வியாழன், 20 ஆகஸ்ட், 2009

காங்கிரீட் 1:2:4

கலவையாக பல விசயங்கள் எழுதலாம் என நினைத்தேன். காலையில் அண்ணன் "அவிய்ங்க" ராசா ஜூஸ் மிக்சர் என எழுதியிருந்தார். ஏற்கனவே கேபிள் அண்ணன் கொத்து புரோட்டா என எழுதுகிறார். வடகரை அண்ணாச்சி கதம்பம் என பேர் வைத்திருக்கிறார். எனவே எனது அவியலுக்கு காங்கிரீட் என பேர் வைத்து விட்டேன். ஏன்னா நமக்குத் தெரிஞ்சதெல்லாம் கல்லு மண்ணு சிமிட்டிதான்.
காங்கிரீட் உறுதியாகனும்னா தண்ணி ஊத்தனும்.அதே மாதிரி இந்த காங்கீரீட் உறுதியாகனும்னா உங்க ஓட்டு வேணும்னு கூறி கலவையை போடுறேன்.
------------------------------------------------------------------------------------------------
சென்னையில முன்னாடி வேலைப் பார்க்கும்போது என் நண்பன் ஜாபர் அலி இவர் ஒரு கவிஞர் அம்பத்தூர் மன்னூர்பேட்டையில் வசிப்பவர் என்னைக் கூட்டிக்கொண்டு அண்ணாசாலையில் ஆயுள் காப்பீட்டு கழகத்தின் எதிரே உள்ள ஒரு கட்டிடத்தில் வாரந்தோறும் சனி இரவு நடைபெறும் கவிதை இரவு என்னும் கவிஞர்களின் கலந்துரையாடல் நிகழ்சிக்கு அழைத்துச் செல்வார். நிகழ்சியின் சிறப்பம்சம் "உடனடி கவிதை வாசித்தல்" அரை மணிநேரத்துக்கு முன்பாக ஒரு தலைப்பு கொடுப்பார்கள் அந்த தலைப்புக்கேற்ப நீங்கள் கவிதை சொல்ல வேண்டும். புல்லின் மேல் பனித்துளி, மேகம் கலையுது,நாடு அதை நாடு, பாஞ்சாலி பத்தினி என்று ஒரு இலக்கில்லாமல் தலைப்பு இருக்கும்.
ஒருநாள் போனபோது தலைப்பு 'எனக்கும் ஒரு இடம் வேண்டும்'. அனைவரும் விண்ணிலே இடம் வேண்டும் மண்ணிலே இடம் வேண்டும் என பக்கம் பக்கமாக வாசித்தனர். ஒரு கவிதாயினி மட்டும் இரத்தின சுருக்கமாக மூண்றடிகளில் ஒரு கவிதையை வாசித்து பரிசையும் பாராட்டையும் தட்டிச்சென்றார். அந்த கவிதை
"ராணி மங்கமாள்
ஜான்சி ராணி
இந்திரா காந்தி வரிசையில்
எனக்கு ஒரு இடம் வேண்டும்"
அதற்கப்புறம் என் நண்பன் அந்த கவிதை இரவு நிகழ்சிக்கு போவதில்லை.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்த செய்தி சிறு வயதில் செய்தித் தாளில் படித்தது.
புருஷோத்தமன் என்று ஒரு கல்லூரி ஆங்கில பேராசிரியர் ஆங்கிலப்பாடத்தைப் பற்றி ஒரு நூல் எழுதி வெளியிட்டிருக்கிறார். விற்பனை மந்தமாகவும் இவர் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பும் இல்லாமல் இருந்திருக்கிறது.புத்தகத்தின் உள்ளடக்கத்தில் எந்த குறையும் இல்லை.கொஞ்சக்காலம் கழித்து அந்த புத்தகத்தில் ஒரே ஒரு மாற்றத்தினை மட்டும் செய்து மறுபதிப்பு வெளியிட விற்பனை சூடு பிடித்திருக்கிறது. அந்த மாற்றம் இதுதான்.

ஆசிரியர் தன் பெயரான புருஷோத்தமன்(PURUSOTHAMAN) என்பதை ஆங்கிலத்தில் தலைகீழாக எழுதி (NAMAHTOSURUP) வெளியிட்டுள்ளார். நமஹ்டோசுருப் என்னும் போது யாரோ வெளிநாட்டினைச் சேர்ந்தவர் எழுதியது போல் உள்ளது அல்லவா எப்படி இந்த யுக்தி.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

சென்னையில் மந்தை வெளி இராமகிருட்டின மட சாலையில் தொழிற்கல்வி பயின்றவர்களுக்கான வேலை வாய்ப்பு அலுவலகம் உள்ளது. தமிழ் நாடு முழுமைக்கும் அது ஒன்றே அலுவலகம். மூண்றாண்டுகளுக்கு ஒருமுறை மறுபதிவு செய்ய வேண்டும். ஒருநாள் நான் மறுபதிவு செய்ய போயிருந்தேன். படிவத்தை பூர்த்தி செய்து அலுவலரிடம் கையொப்பம் பெற காத்திருக்கும் போது என் அருகில் இரண்டு பேர் அவர்கள் படிவத்தில் ஒரு சந்தேகம் கேட்டனர். இருவரும் மருத்துவ படிப்பு படித்த மருத்துவர்கள்.படிவம் முழுவதும் தமிழிலேயே இருந்ததால் அவர்களுக்கு பூர்த்தி செய்வதில் சிரமம் இருந்ததாக புரிந்தது. படிவத்தினைப் பார்க்கும்போது அதில் ஏற்கனவே சில விபரங்களை பூர்த்தி செய்திருந்தனர். அதில் சமயம் என்பதற்கு நேராக 11.10AM என்று எழுதியிருந்தனர். நான் சிரித்துக்கொண்டே அவர்களிடம் அதற்கு விளக்கம் கேட்டபோது அவர்கள் சொன்னது "இது வேலைவாய்ப்பு அலுவலகம் என்பதால் பதிவு மூப்பு அடிப்படையில் வேலை கொடுப்பதற்காக நாங்கள் நேரத்தை குறிப்பிட்டிருக்கிறோம்' என விளக்கமளித்தார்கள். பின் அவர்களுக்கு சமயம் என்றால் தமிழில் மதம் என்னும் பொருள் உண்டு என விளக்கி அவர்களை படிவத்தை திருத்தச் செய்தேன்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

தமிழில் பல்வேறு மொழிகளின் கலப்பு இருப்பது போல ஆங்கிலத்திலும் மற்ற மொழிகளின் கலப்பு இருக்க வேண்டும் என நான் கருதுகிறேன். அந்த வகையில் ஆங்கிலத்தில் இந்த வார்த்தைகளுக்கு ஆதிமூலமாக இருப்பது தமிழே என நான் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறேன்.
பூப்பெய்தல் = Pubertal
பெற்றோர் ஒத்தல்/சம்மதித்தல் (நிச்சயதார்த்தம்)=Betrothal
நாவாய் (கடல் படை) =Navy
கட்டுமரம் (சிறுபடகு)=Catamaran
இதிலிருந்து முதலில் கடல் கடந்தவனும் கலாச்சாரமும் ஒழுங்கும் உடைய முதல் மனிதன் தமிழனே என புரிகிறது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

1 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

very nice

கருத்துரையிடுக

ஏதாவது சொல்லிட்டு போங்க