வியாழன், 13 ஆகஸ்ட், 2009

எங்கப்பா மட்டும் பாம்பனுக்கு அந்த பக்கம் வேலை பார்த்திருந்தா...

இராமநாதபுரம் மாவட்டத்துக்கு பெருமை சேர்க்கும் பல விடயங்களில் ராமேஸ்வரம் கோவிலுக்கு அடுத்தபடியாக உள்ளது பாம்பன் பாலம் என்று எம் மாவட்ட மக்களால் அழைக்கப்படுகிற இந்திராகாந்தி பாலம்.
2.345 கீ மீ நீளமும் 72 தூண்களையும் ஆங்கர் ஜோன்,நேவிகேசன் ஜோன்,சஸ்பென்சன் ஜோன் எனும் வகைகளாக 5 பாகங்களாக பிரிக்கப்பட்டு வேலை முடியும் தறுவாயில் தலைமை பொறியாளரையே காவு கொண்டு (கடலில் தவறி விழுந்து இறந்தார்) கிட்டத்தட்ட இந்தியாவில் உள்ள அனைத்து பொறியியல் கட்டுமாண நிறுவனங்களும் வேலைப் பார்த்து பல்வேறு தலைவர்களின் பேரை பாலத்திற்கு வைக்க கோரி இராமநாதபுரம் மாவட்டத்தையே சுவரொட்டிகளால் மறைத்து இறுதியில் சேதுபதி பாலம் என வைக்கப்படும் என மாநில ஆட்சியாளர்களால் உறுதிமொழி வழங்கப்பட்டு இறுதியில் எல்லோருக்கும் ஆப்பு வைக்கும் விதமாக "எங்கம்மா பேரையே வச்சுடுறேனு" ராஜிவ் காந்தியால் பேர் வைக்கப்பட்டு இப்படி பல அல்லல் பட்டு இண்ணல் பட்டு கிடந்த இராமேஸ்வர தீவு மக்களுக்கு ஒரு தீர்வாக வந்த இந்தியாவின் மிக நீண்ட கடல் பாலம்தான் எம் பாம்பன் பாலம்.
தலைப்புல சொல்லியிருக்கிற விசயத்துக்கு போகும் முன் கண்ணுக்கு குளிர்ச்சியாய் எங்க ஊரு பாலத்தப் பாருங்க.
முதல்ல பழைய இருப்புப்பாதை பாலம்


இப்ப பார்க்கப் போறதுதான் சாலைவழிப்பாலம்
இப்ப தலைப்புக்கு வர்றேன்.


பத்து வருசத்துக்கு முன்னாடி ஒருநாள் மதுரை போயிட்டு எங்க ஊரு கீழக்கரை போறதுக்காக ராம்னாடு பேருந்து நிலையத்துக்கு வந்தேன். அங்கப் பாத்தா எல்லா பஸ்ஸையும் பஸ்ஸ்டாண்டுலேயே நிறுத்தி வைச்சுருந்தாங்க.என்னடான்னு கேட்டா ஏதோ ஒரு ஊரில (வேற மாவட்டத்துல) ஒரு தலைவரு சிலைய அவமதிச்சுட்டாங்களாம். அதுனால பிரச்சினையான பகுதியில்லாம் பஸ்ஸை நிறுத்தி வைக்கச்சொல்லி மேலிடத்து உத்தரவுன்னுட்டாய்ங்க.


அப்பன்னா இராம்நாடு பூராவுமே பிரச்சினையான பகுதிதாண்டான்னு தலையில கைய வச்சுக்கிட்டு எப்ப பஸ்ஸ விடுவாய்ங்கனு கொள்ளச்சனம் பஸ்ஸ்டாண்டுலேயே உட்காந்துருக்கு.அதுல ஒரு பேருந்து ராணி மங்கம்மாள் போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமானது. 6 1/2 மணிக்கு ராமேஸ்வரம் போகவேண்டிய பஸ்ஸு 8 மணிவரைக்கும் பஸ்ஸ்டாண்டுலேயே நிக்குது. ரொம்ப நேரம் பஸ்ஸ்டாண்டுலயே நின்னதால த்ரூ டிக்கட் போட்ட ஒரு பத்து பதினோரு பேரு மட்டும் அதுல உட்காந்திருந்தாங்க.

81/2 மணிக்கு மேல மதுரை ராமேஸ்வரம் மட்டும் வண்டி போகும் மத்த ஊருல பிரச்சினை முடியலன்னு எங்க ஊருக்கு போற வண்டியல்லாம் நிறுத்திட்டாங்க.மதுரைக்கும் ராமேஸ்வரத்துக்கு மட்டும் வண்டி கிளம்புச்சு.காலையில முழிக்கும் போது எங்கப்பா சொன்னாங்க 'திண்டுக்கல்லுல இருந்து வந்த பஸ்ஸு ஒன்னு பாம்பன் பாலத்துல கைபிடிச்சுவர உடைச்சி கவுந்துறுச்சாம் பஸ்ஸுல இருந்த எல்லோரும் செத்துப்போயிட்டாங்க"ன்னு. நானும் தூக்கக் கலக்கத்துல "எந்த பஸ்ஸுப்பா"ன்னு கேட்டேன் அதுக்கு எங்கப்பா சொன்னாங்க "ராணி மங்கம்மாடா"ன்னு

ஒரு நிமிசம் எனக்கு தூக்கி வாரிப் போட்டுடுச்சு.உடம்புல்லாம் விதிர் விதிர்த்து நடுங்குது. இருக்காதா பின்னே?

கீழக்கரைக்கு வண்டி போகாததாலே ராத்திரி பொழுது சாப்பிடவும் தூங்கவும் என்ன பண்ணலாம்னு நினைச்சு எங்கப்பா அப்ப மண்டபத்துல (பாம்பன் பாலத்திலருந்து சரியா 2 கீ மீ முன்னாடி உள்ள ஊரு) மின் வாரியத்துல வேல செஞ்சுகிட்டு இருந்ததாலே நானும் அந்த ராணி மங்கம்மாள் பஸ்ஸுலதான் ஏறி மண்டபத்துல இறங்கிட்டேன்.

இப்ப சொல்லுங்க எங்கப்பா மட்டும் பாம்பனுக்கு அந்தப் பக்கம் வேலைப் பாத்திருந்தா?

ஒன்னும் ஆயிருக்காது இந்த பதிவ மட்டும் நீங்க படிச்சுக்கிட்டு இருக்க முடியாது. அவ்வளவுதான். அவ்வ்வ்வ்வ்வ்


3 கருத்துகள்:

♠ யெஸ்.பாலபாரதி ♠ சொன்னது…

:)

அந்த பேருந்து பாண்டியன் போக்குவரத்துக்கழகத்தைச் சேர்ந்தது. மொத்தம் அந்த விபத்தில் இறந்தது 13 பேர். நடத்துனர் மட்டும் மூழ்கிய பேருந்தின் மீது நீந்தி ஏறி கூவியதால்.. தப்பித்துக் கொண்டார். எனக்குத் தெரிந்து இந்த சம்பவம்.. 92 முதல் 94க்குள் நடந்திருக்க வேண்டும்.

மண்டபத்திலிருந்து.. நண்பர்களுடன் நாங்கள் மிஸ் பண்ணிய பேருந்து அது. :)))

(நமக்கு ஊர் நாமேஸ்வரமுங்க!)

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

படங்களுக்கு நன்றி!
பதிவு எழுத்துருவை சற்று பெருதாக்கினால் கண்ணுக்கு வலியிருக்காது. படிப்பு இனிமையாக இருக்கும்.
இது என் அபிப்பிராயம்.

தங்கராசு நாகேந்திரன் சொன்னது…

முதல் வருகைக்கு நன்றி யோகன் பாரிஸ் அவர்களே
தங்கள் கருத்தினை ஏற்றுக்கொள்கிறேன்
அன்பான கருத்துக்கு மிகவும் நன்றி

கருத்துரையிடுக

ஏதாவது சொல்லிட்டு போங்க