சனி, 29 ஜனவரி, 2011

நாங்க உங்களவிட கொஞ்சம் மேல்ஜாதி

எங்க கம்பெனில பாத்துகிட்டு இருந்த வேலைய இன்னிக்கு பலுதியா (நகராட்சி) அதிகாரிங்க ஆய்வு செய்யப் போறதா தகவல் வந்தது.

சவுதில தார்சாலையைத் தோண்டுறதா இருந்தா முறைப்படி பலுதியா அலுவலகத்தில் இருந்து அனுமதி வாங்கிட்டுத்தான் தோண்டனும். அதே மாதிரி தோண்டுன பகுதியை மூடுறதா இருந்தாலும் அவங்ககிட்ட காட்டிட்டுதான் மூடனும்.

பலுதியா அதிகாரிங்க எல்லாம் அரபிங்கதான். நம்ம பேசுற இங்கிலிசு அவங்களுக்கு புரியாது. அவங்க பேசுற இங்கிலிசு நமக்குப் புரியாது. அதுனால குழப்பம் வராம இருக்கிறதுக்காக பெரும்பாலும் இந்த மாதிரி ஆய்வுக்கு போகும்போது கூடவே கம்பெனில வேலைப்பார்க்குற சவுதி PROவை கையோடு கூட்டிட்டுப் போறது.

நான் எங்க கம்பெனி சவுதி PRO அபு பாகத் அல் கால்தின்னு பேரு. அவரைக் கூட்டிக்கிட்டு வேலை நடக்கிற இடத்துக்குப் போனேன்.

வேலை நடக்கிற இடம் சின்ன சந்துக்குள்ள இருந்ததாலே மெயின் ரோட்டுலேயே வண்டியை பார்க்கிங் செய்துவிட்டு கதவெல்லாம் அடைச்சிட்டு கிளம்பும்போது PRO சொன்னார். “சாதிக் உன் லேப்டாப்ப கையில் எடுத்துக்க, இது ஒன் டென் (110) ஏரியா கார் கண்ணாடியை உடைச்சு லேப்டாப்ப எடுத்துட்டு போயிடுவானுகன்னு.

வோல்டேஜ் கணக்குல நம்பர் சொல்றாரேன்னு எனக்கு குழப்பம் வந்தாலும் உள்ளூர்காரரு விசயமில்லாம சொல்ல மாட்டாருன்னு நான் லேப்டாப்ப கையில் எடுத்துக்கிட்டேன்.

“என்னய்யா சவுதில்ல திருட்டுப் பயம் கிடையாதுன்றானுக, நான் முத்தரபி, முனிசில்லா ஏரியாவெல்லாம் பலதடவை இந்தமாதிரி காருலயே லேப்டாப்ப வச்சிட்டு போயிட்டு வந்திருக்கேன், பத்திரமா இருக்குமே, யாரும் கண்ணாடியை உடைச்சதா இதுவரைக்கும் கேள்விப்படலியேன்னு கேட்டேன்.

அதுக்கு அவர் சொன்னாரு “சாதிக் அதெல்லாம் 220 ஏரியா, அங்கே தப்புத்தண்டாவெல்லாம் நடக்காதுன்னு.

“என்னது 220யா? 110க்கும் 220க்கும் அப்படி என்ன வித்தியாசம்ன்னு கேட்டேன்.

“ஏமன், சிரியா, சூடானிலிருந்து பஞ்சம் பொளைக்க சவுதிக்கு வந்து செட்டிலாயிட்டவனுக 110, சவுதியையே பூர்வீகமாக கொண்ட குடிமக்கள் 220ன்னு PRO விளக்கம் கொடுத்தார்.

“சரி சாதிக் நீங்க இதுல என்ன ஆளு 110ஆ 220யான்னு அவரைக் கேட்டேன்.

“நான் 380 இவங்களக் காட்டிலும் கொஞ்சம் மேல் ஜாதி, எங்க 380 ஆளுங்கதான் சவுதியிலே பெரிய ஜாதி சவுதில மன்னரா இருக்கிறவுங்களாம் 380தான், அந்த வகையில நான் மன்னருக்கு தூரத்துச் சொந்தமுன்னு எனக்கு ஒரு பீதியைக் கிளப்பினாரு மனுசன்.

வேலை முடிச்சு திரும்பி வரும்போது PRO கேட்டாரு “ஏன்பா உங்க ஊருல நிறைய ஜாதி இருக்குன்னு கேள்விப்பட்டிருக்கேன் இதுல எந்த ஜாதி உங்கள ஆளுறவுங்கன்னு கேட்டாரு

நான் சொன்னேன் எங்கள ஆளுறவுங்க எல்லாம் உங்க மன்னர் ஜாதி 380ஐக் காட்டிலும் பெரிய ஜாதின்னு

“அப்படியா என்ன அவுங்க நம்பரு PRO கேட்டாரு.

“அவுங்கள்ளாம் 420 ஜாதியை சேர்ந்தவுங்கன்னு சொல்லி முடிச்சேன்

வியாழன், 27 ஜனவரி, 2011

234 தொகுதிகளிலும் திமுக தனித்துப் போட்டி




ஆச்சர்யமா இருக்கா? வரவிருக்கும் தேர்தலில் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் திமுக தனித்தே போட்டியிடுகிறதுஇது குறித்து திமுகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட முதல்வர் கருணாநிதி இந்த தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார். தேர்தல் அறிக்கையின் சில முக்கியமான அம்சங்கள் பின் வருமாறு.இலங்கையில் பல்லாயிரக்கணக்கான தமிழ் உடன்பிறப்புக்களைக் காவு கொண்ட காங்கிரஸ் கட்சியுடன் இனி உறவு இல்லை. இதற்கு அடையாளமாக மத்திய அமைச்சரவையிலிருந்து திமுக அமைச்சர்கள் ராஜினாமா. ஆதரவும் உடன் வாபஸ்.

தமிழகம் முழுவதும் பூரண மதுவிலக்கு அமுல்படுத்தப்படும். டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்படும்.

கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஊழல் செய்த ராசா டி ஆர் பாலு போன்றவர்கள் கட்சியிலிருந்து உடனடி நீக்கம். அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் இனி எதிர்காலத்தில் யாரும் ஊழல் செய்யா வண்ணம் உடனடிச் சட்டம் இயற்றப்படும்.

அரசு ஊழியர்களுக்கு அள்ளி வழங்கப்படும் சலுகைகள் நிறுத்தப்படும்.பணிக்கு வராமல் தொழில் சங்க நடவடிக்கையில் ஈடுபடும் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவர்.

காலம் மாறி வருவதற்கேற்ப காவிரிநீர் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண பிரதமருக்கு மின் அஞ்சல் குறுஞ்செய்தி அனுப்பப்படும். கடிதம் எழுதுதல் தந்தி அடித்தல் போன்ற பழஞ்சடங்குகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் இலவசம் அனைத்தும் நிறுத்தம். மாறாக வீட்டுக்கு ஒருவருக்கு வேலை கொடுக்கப்படும். இனி மக்கள் இலவசங்களுக்கு வரிசையில் நிற்காமல் அவரவர் குடும்பத்தை அவரவரே கவணித்துக் கொள்ள அரசு அறிவுரை.

கட்சியில் குற்றப்பிண்ணனி கொண்டவர்கள் அனைவரும் களையெடுப்பு. முரட்டுப் பக்தர்கள் முதுகெலும்பு உடையும் வண்ணம் சட்டங்கள் கடுமையாக்கப்படும்.

வாழ்ந்து மறைந்த வள்ளுவரின் குறள்களை பின்னுக்குத் தள்ளி விட்டு பேருந்துகளில் எழுதப் பட்ட வாழும் வள்ளுவரின் அச்சு பிச்சு வாசகங்களான “நான் என்று சொன்னால் உதடு ஒட்டாது நாம் என்று சொன்னால்தான் உதடுகள்கூட ஒட்டும் போன்ற தத்துவங்கள் தார் கொண்டு அழிக்கப்படும்.

இனி இப்தார் நோண்புகளில் மட்டும் கஞ்சி குடிக்காமல் கொப்புடையம்மன் கோவிலில் ஆடிக்கூழும், குலசாமிக்கு படையல் வைத்து யார் கூப்பிட்டாலும் அங்கு வந்து பொங்கலும் தேங்காய் சில்லும் திங்க கருணாநிதி தயார்.

கட்சியின் சினிமாத் தொடர்பு முற்றிலும் அறுத்தெறியப் படும். உளியின் ஓசை, கண்ணம்மா, இளைஞன் போன்ற காப்பியங்களை இனி கலைஞர் எழுத மாட்டார்.உப்புமா படங்களுக்கு மக்கள் பணத்தில் வரி விலக்கு செய்யும் கூத்துகள் இனி நிறுத்தப்படும்.

கடலில் தூக்கிப் போட்டால் கட்டுமரமாய் வருவேன் செருப்பாய் தேய்வேன், பொறுப்பாய் இருப்பேன் என செண்டிமெண்ட் வசனங்களை இனி கலைஞர் பேசமாட்டார். மேலும் அய்யோ கொல்லுறாங்களே என நடுநிசியில் அழவும் மாட்டார்.

மொத்தத்தில் மக்கள் அனைவரும் சிரித்துக் கொண்டே இருக்கும் வண்ணம் இனி வரும் ஆட்சி அமையும் என கருணாநிதி தமிழக மக்களுக்கு உத்தரவாதம் வழங்குவதோடு இந்த அறிக்கையில் சொல்லாத பல நல்ல விசயங்களையும் செய்வதற்கு தமிழக மக்களிடமிருந்து கைமாறாக ஒரே ஒரு ஒற்றை வாக்குறுதி மட்டும் கேட்கிறார்.

அது என்னவென்றால்

தமிழகத்தின் 21ம் 22ம் 23ம் 24ம்25ம் முதலமைச்சராக

.

இவரையும்

26ம், 27ம்,28ம், 29ம் 30ம் முதலமைச்சராக இவரையும்

இவர் காலத்துக்குப் பின் முதலமைச்சராக மேல் உள்ள படத்தில் உள்ளவரின் மகனையோ மகளையோ மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதே அது.


புதன், 26 ஜனவரி, 2011

சவுதியில் ஒரு வாய்க்காலுக்கு என்னுடைய பெயர்


பத்து நாளைக்கு முன்னே எங்க கம்பெனி போர்மென் அரங்கசாமி எனக்கு போன் பண்ணுனார். “சார் சைட்டுல ஒரு பிரச்சினை உடனே வாங்க.

அரங்கசாமி நம்ம ஊருக்காரருதான், சவுதில 20 வருசம் சர்வீஸ், சவுதி அல் ஹாசா மாவட்டத்துல அவருக்கு எல்லா இடமும் அத்துபடி.

சவுதி அல் ஹாசா மாவட்டத்துல பல இடத்தில கம்பெனிக்கு வேலை நடக்கிறதால “எங்கண்ணே வரனும்ன்னு நான் கேட்டேன்.

“பட்டாலியா சுல்த்தான் பள்ளிவாசலுக்கு கிழக்கே தணிகாசலம் வாய்க்காலுக்கு வந்துருங்கன்னு அரங்கசாமி சொன்னார்.

அல் ஹாசா மாவட்டம் சவுதி பாலைவனத்துலேயே ஒரு சோலை வனம். நம்ம ஊரு மாதிரியே இங்கே எல்லாவித பழமரங்களும் விளையும். குறிப்பா பேரீச்சை மரம் அதிகம். சவுதி அரசாங்கம் இந்த மாவட்டம் முழுவதும் வாய்க்கால்கள் மூலமாக பாசன வசதி செய்து கொடுத்திருக்கிறது. மேலும் கழிவு நீர் வெளியேறவும் அரசு வாய்க்கால் வசதிகளை செய்து கொடுத்திருக்கிறது. அதுனால எங்கப் பாத்தாலும் இந்த மாவட்டம் முழுவதும் சாலையின் நடுவிலும் ஓரத்திலும் வாய்க்கால்களாக இருக்கும்.வாய்க்கால்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு எண் உண்டு. டி1,டி2,டி3 என கணக்கிலடங்காத வாய்க்கால்கள் இந்த மாவட்டத்தில் உண்டு.

எனக்கு ஒரு ஆச்சர்யம், பெரும்பாலும் சவுதி சாலைகளுக்கே கிங்பாத் சாலை, அப்துல் அஜிஸ் சாலை, கிங் பைசல் சாலை என மன்னர்கள் பெயர் மட்டும்தான் இருக்கும். இதில் வாய்க்காலுக்கு தணிகாசலம் வாய்க்கால் என எப்படி பெயர் வந்தது?

ஆர்வம் மேலிடவே நான் அரங்கசாமியிடம் கேட்டேன். “என்னது தணிகாசலம் வாய்க்காலா? எப்படி அதுக்கு அந்த பெயர் வந்தது?

“இப்பத்தான சார் வந்துருக்கிங்க போகப் போக நீங்களே தெரிஞ்சிகிருவிங்கன்னு அந்த வாய்க்காலுக்கு வர்றதுக்கு வழியையும் சொன்னார். அவரு சொன்னமாதிரி அந்த வாய்க்காலுக்கு வண்டியில போய் சேர்ந்தேன்.

வாய்க்கால் ஆரம்பத்துல டி1 என்று மட்டும்தான் எழுதியிருந்தது. ‘என்னங்க தணிகாசலம் வாய்க்காலுன்னுதான் சொன்னிங்க இங்க எந்த போர்டையும் காணோமேன்னு கேட்டேன்.

“அது கவர்மெண்டு நம்பர் சார், ஆனா நம்ம கம்பெனிகாரங்களுக்கு இதை தணிகாசலம் வாய்க்காலுன்னு சொன்னாத்தான் தெரியும். அதுமட்டுமா இங்கே சர்புதின் வாய்க்கால், அஷ்ரப் வாய்க்கால், தாமஸ் வாய்க்காலுன்னு நம்ம கம்பெனி ஆட்கள் பேரில நிறைய வாய்க்கால் இருக்கு. ஏன் நாளைக்கே தங்கராசு நாகேந்திரன் வாய்க்காலுன்னு உங்க பேரிலயே ஒரு வாய்க்கால் வரும் அப்ப நீங்க புரிஞ்சுகிருவிங்கன்னு பூடகமாக முடித்தார்.

சரிதான் நம்ம மதுரையில பாண்டிங்கிற பேருல பல ஆட்கள் இருக்கும்போது அவர்களை தனித்தனியே இனம் காண குட்டைப் பாண்டி நெட்டைப்பாண்டி, வெள்ளைப்பாண்டின்னு பட்டப் பெயர் சொல்லி அழைப்பதை போல இதுல ஏதாவது விசயம் இருக்குமுன்னு நினைச்சுகிட்டேன். அப்போதைக்கு வேலைச் சிக்கலை தீர்க்க முனைப்பட்டதில் அந்த விசயம் மறந்து போனது.

இன்னிக்கு சவுதில நல்ல மழை. அதிகாலை 4 மணிக்கு புடிச்ச மழை 6 மணி வரைக்கும் விடவே இல்லை. அதுக்கப்புறம் 9 மணிக்கு நான் காரை எடுத்துக்கிட்டு பனிமான் என்கிற இடத்துக்கு ஆய்வுக்கு சென்றேன். தோட்டம் உள்ள மஜுரா பகுதிக்கு சென்றபோது நல்ல மழை பெய்திருந்ததால் மணல் சாலை வழுக்க ஆரம்பித்தது. கவனமாக வண்டி ஓட்டியும் ஒரு திருப்பத்தில் திருப்பும்போது சாலை வழுக்கியதால் வண்டி நடுவில் இருந்த வாய்க்காலில் இறங்கிவிட்டது. நல்ல வேளை வாய்க்கால் ஆழம் அதிகம் இல்லாததால் எனக்கு அடி ஒன்றும் படவில்லை.

அப்புறம் என்ன கம்பெனிக்கு போன் போட்டு கிரேன் கொண்டு வந்து வண்டியை தூக்கி திரும்பவும் கம்பெனிக்கு வந்தபோது அரங்கசாமி கேட்டார்.

“சார் அந்த வாய்க்கால் நம்பர் என்ன?

“ம் டி22AG ஏன் கேட்கிறிங்கன்னு கேட்டேன்.

அரங்கசாமி சொன்னார். “அது கவர்மெண்டு நம்பரு, இன்னைலருந்து அந்த வாய்க்காலுக்கு பேரு தஙகராசு நாகேந்திரன் கேனால்


சனி, 22 ஜனவரி, 2011

ஆண்களிடம் இல்லாத நல்ல குணங்கள்


1. 1. ஆண்களுக்கு நன்றி விசுவாசம் கிடையாது. மார்கெட்டு உள்ளபோது நடிகைகளுக்கு கோவில் கட்டும் அளவுக்கு ரசிக்கும் ஆண்கள் அதே நடிகைகள் மார்கட்டு இழந்து சின்னத்திரையில் நடிக்கும்போது கண்டு கொள்வதில்லை.

2. ஆண்களுக்கு பெருந்தன்மை என்பது அறவே கிடையாது. ஆண்கள் கதாநாயகராய் நடிக்கும் புறா, நில்லு, பேட்டைக்காரன்,கோவலன் போன்ற மொக்கைப் படங்களை சகிப்புத்தன்மையுடன் பெண்கள் பார்க்கும் போது பெண்கள் கதைநாயகியாய் நடிக்கும் நல்ல தொலைக்காட்சித் தொடர்களை ஆண்கள் கண்டுகொள்வதே இல்லை.

3. ஆண்களுக்கு மனதைரியம் மருந்துக்கு கூட கிடையாது. 3 மணி நேர திரைப்படத்தினையே தொடர்ந்து பார்க்க முடியாமல் 5 தடவை சிகரட் அடிக்கப் போகும் பயந்தாங்கொள்ளிகள். பெண்களைப் போல் மூன்று வருடம் ஒரே சீரியலை தொடர்ந்து பார்க்க இவர்களுக்கு தைரியம் குறைவுதான்.

4. ஆண்களுக்கு கூர்ந்து கவனிக்கும் ஆற்றல் துளிக்கூட கிடையாது. தொலைக்காட்சித் தொடரில் நடிக்கும் கதாநாயகியாயினும் சரி, வில்லியாயினும் சரி, கதாநாயகியின் பாட்டியாயினும் சரி அவர்கள் போட்டிருக்கும் சேலை டிசைனிலிருந்து ஸ்டிக்கர் பொட்டு டிசைன் வரை நுணுக்கமாக பெண்கள் கவனிப்பதைப் போல் ஆண்களால் கவனிக்க முடியாது.

5. ஆண்களுக்கு காலம் தவறாமை சுத்தமாக கிடையாது. 71/2க்கு ஜாலங்கள், 81/2க்கு ரொட்டி ஒலி, 9மணிக்கு சித்தப்பா, 91/2க்கு வடக்கத்தி சின்னு, 10மணிக்கு பித்தளையான புருசன் என பெண்கள் காலம் தவறாமையை கடைப்பிடிப்பது போல ஆண்கள் கடைப்பிடிப்பது இல்லை.

6. ஆண்களுக்கு விடாமுயற்சி என்பதே கிடையாது. தொலைக்காட்சித் தொடர் பார்க்கும் போது விளம்பரத் தடை வந்தால் என்ன, வீட்டுக்காரர் கத்தினால் என்ன, பிள்ளைகள் கதறினால் என்ன, பெண்கள் எடுத்த காரியத்தினை முடிப்பது போல் ஆண்களால் எந்தக் காரியத்தையும் விடாமுயற்சியுடன் செய்ய முடியாது.

7. ஆண்களுக்கு சமநோக்கு கொஞ்சம் கூடக் கிடையாது. மூன்று நாட்கள் கூட ஓடாத மொக்கை படங்களுக்கு விமர்சனம் எழுதும் கேபிள் சங்கர், ஜாக்கி சேகர் போன்ற ஆண்கள் வர்க்கம் மூன்று வருடம் தொடர்ந்து பெண்கள் பார்க்கும் தொலைக்காட்சித் தொடர்களை நடுநிலை மனதுடன் விமர்சனம் எழுதுவதில்லை.

8. ஆண்களுக்கு சமூக அக்கறை துளிக்கூட கிடையாது. திங்கள் கிழமை தீபா கல்லூரி சென்றபோது தீடிரென நான்குபேர் வந்து காரில் கடத்திச் சென்றார்களே அவள் என்ன ஆனாள்?. புதன் கிழமை புவனாவின் நாத்தனாருக்கு நிச்சயதார்த்தம் நின்று போனதே அது நடந்ததா?. வெள்ளிக்கிழமை விமலாவுக்கு அவள் மாமியார் விஷம் கலந்த காப்பியைக் கொடுத்தாளே அவள் குடித்தாளா? செத்தாளா? என்பது போன்ற சமூக நிகழ்வுகளை பெண்கள் அறிந்து கொள்ளும் அளவுக்கு ஆண்களுக்கு சமூக அக்கறை அறவே கிடையாது.

9. ஆண்களுக்கு இரக்கம் என்பது கிஞ்சித்தும் கிடையாது. ஒரு தொலைக்காட்சித் தொடரில் ஒருவள் ஒருவாரமென்ன தொடர்ந்து ஒரு வருடம் அழுது கொண்டிருந்தாலும் அதைக் கண்டு கொள்ளாமல் குண்டு வெடித்து 100 பேர் பலி, பங்குச் சந்தை கவிழ்ந்தது, பாராளுமன்றத்தில் அமளி என்பது போன்ற குலை நடுங்கும் செய்திகளைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அது மட்டுமா, ஒரு சின்னஞ்சிறிய பந்தை பெரிய மட்டையால பத்து பதினோரு பேர் நையப்புடைத்து அடித்து துவம்சம் செய்வதை இரக்கமில்லா அரக்கர்கள் போல் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

10. ஆண்களுக்கு புரிந்து கொள்ளும் தண்மை அறவே கிடையாது. ஆண்கள் மொக்கைப் பதிவுகளை எழுதிக்கொண்டோ அல்லது படித்துக் கொண்டோ இருக்கும்போது ‘சரி பகலெல்லாம் ஆணி புடுங்கிய களைப்புத் தீர இப்படி செய்கிறார்கள் என பெண்கள் புரிந்துகொண்டு அவர்களை தொந்தரவு செய்யாமல் இருப்பதுபோல பகலெல்லாம் வீட்டு வேலைகள் செய்து பெண்கள் இரவு வேளைகளில் தொலைக்காட்சி தொடர் மூலம் நாட்டு நடப்புகளை அறிந்து கொள்ளும்போது அதைப் புரிந்து கொள்ளாமல் “சாப்பாடு ரெடியா பையனுக்கு சாப்பாடு போட்டியா என்று தொந்தரவு செய்யும் மங்குனிகள்.


புதன், 19 ஜனவரி, 2011

EXCELL சூத்திரங்கள்-TRANSPOSE


EXCELLலில் TRANSPOSE சூத்திரத்தின் பயன்பாடு பற்றி இந்த பதிவு

EXCELLலில் ENCODING செய்யும்போது COLUMN WISE TYPE அடிப்பது மிகவும் சுலபம். ஒவ்வொரு ENCODING முடிந்ததும் எண்டர் பட்டனைத் தட்டினால் சுலபமாக டைப் செய்யலாம். அதேபோல் ROW WISE டைப் அடிக்க TAB பட்டனைத்தட்டி மிக சுலபமாக TYPE செய்யலாம்.

ஆனால் ஏற்கனவே COLUMN WISE TYPE செய்த தகவல்களை ROW WISE மாற்ற விரும்பினால் சிறிது கடினமே. ஒவ்வொரு வேல்யூவாகப் பார்த்து டைப் அடிப்பதற்குள் தாவு தீர்ந்து விடும். இதற்கெனவே EXCELLலில் ஒரு எளிமையான சூத்திரம் உள்ளது அதுதான் TRANSPOSE.

உதாரண்த்திற்கு கீழுள்ள படத்தினைப் பாருங்கள். சனவரி முதல் டிசம்பர் வரை உள்ள மாதங்கள் COLUMN WISE ல் TYPE செய்யப்பட்டுள்ளது. இதை ROW WISE மாற்ற விரும்பினால்

=TRANSPOSE() என சூத்திரத்தை டைப் செய்து எந்த வேல்யூ வரை மாற்ற வேண்டுமோ அதுவரை செலக்ட் செய்து கொண்டு பின் எண்டர் செய்ய வேண்டும்.

பின் மேற் கண்ட படத்தில் காட்டியுள்ளபடி ROW WISE ஆக CELL களை செலக்ட் செய்ய வேண்டும். இதில் கவணிக்கப்பட வேண்டிய ஒன்று. COLUMN WISE ல் 12 வேல்யூவை டிராக் செய்திருந்தால் ROW WISEலும் 12 CELLகள் டிராக் செய்ய வேண்டும். பின் தட்டச்சுப் பலகையில் F2 டைப் செய்து பின் SHIFT+CONTROL+ENTER செய்தால் உங்கள் COLUMN WISE வேல்யூ ROW WISEக்கு மாற்றப்பட்டிருக்கும்.

இனி உங்கள் COLUMN WISE தகவல்கள் தேவையில்லை எனக் கருதினால் சூத்திரத்தின்படி ROW WISEல் வந்த தகவல்களை செலக்ட் செய்து copy /right click/paste special/values என தேர்வு செய்ய வேண்டும். பின் COLUMN WISE தகவல்களை delete செய்து கொள்ளலாம்.


வியாழன், 13 ஜனவரி, 2011

உனக்கு இன்னிக்கு வியாழக்கிழமையாடா?


எங்க ஊருல எவனாவது ஒரு மாதிரியா மறை கழண்ட மாதிரி பேசுனா உடனே எல்லோரும் அவனைப் பாத்து சொல்லுற வார்த்தை “ஏண்டா உனக்கு இன்னிக்கு வியாழக்கிழமையாடா?

வியாழக்கிழமைல்ல அப்படி என்ன விசேசம், எங்க ஊருல இருந்து 9 கீமீ தள்ளி உள்ள ஏர்வாடி தர்ஹாதான் காரணம்.

ஏர்வாடின்னதும் இப்ப எல்லோருக்கும் புரிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறேன்.வாரத்தில் ஆறு நாள் வெறிச்சோடிக் கிடக்கும் ஏர்வாடி தர்ஹா வியாழக்கிழமையானதும் களை கட்டிடும். ஈயடிச்சுகிட்டு கிடக்கிற டீக்கடைகள் எல்லாம் வியாழக்கிழமை கல்லாக் கட்டிடும்.

தமிழ்நாட்டுல இருந்து மட்டுமல்ல, பிற மாநிலங்களில் இருந்தும் கூட்டம் வரும். குறிப்பா கேரளாவில் இருந்து. பேய் புடிச்சவன், பிசாசு புடிச்சவன், முனி அடிச்சவன், மோகினி பிடிச்சவன்ன்னு பல ரகமா வருவாங்க இதோடு மன நிலை பிறழ்ந்தவர்கள் ஏராளம் வருவாங்க.

வியாழக்கிழமைதான் தர்ஹாவில் அடங்கியுள்ள பாதுசா நாயகத்துக்கு உகந்த நாள். வந்து தர்ஹாவில் தங்கி பாத்தியா ஓதி சக்கரையை வாங்கி சாப்பிட்டுட்டு வசதி இருந்தா ஏதாவது லாட்ஜுலேயோ, வசதி இல்லாதவங்க தர்ஹா உள்ளேயும் படுத்துட்டு காலையில் எந்திரிச்சு ஊருக்குப் போவாங்க.

நம்ம வீட்டுல யாருக்காவது மன நலம் குன்றினால் ஆரம்பத்துல கையில காசு இருக்கிற வரைக்கும் ருத்ரன் மாதிரி டாக்டர்கிட்ட காட்டுவோம். அப்புறம் காசு இல்லைன்னா அதிலும் கொஞ்சம் அமைதியான பைத்தியமா இருந்தா வீட்டோட வச்சிக்கிறுவோம். வசதி இல்லாத வீட்டுல அடங்காத பைத்தியமா இருந்தா என்ன பண்ண முடியும். அண்டை அயலார்கள் என்ன சொல்லுவார்கள் ‘ போயி எங்கயாவது கோவிலோ தர்ஹாவிலோ கட்டுங்கப்பான்னு. இந்த மாதிரிதான் ஏர்வாடி நாகூருன்னு பைத்தியங்களை கொண்டு வந்து விடுவாங்க.

முன்னே ஏர்வாடில மனநலம் குன்றியவர்களைப் பராமரிக்கும் ஆசிரமம் (MENTAL ASYLUM) ஒரு தொழிலாகவே நடந்து வந்தது. இதை தங்கல்கள் என்னும் பொறுப்பளர்கள் நடத்தி வந்தனர்.ஒரு நபரை பராமரிப்பதற்கு ரூ 1000 முதல் 2000 வரை வசூலித்து வந்தனர். எந்த நிலையத்திற்கும் அரசு அனுமதி கிடையாது. எந்த நிலையத்திலும் அடிப்படை வசதி கிடையாது. உணவு கூட இவர்கள் வழங்குவதில்லை. தர்ஹா வரும் பக்தர்கள் நேர்த்தியாக செலுத்தும் முராது என்னும் காணிக்கை மூலமாகத்தான் உணவு வழங்கப்பட்டு வந்தது.

தென்னைஓலை வேயப்பட்ட குடிசைக்குள் வேலிக்கற்களில் மனநலம் குன்றியவர்களை சங்கிலியால் கட்டி வைத்திருப்பார்கள். குற்றாலம் குனசீலம் போல் மூலிகை சிகிச்சை எதுவும் கிடையாது. மாலை நேரமானதும் மனநோயாளிகளை கால்நடைகளை மேய்ச்சலுக்கு பத்திச் செல்வதுபோல் கைகளில் குச்சியை வைத்துக் கொண்டு காப்பாளர்கள் தர்ஹாவுக்கு கொண்டு செல்வார்கள். அங்கு தர்ஹாவினை ஒரு முறை வலம் வந்து திரும்ப ஆசிரமத்திற்கு கொண்டு வந்து கட்டிப் போடுவார்கள்.

தர்ஹாவில் அடங்கியிருக்கிற பாதுசா நாயகம் அவுலியா எப்ப இந்த தங்கல்கள் கனவில் வந்து சொல்லுகிறாரோ அதுவரை இந்த சிகிச்சை? மன நோயாளிகளுக்குத் தொடரும். எனக்குத் தெரிந்து எவன் கணவிலும் அவுலியாவோ அல்லது ஆண்டவனோ வந்து சொன்னதில்லை. ஒரு தடவை ச்ங்கிலியால் கட்டிபுட்டானுகனா அந்த மனநோயாளி செத்து சுண்ணாம்பாகி போகிற வரைக்கும் வச்சிருப்பானுக. மன நோயாளிகளின் உறவினர்களும் விட்டதுடா தொல்லைன்னு வந்து பாடியை வாங்கிட்டுப் போவானுக.

கடந்த 2001ல் நடந்த கோர சம்பவத்தில் இருபதுக்கும் மேற்பட்ட மனநோயாளிகள் சங்கிலியால் பினைக்கப்பட்டு இருந்ததால் தப்பிக்க வழியில்லாமல் கருகி துடிதுடித்து உயிர் இழந்த சம்பவத்திற்கு பின் மன நல காப்பகம் அனைத்தும் மூடப்பட்டது. இருப்பினும் மனநோயாளிகள் இன்னும் ஏர்வாடியில் சுத்திதான் திரியுறாங்க.

சில மனநோயாளிகளை பாத்தவுடன் கண்டுபிடிப்பது சுலபம். அழுக்கு மற்றும் கிழிந்த உடையுடன் நீண்டநாள் சவரம் செய்யப்படாத தாடியுடன் தனக்குத்தானே பேசிக் கொண்டோ சிரித்துக் கொண்டோ இருப்பார்கள். ஆனா சிலபேரை கண்டு கொள்வது கடினம். நம்ம வடிவேலுகிட்ட ஒருவர் ஒசாமா பின்லேடன் அட்ரஸ் கேட்பாரே அதுபோல் டீசண்டா பேசுவானுக. கொஞ்சம் பேசுன பின்னாடிதான் தெரியும் “ஆகா வியாழக்கிழமை ஆளுடான்னு

இப்படித்தான் ஒருநாளு ஒரு மலையாளி தர்ஹா வாசலில் இருக்கிற டீக்கடையிலே என்கிட்ட தமிழ் இலக்கியம் பத்தி பேசினான். ஆஹா மலையாளி தமிழ் இலக்கியத்தப் பத்தி பேசுறானேன்னு நானும் அவன் பேச்சைக் கேட்க ஆரம்பிச்சேன். பத்துப்பாட்டு எட்டுத்தொகை புறநானுறு அகநானுறுன்லாம் பேசிட்டு வந்தவன், என்கிட்ட கேட்டான். உனக்கு மலையாள இலக்கியம் தெரியுமான்னு நான் சொன்னேன் ‘எனக்கு மலையாளமே தெரியாது இதுல எப்படி மலையாள இலக்கியம் தெரியுமுன்னு. ஆரம்பிச்சான் பாருங்க ஏக வசனத்துல “ஏண்டா நான் தமிழைப் பத்தி தெரிஞ்சி வச்சிருக்கேன் நீ ஏன் மலையாளம் பத்தி தெரிஞ்சு வச்சிகலன்னு அப்பத்தான் எனக்கு புடிபட்டது “ஆஹா இவன் வியாழக்கிழமை ஆளுன்னு

அப்புறம் ஒரு நாளு ஏர்வாடில இருந்து கீழக்கரை வர பேருந்துக்கு காத்துகிட்டு இருக்கும்போது ஒருத்தன் கையில செல்போன் வச்சிப் பேசிகிட்டு இருந்தான். இவனும் மலையாளிதான்.ஆள் பாக்குறதுக்கு டீசண்டா பேண்ட் சட்டைல்லாம் போட்டு இன் பண்ணியிருந்தான். போன் பேசி முடிச்சவன் என் கிட்ட சொன்னான் ஒரு ஸ்டேடிக் (STATIC) சொல்லுது இந்தியாவுல 50 பெர்சண்டேஜ் பைத்தியமுன்னு நான் உடனே ஆர்வக்கோளாறாகி எப்படி சொல்லுறிங்கன்னு கேட்டேன். அதுக்கு அவன் அங்கே தலையை சொரிஞ்சுகிட்டு என்னை மாதிரி பேருந்துக்கு காத்திகிட்டு இருந்த ஒரு ஆளைக் காட்டி இவன் ஒரு பைத்தியமுன்னு சொன்னான்.

அந்தாளும் பாக்குறதுக்கு என் கண்ணுக்கு பைத்தியம் போலவே இருந்தான். அப்புறம் காரில் உட்கார்ந்து யாருக்காகவோ காத்துகிட்டு இருந்த ஒரு முதியவரைப் பார்த்து ‘இந்த கிழவனும் பைத்தியமுன்னு சொன்னான். கொஞ்ச நேரம் கழித்து யாருக்கோ போன் செய்தான். பின் தலையை இடதும் வலதுமாக பலமாக ஆட்டினான். இதுபோல தொடர்ந்து நான்கைந்து முறை செய்தான். நான் கேட்டேன் “என்ன டவர் கிடைக்கலியான்னு அதுக்கு அவன் சொன்னான் “குறுக்கே பேசாதே நான் போன் வேலை செய்யுதான்னு செக் பண்ணிகிட்டு இருக்கேன்னு அப்புறமா பாத்தா இரண்டு பெரியவர்கள் அவனைத் தேடி வந்து கையைப் பிடிச்சு இழுத்துட்டு போனாங்க.போறப்ப என்கிட்ட சொன்னாங்க “கொஞ்சம் பிராந்து ஏதாவது சொன்னானான்னு

அடப்பாவி காமாலைக்காரனுக்கு கணடெதெல்லாம் மஞ்சள்ன்னு மாதிரி இந்த பைத்தியம் இந்தியாவில் 50 பெர்செண்டேஜ் பேர் பைத்தியமுன்னு சொல்லிட்டானேன்னு எனக்கு சிரிப்பு வந்தது.

இந்த சிரிப்பு வீட்டுக்குப் போனதும் தொடர்ந்தது. என்னைப் பார்த்த எங்கம்மா சொன்னாங்கஏண்டா தன்னால சிரிச்சிகிட்டு இருக்கே இன்னிக்கு உனக்கு வியாழக்கிழமையான்னு கேட்டுகிட்டே வந்த என் பொண்டாட்டி சொன்னா “அம்மா உங்க மகனுக்கு எல்லா நாளும் வியாழக்கிழமைதான்னு

புதன், 12 ஜனவரி, 2011

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்


“ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்

என நற்றமிழ் காப்பியம் சொன்னவழி

ஆறு கோடி தமிழ் மக்கள் ஆதவனுக்கு

நன்றி கூறும் ஆனந்தத் திருநாளாம் தை


ஊருக்கு உணவூட்டும் உன்னத

உழவர் கூட்டம்

உழைத்துக் களைத்தபின் இளைப்பாறி

பின் களிப்பாடும் நாளாம் தை


கன்னல் சுவையோடு கற்கண்டு பொங்கலிட்டு

கண்மணியாம் எம் பெண்கள்

களிப்புடனே குழவையிட்டு

‘பொங்கலோ பொங்கல் என

போற்றுகின்ற நாளாம் தை


உன்னதத்தை, மகத்துவத்தை,

உழவுக்கும் தொழிலுக்கும் செய்யும்

வந்தனத்தை

உலகெமெல்லாம் போற்றுகின்ற

உழவர் மக்கள் பாரம்பரியத்தை


உவப்புடனே தமிழ் மக்கள் தம்

புத்தாண்டாய் கொண்டாடட்டும் என

நயப்புடனே அரசு ஆணை

நணிவுடனே அறிவித்ததை


வியப்புடனே பார்க்குதிங்கு விந்தை

வேடிக்கை கூட்டமொன்னு

சித்திரையே புத்தாண்டென பகல்

நித்திரையில் இருக்கும் அந்த


பேதை கூட்டமதை பேசியதையே பேசுமதை

பாழும் மடமைகளில் தினம்

வாழும் கூட்டமதை

போகட்டும் விடுங்கள்....


சித்திரத்தை கையில் கொடுத்தால்

குருடன் சீந்திப் பார்ப்பானா?


சந்தணத்தை பூசக் கொடுத்தால்

சகதியிலே சுகம் காண்பவன் வருவானா?


பஞ்சாங்கத்தை பார்க்காவிட்டால்

தமிழன் பலன் பெற மாட்டானா?


உலகத்தை உருண்டையென சொன்னபோது

ஒரு பயலும் நம்பியிருக்க மாட்டான் தான்.


கலகத்தை செய்தால் ஒழிய இந்த

கணபாடிகள் திருந்தமாட்டான் தான்



உலகத் தமிழர் அனைவருக்கும்

இனிய தமிழர் புத்தாண்டு வாழ்த்துக்கள்