புதன், 19 ஆகஸ்ட், 2009

இன்னைக்கும் புளிச்சாறும் பொட்டுக்கடலை துவையலும்தானா

கடைசி கொச்சைக் கயிற்றை கரண்டியால் வெட்டி சாரக்கம்பை எடுத்து கீழே போட்டான் இன்பராசு.ரெண்டு எட்டு விலகி தலையை அண்ணாந்து அவன் கொஞ்சம் முன்னாடி பூசுன சுவத்த ஏற இறங்க ஒரு பார்வை பாத்தான்.
"ம்ம்" ஒரு திருப்தியோட மண்டைய ஆட்டிக்கிட்டு கைலில்ல சட்டையில ஒட்டிக்கிட்டு இருந்த சிமிட்டிக் கலவையை ஒரு உதறு உதறினான். டவுசர் பாக்கட்லருந்து செய்யது பீடி ஒன்னு எடுத்து பத்த வச்சு ஆழமா புகையை ஒரு இழுப்பு இழுத்தான்.

"கலவை கொஞ்சம் மிஞ்சியிருக்கே என்னங்க பண்ணுறது"சித்தாள் ஆராயி இன்பாவை கேட்டாள்."நாலு சட்டி மண்ணப்போட்டு பிறட்டி வை.நாளைக்கு சேத்து பிறட்டிக்கலாம்" னு சொல்லிட்டு பக்கத்துல இருந்த குடத்துல தண்ணி எடுத்து கை கால் முகம் கழுவி கைலியிலேயே முகத்த துடைச்சிகிட்டான்.

மறுபடியும் டிரவுசர் பாக்கட்ல கையை விட்டு பணத்த எடுத்து எண்ணிப்பார்த்தான்."இருநூத்திப்பத்துதான் இருக்கு வீட்டுல அமுதாவுக்கு காசு கொடுத்து நாலு நாளாச்சு நாளக்கி மேஸ்திரிகிட்ட காசு வாங்கனும்"னு நினைச்சுகிட்டு ஆராயிக்கு கூலி கொடுத்தான். "நாளைக்கு வெள்ளன வா எப்பவும் மாதிரி ஒம்போதரைக்கு மேல ஆடி அசைஞ்சு வராதே"ன்னு சொல்லிட்டு அங்கன காம்பவுண்ட் சுவத்துல சாத்தியிருந்த சைக்கிள எடுத்து மிதிச்சு செக்கடிக்கு வந்தான்.

செக்கடி எப்பவும் போல கசகசன்னு கூட்டமா இருந்தது.வேலை முடிஞ்சு வீட்டுக்குப் போறதுக்காக சித்தாளு கொத்தனாரு,நிமிந்தாளு வேலை பார்க்குறவுங்க பஸ்ஸ எதிர்பார்த்து நின்னுகிட்டு இருந்தாங்க. தெரிஞ்சவுங்களப் பாத்து சிரிச்சுக்கிட்டே இன்பா சைக்கிள மனிஸு பேக்கரி முன்னாடி நிறுத்தினான். ஒவ்வொரு மேஸ்திரிக்கும் வேலைக்கு ஆளு பிரிச்சு விடறுத்துக்கு ஒரு டீக்கடை இருக்கும் வேலைக்கு ஆளு பிரிச்ச மாதிரியும் ஆச்சு வேலை பாத்து வர்றவுங்களுக்கு டீ வாங்கி கொடுத்த மாதிரியும் ஆச்சு.மேஸ்திரிய பார்க்க முடியாட்டா ஊருக்குப் போறதுக்கு அஞ்சு பத்து கடன் கூட கடையில கிடைக்கும். இன்பாவோட மேஸ்திரிக்கு மனிஸ் பேக்கரிதான் ஆளுங்கள பிரிச்சு விடுற இடம்.

"டீ போடவா இன்பா"ன்னு டீ மாஸ்டர் முனியசாமி கேட்டான். "வேனாம் முனி காலயிலருந்து சாரத்துல நின்னு உடம்பு பூரா வலிக்குது பெரிய டீ சாப்பிட்டாத்தான் சரியா வரும். என் சைக்கிள சித்தப் பாத்துக்க இந்தா வந்துற்றேன்'னு சொல்லிபுட்டு இன்பா நாலு கடை தள்ளியிருக்கிற டாஸ்மாக் கடைக்குப் போனான்.

"ஒரு எம்சி குடுங்க"ன்னு வாங்கி கடைஒரமா சந்துவிட்டு உள்ள இருந்த பாருக்குப் போனான்."அண்ணே ஒரு அவிச்ச முட்ட, தண்ணி ப்பாக்கட்டு ஒன்னு கொடுங்க"ன்னு கேட்டு வாங்கினான். பெரிய சர்பத்து கிளாஸ்ல பாட்டில் தலைய திருகி எல்லாத்தியும் ஊத்தினான். கிளாஸ் விளிம்புலருந்து ரெண்டு இஞ்சு மட்டும் குறைவா இருந்த சரக்குமேல கொஞ்சூண்டு தண்ணிய ஊத்தினான்.ஒரு கையில் கிளாசயும் இன்னொரு கையில முட்டையையும் எடுத்து கிளாஸ மோந்து பாத்து முகத்த ஒரு சுளிப்பு சுளிச்சு கடகடன்னு சரக்க வாயில கவுத்தி அதுக்கு பின்னாடியே அவுச்ச முட்டையையும் அனுப்பினான்."எவ்வளவு ஆச்சுனே" ன்னு பார் வச்சிருந்தவருட்ட கேட்டான் காச கொடுத்துபுட்டு "நாளைக்கு பாப்போன்னே"ன்னு சொல்லி வெளியே வந்தான்.

மனிஸ் பேக்கரி முன்னாடி இப்ப கூட்டம் இல்லை. பஸ்ஸு வந்து போயிருக்கும்ன்னு நினைச்சுகிட்டு 'வர்றேன் முனி நாளக்கு பாப்போம்"ன்னு சைக்கிள எடுத்தான் டீ பட்டறையை விளக்கி சுத்தம் பண்ணிகிட்டு இருந்த முனியசாமியின்"டெய்லி குடிக்கிற பாத்துக்கப்பா உடம்ப"ன்னு வந்த கரிசனத்த அலட்சியப்படுத்தி சைக்கிள மிதிக்க ஆரம்பிச்சான்.
இன்பாவோட ஊருக்கு பஸ்ஸு ஏழு மணிக்கு மேல கிடையாது. நினைச்ச நேரத்துக்கு சுத்திப்புட்டு ஊருக்குப் போகமுடியாது.சைக்கிள்ள போனா ரொம்ப லேட்டாகும்னாலும் அதான் அவனுக்கு வசதி.

வீட்டுக்கு வந்து சைக்கிள நிறுத்தி முள்ளு வேலியில பனைமட்டயால அமுதா செஞ்சி வச்சிருந்த படலைத்தள்ளி சைக்கிளை நிப்பாட்டி ஸ்டாண்ட போட்டு பூட்டினான். வீட்டுக்கதவு ஒருக்களிச்சு சாத்தியிருந்தது.குழந்தைகளோட தூங்கிகிட்டுருந்த அமுதா புருசன் சத்தம் கேட்டு கண்ணு முழிச்சா. "ஒம்போது மணிக்குள்ள என்ன தூக்கம் பொம்பளக்கி வந்து சோத்தப்போடு பசி வயித்த கிள்ளுது"ன்னு இன்பா சத்தம் போட்டுக்கிட்டே சட்டையை கழட்டி சுவத்துல ஆணியில மாட்டிப்புட்டு சாப்பிட உட்கார்ந்தான்.

அமுதா தட்டுல சோத்தப்போட்டு மூடி வச்சுருந்த வெஞ்சன கிண்ணத்த எடுத்து இன்பா பக்கத்துலா வச்சா."லூசு சிறுக்கி இன்னைக்கும் புளிச்சாறும் பொட்டுக்கடலை துவையலும்தானா? மீனு கருவாடு ஆக்கக்கூடாது ஒரு கருவாட கிருவாட சுட்டு வச்சா குறைஞ்சா போயிடுவே" இன்பா பசி ஆத்திரத்துல கத்துனான்."எங்க மறுபடியும் சொல்லு. எத்தன நாளிக்கு முன்னாடி நீ செலவுக்கு காசு கொடுத்த தெரியுமா நாலு நாளிக்கு முன்னாடி அதுவும் நூறு ரூவா.ரெண்டு பிள்ளகள வச்சிகிட்டு அது எவ்வளவு நாளக்கி வரும்.காலையில ஐஸ் வண்டிக்காரன் வந்து வாங்கிதரலேன்னு சின்னவன் எப்புடிக் கத்துனான்னு உனக்கு தெரியுமா பச்ச பிள்ளங்களுக்கு ஒரு பண்டம் பச்சனம் வாங்கி தர்றதுக்கு கூட நீ தர்ற காசு பத்தாது ஒரு நா ஒரு பொழுது குடிக்காம இருந்துருக்கியா குடிச்சு கொள்ளயில போற காச கையில கொடுத்தா ஆக்கிப் போட மாட்டேன்னா சொல்லுறேன் மீனு வேனுமாம்ல மீனு இஷ்டமிருந்தா சாப்பிடு இல்ல பொத்திக்கிட்டு படு"ஆங்காரமாய் அமுதா சாமியாடினாள்.அதோடு அவன சட்டை பண்ணாம பாயில் புள்ளங்களோட மறுபடியுடி படுத்துகிட்டா.


"இந்த கருமத்த யாரு தின்பா"பசி ஆத்திரத்தில் இன்பா வெஞ்சனக் கிண்ணத்த எடுத்து சுவத்துல எறிஞ்ச்சான். பொட்டுக்கடலை தொவயலு சுவத்துல பல்லி மாதிரி ஒட்டிக்கிருச்சு.பக்கத்துலயே அவனும் சுருண்டு படுத்துக்கிட்டான்.
கொஞ்ச நேரத்துக்கப்புறம் யாரோ தட்டுகள உருட்டுற மாதிரி சத்தம் கேட்டு அமுதா தலய தூக்கிப் பாத்தா.இன்ப ராசுதான் தட்டுல சோத்த அவதி அவதியா அள்ளி வாயில போட்டுக்கிட்டுருந்தான்.தலைய திருப்பி சுவத்த பாத்தா அமுதா.

அதுல தொவயல் இல்ல. வழிச்ச தடம் மட்டும் இருந்தது.1 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

கருத்துரையிடுக

ஏதாவது சொல்லிட்டு போங்க