சனி, 19 பிப்ரவரி, 2011

இங்கு எல்லோருக்கும் ஒரே பண்டிகைதான்


தலைப்பைப் பார்த்தவுடன் நான் ஏதோ ஆன்மிகத்தப் பத்தி எழுதப் போறேன்னு நினைச்சுடாதிங்க. இது வேற. பொதுவா வளைகுடா நாடுகளில் வேலை செய்யும் மக்களுக்கு அவர்கள் எந்த மதத்தச் சார்ந்தவரா இருந்தாலும் அனைவரும் ஆவலோட எதிர்பார்க்கும் பண்டிகை ஒன்னே ஒன்னுதான். அதுதான் Vacation விடுமுறை.


கடன உடன வாங்கி கஷ்டப்பட்டு வெளிநாடு வர்றவுங்க அந்த கடன அடைக்கும் வரைதான் ஊரைப்பத்தி நினைக்க மாட்டாங்க. கடனை அடைச்சுட்டா எல்லோருமே ஊருக்கு எப்பப் போவோம்னு நாளை எண்ண ஆரம்பிச்சுருவாங்க.


நல்லாப் படிச்சவுங்களுக்கு விடுமுறை 6மாசத்துக்கு ஒரு தடவையோ வருசத்துக்கு ஒரு முறையோ வரும். மத்தபடி எல்லோருக்கும் 2 வருசத்துக்கு ஒரு தடவையோ அல்லது 3 வருசத்துக்கு ஒரு முறையோதான் விடுமுறை வரும். இங்கே எல்லோரும் உழைக்கிறது எல்லாம் அந்த நாளை மனசுல வச்சுக்கிட்டுத்தான்.


சில பேரு வருசக்கணக்குல ஊருப்பக்கமே போகமாட்டாங்க. ஒரே மூச்சா பத்து பதினைஞ்சு வருசம் மொத்தமா இருந்துட்டு நாலு காச சேத்துட்டு ஊருல செட்டிலாயிடலாம்னு மாங்கு மாங்குன்னு உழைப்பாங்க. பெரும்பாலும் இந்தமாதிரி ஆளுங்க பொம்பளப் பிள்ளை பெத்தவுங்களா இருப்பாங்க. இல்லன்னா அக்கா தங்கச்சியை கரை சேர்க்கிற பொறுப்புல இருப்பாங்க. இது ரெண்டும் இல்லன்னா தங்கமணி தொந்தரவு தாங்காம பிக்க பிடுங்கல் இல்லாம இருக்கனும்னு நினைகிறவுங்களா இருப்பாங்க.

வெக்கேசனுக்கு அப்ளிகேசன் போட்டுடாங்கன்னா ஒரு மாதிரி மந்திரிச்சு விட்ட கோழி மாதிரி ஆயிடுவாங்க. எங்க கம்பெனி முகாம்ல மொத்த ஜனத்தொகை 20ஆயிரத்துக்கு மேல தாண்டும். இதுல வெக்கேசனுக்கு ரெடியா இருக்குறவுங்கள அவங்க நடந்துகிறதப் பொறுத்து ஈசியா அடையாளம் கண்டு பிடிச்சுடலாம்.


வேட்டைக்காரன் வீராச்சாமி படத்தப் பத்துதடவப் பாத்த மாதிரி சிடு சிடுன்னு மூஞ்ச வச்சுகிட்டு வருசக் கணக்குல வேலைப் பாத்துகிட்டு இருந்தவன் எல்லோரையும் பாத்து சினேகிதமா சிரிக்க ஆரம்பிச்சான்னா வெக்கேசன் எண்ணம் அவன் மனசுல வந்துருச்சுன்னு அர்த்தம்.


பாண்டா மார்கெட்டுல ஒரு மிக்சியைப் பாத்தேன், மாவு அரைக்குது, காயை வெட்டுது, பழத்தப் புழியுது ரொம்ப அருமையா இருக்குன்னு எலக்ட்ரானிக் பொருள்களைப் பத்தி பேச ஆரம்பிச்சாங்கன்னா ஆளு வெக்கேசன் அப்ளை பண்ணப் போறான்னு அர்த்தம்.


சுனாமி மாதிரி சொந்தபந்தங்கள் வந்து அடிச்சுட்டுப் போறதுக்கு கோடாரித் தைலம், யார்ட்லி பவுடர்,ஹீரோ பேனா, மேக்கப் பாக்ஸ், கால்குலேட்டர், எமர்ஜென்சி லைட், டார்ச் லைட்டு, லேடிஸ் வாட்ச், செண்டு பாட்டில், நோக்கியா போன், பேண்ட் பிட்டு, டீ சர்ட்டுன்னு சிறுக சிறுக பொருட்களைச் சேர்க்க ஆரம்பிச்சானுகனா வெக்கேசன் அப்ளை பண்ணிட்டான்னு அர்த்தம்.


சாயங்காலம் வேலைவிட்டு வந்தவுடன் ஷூவைக்கூட கழட்டாம சாப்பாட்டுக்கூடத்துக்கு போயி சாப்பிட்டுத் தூங்குறவன் சாப்பாடுக்கூடம் பக்கமே தலைவச்சு படுக்க மாட்டானுக. கேட்டா என்னன்னு தெரியல வயிறு ஒரு மாதிரி மந்தமா இருக்குன்னு சொன்னான்னா அவன் வெக்கேசன் மேலிடத்துல அப்ரூவல் ஆயிருச்சுன்னு அர்த்தம்.


இன்னிக்கு தங்கம் என்ன விலை, ரியால் எக்சேஞ் ரேட் என்னன்னு கேட்டான்னா வெக்கேசனுக்கு பதினைஞ்சு நாள் இருக்குன்னு அர்த்தம்.


ஊரே அடங்குன சாம நேரத்துலயும் ஒரு மூலையாப் பாத்து நின்னுகிட்டு காதில செல்போன வச்சுகிட்டுஇந்தா வந்துருவேம்மா, வந்தவுடன் பேசிக்கலாம், வரும்போது எல்லாம் வாங்கிட்டு வர்றேன்ன்னு ஒரு மணி நேரத்துக்கு மேல பேசிக்கிட்டு இருந்தான்னா வெக்கேசனுக்கு பத்துநாள் இருக்குன்னு அர்த்தம்.


ஏர் கார்கோ நல்லதா சீ கார்க்கோ நல்லதான்னு பட்டிமன்றம் நடத்துறமாதிரி பேச ஆரம்பிச்சான்னா பயபுள்ளைக்கு வெக்கேசன் ஒரு வாரம்தான் இருக்குன்னு அர்த்தம்.

“சார் ஒரு பிளைட்டு படத்துல என் பேரைப் போட்டு தம்மாம் டூ சென்னைன்னு நாலு பிரிண்டு போட்டுத் தாங்கன்னு கேட்டான்னா நாலு நாள்தான் இருக்குன்னு அர்த்தம்.


அப்புறம் கடைசியா ஆட்டுத்தாடி மாதிரி பிரஞ்சு பியர்ட் வச்சிகிட்டு திரிஞ்சவன், ஆட்டாம் புழுக்கை மாதிரி கீழ் உதட்டுக்கு கீழே நாலு முடி வச்சிகிட்டு திரிஞ்சவன், விருமாண்டி மாதிரி கிருதாவுக்கும் மீசைக்கும் கனைக்சன் கொடுத்துட்டு திரிஞ்சவன் மழு மழுன்னு சல்மான்கான் மாதிரி சேவ் செஞ்சுட்டு கார்னியர் அல்லது காத்ரேஜ் உபயத்துல தலையை கருப்பாக்கி பள பளன்னு ஆயிட்டான்னா புரிஞ்சுகிற வேண்டியதுதான் புள்ள நாளைக்கு ஊருக்குக் கிளம்பப் போகுதுன்னு.


அப்புறம் போகும் போது எல்லோர்ட்டயும் செல் நம்பர வாங்கிட்டு ஊருக்குப் போனது போன் பண்ணுறேன்னு சொல்வானுக. ஆனா ஏர்போர்ட்டுல கால வச்சதும் எல்லா நம்பரையும் மறந்துடுவானுக. அப்புறம் நாலஞ்சு மாசம் கழிச்சு பழையபடி மந்திரிச்சு விட்ட கோழி மாதிரியே திரும்பி வருவானுக.


“ஏண்டா ஊர்ல இருக்கும்போது ஒரு போன் கூட பண்ணலன்னு கேட்டா ‘பண்ணலாம்னுதாண்டா நினைச்சேன் பயபுள்ள இந்த சிம்கார்டு தொலஞ்சுப் போச்சுடான்னு சொல்லுவானுக.

வியாழன், 17 பிப்ரவரி, 2011

இந்த வருட உலக அழகி


இந்த வருட உலக அழகி

எங்க சித்தாளு சின்னாத்தா


சூப்பிய முலையில் பால்

சுரக்க வழியில்லாம- கை

சூப்பி பசியாறும் குழந்தையை

இடையில் வச்சு


வாட்டிடும் வறுமை பாரத்த

சுமக்க வேண்டி- தலை

சும்மாட்டில்

வண்டி பாரம் போல்

செங்கல் ஏந்தி


அடுக்கு மாடிகளின்

நெடுக்குப் படிகளிலே

சிறுத்தைப் புலியெனெ இவள்

நடக்கும் நடையழகுக்கு


உடுக்கை இடையினிலே

தளுக்கு உடையணிந்து

மினுக்கும் மேடையிலே

சுளுக்கு வந்தது போல்


சிலர் நடக்கும் பூனை நடை

எந்த காலத்திலும்

பொருத்தமாகாதய்யா

பொருத்தமாகாது.


உலக அழகியின்னா- சில

உத்தரவாதம் வேணுமாமே?

அறிவு கேள்விகளுக்கு

அழகாய் பதில் சொல்லனுமாமே.


நானும் கேட்டுப்புட்டேன்

நல்ல கேள்வி ஒன்னு

நாலு குணம் கொண்ட எங்க

நங்கை சின்னாத்தாளிடம்


சின்னாத்தா சின்னாத்தா

பதில்

சொல்லாத்தா சொல்லாத்தா


உழைச்சுப் பிழைக்காம

ஏழை வயித்தில்

அடிச்சுப் பிழைக்கும் இந்த

உளுத்துப்போன அரசியல்வாதிகள்


உடனே திருந்தி

உருப்பட்டுப் போறதுக்கு

உடனடி யோசனை ஒன்னு

சொல்லு சொல்லு.


உழைச்சுப் பிழைக்கும்

பாட்டாளி மக்களோட

உழக்கு மூத்திரத்த தினம்

குடிக்கச் சொல்லு - இது

இந்த வருட உலக

அழகியோட பதிலு பதிலு.


வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

வெள்ளிக் கிழமை

அலாரம் அடிக்காமல்

கலைகிறது உறக்கம்.


அடுத்தவன் காத்திருப்பான் என்ற

அச்சமில்லை கழிவறையில்


உறைந்து போன முதுகின்

அழுக்குக்கு விடுதலை.


உப்பு இது உறைப்பு இது என

நாக்கு உணரத் தலைப்படுகிறது.


கருத்த மீசைக்காட்டில்

முளைத்த வெள்ளைப் பூக்களை

கவணித்துப் பறிக்க முடிகிறது


ஆறு நாள் மறந்து போன

ஆறுமுகத்திற்கு

ஐந்து நிமிடம் ஒதுக்க முடிகிறது.


கண்ட்ரோல் சியிலும்

கண்ட்ரோல் வியிலும்

களைப்படைந்த விரல்கள்

காப்பிக் கோப்பையை பிடித்திருக்கிறது.


இரக்கமில்லாமல்

“இரு அப்புறம் பேசுகிறேன்

எனத் துண்டிக்கும் தொடர்பு

என்னமா வேறு என்ன விசயம்என

இணக்கமாய் நீள்கிறது.


சிவப்பு விளக்கு காத்திருப்பில்

ஊர் பற்றி சிந்தனை இல்லை.

பச்சை விளக்கு கண்டதும்

பரபரப்பும் வருவதில்லை.


இங்கே வா அங்கே போ

எனும் ஏவல் மொழிகள்

காதில் கேட்கவில்லை


இன்று குளிர் அதிகம் என்று

எவரிடமும் சம்பிரதாயப்

பேச்சு ஆரம்பிக்கவில்லை

.

இரும்புச் சட்டங்களின் முன்

காத்திருக்கும் என் நிசான் குதிரை

அரும்பு விட்ட பூக்களின் முன்

இளைப்பாறுகிறது.

.

புதன், 9 பிப்ரவரி, 2011

வேண்டுமா தனித்தமிழ்நாடு? - எதிர் பதிவு

மூன்று நாட்களுக்கு முன்னர் நண்பர் சிவகாசிக்காரன் ராமு அவர்கள் வேண்டுமா தனித்தமிழ்நாடு என்ற தலைப்பில் ஒரு பதிவிட்டிருந்தார். படித்தவுடனேயே எதிர் பதிவு இடலாம் என நினைத்தேன். வேலைப்பளுவினால் முடியவில்லை.ஏதோ இந்தியாவுடன் ஒட்டிக் கொண்டிருப்பதால்தான் தமிழ்நாட்டுக்கு ஒரு பாதுகாப்பு என்பது போல அவரது கருத்து இருந்தது.மிகவும் வேதனை தரக்கூடிய விசயம் அது. இந்தியாவுடன் ஒட்டிக்கொண்டு இருப்பதில் எவ்வளவு நண்மை உண்டோ அதை விட 100 மடங்கு நண்மை அதை விட்டு பிரிந்து தனிநாடாகிவிட்டால் கிடைக்கும் என்பதே எனது கருத்து. இதோ அவரது கேள்விகளுக்கான பதில்.

1. சமஉரிமையோடு இருக்கும் வாய்ப்பை எல்லாம் விடுத்து தனிநாடு தான் வேண்டும் என்று பிடிவாதமாக இருந்ததால் தான் நம் இனம் அழிந்தது இங்கு மிக அருகில். கிட்டத்தட்ட நம் தமிழகத்திற்கும் இதே நிலைமை வரவேண்டுமா?

ஆரம்பமே சரியில்லையே, இலங்கையில் சிங்களவருக்கு இணையான சம உரிமை வழங்கப்பட்டிருந்தால் ஏன் விடுதலைப்புலிகள் ஆயுதம் தூக்கப் போகிறார்கள். எலி வளையானாலும் தனி வளை வேண்டும்.இந்த வடக்கத்தி மாநிலங்களுக்கு வழங்கப்படும் உரிமை தமிழனுக்கு வழங்கப்படுகிறதா? அப்படி இருந்தால் இலங்கையில் நம் இனத்தையே கொண்று கூறுபோட இந்த இந்திய அரசாங்கம் உறுதுனையாய் இருந்திருக்குமா? இல்லை தினமும் நடுக்கடலில் காக்காய் குருவிபோல் சுடப்பட்டு சாகிறானே அப்பாவித் தமிழன். அதை நிறுத்துவதற்கு எந்த நடவடிக்கையும் எடுத்தார்களா?

2. உங்களுக்கு யாரை தலைவனாக தேர்ந்து எடுப்பீர்கள்? இப்போது இருப்பவர்களில் யாருக்காவது அதற்கான தகுதி இருப்பதாய் நினைக்கிறீர்களா?

நீங்கள் இப்பொதுள்ள கருணாநிதி ஜெயல்லிதா விசயகாந்து போன்ற சினிமா கூத்தாடிகளை மனதில் வைத்துக் கொண்டு பேசுகிறார்கள். ஆறு கோடி மக்களில் தமிழனை ஆளுவதற்கு சினிமா உலகத்திலேயே ஆளைத் தேடிக் கொண்டிருந்தால் இப்படித்தான். ஏன் அய்யா அப்துல கலாம் இல்லையா. இல்லையெனில் எனக்குத் தெரிந்து நல்லகண்ணு போன்ற எளிமையான தலைவர்கள் நாட்டை ஆளக்கூடாதா? முதலில் சினிமாக் கவர்சியிலிருந்து தமிழகம் விடுபட்டால் எல்லாம் சரியாகிவிடும்.

3. நீங்கள் நினைப்பது போல் தனி தமிழ்நாடு கிடைத்ததும், அருகில் இலங்கையில் முகாம் இட்டிருக்கும் சீன மற்றும் பாகிஸ்தான் இராணுவம் லைட்டா ஒரு குண்டு வீசினால், நீங்கள் பிறிந்து வந்த இந்தியாவிடமே மீண்டும் போய் கையேந்துவீர்களா?

ஏன் அதீதமாக கற்பனை செய்கிறீர்கள். தனியாக பிரிந்து வந்து விட்டபின் நாம் இந்தியா மீது குண்டு போடாமல் இருந்தால் சரிதான். எதிரிக்கு எதிரி நண்பன் என்று கேள்விப்பட்டதில்லையா?

4. ஒரே நாடாக இருக்கும் போதே இந்த கேரளம் ஆந்திரம் கர்னாடகா காரன் எல்லாம் நீர் குடுக்கமாட்றான். தனி நாடாக மாறிவிட்டால் நீர் பீரிட்டு வந்துவிடுமோ?!

நம்மிடம் இருக்கும் மின் வளத்தினை இந்த மாநிலங்களுக்கு நாம் கூறு போடவில்லையா? தண்ணீரைக் கொடுத்தால் மின்சாரம் கொடுப்போம். கேரளாக் காரனுக்கு மீனிலிருந்து அரிசி வைக்கோல் வரை தமிழகத்தில் இருந்துதான் போகிறது அதை நிறுத்தினால் தன்னால் வழிக்கு வரப் போகிறான்கள்.

5. பெங்களூருவிலும், ஹைதராபாத்திலும் இன்னும் பிற வெளிமாநிலங்களிலும் படிக்கும், வேலை பார்க்கும் தமிழருக்கெல்லாம் இலவச விசா வாங்கிக்கொடுப்பீர்களா? அல்லது, அவர்களை அங்கிருந்து பத்திவிட்டால் அவர்களுக்கு அதே தரமான படிப்பையும், அதே வேலைவாய்ப்பையும் இங்கே ஏற்படுத்திகொடுப்பீர்களா?

ஏன் கொடுக்க முடியாது. சென்னையில் எத்தனை தெலுங்கர்கள் உள்ளனர். எத்தனை மார்வாடிகள் உள்ளனர் இப்படி தமிழ்நாடு முழுவதும் பிற மாநிலத்தவர்கள் பிழைக்க வில்லையா அவர்களை பத்திவிட்டு அவர்கள் பார்க்கும் வேலையை வெளியில் பிழைக்கும் நம்மவர்கள் தமிழ்நாடு வந்தால் கொடுக்க வேண்டியதுதான். ராஜ்தாக்கரே மகராஷ்டிராவில் செய்த்து இதுதான்.

6. இங்கே வேலை செய்யும் பிற மாநிலத்தவற்கு என்ன பதில் சொல்வீர்கள்?

மேலே உள்ள கேள்வியிலேயே இதற்கு பதில் உள்ளது.

7. வருஷத்துக்கு ஒரு தடவையாவது சபரிமலை, திருப்பதி என்று நினைத்தவுடன் சாதாரணமாக செல்லும் மக்களுக்கு அண்டை நாடுகளான கேரளம் ஆந்திரத்தோடு என்ன மாதிரி உடன்படிக்கை போட்டு அனுப்புவீர்கள்?

உள்ளூரிலேயே முருகன் கோவிலுக்கு போங்கள் என்று அனுப்ப வேண்டியதுதான். அய்யப்பன் முருகனின் தம்பிதானே, திருப்பதி பெருமாள் முருகனின் மாமனார்தான். டி.எம்.எஸ் படித்த பாடல் போல் கந்தன் காலடியை வணங்கினால் கடவுள்கள் யாவரையும் வணங்கியதுபோல்தான்.

8.ஏற்கனவே பெட்ரோலுக்கு யானை விலை இருக்கிறது. இந்த நிலையில் அதை நீங்கல் இறக்குமதி செய்து மலிவி விலைக்கு விற்று, நினைக்கவே பயமாக இருக்கிறது.

இந்திய அரசாங்கம் இறக்குமதி செய்துதானே விற்கிறது. அதுபோல் நாமும் செய்துகொள்ள வேண்டியதுதான்.

9. வெளிநாடுகளில் (குஜராத், மராட்டியம், உத்திரபிரதேசம் போன்றவை) இருந்து வரும் வியாபாரிகள் கோவை திருப்பூரில் துணியையும், ராஜபாளையத்தில் நூலையும், சிவகாசியில் பட்டாசையும் வாங்க வருவார்களா? இங்கிருந்து ஏற்றுமதி செய்வதற்கு வரி வேறு இருக்குமே?!

சிங்கப்பூர் நாடு நம் தமிழ்நாட்டைவிட பரப்பளவில் சிறியதுதான். ஆனாலும் வணிகம் செய்து லாபம் ஈட்டவில்லையா. மத்திய அரசுக்கு போகும் வரிவருவாய் தனிதமிழ்நாடாகிவிட்டால் குறையும் அல்லவா அதை வைத்து சமாளித்துக் கொள்ளவேண்டியதுதான்.

10. தினமும் 'சர், சர்' என்று செல்லும் பைக் இறக்குமதி செய்து தான் விற்கவேண்டும். எல்லாமே இறக்குமதி தான்.. ஏற்றுமதி மிகவும் கம்மி தான்.

இருங்காட்டுக்கோட்டையிலும் இன்ன பிற நகரங்களிலும் கொரியா கம்பெனிகளும் மற்ற கம்பெனிகளும் கார் தயாரிக்கவில்லையா. அதுபோல் ஹோண்டா சுசுகி நிறுவன்ங்களோடு ஒப்பந்தம் போட்டால் போயிற்று.

11. தெலுங்கு சினிமாவையோ மலயாள சினிமாவையோ காப்பி அடித்து காப்பிரைட்ஸ் வழக்குவந்தால், முந்தைய நாள் பணத்தை செட்டில் செய்து படத்தை ரிலீஸ் செய்து தப்பிக்க இயலாது. அந்த நாட்டில் கழி திண்ண வேண்டியது தான்.

நாடு தனியாக வந்தவுடன் சினிமா படம் எடுப்பதையே நிறுத்திவிட்டால் இந்த மாதிரி பிரச்சினைகள் வரவே வராது. தமிழ்நாடு கெட்டு குட்டிச்சுவராய் போனது சினிமாவால்தான் என்பது எல்லோருக்கும் தெரியும்.

12. தமிழக கிரிக்கெட் அணி இந்திய அணியோடு சேப்பாக்கத்தில் மோதும்.

பெர்னாட்ஷ சொன்னது போல் பதினோரு முட்டாள்கள் விளையாடுவதை பத்தாயிரம் முட்டாள்கள் பார்க்கின்றனர். இந்த கிரிக்கெட்டு ஆடுவதை பார்க்காவிட்டால் தமிழன் செத்துப் போய் விடுவானா? சேப்பாக்க்கம் கிரவுண்டையெல்லாம் கபடி மைதானம் ஆக்கிவிட வேண்டியதுதான்.

13. அப்படி விளையாடும் கிரிகெட்டையும் நீங்கள் எந்த தொலைக்காட்சியில் பார்ப்பீர்கள்? Sony, Ten Cricket, Star Sports, ESPN எதில் பார்ப்பீர்கள்? இதெல்லாம் தெரியுமா? ஒரு வேளை sun cricket என்று எதாவது சேனல் வரலாம்.

கேள்வியிலேயே பதில் இருப்பதால் இதற்கு பதில் சொல்ல தேவையில்லை.

14. கேரளாத்தில் இருந்து கொட்டப்படும் கழிவுகளையும், ஆந்திர நக்ஸல்களையும் கர்னாடக அத்துமீறல்களையும் என்ன செய்துவிட முடியும்?

இந்தியாவுடன் ஒட்டி இருப்பதால்தானே இந்த அவலம். தனிநாடாகிவிட்டால் கொஞ்சம் மலையாளிகளுக்கும் தெலுங்கர்களுக்கும் கன்னடர்களுக்கும் பின்ன பிற வடக்கத்தி ஹிந்தி வெறியர்களுக்கும் பயம் வருவதுபோல் நடந்துகொள்ள வேண்டியதுதான்.

15. மத்திய மந்திரி சபையில் இருக்கும் தமிழக அமைச்சர்களை என்ன செய்வீர்கள்? கஷ்ட்டப்பட்டு பெற்ற பதவி அல்லவா?

அவர்களையெல்லாம் செக்கிழுக்க வைத்து அவர்கள் சுரண்டி சம்பாதித்த பணத்தை வைத்து நாலு வருட்த்துக்கு பட்ஜெட் போடவேண்டியதுதான்.

16. தமிழகத்துக்குள் இருக்கும் ரயில் பாதைகளையும் நான்கு வழிப்பாதைகளையும் அவர்கள் இடிக்க சொன்னால் என்ன செய்வீர்கள்?

இடிக்க சொன்னால் எடுத்துக் கொடுத்துவிட்டு புதிதாக போட்டுக் கொள்ள வேண்டியதுதான்.

17. மத்திய அரசில் வேளை செய்யும் தமிழக ஓழியர்களின் நிலை என்ன?

ஒரு நாடு புதிதாக உருவானால் புதிதாக பல அலுவலகங்கள் கண்டிப்பாக தேவைப்படும் மத்திய அரசில் வேலைப் பார்க்கும் தமிழர்களை எல்லாம் நம் அரசாஙக ஊழியர்கள் ஆக்கி விட வேண்டியதுதான்.

18. விலை மலிவாக இருக்கிறதே என்று நினைத்து வாங்கிப்படிக்கும் deccan chronicle, economic times போன்ற தமிழகத்தில் அச்சகம் இல்லாத பத்திரிகைகள் எல்லாம் படிக்க முடியுமா?

ஆங்கிலம் என்பது ஒரு மொழியல்ல அந்த மொழியில் பேசினால்தான் அறிவாளி என்று நினைக்கும் ஏமாளித் தமிழர்களுக்குத்தான் இது போன்ற பத்திரிக்கைகள் தேவைப்படும். பேப்பருக்கு ஆங்கில அரசு தடை விதித்த காலணி ஆதிக்க நாட்களிலேயே பழைய பேப்பரை அரைத்து தினத்தந்தி பத்திரிகையை வெளியீடு செய்த ஆதித்தனார் தமிழன் என்பதை மறந்து விடக்கூடாது

19. NDTV, AajTak போன்ற டிவிக்களை பார்த்து அறிவாளிகளாக சீன் போடமுடியுமா?

மேலே சொன்ன பதில்தான் இதற்கும் ஆங்கிலம் என்பது மொழிதான் அறிவல்ல.

20. ஆசையாக வீடு கட்டி அழகுபடுத்த கடப்பா கல், டைல்ஸ், மொசைக், கிரானைட் போன்றவைகள் வானத்தில் இருந்து நேராக வந்துவிடுமா?

வீடு கட்ட செங்கலும் சிமிண்டும்தான் முக்கியம். மானாமதுரை மஞ்சூர்போன்ற ஊர்களுக்கு வந்து பார்த்தால் தெரியும். சவுதி போன்ற பாலைவனத்தில் கடப்பாவும் டைல்சும் விளைகிறதா என்ன. ஆனால் மார்பிளோ கிரானைட்டோ இல்லாமல் இங்கே வீடு இல்லவே இல்லை. எல்லாம் இறக்குமதிதான். மேலும் ஒரு வீடு கட்டுவதற்கு அத்தியாவசியமான பொருட்கள் இவை இல்லை. இவை எல்லாம் ஆடம்பரம் மட்டுமே. கூந்தலிருக்கிறவன் அள்ளி முடிந்து போகட்டும்.

21. அட, எல்லாத்தையும் விடுங்க, என் உண்மையான கவலை எல்லாம் ஒவ்வொரு படத்திலும் அழகழகாக பிற நாட்டு அழகியை நடிக்கவைக்க முடியுமாய்யா உங்களால? இப்போ பாருங்க ஈசியா கேரளா ஃபிகரு, பாம்பே ஃபிகரு எல்லாம் வருது. அதெல்லாம் நடக்காம போயிருமேங்கிறது தான் என் உண்மையான ஆதங்கம்

11ம் கேள்விக்கான பதிலை திரும்ப படிக்கவும்.