வியாழன், 24 மே, 2012

தகத் முஸ்கிலாபோனவாரம் நம்ம நண்பர் கும்பகோணம் ஊர்க்காரரான எங்களது நிறுவன ஊழியர் ராஜாவுக்கு வரக்கூடாத இட்த்தில வலி வந்த்து. மருத்துவரை பார்க்கனும்ன்னு போனில் ஒரே நச்சரிப்பு. சரின்னு சாயங்காலம் வேலை முடிந்த்தும் ஆளை எடுத்துக் கொண்டு சவுதி அல் ஹாசா  மாவட்ட்திலேயே சிறப்பானதொரு மக்குலூத் மருத்துவமனைக்கு சீருந்தில் எடுத்துச் சென்றேன்.

போகும் போதே ராசாவுக்கு காரில் ஒரே முனு முனுப்பு. “அண்ணே உங்கட்ட சொன்னதை அங்கே நர்ஸ் யாரிடமும் சொல்லாதிங்க நேரா டாக்டர பாத்து சொல்லுங்க அதுவும் ஆம்பளை டாக்டராப் பாத்து சொல்லுங்க பொம்பள டாக்டரா இருந்தா காட்டவே வேண்டாம். அப்படின்னு ஒரேடியா புலம்ப்பிகிட்டே வந்தார்.

சரி சரின்னு தலையாட்டிக்கிட்டே நானும் அவரை கூப்பிடுக்கிட்டு மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தேன். எனக்கும் அந்த மருத்துவமனை முதல் தடவை வருகிறேன். ராஜாவுக்கு ஆங்கிலம் தெரியாது என்பதாலும் எனக்கு ஆங்கிலம் ஓரளவுக்கு? பேச வரும் என்பதாலும் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தோம்.

வந்த்தும் மருத்துவமனை வரவேற்பரையில் ஒரு அதிர்சி காத்திருந்த்து. எங்கெங்கு காணினும் ஒரே புர்ஹா அணிநத பெண்கள் கூட்டமாய் அந்த வரவேற்பரை ஒரு கருப்பு மயமாய் காட்சி அளித்த்து. ஒரு வழியாய் தயங்கி தயங்கி நிறுவன மருத்துவ காப்பீடு அட்டையை கையில் எடுத்துக் கொண்டு வரிசையில் நின்று எங்களது முறை வந்த்தும் தும்பை பூப் போல் வெள்ளை நிறம் கொண்ட கண்கள் உடைய அந்த சவுதி பெண் கேட்டாள், “அந்தா யேஸ் முஸ்கிலா”?  (உன் பிரச்சினை என்ன?)
ராஜாவுக்கு ஒரே பதட்டம் “அண்ணே இவகிட்ட சொல்லாதிங்கன்னே ஏதாவது உடம்பு வலின்னு சொல்லுங்க அப்புறம் நம்ம டாக்டரைப் பாத்து உண்மையை சொல்லுகிறுவோம்ன்னு  பதறினாப்புல.

சரியா சரியான்னு சொல்லிட்டு நான் அந்த தும்பைப்பூ கண்ணுக்காரிகிட்டே சொன்னேன் “சொய்யா பாடி பெயின்ன்னு. அதுக்கு அவ “ வேன் அதா” (எங்கே) அப்படின்னு பதிலுக்கு கேட்டா. “டேய் இவ எங்க வலின்னு கேட்குறா, சொல்லவா?ன்னு கேட்ட்துக்கு ராஜாவுக்கு பதட்டம் கூடியியிருச்சு. “அண்ணே வலியைக்கூட தாங்கிகிறுவேன்  ஆனா இவகிட்ட மட்டும் சொல்லாதிங்கன்னு சொன்னாப்புல.
“சரி சரின்னுட்டு நான் என் வயிற்றைத் தொட்டுக் காட்டி இங்கே அப்ப்டின்னு சொன்னேன். இகாமா ( அடையாள அட்டை ) காப்பீட்டு அட்டையெல்லாம் சரி பார்த்துட்டு மேலே போங்கன்னு கையைக் காட்டுனாங்க.

மேல் மாடி வந்து டாக்டர் அறைக்கு முன் காத்திருந்தோம். ஒரு பிலிப்பினி நர்சு அடிக்கடி வெளியே வந்து நோயாளிகளோட பேரைச் சொல்லி உள்ளே அனுப்பிகிட்டு இருந்தா. வெளியே டாக்டர் பேரு கபஸ்ன்னு எழுதியிருந்த்து. கபஸ்ன்னா ஆம்பளையா பொம்பளையான்னு ராஜாவுக்கு சந்தேகம். “அண்ணே அந்த பூனை திங்கிறவகிட்ட கேளுங்கண்ணே ஓரேடியா தொண தொணத்துகிட்டு இருந்தாப்புல.

நானும் சரின்னுட்டு அந்த நர்சுகிட்ட சிஸ்டர் டாக்டர் மேலா ஃபீமேலான்னு கேட்டேன். அதுக்கு அவ அட பொம்பளப் பொறுக்கிங்க்றது மாதிரி என்னை சுட்டெரிக்கிறமாதிரி ஒரு பார்வை பாத்தா அதோட எனக்கும் ஒரு பயம் வந்து ராசாவிடம் சொன்னேன் டேய் இவ கேட்டத தப்பா புரிஞ்சுகிட்டா போல இருக்கு எதுக்கும் நம்ம நேரா டாக்டரைப் பாத்துடுவோம்ன்னு எங்க முறை வந்த்தும் உள்ளே போனோம்
பயந்த மாதிரி டாக்டர் பொம்பளதான். எகிப்து மிசிரி போல செம்பட்டை தலையோட ஒரு அம்பது அறுபது வயசு இருக்கும் சரிதான் நம்ம பெத்த ஆத்தாவா நினைச்சு உள்ளத சொல்லுவோம்ன்னு என்னப்பா பிரச்சினைன்னு அந்த அம்மா கேட்டதும் நான் சொன்னேன் அம்மா இவருக்கு டெஸ்டிகிள் பெயின்அப்படின்னேன். ஒரே நேரத்தில் மிசிரி டாக்டரும் பிலிப்பினி நர்சும் ஒரு லிட்டர் வேப்ப எண்ணய குடிச்ச மாதிரி முகத்த கோணிக்கிட்டு நோ நோ கோ டூ ரிசப்சன் டெல் யுவர் ஆக்சுவல் பிராப்ளம்ன்னு சொல்லி வெளியே அனுப்பிட்டாங்க்.

இந்த நேரத்தில எங்களோட வேலைப் பார்க்குற செல்வகுமார் எங்களப் பார்க்குறதுக்காக மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தார். அவருக்கு கொஞ்சம் அரபி தெரியும். ராசா செல்வகுமாரைப் பாத்து நடந்த்த சொல்லி “அண்ணே ரிசப்சன்ல கொஞ்சம் அரபி பேசி உள்ள பிரச்சினையை சொல்லுங்கன்னேன்னாப்புல. “நான் ராசாகிட்ட சொன்னேன் ஏய்யா நாந்தான் இங்கிலிசுல சொல்லுறேன்னேன்னல் நீதான் வேனாம்ன்னு சொன்னே இப்ப அரபில்ல சொன்னா மட்டும் உன் பிரச்சினை என்ன்ன்ன்னு அந்த கண்ணழகிக்கு தெரியாதான்ன்னு சத்தம் போட்டேன்.

“அதுக்கில்லைண்ணே நீங்க இங்கிலிசுல சொன்னா அது ஆஸ்பத்திரில்ல எல்லாருக்கும் கேட்டுரும் செல்வகுமார் அண்ணன் கிட்ட சொல்லி கொஞ்சம் மெதுவா அரபில பட்டும் படாமலும் சொல்லச் சொல்லுவோம்ன்னு சொன்னார். சரிதாண்ட்டு மறுபடியும் ரிசப்சன் போய் செல்வகுமார் அந்த கண்ணழகிகிட்ட சொன்னாரு இவரோட பிராப்ளம் வேறன்னு.

அந்த பொண்ணு என்ன பிரச்சினைக்கு அரபில்ல்ல கேட்ட்துக்கு செல்வகுமார் மெதுவா அரபில்ல சொன்னாரு அமி ஹுவா பீ தகத் முஸ்கிலாஇந்த வார்த்தையை கேட்ட்தும் அந்த பொண்ணு கண்ணுல அதப் புரிஞ்சிகிட்ட்தற்கு அடையாளமா ஒரு மின்னல் வந்து போனது. அது மட்டும்ல்ல அந்த பொண்ணு சிரிக்கிறது புர்ஹாவையும் தாண்டி எனக்கு தெரிஞ்சது.

உடனே கீழ்தளத்தில் ஒரு ரூமைக் காட்டி அங்கே போங்கன்னு சொல்லி அனுப்பினாங்க. வரும் போது ராசா செல்வகுமாரை கேட்டாரு அண்ணே அந்த பொண்ணுகிட்ட என்னண்ணே சொன்னிங்கன்னு செல்வகுமார் சொன்னாரு யோவ் உனக்கு கீழே கொஞ்சம் பிரச்சினைன்னு சொன்னேன்ன்னு. ராசாவுக்கு மறு பேச்சில்லை. டாக்டரைப் பார்க்க காத்திருக்கும் போது மேல் ரூமில மிசிரி டாக்டரோட இருந்த பிலிப்பினி நர்சு அந்த பக்கம் வந்தா. போகும் போது ராசாவை பாத்து ஒரு புன்னகைய வீசினா. அது மட்டுமல்ல அங்கே ஊசி போடுற ஒரு இட்த்தில இருந்த இன்னொரு பிலிப்பின் நர்சுகிட்ட ராசவைப் பாத்து பாத்து ஏதோ சொல்லிகிட்டு இருந்தா.

ராசாவுக்கு ஒரே பீதியா போச்சு “அண்ணே என்னப் பத்தித்தான் பேசுறாளுகண்ணேன்னு புலம்ப ஆரம்பிட்டாப்புல. செல்வகுமாரு அதுக்கு ராசவிடம் சொன்னாரு. பாத்து முகத்த மூடிகிட்டு உட்கார்ந்திரு. இல்லன்னா கைபேசில்ல படம் எடுத்து முகப்புத்தகத்தில உண்ணைப் பத்தி எழுதியிருவாளுகன்னு சொன்னாரு உடனே ராசா முகத்த மடியில் புதைச்சுகிட்டாரு. எங்களுக்கு சிரிப்பு தாங்கல.

கொஞ்ச நேரத்துல உள்ளே போனோம். டாக்டர் மிசிரிதான் சின்ன வயசு ஆளா இருந்தாரு. பிரச்சினையை சொன்னது உடனே இரத்தம் நீர் சோதனைக்கு எழுதி கொடுத்தாரு. பணம் கட்ட வரவேற்பரை போன போது ராசாவுக்கு கண்ணழகி பிரமாதமான வரவேற்பு கொடுத்தார். நாலைஞ்சு பேரு வரிசையில இருந்தாலும் உடனே பணம் வாங்கி ராசாவை அனுப்பி வைச்சா.

சோதனை எல்லாம் முடிந்த்தும் டாக்டரை மறுபடியும் போய் பார்த்தோம். வாய்வுத் தொல்லை மருந்து எழுதித் தர்றேன் ஒரே நாள் ஓய்வு எடுங்க  கவலை இல்லைன்னு சொன்னாரு. மருந்தெல்லாம் வாங்கி முகாம் வந்து சேர்ந்தோம்.

முகாமில சூடான் நாட்டைச் சேர்ந்தவர்தான் மேலாளர் அவரு ராசாவைப் பாத்து சொன்னாரு ராசா உனக்கு நாளைக்கு ஒரு இட்த்துல வேலை இருக்குன்னு. அதுக்கு ராசா நான் போக முடியாதுன்னு சொன்னாப்புல ஏன்னு மேலாளர் கேட்ட்துக்கு ராசா சொன்னாப்புல “அனா தகத் முஸ்கிலான்னு (எனக்கு கீழே பிரச்சினை)