புதன், 21 செப்டம்பர், 2016

நிறைய பேச வேண்டும்


ஏதோ ஒரு வேகத்தில் எழுத ஆரம்பித்து 96 பதிவுகளுடன் இந்த வலைத்தளம் நிற்கிறது

ஒரு காலத்தில் நான் வேலை ஏதுமின்றி முகமுது அல் மொஜில் நிறுவனத்தில் உட்கார்ந்திந்த போது விளையாட்டாய் ஆரம்பித்தது
முதலில் மொக்கைகளாக எழுதி வரும் வேளையில் யுவகிருஷ்னாவை விமர்சித்த்து வம்பு வளர்த்து பின் நண்பர் துபாய் ராசாவின் அறிவுரையின் பேரில் வேகமாக நகரத் தொடங்கினேன் பின் மொஜிலில் இருந்து விலகியதும் எழுத்து தடைப்பட்டது
பின் சவுதி அசாம்கோ நிறுவனத்தில் பணி புரிந்த போது கொஞ்சம் எழுத துவங்கினேன் சதம் அடிக்கலாம் என  நினக்க்கும் போது முகப்புத்தகம் வந்து விட்டதால் அதில் கவனம் திசை மாறிற்று

இப்ப எழுதுவது மிகவும் குறைந்து விட்டது

ஆனால் முகப்புத்தகம் போல இல்லை பிளாக்கர் இங்கு ஆபாசமாக வரும் பின்னூட்டங்கள் குறைவு ஒரு மனத் திருபதி இருந்தது

வலைத்தளங்கள் இண்ட்லி தமிழ் மணம் திரட்டி உலவு இப்படி பல வலைத்தளங்கள் முடங்கி போனதும் எழுதுவது ஆர்வம் குறைந்ததற்கும் ஒரு காரணம்

திங்கள், 6 அக்டோபர், 2014

போங்கடா தமிழர்களா போங்கடா தமிழர்களா


ஒரு ஊரிலெ இல்ல இல்ல ஒரு காட்டில ஒரு திருடன் இருந்தான் அவன் அந்த காட்டு வழியே போகிற வழிப்போக்கரைகளை தாக்கி கொள்ளையடித்து வாழ்ந்து வந்தான். ஒரு நாள் அவன் சாகும் தருவாயில் அவன் மகனை அழைத்துமகனே நான் இறக்கப் போகிறேன் வாழும் காலம் வரை இந்த ஊர் மக்களின் யாயிலும் பல்லிலும் இருந்து விட்டேன் நீ என்ன செய்வாயோ என எனக்கு தெரியாது ஆனால் நான் இறந்த பிறகு இந்த ஊர் மக்க்|ள் என்னை நல்லவன் என்று சொல்ல வேண்டும் என சத்தியம் வாங்கி கொண்டு அவன் இறந்து விட்டான்.

மகனுக்கு இப்ப என்ன செய்து தந்தைக்கு நல்ல பெயர் வாங்கி கொடுப்பது என ஒரே குழப்பம். நெடு நேரம் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தான் அவனும் அவன் தந்தை போலவே காட்டில் கொள்ளையடிக்க ஆரம்பித்தான் ஒரே ஒரு மாற்றம் அவன் தந்தை கொள்ளை மட்டும் அடித்தான் இவன் கொள்ளை அடித்தத்தோடு வழிப்போக்கரகளின் ஆடையினையும் கழட்டி எடுத்தான்.  மக்கள் இப்போது சொல்ல ஆரம்பித்தனர். “அடா அடா அப்பன் எவ்வளவு நல்லவன் கொள்ளை மட்டும் தான் அடித்தான் மகன் டவுசரையும்ல கழட்டி விடுறான்

கதைப்படி அப்பன் கெட்டவனே ஆனாலும் மகனுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது நல்லவன். இதுதான் நம்ம தமிழ் நாடு அரசியல் வாதிகள் கதையும். கருனா நிதிக்கு ஜெயலலிதா நல்லவர் ஜெயலலிதாவுக்கு கருனா நிதி நல்லவர் என மாறி மாறி நாமும் ஏமாந்து போய் வாக்கு அளிக்கிறோம்.

ஒரு லட்சம் கோடி 2ஜி ஊழலோடு ஒப்பிட்டு பார்க்கும் போது ஜெயாவின் 64 கோடி சாதாரனமாக போய் விட்டது. என்ன தவறு செய்து விட்டார் கருனா நிதியை விடவா பெரிய தப்பு செய்து விட்டார் கருனா நிதி மட்டும் வெளியில் இருக்கிறார் எங்கமாவை மட்டும் ஜெயிலில் போட்டது எந்த விதத்தில் நியாயம் என பலரும் வியாக்கையானம் பேசி வருவதோடு மட்டுமல்லாமல் கோவில் கோவிலாக ஏறி இறங்கி விடுதலை பெற கடவுளிடம் மனு வேறு கொடுக்க ஆரம்பித்து விட்டனர்.

எவனுக்கும் மக்களின் வரிப்பணத்தினை சுரண்டுவது திருடுவது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்ப்பது அது சிறியதாக இருந்தாலும் தப்பு தப்புதான் என நக்கீரர் போல் தட்டி கேட்கும் எண்னம் வரவில்லை. மாறாக அரசியல் வாழ்க்கையில் இதெல்லாம் சாதரனமப்பா என்ற அசட்டையான போக்கே நிலவுகிறது. அந்த அளவுக்கு நம் மனதில் ஊழல் ஒரு தவறில்லை என்ற என்னம் புரையோடிப் போயிருக்கிறது. இந்த மாதிரி தவறுகளுக்கு தண்டனை வழங்கப்பட்டால்தான் தவறு செய்பவர்கள் பயப்படுவார்கள் சமுதாயம் அச்சப் பட்டு வாழும் தவறு செய்வதற்கு வெட்கப் படுவார்கள் என யாரும் நினைக்க வில்லை.

திரையில் தவறு செய்யும் அரசியல் வாதிகளை தட்டி கேட்கும் முதல்வன் அன்னியன் இந்தியன் போன்ற படங்களை வரவேற்கும் மக்கள் நிஜத்தில் அதை வரவேற்காதது விந்தையிலும் விந்தை.

அரசியலில் நான் சேர்ந்தது  மக்களுக்கு தொண்டு செய்யவே சம்பாதிக்க அல்ல என எந்த அரசியல் வாதியாவது நெஞ்சில் கை வைத்து சொல்லட்டும்.

அம்மாவும் அய்யாவும் சத்திய மகான்கள் அவர்கள் தவறே இழைக்கவில்லை எந்த தொண்டனாவது சத்தியம் பண்ணி சொல்லட்டும்.
நான் உத்தம புருசன் ஏக பத்தினி விரதன் திரைக்கு பின்னால் நடிக்கவே மாட்டேன் என்னை வைத்து படம் எடுத்து சம்பாதிப்பவன் என்னுடன் நடிப்பவன் எல்லாம் என்னை வாழவைத்த தமிழினம் தான் என எவனாவது வந்தேறி பிழைக்கும் நடிகன் சூடம் கொளுத்தி சொல்லட்டும்.
தமிழ்தான் எனது தாய் மொழி தமிழே என் மூதாதையர் மொழி என் வீட்டில் நான் தமிழ் மட்டுமே பேசுகிறேன் தமிழை தவிர எனக்கு எந்த மொழியும் தெரியாது என தமிழன் தலையில் மிளகாய் அரைத்து இன்னும் அரைத்துக் கொண்டு தமிழனை ஏமாற்றி ஆள நினைக்கும் எந்த தறுதலையாவது சத்தியம் பண்ணி சொல்லட்டும்.

போங்கடா தமிழர்களா தனி மனித துதி பாடாமல் தாய் தந்தை நல்லா இருக்கனும்னு தமிழ் கடவுள் முருகன் கோவிலில் மொட்டையை போட்டு வேலையைப் பாருங்கடா.

செட்டியானுக்கு ஆசாரி தலைவர் ஆக முடியாதுடா கோனாருக்கு நாடார் தலைவர் ஆக முடியாதுடா திராவிடனுக்கு ஆரியன் தலைவன் ஆக முடியாதுடா தமிழனுக்கு தெலுங்கன் கன்னடன் எல்லாம் தலைவன் ஆக முடியாதுடா

அது போல உங்கமாவையோ அல்லது உங்கயாவையோ எங்கள பெத்தவுங்களா ஏத்துக்க முடியாதுடா

ஞாயிறு, 13 அக்டோபர், 2013

நாயின் வாயைக் கட்டினோம்


கீழக்கரையில் ஒரு ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஒன்று இருக்கும். அந்த வகையில் நான் ஹமீதியா மேனிலைப் பள்ளியில் பத்தாவது படிக்கும் போது ஐந்து வருத்தப்படாத வாலிபர்கள் இருந்தோம். ஹமீதியா பள்ளியின் ஆசிரியர் ஓ எஸ் அப்துல் ரஹ்மான் அவர்களின் புதல்வர் ஜாபர் அலி அந்த வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் தலைவர். புலவர் முஸ்தபாவின் மருமகன் செய்யது ஹமிது சுல்தான் சங்கத்தின் பொருளாளர். (இவர்கிட்டதான் அப்ப காசு இருக்கும்) சிட்டி கன்சல்டண்ட் பொறியாளர் ஆசாத் ஹமித் நான் கீழக்கரை நூலகர் திரு அழகுமலை மகன் பொறியாளர் மீனாட்சி சுந்தரம் இவர்கள் உறுப்பினர்கள்.

சங்கக் கூட்டம் கடற்கரையில்தான் நடக்கும் அலை அடிக்காமல் இருந்தால் ஐந்தாம் பாலத்திலும் அலை ரொம்ப அடித்தால் கஸ்டம்ஸ் ஆபிஸின் சரிவு சுவரிலும் நடக்கும். அப்சரா தியேட்டருக்கு எதிரில் ஒரு பெட்டிக்கடையில் சுண்டல் விற்பார்கள் அதை ஆளுக்கொரு பொட்டலம் வாங்கி பாலத்தில் வந்து உட்கார்ந்தோம் என்றால் கஸ்டம்ஸ்காரர்கள் வந்து திட்டும் வரை பேசிக் கொண்டிருப்போம். சில நேரம் பாலத்திலிருந்து செருப்பை கடலில் வீசுவது பின் அது கரை ஒதுங்கினால் கரையில் போய் எடுத்துக் கொளவது கரையில் ஒதுங்காமல் கடல் அலையில் அடித்துச் சென்றால் சட்டையைக் கழட்டி பாலத்தில் போட்டு விட்டு நீந்தி போய் அந்த செருப்பைப் போய் எடுப்பது என சாகசமெல்லாம் செய்து கொண்டிருந்தோம்.

அப்போது கடற்கரையில் ஒரு பெட்ரோல் பேங்க் இருந்த்தது. மீனவர்களுக்காக டீசல் மட்டும் வியாபாரம். அந்த் பங்கில் ஒரு வெள்ளை நாய் ஒன்று கட்டப் பட்டிருக்கும் அந்த நாய் எங்களைப் பார்த்தால் மட்டும் அப்படி ஒரு குரை குரைக்கும். இதில் கோபமடைந்த எங்கள் சங்கத் தலைவர் அந்த நாயை என்ன செய்யலாம் என ஆராய்சியில் இறங்கினார். மீனாட்சி சுந்தரம் ஒரு ஆலோசனை சொன்னார் நூலகத்தில் நாயின் வாயைக் கட்ட மணீமேகலை பிரசுரம் புத்தகம் ஒன்றை பார்த்ததாகவும் அந்த புத்தகத்தில் உள்ள மந்திரத்தை செபித்து அந்த நாயின் வாயைக் கட்டலாம் என அரிய ஆலோசனை வழங்கினார்.

சொன்னபடியே அந்த புத்தகத்தினை கடற்கரைக்கு கொண்டு வந்தார், அதில் குரைத்து வரும் நாயின் வாயைக் கட்ட, நமது காலடி மண்ணை எடுத்து, நீலி, சூலி, ஆகாச பாலி,கட்டு ஓம் நன்றாகக் கட்டு கட்டு எனக் கூறி நாய் முன் வீசினால் நாய் குரைக்க இயலாது என குறிக்கப்பட்டிருந்தது. இந்த மந்திரத்தினை நாய் முன் செபித்து அதன் வாயைக் கட்டும் மிகப் பெரிய பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டது.ஏன் எனில் எனக்கு மனப்பாட சக்தி அதிகம் என சங்கத் தலைவர் நம்பியிருந்தார்.

ரொம்ப பாதுகாப்பாக நாயைக் கட்டியிருந்த இடத்தில் இருந்து நாற்பதடி தூரத்தில் நின்று கொண்டு காலடி மண்ணை எடுத்து மந்திரத்தினை ஓதி நாயை நோக்கி எறிந்தோம். காலடி மண்ணில் ஒரு கல் இருந்திருக்கும் போலிருக்கிறது. அடிபட்ட நாய் முன்னை விட வள் வள் என குலைக்க ஆரம்பித்தது. கோபமடைந்த பெட்ரோல் பங்க் ஊழியர் நாயை அவிழ்த்து விட்டார். இப்போது ஐஸ் கம்பெனியை நோக்கி நாய்க்கும் எங்கள் ஐந்து பேருக்கும் ஒட்டப் பந்தயம் நடக்க ஆரம்பித்தது. நானும் மீனாட்சி சுந்தரமும் பின்னாங்கால் பிடறிபட ஐஸ் கம்பெனியிலிருந்து மீன் மார்க்கெட்டு செல்லும் வலதுப் பக்க பாதையில் ஓடி விட்டோம் சங்கத் தலைவர் இடது பக்கத்தில் கடற்கரைக்கு செல்லும் பாதையில் ஓடி விட்டார். மாட்டிக் கொண்டது ஆசாத்தும் சுல்தானும் ஆசாத் சற்றே உயரமானவர் என்பதால் ஐஸ் கம்பெனி ஓரத்திலிருந்த கருவேல் மரத்தின் கிளையினைப் பிடித்து ஐஸ் கம்பெனி காம்பவுண்ட் சுவரில் ஏறி விட்டார் நாய் இப்போது சுல்தானை பார்த்து முறைக்க தொடங்கியது.

காக்கா உடனே ஒரு காரியம் செய்தார். நாயைக் கட்டும் மந்திரம் உள்ள மணிமேகலைப் பிரசுர புத்தகம் அவர் கையில்தான் இருந்தது. அதை வைத்து நாயின் வாயை நோக்கி ஓங்கி அடித்தார். அவ்வளவுதான் நாய் பின்னங்கால் பிடறிபட திரும்பி பெட்ரோல் பங்க் சென்று விட்டது.


அதற்கு பின்னால் எங்களைப் பார்த்து அது குரைப்பதில்லை. மந்திரத்தினால் பயனில்லை என்றாலும் மந்திரப் புத்தகம் நாயின் வாயைக் கட்டி விட்டது.
வியாழன், 6 ஜூன், 2013

எதிர் நீச்சல்

குஞ்சிதபாதம்ன்னு பேரு வச்சிகிட்டு நம்ம சிவ கார்த்திகேயன் படுற பாடுகளை எதிர்நீச்சல் படத்தில பார்த்த பின்னர் நம்ம சமூகத்தில இதே மாதிரி பல சொந்தப் பெயருகளையும் பட்டப் பெயர்களையும் வச்சிகிட்டு நம்மாளுக பலரும் படுற அவஸ்தைகளைப் பற்றி இந்த பதிவு.

எங்க சமூகத்தில பெரும்பாலும் குடும்பங்களை ஊர் பெயர் சொல்லிதான் உறவினர்கள் அடையாளம் காண்பாங்க. எங்க குடும்பத்தினை செல்வனூரான் என்று சொல்வது போல் காமன் கோட்டையான் ரெகுநாதபுரத்தான், புதுமடத்தான், எலம்பாட்டான், சிக்கலான், பேரையூரான், காக்கூரான் மட்டியனேந்தலான் இப்படி ஊரை வச்சி சில பேரு இருக்கும். அப்புறம் ஊரில அவன் எந்த குடும்பத்துக்காரன் என்பதை தாத்தா முப்பாட்டனாருக்கு சில பட்டப் பேரு இருக்கும் பாருங்க அத வச்சிதான் கூப்புடுவாங்க.

அந்த பேருங்கள்ளாம் பாருங்க பெரும்பாலும் முன்னோர்கள் என்ன விரும்பிச் சாப்பிடுவாங்களோ அத வச்சிதான் பேரு இருக்கும். இல்லன்னா அவுங்க என்ன வேலை பாத்தாங்களோ அத வச்சி இருக்கும்.

கம்மங்கஞ்சி, சுண்டைக்காய், கல்கண்டு, சுத்தக் கள், வெந்தய குழம்பு மிளகுதண்ணி இப்படி சில பேரு. இதுல மிளகு தண்ணிங்கிற பேரு அவருக்கு எப்படி வந்ததுன்னா அவரு எந்த சொந்தக் காரங்க ஊருக்குப் போனாலும் சாப்பிட உட்காந்தாருன்னா முதல்ல இலை நிறைய சோற வாங்கிட்டு பின்னர் குழம்பை அதுல கொள கொளன்னு கொட்டுவாராம். பின்னர் குழம்பு அதிகமாயிருச்சு சோறப் போடுங்கன்னு சொல்லி அதுல அதிகமா சோறப் போட்டு மறுபடியும் குழம்ப ஊத்த சொல்லுவாராம். அதுனால இவர் வர்றாருன்னு தெரிஞ்சாலே எல்லாரும் மிளகுதண்ணிதான் (ரசம்)குழம்பா வைப்பாங்களாம்.

அப்புறம் தொழிலை அடிப்படையா வச்சி டெய்லர் , ஐஸ் கம்பெனிக்காரர், பண்ரொட்டிக்காரர்,லாஞ்சிக் காரர்,கரண்டுக்காரர், ஆப்பை கொத்துறவருன்னு பல பேரு இருக்கும். இதுல ரொமப பாதிக்கப் பட்டவரு எங்க ஊருல பண்ணி வாத்தியாருதான். வாத்தியாரு வேலை பார்த்த இவரு பார்ட் டைமா பண்ணிங்கள வளத்து வித்துகிட்டு இருந்தாரு. அதுனால பண்ணி வாத்தியாரு பண்ணி வாத்தியாருன்னு எல்லோரும் கூப்பிட ஆரம்பிச்சி அவரோட இயற்பெயர் என்னன்னே பலபேருக்கு தெரியாம போச்சு. அவரும் அத பெருசா எடுத்துகல. ஆனா பிள்ளைங்க தலையெடுத்தவுடன் பிள்ளைங்களையும் பண்னி வாத்தியாரு மகன், பன்னிவாத்தியாரு மருமகன்ன்னு எல்லாரும் சொல்ல ஆரம்பிங்கவும் அவரு ரொம்ப வருத்தமாகி பண்ணி வளர்ப்பு தொழிலை அடியோடு தலை முழுகிட்டு ஒரு பத்தாயிரம் நோட்டிஸ் அடிச்சு ஊருல்ல குஞ்சு குழுவானுகெல்லாம் கொடுத்தாரு. அதுல அவரு என்னை இனிமே யாரும் பண்ணி வாத்தியாருன்னு கூப்பிடக்கூடாதுன்னு ரொம்பவும் உருகி கேட்டுருந்தாரு. இருந்தாலும் யாரும் அதை சட்டை பண்ணல. இன்னும் அவங்க குடும்பத்துக்கு பெரிய லைன் வீடுங்களாம் இருக்கு. அதுக்கு பெயரே பண்ணி வாத்தியாரு காம்பவுண்டுதான்.

எங்க அய்யாவுக்கு இடதுகை பழக்கம் இருந்திருக்கும் போல அதுனால அவரோட பட்டப் பெயர் வல்லங்கை. அது எங்க பரம்பரைல்ல யாராவது ஒரு வாரிசுக்கு மட்டும் வாழையடி வாழையா வந்துகிட்டு இருக்கு. எங்கப்பா கூடப் பிறந்தவுங்கள்ள எங்க பெரியப்பாவுக்கும் எங்க தலைமுறையில எனக்கும் எங்களோட அடுத்த தலைமுறையில எங்க அண்ணன் மகனுக்கும் இடது கை பழக்கம்தான். என்னையவே யாரும் வல்லங்கைன்னு கூப்பிடும் போது எனக்கு ரொம்ப பெருமையாகவே இருக்கும்.

ஆனா நான் பள்ளியில படிக்கும் போது உயரம் தாண்டுதலில் கலந்துகிட்டேன் அதுல முதல் மூணு கட்டங்களை எளிதாக தாண்டிய நான் அதுக்கப்புறம் உயரத்தை அதிகரிச்சவுடன் ஒரு மாதிரி பல்டி அடிச்சு தாண்டினேன். அதப் பாத்திட்டு எங்க பி டி வாத்தியாரு கொசு உள்ளான் மாதிரி தாண்டினயாடான்னு பாராட்டினாரு பாருங்க. பசங்க அப்படியே புடிச்சிகிடானுக அதுல இருந்து என் கொசு உள்ளான்னு மாத்திட்டானுக. பத்தாவது படிக்கிற வரைக்கும் அந்த பேரக் கேட்டா எனக்கு பயங்கர காண்டாகிடும். அப்புறம் அது பழகிப் போயி இப்ப என்ன யாரும் கொசு உள்ளான்னு கூப்பிட்டா எனக்கு சட்டுன்னு புரிஞ்சிடும் அடடா இவன் நம்மளோட ஸ்குல்ல படிச்சவுன்னு.

அதுக்கப்புறம் காலேசுல படிக்கும் போது நான் பர்ஸ்ட் செமஸ்டருல நாலு அரியரை வாங்கிட்டேன். ரொம்ப துக்கமா போச்சு. அதுக்கப்புறம் அந்த அரியரையும் பாஸ் பண்ணி மூனாவது செமஸ்டருல்ல ஆல் பாஸ் பண்னுனேன் அதுவும் 78.5% மார்க்குல. தலை காலு தெரியாம கேட்கிறவுனுகெல்லாம் பார்ட்டி கொடுத்தேன். (சும்மா டிபன் பார்ட்டிதான்.) அதுல எல்லாரும் எனக்கு பார்ட்டின்னு பேரு வச்சிட்டானுக. காலேசுல படிச்சவுங்களுக்கு நான் எப்போதும் பார்ட்டிதான்.

மகனுக்கு அழகா குகன்னு பேரு வச்சேன். அவன தெருவுல எல்லோரும் குகான்னு கூப்பிடாம கூகா கூகான்னு கூப்பிட ஆரம்பிச்சிட்டாங்க. சரி அவனத்தான் அப்படி கூப்பிடுறாங்கன்னா என்னையும் கூகாப்பா கூகாப்பான்னு கூப்பிட ஆரம்பிச்சு கடைசியில நண்டு சிண்டெல்லாம் என்னை மபோகா ஆனந்த் மாதிரி கூகாபா நாகேந்திரன்னு கூப்பிடுதுக. பரவாயில்ல இதுவும் நல்லா இருக்கு.

மொய்
திருமணம் முடிந்தவுடன் நல்லா சாப்பிட்டுவிட்டு மொய் எழுதுற பழக்கத்தினை யார் ஆரம்பிச்சிருப்பாங்கன்னு தெரியல. கண்டிப்பா அந்த காலத்தில விசேசம் நடத்துனவுங்க வாயைத்திறந்து கேட்டிருக்க மாட்டாங்க. ஆனா யாராவது ஏழை எளியவுங்க கல்யாணத்துக்கு போன நாலு பெரிய மனுசனுங்க விசேசக்காரர் குறிப்பா பொண்னு வீட்டுக்காரங்க நல்லா இருக்கனுமுனு நினைச்சு நாலு காச கொடுத்திருப்பாங்கன்னு நினைக்கிறேன் அதுவே காலப் போக்கில நோட்டு போட்டு எழுதுற அளவுக்கு வாடிக்கை ஆயிருச்சு போல இருக்கு.

எங்க வீட்டு பீரோவுல எங்கம்மா ஒரு ஏழெட்டு மொய் நோட்டு வச்சிருக்காங்க. எல்லாம் எங்க அண்ணன் தம்பி அக்கா தங்கசிங்க கல்யாணத்துக்கு வந்த மொய் நோட்டுதான். யாராவது சொந்தக்காரங்க பத்திரிக்கை கொடுத்தாப் போதும். அவுங்க போன பின்னே கடைசியா நடந்த எங்க வீட்டு கல்யாணத்தில அவுங்க எவ்வளவு மொய் எழுதினாங்கன்னு எங்கம்மா அந்த நோட்டுல ரெஃபர் பண்ணிட்டுதான் பத்திரிக்கை வச்சவுங்களுக்கு எவ்வளவு மொய் எழுதனும்ன்னு முடிவு பண்ணுவாங்க. சில பேரு எவ்வளவு எழுதினாங்கன்னு எங்கம்மா மனப்பாடமா நினைவு வச்சிருப்பாங்க. ”சண்முகம் முத கல்யாணம் இப்பத்தான் பண்ணுறான் ஏற்கனவே நமக்கு அஞ்சு விசேசத்தில நூறு நூறு ரூபா எழுதியிருக்கான் அதனால அவனுக்கு ஒரு முன்னூறு ரூபா எழுதுவோம் அடுத்து ஒரு பையன் வச்சிருக்கான்ல அவனுக்குப் பாக்கி இருநூறு ரூபாயை எழுதுவோம்ன்னு கணக்கா பேசுவாங்க”.

அதே மாதிரி கல்யாணத்துக்கு பத்திரிக்கை கொடுக்க வந்தவுங்க அவுங்க நடந்துக்கிற அல்லது செய்முறையைப் பொறுத்து எங்கம்மாவோட மொய் அளவு மாறும். வந்தவுடனே வெந்நித்தண்ணியை காலில ஊத்துன மாதிரி கிளம்பிப் போயிட்டங்கன்னா 100ரூபா. ஒரு காப்பி தண்ணியவோ டீத்தண்ணியவோ குடிச்சி கிளம்புனாங்கன்னா 200 ரூபா சாப்பிட்டு போங்கன்னு சொன்னா இருந்து சாப்பிட்டு போனாங்கன்னா 500ரூபா. 11ரூபாயோ 21ரூபாயோ சுருள்வச்சு மச்சான்முறை பத்திரிக்கை கொடுத்தாங்கன்னா 1000ரூபா டிரஸ் எடுத்து கொடுத்து அது பூணம் ஷிபான் சேலையா இருந்தா 2000ரூபா பட்டு எடுத்து கொடுத்தாங்கன்னா ஆளப் பொறுத்து அரைப்பவுனோ காப்பவுனோ மோதிரம் போடுறத்துன்னு எங்கம்மா கணக்கே தனியா இருக்கும்.

எங்க ஊருல அரியமுத்து செட்டியாரு கல்யாண மண்டபம் வச்சிருக்காரு. அதுல கல்யாணம் யாரு முடிச்சாலும் அரியமுத்து செட்டியாரு அது டிபனோ சாப்பாடோ அங்கேயே சாப்பிடுவாரு. டிபனுக்கு 20ரூபா மொய். காய்கறி சாப்பாட்டுக்கு 30 ரூபா கறி சாப்பாட்டுக்கு 50 ரூபான்னு அவரு ஒரு கணக்கு வச்சு மொய் எழுதுவாரு. என் கூடப் படிச்ச விக்டர் இப்ப வாத்தியாரு வேலை பாக்கிறான். அவன் கல்யாண வீட்டுல சாப்பிட்டுட்டு சாப்பாடோட ருசியப் பொறுத்துதான் மொய்ய எழுதுவான்.

சிலபேரு கல்யாணத்துக்கு வந்து பேருக்கு ஒரு அஞ்சு நிமிசம் இருந்துட்டு தாலி கட்டுனாங்களா கல்யாணம் முடிஞ்சதான்னே கவலைப்படாமே மொய்ய சம்பந்தபட்டவுங்க பாக்கெட்டுல திணிச்சுட்டு போயிகிட்டே இருப்பாங்க. கல்யாணத்துக்கு பத்திரிக்கை கொடுக்கிறது என்பது தாலி கட்டுற நேரத்துல கரக்டா வந்து பொண்ணயும் மாப்பிளையும் ஆசிர்வாதம் பண்ணனும்ங்கிற மரபெல்லாம் யாரும் கடைப் பிடிக்கிற மாதிரி தெரியல. சில பேரு விசேசக்காரங்கள நேருல கூட பார்த்து வாழ்த்து சொல்ல நேரமில்லாம மொய்ய வேற யாருட்டயாவது கொடுத்து விடுவாங்க. அவங்களோட முக்கிய நோக்கம் மொய் நோட்டுல வரவு வச்சிடம்னா அது கல்யாணத்துக்கு வந்ததுக்கு சமம்ன்னு நினைக்கிறதுதான். அதே மாதிரி ஒரே நேரத்துல ரெண்டு கல்யாணம் நடந்து அதுல ஒரு வீட்டுல காய்கறி சாப்பாடும் இன்னொரு கல்யாணத்துல கறிச் சாப்பாடோ போட்டாங்கன்னா காய்கறி சாப்பாடு போடுற கல்யாணத்துல காலைச் சாப்பாடை சாப்பிட்டுட்டு அவசரம் அவசரமா மொய் எழுதிட்டு கறி சாப்பாட்டு பந்தியில இடத்த பிடிக்க அவசரம் அவசரமா ஓடுவாய்ங்க.

சில கல்யாணத்துல மொய் எழுத வந்தவுங்ககிட்ட மொய்ய வாங்கி அத நோட்டுல எழுதுறாங்க பாருங்க அது பெரிய கஷ்டமான வேலை. தங்கச்சிமடத்துல எங்க சின்னம்மா பையன் கல்யாணத்துக்கு மொய் எழுத என்னை உட்கார சொன்னாங்க. லில்லி பொப்பின்ஸ் செல்வி, தெரசா ஜெயம்மாள் கோனத், டேவிட் அருள் சகாயராஜ், ஸ்டீபன் பால் தேவசகாயம், பெர்னாந்து அருள் சூசைன்னு ஒவ்வொரு பேரும் முழ நீளத்துக்கு இருந்துச்சு. காதுல கேட்டு நோட்டுல எழுதுறதுக்குள்ள கொஞ்சம் ஆடித்தான் போயிட்டேன்.

கரூர்ல ஒரு காண்ட்ராக்டர்கிட்ட வேலை பார்க்கும் போது அவரு எங்க குருப்புல இருந்த பதினைஞ்சு பேருக்கும் பத்திரிக்கை கொடுத்து கல்யாணத்துக்கு அவசியம் வர சொன்னாரு. எவ்வளவு பெரிய மனுசன் பத்திரிக்கை கொடுத்து கூப்புடுராறேன்னு நாங்களும் அடிச்சுப் பிடிச்சு கல்யாணத்துக்கு போனோம். கல்யாண மண்டபத்துக்கு உள்ள நுழையும் முன்னே அவரோட அல்லக்கை ஆளுக்கு ஒரு கவர் கொடுத்து மொய் எழுதுற இடத்துக்கு கூட்டிட்டு போயி எங்க பேருல மொய் எழுத வச்சான். ஒவ்வொரு கவருலயும் பத்தாயிரம் ரூபா இருந்த்துச்சு. அப்பத்தான் புரிஞ்சுச்சு எங்கள மாதிரி ஆளுங்கள வச்சு அவரு கருப்பை வெள்ளையாக்கிட்டாருன்னு.

சில பொண்ணு வீட்டுக்காரங்களுக்கு இந்த மொய் வரவுதான் கல்யாணம் முடிஞ்சவுடன் மானம் காக்கிற சாமியா இருக்கும். அந்த அளவுக்கு மொய்யில தர்றேன் மொய் வந்தவுடன் தர்றேன் அப்படின்னு சொல்லி கறிக்காரன் காய்கறிகாரன் மேளம் மாலை சமையக்காரர் மண்டபம் வாடகை அப்படி இப்படின்னு ஏகப்பட்ட கடன்கள் மொய்யிலதான் அடைப்பாங்க. பார்க்க சில நேரம் பரிதாபமாக இருக்கும். அதுனால என்னோட மொய் அளவு எப்போதும் பொண்ணு வீட்டுக்காரங்களுக்கு அதிகமாகவே இருக்கும்.

எங்கப்பா ஒரு தடவை அவரோட வாத்தியார் நண்பர் மகள் கல்யாணத்துக்கு எனக்கிட்டே 100ரூபா கொடுத்து மொய் எழுதிட்டு வர சொன்னாங்க. கல்யாண வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி என் நண்பனோட ரூமுக்கு போனேன் அங்க 20ரூபா பெட்டு வச்சு நாலு செவன்ஸ் சீட்டு ஆட்டம் ஆடி 80ரூபாயை தோத்துட்டேன். கடைசியில மிஞ்சி இருந்த 20 ரூபாயை வச்சி மொய் எப்படி எழுதுறது. நாள பின்னே வாத்தியார் நோட்டப் பாத்து எங்கப்பாவை தப்பா நினைச்சாருன்னா. ஒரு ஐடியா பண்ணி இருந்த இருபது ரூபாயில 15 ரூபாய்க்கு ஒரு செஸ் போர்டு வாங்கி அத கலர் பேப்பரில சுத்தி ஒரு கிப்ட் பாக்ஸ் மாதிரி ரெடி பண்ணி அதுக்குள்ளே நான் அப்ப சார்ந்திருந்த கட்சியான சி பி ஐ எம் எல் லிபரேசனின் சி பி ஐ எம் எல்லில் சேருங்கள் நோட்டிஸில் இரண்டு வச்சு அதுல பொண்ணு மாப்பிள்ளை பேரையும் எழுதி பேக்கேஜை மாப்பிள்ளை கையில கொடுத்துட்டு பந்தாவா வந்துட்டேன். நாலு நாள் கழிச்சு வாத்தியாரு எங்கப்பாவை பார்த்து ஏண்டா கல்யாணத்துக்கு வந்து ஆசிர்வாதம் பண்ணுவியா? அத விட்டுட்டி பொண்ணையும் மாப்பிள்ளையும் நக்சல்பாரி இயக்கத்துல சேர அழைக்கிறியேன்னு சத்தம் போட்டிருக்காரு. வீட்டுக்கு வந்து எங்கப்பா என்னை ஒரு பிடி பிடிச்சு விட்டாரு. அதில இருந்து அந்த வாத்தியாரு இப்பவும் என்னை எங்க பாத்தாலும் முறைப்பாரு. ஒழுங்கா மொய் எழுதியிருந்தா இதெல்லாம் நடந்திருக்குமா?


திங்கள், 27 மே, 2013

நூறாண்டுகளைத் தாண்டியும் வலிமையுடம் இருக்கும் பாம்பன் பாலம்பொறியியல் துறையின் அதிசயமாக கருதப்படும் இந்தியாவின் முதல் தூக்குப் பாலமான பாம்பன் இருப்புப்பாதைப் பாலம் பெப்ரவரி 24 2013 அன்று நூறாண்டுகளைத் தாண்டி பொலிவுடன் இருக்கிறது.

2.06 கி மீ நீளமுள்ள இந்தப் பாலம் மும்பையின் பாந்தரா வொர்லி கடல் பாலத்துக்கு அடுத்து இந்தியாவின் மிக நீண்ட கடலில் கட்டப் பட்ட பாலமாகும்.1914ல் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவிடப்பட்ட இந்த பாலம் இந்தியாவின் மிக முக்கியமான வழிபாட்டுத்தலமான இராமேஸ்வரம் தீவினை நிலப்பகுதியுடன் இணைக்கிறது.

அமெரிக்காவின் மெக்சிகோ நகரத்துக்கு அடுத்து உலகின் அதிகமான துருப்பிடிக்கும் பகுதியான இராமேஸ்வரத்தில் கட்டப்பட்ட இந்த இரும்பு பாலம் பலவித சவால்களுக்கு இடையே கட்டப்பட்டது. 1964ல் புயலால் பாதிக்கப்பட்டும் இந்தப் பாலம் நூறாண்டுகளைத் தாண்டியிருப்பது இதன் சிறப்பம்சம்.

இந்தியாவை ஆட்சி செய்த கிழக்கிந்திய நிறுவனம் தங்கள் வாணிப விருத்திக்காக இந்தியாவையும் இலங்கையையும் இருப்புப்பாதை வழியே இணைக்க கி பி 1870ம் ஆண்டு பாலம் கட்ட எண்ணினர்.

இதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்த பின்னர் இந்தோ சிலோன் திட்டம் என்னும் பெயரில் மண்டபத்திலிருந்து இராமேஸ்வரம் பின்னர் தனுஸ்கோடியிலிருந்து தலைமன்னார் வரை இருப்புபாதை கடலிலேயே கட்ட திட்டம் தயார் செய்து ரூ 299 லட்சம் செலவில் ஒரு திட்டத்தினை இங்கிலாந்து பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தனர். திட்டத்தின் அதிகபட்ச செலவு கருதி இதை நிராகரித்த இங்கிலாந்து பாராளுமன்றம் ரூ 70 லட்சம் செலவில் மண்டபத்திலிருந்து இராமேஸ்வரம் வரையான பாலம் கட்ட 1880ல் ஒப்புதல் வழங்கினர்.

1902ல் இந்திய ரயில்வே கட்டுமானப் பணிகளை துவங்கியது. குஜராத்தில் இந்த வேலைக்கென அனுபவம் வாய்ந்த குரை என்னும் குடும்பத்தினர் இதற்காக பிரத்தியோகமாக வரவழைக்கப் பட்டனர். இவர்கள் ஹிமாலயன் ரயிவேயில் வேலைப் பார்த்த அனுபவம் கொண்டவர்கள். இரும்புச்சட்டங்கள் இங்கிலாந்திலிருந்து கொண்டு வரப்பட்டது. மொத்தம் 141 தூண்களை கொண்ட இந்த திட்டம் 112ம் தூணைக் கட்டும் வரை அமைதியாக சென்றது அதன் பின்னர் இந்த திட்டம்  ஒரு பிரச்சினையை சந்தித்தது.

112ம் தூணுக்கு அந்தப் பக்கம் 65.23 மீட்டர் தூரத்தில் பாக் ஜலசந்தியில் பாம்பார் எனும் சிறு கப்பலுக்கான ஒரு வழி இருந்து வந்தது. பாலம் கட்டுவதால் அந்த வழி அடைபடுவதை பொறியாளர்கள் விரும்ப வில்லை. எனவே பாலமும் கட்ட வேண்டும். அதே நேரத்தில் கப்பலுக்கான வழியும் அடைபடக்கூடாது என எண்ணிய பொறியாளர்கள் இதற்கான வழியை ஆராய்ந்தனர்.

இந்த நேரத்தில் ரயில்வே பொறியாளர்கள் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த செர்ஷர் என்னும் பொறியாளரை அனுகினர். அவரும் கத்திரி வடிவத்தில் உருளும் வகை தூக்குப் பாலத்தினை வடிவமைத்துக் கொடுத்தார். 1913ல் இது நிறுவப்பட்டு பெப்ரவரி 24ம்தேதி 1914ல் மக்கள் பயன்பாட்டுக்காக பாம்பன் பாலம் திறந்து வைக்கப்பட்டது.

இந்த தூக்குப்பாலத்தின் வலிமை டிசம்பர் 1964 அன்று உலகுக்கு தெரியும் வண்ணம் மிகப் பெரிய புயலினால் அந்தப் பகுதி தாக்கப் பட்டது. பாலத்துக்கு அந்தப் பக்கம் தனுஷ்கோடி என்ற ஊரே அழிந்தது. பாலத்தின் 141 தூண்களில் 2 தூண்கள் பாலத்தின் கிர்டர் எனப்படும் இரும்பு உத்திரங்கள் புயலில் பெரும் சேதமடைந்தன. ஆனால் செர்ஷர் வடிவமைத்த தூக்குப் பாலம் எந்தவித சேதமும் அடையவில்லை.இயற்கையின் சீற்றத்தினை அது எளிமையாக எதிர் கொண்டது.

இந்த முறை இந்திய பொறியாளார்கள் தங்களது தனித்திறமையினை வெளிப்படுத்தி உதவிப் பொறியாளர் ஆர்.சிரிதரன் (பின்னர் மெட்ரோ ஷ்ரீதரன் என அறியப்பட்டவர்) தலமையிலான ஒரு குழு ஐந்தே மாதங்களில் பாலத்தினை சரிசெய்து மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு பாலத்தினை சீரமைத்து தந்தனர்.

2006ல் இந்திய ரயில்வே நாடு முழுவதும் மீட்டர் கேஜ் பாதைகளை மாற்றி அகலப்பாதையாக மாற்றும் வேளையில் இந்தப் பாலத்தினை பயன்படுத்தாமல் புதுப் பாலம் கட்ட இந்திய ரயில்வே கருதியது. ஆனால் அதற்கான பட்ஜெட் தொகை 700 கோடி ரூபாய்க்கும் மேல் தாண்டும் என்பதால் பாலத்தினை வலுவேற்ற அரசு முடிவு செய்தது.

பாலம் இருக்கும் ராமேஷ்வரம் தீவில் பிறந்தவரான நாட்டின் முதல் குடிமகன் திரு அப்துல் கலாம் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் ஐஐடி சென்னையினை சேர்ந்த பொறியியல் வல்லுனர்கள் வழங்கிய ஆலோசனையின் பேரில் பாலம் வலிமையூட்டப்பட்டு 2007ல் அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டது.
 

2009ல் மேலும் வலுவூட்டப்பட்டு சரக்கு ரயில்களுக்காகவும் பாலம் தயாரானது. 2013ல் சிறிய கப்பல் ஒன்று மோதியதால் இந்தப் பாலத்தின் 121வது தூண் சிதிலமடைந்தது. உடனே சரி செய்யப் பட்டு பாலம் போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டது.இப்படி பல்வேறு சோதனைகளை கடந்தும் பாலம் நூறாண்டுகளைத் தாண்டியும் வலிமையுடன் விளங்குகிறது.

(நன்றி: தி ஹிந்து ஆங்கிலப் பத்திரிக்கை)
வெள்ளி, 1 ஜூன், 2012

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே பகுதி 1

அனில் பாப்னா என்னும் மனசக்தி ஆராய்சி நிபுணர் ஒரு கட்டுரையில் சொல்லியிருப்பார். ஒவ்வொருவரும் தாங்கள் படிப்பதிலோ அல்லது பார்ப்பதிலோ 5 முதல் 10 சதவீதம் மட்டும்தான் ஞாபகம் வைத்திருப்பார்கள். மீதி 90 சதவீதம் படித்து முடித்த 30 நிமிட்த்தில் மறந்து விடுவார்கள் என்று. திரும்ப திரும்ப படிப்பதினாலோ அல்லது பார்ப்பதால் மட்டுமே அனைத்தையும் ஞாபகம் வைத்திருக்க முடியும் என்று.

இந்த பதிவில் நான் மனசக்தி போன்ற அரிய விடயங்களை ஆராய்சி செய்ய வரவில்லை. அந்தளவுக்கு நமக்கு விடய ஞானம் கிடையாது. நான் சொல்ல வருவது என்னவெனில் தமிழக திரை வானில் உள்ள நடிகர் ஒவ்வொருவரையும் நினைக்கும் போது என் மனதில் உடன் வரும் காட்சிகளை மட்டும் இந்த பதிவில் சொல்ல விரும்புகிறேன்.
எம்ஜியார்: எம்ஜியாரை நினைத்த்தும் எனக்கு உடனே அவர் முகத்தை கைகளில் மூடிக் கொண்டு முதுகு குலுங்க அழும் காட்சிதான் ஞாபகம் வரும். ரிக்சாக்காரன் பட்த்தில் மேஜர் சுந்தர்ராசன் எம்ஜியாரைப் பார்த்து “செல்வம் வாட் யூ திங்க் அபோட் லைப் “ என்றதும் எம்ஜியார் அதற்கு ஆங்கிலத்தில் பதில் சொல்வதும் அதற்கு உடனே மஞ்சுளா இருங்க இருங்க இப்ப என்ன மொழியில பேசினிங்க என்று கேட்பதும் ஞாபகம் வரும் காட்சிகள்.


சிவாஜி கணேசன்: வேறு யாரும் செய்ய முடியாத எத்தனையோ முகபாவங்கள் சிவாஜி காட்டியிருந்தாலும் எனக்குத் தெரிந்து மதன மாளிகையில் மந்திர மாலைகளாம் என்ற பாடலில் அன்பே அன்பே என்று பெண்குரல் ஹம்மிங்க் முடிந்த்தும் சிவாஜி உஷா ந்ந்தினியை முகத்தில் புருவங்களை மட்டும் வளைத்து நெளித்து ஒரு பார்வை பார்ப்பார் பாருங்கள் உலகத்தில் எந்த நடிகனும் அந்த முகபாவனையை காட்டமுடியாது.


ஜெமினி கணேசன்: ஜெமினி என்றதும் சாம்பார் ஞாபகம் வருவதில் யாருக்கும் சந்தேகமில்லை. எனக்கு அவரை நினைத்த்தும் எந்த வித ஹிரோயிசமும் இல்லாமல் இரண்டு வில்லன்கள் அசோகன் மனோகருக்கு இவர் வில்லனாக நடித்த வல்லவனுக்கு வல்லவன்  படம் ஞாபகம் வருகிறது.
ஜெய்சங்கர்: தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் ஜெய்சங்கரை நினைத்த்தும் விஜய லட்சுமியுடன் அவர் நடித்த ஒரு பாடல் ஞாபகம் வருகிறது. நான் மலரோடு தனியாக ஏன் இங்கு வந்தேன் என்ற பாடலில் காற்சட்டையின் ஒரு பாக்கட்டில் கையை வைத்துக் கொண்டு இன்னொரு கையை அசைத்துக் கொண்டு நளினமாக ஒரு நடை நடந்து வருவார். மிகவும் அழகாக இருக்கும்.


முத்துராமன்: நிலவே நீ சாட்சி என்று ஒரு பாடல் உண்டு. அதில் பாதைகள் இரண்டு சந்திப்பதும் அதில் பயணம் செல்பவன் சிந்திப்பதும் காதலில் கூட நடப்பதுண்டு அங்கு காலத்தின் தேவன் சிரிப்பது உண்டு என்னும் வரி வரும் போது கேமரா முத்துராமனை போகஸ் செய்யும் அப்போது முத்துராமன் ஒரு புண்ணகையை முத்துப் போல் சிந்துவார். மிகவும் அருமையாக இருக்கும்.


ரவிச்சந்திரன்: இன்றைய சூப்பர் ஸ்டார் சிகரட் பத்த வைப்பதற்கு முன்னோடி ரவிச்சந்திரன் தான். கார் கதவில் சிகரட் பத்த வைப்பது போல் ஒரு படம் உள்ளது. இருந்தாலும் டேப் ஒன்றை கையில் வைத்து அடித்துக் கொண்டு சீர்காழி கோவிந்தராசன் குரலில் உன் மேல கொண்ட ஆசை உத்தமியே நித்தம் உண்டு சத்தியமாக சொல்லுறேண்டி தங்க ரத்தினமே என்று ஒரு பாடல் நடித்திருப்பார். படம் ஞாபகம் இல்லை. மிகவும் அழகாக இருக்கும்.


சிவகுமார்: சின்ன சாம்பார் சிவகுமார் என்று இவரை எங்க பக்கம் அழைப்பார்கள் கதாநாயகிக்கு பிரதான வேடம் உள்ள படங்களில் உப்புக்கு சப்பானியாக ஒரு ஆண் வேடம் தேவைப்பட்டால் அனைவரது விருப்பமும் சிவகுமாரகத்தான் இருக்கும் அன்னக்கிளி ஆட்டுக்கார அலமேலு அக்னிசாட்சி என பல படங்கள் இந்த வரிசையில் அடங்கும். மீசையை பெரிதாக்கி ராமன் பரசு ராமன் என்னும் ஒரு ஆக்சன் படம் நடித்திருப்பார். நல்ல காமெடியாக இருக்கும். இருந்தாலும் சிவகுமார் பசும்பொன் பட்த்தில் ராதிகா என் பையன் தங்கபாண்டி என் சொல்லும் போது சிவகுமார் முகத்தில் நவரசமும் கொண்டு வந்து நம்ம பையன் தங்கபாண்டி என் சொல்லுவார் நான் மிகவும் ரசித்த முக பாவனை 
.