சனி, 27 பிப்ரவரி, 2010

கடவுளுக்கு ஒரு கடிதம்

ஒரு சிறு பையனுக்கு மிகவும் அவசரமாக ரூபாய் 50 தேவைப்பட்டது. பெற்றோரிடம் கேட்டும் பயனில்லை. எனவே கடவுளிடம் பிரார்த்தனை செய்தான். நீண்ட நாள் பிரார்த்தனை செய்தும் கடவுள் அவனுக்கு உதவி செய்தாரில்லை. எனவே கடவுளுக்கு ஒரு கடிதம் எழுதினான். அதில் அவனுக்கு தேவையான ரூபாய் 50 ஐ குறிப்பிட்டு அந்த கடிதத்தை கடவுள், இந்தியா என்னும் முகவரிக்கு அஞ்சல் செய்தான்.

கடிதத்தினைப் பார்த்த அஞ்சல் துறை அதிகாரிகள் வேடிக்கையாக அந்த கடிதத்தினை இந்திய குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்தார்கள். குடியரசுத்தலைவர் அந்த கடிதத்தினைப் படித்துப் பார்த்தார். மிகவும் ஆச்சர்யம் அடைந்தார். உடன் அவரது காரியதரிசியை அழைத்து அந்த பையனுக்கு ரூபாய் 20 மட்டும் அனுப்பச் சொன்னார். குடியரசு தலைவர் ரூபாய் 50 அந்த பையனுக்கு அதிகம் எனவும் மேலும் அதிக பணம் அனுப்பி அந்த பையனை கெடுக்க மனமில்லாமலும் ரூபாய் 20 அனுப்பச் சொன்னார்.

பையனுக்கு பணம் வந்து சேர்ந்தது. பணத்தினை பெற்றுக் கொண்ட பையன் கடவுளுக்கு ஒரு நன்றிக் கடிதம் அனுப்பினான். அதில் கீழ் வருமாறு குறிப்பிட்டான்.

"கேட்டவுடன் பணம் அனுப்பிய கடவுளே உனக்கு நன்றி, ஆனால் நீ அதனை இந்திய குடியரசுத்தலைவர் அலுவலகம் வாயிலாக அனுப்பியிருக்கக்கூடாது ஏனெனில் அந்த கழுதைகள் ரூபாய் 30 ஐ வரிப்பிடித்தம் செய்து விட்டனர்."


செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

ஓம் ஆமின் ஆமென்


மேலே உள்ள படம் எல்லோருக்கும் தெரியும் இந்து மதத்தின் உச்சக் கடவுள் (supreme deity) அடிமுடி அறியவொண்ணா அண்ணாமலையோனின் உருவம்.

இதையும் அனைவரும் அறிந்திருப்பர். கிறித்துவ மதத்தில் ஒரு புனிதச்சின்னம். இயேசுபிரான் பரலோகப் பிதாவிடம் தன் ஆவியை இதில் அறைந்திருந்தபோதுதான் விட்டார்.


இது ஹஜருல் அஸ்வத் இஸ்லாம் மார்க்கத்தில் சொர்க்கத்தின் கல் என குறிப்பிடப்படுவது. இனையத்தில் படம் கிடைக்கவில்லை எனவே தோரயமாக வரைந்துள்ளேன். நபிகள் பெருமகனார் மெக்காவில் உம்ரா செய்யும்போது இந்த கல்லை முத்தமிட்டதாகவும் சிலர் தன் கைத்தடியால் ரசூல்லாஹ் அவர்கள் தொட்டதாகவும் கூறுவர்.
சரி இனி விசயத்திற்கு வருவோம். எப்படி மாரி மேரி மரியம் என பெயர்களில் ஒற்றுமை உள்ளதோ எப்படி ஓம் என்றாலும் ஆமென் என்றாலும் ஆமின் என்றாலும் உச்சரிப்பு ஒலி ஒன்றாக உள்ளதோ அதுபோல் இந்த மூன்று உருவங்களுக்கும் உள்ள ஒற்றுமையை கீழ் கண்ட படத்தின் மூலம் அனைவரும் உணரலாம்.




இதுதான் அந்தப் படம். மதங்கள் வெவ்வேறாக இருந்தாலும் இவை குறிப்பது ஒரு உருவத்தினை மட்டும்தான் என்பது இந்தப் படத்தின் மூலம் உணரலாம்.இஸ்லாம் பிளான் எனப்படும் குறுக்கு வெட்டுத் தோற்றத்தினையும் இந்து மதம் முன் முகப்பையும் கிறித்துவம் அதன் நீள்வெட்டுத் தோற்றத்தையும் குறிக்கின்றன.
ஹஜருல் அஸ்வத் உருவம் ஒரு கண்ணின் உருவத்தினை ஒத்தது என்பதை மெக்கா சென்று ஹஜ் யாத்திரை முடித்த ஹாஜிகள் அனைவரும் ஒத்துக் கொள்வர். அது கண் எனக் கொண்டால் சிவபெருமானின் நெற்றிக் கண்ணையும் இங்கு நிணைவு கொள்ள வேண்டும்.
எனவே இந்த மதங்கள் அனைத்தும் உணர்த்தும் ஒரே தத்துவம் என்னவெனில் நமது புறக்கண்களை மூடி அகக் கண்ணைத் திறந்தால் மட்டுமே இறைவனை அடைய முடியும் என்பதையே உணர்த்துகின்றன. இதைத்தான் கந்த குரு கவசத்தில் சொல்லப் படுகிறது
"நடு நெற்றித்தானத்து நானுனை தியானிப்பேன்" என்று.
பாதைகள் வெவ்வேறாக இருந்தாலும் பயணத்தின் முடிவில் நாம் சென்றடைய வேண்டியது இறைவன் ஒருவனைத்தான்.

சனி, 13 பிப்ரவரி, 2010

டுமீல் டுமீல் டுமீல்


ஒரு அரைச்செங்கலை எடுத்து மதுரையில் ஏதாவது ஒரு தெருவில் விட்டெறிந்தால் அது கண்டிப்பாக ஒரு பாண்டியின் தலையில்தான் விழும். அந்தளவுக்கு பாண்டிகளின் எண்ணிக்கை பாண்டி(யன்) தலைநகர் மதுரையில் அதிகம்.
ஒரு முக்கிலோ அல்லது ஒரு சந்திலோ பத்துப்பேர் நின்று பேசிக்கொண்டிருந்தால் அதில் எட்டுப்பேர் பாண்டியாகத்தான் இருப்பார்கள்.
சண்முகப்பாண்டி, சங்கரப்பாண்டி, சுந்தரப்பாண்டி, அழகுபாண்டி,வீரப்பாண்டி,செல்வப்பாண்டி,
முருகுப்பாண்டி,முத்துப்பாண்டி,வேல்ப்பாண்டி என பெயருக்கு முன் ஏதாவது ஒரு prefix இருந்தாலும் இவர்களையும் மக்கள் அழைப்பது என்னவோ பாண்டி என்றுதான்.
எனவே பெயர்க் குழப்பம் வரக்கூடாது என்பதற்காக இந்த பாண்டிகளை நெட்டைப்பாண்டி, குட்டைப்பாண்டி, கட்டைப்பாண்டி,வெள்ளைப்பாண்டி,கருத்தப்பாண்டி என தோற்ற ஆகு பெயர்களாலும் முனிச்சாலைபாண்டி,ஒத்தக்கடைப்பாண்டி,அனுப்பானடிப்பாண்டி என இட ஆகு பெயர்களாலும் பழக்கடைப்பாண்டி,உரக்கடைபாண்டி, கறிக்கடைப்பாண்டி என தொழில் ஆகு பெயர்களாலும் மக்கள் அழைப்பதுண்டு.
அந்த வகையில் வித்தியாசமானவர்தான் இந்தப் பதிவின் நாயகன் டுமீல் பாண்டி.
துப்பாக்கியில் இருந்து தோட்டாக்கள் வருவதுபோல் இவர் வாயிலிருந்து வரும் ஒவ்வோரு வார்த்தைகளும் எதிராளியைத் தாக்கி மயக்கம் அடையச் செய்யும். மறுமுறை இவரைக் காணும்போது ஒவ்வொருவருக்கும் குலை நடுக்கம் ஏற்படச்செய்யும் வகையில் இவர் சு(வி)டும் டுமீல்கள் நிலைகுலையச் செய்யும் திறன் கொண்டவை.
மாதிரிக்கு சில டுமீல்கள். படிப்பவர்களின் வசதிக்காக டுமீல் பாண்டியின் டுமீல்கள் கருப்பு வண்ணத்திலும் உண்மை நிலவரம் நீல வண்ணத்தில் அடைப்புக் குறியிலும் தரப்பட்டுள்ளன.
டுமீல் 1. டுமீல் பாண்டி ஆறாம் வகுப்பு படிக்கும்போது பள்ளியில் கொடைக்கானலுக்கு சுற்றுல்லா சென்றார்களாம். அங்கு இவரை ஒரு மலைப்பாம்பு கவ்வி விழுங்க முயற்சி செய்ததாம். டுமீல் பாண்டி தன்னிடமிருந்த காம்பஸ் உதவியுடன் பாம்பை கிழித்துக் கொண்றாராம். (சுற்றுலாவில் செத்த பாம்பு ஒன்றினை வழியில் பார்த்த டுமீல் தன் டிரவுசரில் இருந்த சேப்டி பின்னால் குத்தியிருக்கிறார்.)
டுமீல் 2. டுமீல் பாண்டி கோயமுத்தூரில் ஒரு கட்டிட காண்ட் ராக்ட் எடுத்து வேலை பார்த்திருக்கிறார். அந்த கட்டிடத்தின் மதிப்பு ஒரு கோடியாம். மேலும் இதில் சிறப்பம்சம் என்ன வெனில் அந்த ஒரு கோடி ரூபாய் கட்டிடம் ஒரு நாய்க்காக கட்டப்பட்டதாம். (ஒரு கோடி ரூபாய் கட்டிடத்தில் நாய்க்காக ஒரு பத்தாயிரம் ரூபாய் மதிப்பீட்டில் மரத்திலான் செட்டு ஒன்று மட்டுமே டுமீல் பாண்டி பார்த்த வேலை)
டுமீல் 3. டுமீல் பாண்டி வேலை பார்த்த ஒரு கட்டிடத்தில் இருந்து சித்தாள் ஒருவர் தவறி விழுந்து விட்டாராம். பல்வேறு மருத்துவர்கள் கைவிரித்த பின்னர் டுமீல் அவருக்கு வாய் வழியே ஒல்டு மங்க் ரம்மை குடிக்கக் கொடுத்திருக்கிறார். சித்தாள் பிழைத்துக் கொண்டாராம்.(உண்மையில் பிராந்தி விஸ்கி போன்றவையின் விலை ஏற்றத்தால் பாதிக்கப்பட்ட டுமீல் தற்போது அடிப்பது ஓல்ட் மங்க் மட்டுமே. எனவே ஓல்ட் மங்கின் பெருமை கூறவே இந்த டுமீல்).
டுமீல் 4. முன் சொன்னது போல் மருத்துவர்களால் கைவிடப்பட்ட ஒரு தீராத நோயை தீர்த்த அனுபவம் டுமீலுக்கு உண்டு. அது என்னவென்றால் ஒரு நோயாளி நீண்ட நாள்கள் தலையில் அரிவாள் வெட்டுப்பட்டக் காயத்தில் புழுக்கள் வந்து அவதிப்பட்டு வந்தாராம். எந்த மருத்துவராலும் அந்த புழுக்களை அகற்ற முடியவில்லையாம். டுமீல் பாண்டி ஆட்டுக்கறியின் தொடைக்கறியை 200 கிராம் வாங்கிவரச் செய்து அதனை புழுக்கள் உள்ள காயத்தில் வாழை மட்டை வைத்துக் கட்டி விட்டாராம். ஒரு மணி நேரத்தில் புழுக்கள் எல்லாம் கறியில் ஏறி விட இவர் நோயாளியை குணப்படுத்தினாராம் (டுமீல் கறிக்கடையில் தலைக்கறி வாங்க சென்று இருந்திருக்கிறார். அங்கு ஆட்டின் தலையில் அடம் பிடித்துக் கொண்டு வராமல் இருக்கும் புழுக்களை அகற்றும் போது பார்த்திருக்கிறார்.)
டுமீல் 5. டுமீலின் அண்ணன் மகளுக்கு திருமணம் நிச்சயமாகி இருந்திருக்கிறது.மாப்பிள்ளை வீட்டில் 100 பவுண் நகை கேட்டார்களாம். ஆனால் கையில் கொஞ்சம் கூட காசு இல்லை. டுமீலின் அண்ணன் மனைவி மிகவும் கவலை அடைந்திருக்கிறார். ஆனால் கவலையே படாத டுமீலும் டுமீலின் அண்ணனும் (பெரிய டுமீல்) தங்களிடம் பரம்பரை பரம்பரையாக இருந்து வந்த குவைகளின் ஒரு பகுதியை (பொற்கொல்லர் தங்கம் உருக்கப் பயன்படுத்தும் ஒரு மண்ணால் ஆன குவளை) உடைத்து உருக்கினராம். 100 பவுனுக்கு மேலேயே தங்கம் கிடைக்க அதை வைத்து ஜாம் ஜாம் என கல்யாணத்தினை நடத்தினராம். (உண்மையில் பெண் பிடித்துப் போன மாப்பிள்ளை வீட்டார் பத்துப் பவுனுக்குமேல் பரிசம் போட்டு தங்கள் செலவிலேயே திருமணத்தினை நடத்தினராம்).
டுமீல் பாண்டியின் டுமீல்களை கையும் களவுமாக பிடித்து அம்பலப் படுத்தினாலும் டுமீல் தன் டுமீல்களை விடுவதில்லை. இந்தப் பதிவுகூட டுமீலின் ஒப்புதலின் பேரிலேயே வெளியிடப்படுகிறது.

வியாழன், 11 பிப்ரவரி, 2010

பாம்பு புடிச்சா பத்து லட்சம்


அந்த இருட்டில் டார்ச் அடித்து மலைச்சாமி எதையோ தேடிக் கொண்டிருந்தது கடைவீதியில் இருந்து வீடு திரும்பிய சண்முகத்திற்கு வியப்பாக இருந்தது.

மலைச்சாமி சண்முகத்தின் சகலை. ஆரம்பப் பள்ளி ஒன்றில் ஆசிரியர். சனி ஞாயிறு விடுமுறைகளில் சண்முகத்தின் வீட்டில் வந்து தங்கிச் செல்வதுண்டு.
"என்ன தம்பி தேடுறீங்க எதையாவது பணத்த தொலச்சிட்டிங்களா"?
"இல்லண்ணே ஒரு பாம்பு வந்துச்சு அதத்தான் தேடிக்கிட்டு இருக்கேன்"
ஊரின் ஆரம்பத்தில் இருந்தது சண்முகத்தின் வீடு. கட்டி ஐந்து வருடம் ஆகி விட்டது. சுற்றிலும் தென்னை மரத்தோப்புகள், வீடு கட்டி வந்த காலம் தொட்டு பாம்பு ஏதும் சுற்றுப்புறத்தில் யாரும் பார்த்ததில்லை.
"என்ன தம்பி சொல்லுறிங்க பாம்பா பாத்தவுடனே அடிக்கக் கூடாதா" சிறுபிள்ளைகள் வீட்டில் இருப்பதால் சண்முகம் கவலையடைந்தான்.
"அடிக்கக்கூடாதுன்னே இந்த பாம்பு இருதலை மணியன் மாதிரி இருக்கு இத உயிரோட பிடிச்சுக் கொடுத்தா பத்து லட்ச ரூவா வரை கிடைக்கும்"
"எந்த கேனையன் தம்பி இதச் சொன்னான்"
"ச்சூ சும்மா இருங்கன்னே எங்கூட வேலைப் பார்க்குற வாத்தியாரோட மாமாதான் இதச் சொன்னாரு, இந்த மாதிரி இருதலை மணியன் பாம்புக்கு இப்ப நல்ல கிராக்கியாம். இதுல இருந்து கேன்சருக்கு மருந்து எடுக்கலாமாம்"மதிலோரமாகத் தேடிக்கொண்டே மலைச்சாமி கூறினான்.
சண்முகத்தின் மனத்திரையில் தன்னுடன் கல்லூரியில் பயின்ற சகாய ராசு வந்து போனான்.அவனும் இப்படித்தான் "கருப்புபூனை பிடிச்சா ஒரு லட்சம் கருநொச்சி செடி கிடைச்சா இரண்டு லட்சம், ஒரு மில்லியன் டாலர் நோட்டை மாத்துனா பல லட்சம்"ன்னு எப்பவும் புருடா விட்டுக்கிட்டுறுப்பான்.
"அண்ணே இங்க வந்து பாருங்க" மலைச்சாமி டார்ச் அடித்துக் காட்டிய இடத்தில் ஒரு மூண்றடி நீளமுள்ள பாம்பு மரவட்டை போல சுருண்டு படுத்துக் கிடந்தது.
"அண்ணே நான் இங்கய பாம்பு ஓடாமப் பாத்துகிறேன் நீங்க ஓடிப்போயி ஒரு அரிசிச்சாக்க எடுத்துட்டு வாங்க அப்படியே புடிச்சுடலாம்"
"தம்பி கொத்தி கித்தி வைக்கப் போகுது ஒரு குச்சிய எடுத்து அடிச்சுப் போடுங்க எதுக்குப் போயி புடிச்சுக்கிட்டு"
'அண்ணே இந்தமாதிரி பாம்பெல்லாம் கொத்தாதுன்னே, எந்த பாம்பு இரண்டு கலர் அல்லது இரண்டு டிசைனுக்கு மேல இருக்கோ அதுதான் விஷமுள்ள பாம்பு இதப் பாருங்க ஒரே கலரு ஒரே டிசைனு கொத்தாது போயி சாக்க எடுத்துட்டு வாங்க" மலைச்சாமி முனியாண்டி விலங்கியல் மூண்றாமண்டு மாதிரி பேசினான்.
சண்முகத்திற்கு கோபம் வந்தாலும் கொழுந்தியாப் புருசனாச்சேன்னு சாக்கு ஒன்னு எடுத்துட்டு வந்தான்.தவளையோ அல்லது எலியோ தின்ன மயக்கத்துல கிடந்த அந்த பாம்பு மலைச்சாமி ஒரு குச்சியை வைத்து தள்ளவும் சாக்கில் போயி சுகமாக படுத்துக் கொண்டது. சாக்கின் முனையை ஒரு சணலில் கட்டி பாம்போடு சாக்கை வீட்டுக்கு கொண்டு வந்து ஹாலில் ப்ரிட்ஜ் இருந்த ஓரத்தில் வைத்தான்.அப்புறம் செல்போனை எடுத்து யாருக்கோ பேச ஆரம்பித்தான்.
"அண்ணே பார்ட்டி வந்துகிட்டு இருக்காங்க, கண்பர்ம் பண்ணிட்டாங்கன்னா சுளையா பத்து லட்சம் கிடைக்கும் நைட்டோட நைட்டா லட்சாதிபதி ஆயிருவேன்" மலைச்சாமி உற்சாகமாக பேசினான்.
"சித்தப்பா எங்க வீட்டுலதான் பாம்ப புடிச்சுருங்கீங்க அதுனால எங்களுக்கும் பாதிக்காச கொடுத்துடனும்" சாக்கை கண் கொள்ளாமல் பார்த்துக் கொண்டிருந்த சண்முகத்தின் மகன் பேரம் பேசினான்.
அரைமணி நேரம் போயிருக்கும். வெளியே பைக் ஒன்று வந்து நிற்கும் சத்தம் கேட்டது. இரண்டு ஆசாமிகள் 40 வயதுக்கு மேல் இருக்கும். மக்களுடன் தான் கூட்டணி என்னும் மாநிலக் கட்சியின் கரை வேட்டி கட்டியிருந்தார்கள். இராம்நாடு மாவட்டத்துக்குரிய வகையில் முகத்தில் முக்கால்வாசி மீசை வைத்திருந்தார்கள்.அவர்கள் இருவரையும் ராம்நாடு பஸ் ஸ்டாண்டில் லாட்டரி சீட்டு வித்துக் கொண்டிருந்தபோது பார்த்ததாக சண்முகத்திற்கு நியாபகம்."லாட்டரிய கவர்மெண்டு ஒழிச்சதும் பய புள்ளைக இப்படி கிளம்புருச்சு போலருக்கே"ன்னு சண்முகம் நினைத்துக் கொண்டான்.
"சரக்கு எங்க தம்பி" வந்தவரில் ஒருவன் மலைச்சாமியிடம் கேட்டான்
"இந்தா இருக்குன்னே" சாக்கை அப்படியே தூக்கி அவர்களிடம் காட்டினான் மலைச்சாமி.
சாக்கைப் பிரித்து இருவரும் ஆராய்ச்சி செய்தனர். "தம்பி கண்பர்ம் இருதலை மணியனேதான். சரக்க எடுங்க இப்பவே இராம்நாடு போயி பார்ட்டியப் பாத்து பணத்த வாங்கிடுவோம்"
"அடப்பாவிகளா இவனுக பார்ட்டி கிடையாதா ஏஜண்டுக போலிருக்கே" சண்முகம் நினைத்துக் கொண்டான்.
"அண்ணே உங்க பைக்க எடுங்க ஒரு எட்டு ராம்நாடு போயிட்டு வந்துறலாம்" மலைச்சாமி கூறினான். மணி பதினொன்னுக்கு மேலாகி விட்டதால் ராம்நாடுக்கு பஸ் கிடையாது. தவிரவும் சரக்கை வைத்துக் கொண்டிருந்தால் சின்னப் புள்ளைகள் தூங்காது என்பதால் சண்முகம் பைக்கை எடுக்க உடன்பட்டான்.
ஒரு பைக்கில் சண்முகமும் மலைச்சாமியும் அமர்ந்து கொள்ள ஏஜண்டுகள் இருவரும் தாங்கள் வந்த பைக்கில் ஏறிக்கொண்டனர். சரக்கை மலைச்சாமி கையில் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். ஏஜண்டுகள் வழிகாட்ட அரைமணி நேரத்தில் ராம்நாடு பாரதிநகர் வந்தனர்.
உயர்தட்டு மக்கள் வசிக்கும் தெருபோல் எல்லா கட்டிடங்களும் வனப்புடன் இருந்தன. ஒரு பெரிய புதிய பங்களாவின் முன் ஏஜண்டுகள் வண்டியை நிறுத்தி அழைப்பு மணியை அழுத்தினர்.
கதவைத் திறந்த நபரை சண்முகத்திற்கு உடன் அடையாளம் பிடிபட்டது. சகாய ராசு சண்முகத்தின் கல்லூரி தோழன்.
"என்ன இந்நேரத்துல உள்ள வாங்க" என்று வரவேற்றவன் சன்முகத்தைப் பார்த்ததும் "சண்முகம் நல்லாருக்கியா"ன்னு கைப் பிடித்தான்.
மலைச்சாமி கையிலிருந்த சரக்கை சகாயராசுவிடம் காட்டினான். சரக்கப் பார்வையிட்ட சகாயராசு உதடு பிதுக்கினான்.
"வெயிட்டு ரொம்ப கம்மியா இருக்கு மூனு கிலோவுக்கு மேல இருந்தாத்தான் பத்து ரூபாக்கு மேல போகும் இப்ப வித்தா ரொம்ப கம்மியாத்தான் கேப்பாங்க, கொடுத்துட்டுப் போங்க ஒரு மண்பானையிலப் போட்டு முட்ட வெள்ளக் கருவ கொடுத்தம்னா ஒரு வாரத்துல மூனு கிலோவுக்கு மேல வந்துடும் பத்து ரூவாக்கு மேல கூட வித்துறலாம்" என்னவோ இறால் வளர்க்கிற மாதிரி சகாயராசு பேசினான்.
சகாயராசுவிடம் போன் நம்பர் வாங்கிக் கொண்டு மலைச்சாமியும் சண்முகமும் விடைப் பெற்றனர்.
ஒருவாரம் கழித்து மலைச்சாமி சோகமாக சண்முகம் வீட்டுக்கு வந்தான். "அண்ணே அந்த பாம்பு ஒடிப்போயிருச்சாம் சே கைகெட்டுனது வாய்கெட்டலியே"
"எனக்குத் தெரியாதா தம்பி இதெல்லாம் டுபாக்கூர்" சண்முகம் மலைச்சாமியை நக்கலாக பார்த்தபடி கூறினான்.
ஒரு மாதத்திற்கு அப்புறம் சண்முகம் அவன் பைக்கினை சர்வீஸ் செய்ய ராம்நாடு போயிருந்தான். பைக்கினை சர்வீஸ் செய்யக் கொடுத்து விட்டு திரும்பும் போது ராஜம் மோட்டரூக்கு பக்கத்த்தில் இருந்த டாடா சுமோ கார் ஷோரூம் வாசலில் அந்த ஏஜண்டுகள் இருவரையும் பார்த்தான். எண்ணன்னே இந்தப் பக்கம்" ஏஜண்டுகளிடம் சண்முகம் கேட்டான்.
"வண்டி ஒன்னு புக் பண்ண வந்தோம் தம்பி"
"இன்ஸ்டால்மெண்டான்னே" சண்முகம் கேட்டான்.
"இல்ல தம்பி ரெடிகேஷ்"
யோசனையுடன் வீடு திரும்பிய சண்முகத்திடம் மனைவி சொன்னாள். "என்னங்க உங்களுக்கு விசயம் தெரியுமா என் தங்கச்சி புருசன்{மலைச்சாமி} டிராக்டர் ஒன்னு வாங்கியிருக்காராம். தீடிருன்னு ஏது அவருகிட்ட இம்புட்டு காசு"
இப்பல்லாம் இருட்டானதும் சண்முகம் டார்ச்சு ஒன்னு எடுத்துக்கிட்டு மதிலோரமா தேடிக்கிட்டு இருக்கான்.

திங்கள், 8 பிப்ரவரி, 2010

BRMS பட்டப்படிப்பை வரவேற்போம்

கிராமப்புற மக்களுக்கு சிறந்த மருத்துவ சேவை அளிக்கும் பொருட்டு BRMS ( Bachelor of Rural Medicine and Surgery) என்னும் மூன்றாண்டு பட்டப் படிப்பை அறிமுகப் படுத்தப் போவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் அறிவித்துள்ளார்.
MBBS படித்து முடித்த மருத்துவர்கள் ஓராண்டு கிராமப்புறங்களில் கட்டாயமாக சேவை செய்ய வேண்டும் என முன்னாள் நடுவன் அரசு சுகாதாரத் துறை அமைச்சர் மருத்துவர் அன்புமனி அறிவித்த போது மருத்துவர்கள் தரப்பில் அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் வேறு வழியின்றி இந்த பட்டப் படிப்பை அறிமுகப் படுத்துவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.


இன்றைய காலக்கட்டத்தில் மருத்துவம் பொறியியல் போன்ற தொழில் கல்வி படித்தோர் படித்து முடித்ததும் குறுகிய காலங்களில் தாங்கள் கல்விக்காக முதலீடு செய்த பணத்தினை எடுக்கும் பொருட்டு நல்லதொரு வேலையினை நகரத்திலோ வெளிநாட்டிலோ தேடிக் கொள்கின்றனரே ஒழிய யாரும் கிராமப் புறங்களில் சேவை செய்யும் நோக்கத்தில் முன்வருவதில்லை. அப்படியே வெகுசிலர் முன் வந்தாலும் கிராம மக்களிடமிருந்து அவர்களுக்கு சரியான வரவேற்பு கிடைப்பதில்லை. காரணம் கிராம மக்களிடம் உள்ள அறியாமை மற்றும் அவர்களின் மிகக் குறைந்த வருமானம்.




MBBS மருத்துவர்கள் சோதனை என்னும் பெயரில் வசூலிக்கும் (Diagnosing Charges) கட்டணங்கள் கிராமப் புற மக்களை குறைந்த செலவில் மருத்துவம் செய்யும் RHMS DHMS என பட்டங்கள் போட்டுக் கொண்டு மருத்துவம் செய்யும் சாலையோர மருத்துவர்களை(Quack doctors) நாட வைக்கிறது.

எனது இராமநாதபுர மாவட்ட கிராமப்புறங்களிலும் இது போன்ற போலி மருத்துவர்கள் (Quack doctors) நிறைய உண்டு. நோய்களுக்கு அவர்கள் அளிக்கும் வித்தியாசமான சிகிச்சை முறைகளை எந்த வித விஞ்ஞானத்திலும் அடக்க முடியாது.


எலும்பு முறிவு ஏற்பட்டால் எம் மக்கள் செல்வது நுடங்கட்டி வலசை என்னும் ஊருக்குத்தான். இங்கு முட்டைப்பத்து என்னும் சிகிச்சை மிகப் பிரபலம். நோயாளியுடன் உதவியாள் ஒருவர் பத்து நாள் தங்கி சிகிச்சை பெற கட்டணம் வெறும் ஆயிரம் மட்டுமே. இதையே நகரில் உள்ள எலும்பு முறிவு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தால் இரத்த சோதனை யூரின் சோதனை,ECG, X ray , Scan மற்றும் அறைவாடகை மருந்து என குறைந்தது இருபதாயிரம் வேண்டும்.



நாட்பட்ட வயிற்று வலிக்கு மக்கள் செல்வது முதுகுளத்தூருக்கு. இங்குள்ள வைத்தியர் தன்னிடம் உள்ள ஒரு நீண்ட குழாய் ஒன்றை தன் வாயில் வைத்து மறு முனையை நோயாளியின் வாயில் வைத்து உறிஞ்சுகிறார். உடன் ஒரு கருப்பு நிறத்தில் ஒரு திடப் பொருளை எடுத்துக் காட்டி "இதுதான் உன் வயிற்றுக் கோளாறுக்குக் காரணம் இனி எந்த பயமுமில்லை" என வைத்தியம் செய்கிறார். இந்த வைத்தியத்திற்கு பெயர் மாந்தம் எடுப்பது.இதற்கான கட்டணம் வெறும் 100 ரூபாய் மட்டுமே. உண்மையில் அந்த திடப் பொருள் நோயாளி வயிற்றில் இருந்ததா அல்லது வைத்தியரின் வாயில் இருந்ததா என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம்.



இதே முதுகுளத்தூரில் இன்னும் ஒரு வைத்தியம் உள்ளது. அது மஞ்சள் காமாலைக்கானது. பொதுவாக கிராமங்களில் மஞ்சள் காமாலை வந்தால் கீழாநெல்லி சாறினை கொடுத்து சரிசெய்யும் வைத்தியர்களை நாடுவதுண்டு. கீழக்கரை இலட்சுமிபுரம் உச்சிப்புளி ரெயில்வே கேட் காரைக்குடி போன்ற இடங்களில் இந்த வகை வைத்தியம் மிகப் பிரபலம். ஆனால் முதுகுளத்தூர் வைத்தியம் இதற்கு மாறுபட்டது. நோயாளி உள் மருந்து உட்கொள்ள தேவையில்லை. நோயாளி வைத்தியரை நேரடியாகப் பார்க்கவும் தேவையில்லை. ஒருவகையான் வேர் ஒன்றை மருத்துவர் தருகிறார். அதை நோயாளிக்கு வேண்டிய நபர் யாரவது வாங்கி வந்து நோயாளியின் கையிலோ அல்லது கழுத்திலோ கட்டி விட்டால் போதும் மஞ்சள் காமாலை குணமாகி விடுகிறதாம்.



எங்கள் ஊர் கீழக்கரையிலும் ஒரு வினோத வைத்தியர் உண்டு அவர் பெயர் டிஸ்கோ ஆலிம்சா. டிஸ்கோ ஆடி குணமாக்குவதில்லை இவர் வியாதிகளை. மாறாக ஒரு குவளை தண்ணீரை மந்திரித்து நோயாளியின் முகத்திலும் தலையிலும் தெளிக்கிறார். இதற்கு இவர் வசூலிப்பது வெறும் முப்பது ரூபாய் மட்டுமே. வெள்ளி செவ்வாய் கிழமைகளில் இங்கு கூட்டம் "எமைக்காத கூட்டம்" என்பார்களே அப்படி ஒரு கூட்டம்.



இதெற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் ஒரு வைத்தியம். அது மாவட்ட எல்லையான பார்த்திபனூரில். இங்குள்ள சுற்றுப் புற கிராம மக்கள் முதுகு மற்றும் கழுத்து வலி வந்தால் அனுகுவது ஒரு இஸ்லாமிய முதியவரை. நோயாளி அவரது வீட்டுக்கு இரண்டு சிறிய கூழாங்கற்களை எடுத்துச் செல்ல வேண்டும். வீட்டின் முன் நின்று வைத்தியரை அழைக்க வேண்டும். அவர் வந்து "கற்களை கீழேப் போட்டுவிட்டு திரும்பிப் பாராமல் செல்லுங்கள்" என சொல்லுகிறார். அதன் படி செய்தால் முதுகு வலி மற்றும் கழுத்துவலி குணமாகிறது என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை. இதற்கு வைத்தியர் கட்டணம் ஏதும் வசூலிப்பதில்லை.



இதெல்லாம் போக "நோய்க்கும் பார் பேய்க்கும் பார்" என்னும் பழமொழி ஒன்று கிராமப் புறங்களில் பிரசித்தம். அதன்படி நோய்க்கு இதுபோல் போலி வைத்தியர்களிடம் வைத்தியம் செய்து கொண்டிருக்கும் போதே கோடாங்கி, குறிசொல்லி,துன்னூறு(திருநீறு)பொடுபவர்,கப்பலோடி முனி, ஒத்தைப்பனை முனி, முக்கு முனி, ஆலிம்சா, தர்கா என பல்வேறு நபர்களையும் துணைக்கழைப்பதுண்டு.



இதெற்கெல்லாம் மூலகாரணம் நகரங்களில் உள்ள மருத்துவமனைகள் வசூலிக்கும் கட்டணங்கள் ஏழை மக்களுக்கு எட்டாக் கனியாக இருப்பதுதான்.காய்ச்சலோ அல்லது தலைவலியோ என வரும் நோயாளிகளிடம் நகர மருத்துவர்கள் தங்களிடம் உள்ள அதி நவீன கருவிகளுக்கு வருமானம் வரும் வகையில் இரத்த சோதனை, சிறுநீர் சோதனை, X RAY , ECG, SCAN, ENDOSCOPY என கறக்கத் தவறுவதில்லை.

சிக்கலான மருத்துவத்திற்கு இவற்றைப் பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால் சாதாரன காய்ச்சல் தலைவலி அஜீரனக் கோளாறுகளுக்குக் கூட இந்த சோதனைகளை பயன்படுத்துவதால் கிராமப் புற மக்களுக்கு நகர மருத்துவங்கள் நரக மருத்துவங்களாகி விடுகிறது. ஒரு முறை சென்று சூடு கண்ட பூனைகளாகி விட்ட யாரும் வியாதி வந்தால் நகர மருத்துவர்களை நாடுவதில்லை.

அரசு மருத்துவமனைகளின் அவலங்களும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.ஊழியர்களின் அலட்சியப்போக்கும் அரசு மருத்துவ மனைகளின் நீண்ட வரிசைகளும் கிராமப்புற மக்களை இது போல் முறையற்ற போலி வைத்தியம் செய்பவர்களிடம் செல்ல வைக்கிறது.

எனவே வருமானம் குறைந்த கிராமப் புற மக்களுக்கு BRMS படித்த மருத்துவர்கள் பணியிலமர்த்தப்பட்டால் போலி மருத்துவர்களிடமிருந்து விடுதலையும் அதே நேரத்தில் பாகுபாடற்ற தரமான் சிகிச்சையும் கிடைக்கும். கிராமப் புற மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இம் மருத்துவப் படிப்பின் பாடத்திட்டம் அமைய வேண்டும். அதே போல் இவர்களை பணியிலமர்த்தும் கிராமப் புறங்களில் குறைந்த பட்சம் இரத்த சிறுநீர் பரிசோதனைகள் இலவசமாக மக்களுக்கு கிடைக்க அரசு முன் வர வேண்டும். அவ்வாறு செய்யும் பட்சத்தில் இம் மருத்துவர்களுக்கு அமோக வரவேற்பு கிராம மக்களிடமிருந்து கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.





புதன், 3 பிப்ரவரி, 2010

அதுக்கு நான் கல்யாணம் பண்ணாம இருந்துருக்கனும்.

"நீ எப்பவாது தனியா உட்கார்ந்திருக்கியாடா" தீடிர்ன்னு நண்பன் ஜாபர் கேட்டான்.

ஜாபர் என் பள்ளித்தோழன். சென்னையில் தொழில் செய்கிறான். நான் சென்னை போகும் போதெல்லாம் இவனைப் பார்க்க தவறுவதில்லை. சமீப காலமாக குண்டலினி சக்தி,ஜீவ முக்தி இப்படித்தான் பேசிக் கொண்டிருக்கிறான்.

"என்னடா கேட்டதுக்கு பதில் சொல்லு என்னைக்காவது தனியா உட்கார்ந்திருக்கியாடா" மறுபடியும் கேட்டான்.

"ஏன் இல்லை தினமும் காலையில் வெளிக்கி இருக்கும் போது தனியாத்தாண்டா உட்காந்திருக்கேன்."

"அப்ப முக்கிக்கிட்டு இருப்ப, நான் கேட்டது எந்த வித எண்ணங்களும் இல்லாம அம்மாவோட கருப்பையில் இருந்தோமே அதே மாதிரி."

"நீ என்ன சொல்ல வர்றே தியானத்தப் பத்தியா"

"ஆமா தினமும் காலையில் ஒரு பத்து நிமிசம் பத்மாசனம் போட்டு உட்கார்ந்து இரண்டு புருவ முடிச்சுக்கிடையே உள்ள மையத்தினை நோக்கி உன் மனத்த குவிச்சுப் பாரு. ஒரு வித்தியாசமான அனுபவத்த உணர்வே"

"புரியும் படியா சொல்லுடா"

"அதாவது மனுசனாப் பிறந்த எல்லோரும் ரெண்டு வித எண்ணங்களோடத்தான் இருக்கிறாங்க. ஒன்னு கடந்தகாலத்த அசைப் போட்டுகிட்டு இருக்கிறது. இது மைனஸ் 1,2,3 ....மாதிரி. இல்லன்னா அடுத்து என்ன செய்யனும்னு யோசிச்சுகிட்டு இருப்பாங்க இது +1,2,3 மாதிரி. இது மாதிரி இல்லாம நம்ம மனத்த தியானத்தின் மூலமா எந்த வித சிந்தனையும் இல்லாம ஒரு பத்து நிமிசம் 0 பூஜ்ய மனநிலைக்கு கொண்டு வந்தோம்னா அது பின்னாடி நம்முடைய ஜீவமுக்திக்கு ரொம்ப உபயோகமா இருக்கும்".

"ஜீவ முக்தியா ஏண்டா சாகப் போறதுக்கு இப்பவே பயிற்சி எடுக்கச் சொல்லுறியா?".

"ஒருவிதத்துல அப்படித்தான்னு வச்சிக்கோ. மனுசன் இறக்கும் போது அவனுக்கு ஏற்படும் வலி இருக்கே அத சொல்லவோ விவரிக்கவோ முடியாது. பொண்டாட்டி பிள்ளைங்க சொத்து சுகம் இது எல்லாம் விட்டுட்டு போறம்ன்னு ஒரு பெரிய வேதனையா இருக்கும்.ஆனா இந்த தியானத்தப் படிப்படியா செய்வதின் மூலம் உன் ஜீவன் உன் உடலை விட்டு வெளியே போய் வருவத நீ நிதர்சனமா உணரலாம். இந்தப் பயிற்சி மரணத்தினை தைரியமாக எதிர்கொள்ள வைக்கும். அது மட்டுமல்ல நீ இந்த புற உலகில் என்னவெல்லாம் சந்தோசம்ன்னு நினைக்கிறாயோ அது உனக்குள்ளேயே இருக்கு என்பதையும் நீ உணரலாம்".

"எப்படி ஐஸ்கீரீம் சாப்பிடம்ன்னு நினைச்சா அது இந்த தியானத்து மூலமா கிடைக்குமா."

"கண்டிப்பா அதுமட்டுமல்ல மாம்பழ தாகத்த தீர்த்துக்கனும்னு நினச்சாலும் சரி ஓல்ட் மங்க் குவார்ட்டர் அடிக்கனும்னு நினைச்சாலும் சரி அதுனால உனக்குக் கிடைக்கிற சந்தோசம் இந்த தியானத்து மூலமா கிடைக்கும்"ன்னு சொல்லி ஓசோ சுவாமி நித்யானந்தர் எழுதிய சில புத்தகங்களக் கொடுத்தான்.

"சரி முயற்சி செய்து பார்ப்போம், சரியா வந்துச்சுனா கருணாநிதிக்கு ஒரு கடிதம் போட்டு டாஸ்மாக் கடையெல்லாம் மூடச் சொல்லிட்டு அதுக்குப் பதிலா தியான மண்டபங்களக் கட்ட சொல்லுவோம்ன்னு நினைச்சுகிட்டு "சரிடா நீ சொன்னமாதிரியே தினமும் பத்து நிமிசம் உட்காருகிறேன் எப்ப உட்காரனும் காலையிலா மாலையிலா?"ன்னு கேட்டேன்.

"காலையிலதான் ஆனா அதுக்கு முன்னாடி காலைக்கடன்லாம் முடிச்சுகிட்டு வயித்த சுத்தமா வச்சிகிட்டு பண்ணு"ன்னான்.

ஊருக்கு வந்தவுடன் முத நாளு காலையில வெளியெல்லாம் போயிட்டு மொட்டமாடியில ஒரு பத்மாசனத்தப் போட்டு ஜாபர் சொன்னமாதிரி இரண்டு புருவமுடிச்சுகிடையே உள்ள மையத்தின நோக்கி மனசை குவிக்க ஆரம்பிச்சேன்.

"என்னங்க" தங்கமணியின் குரல்.

ஆரம்பத்துலேயே அபசகுனமா "என்னடி" என்றேன் எரிச்சலுடன்.

"இங்க வந்து பாருங்க"

கீழே வந்து பாத்தா நம்ம சேட்டைக்காரர் நடு ஹாலில் ஆய் இருந்து அதுமேல ஆட்டோ பொம்மை வச்சு ஓட்டிக்கிட்டு இருந்தாரு.

"ஏண்டி பாத்துகிட்டு இருக்கியே கழுவிவிடக்கூடாதா"

"அடுப்படியில கைவேலையா இருக்கேன்லே தூக்கிகிட்டு போயி கழுவிவிட்டு அப்படியே இத அள்ளி கொல்லையில போட்டுட்டு டெட்டால் வச்சு தரைய தேய்ச்சு விடுங்க"ன்னு அடுக்கடுக்கா பல ஆணைகள் போட்டா.

ஆணைகளை சிரமேற்கொண்டு நிறைவேற்றியதில் அன்னைக்கு தியானம் பண்ணுறதுக்கு வழியில்லாம போச்சு.

தொடர்ந்த நாள்களில்.................

"என்னங்க தண்ணிதொட்டி நிறையிற சவுண்டு கேட்குது பாருங்க போயி மோட்டர அமத்துங்க"

வாஷிங்மெசின் சத்தம் கொடுக்குது பாருங்க போயி துணியெல்லாம் எடுத்து காயப் போடுங்க"

"என்னங்க அடுப்புல சட்டிய வச்சிருக்கேன் கொல்லையில ரெண்டு கருவேப்பிலை ஒடிச்சிகிட்டு வாங்க"

"சித்த இந்த தேங்காய துருவிக் கொடுங்க"

"சித்த இந்த சின்ன வெங்காயத்த உரிச்சுக் கொடுங்க"

"சாமிபடத்துக்கு பூவப் போடுங்க"

"சேந்தி (loft) சிலாப்புல இருந்து முக்குளி சட்டிய எடுத்துக் கொடுங்க".........

@#$%##@$#@#$#@#@#@#.................................................................................

ஒருவாரம் கழிச்சு ஜாபர் போன் போட்டான். "தம்பி என்ன நான் சொன்னத முயற்சி பண்ணிப் பாத்தியா?.

என்னத்த சொல்ல தலைப்பத்தான் அவனுக்கு நான் பதிலா சொன்னேன்.