ஞாயிறு, 12 ஜூன், 2011

பாம்பென்றால் படையும் நடுங்கும்


எனக்கு நாகேந்திரன் என்று பெயர் வைத்தது எப்படி என என் அம்மா ஒரு கதை சொல்வார்கள். நான் பிறந்து முப்பது நாள் கழித்து புண்ணியாணம் (பெயர் சூட்டுவதற்காக) செய்வதற்கு நாள் குறித்து ஊரு சனமெல்லாம் கூடி அய்யர் வரவுக்காக காத்திருந்தார்களாம். அப்போது என் தாய் மாமனார் என்னைத் தூக்குவதற்காக சற்றே தொட்டிலை விலக்கினாராம். பார்த்தால் அங்கு ஒரு இரு தலை மணியன் பாம்பு தொட்டிலில் என்னோடு சேர்ந்து படுத்திருந்ததாம். உடன் என் மாமா பாம்பை அடித்துக் கொண்றாராம். சில நிமிடம் கழித்து வந்த அய்யர் இந்த சம்பவத்தினை கேள்விப்பட்டு கழுத்தில் பாம்பை மாலையாக அணிந்துள்ள சாட்சாத் சிவபெருமானின் அம்சம் என நம்மைக் கருதி நாகேந்திரன் என நாமம் சூட்டினாராம்.

இதற்கப்புறம் வளர்ந்து வாலிபன் ஆன வரை சினிமாவைத் தவிர பாம்பை நேரில் கண்டதில்லை. கல்லூரியில் பயின்று கொண்டிருந்த போது தேர்வுகளுக்கு இரவு கண் விழித்துப் படிப்பது வழக்கம். காலையில் தேர்வு எழுதி வந்ததும் உணவு அருந்திவிட்டு இரவு எட்டு மணிவரைக்கும் உறக்கம் கொண்டு பின் எழுந்து மறுநாள் தேர்வுகளுக்காக படிப்பது உண்டு. அப்படி ஒரு நாள் பகலில் துயில் கொண்டிருந்த போது என் தாயார் என்னை எழுப்பினார்கள். “டேய் அடுப்படிக்குள் ஒரு பாம்பு உள்ளே போயிருக்கு வந்து அடிடான்னு. அந்த அடுப்படி மிகவும் குறுகிய அடுப்படி. அதற்குள் போய் பாம்பை தேடும் போது கொத்திவிட்டால் பயம் பிடுங்கித் தள்ள நான் என் அம்மாவிடம் சள்ளென விழுந்தேன். “போங்க விடிஞ்சா எனக்குப் பரிட்சை இருக்கு இதுல பாம்பை எல்லாம் என்னால் தேடிக் கொண்டிருக்க முடியாது சொல்லிவிட்டு குப்புற படுத்துக் கொண்டேன்.

நீயெல்லாம் ஒரு ஆம்பளைப் பிள்ளைன்னு என் அம்மா திட்டிக் கொண்டே ஒரு விறகை எடுத்துக் கொண்டு அடுப்படி புகுந்தார்கள். சில நிமிடம் கடமுடா கடமுடாவென பாத்திரச் சத்தம் கேட்டது. அப்புறம் என் அம்மா அந்த பாம்பை அடித்து வெளியில் வீசி விட்டார்கள். அப்புறம் என் அப்பா வந்ததும் எனக்கு அர்ச்சனை விழுந்தது.

அப்புறம் ஒரு நாள் என் தங்கை திருமணத்திற்காக எக்ககுடி என்னும் ஊரில் உறவினருக்கு பத்திரிக்கை கொடுக்க வேண்டியிருந்தது. நல்லாங்குடியில் இறங்கி ஒரு வாடகை மிதி வண்டியை எடுத்துக் கொண்டு எக்ககுடி நோக்கிச் சென்றேன். நடு வழியில் இயறகையின் அழைப்பிற்காக மிதி வண்டியை விட்டு இறங்கி ஒரு காட்டுக் கருவை மரத்தின் ஓரமாக ஒன் பாத் போய்கொண்டிருந்த போது நமது நீரோட்டத்தால் பாதிக்கப் பட்ட ஒரு சர்ப்பம் படம் எடுத்து என்னை ஒரு முறை முறைத்தது. ஒரு கணம் இரத்த ஓட்டமெல்லாம் உறைந்து போய் மிதி வண்டியை எடுத்துக் கொண்டு திரும்ப நல்லாங்குடிக்கே வந்து விட்டேன். அப்புறம் அந்த எக்ககுடி உறவினர் எனக்கு ஏன் பத்திரிக்கை கொடுக்கவில்லை என என் தாயாரிடம் சடைக்கும் போதுதான் நான் என் அம்மாவிடம் நடந்த கதையினை சொன்னேன். நல்ல பேரு வச்சாண்டா அய்யர் உனக்கு. பாம்பைப் பார்த்தா காத தூரம் ஓடிவர்றே இதுல நீ பாம்புகளுக்கெல்லாம் தலைவனான்னு திட்டினாங்க.

அப்புறம் ஒரு நாள் நண்பர்களோடு பழனிக்கு பாத யாத்திரை சென்றேன். இரவில் வழியில் ஏதாவது கோவிலில் தங்கி விட்டு அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து காலைக் கடன் கழித்து மறுபடி பயணம் துவக்குவது வழக்கம். காரைக்குடி தாண்டி ஒரு ஊரில் இரவு தங்கி விட்டு காலையில் திறந்த வெளியில் காலைக் கடன் கழித்து காலைக் கழுவுவதற்காக அருகில் உள்ள ஒரு குளத்திற்கு சென்றேன். குளத்தின் படிக்கரையில் எனக்கு சற்று முன் சென்ற நண்பன் காலைக் கழுவாமல் நின்று கொண்டிருந்தான். “டேய் வெளிய போனா காலை சட்டுன்னு கழுவாம என்னடா யோசனைன்னு அவனைத் திட்டிக் கொண்டே குளத்தின் தண்ணீரில் காலை வைத்து உட்கார்ந்தேன் அவ்வளவுதான் என் காலை சுரீர் என ஒரு வலி தாக்கவே காலை எடுத்தால் பல் பதிந்த ஒரு தடமும் அதிலிருந்து இரத்தமும் வந்தது.

என்னைப் பார்த்து பக பகவென சிரித்த அந்த பாவி சொன்னான். நான் கழுவ வந்தபோது ஒரு பாம்பு கரையில் படுத்திருந்தது. என்னைப் பார்த்ததும் தண்ணீருக்குள் சென்றது. அதனால் கழுவுவதா வேண்டாமா என யோசித்துக் கொண்டிருக்கும் போது நீ முந்திக் கொண்டாய். மேலும் சிரித்த அந்த இளம் விலங்கியல் படித்த விலங்கு சொன்னான். கவலைப் படாதே இது தண்ணீர் பாம்புதான் விசம் ஏதும் கிடையாது. சும்மா கொஞ்ச நேரத்துக்கு வலிக்கும் அப்புறமா சரியாகிவிடும்ன்னான். அவன் சொன்னான் அத்தோடு ஒரு உபரி தகவலும் பாம்பை பற்றிச் சொன்னான்.

skin pattern)
உள்ளதோ அது விசமில்லாத பாம்பு. ஒன்றுக்கு மேல் கலரும் டிசைனும் இருந்தால் அது விசமுடைய பாம்பு. அவன் சொன்ன மாதிரியே கொஞ்ச நேரம் கழித்து வலி குறைந்து விட்டது.

அதுக்கப்புறம் திருமணம் முடிந்து மாமியார் வீட்டுக்கு ஒரு நாள் சென்று இருந்தேன். மாமியார் வீடு மண்டபத்தில் (ராமேஸ்வரம் அருகில்) மல்லிகை தோட்டம் ஏராளம். என் மாமியார் வீட்டின் கொல்லையிலும் மல்லிகை தோட்டமும் கனகாம்பரத் தோட்டமும் உண்டு. கொல்லையின் ஓரத்தில் கிணறும் கழிப்பறையும் உண்டு. இரவு எட்டு மணி இருக்கும். தங்கமணியிடமிருந்து ஒரு குரல் வந்தது.

என்னங்க இங்க சித்த வாங்க டாய்லெட்டுக்குள்ள ஒரு பாம்பு போயிருக்கு வந்து அடிங்கன்னு. விடிஞ்சா பரிட்சைன்னு எங்கம்மாகிட்ட சொன்னமாதிரி இவகிட்ட எதுவும் சொல்ல முடியாதேன்னு பயம் மனதை கவ்வியது. மல்லிகைத் தோட்டத்தில் நல்ல பாம்பு நடமாட்டம் அதிகமாக இருக்கும் என கேள்விப் பட்டிருக்கிறேன். மாமியார் வீட்டில் மானம் போகப் போகிறது என நினைத்தாலும் மனதை தேற்றிக் கொண்டு “எவ்வளவு நீளம் இருக்கும் என்ன கலர் எத்தனை டிசைன் இருந்தது என கேள்விக் கணைகளை தங்கமணியிடம் தொடுத்தேன்.

{இப்படின்னு பார்க்குறதுக்குள்ள ஓடி ஒளிஞ்சிருச்சுங்க என்னத்த கண்டேன் ஆனா ஒரே கலர்தான் நிறைய கலர் இல்லன்னு தங்கமணி என் வயிற்றில் பால் வார்த்தாள். அப்பாடா விசமில்லாத பாம்புதான்னு சந்தோசப் பட்டுகிட்டு பக்கத்தில் இருந்த கொய்யா மரத்தில் ஒரு கொப்பை ஒடித்துக் கொண்டு டாய்லெட் கதவை மெதுவாக திறந்தேன்.

உள்ளே நான் அடிக்காவிட்டாலும் அதுவாகவே செத்துப் போகிறமாதிரி ஒரு சின்னப் பாம்பு படுத்திருந்தது. குச்சியை வைத்து தலையில் ஒரு தட்டு தட்டவும் பொட்டென்று உயிரை விட்டது. அப்புறம் தங்கமணி அவர்களின் அம்மாவிடம் நான் பாம்பை அடித்த கதையை டமாரம் அடிக்க என் மாமியார் அந்த பாம்பை பார்த்து விட்டு அய்ய இது வெறும் ஓலைப் பாம்புதான் உன் வீட்டுக்காரர் மலைப் பாம்பை அடித்த மாதிரி பெருமை பட்டுக் கொள்ளாதேன்னு ஒரு முற்றுப் புள்ளி வைத்தார்.

இருந்தாலும் தங்கமணி அந்த இரவு நேரத்திலும் ஒரு தொலை பேசி அழைப்பைப் போட்டு என் அம்மாவிடம் இந்த விசயத்தினை சொல்ல உடனே எங்கம்மா “பெத்த தாய் பாம்படிக்க கூப்பிட்ட போது பரிட்சை இருக்குன்னு குப்புற படுத்தவன் இப்ப பொண்டாட்டி சொன்னதும் பாம்பை அடிச்சானா ? சரிதான் கல்யானம் ஆனது எல்லாப் பயலும் மாறித்தான் போயிரானுக வரட்டும் நேரில அவன வச்சிக்கிரேன்ன்னு எனக்கு ஒரு பாராட்டுப் பத்திரம் வாசிச்சாங்க.

திங்கள், 11 ஏப்ரல், 2011

விரலில் மை வைக்கும் முன்

இதோ இரண்டு நாளில் தேர்தல் வரப் போகிறது. மறுபடியும் ஏமாறவும் ஏமாற்றப் படவும் மக்கள் தயாராகி விட்டனர். இந்த நேரத்தில் எனக்குத் தெரிந்து சில கருத்துக்களை இந்த பதிவின் மூலம் முன் வைக்கலாம் என நினைக்கிறேன். இதனால் பெரிய மாற்றம் ஏதும் வந்து விடாது என எனக்குத் தெரியும்.இது தனிப்பட்ட எனது கருத்து மட்டும்.

மூன்றாவது அணி என பெரிதாக எதுவும் இல்லாமல் நடக்க இருக்கின்ற தேர்தல் உண்மையிலேயே திமுகவா அல்லது அதிமுகவா இந்த இரண்டு சனியன்களில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுக்கிற கட்டாயத்தில் மக்கள் உள்ளனர்.

ஒரு பக்கம் அதிமுக கூட்டணி. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பது கட்சியின் பெயர். தலைவியோ ஆரிய பெண்மணி. எப்படி ஒரு பிள்ளை சமுதாயத்தை சேர்ந்தவர் தலித் சமுதாயத்தை முன்னேற்ற முடியாதோ அதுபோல் இந்த திராவிட மந்தைகள் ஆரிய பெண்மணி பின்னால் அணி வகுத்து நிற்கின்றன. அம்மையாரின் தாய் மொழியும் தமிழ் கிடையாது. இவர் கூட கூட்டணி வைத்திருக்கும் குடிகாரருக்கும் தாய் மொழி தமிழ் கிடையாது.
இவர்கள் இருவரும் இணைந்து தமிழ் மக்களைக் காப்பாற்றப் போகின்றனராம்.

ஐந்து வருடம் கூடவே இருந்து பீரங்கி போல முழங்கிக் கொண்டிருந்த நாயுடுவை விரட்டிவிட்டு நாயக்கரை சேர்த்த காரணம் என்ன? நாயுடுவை வளர்த்த தெலுங்கு கூட்டம்தான் நாயக்கரை வளர்க்கின்றது. ஏற்கனவே தமிழ்நாட்டில் விடுதலை அடைவதற்கு முன்னால் முதல்வராக இருந்த அனுபவம் இந்த தெலுங்கு கும்பலுக்கு உண்டு. அவர்களில் யாரவது ஒரு ஆளை முன்னிறுத்தி அரசியலில் அதிகாரத்தினை மீண்டும் பெற்றால் அதை வைத்து ஆதாயம் அடையத் துடிக்கின்ற ஜெயவிலாஸ் ராம்கோ போன்ற பண முதலைகள்தான் இந்த நாயுடுவை மறுமலர்சி என்ற பெயரில் வளர்த்தது.
மறுமலர்சி தளர்ந்து போகவும் இப்போது நாயக்கரை தேசியம் என்ற பெயரில் களம் இறக்கி கன்னடத் தலைவியுடன் கூட்டணி சேர்த்து அரசியல் ஆதாயம் பெற நினைக்கிறது. இது இந்த இளிச்சவாய் தமிழ் இனத்திற்கு தெரியாமல் சினிமா கவர்சியில் மூழ்கிப் போய் ஓட்டளிக்கவும் தயாராக இருக்கிறது.

சரி நமது தமிழினத்தினை சேர்ந்தவர் என்று இந்த திமுக கூட்டணியையும் ஆதரிக்க முடியாது. இலங்கையில் தமிழனத்தினை ஒழித்துக் கட்டியவர்கள்தான் இந்த தமிழ் துரோகிகள். விரோதியை மன்னித்தாலும் இந்த துரோகிகளை மன்னிக்கவே கூடாது.

எனவே உண்மையிலேயே தமிழ் மேல் பற்று கொண்டவர்கள் தமிழைத் தாய்மொழியாக கொண்டவர்கள் அனைவரும் தங்களது தொகுதியில் இந்த இருவரையும் கவனமாக தவிர்த்து எவன் பச்சைத் தமிழனாக சுயேட்சையாக நிற்கின்றானோ அவருக்கு வாக்களிக்க வேண்டும்.

அதே போல் வாக்களிக்கும் தினத்தன்று விடுமறை போல் வீட்டிலேயே படுத்துக் கொண்டு வாக்களிக்காமல் இருக்கும் 30 சதவீத கும்பல் ஒன்று எல்லாத் தேர்தலிலும் உண்டு. இந்த கும்பலினால்தான் சிலரது தலையெழுத்து மாறிப் போய் விடுகிறது. அனேகமாக இது மேல்தட்டு வர்க்கமாகத்தான் இருக்க முடியும். இவர்களை வாக்குச் சாவடிக்கு கொண்டு வரவேண்டும்.

வாக்களிக்கும் போது சான்றாக ஒரு அட்டை ஒன்றை வழங்க வேண்டும். அந்த அட்டை இருந்தால் தான் குடிமைப் பொருள் முதல் வங்கி கணக்கு துவங்குவது, கடவுச்சீட்டு பெறுவது, கல்லூரியில் சேர்வது இன்ன பிற அனைத்து அரசு துறை நடவடிக்கையிலும் இந்த வாக்களித்தற்கான அட்டையில் நகலை இனைக்க வேண்டும் என அரசு ஒரு சட்டத்தினைப் பிறப்பித்தால் இந்த மேல்தட்டு வர்க்கம் அலறி அடித்துக் கொண்டு வாக்களிக்க வரும். 100 சதவீதம் வாக்குப் பதிவானால் பலபேருடைய தலையெழுத்து மாறி விடும்.

ஏன் எனில் கட்சி உறுப்பினர்களின் வாக்கு வங்கியை கொண்டே இந்த இரண்டு கழகச் சனியன்களும் காலம் காலமாக மக்களை ஏமாற்றி வருகின்றன. இதற்கு முற்றுப் புள்ளி வைக்க இதனால் மட்டுமே முடியும்.


திங்கள், 28 மார்ச், 2011

தேருபோல காரு ஓட்டி


நேற்று நிறுவனத்தில் எனக்கு புதியதொரு வாகனம் வழங்கப்பட்டது. பொறியாளர் பணியில் வாகனம் மிக அத்தியாவசியமான ஒன்று. ஆய்வுகளுக்கும் வேலை குளறுபடிகளைத் தீர்க்கவும் எந்த நேரத்திலும் பயணம் செய்ய தயாராக இருக்க வேண்டும். வாகனச் சாவியை வழங்கும் போது நிறுவன பொது மேலாளர் எனது வாகனம் ஓட்டும் திறமை குறித்து பாராட்டுக்களைத் தெரிவித்தார் (வாய்க்காலில் ஒரு நாள் விழுந்த கதை அவருக்குத் தெரியாது பாவம்)

எனது வாகனம் ஓட்டும் இப்போதைய நிலைக்கும் நான்கு வருடம் முந்திய நிலைக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. சற்றே ஒரு கொசுவர்த்தி ஏற்றி வைத்து பின்னோக்கி சென்றேன்.

வாகனம் பற்றிய எந்த அடிப்படை அறிவும் இல்லாத நிலையில் நான்கு வருடங்களுக்கு முன்னர் சென்னையில் ஒரு நேர்முகத்தேர்வுக்குச் சென்றேன். எனது சான்றிதழ்களைப் பார்த்து திருப்தி அடைந்த பிலிப்பினோ அதிகாரி இறுதியாக ‘உனக்கு வாகனம் ஓட்டத்தெரியுமா? என வினவினார்.

எங்கே தெரியவில்லை என்றால் நிராகரித்து விடுவாரோ என்ற அச்சத்திலும் எப்படியும் விசா போன்ற சம்பிராதயங்கள் முடிய ஓரிரு மாதங்கள் ஆகும் என்ற நம்பிக்கையிலும் கூசாமல் தெரியும் என பொய் பகர்ந்தேன்.சரி வரும்போது உனது இந்திய ஓட்டுனர் உரிமத்தினை கொண்டு வாஎன என்னைத் தேர்வு செய்தார் அந்த அதிகாரி.

ஊருக்கு சென்ற மறுநாளே எங்களது ஊரில் ஓட்டுனர் பள்ளி நடத்திவந்த ஒரு தம்பியை அணுகினேன். தம்பி என்று குறிப்பிடக் காரணம் அவர் நான் கல்லூரியில் பயின்றபோது பாலர் பள்ளியில் பயின்று கொண்டிருந்தார்.

LLR சான்றிதழ் வாங்கியபின்னால் ஒட்டுனர் பயிற்சி ஆரம்பமாகியது. என்னுடன் சேர்த்து எட்டுப் பேர் கீழக்கரைக்கும் இராமநாதபுரத்துக்கும் இடையில் உள்ள சாலையே பயிற்சிக் களம். மொத்தம் 16 கீமி ஒவ்வொருவருக்கும் நான்கு நான்கு கீ மீட்டராக பயிற்சி வழங்கினார். எனது முறை வந்தபோது கியர்களைப் பற்றி விளக்கிய தம்பி முதல் கியரைப் போட்டு வண்டியை எடுக்கச் சொன்னார். கியரைப் போட்டதும் வண்டி படுத்து விட்டது. “கிளட்சை மெதுவா விட்டுகிட்டே ஆக்சிலேட்டரை அழுத்துங்கண்ணேஎன்று மரியாதையாக பேசிய தம்பி தொடர்ந்து நான்கைந்து தடவை வண்டியை எடுக்க முடியாமல் போகவும் “என்னய்யா மெதுவா விடு மெதுவா விடுன்னு சொல்றேன்லஎன மரியாதையைக் குறைத்தார்.

ஒரு வழியாக சமாளித்து வண்டியை எடுத்த பின்னர் பிடிமானம் இல்லாமல் அங்கும் இங்கும் அலைய மறுபடியும் தம்பி ஒருமையில் அர்ச்சித்தார். ஓரளவு நிதானம் வந்து ஓட்ட ஆரம்பிக்கையில் போதும் உங்க 4 கீமீ கோட்டா முடிந்து விட்டது மீதியை நாளைக்கு பார்க்கலாம் எனக் கூறினார் தம்பி.

இதுபோல் தினமும் பயிற்சி எடுத்தப் பின்னர் ஒரு மாதம் கழித்து எட்டு போட வேளை வந்தது.எட்டும் ஒரு உதறலோடுதான் முடிந்தது. எனது ஓட்டுதலைப் பார்த்து உதடு பிதுக்கிய பிரேக் இன்ஸ்பெக்டர் தம்பியைக் கூப்பிட்டு காதைக் கடித்தார். எனைத் தனியே அழைத்த தம்பிஎன்னண்ணே இப்படி சொதப்புறிங்க உங்களை பாஸ் செய்யனும்னா தனியா 500 கொடுக்கனுமாம் இல்லைன்னா மறுபடி பயிற்சி எடுத்துட்டு வரச் சொல்லுறாரு எப்படி உங்க வசதின்னு தம்பி கேட்டார். எனக்கோ விசா வந்து விட்டது. ஓட்டுனர் உரிமம் ஒன்றுதான் பாக்கி. டக்குன்னு காந்தி நோட்டை தூக்கிப் போட்டுட்டேன். அடுத்த வாரத்திலேயே சவுதியும் வந்து சேர்ந்துட்டேன்.

சவுதி வந்ததும் இக்காமா (சவுதி உறைவிட உரிமம்) வர 1 மாதம் தாமதமானது. இந்த காலத்தில் நிறுவனத்தில் உள்ள ஒரு வண்டியை எடுத்துக் கொண்டு முகாமின் எதிரே ஆளில்லாத சாலை ஒன்றில் தினமும் பயிற்சி எடுத்து வந்தேன். ஒரு நாள் பயிற்சி எடுக்கும் போது அங்கு டிரய்லர் ஒன்றை நிறுத்தி ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த பாகிஸ்தான் ஓட்டுனர் ஒருவர் ‘என்னப்பா விசயம் குறுக்க நெடுக்க ஓட்டிட்டு இருக்கியே?ன்னார். நான் பயிற்சி எடுப்பதாக கூறினேன். ஊரில வண்டி ஓட்டியிருக்கியா?ன்னு கேட்டார். ஆமா நான் மாருதி கார் ஓட்டியிருக்கேன்னு ஒரு டுபாக்கூர் விட்டேன். அதுக்கு அவர் சொன்னார் நீ இதுக்கு முன்னாடி எந்த வண்டியையும் ஓட்டியிருக்க மாட்டேன்னார். உடனே நான் எனது இந்திய ஓட்டுனர் உரிமத்தை எடுத்துக் காட்டினேன். அதுக்கு அவர் சொன்னார் ‘லைசன்ஸ் கல்லிவெல்லி காசு கொடுத்தா இதுபோல ஆயிரம் லைசன்ஸ் கிடைக்கும்ன்னு சொல்லிட்டு நீ வண்டி ஓட்டுவே ஆனா பாஸ் ஆகிறதுக்கு நாள் ஆகும்ன்னு அருளாசி வழங்கினார்.

இக்காமா வந்ததும் முறையான ஆவணங்களோடு கண் பரிசோதனை முடித்து எனது நிறுவன சவுதி மக்கள் தொடர்பு அதிகாரி என்னை அல்ஹாசா மாவட்ட ஓட்டுனர் பள்ளிக்கு தேர்வுக்கு அழைத்துச் சென்றார்.

‘சாதிக் வண்டியில் உட்கார்ந்ததும் மறக்காம் சீட் பெல்டை போட்டுக்க, கண்ணாடி எல்லாம் சரியா இருக்கான்னு பாத்துக்க ஏன்னா காரில கண்ணாடிதான் ஓட்டுனருக்கு மூனாவது கண்மாதிரி அப்புறம் கிளட்சை மிதித்து கியர் நீயுட்ரல்ல இருக்கான்னு செக் பண்ணிக்க போலிஸ்காரர் போன்னு சொன்னப்புறம்தான் வண்டி எடுக்கனும். வண்டியை எந்தப் பக்கம் திருப்பினாலும் அதுக்கேத்த மாதிரி இண்டிகேட்டர் லைட்டைப் போட்டுக்க பாஸ் பண்ணிட்டேன்னா கம்ப்யூட்டர்ல ஒரு டெஸ்ட் வரும் உனக்கு இங்கிலிசு தெரியும் கம்ப்யூட்டரும் தெரியும் அதுனால் அது ஒன்னும் பிரச்சினையில்ல ஆல் தி பெஸ்ட்ன்னு ஆசி வழங்கி பள்ளியில் இறக்கி விட்டுட்டுப் போனார்.

முதல்ல சிக்னல் பத்தி அரைமணிநேரம் மன்னாகே பண்னாகேன்னு வகுப்பு எடுத்தாங்க. அதுக்கப்புறம் வரிசையா உட்கார வச்சு ஒவ்வொருத்தரா போலிஸ் கூப்பிட்டார். எனது முறை வந்தது. கந்த சஷ்டி கவசமெல்லாம் சொல்லி தயாரா இருந்த நான் அப்பன் முருகன் மேல பாரத்தப் போட்டுட்டு ஓட்டுனர் சீட்டில் உட்கார்ந்தேன். என்னுடைய இக்காமவை வாங்கிப் பார்த்த அதிகாரி “நீ மெகந்திசா (பொறியாளரா)ன்னு கேட்டார். ஆமாம்ன்னு சொல்லிட்டு சீட் பெல்டைப் போட்டு கண்ணாடிய ஒரு தடவை பார்த்துட்டு கிளட்சை செக் பண்ணிட்டு வண்டி சாவியைப் போடுறேன் வண்டி ஸ்டார்ட் ஆகல. என்னை ஒரு மாதிரியாப் பார்த்த அதிகாரி கிளட்சை அழுத்திகிட்டே சாவியைப் போடுன்னார். இது என்ன புதுசா இருக்கேன்னு அவர் சொன்ன மாதிரியே செஞ்சேன். வண்டி ஸ்டார்ட் ஆகி விட்டது. ம் போ என்று சொன்னார் அதிகாரி ஆக்சிலேட்டரை கொடுத்தா வண்டி உறுமுது ஆனா கிளம்பல. இந்த முறை தலையில் அடித்துக் கொண்ட அதிகாரி சொன்னார் “யேய் மெகந்திஸ் கியரைப் போடுன்னார்

ஆஹா இவ்வளவு நேரம் கியர் போடமலா வண்டி ஓட்டினோம் என நினைத்துக் கொண்டே கியரைப் போட்டேன். ஊருல நடந்தது மாதிரி வண்டி படுத்து விட்டது.

“சரி இறங்கு போய் கம்ப்யூட்டர் டெஸ்டுக்குப் போன்னு சொன்னார் அதிகாரி. அவ்வளவுதானா தேர்வு முடிந்ததா என்று குழப்பத்துடன் கம்ப்யூட்டர் தேர்வுக்கு சென்றேன். அங்கு மிக எளிதான கேள்விகள் 20 கேள்விகளுக்கு அடுத்தடுத்து விடை தெரிவு செய்யவும் கம்ப்யூட்டரிலேயே நீங்கள் வெற்றி பெற்றீர்கள்என செய்தி வேறு வந்தது. சரிதான் நம்மதான் மெகந்திசாச்சே அதுனால டெஸ்டெல்லாம் நமக்குக் கிடையாது போலன்னு நினைச்சுட்டு நிறுவனம் வந்தடைந்தேன். மாலைவேளையில் வந்த PRO சொன்னார். உனக்கு ஒரு மாதம் பயிற்சி தேவைப்படுகிறது என போலிஸ் குறிப்பெழுதி உள்ளார். அதனால் ஓட்டுனர் பயிற்சிப் பள்ளியில் தினமும் பயிற்சி எடுத்து பின்னர் ஒரு மாதம் கழித்து சோதனை செல்ல வேண்டும் என அறிவுறுத்தினார்.

மறுபடியும் பயிற்சி. இந்த பயிற்சி தந்த தைரியத்தில் ஒரு நாள் வண்டி எடுத்துக் கொண்டு ஒரு கடை வரை சென்றேன். கடை முன் வண்டியை நிறுத்தி விட்டு ஒரு பெப்சி வாங்கி திரும்பினால் வண்டியைக் காணோம். சுற்றும் முற்றும் பார்த்தால் நேர் சாலையில் 100 மீட்டர் தள்ளி வண்டி நின்றது. நமட்டுச் சிரிப்போடு என்னைப் பார்த்த கடையின் முன் அமர்ந்திருந்த சவுதிகள் வண்டியை எங்கு நிறுத்தினாலும் ஹேண்ட் பிரேக்கைப் போடு. இப்ப பார்த்தியா நீ ஹேண்ட் பிரேக்கைப் போடல சாலை வழுக்குச் சாலை தன்னால உன் வண்டி ஓடிப் போய் நிற்குது. நல்ல வேளை யாரும் குறுக்க வரல்லேன்னு அறிவுரை வழங்கினார்கள்.

அதுக்கப்புறம் ஓட்டுனர் உரிமம் வாங்கி ஒரு மாதம் ஆகி விட்டது. நானும் வண்டியை எடுத்துக் கொண்டு பல இடங்களுக்கு செல்ல ஆரம்பித்தேன். ஒரு நாள் எனது கம்பெனி போர்மேன் அரங்கசாமியை அழைத்துக் கொண்டு ஒரு இடத்துக்கு சென்றேன். அரங்கசாமி சிறந்த ஓட்டுனர். எனது அருகில் அமர்ந்து வந்த அரங்கசாமி சொன்னார். “ சார் இப்ப எத்தனாவது கியரில் போறிங்கநான் சொன்னேன் 5ன்னு. கிளட்சை அழுத்துங்கன்னு சொன்னார். நானும் கிளட்சை அழுத்தவே அவர் கியரை அசைத்து ஒரு கியரைப் போட்டார். இதுதான் 5ன்னு. பாருங்க வண்டி ஒரு வேகமாக போக ஆரம்பித்தது. அப்புறம்தான் அவர் சொன்னார் மூணைப் போடுறிங்க அதுக்கப்புறம் நாலு போடுறிங்க ஆனா ஐந்துன்னு நினைச்சுகிட்டு மறுபடியும் மூணைத்தான் போடுறிங்க இப்படி ஓட்டினா சீக்கிரம் இன்சின் படுத்து விடும்.

அதுக்கப்புறம் அரங்க சாமியை ஒரு மாதம் கூட வைத்துக் கொண்டு வண்டி ஓட்டினேன். அப்புறம் போகப் போக சித்திரமும் கைப் பழக்கம் செந்தமிழும் நாப் பழக்கம் என்பதற்கேற்ப இப்ப என்னோட ஓட்டுனர் திறமையைப் பார்த்து பலபேரு சொல்லுறாங்க காரை தேரு போல ஓட்டுறேனாம் ‘போங்க எதுக்கு தற்புகழ்சி”.


சனி, 26 மார்ச், 2011

நீதிக்குத் தலை வணங்கு


சின்ன வயசுல நினைவு தெரிய ஆரம்பிச்சப்ப பாத்த முதல் படம் நீதிக்குத் தலை வணங்கு. பசுமரத்தாணி போல மனசுல பதிஞ்சு போன இந்தப் படத்தப் பத்தி இந்த பதிவு.

எங்கம்மா ஒரு தீவிர எம்ஜியார் ரசிகை. சிவாஜி படத்துக்குப் போனா அழுகையா வரும்ங்கிறதால் எம்ஜியார் படத்த மட்டும்தான் பார்ப்பாங்க.அப்படி போகும்போது சின்ன வாண்டுகளா இருக்கிற எங்களையும் கூட்டிப்போயி எங்களையும் எம்ஜியார் ரசிகர் ஆக்கிட்டாங்க.

கீழக்கரையில முன்ன அப்சரான்னு ஒரு தியேட்டர் மட்டும்தான். நல்லா கடற்கரை ஒரத்துல பேருந்து நிலையத்துக்கு பக்கத்தில இருக்கும். எம்ஜியார் படத்துக்கு மட்டும் அப்படி ஒரு கூட்டம் வரும். அப்பல்லாம் ஒரு கூட்டு மாட்டு வண்டியில மைக்கக் கட்டிகிட்டு ஊரு ஊராப் போயி நோட்டிஸ் வீசி படத்தப் பத்தி விளம்பரம் செய்வாங்க.

பாடல்கள் ஆறு, அத்தனையும் தேனாறு. பாடல்கள் எட்டு, அத்தனையும் தேன் சொட்டுன்னு எதுகை மோனையில் விளம்பரம் செய்வாங்க. இந்த விளம்பரம் செய்யுறதுக்குன்னே தியேட்டர்ல கஜினி காக்கான்னு ஒருத்தர் வேலை செஞ்சுகிட்டு இருந்தாரு. நல்ல கணீர்ன்னு குரல் வளம் அவருக்கு.

எம்ஜியாருன்னு பளிச்சுன்னு பேரு சொல்லிட மாட்டாரு கஜினி காக்கா. பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் ஏழைகளின் தோழன், அண்ணாவின் இதயக்கனி,மீனவ நண்பன் படகோட்டின்னு ஆரம்பிச்சு பல பட்டங்களைச் சூட்டி வாத்தியார் சின்னவர் எம்ஜியார் நடிக்கும்ன்னு முடிச்சு படத்தோட பேரச் சொல்லுவாரு.

எம்ஜியாருக்கு மட்டுமல்ல எல்லா நடிகருக்கும் ஏதாவது ஒரு அடைமொழி சொல்லித்தான் பேரச் சொல்லுவாரு கஜினி காக்கா. சிம்மக்குரலோன் சிவாஜி கணேசன் காதல் மன்னன் ஜெமினி கணேசன் அபிநய சரஸ்வதி கன்னடத்துப் பைங்கிளி சரோஜாதேவின்னு எல்லோருக்கும் தெரிஞ்ச பட்டங்களையும் சொல்லுவாரு. சில பேருக்கு பட்டங்கள் இல்லைன்னா ரவா லட்டு லதான்னு இவரே சில பட்டங்களைச் சூட்டிடுவாரு. இப்படித்தான் ஒரு கன்னட மொழி மாற்றுப் படம். ஹீரோ அம்பரிஷ் ஹீரோயின் அம்பிகா. கஜினி காக்கா விளம்பரம் பண்ணும்போது ஆணழகன் அம்பரிஷ் அழகுமயில் அம்பிகான்னு அடைமொழி சூட்டி விளம்பரம் பண்ணுனாரு.

சரி நான் நீதிக்கு தலை வணங்கு படத்துக்கு வர்றேன். படத்தோட கதைப்படி எம்ஜியார் ஒரு பணக்கார வீட்டுப் பிள்ளை. காலேஜில படிக்கிறவரு?. அதே காலேஜுல கூட நம்பியாரும் படிப்பாரு.அடேங்கப்பா 60 வயசுல காலேசுல படிச்சவங்க இவங்களாத்தேன் இருக்க முடியும்.எம்ஜியாரு அப்பாதேன் நம்பியாரை காலேசுல படிக்க வைக்குறாரு.

நம்பியாரு பெயிலான மார்க்கைல்லாம் பாஸ் மார்க்கா மாத்தி எம்ஜியார் அப்பாகிட்ட காட்டி சமத்துப் பிள்ளையா வலம் வருவாரு. எம்ஜியாரு அப்படியெல்லாம் பண்ணாம நீதிக்குத் தலைவணங்கி அப்பாகிட்ட கெட்டபேர வாங்கிகிட்டு இருப்பாரு.

எம்ஜியாரோட அம்மாவா ஜி.வரலட்சுமி நடிச்சிருப்பாங்க. அஜந்தா கொண்டை போட்டுகிட்டு பட்டுப் புடவையும் நகையுமா கணீர்ன்னு வெங்கலக் குரல்ல ‘இந்த பச்சைக்கிளிக்கொரு முத்துச்சரம்ன்னு பாடுவாங்க.அனேகமா எல்லாப் படத்துலயும் யார்மேலயாவது பாசம் காட்டனும்னா சில காட்சிகள்தான் பொதுவா வைப்பாங்க. அது என்னன்னா தூங்கும்போது போர்வை போத்தி விடுறது, சாப்பிடும்போது விக்குனா தண்ணீர் தர்றது இல்லைன்னா தலையை தட்டி விடுறது, வாப்பா உனக்கு பிடிச்ச வத்தக்குழம்பு வச்சிருக்கேன் அப்படின்னு சாப்பிடக்கூப்பிடுறது.

இந்தப் படத்துலயும் எம்ஜியாருக்கு போர்வைல்லாம் போத்தி தூங்கவைப்பாங்க அவங்க அம்மா. ஆனா எம்ஜியாரு அந்தப் பாசத்த அம்மாகிட்ட காட்டாமே ரவாலட்டு லதாகிட்ட காட்டுவாரு.

படத்தோட ஆரம்பத்துல ஒரு பைக் ரேஸ் சீன் வரும். அதுல தலைவரு 5ம் நம்பர் சட்டை போட்டுகிட்டு எண்ட்ரி ஆவாரு. தலையில் ஹெல்மெட்டு போட்டுகிட்டு 5ம் நம்பர் சட்டையோட பைக்குல தலைவரு உட்காந்து இருக்கிற காட்சி அனேகமா இந்த படத்தோட எல்லா வால் போஸ்டருலயும் இருக்கும்.

அப்புறமா நம்பியாரோட கார் ரேஸ்ல களம் இறங்குற தலைவரு, வண்டிய வேகமா ஓட்டிட்டு போகும்போது குறுக்க வர்ற பள்ளிக் குழந்தைகளின் மேல் மோதாம இருக்க வயல்ல இறங்குறாரு. அங்க வந்துகிட்டு இருக்குற ஒரு பெரியவர் மேலயும் இன்னொரு ஆள் மேலயும் மோதிடுவாரு. இதுல பெரியவர் பலியாகிவிட இன்னொரு ஆளுக்கு கண்பார்வை போயிடுது.

சட்டம் தண்டனை தராட்டாலும் மனசாட்சி உறுத்தவே தலைவரு வீட்டை விட்டு வெளியேறி லதா வீட்டுல பட்லர் வேலைப் பார்த்துகிட்டு பார்ட் டைமா அவரால பாதிக்கப்பட்ட குடும்பத்தலைவரை இழந்த குடும்பத்த காப்பாத்துறாரு.

இவரால் கண் பார்வை பறிபோன ஆளுக்கு பார்வை வர உதவி செய்யுறாரு. பார்வை வந்ததும் எம்ஜியார பழிக்குப் பழி வாங்கத் துடிக்கிறவர் எம்ஜியாரோட நல்ல குணத்தப் புரிஞ்சிகிட்டு மன்னிப்பு கேட்க கடைசியில் எல்லாம் சுபமா முடியுது.

படத்துல இந்த பச்சைக்கிளிக்கொரு முத்துச்சரம்ன்னு ஜி வரலட்சுமி குரல்லயும் ஜேசுதாஸ் குரல்லயும் ரெண்டு பாட்டு. அப்புறம் நல்லநேரம் பட்த்துல முன் கொத்து முடியோட தலைவரு இருக்குற போட்டாவை பாத்துகிட்டே லதா கனவு காணுற மாதிரி ‘கனவுகளே ஆயிரம் கனவுகளேன்னு ஒரு பாட்டு.

தலைவரு வீட்டை விட்டு வெளியேறும் போது ஜெயச்சந்திரன் குரல்ல ‘எத்தனை மணிதர்கள் உலகத்திலேன்னு ஒரு பாட்டு. அப்புறம் பாக்கப் பாக்க சிரிப்பு வருது அடக்க முடியலேன்னு ஒரு பாட்டு வரும். அதுல நீ சமைச்சு வச்ச வாழைக்காய வாயில் வக்க முடியல நீ பொரியல் செஞ்ச புடலங்காயில் கருக நாத்தம் சகிக்கலன்னு லதா சொல்ல அதுக்கு தலவரு ‘கண்ட கண்ட உரத்தப் போட்டு காய்கறிய வளர்க்கிறான் அந்த உரத்துல் கூட ஊழல் பண்ணி எங்கப் பேர கெடுக்கிறான்னு கருணாநிதிய ஒரு வாரு வாரியிருப்பாரு. அப்ப உரத்துல இருந்த ஊழல் 3ஜி ஸ்பெக்ட்ரம் வரை தொடர்ந்துகிட்டுதான் இருக்கு.

கடைசியா நான் பாத்தா பைத்தியக்காரன் உன் பாட்டனுக்கு வைத்தியம் பார்ப்பேன், பெற்றெடுத்த தாயாக மத்தவங்கள நான் நினைச்சு பிள்ளையென வாழ்பவண்டான்னு கருணாநிதிக்கு அட்வைசும் பண்ணியிருப்பாரு.

படத்தில எம்ஜியார் வேலை பாத்துகிட்டு இருக்கிற லதா வீட்டுக்கு எம்ஜியாரொட அம்மா வரலட்சுமி வந்துடுவாங்க. எம்ஜியார் முகத்தக் காட்டாம முதுக மட்டும் காட்டிகிட்டு அவங்கம்மாட்ட பேசுவாரு. அவங்கம்மாவுக்கும் எம்ஜியார அடையாளம் தெரியாது. படம் முடிச்சு வீட்டுக்கு வரும்போது நான் எங்கம்மாட்ட கேட்டேன். ஏம்மா நான் முன்ன போனா நீங்க என் முதுக பாத்து போறது நாந்தான்னு கண்டு பிடிக்க மாட்டிங்களான்னு.

அதுக்கு எங்கம்மா சொன்னாங்க நான் என்ன வரலட்சுமியா உலகத்துலேயே ஒரு வித்தியாசமான குரலு எம்ஜியாரோடதுதான் அந்த குரல வச்சே அடையாளம் கண்டு பிடிக்கத் தெரியாதவ முதுக வச்சா கண்டு பிடிக்கப் போறா? இது சினிமாடா அப்பு பட்த்தப் பாத்தமா வந்தமான்னு இருக்கனும் தொண தொணன்னு கேள்வி கேட்க்கூடாதுன்னாங்க.

அதுக்கப்புறம் நான் எந்த எம்ஜியார் படம் பாத்தாலும் அதுல லாஜிக்கெல்லாம் பாக்குறதில்ல. லாஜிக்க மறந்திட்டா எம்ஜியார் படம் எம்ஜியார் படம்தான்.


சனி, 19 பிப்ரவரி, 2011

இங்கு எல்லோருக்கும் ஒரே பண்டிகைதான்


தலைப்பைப் பார்த்தவுடன் நான் ஏதோ ஆன்மிகத்தப் பத்தி எழுதப் போறேன்னு நினைச்சுடாதிங்க. இது வேற. பொதுவா வளைகுடா நாடுகளில் வேலை செய்யும் மக்களுக்கு அவர்கள் எந்த மதத்தச் சார்ந்தவரா இருந்தாலும் அனைவரும் ஆவலோட எதிர்பார்க்கும் பண்டிகை ஒன்னே ஒன்னுதான். அதுதான் Vacation விடுமுறை.


கடன உடன வாங்கி கஷ்டப்பட்டு வெளிநாடு வர்றவுங்க அந்த கடன அடைக்கும் வரைதான் ஊரைப்பத்தி நினைக்க மாட்டாங்க. கடனை அடைச்சுட்டா எல்லோருமே ஊருக்கு எப்பப் போவோம்னு நாளை எண்ண ஆரம்பிச்சுருவாங்க.


நல்லாப் படிச்சவுங்களுக்கு விடுமுறை 6மாசத்துக்கு ஒரு தடவையோ வருசத்துக்கு ஒரு முறையோ வரும். மத்தபடி எல்லோருக்கும் 2 வருசத்துக்கு ஒரு தடவையோ அல்லது 3 வருசத்துக்கு ஒரு முறையோதான் விடுமுறை வரும். இங்கே எல்லோரும் உழைக்கிறது எல்லாம் அந்த நாளை மனசுல வச்சுக்கிட்டுத்தான்.


சில பேரு வருசக்கணக்குல ஊருப்பக்கமே போகமாட்டாங்க. ஒரே மூச்சா பத்து பதினைஞ்சு வருசம் மொத்தமா இருந்துட்டு நாலு காச சேத்துட்டு ஊருல செட்டிலாயிடலாம்னு மாங்கு மாங்குன்னு உழைப்பாங்க. பெரும்பாலும் இந்தமாதிரி ஆளுங்க பொம்பளப் பிள்ளை பெத்தவுங்களா இருப்பாங்க. இல்லன்னா அக்கா தங்கச்சியை கரை சேர்க்கிற பொறுப்புல இருப்பாங்க. இது ரெண்டும் இல்லன்னா தங்கமணி தொந்தரவு தாங்காம பிக்க பிடுங்கல் இல்லாம இருக்கனும்னு நினைகிறவுங்களா இருப்பாங்க.

வெக்கேசனுக்கு அப்ளிகேசன் போட்டுடாங்கன்னா ஒரு மாதிரி மந்திரிச்சு விட்ட கோழி மாதிரி ஆயிடுவாங்க. எங்க கம்பெனி முகாம்ல மொத்த ஜனத்தொகை 20ஆயிரத்துக்கு மேல தாண்டும். இதுல வெக்கேசனுக்கு ரெடியா இருக்குறவுங்கள அவங்க நடந்துகிறதப் பொறுத்து ஈசியா அடையாளம் கண்டு பிடிச்சுடலாம்.


வேட்டைக்காரன் வீராச்சாமி படத்தப் பத்துதடவப் பாத்த மாதிரி சிடு சிடுன்னு மூஞ்ச வச்சுகிட்டு வருசக் கணக்குல வேலைப் பாத்துகிட்டு இருந்தவன் எல்லோரையும் பாத்து சினேகிதமா சிரிக்க ஆரம்பிச்சான்னா வெக்கேசன் எண்ணம் அவன் மனசுல வந்துருச்சுன்னு அர்த்தம்.


பாண்டா மார்கெட்டுல ஒரு மிக்சியைப் பாத்தேன், மாவு அரைக்குது, காயை வெட்டுது, பழத்தப் புழியுது ரொம்ப அருமையா இருக்குன்னு எலக்ட்ரானிக் பொருள்களைப் பத்தி பேச ஆரம்பிச்சாங்கன்னா ஆளு வெக்கேசன் அப்ளை பண்ணப் போறான்னு அர்த்தம்.


சுனாமி மாதிரி சொந்தபந்தங்கள் வந்து அடிச்சுட்டுப் போறதுக்கு கோடாரித் தைலம், யார்ட்லி பவுடர்,ஹீரோ பேனா, மேக்கப் பாக்ஸ், கால்குலேட்டர், எமர்ஜென்சி லைட், டார்ச் லைட்டு, லேடிஸ் வாட்ச், செண்டு பாட்டில், நோக்கியா போன், பேண்ட் பிட்டு, டீ சர்ட்டுன்னு சிறுக சிறுக பொருட்களைச் சேர்க்க ஆரம்பிச்சானுகனா வெக்கேசன் அப்ளை பண்ணிட்டான்னு அர்த்தம்.


சாயங்காலம் வேலைவிட்டு வந்தவுடன் ஷூவைக்கூட கழட்டாம சாப்பாட்டுக்கூடத்துக்கு போயி சாப்பிட்டுத் தூங்குறவன் சாப்பாடுக்கூடம் பக்கமே தலைவச்சு படுக்க மாட்டானுக. கேட்டா என்னன்னு தெரியல வயிறு ஒரு மாதிரி மந்தமா இருக்குன்னு சொன்னான்னா அவன் வெக்கேசன் மேலிடத்துல அப்ரூவல் ஆயிருச்சுன்னு அர்த்தம்.


இன்னிக்கு தங்கம் என்ன விலை, ரியால் எக்சேஞ் ரேட் என்னன்னு கேட்டான்னா வெக்கேசனுக்கு பதினைஞ்சு நாள் இருக்குன்னு அர்த்தம்.


ஊரே அடங்குன சாம நேரத்துலயும் ஒரு மூலையாப் பாத்து நின்னுகிட்டு காதில செல்போன வச்சுகிட்டுஇந்தா வந்துருவேம்மா, வந்தவுடன் பேசிக்கலாம், வரும்போது எல்லாம் வாங்கிட்டு வர்றேன்ன்னு ஒரு மணி நேரத்துக்கு மேல பேசிக்கிட்டு இருந்தான்னா வெக்கேசனுக்கு பத்துநாள் இருக்குன்னு அர்த்தம்.


ஏர் கார்கோ நல்லதா சீ கார்க்கோ நல்லதான்னு பட்டிமன்றம் நடத்துறமாதிரி பேச ஆரம்பிச்சான்னா பயபுள்ளைக்கு வெக்கேசன் ஒரு வாரம்தான் இருக்குன்னு அர்த்தம்.

“சார் ஒரு பிளைட்டு படத்துல என் பேரைப் போட்டு தம்மாம் டூ சென்னைன்னு நாலு பிரிண்டு போட்டுத் தாங்கன்னு கேட்டான்னா நாலு நாள்தான் இருக்குன்னு அர்த்தம்.


அப்புறம் கடைசியா ஆட்டுத்தாடி மாதிரி பிரஞ்சு பியர்ட் வச்சிகிட்டு திரிஞ்சவன், ஆட்டாம் புழுக்கை மாதிரி கீழ் உதட்டுக்கு கீழே நாலு முடி வச்சிகிட்டு திரிஞ்சவன், விருமாண்டி மாதிரி கிருதாவுக்கும் மீசைக்கும் கனைக்சன் கொடுத்துட்டு திரிஞ்சவன் மழு மழுன்னு சல்மான்கான் மாதிரி சேவ் செஞ்சுட்டு கார்னியர் அல்லது காத்ரேஜ் உபயத்துல தலையை கருப்பாக்கி பள பளன்னு ஆயிட்டான்னா புரிஞ்சுகிற வேண்டியதுதான் புள்ள நாளைக்கு ஊருக்குக் கிளம்பப் போகுதுன்னு.


அப்புறம் போகும் போது எல்லோர்ட்டயும் செல் நம்பர வாங்கிட்டு ஊருக்குப் போனது போன் பண்ணுறேன்னு சொல்வானுக. ஆனா ஏர்போர்ட்டுல கால வச்சதும் எல்லா நம்பரையும் மறந்துடுவானுக. அப்புறம் நாலஞ்சு மாசம் கழிச்சு பழையபடி மந்திரிச்சு விட்ட கோழி மாதிரியே திரும்பி வருவானுக.


“ஏண்டா ஊர்ல இருக்கும்போது ஒரு போன் கூட பண்ணலன்னு கேட்டா ‘பண்ணலாம்னுதாண்டா நினைச்சேன் பயபுள்ள இந்த சிம்கார்டு தொலஞ்சுப் போச்சுடான்னு சொல்லுவானுக.

வியாழன், 17 பிப்ரவரி, 2011

இந்த வருட உலக அழகி


இந்த வருட உலக அழகி

எங்க சித்தாளு சின்னாத்தா


சூப்பிய முலையில் பால்

சுரக்க வழியில்லாம- கை

சூப்பி பசியாறும் குழந்தையை

இடையில் வச்சு


வாட்டிடும் வறுமை பாரத்த

சுமக்க வேண்டி- தலை

சும்மாட்டில்

வண்டி பாரம் போல்

செங்கல் ஏந்தி


அடுக்கு மாடிகளின்

நெடுக்குப் படிகளிலே

சிறுத்தைப் புலியெனெ இவள்

நடக்கும் நடையழகுக்கு


உடுக்கை இடையினிலே

தளுக்கு உடையணிந்து

மினுக்கும் மேடையிலே

சுளுக்கு வந்தது போல்


சிலர் நடக்கும் பூனை நடை

எந்த காலத்திலும்

பொருத்தமாகாதய்யா

பொருத்தமாகாது.


உலக அழகியின்னா- சில

உத்தரவாதம் வேணுமாமே?

அறிவு கேள்விகளுக்கு

அழகாய் பதில் சொல்லனுமாமே.


நானும் கேட்டுப்புட்டேன்

நல்ல கேள்வி ஒன்னு

நாலு குணம் கொண்ட எங்க

நங்கை சின்னாத்தாளிடம்


சின்னாத்தா சின்னாத்தா

பதில்

சொல்லாத்தா சொல்லாத்தா


உழைச்சுப் பிழைக்காம

ஏழை வயித்தில்

அடிச்சுப் பிழைக்கும் இந்த

உளுத்துப்போன அரசியல்வாதிகள்


உடனே திருந்தி

உருப்பட்டுப் போறதுக்கு

உடனடி யோசனை ஒன்னு

சொல்லு சொல்லு.


உழைச்சுப் பிழைக்கும்

பாட்டாளி மக்களோட

உழக்கு மூத்திரத்த தினம்

குடிக்கச் சொல்லு - இது

இந்த வருட உலக

அழகியோட பதிலு பதிலு.


வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

வெள்ளிக் கிழமை

அலாரம் அடிக்காமல்

கலைகிறது உறக்கம்.


அடுத்தவன் காத்திருப்பான் என்ற

அச்சமில்லை கழிவறையில்


உறைந்து போன முதுகின்

அழுக்குக்கு விடுதலை.


உப்பு இது உறைப்பு இது என

நாக்கு உணரத் தலைப்படுகிறது.


கருத்த மீசைக்காட்டில்

முளைத்த வெள்ளைப் பூக்களை

கவணித்துப் பறிக்க முடிகிறது


ஆறு நாள் மறந்து போன

ஆறுமுகத்திற்கு

ஐந்து நிமிடம் ஒதுக்க முடிகிறது.


கண்ட்ரோல் சியிலும்

கண்ட்ரோல் வியிலும்

களைப்படைந்த விரல்கள்

காப்பிக் கோப்பையை பிடித்திருக்கிறது.


இரக்கமில்லாமல்

“இரு அப்புறம் பேசுகிறேன்

எனத் துண்டிக்கும் தொடர்பு

என்னமா வேறு என்ன விசயம்என

இணக்கமாய் நீள்கிறது.


சிவப்பு விளக்கு காத்திருப்பில்

ஊர் பற்றி சிந்தனை இல்லை.

பச்சை விளக்கு கண்டதும்

பரபரப்பும் வருவதில்லை.


இங்கே வா அங்கே போ

எனும் ஏவல் மொழிகள்

காதில் கேட்கவில்லை


இன்று குளிர் அதிகம் என்று

எவரிடமும் சம்பிரதாயப்

பேச்சு ஆரம்பிக்கவில்லை

.

இரும்புச் சட்டங்களின் முன்

காத்திருக்கும் என் நிசான் குதிரை

அரும்பு விட்ட பூக்களின் முன்

இளைப்பாறுகிறது.

.