ஞாயிறு, 13 அக்டோபர், 2013

நாயின் வாயைக் கட்டினோம்


கீழக்கரையில் ஒரு ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஒன்று இருக்கும். அந்த வகையில் நான் ஹமீதியா மேனிலைப் பள்ளியில் பத்தாவது படிக்கும் போது ஐந்து வருத்தப்படாத வாலிபர்கள் இருந்தோம். ஹமீதியா பள்ளியின் ஆசிரியர் ஓ எஸ் அப்துல் ரஹ்மான் அவர்களின் புதல்வர் ஜாபர் அலி அந்த வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் தலைவர். புலவர் முஸ்தபாவின் மருமகன் செய்யது ஹமிது சுல்தான் சங்கத்தின் பொருளாளர். (இவர்கிட்டதான் அப்ப காசு இருக்கும்) சிட்டி கன்சல்டண்ட் பொறியாளர் ஆசாத் ஹமித் நான் கீழக்கரை நூலகர் திரு அழகுமலை மகன் பொறியாளர் மீனாட்சி சுந்தரம் இவர்கள் உறுப்பினர்கள்.

சங்கக் கூட்டம் கடற்கரையில்தான் நடக்கும் அலை அடிக்காமல் இருந்தால் ஐந்தாம் பாலத்திலும் அலை ரொம்ப அடித்தால் கஸ்டம்ஸ் ஆபிஸின் சரிவு சுவரிலும் நடக்கும். அப்சரா தியேட்டருக்கு எதிரில் ஒரு பெட்டிக்கடையில் சுண்டல் விற்பார்கள் அதை ஆளுக்கொரு பொட்டலம் வாங்கி பாலத்தில் வந்து உட்கார்ந்தோம் என்றால் கஸ்டம்ஸ்காரர்கள் வந்து திட்டும் வரை பேசிக் கொண்டிருப்போம். சில நேரம் பாலத்திலிருந்து செருப்பை கடலில் வீசுவது பின் அது கரை ஒதுங்கினால் கரையில் போய் எடுத்துக் கொளவது கரையில் ஒதுங்காமல் கடல் அலையில் அடித்துச் சென்றால் சட்டையைக் கழட்டி பாலத்தில் போட்டு விட்டு நீந்தி போய் அந்த செருப்பைப் போய் எடுப்பது என சாகசமெல்லாம் செய்து கொண்டிருந்தோம்.

அப்போது கடற்கரையில் ஒரு பெட்ரோல் பேங்க் இருந்த்தது. மீனவர்களுக்காக டீசல் மட்டும் வியாபாரம். அந்த் பங்கில் ஒரு வெள்ளை நாய் ஒன்று கட்டப் பட்டிருக்கும் அந்த நாய் எங்களைப் பார்த்தால் மட்டும் அப்படி ஒரு குரை குரைக்கும். இதில் கோபமடைந்த எங்கள் சங்கத் தலைவர் அந்த நாயை என்ன செய்யலாம் என ஆராய்சியில் இறங்கினார். மீனாட்சி சுந்தரம் ஒரு ஆலோசனை சொன்னார் நூலகத்தில் நாயின் வாயைக் கட்ட மணீமேகலை பிரசுரம் புத்தகம் ஒன்றை பார்த்ததாகவும் அந்த புத்தகத்தில் உள்ள மந்திரத்தை செபித்து அந்த நாயின் வாயைக் கட்டலாம் என அரிய ஆலோசனை வழங்கினார்.

சொன்னபடியே அந்த புத்தகத்தினை கடற்கரைக்கு கொண்டு வந்தார், அதில் குரைத்து வரும் நாயின் வாயைக் கட்ட, நமது காலடி மண்ணை எடுத்து, நீலி, சூலி, ஆகாச பாலி,கட்டு ஓம் நன்றாகக் கட்டு கட்டு எனக் கூறி நாய் முன் வீசினால் நாய் குரைக்க இயலாது என குறிக்கப்பட்டிருந்தது. இந்த மந்திரத்தினை நாய் முன் செபித்து அதன் வாயைக் கட்டும் மிகப் பெரிய பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டது.ஏன் எனில் எனக்கு மனப்பாட சக்தி அதிகம் என சங்கத் தலைவர் நம்பியிருந்தார்.

ரொம்ப பாதுகாப்பாக நாயைக் கட்டியிருந்த இடத்தில் இருந்து நாற்பதடி தூரத்தில் நின்று கொண்டு காலடி மண்ணை எடுத்து மந்திரத்தினை ஓதி நாயை நோக்கி எறிந்தோம். காலடி மண்ணில் ஒரு கல் இருந்திருக்கும் போலிருக்கிறது. அடிபட்ட நாய் முன்னை விட வள் வள் என குலைக்க ஆரம்பித்தது. கோபமடைந்த பெட்ரோல் பங்க் ஊழியர் நாயை அவிழ்த்து விட்டார். இப்போது ஐஸ் கம்பெனியை நோக்கி நாய்க்கும் எங்கள் ஐந்து பேருக்கும் ஒட்டப் பந்தயம் நடக்க ஆரம்பித்தது. நானும் மீனாட்சி சுந்தரமும் பின்னாங்கால் பிடறிபட ஐஸ் கம்பெனியிலிருந்து மீன் மார்க்கெட்டு செல்லும் வலதுப் பக்க பாதையில் ஓடி விட்டோம் சங்கத் தலைவர் இடது பக்கத்தில் கடற்கரைக்கு செல்லும் பாதையில் ஓடி விட்டார். மாட்டிக் கொண்டது ஆசாத்தும் சுல்தானும் ஆசாத் சற்றே உயரமானவர் என்பதால் ஐஸ் கம்பெனி ஓரத்திலிருந்த கருவேல் மரத்தின் கிளையினைப் பிடித்து ஐஸ் கம்பெனி காம்பவுண்ட் சுவரில் ஏறி விட்டார் நாய் இப்போது சுல்தானை பார்த்து முறைக்க தொடங்கியது.

காக்கா உடனே ஒரு காரியம் செய்தார். நாயைக் கட்டும் மந்திரம் உள்ள மணிமேகலைப் பிரசுர புத்தகம் அவர் கையில்தான் இருந்தது. அதை வைத்து நாயின் வாயை நோக்கி ஓங்கி அடித்தார். அவ்வளவுதான் நாய் பின்னங்கால் பிடறிபட திரும்பி பெட்ரோல் பங்க் சென்று விட்டது.


அதற்கு பின்னால் எங்களைப் பார்த்து அது குரைப்பதில்லை. மந்திரத்தினால் பயனில்லை என்றாலும் மந்திரப் புத்தகம் நாயின் வாயைக் கட்டி விட்டது.