திங்கள், 3 ஆகஸ்ட், 2009

எங்க ஊரு கீழக்கரைல எனக்கு புடிச்ச பத்து

"தின்னு கெட்டான் துலுக்கன் உடுத்திக் கெட்டான் செட்டி" அப்படின்னு எங்க பக்கம் ஒரு பழமொழி ஒன்னு சொல்லுவாங்க கெட்டுப் போற அளவுக்கு சொத்த வித்துல்லாம் திங்கனும்னா அந்த அளவுக்கு அந்த பண்டம் சுவையா இருக்கனும்ல அப்புடிபட்ட சுவையான, எங்க ஊரு கீழக்கரைல மட்டும் கிடைக்கிற பத்துதான் இந்த கீழக்கரைல எனக்கு புடிச்ச பத்து ( இது முஸ்லீம் ஊருங்கிறதுனால பழமொழி உண்மைதான்னு நினைச்சிறாதிகப்பு!!
தினமும் தின்னுப்புட்டு யாரும் கெட்டுப்போகல நல்லாத்தேன் இருக்கோம் கடவுள் புண்ணியத்துல)
1. முதல் பண்டம் கடற்கரை பக்கத்துல நம்ம முஸ்தபா காக்கா கடை ஆட்டுக்கால் சூப்பு சூப்புன்னா அதுதான் சூப்பு ஒரு காலு ஒரு குடல் துண்டு ஒரு நெஞ்செலும்பு ஒரு அவிச்ச முட்டைன்னு சூப்புல பல அயிட்டங்களை போட்டுச் சுடச்சுட கொடுப்பாரு காக்கா தெரிஞ்சவுக தெரியாதவுக யாராயிருந்தாலும் பாரபட்சமில்லாம ஒரேமாதிரி வீட்டுக்கு வந்த விருந்தாளி மாதிரி கவனிப்பாரு சாயங்காலம் 4 1/2 க்கு கடை திறந்தா 6 மணிக்குள்ள சரக்கு முடிஞ்சிறும் எப்பக் குடிச்சாலும் எத்தனை குடிச்சாலும் திகட்டாதது காக்கா கடை சூப்பு

2.ரெண்டாவது அயிட்டம் நோன்பு நேரத்தில மட்டும் கிடைக்கிற நோன்பு கஞ்சி எல்லா பள்ளிவாசல்லயும் இது இலவசமாக கிடைக்கும் பாசிப்பருப்பு பச்சரிசி நெய் காய்கறில்லாம் போட்டு சுவையா இருக்கும் லைலத்துன் கத்ரு 27ம் கிழமையிலருந்து தலப்பிறை வரைக்கும் எல்லா பள்ளியிலயும் கறிக்கஞ்சிதான் தூக்குவாளி நிறைய வாங்கிட்டுப் போய் வீட்டுல வச்சு செம்புல வச்சுத்தான் குடிக்கிறது தொட்டுகிறதுக்கு நம்ம ஓட்டக்கடிகாரம் கடையிலருந்து கறி சமுசாவோ கறிவடையோ இருந்தா சுகம்தான்

3.கார்த்திகை மாசம் பொறந்துட்டா ஊர்ல சீலா மீன் சீசன் ஆரம்பிச்சிடும் வெளியூர்ல இருந்துலாம் மீன் வாங்க ஆளு வரும். லெப்பை கடைக்கு முன்னாடி நைட்டு 7 மணிக்கு மேல ஓலப்பாய் போட்டு பெட்ரோமக்ஸ் லைட்டு வெளிச்சத்துல வியாபாரம் களை கட்டும் 2கிலோவுககு குறையாமத்தேன் எங்க வீட்டுல வாங்குவோம். எங்க அம்மா அத ரெண்டு விதமா குழம்பு வைப்பாங்க புளியில்லாம ஒன்னு புளி சேத்து ஒன்னு புளியில்லா குழம்பை நைட்டுக்கு இடியப்பத்தோட சேத்து வச்சுக் கட்டுறது புளி வைச்ச குழம்பை மறுநாளு சோத்துக்கு வைச்சுக்குறது. விலைதான் ரொம்ப ஜாஸ்தி கிலோ 300 ரூபாய்க்கு மேல அதவிட சீலா கருவாடு விலை கிலோ 400 க்கும் மேல 200கிராம் சீலா கருவாடு வாங்கி புளியில்லாம குழம்பு வச்சு தேங்காய் சோறு பொங்கிச் சாப்புட்டா.................விலை என்ன பெரிய விலை.


4. கடற்கரை பக்கத்தில இருக்கிறதுனால ஊருல பெரும்பாலும் மீன்தான் பிரதான உணவு எங்க ஊர்ல யாரும் ஐஸ் வைச்ச மீன் சாப்பிட மாட்டோம் எல்லாமே கரைவலையில புடிச்ச ஃபிரஷ் மீனுதான் கரைவலைங்கறது அதிகாலை 4 மணிக்கு முன்னாடி கடலுக்குள்ள 1 மைல் தூரம் சின்ன வல்லத்துல போயி வலையைப்போட்டு அப்புடியே இழுத்துககிட்டு திரும்பி வந்துறனும் பெரும்பாலும் பொடிமீன்தான் மாட்டும் விலை,ஓரா,நகரை,சூடை,தொண்டன்,சூவாரை,பாறை,குமுளா,வாவல்,திருக்கை,நெத்திலி,காரா,
முட்டைப்பாறை, வாளை,ஊலி,ஊலா,முரல்,கிலக்கன்,ஊடகம்,பால்சுறா, கணவாய் இப்படி பல
தினுசுல மீன் கிடைக்கும் விலை மற்ற ஊரைக்காட்டிலும் ஜாஸ்திதான் இருந்தாலும் கரைவலை மீன ஒரு தடவ சாப்புட்டுட்டா மத்த மீன தொட மனசு வராது.


5.லொதல், பேரக்கேட்டதும் வித்தியாசம இருக்குல திருநெல்வேலிக்கு அல்வா மாதிரி கீழக்கரைக்கு லொதல் கீழக்கரையில சந்துக்கு சந்து எல்லாக் கடையிலயும் கிடைக்கும் இருந்தாலும் செங்கார் தெருவுல ஒரு பழய வீடுதான் கீழக்கரையோட இருட்டுக்கடை இதுக்கடுத்து ராவியத் கடை லொதல்தான் சுவையா இருக்கும்.


6.முஸ்தபா காக்கா சூப்புக்கடை மாதிரி கீழக்கரையில இன்னும் ஒரு சிறப்பான கடை ராவியத் ஸ்வீட் சூப்புக்கடை மாதிரி சாயங்காலம் 4 மணிக்கு திறந்து 6 மணிக்குள்ல மூடிருவாங்க மைசூர் பாக்கு அல்வா ரெண்டு மட்டும்தான் வியாபாரம் லேட்டாப் போனா கிடைக்காது மைசூர்பாக்கும் சரி அல்வாவும் சரி வாயில போட்டவுன கரைஞ்சுடும் மெல்லத் தேவையில்லை வீட்ல எந்த விசேஷமுன்னாலும் ராவியத் கடை ஸ்வீட்டுக்கு கண்டிப்பாக இடம் உண்டு.

7.ஏழாவது ஐட்டம் மாசி இது கருவாடு வகையைச் சேர்ந்தது.ஊர்ல பெரும்பாலும் எல்லா மளிகைக் கடையிலும் "இவ்விடம் நயம் குந்தாரா மாசி கிடைக்கும்" ன்னு போர்டு இருக்கும் மாசிக்குனே தனிக்கடை ஒன்னு பழைய குத்பாப் பள்ளிவாசல் சாலையில இருக்கு. மாசி வாங்கும்போது எப்பவும் பெருசாப் பாத்துதான் வாங்கனும் 1 மாசி குறைஞ்சது 1/4 கிலோ இருக்கனும் உடைச்சுப் பாத்தா உள்ளே இரத்தச் சிவப்பா கலர் இருக்கனும் அதான் நல்ல மாசி. மாசியை நல்லா அம்மியில உடைச்சு வெந்நித்தண்ணில ஊற வச்சு நல்லா ஊறுனவுடன எடுத்து பச்சை மிளகாய் சின்ன வெங்காயம் தேங்காய்பூ போட்டுப் பொரிச்சு சாப்புட்டமுன்னா அப்புடித்தான் ஒரு ருசி.

8.சீப்புப் பணியாரம் இதுவும் எங்க ஊர்ல மட்டும்தான் கிடைக்கும் அரையடி நீளத்துக்கு குழல் மாதிரி இருக்கும் பணியக்காரத் தெருவுன்னே ஒரு தெரு ஊர்ல இதுக்குனே இருக்குன்னா பாத்துகுங்க எல்லாத் தெருவுலயும் இதை சுடுறாங்க ஆனாலும் கிழக்குத் தெரு கடைசியிலே முகைதீன் அப்பா தர்ஹா எதுத்த தெருவுல வாங்குறதுதான் தித்திப்பா இருக்கும்.

9.தெற்குத்தெரு ஜமாத்துக்குப் பக்கத்துல அகமது டீக்கடை ரொம்ப சாதாரனமாத்தான் இருக்கும். 11 மணிக்கு கடையில பயங்கர கூட்டமாயிடும் காரணம் கீரைப்போண்டா குஞ்சிக்கீரை அல்லது தண்டுக்கீரையில போண்டா போடுவார் அகமது காக்கா ஊர்ல கட்டிட வேலைப் பாக்குறவுங்க வெளியூர்லருந்து காங்கீரீட் போட வரவுங்களுக்கெல்லாம் கீரைப்போண்டா வாங்கிக் கொடுக்கலனா அடுத்த தடவ உங்க வீட்டு வேலைக்கு யாரும் வர மாட்டாங்க.

10.கீழக்கரையில பெரும்பாலும் பெருசுகளுக்கு பொழுது விடியிறது லெப்பை கடையிலதான் காரணம் லெப்பைகடை சாயா எடை கட்டுன பால்தான் அதுக்கு காரணங்கிறது என்னோட கணிப்பு லெப்பைகடை மாதிரி அதே சுவையோட பரமக்குடி பக்கத்துல அரியனேந்தல் கோணார் கடை சாயா நல்லா இருக்கும்

ஓட்டுமாவு,ராத்து ரொட்டி,பரசு கடை புரோட்டா, நைட்டு ஹோட்டல் முட்டைக்குருமா இப்புடி இந்த லிஸ்ட்ல விட்டுப்போன அயிட்டமும் நிறைய இருக்கு இருந்தாலும் மேல உள்ள பத்துதான் ஊரை விட்டு வந்தாலும் மறக்க முடியாம நினைப்புல அப்புடியே இருக்கு.9 கருத்துகள்:

Nats சொன்னது…

Good Start. Keep it up

Mãstän சொன்னது…

தின்னு கெட்டருவீங்க போலிருக்கு :D

துபாய் ராஜா சொன்னது…

'மாசி'க்கு முன் மற்ற அசைவ சுவையெல்லாம் தூசி.

பெயரில்லா சொன்னது…

கீழக்கரைக்கே உரித்தான தின்ன தின்ன திகட்டாத உணவு,பலகார வகை குறிப்புகளை மண் வாசனை மாறாமல் படைத்தமைக்கு நன்றி, படைப்புகள் தொடர வாழ்த்துக்கள்..

தங்கராசு நாகேந்திரன் சொன்னது…

நன்றி nats,மஸ்தான்,ராஜா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
அனானி உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி
நீங்க கீழக்கரையா?

ஸாதிகா சொன்னது…

ஆஹா...

தங்கராசு நாகேந்திரன் சொன்னது…

நன்றி ஸாதிகா
கீழக்கரையிலிருந்து நீங்க பின்னூட்டம் இட்டதுக்கு ரொம்ப நன்றி.

கீழை இளையவன் சொன்னது…

நண்பரே அருமையான பதிவு !

கீழக்கரை எனும் மகத்துவமிக்க தாங்கள் பிறந்த மண்ணை, சொந்த மண்ணை துறந்து, பிழைப்புக்காக கடல் கடந்து
தொலை தூரம் சென்று விட்ட சொந்தங்கள் அத்தனையும், தங்கள் பதிவினை வாசிக்க நேரும் தருணம் நிச்சயம் நா நுனியில் தித்திக்கும் கடந்த கால நினைவலைகள்...

பெயரில்லா சொன்னது…

kudos to you. i happened to read to your post only now. it brought back my childhood memories. to be frank you forget to mention Aiyar hotel idly ( at V.S. Salai opp to Kareem Stores). (Sorry to comment in english, I dont have a tamil writer)

கருத்துரையிடுக

ஏதாவது சொல்லிட்டு போங்க