாக்சன் துரையும் சவுதி அரபியாவில் சந்தித்தால்

வீர பாண்டிய கட்டப் பொம்மன் திரைப்படத்தில் வீரபாண்டிய கட்டப்பொம்மனும் ஜாக்சன் துரையும் இராமநாதபுரம் அரண்மனை இராமலிங்க விலாசத்தில் சந்தித்து பேசும் வசனங்கள் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்று.மொழிபெயர்ப்பாளர் துணையின்றி ஜாக்சன் மிக சரளமாக தமிழ் பேசுவது ஆச்சர்யமே. படத்துக்காக இதை சுலபமாக எடுத்துக் கொண்டாலும் உண்மையில் ஆங்கிலம் மட்டும் தெரிந்த ஒரு நபரும் தமிழ் மட்டும் தெரிந்த ஒருவரும் துபாஷ் யாருமின்றி உரையாடுதல் கடினமே.

சவுதி அரபியாவில் எண்ணைக்கிணறு கட்டுமான நிறுவனங்களில் உலகம் மொத்தமுள்ள அனைத்து நாட்டினரும் வேலைப் பார்த்து வருகின்றனர்.ஆங்கிலமும் அரபியும் கலந்த ஒரு புதுமையான மொழிதான் இங்கே எல்லோருக்கும் பொது மொழி.இலக்கணமில்லாத காலங்களில்லாத ஆங்கிலத்துடன் கீழ்கண்ட அரபு வார்த்தைகளை சேர்த்து விட்டால் அந்த பாஷை ரெடி.

பி=ஆமாம், முடியும் மாபி= இல்லை, முடியாது சுகுல்=வேலை அலதுல்=நேராக, ஒரேடியாக சவாசவா=சேர்ந்து, உடன்,கூடவே மாலும்=தெரியும் கிர்கிர்=பேச்சு மொகத்=அறிவு, திறமை புலுஸ்=சம்பளம்,காசு ஐவா=சரி



சரி இப்பக் கதைக்கு வருவோம் சவுதியில் இபிஎஸ் (engineering ,procurement and supply)கம்பனியில் வேலைபார்த்த தற்போது கிழக்கிந்திய கம்பனியில் வேலை பார்க்கும் ஜாக்சன் துரையும் ஓலாயன் கம்பெனியில் வேலை பார்த்து தற்போது பாளையத்து மன்னராக இருக்கும் வீரபாண்டிய கட்டப்பொம்மனும் சவுதி தம்மாம் நகரில் சந்தித்துக் கொள்கின்றனர். இருவருக்கும் சவுதியில் ஏற்கனவே வேலை பார்த்த அனுபவம் இருப்பதால் மொழிபெயர்ப்பாளர் யாருமின்றி பேச்சைத் துவங்குகின்றனர்.

ஜாக்: யூ விர பண்டிய கெட்டபொம்மா?

வீரு: யூ மாபி மாலும் இங்கிலிஷ் ஐ வீரபாண்டிய கட்டபொம்மன் யூ ஜாக்சன் துரை.

ஜாக்: ஓகே ஓகே ஒய் லாங் மீட்டர் கமிங்.

வீரு: சம் படி ஸ்பீக் மீ யூ லைக் பிரண்ட்சிப் தட் வொய் ஐ கமிங்

ஜாக்: ஐ லைக் பிரண்ட்சிப் பட் யூ நோ குட் கை

வீரு: வீ தமிழ் மாலும் ஆல், யூ டோண்ட் டீச் லெசன்ஸ் பிகாஸ் யூ மாபி மொகத் கை

ஜாக்: யூ டூ மச் ஹெட் வெயிட் கை ஆஹ்

வீரு: ஹா ஹா ஹா தட் இஸ் சவாசவா கேரக்டர் பிரம் பெர்த்.

ஜாக்: ஐ ஃப்ளேம் யூ

வீரு: வாட் ஃபிளேம் ஸ்பீக் ஸ்பீக்

ஜாக்: டூ மச் ஃபிளேம் லிட்டில் டைம் நாட் எனாப்ஃ

வீரூ: யூ மாபி மாலும் அக்கவுண்டிங்

ஜாக்: ஸ்டுபிட் யூ ஸ்பீக் அபவுட் மீ மாபி மாலும் அக்கவுண்டிங் லிசன் ஐ ஸ்பீக்
லாங் டைம் யூ மாபி கிவ் கிஸ்தி சவாசவா யூ மாபி கிவ் டாக்ஸ் சவாசவா யூ மாபி கிவ் இண்ட்ரஸ்ட் பார் ஆல் பேலன்ஸ் புலுஸ்.

வீரு: கிஸ்தி டாக்ஸ் இண்டரஸ்ட் ஹா ஹா ரெயின் கமிங் எர்த் க்ரோயிங் வொய் ஐ சுட் கிவ் கிஸ்தி. யூ சவாசவா கம் டூ லேண்ட்,தேர் யூ போர் வாட்டர் டூ அவர் கிராப்ஸ்,ஆர் யூ பிளாண்ட் எனி சீட்ஸ்,ஆர் யூ பிளக் எனி வீட்ஸ்,ஆர் யூ பிரிங் கஞ்சி டூ அவர் பார்மர்ஸ்,ஆர் யூ கிரைண்டிங் எனி டர்மரிக் டூ அவர் மேடம்ஸ்,ஆர் யூ அங்கிள் ஆர் கசின் வொய் யூ ஆஸ்க் டாக்ஸ் ஹவ் யூ ஆஸ்க் இண்ட்ரஸ்ட் ஃஇப் அவர் பார்மர் மாலும் திஸ் மேட்டர் தே புரோக் யுவர் ஹெட் இன் பீஸ் பீஸ் பீ கேர்புல்.

ஜாக்: ஹெய் கைஸ் அரஸ்ட் திஸ் டூ மச் கிர்கிர் கை.
வீரூ: ஹா ஹவ் டேர் யூ டூ புட் யுவர் ஹேண்ட் ஆன் மறத்தமிழன் லேப்
இஃப் மை மம்மி மாலும் திஸ் மேட்டர் சி வில் கில் யூ பை ஹெர் சாங்
இஃப் மை மேடம் மாலும் திஸ் மேட்டர் சி வில் கில் யூ பை ஹெர் குழம்பு
இஃப் அவர் ஆக்டர் விஜய் மாலும் திஸ் மேட்டர் ஹி வில் கில் யூ பை ஹிஸ் வில்லு

மூன்றாவது வரியைக் கேட்டதும் ஜாக்சன் துரை மூர்ச்சையாகிறார் வீர பாண்டியனாரின் சவுதி சந்திப்பு வெற்றிகரமாக இனிதே முடிகிறது.










சனி, 8 ஆகஸ்ட், 2009

இயேசு காந்தி கமல் என்ன ஜாதி

1991-1996 செயலலிதா ஆட்சியில்தான் ஜாதி அரசியல் செழித்து வளர்ந்தது எனலாம். அதுக்கு முன்னரே ஜாதிகள் இருந்தாலும் இந்த காலக்கட்டத்தில்தான் மாவட்ட தலைநகருக்கு பேரு வைக்கிறது போக்குவரத்துக் கழகத்துக்கு பேரு வைக்குறதுனு ஜாதி அரசியல் ரொம்ப விபரீதமா போய்க்கிட்டு இருந்தது.
அப்புறம் கடைசியா தேனி போக்குவரத்து கழகத்துக்கு வீரன் சுந்தரலிங்கனார்னு பேர் வச்சதும் பல பிரச்சினை வந்து கடைசியா கலைஞர் போக்குவரத்துக் கழகத்துக்கெல்லாம் பேர எடுத்துட்டு கோட்டமாக பிரிச்சதும் தான் நிம்மதி வந்துச்சு.

இருந்தாலும் அப்ப பிடிச்ச ஜாதிப் பித்து இன்னும் எங்க ராமநாதபுரம் மாவட்டத்த விடல. ஓட்டப் பெ(பொ)றுக்குரதுக்காக இத அரசியல் தலைவர்கள் செஞ்சாங்கன்னு நடுநிலை மக்கள் புரிஞ்சிகிட்டாலும் இந்த ஜாதி தலைங்க இந்த மாவட்டத்துக்கு இன்ன பேர வை அந்த போக்குவரத்து கழகத்துக்கு இவர் பேர வைன்னு ஒரே போஸ்டரா அடிச்சு பஸ் ஸ்டாண்ட் பூரா ஒட்டிக்கிட்டு இருப்பாய்ங்க.

இதுல என்ன வேடிக்கைன்னா இவய்ங்க இராமநாதபுரம் மாவட்டத்துக்கோ அல்லது மருது பாண்டியர் போக்குவரத்துக் கழகத்திற்கோ பேர மாத்த கேட்க மாட்டாய்ங்க. அடுத்த மாவட்டத்துக்குதான் ராம்நாடு பஸ்ஸ்டாண்டுல போஸ்டர் ஒட்டுவாய்ங்க. இதுல சுதந்திரத்துக்காக பாடுபட்ட தேசிய தலைவர்கள் அம்பேத்கர்,முத்துராமலிங்க தேவர்,காமராஜ்,வ வு சி இவுங்கல்லாம் ஜாதி தலைவரா போனதுதான் கொடுமை.
பெரும்பிடுகு முத்தரையர்,ராமசாமிபடையாட்சி,தியாகி விஸ்வநாத மருத்துவர்,முத்துச்சாமி ஆச்சாரி வீரன் அழகுமுத்துக்கோண்னு தலைவர்கள்ளாம் தமிழ்நாட்டுல இருந்தாங்கனு இவிங்க ஒட்டுற போஸ்டரப் பாத்துத்தான் ராம்நாட்டுல தெரிஞ்சுக்குவோம்.

இப்படித்தான் ஒருநாளு இலங்கை ஜனாதிபதி பிரேமதாசா இறந்ததுக்கு கண்ணீர் அஞ்சலின்னு போஸ்டர் ஒட்டியிருக்கு என்னடானு பாத்தா அவரு சலவைத் தொழிலாளி சாதியாம்.அப்புறம் ஒரு நாளு பாரத முன்னாள் ஜனாதிபதி கியானி ஜெயில்சிங்குக்கு பிறந்த நாள் வாழ்த்து போஸ்டரப் பாத்தோம் அவுரு ஆசாரி ஜாதியாம் போஸ்டருல ஐம்பொன் தொழிலாளர் சங்கம்முன்னு போட்டிருந்தாய்ங்க.இத விட கொடுமை என்னன்னா அக்டோபர் இரண்டாம் தேதி காந்திக்கு பிறந்த நாளு வாழ்த்துச் சொல்லி போஸ்டரு என்னடா காந்தி மேல திடீருன்னு பாசம் வச்ச ஜாதி யாருடானு பாத்தா அதுல ஆயிர வைசிய செட்டியாராம் காந்தி செட்டியாருன்னு அன்னைக்குத்தான் நான் தெரிஞ்சுக்கிட்டேன்.

பெருசுகதான் இப்படி இருக்குதுகன்னு பாத்தா படிக்குற சிறுசுக அதுக்கு மேல. நடிகர்களின் சாதியை கண்டுபுடிச்சு அவய்ங்களுக்கு ரசிகர் மன்றம் வைக்குறதுல எங்க பயலுக கில்லாடிக. சரத்குமாரு பாண்டியராசன் ராமராசன் ரசிகர் மன்றம்ன்னா அது நாடாரு,கார்த்திக்கு பிரபு கமல்ஹாசன்னா அது தேவரு,பிரசாந்து விக்ரம்முன்னா அது தேவேந்திரகுல வேளாளர் பார்த்திபன்னா அது ஆசாரி இப்படி ஒரு மார்க்கமா ரசிகர் மன்றம் வைச்சுக்குட்டு இருந்தாய்ங்க.தேவர் வீட்டுப் பசங்க நிறையப்பேரு எங்கூட ஒன்னா படிச்சாய்ங்க. அவய்ங்க கூட பசங்கள்ளாம் ஒருநாளு ஒன்னா பேசிக்கிட்டு இருக்கும்போது ஒரு பய கேட்டான் "ஏண்டா கார்த்திக் பிரபு ஒகே அது ஏண்டா கமலஹாசனையும் தேவர் லிஸ்டுல வச்சுருக்கிங்க அவரு தேவர்மகன் படத்துல நடிச்சதாலயா"ன்னு கேட்டான், அதுக்கு தேவர் வீட்டு பையன் சொல்லுறான். "அது மட்டும் இல்லடா அவரு மூக்கப்பாரு அது அய்யரு மூக்கே இல்ல அப்படியே எங்க ஜாதி மூக்கு அது மட்டும் இல்ல தலைவரு ராம்னாடு ராசா அரன்மனியிலதான் பொறந்தாரு" அப்படின்னு பொடிவச்சான். அந்த காலத்துல பரமக்குடியில வசதி இருந்துருக்காது அதனால ராம்னாடு வரும்போது அரண்மனையில் பொறந்துருப்பாருன்னு சொன்னான் ஒருத்தன் அதுக்கு அவன் சொல்லுறான் ஏண்டா வர்ற வழியிலயே பழய வெள்ளக்கார ஆஸ்பத்திரி (தூய மார்ட்டின்) இருக்குல அதுல பொறக்காம ராம்நாடு அரண்மனை வந்துதான் பொறப்பாரோ அப்புடின்னு புதிர் போட்டான். நான் உடன 'போங்கடா விட்டா நீங்க கடவுளுக்குக் கூட ஜாதி கட்டி விட்டுறவிங்கடா விடுங்கடா பேச்ச"ன்னு எந்திரிச்சு வந்துட்டோம் வீட்டுக்கு வர வழியில என் கோனாரு பிரண்டு ஒருத்தன் ஆரம்பிச்சான் "ஏண்டா கடவுளுக்கு ஜாதி இல்லைன்ற கிருஸ்னரு யேசுல்லாம் எங்க சாதிதாண்டா' அப்படின்னு ஆரம்பிச்சான் எப்படிற்றான்னா அவங்க் ரெண்டு பேரும் ஆடு மாடு மேய்ச்சாங்கன்னான் அதுக்கு உடனே ஆசாரி ப்ரண்டு ஒருத்தன் சொன்னான் 'டேய் கிருஸ்னர வேனும்னா ஒத்துக்குறேன் ஆனா இயேசுவப்பத்தி சொல்லாதேன்னு சொன்னான் உடன நான் "ஏண்டா இயேசு ஆசாரியாடா ன்னு கேட்டா அதுக்கு அவன் சொன்னான் "ஆமா அவுக அப்பா சூசை மர தச்சருதானே அப்ப இயேசுவும் ஆசாரிதான்"அப்படின்னு ஒரு போடு போட்டான் . எனக்கு தலை சுற்றாத குறைதான்.

திங்கள், 3 ஆகஸ்ட், 2009

எங்க ஊரு கீழக்கரைல எனக்கு புடிச்ச பத்து

"தின்னு கெட்டான் துலுக்கன் உடுத்திக் கெட்டான் செட்டி" அப்படின்னு எங்க பக்கம் ஒரு பழமொழி ஒன்னு சொல்லுவாங்க கெட்டுப் போற அளவுக்கு சொத்த வித்துல்லாம் திங்கனும்னா அந்த அளவுக்கு அந்த பண்டம் சுவையா இருக்கனும்ல அப்புடிபட்ட சுவையான, எங்க ஊரு கீழக்கரைல மட்டும் கிடைக்கிற பத்துதான் இந்த கீழக்கரைல எனக்கு புடிச்ச பத்து ( இது முஸ்லீம் ஊருங்கிறதுனால பழமொழி உண்மைதான்னு நினைச்சிறாதிகப்பு!!
தினமும் தின்னுப்புட்டு யாரும் கெட்டுப்போகல நல்லாத்தேன் இருக்கோம் கடவுள் புண்ணியத்துல)
1. முதல் பண்டம் கடற்கரை பக்கத்துல நம்ம முஸ்தபா காக்கா கடை ஆட்டுக்கால் சூப்பு சூப்புன்னா அதுதான் சூப்பு ஒரு காலு ஒரு குடல் துண்டு ஒரு நெஞ்செலும்பு ஒரு அவிச்ச முட்டைன்னு சூப்புல பல அயிட்டங்களை போட்டுச் சுடச்சுட கொடுப்பாரு காக்கா தெரிஞ்சவுக தெரியாதவுக யாராயிருந்தாலும் பாரபட்சமில்லாம ஒரேமாதிரி வீட்டுக்கு வந்த விருந்தாளி மாதிரி கவனிப்பாரு சாயங்காலம் 4 1/2 க்கு கடை திறந்தா 6 மணிக்குள்ள சரக்கு முடிஞ்சிறும் எப்பக் குடிச்சாலும் எத்தனை குடிச்சாலும் திகட்டாதது காக்கா கடை சூப்பு

2.ரெண்டாவது அயிட்டம் நோன்பு நேரத்தில மட்டும் கிடைக்கிற நோன்பு கஞ்சி எல்லா பள்ளிவாசல்லயும் இது இலவசமாக கிடைக்கும் பாசிப்பருப்பு பச்சரிசி நெய் காய்கறில்லாம் போட்டு சுவையா இருக்கும் லைலத்துன் கத்ரு 27ம் கிழமையிலருந்து தலப்பிறை வரைக்கும் எல்லா பள்ளியிலயும் கறிக்கஞ்சிதான் தூக்குவாளி நிறைய வாங்கிட்டுப் போய் வீட்டுல வச்சு செம்புல வச்சுத்தான் குடிக்கிறது தொட்டுகிறதுக்கு நம்ம ஓட்டக்கடிகாரம் கடையிலருந்து கறி சமுசாவோ கறிவடையோ இருந்தா சுகம்தான்

3.கார்த்திகை மாசம் பொறந்துட்டா ஊர்ல சீலா மீன் சீசன் ஆரம்பிச்சிடும் வெளியூர்ல இருந்துலாம் மீன் வாங்க ஆளு வரும். லெப்பை கடைக்கு முன்னாடி நைட்டு 7 மணிக்கு மேல ஓலப்பாய் போட்டு பெட்ரோமக்ஸ் லைட்டு வெளிச்சத்துல வியாபாரம் களை கட்டும் 2கிலோவுககு குறையாமத்தேன் எங்க வீட்டுல வாங்குவோம். எங்க அம்மா அத ரெண்டு விதமா குழம்பு வைப்பாங்க புளியில்லாம ஒன்னு புளி சேத்து ஒன்னு புளியில்லா குழம்பை நைட்டுக்கு இடியப்பத்தோட சேத்து வச்சுக் கட்டுறது புளி வைச்ச குழம்பை மறுநாளு சோத்துக்கு வைச்சுக்குறது. விலைதான் ரொம்ப ஜாஸ்தி கிலோ 300 ரூபாய்க்கு மேல அதவிட சீலா கருவாடு விலை கிலோ 400 க்கும் மேல 200கிராம் சீலா கருவாடு வாங்கி புளியில்லாம குழம்பு வச்சு தேங்காய் சோறு பொங்கிச் சாப்புட்டா.................விலை என்ன பெரிய விலை.


4. கடற்கரை பக்கத்தில இருக்கிறதுனால ஊருல பெரும்பாலும் மீன்தான் பிரதான உணவு எங்க ஊர்ல யாரும் ஐஸ் வைச்ச மீன் சாப்பிட மாட்டோம் எல்லாமே கரைவலையில புடிச்ச ஃபிரஷ் மீனுதான் கரைவலைங்கறது அதிகாலை 4 மணிக்கு முன்னாடி கடலுக்குள்ள 1 மைல் தூரம் சின்ன வல்லத்துல போயி வலையைப்போட்டு அப்புடியே இழுத்துககிட்டு திரும்பி வந்துறனும் பெரும்பாலும் பொடிமீன்தான் மாட்டும் விலை,ஓரா,நகரை,சூடை,தொண்டன்,சூவாரை,பாறை,குமுளா,வாவல்,திருக்கை,நெத்திலி,காரா,
முட்டைப்பாறை, வாளை,ஊலி,ஊலா,முரல்,கிலக்கன்,ஊடகம்,பால்சுறா, கணவாய் இப்படி பல
தினுசுல மீன் கிடைக்கும் விலை மற்ற ஊரைக்காட்டிலும் ஜாஸ்திதான் இருந்தாலும் கரைவலை மீன ஒரு தடவ சாப்புட்டுட்டா மத்த மீன தொட மனசு வராது.


5.லொதல், பேரக்கேட்டதும் வித்தியாசம இருக்குல திருநெல்வேலிக்கு அல்வா மாதிரி கீழக்கரைக்கு லொதல் கீழக்கரையில சந்துக்கு சந்து எல்லாக் கடையிலயும் கிடைக்கும் இருந்தாலும் செங்கார் தெருவுல ஒரு பழய வீடுதான் கீழக்கரையோட இருட்டுக்கடை இதுக்கடுத்து ராவியத் கடை லொதல்தான் சுவையா இருக்கும்.


6.முஸ்தபா காக்கா சூப்புக்கடை மாதிரி கீழக்கரையில இன்னும் ஒரு சிறப்பான கடை ராவியத் ஸ்வீட் சூப்புக்கடை மாதிரி சாயங்காலம் 4 மணிக்கு திறந்து 6 மணிக்குள்ல மூடிருவாங்க மைசூர் பாக்கு அல்வா ரெண்டு மட்டும்தான் வியாபாரம் லேட்டாப் போனா கிடைக்காது மைசூர்பாக்கும் சரி அல்வாவும் சரி வாயில போட்டவுன கரைஞ்சுடும் மெல்லத் தேவையில்லை வீட்ல எந்த விசேஷமுன்னாலும் ராவியத் கடை ஸ்வீட்டுக்கு கண்டிப்பாக இடம் உண்டு.

7.ஏழாவது ஐட்டம் மாசி இது கருவாடு வகையைச் சேர்ந்தது.ஊர்ல பெரும்பாலும் எல்லா மளிகைக் கடையிலும் "இவ்விடம் நயம் குந்தாரா மாசி கிடைக்கும்" ன்னு போர்டு இருக்கும் மாசிக்குனே தனிக்கடை ஒன்னு பழைய குத்பாப் பள்ளிவாசல் சாலையில இருக்கு. மாசி வாங்கும்போது எப்பவும் பெருசாப் பாத்துதான் வாங்கனும் 1 மாசி குறைஞ்சது 1/4 கிலோ இருக்கனும் உடைச்சுப் பாத்தா உள்ளே இரத்தச் சிவப்பா கலர் இருக்கனும் அதான் நல்ல மாசி. மாசியை நல்லா அம்மியில உடைச்சு வெந்நித்தண்ணில ஊற வச்சு நல்லா ஊறுனவுடன எடுத்து பச்சை மிளகாய் சின்ன வெங்காயம் தேங்காய்பூ போட்டுப் பொரிச்சு சாப்புட்டமுன்னா அப்புடித்தான் ஒரு ருசி.

8.சீப்புப் பணியாரம் இதுவும் எங்க ஊர்ல மட்டும்தான் கிடைக்கும் அரையடி நீளத்துக்கு குழல் மாதிரி இருக்கும் பணியக்காரத் தெருவுன்னே ஒரு தெரு ஊர்ல இதுக்குனே இருக்குன்னா பாத்துகுங்க எல்லாத் தெருவுலயும் இதை சுடுறாங்க ஆனாலும் கிழக்குத் தெரு கடைசியிலே முகைதீன் அப்பா தர்ஹா எதுத்த தெருவுல வாங்குறதுதான் தித்திப்பா இருக்கும்.

9.தெற்குத்தெரு ஜமாத்துக்குப் பக்கத்துல அகமது டீக்கடை ரொம்ப சாதாரனமாத்தான் இருக்கும். 11 மணிக்கு கடையில பயங்கர கூட்டமாயிடும் காரணம் கீரைப்போண்டா குஞ்சிக்கீரை அல்லது தண்டுக்கீரையில போண்டா போடுவார் அகமது காக்கா ஊர்ல கட்டிட வேலைப் பாக்குறவுங்க வெளியூர்லருந்து காங்கீரீட் போட வரவுங்களுக்கெல்லாம் கீரைப்போண்டா வாங்கிக் கொடுக்கலனா அடுத்த தடவ உங்க வீட்டு வேலைக்கு யாரும் வர மாட்டாங்க.

10.கீழக்கரையில பெரும்பாலும் பெருசுகளுக்கு பொழுது விடியிறது லெப்பை கடையிலதான் காரணம் லெப்பைகடை சாயா எடை கட்டுன பால்தான் அதுக்கு காரணங்கிறது என்னோட கணிப்பு லெப்பைகடை மாதிரி அதே சுவையோட பரமக்குடி பக்கத்துல அரியனேந்தல் கோணார் கடை சாயா நல்லா இருக்கும்

ஓட்டுமாவு,ராத்து ரொட்டி,பரசு கடை புரோட்டா, நைட்டு ஹோட்டல் முட்டைக்குருமா இப்புடி இந்த லிஸ்ட்ல விட்டுப்போன அயிட்டமும் நிறைய இருக்கு இருந்தாலும் மேல உள்ள பத்துதான் ஊரை விட்டு வந்தாலும் மறக்க முடியாம நினைப்புல அப்புடியே இருக்கு.



முயற்சி

பேரண்புடையீர்
வலைத்தளத்தில் இது என்னுடைய கன்னி முயற்சி
தவறுகள் ஏதும் இருப்பின் அருள்கூர்ந்து பொறுத்தருளவும்
என் தவறுகளைச் சுட்டிக்காட்டி திருத்தவும்
முதல் முயற்சியாய் ஒரு கவிதை
முயற்சி
முடியைக்கட்டி மலையை இழுப்பேன்
முடிந்தவரை
நான் புதிதாகப் பிறந்த டென்சிங்
வாழ்க்கை எனும் இமயத்தில் ஏறுவேன்
வெற்றி எனும் எவரெஸ்டை நோக்கி
தடுத்து நிற்குது பனி - அதை
உடைத்து முன் செல்வதே என் பணி