வெள்ளி, 31 டிசம்பர், 2010

நாலு பாட்டுத்தான் நாளைக்கு வாழ்த்துச் சொல்ல

நாளை புத்தாண்டு பிறக்கிறது.

சுழலும் ஏர் பின்னது உலகம் என்று அய்யன் கூறியது போல
தமிழ் கூறும் நல்லுலகம் திரையுலகம் பற்றிய செய்திகளையும்
படங்களையுமே காலம் காலமாக இது போன்ற நன்னாட்களில்
கண்டும் கேட்டும் வருகின்றது.

எனக்குத் தெரிந்து புத்தாண்டு பிறந்து விட்டால் நான்கு பாடல்கள்
மட்டுமே நினைவுக்கு வருகிறது. ஏன் எனில் இந்த நான்கு பாடல்கள்
எந்த புத்தாண்டு பிறந்தாலும் வானொலியிலும் தொல்லைக்காட்சியிலும்
திரும்ப திரும்ப ஒளி-ஒலி பரப்பப்படுவதினால்.

1.சங்கிலி படத்தில் அமரர் சிவாஜி கணேசனின்"நல்லோர்கள் வாழ்வைக் காக்க நமக்காக
நம்மைக் காக்க
ஹேப்பி நீயு இயர்"


2. அடுத்து மிகப் பிரபலமான பாடல்

சகலா கலா வல்லவனின்


"ஹேய் எவரிபடி விஷ் யூ ஹேப்பி நீயு இயர்"


3. அடுத்து தலைமகன் படம் என்று நினைக்கிறேன்
பிரபு நடித்தது


"தங்க மகள் தேடி வந்தாள் முத்துநகை அள்ளித்தந்தாள்
வெற்றி எனை தேடி வரும் நன்னாள் இது
எண்ணப்படி வாழ்வு தரும் பொன்னாள் இது
புத்தாண்டு வாழ்த்துக்கள் ஹே ஹே
எல்லோரும் பாடுங்கள்"


4. தல அஜித்தின் முகவ்ரி படம்


வா வா புத்தாண்டே


ஏங்கப்பா ப்ல்லாயிரக்கணக்கான திரைப்பாடல்கள்
தமிழ் திரையுலகில் இருந்தாலும் புத்தாண்டுக்கான
பாடல்கள் பஞ்சமே

இதைப்போக்க அனைத்து நடிகர்களும் ஆளுக்கொரு
புத்தாண்டு பாடலில் இந்த வருடம் நடிக்க வேண்டும் எனக்
கேட்டுக்கொண்டு மீண்டும் தமிழ் கூறும் நல்லுலகம் அனைவருக்கும்
WISH YOU A HAPPY NEW YEAR எனக்கூறி விடைபெறுகிறேன்.

என்னடா பச்சைத்தமிழன் ஆங்கிலத்தில் வாழ்த்து கூறுகிறேனே
என எண்ண வேண்டாம். ஏன் எனில் பிறக்க்ப்போவது ஆங்கிலப்
புத்தாண்டு. வரும் தைத்திங்கள் முதல் நாள் பிறக்கும் தமிழ்
புத்தாண்டில் தமிழில் வாழ்த்துக்கள் கூறுவோம்.

செவ்வாய், 28 டிசம்பர், 2010

இங்கிலிசுக்கு தமிழ்நாட்டுல்ல இருக்கிற மருவாதை

ரிக்சாக்காரன் படத்துல நம்ம எம்ஜியாரைப் பாத்து மேஜர் சுந்தரராசன் கேட்பாரு
"செல்வம் வாட் யூ திங்க் அபோட் லைப்" அதுக்கு வாத்தியாரு இங்கிலிசுலேயே
பதில் சொல்வாரு. அதப்பாத்து அசந்து போற மஞ்சுளா வாத்தியாரைப்பாத்து
நீங்க படிச்சவரான்னு கேட்கும். அந்த அளவுக்கு நம்ம தமிழ்நாட்டுல எவனாவது
இங்கிலுசுல பொளந்து கட்டுனா உடனே நம்ம சனம் அவன் மேல ஒரு மருவாத
வச்சிரும்.

வேலைக்காரன் அப்புறம் மன்னன் படத்துல சூப்பர் ஸ்டாரு தூங்காதே தம்பி
தூங்காதேல்ல உலகநாயகன் அப்புறம் மீனவரா இருக்கிற விசய் தம்பி காருல
வர்ற கதாநாயகிகிட்ட இங்கிலிசுல பொளந்துகட்டுற காட்சியெல்லாம் பாத்துட்டு
கை வலிக்கிற வரைக்கும் கை தட்டுற சனம்தான் நம்ம தமிழ் சனம்.

இன்னும் பஸ்ஸுல டிரய்ன்ல போகும் போது எவனாவது இந்தியிலோ அல்லது
தெலுங்கிலயோ பேசுனா அவன் சட்டைப் பண்ணாது நம்ம சனம். ஆனா இங்கிலிசுலே
எவனாவது பேச ஆரம்பிச்சான் அவன அப்படியே தேவலோகத்துல வந்து இறங்குன
இந்திரன் சந்திரன் மாதிரி பாக்க ஆரம்பிப்பாய்ங்க.

இதுக்கு நம்மளும் விதிவிலக்கல்ல. ஒன்னாம் வகுப்பில இருந்து 12ம் வகுப்பு வரைக்கும்
தமிழ் மீடியத்தில படிச்சிட்டு காலேசுக்குப் போன புதுசுல கண்ணக்கட்டி காட்டுல விட்ட
மாதிரிதான் இருந்துச்சு. செக்சன் சாலிடு ஹரிசாண்டல் பிளேன் வெர்டிகல் பிளேன்ன்னு
இந்த லெக்சரர்கள் பாடம் எடுக்கும்போது அப்படியே வாயைப்பிளந்து பாத்துகிட்டு இருக்கிறது.

அப்புறமா ஹிந்து பேப்பரு எக்ஸ்பிரஸ் பேப்பரு அசைடு அவுட்லுக்கு இந்தியா டுடேன்னு
ஒன்னுமே புரியாட்டாலும் இந்த பேப்பரைல்லாம் வாங்கி எங்கியாவது பஸ்ஸுல போனா
படிச்சுகிட்டே போறது. படிக்கிறமோ இல்லியோ ஒரு பந்தா காட்டுறது.அப்புறமா கொஞ்சம்
கொஞ்சமா எவனாவது சிக்குறவன்கிட்ட பண்ணி இங்கிலிசு அதாங்க இந்த இன் பண்ணி,
டெர்மினேசன் பண்ணி, ரீடிங் பண்ணி, எனர்ஜைஸ் பண்ணி, அஸ்யூம் பண்ணி, அனலைஸ்
பண்ணி இப்படி பல பண்ணி இங்கிலிசுல அளப்பரையை கூட்டிக்கிட்டு இருந்தோம்.

அப்புறம் சென்னையில வேலைப் பார்க்கும் போது ஆங்கில அறிவ அண்ணாநகர் கிரேண்ட்
செண்ட்'ரல்ல சாக்கிசான் படம் பாத்தும் சத்யம் தியேட்டருல அர்னால்ட் படம் பாத்தும்
ஊருக்குப்போனா மதுரை மாப்பிள்ல விநாயகருல்ல தங்கரீகல்ல பல படங்கள்ள பாத்து
அறிவ வளத்துக்கிட்டோம். இதுல ஒரு விசேசம் என்னன்னா இப்படி படம் பாக்கும் போது
பக்கத்து சீட்டுல்ல எவனாவது சிரிச்சா உடனே நாமளும் விழுந்து விழுந்து சிரிச்சு வைக்கிறது
இல்லனா அவன் நம்மல இங்கிலிசு தெரியாதவன்னு தப்பா நினைச்சுடக்கூடாது பாருங்க.

இப்படி ஒரு பத்து வருசம் சென்னையில வண்டி ஒட்டிட்டு சவுதி வந்தபின்னர்தான்
தெரிஞ்சது நாம பேசுறது இங்கிலிசு இல்லன்னு. ஏன்னா இங்கே பெட்'ரோல் தோண்டுற
வேலையில பெரிய பெரிய அதிகாரிங்க எல்லாம் வெள்ளெக்கார துரைங்கதான். நான் பேசுன
இங்கிலிசப் பாத்துட்டு அவனுங்கல்லாம் மிரண்டு போயி யப்பா உனக்கு Bக்கும் Pக்கும்
வித்தியாசம் தெரியல Tக்கும் Dக்கும் வித்தியாசம் தெரியல்லன்னு சொல்லிட்டு நம்ம கிட்டேயே
வரமாட்டானுக.

இருந்தாலும் நம்ம இங்கிலிசு தாகம் அடங்கல்ல. சிக்குனானுக பிலிப்பைனிக பிலிப்பினிகிட்ட
இங்கிலிசு பேசுறது ரொம்ப ஈசி. நம்ம தமிழங்கிட்ட பண்ணி பண்ணி பேசுற மாதிரி
அவனுககிட்ட கோயிங்கா கம்மிங்கா ஈட்டிங்கா சாட்டிங்கான்னு இப்படி ஒவ்வொரு வார்த்தை
முடிக்கும்போதும் ஒரு ஆ சேத்துகிட்டு பேசுனா போதும்.

இப்படி பேசி பேசி நமக்கு ஒரு காலத்துல ஒரு பந்தா வந்துருச்சு. ஆகா நாம பேசுறதுதாண்டா
இங்கிலிசுன்னு. அப்ப ஒரு நாள் ஒரு தமிழன்கிட்டேயே இங்கிலிசுல பேச ஆரம்பிச்சதும்
அவன் கேட்டான் ஏண்டா உனக்குத்தான் எல்லாம் தெரியுமா? எங்க சொல்லு தொப்புளுக்கும்
அக்குளுக்கும் இங்கிலிசுல என்னடா வார்த்தைன்னு. நமக்கு கையும் ஓடல்ல காலும் ஓடல்ல
அப்புறம் அவன் சொன்னான். போயி நல்லா நிறைய வார்த்தகள கத்துக்க அதுக்கப்புறம் "ஐ
ஹேட் வெண்ட்" ஐ டிட் பினிசுடு"ன்னு நீயா புதுசு புதுசா Tenses உருவாக்காதேன்னு மூக்க
அறுத்துபுட்டான். அதோடு விட்டான்னா டேய் இங்கிலுசு என்பது ஒரு லாங்குவேசுதான் அது
ஃநாலேட்ஜ் இல்லன்னு அட்வைசு பண்ணுனான்.

அப்புறமா நான் என்கர்டா டிக்சனரி வெப்ஸ்டைர் டிக்சனரி பழனியப்பா டிக்சனரின்னு பல
அகராதிகள்ள கம்யூட்டர்ல்ல வச்சிகிட்டு கிடைக்கிற ஆங்கில வார்த்தக்கெல்லாம்
அர்த்தம் பாத்து எழுதிப்பாத்து நெட்டுரு போட்டு தினமலர் பேப்பருக்கு தமிழ் செய்திகளுக்கு
இங்கிலிசுல பின்னூட்டம் போட்டு ஒரு ஆங்கிலப் புலவனா மாறிக்கிட்டு வரும்போது அடிச்சானுக
கம்பெனியில ஆப்பு ஆட்குறைப்புன்னு.

அப்புறமா ஊரு வந்து சேந்து மறுபடியும் நேர்முகத்தேர்வு பல கலந்து திரும்ப சவுதி வந்து
சேந்தப்புறம் தெரிஞ்சது.புதுக் கம்பெனில்ல எல்லாரும் நேபாளியும் பங்காளியும்
அவனுக என்னப்பாத்து சொன்னானுக "என்னடா நீ நாங்க வெளிநாட்டுகாரனுக இந்தில
பேசுறோம். தும் ஹிந்துஸ்தானி லெகின் இந்தி நஹி மாலும்"ன்னு

நம்ம திமுக பேச்சாளர் வெற்றிகொண்டான் ஒரு தடவ ஒரு மீட்டிங்கில மதிமுக
எல் கணேசனப் பத்தி பேசும் போது சொன்னாரு. "எல்ஜி குறவன் குறத்திகிட்ட இங்கிலிசு
பேசுவாரு. இங்கிலிசுகாரன்கிட்ட தமிழ்ல்ல பேசுவாருன்னு" அந்தமாதிரிபோச்சு என்னோட
நிலமையும்.

இப்ப கொஞ்ச நாளா நம்ம மடிகணினில்ல இருந்த என்கர்டா பழனியப்பா டிக்சனரில்லாம்
மூட்டைக் கட்டி போட்டாச்சு.

நம்மகிட்ட இருந்த பல ஆங்கில வார்த்தைக்கான் அர்த்தமெல்லாம் தூக்கி ஒரு இடத்துல
போட்டாச்சு. அத படிக்க விரும்புறவங்க இங்கே போயி படிச்சுங்கங்க.

இப்ப நாம பேசுறதுல்லாம் இதுதான்.

"கியா உவ்வா", காம் கர்த்தாஹே" கியா சாயியே" பந்த் கரோ" கிதர் சாரே
நாம் கியா கே"

கேட்கிற பாட்டெல்லாம் இது தான்
கபி கபி மேரா தில் மே, கியா வுவா தேரா வாதா

ஆத்தாஹே சாத்தாஹே
அவ்வளவுதாங்ஹே, அச்சாஹே டீகே.

ஞாயிறு, 26 டிசம்பர், 2010

கடவுச்சீட்டை கடாசப் போறேன்

அனைவருக்கும் வணக்கம்

மீண்டும் உங்கள் அனைவரையும் பதிவுலகத்தில் சந்திப்பதில்
பெரு மகிழ்ச்சி.இந்தப் பதிவின் மூலம் எனது சமீபத்திய சோதனையை பதிவுலக
நண்பர்கள் அனைவரின் முன்னும் வைக்கிறேன். அதில் யாரேனும்
ஒருவர் இந்த சோதனையைக் கடக்க வழி சொன்னால் மிகவும்
மகிழ்சி அடைவேன்.

சோதனை இதுதான்

கடந்த மூண்றாண்டுகளாக நான் சவுதி அரேபியாவில் வேலை
பார்த்தேன். என்னுடைய கடவுச்சீட்டு நான் சவுதியில் வேலைப்
பார்க்கும் போதே கடந்த 2007 வருடம் காலாவதியாகிவிட்டது.
எனவே அது சவுதி ரியாத் இந்திய தூதரகத்தில் புதுப்பிக்கப்பட்டது
இந்த கடவுச்சீட்டில் என்ன வேடிக்கை என்றால் வழக்கமாக பொறியாளர்களுக்கு
வழங்கப்படும் ECNR எனப்படும் "குடியேற்ற சோதனை தேவையில்லை" என்னும்
தகுதி வழங்கப்படவில்லை. நானும் அது குறித்து ஐயப்படவில்லை. ஏன் எனில்
அந்த கடவுச்சீட்டின் மூலம் நான் 3 முறை இந்தியாவுக்கும் இரண்டு
முறை சவுதிக்கும் பயணம் செய்திருக்கிறேன்.
ஆட்குறைப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்டு நான் கடந்த 2009 செப்டம்பர்
மாதம் தாயகம் திரும்பினேன். 9 மாதங்கள் ஊரிலேயே காலம் கழித்தபின்
கடந்த 2010 மே மாதம் மறுபடியும் சவுதி நிறுவனம் ஒன்றுக்கு
நேர்முகத்தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டேன். பயண ஏற்பாட்டினை
நேர்முகத்தேர்வி்னை ஏற்பாடு செய்த பயண அலுவலகமே பொறுப்பேற்றுக்
கொண்டது. அவர்களும் இந்த ECNR தகுதியை ஆராயாமல் எனக்கு விமான
பயணச்சீட்டு வழங்கினர். இதை எடுத்துக் கொண்டு சென்னை விமான
நிலையம் சென்ற எனக்கு சோதனை ஆரம்பம் ஆயிற்று. குடியேற்ற
சோதனை அதிகாரிகள் உனது கடவுச்சீட்டில் ECNR முத்திரை இல்லாததால்
நீ பயணம் செய்ய இயலாது என கைவிரித்தனர்.உடன் பயணம் ஏற்பாடு செய்த அலுவலகத்தினை தொடர்பு கொண்டபோது
அவர்கள் நாங்கள் ஏதும் செய்ய இயலாது உடன் உங்கள் அருகாமையிலுள்ள
கடவுச்சீட்டு அலுவலகம் சென்று விண்ணப்பித்து முத்திரையை பெற்றுக்
கொண்டு பின் பயணம் செய்யவும். இதற்கு நீண்ட காலம் ஆகாது. காலையில்
கொடுத்தால் மாலையில் வழங்கி விடுவார்கள். செல்லும் போது உங்கள் பட்டச்
சான்றிதழ்களின் அசலைக் கொண்டு செல்லவும் என அறிவுரை வழங்கினார்கள்.

அதன்படி நான் என் ஊரின் அருகாமையிலுள்ள மதுரை கடவுச்சீட்டு அலுவலகம்
சென்று விண்ணபித்த போது அங்குள்ள அதிகாரி கூறினார். தம்பி உனது கடவுச்சீட்டு
சவுதியில் வழங்கப்பட்டுள்ளது. எனவே உனக்கு மாவட்ட காவல் துறை மூலம் ஆய்வு
செய்யப்பட்டே முத்திரை வழங்கப்படும். குறைந்தது அதற்கு பதினைந்து நாட்கள் ஆகும்
எனக்கூறி எனது பள்ளிச்சான்றிதழ் முதல் பட்டச்சான்றிதழ் வரை அசல் சான்றிதழ்களை
ஆய்வு செய்த பின் பணம் கட்டிச்செல் எனக்கூறினார்.அதன்படி நானும் பணம் கட்டி
எனது அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் அசல் கடவுச்சீட்டினையும் ஒப்படைத்து
வீடு திரும்பினேன்.பத்து நாட்கள் கடந்தபின் எனக்கு உள்ளூர் காவல் நிலையத்தில் அழைப்பு வந்தது.எனது
அசல் சான்றிதழ்களை பார்வையிட்ட அதிகாரி எனது குடிமைப்பொருள் வழங்கும் அட்டையைப்
பார்வையிட்டப் பின் கூறினார். தம்பி உனது கடவுச்சீட்டில் ஒரு முகவரியும், குடிமைப்பொருள் வழங்கு
அட்டையில் ஒரு முகவரியும் உள்ளதே என வினவினார். ஆம் ஐயா நான் முதல் கடவுச்சீட்டு எடுக்கும்போது வாடகை வீட்டில் இருந்தேன். பின்னர் 6 வருடங்கள் கழித்து சொந்தவீடு கட்டி
மாறி விட்டேன் எனக் கூறினேன். மேலும் ECNR முத்திரைக்கு எனது பட்டச்சான்றிதழே போதுமானது
என கூறினேன். அதை ஏற்காத காவல் அதிகாரி இராமநாத்புரம் வட்ட வருவாய் அலுவலகம்
சென்று உனது பழைய குடிமைப்பொருள் வழங்கு அட்டையின் அசலை கொண்டு வந்தால்தான் நான் உனது விண்ணப்பத்தினை நிறைவு செய்து அனுப்புவேன் எனவே அதற்கான முயற்சியில் இறங்கு என வேறு அலுவலில் மூழ்கினார்.
வட்ட வருவாய் அலுவலகம் செல்வது என்பது எனக்கு பள்ளி பயிலும் காலம் தொட்டு
வேப்பங்காய் சுவைப்பது போல. பல முறைகள் இருப்பிடச்சான்றிதழ்களுக்கும் சாதி
சான்றிதழ்களுக்கும் அலைந்து திரிந்து அங்குள்ள அதிகாரிகளின் அலட்சியப்போக்கினையும்
காலம் கடத்தும் அவலத்தினையும் நன்கு அறிந்தவன்.

கசப்போடு வீடு திரும்பிய எனக்கு ஒரு இனிப்பான செய்தி காத்திருந்தது. அது அஞ்சலகம் மூலமாக
பதிவு அஞ்சலில் வந்த எனது அசல் கடவுச்சீட்டு. திறந்து பார்த்தபோது உள்ளே
இரண்டாம் பக்கத்தில் வழங்கப்பட்டிருந்த எனது ECR முத்திரை அழிக்கப்பட்டு ECNR வழங்கப்பட்டிருந்தது
மதுரை கடவுச்சீட்டு அலுவலகத்தினால்.

எந்த அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தேனோ அதே அலுவலகம் மூலம் கடவுச்சீட்டு வழங்கப்படும்
போது நான் வேறு என்ன செய்வேன் அப்பன் முருகனுக்கு நண்றி கூறிவிட்டு அடுத்த பேருந்தில் ஏறி
சென்னை சென்று விமான பயணச்சீட்டினை மாற்றி அன்றிரவே சவுதி வந்து சேர்ந்தேன்.


இங்கு வந்த பின் ஒரு மாதம் கழித்து என் தாயார் ஒரு முறை தொடர்பு கொண்டு உன்னை காவல்
அதிகாரி வந்து கேட்டார். அவரிடம் நீ சவுதியில் இருப்பதாக கூறினேன் என சொன்னார்.
நமக்கு கடவுச்சீட்டு வந்து விட்ட்து இவர் எதற்கு மறுபடியும் தேடுகிறார் என நானும் அந்த
தகவலுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. பின்னர் ஒரு மாதம் கழித்து என் தாயார்
எனக்கு கடவுச்சீட்டு அலுவலகத்தில் இருந்து ஒரு கடிதம் வந்ததாக மின் அஞ்சலில் அந்த கடிதத்தினை அனுப்பினார்.


அதில் கடவுச்சீட்டு அலுவலகம் இவ்வாறு கூறியிருந்தது.
உன்னைப்பற்றி காவல்துறை தகவல்கள் எதிர்மறையாக இருப்பதால்
இந்த கடிதம் கண்டதும் உடனே உனது கடவுச்சீட்டை மதுரை அலுவலகத்தில் ஒப்படைக்கவும்
தவறினால் உன் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எழுதியிருந்தது.
"அடப்பாவிகளா நீங்கள்தானே கடவுச்சீட்டை அஞ்சலில் அனுப்பினீர்கள் அதைக்கொண்டு நான்
சவுதி வேறு வந்து விட்டேன் இங்கிருந்து உனக்கு எப்படி நான் கடவுச்சீட்டை ஒப்படைப்பது
ஒன்னும் புரியவில்லையே என நான் ஒரு மின் அஞ்சல் மதுரை கடவுச்சீட்டு அலுவலகத்திற்கு
அனுப்பி வைத்தேன்.


அதற்கு பதில் அஞ்சல் அனுப்பிய அதிகாரி நீ ஊருக்கு வரும்போது உனது கடவுச்சீட்டை ஒப்படைக்கவும்
என எழுதியிருந்தார்.


இப்போது என் குழப்பமெல்லாம்
நான் ஊருக்கு வந்தால் என் கடவுச்சீட்டை பறிமுதல் செய்வார்களா?
மறுபடியும் வட்ட வருவாய் அலுவலகம் சென்று குடிமைப்பொருள் வழங்கு அட்டையினை
வாங்கச் சொல்வார்களா?
ஒரு பொறியாளனுக்கு குடிமையேற்ற சோதனை தேவை இல்லை என சொல்லுவதற்கு
அவனது பட்டச்சான்றிதழ் போதாதா?
நாட்டில் அவனவன் போலி கடவுச்சீட்டுகளை வைத்துக் கொண்டு பெயர் மாற்றம் செய்து
கொண்டு என்னென்ன போக்கிரித்தனமெல்லாம் செய்கிறான்கள் அவர்களை விட்டு விட்டு
அப்பாவி பொறியாளன் ஒருவனை காவல் துறை எதிர்மறை தகவல் என பயமுறுத்தும்
இந்த கடவுச்சீட்டு அலுவலகத்தினை என்ன செய்தால் தகும்?


பேசாமல் நான் ஒன்று செய்யலாம் என இருக்கிறேன். நாட்டுக்கு வந்து
போங்கடா நீங்களும் உங்கள் கடவுச்சீட்டும் என கடவுச்சீட்டை வீசியெறிந்து
விட்டு உள்ளுரிலேயே ஒரு பெட்டிக் கடை வைத்து பொழப்பைப் பார்க்க வேண்டியதுதான்!!!!!வெள்ளி, 14 மே, 2010

மஹா பாரதமும் மானங் கெட்ட மானிட்டரும்புதிதாக நாட்காட்டி வாங்கினால் அதில் வள்ளலார் தினம் ,மீலாது நபி , மகா வீரர் ஜெயந்தி, திருவள்ளுவர் தினம் என மிக மிக முக்கியமான நாட்களை மட்டும் ஞாபகம் வைத்து கொள்ளும் அளவுக்கு நம்முடைய தண்ணி அடிக்கும் பழக்கம் இருந்தது. 13 வருடம் வனவாசமும் 1 வருடம் அஞ்ஞாத வாசமும் போய் சிரமப்பட்ட பாண்டவர்கள் போல் எனக்குள்ளும் இந்த பழக்கத்தை நிறுத்த வேண்டும் என ஒரு குரல் என் மனதில் பல்லாண்டுகளாக ஓலித்துக் கொண்டிருந்தது.

இறுதியில் இந்த அடங்காத மனது கௌரவர்கள் போல் சண்டித்தனம் செய்யவே வேறு வழியில்லாமல் ஒரு குருஷேத்ரப் போரை ஆரம்பிக்க வேண்டியதாயிற்று.


பீஷ்ம வதம்: எந்த கெட்ட பழக்கத்திற்கும் அடிப்படை இந்த ஆசைதான். இது மகாபாரத்தில் வரும் பீஷ்மரைப் போன்றது. எப்படி கௌரவர்கள் மற்றும் பாண்டவர்களுக்கு பிதாமகர் பீஷ்மரோ அது போல் தான் இந்த ஆசையும். குருஷேத்ரப் போரில் முதல் பத்து நாட்கள் பீஷ்மரை எதிர்த்துத்தான் பாண்டவர்கள் போர் புரிய நேர்ந்தது. அது போல் தண்ணியடிப்பதை நிறுத்த வேண்டும் என நினைத்ததும் இந்த ஆசையோடு பத்துநாள்கள் தொடர்ந்து போராட்டம். எப்படி பல மாவீரர்களாலும் வெல்ல முடியாத பீஷ்மர் சிகண்டியைப் பார்த்ததும் கையறு நிலையில் நின்றாரோ அதுபோல் ஓல்ட் மங்க், ஓல்ட் காஸ்க், மெக்டோவல், சிக்னேச்சர், கார்டினல், அக்கார்ட், நெப்போலியன்,சீசர், கொரியர்,ஈவினிங்க் வாக்கர், பேக் பைப்பர் என பல்வேறு சரக்குகள் அடித்தும் அடங்காத ஆசை மானங்கெட்ட மானிட்டரை அடித்ததும் நாக்குழறி கைகால் தடுமாறி இரண்டு பேர் கைத்தாங்கலாக என்னை வீடு கொண்டு போய் சேர்த்ததும் பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்தது போல் ஆசை படுத்துப் போய் விட்டது. கவனிக்கவும் ஆசை இறந்து விடவில்லை, படுத்துத்தான் இருந்தது.

துரோணாச்சாரியர் வதம். ஆசை பீஷ்மரைப் போல் அம்புப் படுக்கையில் படுத்தாயிற்று. தண்ணி அடிப்பதையும் நிறுத்தியாயிற்று. ஆனால் இந்த அறிவு துரோணாச்சாரியர் போல் போர் செய்ய வந்தது. "ஏன் தண்ணியடிப்பதை நிறுத்த வேண்டும் எவ்வளவோ பேர் அடித்துக் கொண்டு நன்றாகத்தானே உள்ளனர். தினந்தோறும் குடிக்காவிட்டாலும் வாரம் ஒருமுறை சனிக்கிழமை குடிக்கலாமே" என ஆயிரம் கேள்விகளை அம்புகளாக அறிவு வீசியது.இப்படி ஐந்து நாட்கள் அறிவோடு போராட்டம்.எப்படி தருமரின் நாவில் இருந்து வந்த "அஸ்வாத்தமன் இறந்தான்" என்ற வார்த்தையால் துரோணர் நிலை குலைந்தாரோ அதுபோல் என் தருமப் பத்தினியிடம் இருந்து வந்த ஒரு தகவல் என்னை நிலைகுலைய வைத்தது. "என்னங்க எப்பவும் தண்ணியடிச்சுக்கிட்டே திரிவாரே என் ஒன்னு விட்ட அக்காவோட புருசன் அழகப்பன் அவரு நேத்து குடிச்சுட்டு வந்து படுத்தவுடனே குடல் குடலா இரத்த வாந்தி எடுத்து செத்துப் போயிட்டாராம்."

வேறு யார் வந்து சொன்னாலும் நம்பாத துரோணர் தருமரின் வாக்கை நம்பி நிலை குலைந்து இறந்தது போல் என் தருமப்பத்தினியின் வார்த்தையை கேட்டதும் அறிவும் நிலைகுலைந்து போனது.


கர்ணவதம் . ஆசையும் அறிவும் அடங்கிப்போய் விட்டது. பதினேழாம் நாள் போரை கர்ணன் தலைமையேற்று நடத்தியது போல் எனக்கு பதினேழாம் நாள் சோதனையாக வந்தது, நான் தண்ணியடிக்கும் போது டாஸ்மாக் பாரில் செய்த தான தருமங்கள். போதை ஏறி விட்டால் யாருக்காவது பாரில் தண்ணிப் பாக்கட்டாகவோ பிங்கர் டிஷ் எனப்படும் சைட் டிஷ்களாவோ, கட்டிங்குகளாகவோ நான் பலருக்கு தானம் செய்ததுண்டு. அப்படி நான் கர்ணப்பிரபுவாய் செய்த தானங்களினால் பலன் பெற்றவர்கள் வேலை விட்டு வீடு திரும்பும் வழியில் (டாஸ்மாக் வழியாகத்தான்) நின்று கொண்டு " என்னன்னே ஐந்து நாளா உங்களை ஆளையே காணோம் என்னன்னே பிரச்சினை மாசக் கடசி காசு இல்லன்னாலும் பரவாயில்ல வாங்கண்ணே நான் வாங்கித் தாரேன். " என ஆளாளுக்கு கடைக்கு கூப்பிட்டாய்ங்க பாருங்க ஒரு சபலம் நாகாஸ்திரம் மாதிரி வந்து தாக்கியது. ஒரு செகண்டுதான் மனசை மாத்திக்கிட்டு நான் ஒரு அஸ்திரத்த அர்ச்சுனன் போல் அந்த கருண மகாராசாக்களிடம் வீசினேன். "வர்றேன் ஆனா சாப்பிட்ட பிறகு டிபன் நீதான் வாங்கித்தரனும்".
இந்த தண்ணியடிக்கிறவங்ககிட்ட உள்ள ஒரு விசேசமான குணம் இதுதான். பசிக்குதுடா ஒரு பத்து ரூவா கொடுடான்னா கொடுக்க மாட்டானுக ஆனா அதே நேரத்துல ஒரு கட்டிங்க் வாங்கி கொடுடான்னா நாப்பது ரூவா செலவழிச்சு வாங்கி கொடுப்பானுக.அஸ்திரதுக்கு உடன் பலன் இருந்தது கர்ண மகாராசாக்கள் துண்டக் காணோம் துணியக் காணோம்ன்னு ஓடியேப் போயிட்டாய்ங்க.
துரியோதன வதம். கடைசியா துரியோதனன். இது யாருன்னா நம் மனசையும் அறிவையும் கெடுக்கிற அசைவப் பழ்க்கம்தான் அது. ஆடு கோழி மீனு நண்டு இறாலுன்னு தின்னு தீர்த்தவுடன் உடம்பு மிதப்பாகி தண்ணியடிக்கிற சபலத்தினை தூண்டுதுன்னு என் மனசுக்கு ஒரு தெளிவு வந்தது. தொடையில கதையால அடிச்சு துரியோதனன் கதைய பீமன் முடிச்ச மாதிரி ஆட்டுத்தொடைக்கறி கோழித் தொடைக்கறி (லெக் பீஸ் ) இப்படி சாப்பிட்டுகிட்டு இருந்த நான் பதினெட்டாம் நாள் சைவத்துக்கு மாறினேன்.

குருஷேத்ரப் போர் முடிந்தாயிற்று. நானும் தண்ணியடிப்பதை முற்றிலும் நிறுத்தியாயிற்று.

"எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்"


புதன், 12 மே, 2010

S M S மொக்கைகள்- 6

கடந்த மொக்கைகளில் விஜய் பற்றி எழுதி நிறைய வாங்கி கட்டி கொண்டேன் அதனால் இந்த பதிவில் பொதுவான மொக்கைகள் பற்றி எழுதுகிறேன் . இதுவும் நண்பர் ஒருவரிடம் இருந்து குறுஞ்செய்திகளாக வந்ததுதான் இதை அனுப்பிய சவூதி நண்பர் கார்த்திக்கு என் நன்றி.1) “செய்... அல்லது செத்துமடி...” ---- நேதாஜி..

“படி.. அல்லது பன்னி மெய்...” --- எங்க பிதாஜி....

----------------------------------------------------------------


2) ஆசிரியர்: எவன் ஒருவனால் ஒரு விசயத்தை மற்றவர்களுக்கு புரிய வைக்க முடியவில்லையோ அவன் ஒரு முட்டாள்...

மாணவர்கள்: புரியல சார்...

------------------------------------------------


3) போலீஸ்: பஸ் எப்படி விபத்தில் சிக்கியது?

டிரைவர்: அதான் எனக்கும் புரியல சார்... நான் நல்ல தூக்கத்தில இருந்தேன்.

-------------------------------------------------------------------


4) மகன்: அப்பா! ஓவரா என்னை பக்கத்து வீட்டுப் பொண்ணோட கம்பேர் பண்ணிகிட்டு இருப்பியே... இப்ப பாரு... அவ 470 மார்க்.. நான் 480... மார்க்.

அப்பா: சனியனே... அவ பத்தாவது படிக்கிறா... நீ +2 படிக்கிரடா

-----------------------------------------------------------------------
5) மனைவி கணவனுக்கு இலக்கணம் சொல்லி கொடுக்கிறாள்.

மனைவி: நான் ரொம்ப அழகு... இது என்ன காலம்? (Tense)

கணவன்: அது ஒரு இறந்த காலம்....

-----------------------------------------------------------
6) மனசு இருந்தா “SMS” பண்ணுங்க...அன்பு இருந்தா “Picture Message” அனுப்புங்க..காசு இருந்தா “Call” பண்ணுங்க..இது எல்லாமே இருந்தா ஒங்க “செல்”ல கொரியர்’ல அனுப்புங்க....

--------------------------------------------------------------------------
7) தேர்வு அறையில்...மாணவன்: ஆல் தி பெஸ்ட்!

மாணவி: ஆல் தி பெஸ்ட்!

மாணவன் பெயில்.... மாணவி 80%
நீதி: நல்லவங்க வாக்கு மட்டும்தான் பலிக்கும்....

(ஒழுங்கா படிக்க முடியாததுக்கு என்னமா சமாளிக்கிறான்னு பாருங்க....)

--------------------------------------------------------------------
8) நாட்டாமை: என்ரா... பசுபதி...எக்ஸாம்’க்கு பெவிகால் எடுத்துட்டுப் போற?

பசுபதி: அய்யா.. கொஸ்டின் பேப்பர் லீக் ஆகிப் போச்சாம்..

நாட்டாமை: என்ர தம்பி சிங்கம்டா.. சிங்கம்டா..... சிங்கம்டா..

---------------------------------------------------
9) முடியாது என்று சொல்பவன் முட்டாள்...

முடியும் என்று சொல்பவன்தான் புத்திசாலி...

இப்ப சொல்லுங்க...என் “செல்”லுக்கு டாப்-அப் பண்ண முடியுமா...முடியாதா...?

---------------------------------------------------------------
10) லவ் லட்டருக்கும், எக்ஸாம்’க்கும் என்ன வித்தியாசம்?

லவ் லெட்டர்: மனசுக்குள்ள நிறைய இருக்கும்.. ஆனா எழுத வராது...

எக்ஸாம்: மனசுக்குள்ள ஒண்ணுமே இருக்காது... ஆனா நிறைய எழுதுவோம்... எப்பூடி?

-----------------------------------------------------------------
11) கணவன்: காலெண்டர்’ல என்னப் பாக்குற?
மனைவி: பல்லி விழும் பலன்...
கணவன்: கொண்டா.. நான் பாக்குறேன்...
அது சரி... பல்லி எங்க விழுந்தது?
மனைவி: நீங்க சாப்ட்ட சாம்பார்ல...

-------------------------------------------------
12) சைன்டிஸ்ட் எல்லாம் சொர்க்கத்தில கண்ணாமூச்சி விளையாடிட்டு இருக்காங்க..

நம்ம ஐன்ஸ்டீன் கண்டு பிடிப்பவர்...

ஆனால் நியூட்டன் ஒளிந்து கொள்ளாமல் ஒரு மீட்டர் சதுரத்தில் நிற்கிறார்.....

ஐன்ஸ்டீன்: நியூட்டனைக் கண்டுபிடித்து விட்டேன்....

நியூட்டன்: இல்லை... தவறு... நான் நியூட்டன் இல்லை.. நான் ஒரு மீட்டர் சதுரத்தில் நிற்கிறேன்.. நான் நியூட்டன்/மீட்டர்.. எனவே நான் இப்போது பாஸ்கல்....

ஐன்ஸ்டீன்: ராஸ்கல்... என்ன இது சின்னப்புள்ளத்தனமா இருக்கு....?

----------------------------------------------------------------
13) நம்ம அய்யாச்சாமி நடு ஆற்றில் படகில் போய்க கொண்டிருக்கிறார்... அப்போது தூரத்தில் ஒரு போர்டு உள்ளதைப் பார்த்து அதில் என்ன எழுதி இருக்கிறது என்று படிக்க முயல்கிறார். ஆனால் அவரால் படிக்க முடியவில்லை... எனவே அவர் படகிலிருந்து குதித்து நீந்தி சென்று படிக்கிறார்...

“இங்கு முதலை உள்ளது...யாரும் இங்கே நீந்த வேண்டாம்.”

----------------------------------------------------
14) நம்ம சூப்பர் ஸ்டார் சாப்ட்வேர் என்ஜினியராக ஒரு படத்தில் நடித்தால் பன்ச் டயலாக் எப்படி இருக்கும்?

* நான் ஆபிசுக்கு லேட்’டா வந்தாலும் லேட்டஸ்ட் சாப்ட்வேரோடத்தான் வருவேன்...

* J to the A to the V to the A --- JAVA* கண்ணா...

வைரஸ் தான் கூட்டமா வரும். ஆண்ட்டி வைரஸ் சிங்கில்’லாத்தான் வரும்.

* C க்கு அப்புறம் C++... எனக்கு அப்புறம் NO++

* நான் பாக்குறதுக்குதான் ஹார்ட்வேர் மாதிரி.. ஆனா என் மனசு சாப்ட்வேர் மாதிரி...

-------------------------------------------------------
15) வாழ்கையின் முக்கிய ஏழு நிலைகள்.(Stages)

1. படிப்பு

2. விளையாட்டு

3. பொழுது போக்கு


4. காதல்

5.

6.

7.

ஹலோ... என்ன தேடுறீங்க?

காதல் வந்த பிறகுதான் எல்லாமே நாசமாப் போயிருமே...!
----------------------------------------------

புதன், 28 ஏப்ரல், 2010

இவன் பச்சை தமிழன்

சென்ற பதிவில் இளைய தளபதி பச்சை தமிழன் விஜய் அவர்களைப் பற்றி ஒரு மொக்கை எழுதியிருந்தேன். பதிவின் ஆரம்பத்திலேயே இப்படி குறிப்பிட்டு இருந்தேன்.

//மொக்கை போட்டு ரொம்ப நாளாகி விட்டதால் இந்த மொக்கைப் பதிவை இடுகிறேன். வழக்கம் போல் இந்த மொக்கைகளுக்கும் நாயகன் நமது இளைய தளபதி விஜய்தான். விஜய் ரசிக கண்மணிகள் மன்னிக்கவும்.ஏன் எனில் இது என் சொந்த கற்பனை அல்ல எனக்கு குறுஞ்செய்திகளாக வந்ததுதான்.//

ஆனாலும் எனக்கு பின்னுட்டம் இட்டிருந்த மோகன் என்னும் ஒரு நண்பர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு இப்படி பின்னுட்டம் இட்டிருந்தார்.

//ஏன்டா பரதேசி.உனக்கு விஜய் ஐ பத்தி நினைக்கலன்னா தூக்கமேவராதா?அவன் படம் புடிக்கலன்னாமூடிகிட்டு இருக்க வேண்டியது தானே.அத விட்டுட்டு ஓவரா சலம்பிக்கிட்டு இருக்க.எனக்கும் விஜையை பிடிக்காதுதான்.நான் கம்முனு இருக்கேனில்ல. அது மாதிரி மூடிக்கிட்டு இரு. தமிழனாம் தமிழன்.நீ தமிழனா இருந்தா விஜையை பத்தி எந்த பதிவும் போடக்கூடாது. மீறி பதிவு வந்துச்சி...?இங்க பதிவு பன்ற வார்த்தையே வேற..புரிஞ்சதா??
மோகன்//

அண்ணா மோகன் அண்ணா உங்க மனச புண் படுத்திஇருந்தா மன்னிச்சுங்க அண்ணா .
எனக்கு வந்த மொக்கைகளை மற்றவரும் படித்து சிரிக்கட்டும் என்ற எண்ணத்தில் இதை எழுதினேனே தவிர யாரையும் புண் படுத்தும் நோக்கம் எனக்கு துளி கூட கிடையாது.

உங்க புண் பட்ட மனதை ஆறுதல் செய்ய இதோ ஒரு மொக்கை மட்டும் . படித்து உங்க மனச தேத்திக்கோங்கண்ணா. இதுவும் எனக்கு குறுஞ்செய்திகளாக வந்ததுதான்.என் சொந்த கற்பனை அல்ல


-------------------------------------------------------------------------------


மொக்கை


எப்போதேல்லாம் அதர்மம் தலை தூக்கி நிற்கிறதோ அதை அடக்க பக்வான் உடனே அவதரிப்பார்.


இது கீதை


எப்போதேல்லாம் அதர்மம் தலை தூக்கி நிற்கிறதோ (ஏப்ரல் இறுதி சுறா ரிலீஸ் )

அதை அடக்க பக்வான் உடனே அவதரிப்பார். (மே முதல் தேதி தலையோட பிறந்த நாள்)
இது மொக்கை மட்டுமே

வெள்ளி, 16 ஏப்ரல், 2010

S M S மொக்கைகள் - 5

வணக்கம் நண்பர்களே................
மொக்கை போட்டு ரொம்ப நாளாகி விட்டதால் இந்த மொக்கைப் பதிவை இடுகிறேன். வழக்கம் போல் இந்த மொக்கைகளுக்கும் நாயகன் நமது இளைய தளபதி விஜய்தான். விஜய் ரசிக கண்மணிகள் மன்னிக்கவும்.ஏன் எனில் இது என் சொந்த கற்பனை அல்ல எனக்கு குறுஞ்செய்திகளாக வந்ததுதான்.
----------------------------------------------------

1.விஜயின் வரவிருக்கும் 50வது படமான சுறாவின் கதை.

கதைப்படி விஜய்க்கு ஒரு சீன நண்பர் உள்ளார். அவர் ஒரு விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரை சந்திக்க விஜய் மருத்துவமனை செல்லும் போது சீன நண்பர் விஜய் காதில் "நிக் மா கியா கிஹ் மியா கியா மங்க் ஷங்க் டா கங்க்" எனச் சொல்லிவிட்டு இறந்து போகிறார். விஜய் இதற்கு அர்த்தம் கண்டறிவதற்காக சுறா போல் சீனாவுக்கு கடலில் சைக்கிளில் செல்கிறார். வழியில் இன்னொரு சைக்கிளில் வரும் தம்மன்னாவை சந்திக்கிறார். வழியில் 6 பாட்டு 3 பைட்டு போடுகிறார். கடைசியில் கிளைமாக்ஸில் சீன நண்பர் இறக்கும் போது சொன்ன வார்த்தைகளின் அர்த்தத்தை கண்டுபிடிக்கிறார். அது என்னவென்றால்

"அட நாயே ஆக்சிஜன் டியூப்பிலருந்து கைய எடுடா லூசு"

-------------------------------------------------------------------

2. ஒருவர்: விஜய் ஏன் ரொம்ப கோவமா இருக்காரு....
மற்றவர்: அவரோட 50வது படத்த டிஸ்கவரி சேனல் வாங்கப் போறாங்களாம்....
---------------------------------------------------

3.நல்ல படத்துக்கு விளம்பரம் தேவையில்லை - சொன்னவர் விஜய்

நல்ல படத்துக்கு விஜய் தேவையில்லை - சொல்வது மக்கள்.

-------------------------------------------------------------------

4.பிகர் கிடைக்காமல் தவிக்கும் இளைஞர்களே

ஒரு நாள் வரும்

அப்ப ஒரு பொண்ணு உன்னை

ரொம்பவும் லவ் பண்ணி

உன்னை அப்படியே கட்டிப் பிடிச்சு

கிஸ் பண்ணிக்கிட்டே சொல்லுவா.....

"ஐ லவ் யூ டாடி"

----------------------------------------------------------

5.பாகிஸ்தானில் இப்போது பிரபலமான SMS
IPL நிராகரித்தது வெறும் பதினோறு பாகிஸ்தானியரை ஆனால்


சானியா மிர்சா நிராகரித்தது ஒட்டுமொத்த இந்தியரையும்!!!!!

-------------------------------------------------------------------------

6.தமிழ் ஹீரோக்களும் இந்திய கிரிக்கெட் வீரர்களும் ஒரு ஒப்பீடு.


ரஜினி = சச்சின் (ரெண்டு பேரும் எப்பவும் டாப்தான்)
கமல் = கங்குலி (திறமை இருக்கு ஆனா ஹிட் ஆக முடியல)
சூர்யா = யுவராஜ் (லக் மட்டும் தான்)
விக்ரம் = தோனி ( ஹிட் ஆனா பயங்கரம்தான் ஆனா ஹிட் மட்டும் தான்)
மாதவன் = சிரீ சாந்த் ( மெகா பிளாப் ஆனாலும் இன்னும் கவர்ச்சி இருக்கு)
அஜித் = சேவாக் ( அடிச்சா சிக்ஸ் இல்லன்னா அவுட்)
விஜய் =


அட இவன் பால் பொறுக்கிப் போடுற பயங்க........

--------------------------------------------------------------

7.கடைசியா ஒரு தத்துவம்

இன்னைக்கு வைக்கிற மீனு நாளைக்கு கருவாடா ஆகும் ஆனா

இன்னைக்கு வைக்கிற மீன் குழம்பு நாளைக்கு கருவாட்டு குழம்பாகுமா?....

-------------------------------------------------------


வியாழன், 25 மார்ச், 2010

கலைஞரின் தலைவலிக்கு மருத்துவர் சேதுராமனின் மருந்து

அரசியல் சாணக்கியர், பல்கலை வித்தகர் டாக்டர் கலைஞருக்கு எத்தனையோ தலைவலி திருகுவலி வந்தாலும் தனது திறமைகளால் அவற்றை தவிடுபொடி ஆக்குவதில் வல்லவர்.ஆனால் அவராலேயே தீர்த்து வைக்க முடியாத பிரச்சினை ஒன்று உண்டு என்றால் அது அவரது வாரிசு பிரச்சினைதான். 86 வயதுக்கு மேல் ஆகி விட்டபடியால் ஓய்வு எடுக்க அவர் மனம் விரும்புகிறது. ராமருக்கு பட்டம் சூட்ட விரும்பாத தசரதராக அவர் நெடுமாறன் போன்றவர்களால் விமர்சிக்கப் பட்டாலும் ஓய்வை அறிவிக்க முடியாமல் தினறி வருவதற்கு காரணம் அவரது அதீத பிள்ளைப் பாசமே.

பட்டம் சூட்டப்படாத மன்னராக வலம் வரும் ஸ்டாலினை முதல் மந்திரியாக்கி அழகு பார்க்க எத்தனை தடைகள் (வைகோ போன்றவர்களால்) கட்சியில் வந்தாலும் அவர்களை தூக்கி எறிய கலைஞர் தயங்கியதில்லை. ஆனானப்பட்ட பேராசிரியரே ஸ்டாலினை தலைவராக ஏற்றுக் கொள்ள தயார் என சொல்லித்தான் கட்சியிலும் ஆட்சியிலும் குப்பைக் கொட்டிக் கொண்டிருக்கிறார்.


ஸ்டாலின் மன்னராவதற்கு தடையாக இருந்து வந்த அழகிரிக்கு மத்தியில் பதவி வாங்கி கொடுத்து தற்காலிக தீர்வு கண்டார் கலைஞர். சரி இனி மத்தியில் முக அழகிரி மாநிலத்தில் ஸ்டாலின் என மக்களும் நினைத்துக் கொண்டனர். அதை உறுதி செய்யும் விதத்தில் அண்ணனும் தம்பியும் இனைந்து "நாங்கள் இரட்டைக்குழல் துப்பாக்கிகள்" என ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்து முக அழகிரியின் பிறந்த நாளில் மதுரையில் பாசமழை பொழிந்து கொண்டனர்.
ஆனால் சமிபத்திய ஜூனியர் விகடன் பத்திரிகை பேட்டியில் "கலைஞருக்கு அடுத்து யாரை அடுத்த தலைவராக ஏற்றுக் கொள்வீர்கள்" என சிண்டு முடியும் கேள்விக்கு முக அழகிரி "யாரையும் கலைஞருக்கு அடுத்து தலைவராக ஏற்றுக் கொள்ள மாட்டேன்" என மண்டை காயும் விதத்தில் பதில் சொல்லியிருக்கிறார். அழகிரி அண்ணனின் ஆங்கில அறிவு அல்லது ஹிந்தி மொழி பரிச்சியமின்மை அவரை த் தொடர்ந்து டெல்லியில் குப்பைக் கொட்ட தடுக்கலாம். எனவே தமிழகத்திலேயே தனது அரசியலைத் தொடர விரும்பியே இப்படி சொல்லியிருப்பதாக அரசியல் வல்லுனர்கள் கருதுகிறார்கள்.
இந்த இரட்டைக் குழல் துப்பாக்கிகளால் வரும் தலைவலியை கலைஞர் எப்படி சமாளிக்கப் போகிறார் என நாடே யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் இதோ நானிருக்கிறேன் கலைஞருக்கு மருந்து தர என மதுரையில் ஒருவர் கிளம்பியிருக்கிறார் தமிழகத்தின் சந்திரசேகர் ராவ் மதுரை மீனாட்சி மருத்துவமனையின் தலைவர் மூமூக கட்சி தலைவர் மருத்துவர் சேதுராமன்.

இவரது தீர்வு தமிழகத்தினை இரண்டாக பிரிப்பது. இதற்கு இவர் கூறும் காரணம் பல

"சென்னையை தலைமையிடமாகக் கொண்டு நடக்கும் நிர்வாகத்தால் கன்னியாகுமரி , தூத்துக்குடி , திருநெல்வேலி , ராமநாதபுரம் மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. தொழிற்சாலைகள் அனைத்தும் சென்னையைச் சுற்றியே துவங்கப்படுகின்றன.வேலை வாய்ப்புக்காக தென்மாவட்ட மக்கள், வட மாவட்டங்களில் குடிபெயர்ந்து வருகின்றனர்
தென் பகுதி மக்கள் எல்லோருமே சென்னைக்கே வருவதால் மக்கள் நெருக்கடி அதிகமாகிறது. ஆனால் தென் மாநிலங்களில் பல ஏக்கர் நிலம் இருந்தாலும் அவர் கஷ்டப்படுகிறார். வேலை வாய்ப்பு இல்லாமல் அலைகிறார்கள். இந்த ஏற்றத்தாழ்வு நீக்கப்பட வேண்டுமானால் தென் மாநிலத்திலும் தொழில் வளர வேண்டும். தமிழ்நாட்டை இரண்டாக பிரித்து தென் மாநிலம்- வட தமிழகம் உருவாக்கினால் தான் இப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். காவிரி கரையை எல்லையாக வைத்து திருச்சி முதல் கன்னியாகுமரி வரை 18 மாவட்டங்களை ஒன்றினைத்து தென்மாநிலம் என்னும் பெயரில் மதுரையை தலைநகராக கொண்டு ஒரு மாநிலம் அமைய வேண்டும்."
இந்த மருந்தினை கலைஞர் அவர்கள் உடனே ஏற்றுக் கொண்டு மத்தியில் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி தமிழகத்தினை இரண்டாக பிரித்தார் என்றால், வடமாநிலத்துக்கு ஸ்டாலினையும் தென் மாநிலத்துக்கு அழகிரியையும் முதல்வராக்கி அவரது தலைவலிக்கு தீர்வை காணலாம். அப்படியே நிம்மதியாக ஓய்வு எடுக்கலாம். இது செய்து முடிக்கப் பட்டால் கலைஞருக்கு ஒரு வாழ்நாள் சாதனையாக அமையும். அப்படியே டாக்டர் சேதுராமனின் கோரிக்கையை நிறைவேற்றி வைத்தாற் போலும் இருக்கும். அப்படியே வாழ்விழந்து தவிக்கும் வடமாநில டாக்டருக்கும் (மருத்துவர் அய்யா தமிழ்குடிதாங்கி) ஒரு வாழ்வு கிடைக்கும்.அதைவிட முக்கியமாக
எங்களைப் போன்ற இராமநாதபுரம் மக்களுக்கு எதற்கெடுத்தாலும் சென்னை வரும் தேவையில்லாமல் (ஒருநாள் பயணம் 2000 ரூபாய் பயணச்செலவு) மதுரையிலேயே எங்களது வேலைகளை முடித்துக் கொள்ள முடியும்.
கலைஞர் அய்யா விரைந்து இதை செய்வாரா?
ஆவலுடன் ஒரு இராமநாதபுரத்துக்காரன்.சனி, 6 மார்ச், 2010

மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை வரவேற்போம்

உலக மகளிர் தினம் தனது நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடப் போகும் எதிர் வரும் மார்ச்சு திங்கள் 8ம் நாள் இந்திய பாராளுமன்றத்தில் அரசு மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை அரசியல் சட்டத்திருத்தம் 108 மூலம் அமுல்படுத்த இருக்கிறது.

கடந்த 15 ஆண்டுகளாக இதோ அதோ என கிடப்பில் போடப்பட்டு இருந்த இந்த சிறப்பான ம்சோதா தற்போது நிறைவேறப் போகிறது.இதன் மூலம் பிற்படுத்தப் பட்டவரை விட, தாழ்த்தப் பட்டவரை விட, மலைஜாதி மக்களைவிட சமூக அநீதி இழைக்கப்பட்ட பெண்களுக்கு ஒரு விடிவுகாலம் வர இருக்கிறது.

உலக பொருளாதார மன்றம் 2009 (world economic forum) தனது அறிக்கை ஒன்றில் வளர்ந்த 134 நாடுகளில் சமூகத்தில் பாலியல் சம நிலை இல்லாத நாடுகள்(gender disparity) என்னும் பட்டியலில் இந்தியா 114ஆவது இடத்தினை வகிக்கிறது எனச் சொல்கிறது. இனி அந்த அவப் பெயர் வரப் போவதில்லை.

இந்த மசோதாவிற்கு முன் எப்போது இல்லாத அளவில் பிரதான எதிர்கட்சியான பா.ஜ.கவும் இடது சாரிக் கட்சிகளும் ஆதரவு தர முன் வந்திருக்கின்றன. இது ஒரு பாரட்டத்தக்க ஒரு அம்சம். வழக்கம் போல ராஷ்டிரிய ஜனதா தளமும் சமாஜ்வாடி கட்சியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதற்கு அவர்கள் பல்வேறு காரணங்கள் சொன்னாலும், முக்கியமான காரணம் இந்த மசோதா நிறைவேற்றப் பட்டால் இந்த கட்சிகளுக்கு வேட்பாளர்கள் கிடைக்காது என்பதே ஒரு காரணம் ஆகும்.

தமிழ்நாட்டில் அதிமுக ஜா ஜெ என பிரிந்து தேர்தலை 1989ல் தேர்தலை சந்தித்தபோது ஜானகி அணியில் சிவாஜி கணேசனுக்கு 50 இடங்கள் வழங்கப்பட்டன. இவ்வளவு பெரிய நடிகருக்கு வெறும் 50 இடங்கள்தானா என ஒருவர் வினவியபோது அப்போதைய ஜா கட்சியின் நிர்வாகி திரு ஆர்.எம். வீரப்பன் கேலியாக குறிப்பிட்டாராம் "முதலில் அவர்கள் 50 வேட்பாளர்களை கண்டு பிடிக்கட்டும் அப்புறம் பார்ப்போம்" என. இது வேடிக்கை என்றாலும் இதே போல ஒரு நிலைமைதான் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டால் லாலுவுக்கும் முலாயமுக்கும் ஏற்படும். ஏன் எனில் ரவுடிகள் கட்டப் பஞ்சாயத்துக்காரர்கள் குண்டர்கள் யாரும் பெண்களில் இல்லை என்பதே இவர்களின் எதிர்ப்புக்கு காரணம். அரசு இவர்களின் வெற்றுக் கூச்சலுக்கு பயப்படாது இந்த மசோதாவினை நிறைவேற்ற வேண்டும்.

இதுவரை பாராளுமன்றத்தில் 1 0 சதவீதம் மட்டுமே பெண்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டிருக்கிறது என கணக்கெடுப்புகள் சொல்லுகின்றன. அந்த பத்து சதவீதமும் இந்திரா, மீராகுமார் போல் தந்தையாலோ, சோனியாகாந்தி ரப்ரிதேவி போல் கணவனாலோ அல்லது ஜெயலலிதா மாயாவதி போல் ஆண் தலைவர்களால் வளர்க்கப்பட்டவர்களாக உள்ளனர். இந்த மசோதா நிறைவேற்றப் பட்டால் சுயமாக எந்த ஆணுடைய தயவுமின்றி பெண்கள் தங்களது பங்களிப்பை இந்த நாட்டுக்கு செய்வதற்கு உறுதுனையாக இருக்கும்.

கணவன் கொண்டு வந்து கொடுக்கும் பணத்தில் கட்டும் செட்டுமாக குடும்பம் நடத்தி பிள்ளைகளை படிக்க வைத்து குடும்பத்தினை வெற்றிகரமாக கொண்டு செல்லும் நிர்வாகிகள் பெண்கள் அவர்களுக்கு நாட்டை ஆளுவது ஒரு சாதாரன வேலையாகத்தான் இருக்கும்.மேலும் நிர்வாகமும் சுத்தமாக லஞ்ச லாவன்யம் இன்றி கட்டைப் பஞ்சாயத்துகள், கமிசன் இன்றி நேர்மையாக இருக்கும் என நம்பலாம்.

எனவே இந்த மகத்துவமான மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவினை மேல் உள்ள படத்தில் இருக்கும் பெண்களைப் போல் உற்சாகமாக விசிலடித்து வரவேற்போம்.


வெள்ளி, 5 மார்ச், 2010

பரமஹம்ச நித்யாணந்தரும் பத்திரிக்கை தர்மமும்

கடந்த சில நாட்களாக பத்திரிக்கைகளிலும் தொலைக்காட்சி ஊடகங்களிலும்
தலைப்புச் செய்தியினைப் பிடித்திருப்பவர் சுவாமி பரமஹம்ச நித்யாணந்தர்.


Sting operation என்னும் பெயரில் சாமியாரின் லீலைகள் என நடிகை ரஞ்சிதாவுடன்
நெருக்கமாக இருக்கும் ஒளிக் காட்சி ஒன்றை திரும்ப திரும்ப ஒளிபரப்பி
தமிழ் கூறும் நல்லுலகம் அனைவருக்கும் சேவை செய்திருக்கிறது சன் தொலைக்காட்சி.


சொல்லிவைத்தாற்போல் அனைத்து பத்திரிக்கைகளும் சாமியாரை குறைகூறியும் நடிகை ரஞ்சிதாவின் புகைப்படங்களைப் போட்டும் தங்களது பத்திரிக்கை விற்பனையையும் சன் தொலைக்காட்சி தனது TRP ரேட்டிங்கை உயர்த்திக் காட்டவும் முனைந்திருக்கின்றன.

சிலபேர் சென்னை மாநகர காவல் ஆனையரிடம் சாமியார் தமிழ் கலாச்சாரத்தினை சீர்குலைத்ததாகவும் அவர்மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் அளித்திருக்கின்றனர்.


அறுசுவை உணவுகளை இலையில் படைத்து அதன் அருகிலேயே ஒரத்தில் சிறிது நரகலை வைத்தால் எவ்வளவு அறுவெறுப்பு வருமோ அதுபோல்தான் இந்த தமிழ் ஊடகங்களும் பத்திரிக்கைகளும் தினமும் செய்தி வெளியிட்டு வருகின்றன.

மானாட மயிலாட, ராணி 6 ராஜா யாரு போன்ற நிகழ்சிகளிலும் அபத்தமான நெடுந்தொடர்களிலும் இவர்கள் கட்டிக் காத்துக் கொண்டிருக்கும் தமிழ் கலாச்சாரத்தினை விடவா சாமியாரின் ஒளிக் காட்சி கலாச்சாரத்தினை சீரழித்து விட்டது.ரஞ்சிதா நாடோடித் தென்றல், ஜெய்ஹிந்த் போன்ற படங்களில் இதைவிட மோசமாக காட்சி அளித்திருந்தபோது இந்த தமிழ் கலாச்சார காவலர்கள் எங்கு போனார்கள் எனத் தெரியவில்லை.

திரைபடங்களில் கதாநாயகியினை கீழுதட்டுடன் மேலுதடு கடித்து விரகமாக பார்ப்பது பிட்டத்தில் தட்டுவது, தொப்புளில் பம்பரம் விடுவது, உதட்டோடு உதடு கடிப்பது, மார்போடு மார்பு உரசுவது என எத்தனை எத்தனை ஆபாசங்களை இந்த கதாநாயகர்கள் அன்று எம்ஜிஆர் தொடங்கி நேற்று வந்த சிம்பு வரைக்கும் எப்படியெல்லாம் தமிழ் கலாச்சாரத்தினை சீரழிக்கின்றனர். அதை விடவா இந்த சாமியார் செய்து விட்டார்.

தினத்தந்தி நாளிதழை எடுத்துக் கொண்டால் பக்கத்திற்கு பக்கம் கற்பழிப்புச் செய்திகள் கொலைச் செய்திகள். தினமலர் நாளிதழை சொல்ல வேண்டாம்.வாரமலரில் வரும் அன்புடன் அந்தரங்கம் என்னும் ஒரு பகுதியே விருந்து அல்லது மருதம் படித்த நிறைவைத் தரும். தினத்தந்தி குழுமத்தின் வார வெளியீடான ராணியை எடுத்துக் கொண்டால் அட்டைப் படத்தில் மேலே ரஞ்சிதா கொடுத்திருக்கும் தோற்றம் போல்தான் படங்கள் வரும். கீழே குடும்பப் பத்திரிக்கை எனும் தலைப்பு வேறு. பத்திரிக்கையின் மொத்தப் பக்கங்கள் 32ல் 16 பக்கம் ஆணமைக் குறைவு விளம்பரங்கள் போக மீதிப் பக்கங்களில் சினிமா கிசு கிசு நரி விடும் கரடி என பாலியல் செய்திகள் மட்டும் தான் வரும். இது காலம் காலமாக தமிழ் கலாச்சாரத்தினை சீர் கெடுப்பதினை யார் புகார் செய்வது.

இது போக புலனாய்வு இதழ்கள் என்ற பேரில் நக்கீரன் ஜூனியர் விகடன் குமுதம் ரிப்போர்ட்டர் என அனைத்துப் பத்திரிக்கைகளும் பாலியல் செய்திகளுக்கும் கள்ளத்தொடர்பு செய்திகளுக்கும் தான் முன்னுரிமை கொடுத்து செய்தி வெளியிட்டு வருகின்றன.

முதலில் இந்த பத்திரிக்கைகள் தங்கள் முதுகில் உள்ள அழுக்கினை கழுவி விட்டு பின் அடுத்தவர் முதுகினை கழுவ வேண்டும்.

ஒரு தனி மனிதனின் படுக்கையறையினை வேவு பார்த்து அதை மக்களுக்கு சொல்லுவதின் மூலம் இவர்கள் என்ன சாதித்து விட்டார்கள். சாமியாரின் முகத்திரையினை இவர்கள் கிழித்து அதன் மூலம் மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தியதாக தம்பட்டம் அடித்துக் கொள்ளலாம். ஆனால் அதை ஒரு நாகரீகமாக புகைப்படத்தினை வெளியிட்டு சொல்லியிருக்கலாம். ஆனால் பிரைம் டைம் என்னும் நேரத்தில் அனைவரும் பதைபதைக்க ஒளிக்காட்சியினை திரும்ப திரும்ப ஒளி பரப்பியதன் மூலம் சன் தொலைக்காட்சியின் வியாபார நோக்கம் மட்டும் வெளிப்பட்டதே தவிர இவர்களிடம் கிஞ்சித்தும் சமூக விழிப்புணர்வு இல்லை.

ஒரு நல்ல பத்திரிக்கை என்பது எது என ஒரு அறிஞரிடம் கேட்டபோது அவர் சொன்னாராம், "எந்த பத்திரிக்கையில் ஆண்மைக் குறைவு விளம்பரங்கள் வராமல் உள்ளதோ அதுவே சிறந்த பத்திரிக்கை" என கூறினாராம்.இது தற்போது சன் டிவி போன்ற இந்த ஊடகங்களுக்கும் பொருந்தும்.


புதன், 3 மார்ச், 2010

ஸ்....அப்பாடா ரொம்ப க(கு)ஸ்டமப்பா.....

கொஞ்ச நாட்களுக்கு முன்பு நம்ம ஆதிமூல கிருஷ்ணன் அண்ணன் தாமிராவா இருந்தபோது ஒரு கோட்டர் அடிக்க எவ்வளவு சிரமப்பட்டார் என்பதை மிக சிறப்பாக எழுதியிருந்தார்.அப்பக்கூட நான் நினச்சதுண்டு "என்னடா மனுசன் ரொம்ப மிகைப்படுத்தி எழுதுறாரோ"ன்னு ஆனா அது எவ்வளவு உண்மைன்னு அனுபவிச்ச பின்னாடிதான் நமக்கு புரியுது. இதோ அந்த அனுபவம்.

கீழக்கரையில மொத்தம் மூனு டாஸ்மாக் கடை. ஒன்னு புது பஸ்ஸ்டாண்டு பக்கமும் ஒன்னு பழய பஸ்ஸ்டாண்டுக்கு பக்கமும் மூனாவது இரண்டுக்கும் இடையிலும் இருக்குது. நம்ம எப்பவுமே சரக்கு வாங்க இந்த நடுக்கடைக்குத்தான் போவது வழக்கம். ஏன்னா இந்த கடைப் பகுதிதான் கொஞ்சம் இருட்டா இருக்கும். தெரிஞ்சவுங்க கண்ணுல படாம சரக்கு வாங்கலாம்.

தெரிஞ்சவங்க கண்ணுல படாம தண்ணியடிக்கிற யோக்கிய சிகாமனியா என்னை நினைச்சிடாதிங்க. இந்த தெரிஞ்சவுங்க டாஸ்மாக் பாரில் பழகித் தெரிஞ்சவுங்க. பய புள்ளைக பாத்தாங்கன்னா வந்தது நம்ம குவாட்டருக்கு ஆபத்து. "என்ன தம்பி ஆளையே காணோம்"ன்னு ஆரம்பிப்பாய்ங்க. அப்புறம் கூசாம "இருபது ரூபா இருந்தா கொடுங்க"ன்னு தலையை சொரிவாய்ங்க அதுக்கும் நம்ம மசியலன்னா "தம்பி ஒரு ரெண்டு அவுன்சாவது கொடுங்க"ன்னு மண்டைய பிய்க்க வைப்பாய்ங்க. இவய்ங்களுக்கு பயந்து பாட்டில டேபிள்ள வச்சுச் சரக்கு அடிக்காம இடிப்புல சொருகிகிட்டு அடிப்பது உண்டு.(கோட்டருக்கு ஒரு துளி குறைஞ்சாலும் நமக்கு ஆத்மதிருப்தி கிடைப்பதில்லை அதுனால சரக்க யாரோடும் பகிர்ந்து கொள்ள மனசு ஒப்புவதில்லை).

நம்ம ராசி எப்படின்னா எப்பவுமே கீழக்கரை பஸ் ஸ்டாண்டுல ராம்நாடு பஸ்ஸுக்கு நின்னா ஏர்வாடி தர்ஹா வண்டியா வரும். ஏர்வாடி போக வந்தோம்னா ராம்நாடு பஸ்ஸா வரும். அதே மாதிரி மூனு நாளைக்கு முன்னாடி தங்கமணி ஊர்ல இல்லாத நன்னாளில் எனக்கு தண்ணியடிக்க ஆசை வந்தது.

வழக்கம் போல நம்ம இருட்டுக் கடைக்கு தெரிஞ்சவுங்க கண்ணுல படாம வந்து பாத்தா கடை பூட்டிக் கிடக்கு. வாசல்ல உட்காந்துகிட்டு இருந்த பெருசுகிட்ட விபரம் கேட்டா அன்னைக்கு மீலாது நபியாம். விடுமுறையாம்.அடச்சேன்னு ஆசையை அடக்கிக்கிட்டு அடுத்த நாளும் அந்த கடைக்கு விசயம் செய்தேன். மணி சுமார் எட்டு இருக்கும் அந்நேரத்திலும் முத நாள் பேங்க் மூடியிருந்தா மறுநாள் ஒரு கூட்டம் வருமே அதே மாதிரி ஒரு கூட்டம் கடையை தேன்கூட்டை தேனிக்கள் சுத்தின மாதிரி கூடியிருந்தது.மெல்ல அதுக்குள் சக்கர வீயுகத்தை அபிமன்யு உடைச்ச மாதிரி உள்ளே புகுந்தேன்.

பாத்தா பயபுள்ளைக எல்லாம் ஒரு 62 கொடு 72 கொடு அப்படின்னே சரக்கு வாங்கிகிட்டு இருந்தாய்ங்க. என்னடா சரக்கு பேரை கேட்காம 62,72ன்னு கேட்குறாய்ங்களே நினைச்சுகிட்டு இருக்கும்போது கையிலிருந்த காசை டாஸ்மாக் விற்பனையாளர் பிடுங்கினார். "என்ன வேணும் 62ஆ 72ஆ?ன்னு ஒரு அதட்டல் வேறே. தொண்டையில் எச்சி விழுங்கிகிட்டே "ஒரு சீசர் கொடுங்க"ன்னேன்.

"இல்ல"ன்னு விற்பனையாளர் சொன்னதும் "அப்ப ஒரு கொரியர் கொடுங்க"ன்னேன். கூட்டத்தில இருந்த ஒருத்தன் "அட என்னய்யா நேரத்த வீனாக்கிகிட்டு சீக்கிரம் ஏதாவது 62ஐயோ 72ஐயோ வாங்கிட்டு இடத்த காலி பண்ணுவியா இப்பப் போயி சீசர் கோரியர்ன்னு பினாத்துரியே"ன்னு சவுண்டு விட்டான். உடனே விற்பனையாளர் "தம்பி ரம்மும் விஸ்கியும் தான் இருக்கு நீங்க ஒரு ஒன்பது ஒன்பதரைக்கு வந்திங்கன்னா நீங்க கேட்டது கிடைக்கும்"ன்னு வயித்துல பிராந்தியை வார்த்தார்.ரம்மை அடிச்சா மறுநாள் கழுத்தில வலிக்கும் மேலயும் அந்த வாடை நம்ம வாய்க்கே சமயத்துல பிடிப்பது இல்லை. விஸ்கியை அடிச்சா மறுநாள் தலை வலிக்கும் அதுனால் காத்திருந்தாவது பிராந்தி வாங்கி அடிப்போம்ன்னு அப்போதைக்கு வெளியில் வந்து விட்டேன்.

ஒன்பதரை மணிக்கு மறுபடியும் இருட்டுக் கடைக்கு படையெடுத்தேன். பாத்திங்கன்னா ஒரு லாரி நின்னுகிட்டு சரக்கை இறக்கிக்கிட்டு இருக்குது. வழக்கம் போலவே கொள்ளைக்கூட்டம். மறுபடியும் உள்ளே நுழைஞ்சு விற்பனையாளரை நெருங்கினா கையிலிருந்த காசை புடிங்கி நான் கேட்காமலயே ஒரு MC கோட்டரையும் சில்லரையும் கையில் திணிச்சார்.

பாருக்குள்ளே கூட்டம் இல்ல. எல்லா பயபுள்ளைகளும் பாரில் தண்ணியடிக்காது வீட்டுல போயிதான் அடிக்கும் போல. ஒரே ஒருத்தன் மட்டும் டேபிள்ளே தலையை வச்சு தூங்கிகிட்டு இருந்தான். கூட்டம் இல்லாததுனாலே நான் தைரியமா சரக்க டேபிள்ள வச்சு ஒரு கிளாசுல 90 ஊத்தி லிம்கா மிக்ஸ் பண்ணி வாயில வைக்கப் போணா எதுத்த மாதிரி எங்கூட ஸ்கூல்ல படிச்ச பசீரு. அவன் தான் அந்த பாருல தூங்கிகிட்டு இருந்தவன்னு எனக்கு லேட்டா புரிஞ்சுது. உடனே சுதாரிச்சிகிட்டு "பசீரு ரொம்ப நாளைக்கு அப்புறம் தண்ணியடிக்கிறேன் ஷேர் ஏதும் பண்ண முடியாது அதுனால எதுவும் கேட்காதே"ன்னு சொல்லிக்கிட்டு இருக்கும் போதே நான் சொன்னதை கொஞ்சம் கூட சட்டை செய்யாமல் பாட்டிலை கையில் எடுத்து ராவா குடிச்சிட்டு "அடேய் ரொம்ப நாளைக்கு அப்புறம் தண்ணியடிக்கிறே, கொஞ்சமா அடி"ன்னு கொஞ்சம் மொச்சைப் பருப்பை வாயில போட்டு போயிக்கிட்டே இருந்தான்.

மறுபடியும் சரக்கு வாங்க முடியாத நிலை. ஏன்னா பத்து மணிக்கு மேல ஆகி விட்டது.கடை மூடியாச்சு அடிச்ச 90 பசியைக் கிள்ள நாலு பரோட்டவ போடலாம்ன்னு எங்க ஊர்காரர் தவசியோட புரோட்டாக் கடைக்குப் போனேன்.

"என்ன தம்பி ஆச்சு ஏன் ஒரு மாதிரியா இருக்கிங்க"ன்னு தவசி அண்ணன் கேட்டார். நடந்தை எல்லாம் சொல்லி "அண்ணே புல்லா ஏறாம ஒரு மாதிரி ஏமாத்தமா இருக்குன்னே"னேன். தவசியண்ணன் கொஞ்சம் யோசிச்சு "தம்பி பக்கத்து பெட்டிக் கடையில ஒரு கோக் வாங்குங்க"ன்னார்."ஏண்ணே"ன்னு கேட்டதுக்கு "வாங்குங்க சொல்லுறேன்"ன்னு சொன்னார்.

கடையில ஒரு மூலையில் ஒரு பாதி குவாட்டர் ரம்மை எடுத்தார்."தம்பி இத அடிக்கிறிங்களா" ன்னு கேட்டார். ரம்மு நமக்கு ஒத்து வராதுன்னு வேதாந்தம் பேச என்னால் முடியவில்லை. எதக் கொடுத்தாலும் குடிக்கிற மனநிலையில் இருந்ததால் தலையாட்டினேன்.

தவசியண்ணன் சரக்கை ஒரு கிளாசுல ஊத்தி கொஞ்சம் கோக்கை மிக்ஸ் பண்ணி கொடுத்தார். மிச்ச கோக்கை அதே பாட்டில்ல ஊத்தி சரக்கு மாதிரி மறுபடியும் கடை மூலையில் வச்சிட்டார். "ஏன்னே இப்படி பண்ணுறிங்க"ன்னு கேட்டதுக்கு,"இது நம்ம ஊரு அண்ணமராசவுக்காக ரெகுலரா வாங்கி வைக்கிறது. ராம்நாடுல இருந்து பய வேலையை முடிச்சு வர பத்து மணிக்கு மேலாகும் என்பதால நான் எப்பவும் வாங்கி வைப்பேன்"ன்னார்.நான் உடன் ஆச்சர்யம் அடைந்து "என்னது அன்னமராசாவா அவன் மூடிய மோந்து பாத்தாலே கீழே விழுந்துடுவான் அவன் டெய்லி கட்டிங்க் அடிக்கிறானா?"ன்னேன், அதுக்கு தவசியண்ணன் சிரிச்சிக்கிட்டே" நீ சரக்கை குடி அப்புறம் வேடிக்கையை மட்டும் பாரு"ன்னு சொன்னாரு. நமக்கென்ன சரக்கு கிடைச்சாச்சுன்னு மறுபடியும் ஒரு 90 யைத்தாக்கிகிட்டு சாப்பிட ஆரம்பிக்கும் போது எங்க ஊரு அண்ணமராசா வந்தான் ராம்நாடுல இருந்து வேலையை முடிச்சுகிட்டு வர்றான் போல.

வந்தவன் உடனே பக்கத்துக் கடையில ஒரு கோக் வாங்கினான். தவசியிடம் ஜாடை காட்டினான். அவர் உடனே அந்த சரக்கு பாட்டிலை எடுத்துக் கொடுக்கவும் அண்ணமராசா இப்போது கோக்குக்கே கோக்கை மிக்ஸ் பண்ணிக் குடிக்க ஆரம்பிச்சான்.

ஒரு அரைமணி நேரம் கழிச்சு வீட்டுக்கு போகும் போது என்கூட வந்த அன்னமராசா சொன்னான் "அண்ணே ரம்மு மாதிரி சரக்கு எதுவும் இல்லன்னே, பாருங்க எனக்கு நல்லா போதை ஏறிக்கிட்டே இருக்கு"ன்னான். இருட்டுல நான் சிரிச்சது அவனுக்குத் தெரியாது.


சனி, 27 பிப்ரவரி, 2010

கடவுளுக்கு ஒரு கடிதம்

ஒரு சிறு பையனுக்கு மிகவும் அவசரமாக ரூபாய் 50 தேவைப்பட்டது. பெற்றோரிடம் கேட்டும் பயனில்லை. எனவே கடவுளிடம் பிரார்த்தனை செய்தான். நீண்ட நாள் பிரார்த்தனை செய்தும் கடவுள் அவனுக்கு உதவி செய்தாரில்லை. எனவே கடவுளுக்கு ஒரு கடிதம் எழுதினான். அதில் அவனுக்கு தேவையான ரூபாய் 50 ஐ குறிப்பிட்டு அந்த கடிதத்தை கடவுள், இந்தியா என்னும் முகவரிக்கு அஞ்சல் செய்தான்.

கடிதத்தினைப் பார்த்த அஞ்சல் துறை அதிகாரிகள் வேடிக்கையாக அந்த கடிதத்தினை இந்திய குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்தார்கள். குடியரசுத்தலைவர் அந்த கடிதத்தினைப் படித்துப் பார்த்தார். மிகவும் ஆச்சர்யம் அடைந்தார். உடன் அவரது காரியதரிசியை அழைத்து அந்த பையனுக்கு ரூபாய் 20 மட்டும் அனுப்பச் சொன்னார். குடியரசு தலைவர் ரூபாய் 50 அந்த பையனுக்கு அதிகம் எனவும் மேலும் அதிக பணம் அனுப்பி அந்த பையனை கெடுக்க மனமில்லாமலும் ரூபாய் 20 அனுப்பச் சொன்னார்.

பையனுக்கு பணம் வந்து சேர்ந்தது. பணத்தினை பெற்றுக் கொண்ட பையன் கடவுளுக்கு ஒரு நன்றிக் கடிதம் அனுப்பினான். அதில் கீழ் வருமாறு குறிப்பிட்டான்.

"கேட்டவுடன் பணம் அனுப்பிய கடவுளே உனக்கு நன்றி, ஆனால் நீ அதனை இந்திய குடியரசுத்தலைவர் அலுவலகம் வாயிலாக அனுப்பியிருக்கக்கூடாது ஏனெனில் அந்த கழுதைகள் ரூபாய் 30 ஐ வரிப்பிடித்தம் செய்து விட்டனர்."


செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

ஓம் ஆமின் ஆமென்


மேலே உள்ள படம் எல்லோருக்கும் தெரியும் இந்து மதத்தின் உச்சக் கடவுள் (supreme deity) அடிமுடி அறியவொண்ணா அண்ணாமலையோனின் உருவம்.

இதையும் அனைவரும் அறிந்திருப்பர். கிறித்துவ மதத்தில் ஒரு புனிதச்சின்னம். இயேசுபிரான் பரலோகப் பிதாவிடம் தன் ஆவியை இதில் அறைந்திருந்தபோதுதான் விட்டார்.


இது ஹஜருல் அஸ்வத் இஸ்லாம் மார்க்கத்தில் சொர்க்கத்தின் கல் என குறிப்பிடப்படுவது. இனையத்தில் படம் கிடைக்கவில்லை எனவே தோரயமாக வரைந்துள்ளேன். நபிகள் பெருமகனார் மெக்காவில் உம்ரா செய்யும்போது இந்த கல்லை முத்தமிட்டதாகவும் சிலர் தன் கைத்தடியால் ரசூல்லாஹ் அவர்கள் தொட்டதாகவும் கூறுவர்.
சரி இனி விசயத்திற்கு வருவோம். எப்படி மாரி மேரி மரியம் என பெயர்களில் ஒற்றுமை உள்ளதோ எப்படி ஓம் என்றாலும் ஆமென் என்றாலும் ஆமின் என்றாலும் உச்சரிப்பு ஒலி ஒன்றாக உள்ளதோ அதுபோல் இந்த மூன்று உருவங்களுக்கும் உள்ள ஒற்றுமையை கீழ் கண்ட படத்தின் மூலம் அனைவரும் உணரலாம்.
இதுதான் அந்தப் படம். மதங்கள் வெவ்வேறாக இருந்தாலும் இவை குறிப்பது ஒரு உருவத்தினை மட்டும்தான் என்பது இந்தப் படத்தின் மூலம் உணரலாம்.இஸ்லாம் பிளான் எனப்படும் குறுக்கு வெட்டுத் தோற்றத்தினையும் இந்து மதம் முன் முகப்பையும் கிறித்துவம் அதன் நீள்வெட்டுத் தோற்றத்தையும் குறிக்கின்றன.
ஹஜருல் அஸ்வத் உருவம் ஒரு கண்ணின் உருவத்தினை ஒத்தது என்பதை மெக்கா சென்று ஹஜ் யாத்திரை முடித்த ஹாஜிகள் அனைவரும் ஒத்துக் கொள்வர். அது கண் எனக் கொண்டால் சிவபெருமானின் நெற்றிக் கண்ணையும் இங்கு நிணைவு கொள்ள வேண்டும்.
எனவே இந்த மதங்கள் அனைத்தும் உணர்த்தும் ஒரே தத்துவம் என்னவெனில் நமது புறக்கண்களை மூடி அகக் கண்ணைத் திறந்தால் மட்டுமே இறைவனை அடைய முடியும் என்பதையே உணர்த்துகின்றன. இதைத்தான் கந்த குரு கவசத்தில் சொல்லப் படுகிறது
"நடு நெற்றித்தானத்து நானுனை தியானிப்பேன்" என்று.
பாதைகள் வெவ்வேறாக இருந்தாலும் பயணத்தின் முடிவில் நாம் சென்றடைய வேண்டியது இறைவன் ஒருவனைத்தான்.

சனி, 13 பிப்ரவரி, 2010

டுமீல் டுமீல் டுமீல்


ஒரு அரைச்செங்கலை எடுத்து மதுரையில் ஏதாவது ஒரு தெருவில் விட்டெறிந்தால் அது கண்டிப்பாக ஒரு பாண்டியின் தலையில்தான் விழும். அந்தளவுக்கு பாண்டிகளின் எண்ணிக்கை பாண்டி(யன்) தலைநகர் மதுரையில் அதிகம்.
ஒரு முக்கிலோ அல்லது ஒரு சந்திலோ பத்துப்பேர் நின்று பேசிக்கொண்டிருந்தால் அதில் எட்டுப்பேர் பாண்டியாகத்தான் இருப்பார்கள்.
சண்முகப்பாண்டி, சங்கரப்பாண்டி, சுந்தரப்பாண்டி, அழகுபாண்டி,வீரப்பாண்டி,செல்வப்பாண்டி,
முருகுப்பாண்டி,முத்துப்பாண்டி,வேல்ப்பாண்டி என பெயருக்கு முன் ஏதாவது ஒரு prefix இருந்தாலும் இவர்களையும் மக்கள் அழைப்பது என்னவோ பாண்டி என்றுதான்.
எனவே பெயர்க் குழப்பம் வரக்கூடாது என்பதற்காக இந்த பாண்டிகளை நெட்டைப்பாண்டி, குட்டைப்பாண்டி, கட்டைப்பாண்டி,வெள்ளைப்பாண்டி,கருத்தப்பாண்டி என தோற்ற ஆகு பெயர்களாலும் முனிச்சாலைபாண்டி,ஒத்தக்கடைப்பாண்டி,அனுப்பானடிப்பாண்டி என இட ஆகு பெயர்களாலும் பழக்கடைப்பாண்டி,உரக்கடைபாண்டி, கறிக்கடைப்பாண்டி என தொழில் ஆகு பெயர்களாலும் மக்கள் அழைப்பதுண்டு.
அந்த வகையில் வித்தியாசமானவர்தான் இந்தப் பதிவின் நாயகன் டுமீல் பாண்டி.
துப்பாக்கியில் இருந்து தோட்டாக்கள் வருவதுபோல் இவர் வாயிலிருந்து வரும் ஒவ்வோரு வார்த்தைகளும் எதிராளியைத் தாக்கி மயக்கம் அடையச் செய்யும். மறுமுறை இவரைக் காணும்போது ஒவ்வொருவருக்கும் குலை நடுக்கம் ஏற்படச்செய்யும் வகையில் இவர் சு(வி)டும் டுமீல்கள் நிலைகுலையச் செய்யும் திறன் கொண்டவை.
மாதிரிக்கு சில டுமீல்கள். படிப்பவர்களின் வசதிக்காக டுமீல் பாண்டியின் டுமீல்கள் கருப்பு வண்ணத்திலும் உண்மை நிலவரம் நீல வண்ணத்தில் அடைப்புக் குறியிலும் தரப்பட்டுள்ளன.
டுமீல் 1. டுமீல் பாண்டி ஆறாம் வகுப்பு படிக்கும்போது பள்ளியில் கொடைக்கானலுக்கு சுற்றுல்லா சென்றார்களாம். அங்கு இவரை ஒரு மலைப்பாம்பு கவ்வி விழுங்க முயற்சி செய்ததாம். டுமீல் பாண்டி தன்னிடமிருந்த காம்பஸ் உதவியுடன் பாம்பை கிழித்துக் கொண்றாராம். (சுற்றுலாவில் செத்த பாம்பு ஒன்றினை வழியில் பார்த்த டுமீல் தன் டிரவுசரில் இருந்த சேப்டி பின்னால் குத்தியிருக்கிறார்.)
டுமீல் 2. டுமீல் பாண்டி கோயமுத்தூரில் ஒரு கட்டிட காண்ட் ராக்ட் எடுத்து வேலை பார்த்திருக்கிறார். அந்த கட்டிடத்தின் மதிப்பு ஒரு கோடியாம். மேலும் இதில் சிறப்பம்சம் என்ன வெனில் அந்த ஒரு கோடி ரூபாய் கட்டிடம் ஒரு நாய்க்காக கட்டப்பட்டதாம். (ஒரு கோடி ரூபாய் கட்டிடத்தில் நாய்க்காக ஒரு பத்தாயிரம் ரூபாய் மதிப்பீட்டில் மரத்திலான் செட்டு ஒன்று மட்டுமே டுமீல் பாண்டி பார்த்த வேலை)
டுமீல் 3. டுமீல் பாண்டி வேலை பார்த்த ஒரு கட்டிடத்தில் இருந்து சித்தாள் ஒருவர் தவறி விழுந்து விட்டாராம். பல்வேறு மருத்துவர்கள் கைவிரித்த பின்னர் டுமீல் அவருக்கு வாய் வழியே ஒல்டு மங்க் ரம்மை குடிக்கக் கொடுத்திருக்கிறார். சித்தாள் பிழைத்துக் கொண்டாராம்.(உண்மையில் பிராந்தி விஸ்கி போன்றவையின் விலை ஏற்றத்தால் பாதிக்கப்பட்ட டுமீல் தற்போது அடிப்பது ஓல்ட் மங்க் மட்டுமே. எனவே ஓல்ட் மங்கின் பெருமை கூறவே இந்த டுமீல்).
டுமீல் 4. முன் சொன்னது போல் மருத்துவர்களால் கைவிடப்பட்ட ஒரு தீராத நோயை தீர்த்த அனுபவம் டுமீலுக்கு உண்டு. அது என்னவென்றால் ஒரு நோயாளி நீண்ட நாள்கள் தலையில் அரிவாள் வெட்டுப்பட்டக் காயத்தில் புழுக்கள் வந்து அவதிப்பட்டு வந்தாராம். எந்த மருத்துவராலும் அந்த புழுக்களை அகற்ற முடியவில்லையாம். டுமீல் பாண்டி ஆட்டுக்கறியின் தொடைக்கறியை 200 கிராம் வாங்கிவரச் செய்து அதனை புழுக்கள் உள்ள காயத்தில் வாழை மட்டை வைத்துக் கட்டி விட்டாராம். ஒரு மணி நேரத்தில் புழுக்கள் எல்லாம் கறியில் ஏறி விட இவர் நோயாளியை குணப்படுத்தினாராம் (டுமீல் கறிக்கடையில் தலைக்கறி வாங்க சென்று இருந்திருக்கிறார். அங்கு ஆட்டின் தலையில் அடம் பிடித்துக் கொண்டு வராமல் இருக்கும் புழுக்களை அகற்றும் போது பார்த்திருக்கிறார்.)
டுமீல் 5. டுமீலின் அண்ணன் மகளுக்கு திருமணம் நிச்சயமாகி இருந்திருக்கிறது.மாப்பிள்ளை வீட்டில் 100 பவுண் நகை கேட்டார்களாம். ஆனால் கையில் கொஞ்சம் கூட காசு இல்லை. டுமீலின் அண்ணன் மனைவி மிகவும் கவலை அடைந்திருக்கிறார். ஆனால் கவலையே படாத டுமீலும் டுமீலின் அண்ணனும் (பெரிய டுமீல்) தங்களிடம் பரம்பரை பரம்பரையாக இருந்து வந்த குவைகளின் ஒரு பகுதியை (பொற்கொல்லர் தங்கம் உருக்கப் பயன்படுத்தும் ஒரு மண்ணால் ஆன குவளை) உடைத்து உருக்கினராம். 100 பவுனுக்கு மேலேயே தங்கம் கிடைக்க அதை வைத்து ஜாம் ஜாம் என கல்யாணத்தினை நடத்தினராம். (உண்மையில் பெண் பிடித்துப் போன மாப்பிள்ளை வீட்டார் பத்துப் பவுனுக்குமேல் பரிசம் போட்டு தங்கள் செலவிலேயே திருமணத்தினை நடத்தினராம்).
டுமீல் பாண்டியின் டுமீல்களை கையும் களவுமாக பிடித்து அம்பலப் படுத்தினாலும் டுமீல் தன் டுமீல்களை விடுவதில்லை. இந்தப் பதிவுகூட டுமீலின் ஒப்புதலின் பேரிலேயே வெளியிடப்படுகிறது.

வியாழன், 11 பிப்ரவரி, 2010

பாம்பு புடிச்சா பத்து லட்சம்


அந்த இருட்டில் டார்ச் அடித்து மலைச்சாமி எதையோ தேடிக் கொண்டிருந்தது கடைவீதியில் இருந்து வீடு திரும்பிய சண்முகத்திற்கு வியப்பாக இருந்தது.

மலைச்சாமி சண்முகத்தின் சகலை. ஆரம்பப் பள்ளி ஒன்றில் ஆசிரியர். சனி ஞாயிறு விடுமுறைகளில் சண்முகத்தின் வீட்டில் வந்து தங்கிச் செல்வதுண்டு.
"என்ன தம்பி தேடுறீங்க எதையாவது பணத்த தொலச்சிட்டிங்களா"?
"இல்லண்ணே ஒரு பாம்பு வந்துச்சு அதத்தான் தேடிக்கிட்டு இருக்கேன்"
ஊரின் ஆரம்பத்தில் இருந்தது சண்முகத்தின் வீடு. கட்டி ஐந்து வருடம் ஆகி விட்டது. சுற்றிலும் தென்னை மரத்தோப்புகள், வீடு கட்டி வந்த காலம் தொட்டு பாம்பு ஏதும் சுற்றுப்புறத்தில் யாரும் பார்த்ததில்லை.
"என்ன தம்பி சொல்லுறிங்க பாம்பா பாத்தவுடனே அடிக்கக் கூடாதா" சிறுபிள்ளைகள் வீட்டில் இருப்பதால் சண்முகம் கவலையடைந்தான்.
"அடிக்கக்கூடாதுன்னே இந்த பாம்பு இருதலை மணியன் மாதிரி இருக்கு இத உயிரோட பிடிச்சுக் கொடுத்தா பத்து லட்ச ரூவா வரை கிடைக்கும்"
"எந்த கேனையன் தம்பி இதச் சொன்னான்"
"ச்சூ சும்மா இருங்கன்னே எங்கூட வேலைப் பார்க்குற வாத்தியாரோட மாமாதான் இதச் சொன்னாரு, இந்த மாதிரி இருதலை மணியன் பாம்புக்கு இப்ப நல்ல கிராக்கியாம். இதுல இருந்து கேன்சருக்கு மருந்து எடுக்கலாமாம்"மதிலோரமாகத் தேடிக்கொண்டே மலைச்சாமி கூறினான்.
சண்முகத்தின் மனத்திரையில் தன்னுடன் கல்லூரியில் பயின்ற சகாய ராசு வந்து போனான்.அவனும் இப்படித்தான் "கருப்புபூனை பிடிச்சா ஒரு லட்சம் கருநொச்சி செடி கிடைச்சா இரண்டு லட்சம், ஒரு மில்லியன் டாலர் நோட்டை மாத்துனா பல லட்சம்"ன்னு எப்பவும் புருடா விட்டுக்கிட்டுறுப்பான்.
"அண்ணே இங்க வந்து பாருங்க" மலைச்சாமி டார்ச் அடித்துக் காட்டிய இடத்தில் ஒரு மூண்றடி நீளமுள்ள பாம்பு மரவட்டை போல சுருண்டு படுத்துக் கிடந்தது.
"அண்ணே நான் இங்கய பாம்பு ஓடாமப் பாத்துகிறேன் நீங்க ஓடிப்போயி ஒரு அரிசிச்சாக்க எடுத்துட்டு வாங்க அப்படியே புடிச்சுடலாம்"
"தம்பி கொத்தி கித்தி வைக்கப் போகுது ஒரு குச்சிய எடுத்து அடிச்சுப் போடுங்க எதுக்குப் போயி புடிச்சுக்கிட்டு"
'அண்ணே இந்தமாதிரி பாம்பெல்லாம் கொத்தாதுன்னே, எந்த பாம்பு இரண்டு கலர் அல்லது இரண்டு டிசைனுக்கு மேல இருக்கோ அதுதான் விஷமுள்ள பாம்பு இதப் பாருங்க ஒரே கலரு ஒரே டிசைனு கொத்தாது போயி சாக்க எடுத்துட்டு வாங்க" மலைச்சாமி முனியாண்டி விலங்கியல் மூண்றாமண்டு மாதிரி பேசினான்.
சண்முகத்திற்கு கோபம் வந்தாலும் கொழுந்தியாப் புருசனாச்சேன்னு சாக்கு ஒன்னு எடுத்துட்டு வந்தான்.தவளையோ அல்லது எலியோ தின்ன மயக்கத்துல கிடந்த அந்த பாம்பு மலைச்சாமி ஒரு குச்சியை வைத்து தள்ளவும் சாக்கில் போயி சுகமாக படுத்துக் கொண்டது. சாக்கின் முனையை ஒரு சணலில் கட்டி பாம்போடு சாக்கை வீட்டுக்கு கொண்டு வந்து ஹாலில் ப்ரிட்ஜ் இருந்த ஓரத்தில் வைத்தான்.அப்புறம் செல்போனை எடுத்து யாருக்கோ பேச ஆரம்பித்தான்.
"அண்ணே பார்ட்டி வந்துகிட்டு இருக்காங்க, கண்பர்ம் பண்ணிட்டாங்கன்னா சுளையா பத்து லட்சம் கிடைக்கும் நைட்டோட நைட்டா லட்சாதிபதி ஆயிருவேன்" மலைச்சாமி உற்சாகமாக பேசினான்.
"சித்தப்பா எங்க வீட்டுலதான் பாம்ப புடிச்சுருங்கீங்க அதுனால எங்களுக்கும் பாதிக்காச கொடுத்துடனும்" சாக்கை கண் கொள்ளாமல் பார்த்துக் கொண்டிருந்த சண்முகத்தின் மகன் பேரம் பேசினான்.
அரைமணி நேரம் போயிருக்கும். வெளியே பைக் ஒன்று வந்து நிற்கும் சத்தம் கேட்டது. இரண்டு ஆசாமிகள் 40 வயதுக்கு மேல் இருக்கும். மக்களுடன் தான் கூட்டணி என்னும் மாநிலக் கட்சியின் கரை வேட்டி கட்டியிருந்தார்கள். இராம்நாடு மாவட்டத்துக்குரிய வகையில் முகத்தில் முக்கால்வாசி மீசை வைத்திருந்தார்கள்.அவர்கள் இருவரையும் ராம்நாடு பஸ் ஸ்டாண்டில் லாட்டரி சீட்டு வித்துக் கொண்டிருந்தபோது பார்த்ததாக சண்முகத்திற்கு நியாபகம்."லாட்டரிய கவர்மெண்டு ஒழிச்சதும் பய புள்ளைக இப்படி கிளம்புருச்சு போலருக்கே"ன்னு சண்முகம் நினைத்துக் கொண்டான்.
"சரக்கு எங்க தம்பி" வந்தவரில் ஒருவன் மலைச்சாமியிடம் கேட்டான்
"இந்தா இருக்குன்னே" சாக்கை அப்படியே தூக்கி அவர்களிடம் காட்டினான் மலைச்சாமி.
சாக்கைப் பிரித்து இருவரும் ஆராய்ச்சி செய்தனர். "தம்பி கண்பர்ம் இருதலை மணியனேதான். சரக்க எடுங்க இப்பவே இராம்நாடு போயி பார்ட்டியப் பாத்து பணத்த வாங்கிடுவோம்"
"அடப்பாவிகளா இவனுக பார்ட்டி கிடையாதா ஏஜண்டுக போலிருக்கே" சண்முகம் நினைத்துக் கொண்டான்.
"அண்ணே உங்க பைக்க எடுங்க ஒரு எட்டு ராம்நாடு போயிட்டு வந்துறலாம்" மலைச்சாமி கூறினான். மணி பதினொன்னுக்கு மேலாகி விட்டதால் ராம்நாடுக்கு பஸ் கிடையாது. தவிரவும் சரக்கை வைத்துக் கொண்டிருந்தால் சின்னப் புள்ளைகள் தூங்காது என்பதால் சண்முகம் பைக்கை எடுக்க உடன்பட்டான்.
ஒரு பைக்கில் சண்முகமும் மலைச்சாமியும் அமர்ந்து கொள்ள ஏஜண்டுகள் இருவரும் தாங்கள் வந்த பைக்கில் ஏறிக்கொண்டனர். சரக்கை மலைச்சாமி கையில் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். ஏஜண்டுகள் வழிகாட்ட அரைமணி நேரத்தில் ராம்நாடு பாரதிநகர் வந்தனர்.
உயர்தட்டு மக்கள் வசிக்கும் தெருபோல் எல்லா கட்டிடங்களும் வனப்புடன் இருந்தன. ஒரு பெரிய புதிய பங்களாவின் முன் ஏஜண்டுகள் வண்டியை நிறுத்தி அழைப்பு மணியை அழுத்தினர்.
கதவைத் திறந்த நபரை சண்முகத்திற்கு உடன் அடையாளம் பிடிபட்டது. சகாய ராசு சண்முகத்தின் கல்லூரி தோழன்.
"என்ன இந்நேரத்துல உள்ள வாங்க" என்று வரவேற்றவன் சன்முகத்தைப் பார்த்ததும் "சண்முகம் நல்லாருக்கியா"ன்னு கைப் பிடித்தான்.
மலைச்சாமி கையிலிருந்த சரக்கை சகாயராசுவிடம் காட்டினான். சரக்கப் பார்வையிட்ட சகாயராசு உதடு பிதுக்கினான்.
"வெயிட்டு ரொம்ப கம்மியா இருக்கு மூனு கிலோவுக்கு மேல இருந்தாத்தான் பத்து ரூபாக்கு மேல போகும் இப்ப வித்தா ரொம்ப கம்மியாத்தான் கேப்பாங்க, கொடுத்துட்டுப் போங்க ஒரு மண்பானையிலப் போட்டு முட்ட வெள்ளக் கருவ கொடுத்தம்னா ஒரு வாரத்துல மூனு கிலோவுக்கு மேல வந்துடும் பத்து ரூவாக்கு மேல கூட வித்துறலாம்" என்னவோ இறால் வளர்க்கிற மாதிரி சகாயராசு பேசினான்.
சகாயராசுவிடம் போன் நம்பர் வாங்கிக் கொண்டு மலைச்சாமியும் சண்முகமும் விடைப் பெற்றனர்.
ஒருவாரம் கழித்து மலைச்சாமி சோகமாக சண்முகம் வீட்டுக்கு வந்தான். "அண்ணே அந்த பாம்பு ஒடிப்போயிருச்சாம் சே கைகெட்டுனது வாய்கெட்டலியே"
"எனக்குத் தெரியாதா தம்பி இதெல்லாம் டுபாக்கூர்" சண்முகம் மலைச்சாமியை நக்கலாக பார்த்தபடி கூறினான்.
ஒரு மாதத்திற்கு அப்புறம் சண்முகம் அவன் பைக்கினை சர்வீஸ் செய்ய ராம்நாடு போயிருந்தான். பைக்கினை சர்வீஸ் செய்யக் கொடுத்து விட்டு திரும்பும் போது ராஜம் மோட்டரூக்கு பக்கத்த்தில் இருந்த டாடா சுமோ கார் ஷோரூம் வாசலில் அந்த ஏஜண்டுகள் இருவரையும் பார்த்தான். எண்ணன்னே இந்தப் பக்கம்" ஏஜண்டுகளிடம் சண்முகம் கேட்டான்.
"வண்டி ஒன்னு புக் பண்ண வந்தோம் தம்பி"
"இன்ஸ்டால்மெண்டான்னே" சண்முகம் கேட்டான்.
"இல்ல தம்பி ரெடிகேஷ்"
யோசனையுடன் வீடு திரும்பிய சண்முகத்திடம் மனைவி சொன்னாள். "என்னங்க உங்களுக்கு விசயம் தெரியுமா என் தங்கச்சி புருசன்{மலைச்சாமி} டிராக்டர் ஒன்னு வாங்கியிருக்காராம். தீடிருன்னு ஏது அவருகிட்ட இம்புட்டு காசு"
இப்பல்லாம் இருட்டானதும் சண்முகம் டார்ச்சு ஒன்னு எடுத்துக்கிட்டு மதிலோரமா தேடிக்கிட்டு இருக்கான்.

திங்கள், 8 பிப்ரவரி, 2010

BRMS பட்டப்படிப்பை வரவேற்போம்

கிராமப்புற மக்களுக்கு சிறந்த மருத்துவ சேவை அளிக்கும் பொருட்டு BRMS ( Bachelor of Rural Medicine and Surgery) என்னும் மூன்றாண்டு பட்டப் படிப்பை அறிமுகப் படுத்தப் போவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் அறிவித்துள்ளார்.
MBBS படித்து முடித்த மருத்துவர்கள் ஓராண்டு கிராமப்புறங்களில் கட்டாயமாக சேவை செய்ய வேண்டும் என முன்னாள் நடுவன் அரசு சுகாதாரத் துறை அமைச்சர் மருத்துவர் அன்புமனி அறிவித்த போது மருத்துவர்கள் தரப்பில் அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் வேறு வழியின்றி இந்த பட்டப் படிப்பை அறிமுகப் படுத்துவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.


இன்றைய காலக்கட்டத்தில் மருத்துவம் பொறியியல் போன்ற தொழில் கல்வி படித்தோர் படித்து முடித்ததும் குறுகிய காலங்களில் தாங்கள் கல்விக்காக முதலீடு செய்த பணத்தினை எடுக்கும் பொருட்டு நல்லதொரு வேலையினை நகரத்திலோ வெளிநாட்டிலோ தேடிக் கொள்கின்றனரே ஒழிய யாரும் கிராமப் புறங்களில் சேவை செய்யும் நோக்கத்தில் முன்வருவதில்லை. அப்படியே வெகுசிலர் முன் வந்தாலும் கிராம மக்களிடமிருந்து அவர்களுக்கு சரியான வரவேற்பு கிடைப்பதில்லை. காரணம் கிராம மக்களிடம் உள்ள அறியாமை மற்றும் அவர்களின் மிகக் குறைந்த வருமானம்.
MBBS மருத்துவர்கள் சோதனை என்னும் பெயரில் வசூலிக்கும் (Diagnosing Charges) கட்டணங்கள் கிராமப் புற மக்களை குறைந்த செலவில் மருத்துவம் செய்யும் RHMS DHMS என பட்டங்கள் போட்டுக் கொண்டு மருத்துவம் செய்யும் சாலையோர மருத்துவர்களை(Quack doctors) நாட வைக்கிறது.

எனது இராமநாதபுர மாவட்ட கிராமப்புறங்களிலும் இது போன்ற போலி மருத்துவர்கள் (Quack doctors) நிறைய உண்டு. நோய்களுக்கு அவர்கள் அளிக்கும் வித்தியாசமான சிகிச்சை முறைகளை எந்த வித விஞ்ஞானத்திலும் அடக்க முடியாது.


எலும்பு முறிவு ஏற்பட்டால் எம் மக்கள் செல்வது நுடங்கட்டி வலசை என்னும் ஊருக்குத்தான். இங்கு முட்டைப்பத்து என்னும் சிகிச்சை மிகப் பிரபலம். நோயாளியுடன் உதவியாள் ஒருவர் பத்து நாள் தங்கி சிகிச்சை பெற கட்டணம் வெறும் ஆயிரம் மட்டுமே. இதையே நகரில் உள்ள எலும்பு முறிவு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தால் இரத்த சோதனை யூரின் சோதனை,ECG, X ray , Scan மற்றும் அறைவாடகை மருந்து என குறைந்தது இருபதாயிரம் வேண்டும்.நாட்பட்ட வயிற்று வலிக்கு மக்கள் செல்வது முதுகுளத்தூருக்கு. இங்குள்ள வைத்தியர் தன்னிடம் உள்ள ஒரு நீண்ட குழாய் ஒன்றை தன் வாயில் வைத்து மறு முனையை நோயாளியின் வாயில் வைத்து உறிஞ்சுகிறார். உடன் ஒரு கருப்பு நிறத்தில் ஒரு திடப் பொருளை எடுத்துக் காட்டி "இதுதான் உன் வயிற்றுக் கோளாறுக்குக் காரணம் இனி எந்த பயமுமில்லை" என வைத்தியம் செய்கிறார். இந்த வைத்தியத்திற்கு பெயர் மாந்தம் எடுப்பது.இதற்கான கட்டணம் வெறும் 100 ரூபாய் மட்டுமே. உண்மையில் அந்த திடப் பொருள் நோயாளி வயிற்றில் இருந்ததா அல்லது வைத்தியரின் வாயில் இருந்ததா என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம்.இதே முதுகுளத்தூரில் இன்னும் ஒரு வைத்தியம் உள்ளது. அது மஞ்சள் காமாலைக்கானது. பொதுவாக கிராமங்களில் மஞ்சள் காமாலை வந்தால் கீழாநெல்லி சாறினை கொடுத்து சரிசெய்யும் வைத்தியர்களை நாடுவதுண்டு. கீழக்கரை இலட்சுமிபுரம் உச்சிப்புளி ரெயில்வே கேட் காரைக்குடி போன்ற இடங்களில் இந்த வகை வைத்தியம் மிகப் பிரபலம். ஆனால் முதுகுளத்தூர் வைத்தியம் இதற்கு மாறுபட்டது. நோயாளி உள் மருந்து உட்கொள்ள தேவையில்லை. நோயாளி வைத்தியரை நேரடியாகப் பார்க்கவும் தேவையில்லை. ஒருவகையான் வேர் ஒன்றை மருத்துவர் தருகிறார். அதை நோயாளிக்கு வேண்டிய நபர் யாரவது வாங்கி வந்து நோயாளியின் கையிலோ அல்லது கழுத்திலோ கட்டி விட்டால் போதும் மஞ்சள் காமாலை குணமாகி விடுகிறதாம்.எங்கள் ஊர் கீழக்கரையிலும் ஒரு வினோத வைத்தியர் உண்டு அவர் பெயர் டிஸ்கோ ஆலிம்சா. டிஸ்கோ ஆடி குணமாக்குவதில்லை இவர் வியாதிகளை. மாறாக ஒரு குவளை தண்ணீரை மந்திரித்து நோயாளியின் முகத்திலும் தலையிலும் தெளிக்கிறார். இதற்கு இவர் வசூலிப்பது வெறும் முப்பது ரூபாய் மட்டுமே. வெள்ளி செவ்வாய் கிழமைகளில் இங்கு கூட்டம் "எமைக்காத கூட்டம்" என்பார்களே அப்படி ஒரு கூட்டம்.இதெற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் ஒரு வைத்தியம். அது மாவட்ட எல்லையான பார்த்திபனூரில். இங்குள்ள சுற்றுப் புற கிராம மக்கள் முதுகு மற்றும் கழுத்து வலி வந்தால் அனுகுவது ஒரு இஸ்லாமிய முதியவரை. நோயாளி அவரது வீட்டுக்கு இரண்டு சிறிய கூழாங்கற்களை எடுத்துச் செல்ல வேண்டும். வீட்டின் முன் நின்று வைத்தியரை அழைக்க வேண்டும். அவர் வந்து "கற்களை கீழேப் போட்டுவிட்டு திரும்பிப் பாராமல் செல்லுங்கள்" என சொல்லுகிறார். அதன் படி செய்தால் முதுகு வலி மற்றும் கழுத்துவலி குணமாகிறது என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை. இதற்கு வைத்தியர் கட்டணம் ஏதும் வசூலிப்பதில்லை.இதெல்லாம் போக "நோய்க்கும் பார் பேய்க்கும் பார்" என்னும் பழமொழி ஒன்று கிராமப் புறங்களில் பிரசித்தம். அதன்படி நோய்க்கு இதுபோல் போலி வைத்தியர்களிடம் வைத்தியம் செய்து கொண்டிருக்கும் போதே கோடாங்கி, குறிசொல்லி,துன்னூறு(திருநீறு)பொடுபவர்,கப்பலோடி முனி, ஒத்தைப்பனை முனி, முக்கு முனி, ஆலிம்சா, தர்கா என பல்வேறு நபர்களையும் துணைக்கழைப்பதுண்டு.இதெற்கெல்லாம் மூலகாரணம் நகரங்களில் உள்ள மருத்துவமனைகள் வசூலிக்கும் கட்டணங்கள் ஏழை மக்களுக்கு எட்டாக் கனியாக இருப்பதுதான்.காய்ச்சலோ அல்லது தலைவலியோ என வரும் நோயாளிகளிடம் நகர மருத்துவர்கள் தங்களிடம் உள்ள அதி நவீன கருவிகளுக்கு வருமானம் வரும் வகையில் இரத்த சோதனை, சிறுநீர் சோதனை, X RAY , ECG, SCAN, ENDOSCOPY என கறக்கத் தவறுவதில்லை.

சிக்கலான மருத்துவத்திற்கு இவற்றைப் பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால் சாதாரன காய்ச்சல் தலைவலி அஜீரனக் கோளாறுகளுக்குக் கூட இந்த சோதனைகளை பயன்படுத்துவதால் கிராமப் புற மக்களுக்கு நகர மருத்துவங்கள் நரக மருத்துவங்களாகி விடுகிறது. ஒரு முறை சென்று சூடு கண்ட பூனைகளாகி விட்ட யாரும் வியாதி வந்தால் நகர மருத்துவர்களை நாடுவதில்லை.

அரசு மருத்துவமனைகளின் அவலங்களும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.ஊழியர்களின் அலட்சியப்போக்கும் அரசு மருத்துவ மனைகளின் நீண்ட வரிசைகளும் கிராமப்புற மக்களை இது போல் முறையற்ற போலி வைத்தியம் செய்பவர்களிடம் செல்ல வைக்கிறது.

எனவே வருமானம் குறைந்த கிராமப் புற மக்களுக்கு BRMS படித்த மருத்துவர்கள் பணியிலமர்த்தப்பட்டால் போலி மருத்துவர்களிடமிருந்து விடுதலையும் அதே நேரத்தில் பாகுபாடற்ற தரமான் சிகிச்சையும் கிடைக்கும். கிராமப் புற மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இம் மருத்துவப் படிப்பின் பாடத்திட்டம் அமைய வேண்டும். அதே போல் இவர்களை பணியிலமர்த்தும் கிராமப் புறங்களில் குறைந்த பட்சம் இரத்த சிறுநீர் பரிசோதனைகள் இலவசமாக மக்களுக்கு கிடைக்க அரசு முன் வர வேண்டும். அவ்வாறு செய்யும் பட்சத்தில் இம் மருத்துவர்களுக்கு அமோக வரவேற்பு கிராம மக்களிடமிருந்து கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.

புதன், 3 பிப்ரவரி, 2010

அதுக்கு நான் கல்யாணம் பண்ணாம இருந்துருக்கனும்.

"நீ எப்பவாது தனியா உட்கார்ந்திருக்கியாடா" தீடிர்ன்னு நண்பன் ஜாபர் கேட்டான்.

ஜாபர் என் பள்ளித்தோழன். சென்னையில் தொழில் செய்கிறான். நான் சென்னை போகும் போதெல்லாம் இவனைப் பார்க்க தவறுவதில்லை. சமீப காலமாக குண்டலினி சக்தி,ஜீவ முக்தி இப்படித்தான் பேசிக் கொண்டிருக்கிறான்.

"என்னடா கேட்டதுக்கு பதில் சொல்லு என்னைக்காவது தனியா உட்கார்ந்திருக்கியாடா" மறுபடியும் கேட்டான்.

"ஏன் இல்லை தினமும் காலையில் வெளிக்கி இருக்கும் போது தனியாத்தாண்டா உட்காந்திருக்கேன்."

"அப்ப முக்கிக்கிட்டு இருப்ப, நான் கேட்டது எந்த வித எண்ணங்களும் இல்லாம அம்மாவோட கருப்பையில் இருந்தோமே அதே மாதிரி."

"நீ என்ன சொல்ல வர்றே தியானத்தப் பத்தியா"

"ஆமா தினமும் காலையில் ஒரு பத்து நிமிசம் பத்மாசனம் போட்டு உட்கார்ந்து இரண்டு புருவ முடிச்சுக்கிடையே உள்ள மையத்தினை நோக்கி உன் மனத்த குவிச்சுப் பாரு. ஒரு வித்தியாசமான அனுபவத்த உணர்வே"

"புரியும் படியா சொல்லுடா"

"அதாவது மனுசனாப் பிறந்த எல்லோரும் ரெண்டு வித எண்ணங்களோடத்தான் இருக்கிறாங்க. ஒன்னு கடந்தகாலத்த அசைப் போட்டுகிட்டு இருக்கிறது. இது மைனஸ் 1,2,3 ....மாதிரி. இல்லன்னா அடுத்து என்ன செய்யனும்னு யோசிச்சுகிட்டு இருப்பாங்க இது +1,2,3 மாதிரி. இது மாதிரி இல்லாம நம்ம மனத்த தியானத்தின் மூலமா எந்த வித சிந்தனையும் இல்லாம ஒரு பத்து நிமிசம் 0 பூஜ்ய மனநிலைக்கு கொண்டு வந்தோம்னா அது பின்னாடி நம்முடைய ஜீவமுக்திக்கு ரொம்ப உபயோகமா இருக்கும்".

"ஜீவ முக்தியா ஏண்டா சாகப் போறதுக்கு இப்பவே பயிற்சி எடுக்கச் சொல்லுறியா?".

"ஒருவிதத்துல அப்படித்தான்னு வச்சிக்கோ. மனுசன் இறக்கும் போது அவனுக்கு ஏற்படும் வலி இருக்கே அத சொல்லவோ விவரிக்கவோ முடியாது. பொண்டாட்டி பிள்ளைங்க சொத்து சுகம் இது எல்லாம் விட்டுட்டு போறம்ன்னு ஒரு பெரிய வேதனையா இருக்கும்.ஆனா இந்த தியானத்தப் படிப்படியா செய்வதின் மூலம் உன் ஜீவன் உன் உடலை விட்டு வெளியே போய் வருவத நீ நிதர்சனமா உணரலாம். இந்தப் பயிற்சி மரணத்தினை தைரியமாக எதிர்கொள்ள வைக்கும். அது மட்டுமல்ல நீ இந்த புற உலகில் என்னவெல்லாம் சந்தோசம்ன்னு நினைக்கிறாயோ அது உனக்குள்ளேயே இருக்கு என்பதையும் நீ உணரலாம்".

"எப்படி ஐஸ்கீரீம் சாப்பிடம்ன்னு நினைச்சா அது இந்த தியானத்து மூலமா கிடைக்குமா."

"கண்டிப்பா அதுமட்டுமல்ல மாம்பழ தாகத்த தீர்த்துக்கனும்னு நினச்சாலும் சரி ஓல்ட் மங்க் குவார்ட்டர் அடிக்கனும்னு நினைச்சாலும் சரி அதுனால உனக்குக் கிடைக்கிற சந்தோசம் இந்த தியானத்து மூலமா கிடைக்கும்"ன்னு சொல்லி ஓசோ சுவாமி நித்யானந்தர் எழுதிய சில புத்தகங்களக் கொடுத்தான்.

"சரி முயற்சி செய்து பார்ப்போம், சரியா வந்துச்சுனா கருணாநிதிக்கு ஒரு கடிதம் போட்டு டாஸ்மாக் கடையெல்லாம் மூடச் சொல்லிட்டு அதுக்குப் பதிலா தியான மண்டபங்களக் கட்ட சொல்லுவோம்ன்னு நினைச்சுகிட்டு "சரிடா நீ சொன்னமாதிரியே தினமும் பத்து நிமிசம் உட்காருகிறேன் எப்ப உட்காரனும் காலையிலா மாலையிலா?"ன்னு கேட்டேன்.

"காலையிலதான் ஆனா அதுக்கு முன்னாடி காலைக்கடன்லாம் முடிச்சுகிட்டு வயித்த சுத்தமா வச்சிகிட்டு பண்ணு"ன்னான்.

ஊருக்கு வந்தவுடன் முத நாளு காலையில வெளியெல்லாம் போயிட்டு மொட்டமாடியில ஒரு பத்மாசனத்தப் போட்டு ஜாபர் சொன்னமாதிரி இரண்டு புருவமுடிச்சுகிடையே உள்ள மையத்தின நோக்கி மனசை குவிக்க ஆரம்பிச்சேன்.

"என்னங்க" தங்கமணியின் குரல்.

ஆரம்பத்துலேயே அபசகுனமா "என்னடி" என்றேன் எரிச்சலுடன்.

"இங்க வந்து பாருங்க"

கீழே வந்து பாத்தா நம்ம சேட்டைக்காரர் நடு ஹாலில் ஆய் இருந்து அதுமேல ஆட்டோ பொம்மை வச்சு ஓட்டிக்கிட்டு இருந்தாரு.

"ஏண்டி பாத்துகிட்டு இருக்கியே கழுவிவிடக்கூடாதா"

"அடுப்படியில கைவேலையா இருக்கேன்லே தூக்கிகிட்டு போயி கழுவிவிட்டு அப்படியே இத அள்ளி கொல்லையில போட்டுட்டு டெட்டால் வச்சு தரைய தேய்ச்சு விடுங்க"ன்னு அடுக்கடுக்கா பல ஆணைகள் போட்டா.

ஆணைகளை சிரமேற்கொண்டு நிறைவேற்றியதில் அன்னைக்கு தியானம் பண்ணுறதுக்கு வழியில்லாம போச்சு.

தொடர்ந்த நாள்களில்.................

"என்னங்க தண்ணிதொட்டி நிறையிற சவுண்டு கேட்குது பாருங்க போயி மோட்டர அமத்துங்க"

வாஷிங்மெசின் சத்தம் கொடுக்குது பாருங்க போயி துணியெல்லாம் எடுத்து காயப் போடுங்க"

"என்னங்க அடுப்புல சட்டிய வச்சிருக்கேன் கொல்லையில ரெண்டு கருவேப்பிலை ஒடிச்சிகிட்டு வாங்க"

"சித்த இந்த தேங்காய துருவிக் கொடுங்க"

"சித்த இந்த சின்ன வெங்காயத்த உரிச்சுக் கொடுங்க"

"சாமிபடத்துக்கு பூவப் போடுங்க"

"சேந்தி (loft) சிலாப்புல இருந்து முக்குளி சட்டிய எடுத்துக் கொடுங்க".........

@#$%##@$#@#$#@#@#@#.................................................................................

ஒருவாரம் கழிச்சு ஜாபர் போன் போட்டான். "தம்பி என்ன நான் சொன்னத முயற்சி பண்ணிப் பாத்தியா?.

என்னத்த சொல்ல தலைப்பத்தான் அவனுக்கு நான் பதிலா சொன்னேன்.