வெள்ளி, 31 டிசம்பர், 2010

நாலு பாட்டுத்தான் நாளைக்கு வாழ்த்துச் சொல்ல

நாளை புத்தாண்டு பிறக்கிறது.

சுழலும் ஏர் பின்னது உலகம் என்று அய்யன் கூறியது போல
தமிழ் கூறும் நல்லுலகம் திரையுலகம் பற்றிய செய்திகளையும்
படங்களையுமே காலம் காலமாக இது போன்ற நன்னாட்களில்
கண்டும் கேட்டும் வருகின்றது.

எனக்குத் தெரிந்து புத்தாண்டு பிறந்து விட்டால் நான்கு பாடல்கள்
மட்டுமே நினைவுக்கு வருகிறது. ஏன் எனில் இந்த நான்கு பாடல்கள்
எந்த புத்தாண்டு பிறந்தாலும் வானொலியிலும் தொல்லைக்காட்சியிலும்
திரும்ப திரும்ப ஒளி-ஒலி பரப்பப்படுவதினால்.

1.சங்கிலி படத்தில் அமரர் சிவாஜி கணேசனின்"நல்லோர்கள் வாழ்வைக் காக்க நமக்காக
நம்மைக் காக்க
ஹேப்பி நீயு இயர்"


2. அடுத்து மிகப் பிரபலமான பாடல்

சகலா கலா வல்லவனின்


"ஹேய் எவரிபடி விஷ் யூ ஹேப்பி நீயு இயர்"


3. அடுத்து தலைமகன் படம் என்று நினைக்கிறேன்
பிரபு நடித்தது


"தங்க மகள் தேடி வந்தாள் முத்துநகை அள்ளித்தந்தாள்
வெற்றி எனை தேடி வரும் நன்னாள் இது
எண்ணப்படி வாழ்வு தரும் பொன்னாள் இது
புத்தாண்டு வாழ்த்துக்கள் ஹே ஹே
எல்லோரும் பாடுங்கள்"


4. தல அஜித்தின் முகவ்ரி படம்


வா வா புத்தாண்டே


ஏங்கப்பா ப்ல்லாயிரக்கணக்கான திரைப்பாடல்கள்
தமிழ் திரையுலகில் இருந்தாலும் புத்தாண்டுக்கான
பாடல்கள் பஞ்சமே

இதைப்போக்க அனைத்து நடிகர்களும் ஆளுக்கொரு
புத்தாண்டு பாடலில் இந்த வருடம் நடிக்க வேண்டும் எனக்
கேட்டுக்கொண்டு மீண்டும் தமிழ் கூறும் நல்லுலகம் அனைவருக்கும்
WISH YOU A HAPPY NEW YEAR எனக்கூறி விடைபெறுகிறேன்.

என்னடா பச்சைத்தமிழன் ஆங்கிலத்தில் வாழ்த்து கூறுகிறேனே
என எண்ண வேண்டாம். ஏன் எனில் பிறக்க்ப்போவது ஆங்கிலப்
புத்தாண்டு. வரும் தைத்திங்கள் முதல் நாள் பிறக்கும் தமிழ்
புத்தாண்டில் தமிழில் வாழ்த்துக்கள் கூறுவோம்.

செவ்வாய், 28 டிசம்பர், 2010

இங்கிலிசுக்கு தமிழ்நாட்டுல்ல இருக்கிற மருவாதை

ரிக்சாக்காரன் படத்துல நம்ம எம்ஜியாரைப் பாத்து மேஜர் சுந்தரராசன் கேட்பாரு
"செல்வம் வாட் யூ திங்க் அபோட் லைப்" அதுக்கு வாத்தியாரு இங்கிலிசுலேயே
பதில் சொல்வாரு. அதப்பாத்து அசந்து போற மஞ்சுளா வாத்தியாரைப்பாத்து
நீங்க படிச்சவரான்னு கேட்கும். அந்த அளவுக்கு நம்ம தமிழ்நாட்டுல எவனாவது
இங்கிலுசுல பொளந்து கட்டுனா உடனே நம்ம சனம் அவன் மேல ஒரு மருவாத
வச்சிரும்.

வேலைக்காரன் அப்புறம் மன்னன் படத்துல சூப்பர் ஸ்டாரு தூங்காதே தம்பி
தூங்காதேல்ல உலகநாயகன் அப்புறம் மீனவரா இருக்கிற விசய் தம்பி காருல
வர்ற கதாநாயகிகிட்ட இங்கிலிசுல பொளந்துகட்டுற காட்சியெல்லாம் பாத்துட்டு
கை வலிக்கிற வரைக்கும் கை தட்டுற சனம்தான் நம்ம தமிழ் சனம்.

இன்னும் பஸ்ஸுல டிரய்ன்ல போகும் போது எவனாவது இந்தியிலோ அல்லது
தெலுங்கிலயோ பேசுனா அவன் சட்டைப் பண்ணாது நம்ம சனம். ஆனா இங்கிலிசுலே
எவனாவது பேச ஆரம்பிச்சான் அவன அப்படியே தேவலோகத்துல வந்து இறங்குன
இந்திரன் சந்திரன் மாதிரி பாக்க ஆரம்பிப்பாய்ங்க.

இதுக்கு நம்மளும் விதிவிலக்கல்ல. ஒன்னாம் வகுப்பில இருந்து 12ம் வகுப்பு வரைக்கும்
தமிழ் மீடியத்தில படிச்சிட்டு காலேசுக்குப் போன புதுசுல கண்ணக்கட்டி காட்டுல விட்ட
மாதிரிதான் இருந்துச்சு. செக்சன் சாலிடு ஹரிசாண்டல் பிளேன் வெர்டிகல் பிளேன்ன்னு
இந்த லெக்சரர்கள் பாடம் எடுக்கும்போது அப்படியே வாயைப்பிளந்து பாத்துகிட்டு இருக்கிறது.

அப்புறமா ஹிந்து பேப்பரு எக்ஸ்பிரஸ் பேப்பரு அசைடு அவுட்லுக்கு இந்தியா டுடேன்னு
ஒன்னுமே புரியாட்டாலும் இந்த பேப்பரைல்லாம் வாங்கி எங்கியாவது பஸ்ஸுல போனா
படிச்சுகிட்டே போறது. படிக்கிறமோ இல்லியோ ஒரு பந்தா காட்டுறது.அப்புறமா கொஞ்சம்
கொஞ்சமா எவனாவது சிக்குறவன்கிட்ட பண்ணி இங்கிலிசு அதாங்க இந்த இன் பண்ணி,
டெர்மினேசன் பண்ணி, ரீடிங் பண்ணி, எனர்ஜைஸ் பண்ணி, அஸ்யூம் பண்ணி, அனலைஸ்
பண்ணி இப்படி பல பண்ணி இங்கிலிசுல அளப்பரையை கூட்டிக்கிட்டு இருந்தோம்.

அப்புறம் சென்னையில வேலைப் பார்க்கும் போது ஆங்கில அறிவ அண்ணாநகர் கிரேண்ட்
செண்ட்'ரல்ல சாக்கிசான் படம் பாத்தும் சத்யம் தியேட்டருல அர்னால்ட் படம் பாத்தும்
ஊருக்குப்போனா மதுரை மாப்பிள்ல விநாயகருல்ல தங்கரீகல்ல பல படங்கள்ள பாத்து
அறிவ வளத்துக்கிட்டோம். இதுல ஒரு விசேசம் என்னன்னா இப்படி படம் பாக்கும் போது
பக்கத்து சீட்டுல்ல எவனாவது சிரிச்சா உடனே நாமளும் விழுந்து விழுந்து சிரிச்சு வைக்கிறது
இல்லனா அவன் நம்மல இங்கிலிசு தெரியாதவன்னு தப்பா நினைச்சுடக்கூடாது பாருங்க.

இப்படி ஒரு பத்து வருசம் சென்னையில வண்டி ஒட்டிட்டு சவுதி வந்தபின்னர்தான்
தெரிஞ்சது நாம பேசுறது இங்கிலிசு இல்லன்னு. ஏன்னா இங்கே பெட்'ரோல் தோண்டுற
வேலையில பெரிய பெரிய அதிகாரிங்க எல்லாம் வெள்ளெக்கார துரைங்கதான். நான் பேசுன
இங்கிலிசப் பாத்துட்டு அவனுங்கல்லாம் மிரண்டு போயி யப்பா உனக்கு Bக்கும் Pக்கும்
வித்தியாசம் தெரியல Tக்கும் Dக்கும் வித்தியாசம் தெரியல்லன்னு சொல்லிட்டு நம்ம கிட்டேயே
வரமாட்டானுக.

இருந்தாலும் நம்ம இங்கிலிசு தாகம் அடங்கல்ல. சிக்குனானுக பிலிப்பைனிக பிலிப்பினிகிட்ட
இங்கிலிசு பேசுறது ரொம்ப ஈசி. நம்ம தமிழங்கிட்ட பண்ணி பண்ணி பேசுற மாதிரி
அவனுககிட்ட கோயிங்கா கம்மிங்கா ஈட்டிங்கா சாட்டிங்கான்னு இப்படி ஒவ்வொரு வார்த்தை
முடிக்கும்போதும் ஒரு ஆ சேத்துகிட்டு பேசுனா போதும்.

இப்படி பேசி பேசி நமக்கு ஒரு காலத்துல ஒரு பந்தா வந்துருச்சு. ஆகா நாம பேசுறதுதாண்டா
இங்கிலிசுன்னு. அப்ப ஒரு நாள் ஒரு தமிழன்கிட்டேயே இங்கிலிசுல பேச ஆரம்பிச்சதும்
அவன் கேட்டான் ஏண்டா உனக்குத்தான் எல்லாம் தெரியுமா? எங்க சொல்லு தொப்புளுக்கும்
அக்குளுக்கும் இங்கிலிசுல என்னடா வார்த்தைன்னு. நமக்கு கையும் ஓடல்ல காலும் ஓடல்ல
அப்புறம் அவன் சொன்னான். போயி நல்லா நிறைய வார்த்தகள கத்துக்க அதுக்கப்புறம் "ஐ
ஹேட் வெண்ட்" ஐ டிட் பினிசுடு"ன்னு நீயா புதுசு புதுசா Tenses உருவாக்காதேன்னு மூக்க
அறுத்துபுட்டான். அதோடு விட்டான்னா டேய் இங்கிலுசு என்பது ஒரு லாங்குவேசுதான் அது
ஃநாலேட்ஜ் இல்லன்னு அட்வைசு பண்ணுனான்.

அப்புறமா நான் என்கர்டா டிக்சனரி வெப்ஸ்டைர் டிக்சனரி பழனியப்பா டிக்சனரின்னு பல
அகராதிகள்ள கம்யூட்டர்ல்ல வச்சிகிட்டு கிடைக்கிற ஆங்கில வார்த்தக்கெல்லாம்
அர்த்தம் பாத்து எழுதிப்பாத்து நெட்டுரு போட்டு தினமலர் பேப்பருக்கு தமிழ் செய்திகளுக்கு
இங்கிலிசுல பின்னூட்டம் போட்டு ஒரு ஆங்கிலப் புலவனா மாறிக்கிட்டு வரும்போது அடிச்சானுக
கம்பெனியில ஆப்பு ஆட்குறைப்புன்னு.

அப்புறமா ஊரு வந்து சேந்து மறுபடியும் நேர்முகத்தேர்வு பல கலந்து திரும்ப சவுதி வந்து
சேந்தப்புறம் தெரிஞ்சது.புதுக் கம்பெனில்ல எல்லாரும் நேபாளியும் பங்காளியும்
அவனுக என்னப்பாத்து சொன்னானுக "என்னடா நீ நாங்க வெளிநாட்டுகாரனுக இந்தில
பேசுறோம். தும் ஹிந்துஸ்தானி லெகின் இந்தி நஹி மாலும்"ன்னு

நம்ம திமுக பேச்சாளர் வெற்றிகொண்டான் ஒரு தடவ ஒரு மீட்டிங்கில மதிமுக
எல் கணேசனப் பத்தி பேசும் போது சொன்னாரு. "எல்ஜி குறவன் குறத்திகிட்ட இங்கிலிசு
பேசுவாரு. இங்கிலிசுகாரன்கிட்ட தமிழ்ல்ல பேசுவாருன்னு" அந்தமாதிரிபோச்சு என்னோட
நிலமையும்.

இப்ப கொஞ்ச நாளா நம்ம மடிகணினில்ல இருந்த என்கர்டா பழனியப்பா டிக்சனரில்லாம்
மூட்டைக் கட்டி போட்டாச்சு.

நம்மகிட்ட இருந்த பல ஆங்கில வார்த்தைக்கான் அர்த்தமெல்லாம் தூக்கி ஒரு இடத்துல
போட்டாச்சு. அத படிக்க விரும்புறவங்க இங்கே போயி படிச்சுங்கங்க.

இப்ப நாம பேசுறதுல்லாம் இதுதான்.

"கியா உவ்வா", காம் கர்த்தாஹே" கியா சாயியே" பந்த் கரோ" கிதர் சாரே
நாம் கியா கே"

கேட்கிற பாட்டெல்லாம் இது தான்
கபி கபி மேரா தில் மே, கியா வுவா தேரா வாதா

ஆத்தாஹே சாத்தாஹே
அவ்வளவுதாங்ஹே, அச்சாஹே டீகே.

ஞாயிறு, 26 டிசம்பர், 2010

கடவுச்சீட்டை கடாசப் போறேன்

அனைவருக்கும் வணக்கம்

மீண்டும் உங்கள் அனைவரையும் பதிவுலகத்தில் சந்திப்பதில்
பெரு மகிழ்ச்சி.இந்தப் பதிவின் மூலம் எனது சமீபத்திய சோதனையை பதிவுலக
நண்பர்கள் அனைவரின் முன்னும் வைக்கிறேன். அதில் யாரேனும்
ஒருவர் இந்த சோதனையைக் கடக்க வழி சொன்னால் மிகவும்
மகிழ்சி அடைவேன்.

சோதனை இதுதான்

கடந்த மூண்றாண்டுகளாக நான் சவுதி அரேபியாவில் வேலை
பார்த்தேன். என்னுடைய கடவுச்சீட்டு நான் சவுதியில் வேலைப்
பார்க்கும் போதே கடந்த 2007 வருடம் காலாவதியாகிவிட்டது.
எனவே அது சவுதி ரியாத் இந்திய தூதரகத்தில் புதுப்பிக்கப்பட்டது
இந்த கடவுச்சீட்டில் என்ன வேடிக்கை என்றால் வழக்கமாக பொறியாளர்களுக்கு
வழங்கப்படும் ECNR எனப்படும் "குடியேற்ற சோதனை தேவையில்லை" என்னும்
தகுதி வழங்கப்படவில்லை. நானும் அது குறித்து ஐயப்படவில்லை. ஏன் எனில்
அந்த கடவுச்சீட்டின் மூலம் நான் 3 முறை இந்தியாவுக்கும் இரண்டு
முறை சவுதிக்கும் பயணம் செய்திருக்கிறேன்.
ஆட்குறைப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்டு நான் கடந்த 2009 செப்டம்பர்
மாதம் தாயகம் திரும்பினேன். 9 மாதங்கள் ஊரிலேயே காலம் கழித்தபின்
கடந்த 2010 மே மாதம் மறுபடியும் சவுதி நிறுவனம் ஒன்றுக்கு
நேர்முகத்தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டேன். பயண ஏற்பாட்டினை
நேர்முகத்தேர்வி்னை ஏற்பாடு செய்த பயண அலுவலகமே பொறுப்பேற்றுக்
கொண்டது. அவர்களும் இந்த ECNR தகுதியை ஆராயாமல் எனக்கு விமான
பயணச்சீட்டு வழங்கினர். இதை எடுத்துக் கொண்டு சென்னை விமான
நிலையம் சென்ற எனக்கு சோதனை ஆரம்பம் ஆயிற்று. குடியேற்ற
சோதனை அதிகாரிகள் உனது கடவுச்சீட்டில் ECNR முத்திரை இல்லாததால்
நீ பயணம் செய்ய இயலாது என கைவிரித்தனர்.உடன் பயணம் ஏற்பாடு செய்த அலுவலகத்தினை தொடர்பு கொண்டபோது
அவர்கள் நாங்கள் ஏதும் செய்ய இயலாது உடன் உங்கள் அருகாமையிலுள்ள
கடவுச்சீட்டு அலுவலகம் சென்று விண்ணப்பித்து முத்திரையை பெற்றுக்
கொண்டு பின் பயணம் செய்யவும். இதற்கு நீண்ட காலம் ஆகாது. காலையில்
கொடுத்தால் மாலையில் வழங்கி விடுவார்கள். செல்லும் போது உங்கள் பட்டச்
சான்றிதழ்களின் அசலைக் கொண்டு செல்லவும் என அறிவுரை வழங்கினார்கள்.

அதன்படி நான் என் ஊரின் அருகாமையிலுள்ள மதுரை கடவுச்சீட்டு அலுவலகம்
சென்று விண்ணபித்த போது அங்குள்ள அதிகாரி கூறினார். தம்பி உனது கடவுச்சீட்டு
சவுதியில் வழங்கப்பட்டுள்ளது. எனவே உனக்கு மாவட்ட காவல் துறை மூலம் ஆய்வு
செய்யப்பட்டே முத்திரை வழங்கப்படும். குறைந்தது அதற்கு பதினைந்து நாட்கள் ஆகும்
எனக்கூறி எனது பள்ளிச்சான்றிதழ் முதல் பட்டச்சான்றிதழ் வரை அசல் சான்றிதழ்களை
ஆய்வு செய்த பின் பணம் கட்டிச்செல் எனக்கூறினார்.அதன்படி நானும் பணம் கட்டி
எனது அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் அசல் கடவுச்சீட்டினையும் ஒப்படைத்து
வீடு திரும்பினேன்.பத்து நாட்கள் கடந்தபின் எனக்கு உள்ளூர் காவல் நிலையத்தில் அழைப்பு வந்தது.எனது
அசல் சான்றிதழ்களை பார்வையிட்ட அதிகாரி எனது குடிமைப்பொருள் வழங்கும் அட்டையைப்
பார்வையிட்டப் பின் கூறினார். தம்பி உனது கடவுச்சீட்டில் ஒரு முகவரியும், குடிமைப்பொருள் வழங்கு
அட்டையில் ஒரு முகவரியும் உள்ளதே என வினவினார். ஆம் ஐயா நான் முதல் கடவுச்சீட்டு எடுக்கும்போது வாடகை வீட்டில் இருந்தேன். பின்னர் 6 வருடங்கள் கழித்து சொந்தவீடு கட்டி
மாறி விட்டேன் எனக் கூறினேன். மேலும் ECNR முத்திரைக்கு எனது பட்டச்சான்றிதழே போதுமானது
என கூறினேன். அதை ஏற்காத காவல் அதிகாரி இராமநாத்புரம் வட்ட வருவாய் அலுவலகம்
சென்று உனது பழைய குடிமைப்பொருள் வழங்கு அட்டையின் அசலை கொண்டு வந்தால்தான் நான் உனது விண்ணப்பத்தினை நிறைவு செய்து அனுப்புவேன் எனவே அதற்கான முயற்சியில் இறங்கு என வேறு அலுவலில் மூழ்கினார்.
வட்ட வருவாய் அலுவலகம் செல்வது என்பது எனக்கு பள்ளி பயிலும் காலம் தொட்டு
வேப்பங்காய் சுவைப்பது போல. பல முறைகள் இருப்பிடச்சான்றிதழ்களுக்கும் சாதி
சான்றிதழ்களுக்கும் அலைந்து திரிந்து அங்குள்ள அதிகாரிகளின் அலட்சியப்போக்கினையும்
காலம் கடத்தும் அவலத்தினையும் நன்கு அறிந்தவன்.

கசப்போடு வீடு திரும்பிய எனக்கு ஒரு இனிப்பான செய்தி காத்திருந்தது. அது அஞ்சலகம் மூலமாக
பதிவு அஞ்சலில் வந்த எனது அசல் கடவுச்சீட்டு. திறந்து பார்த்தபோது உள்ளே
இரண்டாம் பக்கத்தில் வழங்கப்பட்டிருந்த எனது ECR முத்திரை அழிக்கப்பட்டு ECNR வழங்கப்பட்டிருந்தது
மதுரை கடவுச்சீட்டு அலுவலகத்தினால்.

எந்த அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தேனோ அதே அலுவலகம் மூலம் கடவுச்சீட்டு வழங்கப்படும்
போது நான் வேறு என்ன செய்வேன் அப்பன் முருகனுக்கு நண்றி கூறிவிட்டு அடுத்த பேருந்தில் ஏறி
சென்னை சென்று விமான பயணச்சீட்டினை மாற்றி அன்றிரவே சவுதி வந்து சேர்ந்தேன்.


இங்கு வந்த பின் ஒரு மாதம் கழித்து என் தாயார் ஒரு முறை தொடர்பு கொண்டு உன்னை காவல்
அதிகாரி வந்து கேட்டார். அவரிடம் நீ சவுதியில் இருப்பதாக கூறினேன் என சொன்னார்.
நமக்கு கடவுச்சீட்டு வந்து விட்ட்து இவர் எதற்கு மறுபடியும் தேடுகிறார் என நானும் அந்த
தகவலுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. பின்னர் ஒரு மாதம் கழித்து என் தாயார்
எனக்கு கடவுச்சீட்டு அலுவலகத்தில் இருந்து ஒரு கடிதம் வந்ததாக மின் அஞ்சலில் அந்த கடிதத்தினை அனுப்பினார்.


அதில் கடவுச்சீட்டு அலுவலகம் இவ்வாறு கூறியிருந்தது.
உன்னைப்பற்றி காவல்துறை தகவல்கள் எதிர்மறையாக இருப்பதால்
இந்த கடிதம் கண்டதும் உடனே உனது கடவுச்சீட்டை மதுரை அலுவலகத்தில் ஒப்படைக்கவும்
தவறினால் உன் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எழுதியிருந்தது.
"அடப்பாவிகளா நீங்கள்தானே கடவுச்சீட்டை அஞ்சலில் அனுப்பினீர்கள் அதைக்கொண்டு நான்
சவுதி வேறு வந்து விட்டேன் இங்கிருந்து உனக்கு எப்படி நான் கடவுச்சீட்டை ஒப்படைப்பது
ஒன்னும் புரியவில்லையே என நான் ஒரு மின் அஞ்சல் மதுரை கடவுச்சீட்டு அலுவலகத்திற்கு
அனுப்பி வைத்தேன்.


அதற்கு பதில் அஞ்சல் அனுப்பிய அதிகாரி நீ ஊருக்கு வரும்போது உனது கடவுச்சீட்டை ஒப்படைக்கவும்
என எழுதியிருந்தார்.


இப்போது என் குழப்பமெல்லாம்
நான் ஊருக்கு வந்தால் என் கடவுச்சீட்டை பறிமுதல் செய்வார்களா?
மறுபடியும் வட்ட வருவாய் அலுவலகம் சென்று குடிமைப்பொருள் வழங்கு அட்டையினை
வாங்கச் சொல்வார்களா?
ஒரு பொறியாளனுக்கு குடிமையேற்ற சோதனை தேவை இல்லை என சொல்லுவதற்கு
அவனது பட்டச்சான்றிதழ் போதாதா?
நாட்டில் அவனவன் போலி கடவுச்சீட்டுகளை வைத்துக் கொண்டு பெயர் மாற்றம் செய்து
கொண்டு என்னென்ன போக்கிரித்தனமெல்லாம் செய்கிறான்கள் அவர்களை விட்டு விட்டு
அப்பாவி பொறியாளன் ஒருவனை காவல் துறை எதிர்மறை தகவல் என பயமுறுத்தும்
இந்த கடவுச்சீட்டு அலுவலகத்தினை என்ன செய்தால் தகும்?


பேசாமல் நான் ஒன்று செய்யலாம் என இருக்கிறேன். நாட்டுக்கு வந்து
போங்கடா நீங்களும் உங்கள் கடவுச்சீட்டும் என கடவுச்சீட்டை வீசியெறிந்து
விட்டு உள்ளுரிலேயே ஒரு பெட்டிக் கடை வைத்து பொழப்பைப் பார்க்க வேண்டியதுதான்!!!!!