வியாழன், 25 மார்ச், 2010

கலைஞரின் தலைவலிக்கு மருத்துவர் சேதுராமனின் மருந்து

அரசியல் சாணக்கியர், பல்கலை வித்தகர் டாக்டர் கலைஞருக்கு எத்தனையோ தலைவலி திருகுவலி வந்தாலும் தனது திறமைகளால் அவற்றை தவிடுபொடி ஆக்குவதில் வல்லவர்.ஆனால் அவராலேயே தீர்த்து வைக்க முடியாத பிரச்சினை ஒன்று உண்டு என்றால் அது அவரது வாரிசு பிரச்சினைதான். 86 வயதுக்கு மேல் ஆகி விட்டபடியால் ஓய்வு எடுக்க அவர் மனம் விரும்புகிறது. ராமருக்கு பட்டம் சூட்ட விரும்பாத தசரதராக அவர் நெடுமாறன் போன்றவர்களால் விமர்சிக்கப் பட்டாலும் ஓய்வை அறிவிக்க முடியாமல் தினறி வருவதற்கு காரணம் அவரது அதீத பிள்ளைப் பாசமே.

பட்டம் சூட்டப்படாத மன்னராக வலம் வரும் ஸ்டாலினை முதல் மந்திரியாக்கி அழகு பார்க்க எத்தனை தடைகள் (வைகோ போன்றவர்களால்) கட்சியில் வந்தாலும் அவர்களை தூக்கி எறிய கலைஞர் தயங்கியதில்லை. ஆனானப்பட்ட பேராசிரியரே ஸ்டாலினை தலைவராக ஏற்றுக் கொள்ள தயார் என சொல்லித்தான் கட்சியிலும் ஆட்சியிலும் குப்பைக் கொட்டிக் கொண்டிருக்கிறார்.


ஸ்டாலின் மன்னராவதற்கு தடையாக இருந்து வந்த அழகிரிக்கு மத்தியில் பதவி வாங்கி கொடுத்து தற்காலிக தீர்வு கண்டார் கலைஞர். சரி இனி மத்தியில் முக அழகிரி மாநிலத்தில் ஸ்டாலின் என மக்களும் நினைத்துக் கொண்டனர். அதை உறுதி செய்யும் விதத்தில் அண்ணனும் தம்பியும் இனைந்து "நாங்கள் இரட்டைக்குழல் துப்பாக்கிகள்" என ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்து முக அழகிரியின் பிறந்த நாளில் மதுரையில் பாசமழை பொழிந்து கொண்டனர்.
ஆனால் சமிபத்திய ஜூனியர் விகடன் பத்திரிகை பேட்டியில் "கலைஞருக்கு அடுத்து யாரை அடுத்த தலைவராக ஏற்றுக் கொள்வீர்கள்" என சிண்டு முடியும் கேள்விக்கு முக அழகிரி "யாரையும் கலைஞருக்கு அடுத்து தலைவராக ஏற்றுக் கொள்ள மாட்டேன்" என மண்டை காயும் விதத்தில் பதில் சொல்லியிருக்கிறார். அழகிரி அண்ணனின் ஆங்கில அறிவு அல்லது ஹிந்தி மொழி பரிச்சியமின்மை அவரை த் தொடர்ந்து டெல்லியில் குப்பைக் கொட்ட தடுக்கலாம். எனவே தமிழகத்திலேயே தனது அரசியலைத் தொடர விரும்பியே இப்படி சொல்லியிருப்பதாக அரசியல் வல்லுனர்கள் கருதுகிறார்கள்.
இந்த இரட்டைக் குழல் துப்பாக்கிகளால் வரும் தலைவலியை கலைஞர் எப்படி சமாளிக்கப் போகிறார் என நாடே யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் இதோ நானிருக்கிறேன் கலைஞருக்கு மருந்து தர என மதுரையில் ஒருவர் கிளம்பியிருக்கிறார் தமிழகத்தின் சந்திரசேகர் ராவ் மதுரை மீனாட்சி மருத்துவமனையின் தலைவர் மூமூக கட்சி தலைவர் மருத்துவர் சேதுராமன்.

இவரது தீர்வு தமிழகத்தினை இரண்டாக பிரிப்பது. இதற்கு இவர் கூறும் காரணம் பல

"சென்னையை தலைமையிடமாகக் கொண்டு நடக்கும் நிர்வாகத்தால் கன்னியாகுமரி , தூத்துக்குடி , திருநெல்வேலி , ராமநாதபுரம் மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. தொழிற்சாலைகள் அனைத்தும் சென்னையைச் சுற்றியே துவங்கப்படுகின்றன.வேலை வாய்ப்புக்காக தென்மாவட்ட மக்கள், வட மாவட்டங்களில் குடிபெயர்ந்து வருகின்றனர்
தென் பகுதி மக்கள் எல்லோருமே சென்னைக்கே வருவதால் மக்கள் நெருக்கடி அதிகமாகிறது. ஆனால் தென் மாநிலங்களில் பல ஏக்கர் நிலம் இருந்தாலும் அவர் கஷ்டப்படுகிறார். வேலை வாய்ப்பு இல்லாமல் அலைகிறார்கள். இந்த ஏற்றத்தாழ்வு நீக்கப்பட வேண்டுமானால் தென் மாநிலத்திலும் தொழில் வளர வேண்டும். தமிழ்நாட்டை இரண்டாக பிரித்து தென் மாநிலம்- வட தமிழகம் உருவாக்கினால் தான் இப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். காவிரி கரையை எல்லையாக வைத்து திருச்சி முதல் கன்னியாகுமரி வரை 18 மாவட்டங்களை ஒன்றினைத்து தென்மாநிலம் என்னும் பெயரில் மதுரையை தலைநகராக கொண்டு ஒரு மாநிலம் அமைய வேண்டும்."
இந்த மருந்தினை கலைஞர் அவர்கள் உடனே ஏற்றுக் கொண்டு மத்தியில் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி தமிழகத்தினை இரண்டாக பிரித்தார் என்றால், வடமாநிலத்துக்கு ஸ்டாலினையும் தென் மாநிலத்துக்கு அழகிரியையும் முதல்வராக்கி அவரது தலைவலிக்கு தீர்வை காணலாம். அப்படியே நிம்மதியாக ஓய்வு எடுக்கலாம். இது செய்து முடிக்கப் பட்டால் கலைஞருக்கு ஒரு வாழ்நாள் சாதனையாக அமையும். அப்படியே டாக்டர் சேதுராமனின் கோரிக்கையை நிறைவேற்றி வைத்தாற் போலும் இருக்கும். அப்படியே வாழ்விழந்து தவிக்கும் வடமாநில டாக்டருக்கும் (மருத்துவர் அய்யா தமிழ்குடிதாங்கி) ஒரு வாழ்வு கிடைக்கும்.அதைவிட முக்கியமாக
எங்களைப் போன்ற இராமநாதபுரம் மக்களுக்கு எதற்கெடுத்தாலும் சென்னை வரும் தேவையில்லாமல் (ஒருநாள் பயணம் 2000 ரூபாய் பயணச்செலவு) மதுரையிலேயே எங்களது வேலைகளை முடித்துக் கொள்ள முடியும்.
கலைஞர் அய்யா விரைந்து இதை செய்வாரா?
ஆவலுடன் ஒரு இராமநாதபுரத்துக்காரன்.சனி, 6 மார்ச், 2010

மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை வரவேற்போம்

உலக மகளிர் தினம் தனது நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடப் போகும் எதிர் வரும் மார்ச்சு திங்கள் 8ம் நாள் இந்திய பாராளுமன்றத்தில் அரசு மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை அரசியல் சட்டத்திருத்தம் 108 மூலம் அமுல்படுத்த இருக்கிறது.

கடந்த 15 ஆண்டுகளாக இதோ அதோ என கிடப்பில் போடப்பட்டு இருந்த இந்த சிறப்பான ம்சோதா தற்போது நிறைவேறப் போகிறது.இதன் மூலம் பிற்படுத்தப் பட்டவரை விட, தாழ்த்தப் பட்டவரை விட, மலைஜாதி மக்களைவிட சமூக அநீதி இழைக்கப்பட்ட பெண்களுக்கு ஒரு விடிவுகாலம் வர இருக்கிறது.

உலக பொருளாதார மன்றம் 2009 (world economic forum) தனது அறிக்கை ஒன்றில் வளர்ந்த 134 நாடுகளில் சமூகத்தில் பாலியல் சம நிலை இல்லாத நாடுகள்(gender disparity) என்னும் பட்டியலில் இந்தியா 114ஆவது இடத்தினை வகிக்கிறது எனச் சொல்கிறது. இனி அந்த அவப் பெயர் வரப் போவதில்லை.

இந்த மசோதாவிற்கு முன் எப்போது இல்லாத அளவில் பிரதான எதிர்கட்சியான பா.ஜ.கவும் இடது சாரிக் கட்சிகளும் ஆதரவு தர முன் வந்திருக்கின்றன. இது ஒரு பாரட்டத்தக்க ஒரு அம்சம். வழக்கம் போல ராஷ்டிரிய ஜனதா தளமும் சமாஜ்வாடி கட்சியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதற்கு அவர்கள் பல்வேறு காரணங்கள் சொன்னாலும், முக்கியமான காரணம் இந்த மசோதா நிறைவேற்றப் பட்டால் இந்த கட்சிகளுக்கு வேட்பாளர்கள் கிடைக்காது என்பதே ஒரு காரணம் ஆகும்.

தமிழ்நாட்டில் அதிமுக ஜா ஜெ என பிரிந்து தேர்தலை 1989ல் தேர்தலை சந்தித்தபோது ஜானகி அணியில் சிவாஜி கணேசனுக்கு 50 இடங்கள் வழங்கப்பட்டன. இவ்வளவு பெரிய நடிகருக்கு வெறும் 50 இடங்கள்தானா என ஒருவர் வினவியபோது அப்போதைய ஜா கட்சியின் நிர்வாகி திரு ஆர்.எம். வீரப்பன் கேலியாக குறிப்பிட்டாராம் "முதலில் அவர்கள் 50 வேட்பாளர்களை கண்டு பிடிக்கட்டும் அப்புறம் பார்ப்போம்" என. இது வேடிக்கை என்றாலும் இதே போல ஒரு நிலைமைதான் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டால் லாலுவுக்கும் முலாயமுக்கும் ஏற்படும். ஏன் எனில் ரவுடிகள் கட்டப் பஞ்சாயத்துக்காரர்கள் குண்டர்கள் யாரும் பெண்களில் இல்லை என்பதே இவர்களின் எதிர்ப்புக்கு காரணம். அரசு இவர்களின் வெற்றுக் கூச்சலுக்கு பயப்படாது இந்த மசோதாவினை நிறைவேற்ற வேண்டும்.

இதுவரை பாராளுமன்றத்தில் 1 0 சதவீதம் மட்டுமே பெண்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டிருக்கிறது என கணக்கெடுப்புகள் சொல்லுகின்றன. அந்த பத்து சதவீதமும் இந்திரா, மீராகுமார் போல் தந்தையாலோ, சோனியாகாந்தி ரப்ரிதேவி போல் கணவனாலோ அல்லது ஜெயலலிதா மாயாவதி போல் ஆண் தலைவர்களால் வளர்க்கப்பட்டவர்களாக உள்ளனர். இந்த மசோதா நிறைவேற்றப் பட்டால் சுயமாக எந்த ஆணுடைய தயவுமின்றி பெண்கள் தங்களது பங்களிப்பை இந்த நாட்டுக்கு செய்வதற்கு உறுதுனையாக இருக்கும்.

கணவன் கொண்டு வந்து கொடுக்கும் பணத்தில் கட்டும் செட்டுமாக குடும்பம் நடத்தி பிள்ளைகளை படிக்க வைத்து குடும்பத்தினை வெற்றிகரமாக கொண்டு செல்லும் நிர்வாகிகள் பெண்கள் அவர்களுக்கு நாட்டை ஆளுவது ஒரு சாதாரன வேலையாகத்தான் இருக்கும்.மேலும் நிர்வாகமும் சுத்தமாக லஞ்ச லாவன்யம் இன்றி கட்டைப் பஞ்சாயத்துகள், கமிசன் இன்றி நேர்மையாக இருக்கும் என நம்பலாம்.

எனவே இந்த மகத்துவமான மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவினை மேல் உள்ள படத்தில் இருக்கும் பெண்களைப் போல் உற்சாகமாக விசிலடித்து வரவேற்போம்.


வெள்ளி, 5 மார்ச், 2010

பரமஹம்ச நித்யாணந்தரும் பத்திரிக்கை தர்மமும்

கடந்த சில நாட்களாக பத்திரிக்கைகளிலும் தொலைக்காட்சி ஊடகங்களிலும்
தலைப்புச் செய்தியினைப் பிடித்திருப்பவர் சுவாமி பரமஹம்ச நித்யாணந்தர்.


Sting operation என்னும் பெயரில் சாமியாரின் லீலைகள் என நடிகை ரஞ்சிதாவுடன்
நெருக்கமாக இருக்கும் ஒளிக் காட்சி ஒன்றை திரும்ப திரும்ப ஒளிபரப்பி
தமிழ் கூறும் நல்லுலகம் அனைவருக்கும் சேவை செய்திருக்கிறது சன் தொலைக்காட்சி.


சொல்லிவைத்தாற்போல் அனைத்து பத்திரிக்கைகளும் சாமியாரை குறைகூறியும் நடிகை ரஞ்சிதாவின் புகைப்படங்களைப் போட்டும் தங்களது பத்திரிக்கை விற்பனையையும் சன் தொலைக்காட்சி தனது TRP ரேட்டிங்கை உயர்த்திக் காட்டவும் முனைந்திருக்கின்றன.

சிலபேர் சென்னை மாநகர காவல் ஆனையரிடம் சாமியார் தமிழ் கலாச்சாரத்தினை சீர்குலைத்ததாகவும் அவர்மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் அளித்திருக்கின்றனர்.


அறுசுவை உணவுகளை இலையில் படைத்து அதன் அருகிலேயே ஒரத்தில் சிறிது நரகலை வைத்தால் எவ்வளவு அறுவெறுப்பு வருமோ அதுபோல்தான் இந்த தமிழ் ஊடகங்களும் பத்திரிக்கைகளும் தினமும் செய்தி வெளியிட்டு வருகின்றன.

மானாட மயிலாட, ராணி 6 ராஜா யாரு போன்ற நிகழ்சிகளிலும் அபத்தமான நெடுந்தொடர்களிலும் இவர்கள் கட்டிக் காத்துக் கொண்டிருக்கும் தமிழ் கலாச்சாரத்தினை விடவா சாமியாரின் ஒளிக் காட்சி கலாச்சாரத்தினை சீரழித்து விட்டது.ரஞ்சிதா நாடோடித் தென்றல், ஜெய்ஹிந்த் போன்ற படங்களில் இதைவிட மோசமாக காட்சி அளித்திருந்தபோது இந்த தமிழ் கலாச்சார காவலர்கள் எங்கு போனார்கள் எனத் தெரியவில்லை.

திரைபடங்களில் கதாநாயகியினை கீழுதட்டுடன் மேலுதடு கடித்து விரகமாக பார்ப்பது பிட்டத்தில் தட்டுவது, தொப்புளில் பம்பரம் விடுவது, உதட்டோடு உதடு கடிப்பது, மார்போடு மார்பு உரசுவது என எத்தனை எத்தனை ஆபாசங்களை இந்த கதாநாயகர்கள் அன்று எம்ஜிஆர் தொடங்கி நேற்று வந்த சிம்பு வரைக்கும் எப்படியெல்லாம் தமிழ் கலாச்சாரத்தினை சீரழிக்கின்றனர். அதை விடவா இந்த சாமியார் செய்து விட்டார்.

தினத்தந்தி நாளிதழை எடுத்துக் கொண்டால் பக்கத்திற்கு பக்கம் கற்பழிப்புச் செய்திகள் கொலைச் செய்திகள். தினமலர் நாளிதழை சொல்ல வேண்டாம்.வாரமலரில் வரும் அன்புடன் அந்தரங்கம் என்னும் ஒரு பகுதியே விருந்து அல்லது மருதம் படித்த நிறைவைத் தரும். தினத்தந்தி குழுமத்தின் வார வெளியீடான ராணியை எடுத்துக் கொண்டால் அட்டைப் படத்தில் மேலே ரஞ்சிதா கொடுத்திருக்கும் தோற்றம் போல்தான் படங்கள் வரும். கீழே குடும்பப் பத்திரிக்கை எனும் தலைப்பு வேறு. பத்திரிக்கையின் மொத்தப் பக்கங்கள் 32ல் 16 பக்கம் ஆணமைக் குறைவு விளம்பரங்கள் போக மீதிப் பக்கங்களில் சினிமா கிசு கிசு நரி விடும் கரடி என பாலியல் செய்திகள் மட்டும் தான் வரும். இது காலம் காலமாக தமிழ் கலாச்சாரத்தினை சீர் கெடுப்பதினை யார் புகார் செய்வது.

இது போக புலனாய்வு இதழ்கள் என்ற பேரில் நக்கீரன் ஜூனியர் விகடன் குமுதம் ரிப்போர்ட்டர் என அனைத்துப் பத்திரிக்கைகளும் பாலியல் செய்திகளுக்கும் கள்ளத்தொடர்பு செய்திகளுக்கும் தான் முன்னுரிமை கொடுத்து செய்தி வெளியிட்டு வருகின்றன.

முதலில் இந்த பத்திரிக்கைகள் தங்கள் முதுகில் உள்ள அழுக்கினை கழுவி விட்டு பின் அடுத்தவர் முதுகினை கழுவ வேண்டும்.

ஒரு தனி மனிதனின் படுக்கையறையினை வேவு பார்த்து அதை மக்களுக்கு சொல்லுவதின் மூலம் இவர்கள் என்ன சாதித்து விட்டார்கள். சாமியாரின் முகத்திரையினை இவர்கள் கிழித்து அதன் மூலம் மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தியதாக தம்பட்டம் அடித்துக் கொள்ளலாம். ஆனால் அதை ஒரு நாகரீகமாக புகைப்படத்தினை வெளியிட்டு சொல்லியிருக்கலாம். ஆனால் பிரைம் டைம் என்னும் நேரத்தில் அனைவரும் பதைபதைக்க ஒளிக்காட்சியினை திரும்ப திரும்ப ஒளி பரப்பியதன் மூலம் சன் தொலைக்காட்சியின் வியாபார நோக்கம் மட்டும் வெளிப்பட்டதே தவிர இவர்களிடம் கிஞ்சித்தும் சமூக விழிப்புணர்வு இல்லை.

ஒரு நல்ல பத்திரிக்கை என்பது எது என ஒரு அறிஞரிடம் கேட்டபோது அவர் சொன்னாராம், "எந்த பத்திரிக்கையில் ஆண்மைக் குறைவு விளம்பரங்கள் வராமல் உள்ளதோ அதுவே சிறந்த பத்திரிக்கை" என கூறினாராம்.இது தற்போது சன் டிவி போன்ற இந்த ஊடகங்களுக்கும் பொருந்தும்.


புதன், 3 மார்ச், 2010

ஸ்....அப்பாடா ரொம்ப க(கு)ஸ்டமப்பா.....

கொஞ்ச நாட்களுக்கு முன்பு நம்ம ஆதிமூல கிருஷ்ணன் அண்ணன் தாமிராவா இருந்தபோது ஒரு கோட்டர் அடிக்க எவ்வளவு சிரமப்பட்டார் என்பதை மிக சிறப்பாக எழுதியிருந்தார்.அப்பக்கூட நான் நினச்சதுண்டு "என்னடா மனுசன் ரொம்ப மிகைப்படுத்தி எழுதுறாரோ"ன்னு ஆனா அது எவ்வளவு உண்மைன்னு அனுபவிச்ச பின்னாடிதான் நமக்கு புரியுது. இதோ அந்த அனுபவம்.

கீழக்கரையில மொத்தம் மூனு டாஸ்மாக் கடை. ஒன்னு புது பஸ்ஸ்டாண்டு பக்கமும் ஒன்னு பழய பஸ்ஸ்டாண்டுக்கு பக்கமும் மூனாவது இரண்டுக்கும் இடையிலும் இருக்குது. நம்ம எப்பவுமே சரக்கு வாங்க இந்த நடுக்கடைக்குத்தான் போவது வழக்கம். ஏன்னா இந்த கடைப் பகுதிதான் கொஞ்சம் இருட்டா இருக்கும். தெரிஞ்சவுங்க கண்ணுல படாம சரக்கு வாங்கலாம்.

தெரிஞ்சவங்க கண்ணுல படாம தண்ணியடிக்கிற யோக்கிய சிகாமனியா என்னை நினைச்சிடாதிங்க. இந்த தெரிஞ்சவுங்க டாஸ்மாக் பாரில் பழகித் தெரிஞ்சவுங்க. பய புள்ளைக பாத்தாங்கன்னா வந்தது நம்ம குவாட்டருக்கு ஆபத்து. "என்ன தம்பி ஆளையே காணோம்"ன்னு ஆரம்பிப்பாய்ங்க. அப்புறம் கூசாம "இருபது ரூபா இருந்தா கொடுங்க"ன்னு தலையை சொரிவாய்ங்க அதுக்கும் நம்ம மசியலன்னா "தம்பி ஒரு ரெண்டு அவுன்சாவது கொடுங்க"ன்னு மண்டைய பிய்க்க வைப்பாய்ங்க. இவய்ங்களுக்கு பயந்து பாட்டில டேபிள்ள வச்சுச் சரக்கு அடிக்காம இடிப்புல சொருகிகிட்டு அடிப்பது உண்டு.(கோட்டருக்கு ஒரு துளி குறைஞ்சாலும் நமக்கு ஆத்மதிருப்தி கிடைப்பதில்லை அதுனால சரக்க யாரோடும் பகிர்ந்து கொள்ள மனசு ஒப்புவதில்லை).

நம்ம ராசி எப்படின்னா எப்பவுமே கீழக்கரை பஸ் ஸ்டாண்டுல ராம்நாடு பஸ்ஸுக்கு நின்னா ஏர்வாடி தர்ஹா வண்டியா வரும். ஏர்வாடி போக வந்தோம்னா ராம்நாடு பஸ்ஸா வரும். அதே மாதிரி மூனு நாளைக்கு முன்னாடி தங்கமணி ஊர்ல இல்லாத நன்னாளில் எனக்கு தண்ணியடிக்க ஆசை வந்தது.

வழக்கம் போல நம்ம இருட்டுக் கடைக்கு தெரிஞ்சவுங்க கண்ணுல படாம வந்து பாத்தா கடை பூட்டிக் கிடக்கு. வாசல்ல உட்காந்துகிட்டு இருந்த பெருசுகிட்ட விபரம் கேட்டா அன்னைக்கு மீலாது நபியாம். விடுமுறையாம்.அடச்சேன்னு ஆசையை அடக்கிக்கிட்டு அடுத்த நாளும் அந்த கடைக்கு விசயம் செய்தேன். மணி சுமார் எட்டு இருக்கும் அந்நேரத்திலும் முத நாள் பேங்க் மூடியிருந்தா மறுநாள் ஒரு கூட்டம் வருமே அதே மாதிரி ஒரு கூட்டம் கடையை தேன்கூட்டை தேனிக்கள் சுத்தின மாதிரி கூடியிருந்தது.மெல்ல அதுக்குள் சக்கர வீயுகத்தை அபிமன்யு உடைச்ச மாதிரி உள்ளே புகுந்தேன்.

பாத்தா பயபுள்ளைக எல்லாம் ஒரு 62 கொடு 72 கொடு அப்படின்னே சரக்கு வாங்கிகிட்டு இருந்தாய்ங்க. என்னடா சரக்கு பேரை கேட்காம 62,72ன்னு கேட்குறாய்ங்களே நினைச்சுகிட்டு இருக்கும்போது கையிலிருந்த காசை டாஸ்மாக் விற்பனையாளர் பிடுங்கினார். "என்ன வேணும் 62ஆ 72ஆ?ன்னு ஒரு அதட்டல் வேறே. தொண்டையில் எச்சி விழுங்கிகிட்டே "ஒரு சீசர் கொடுங்க"ன்னேன்.

"இல்ல"ன்னு விற்பனையாளர் சொன்னதும் "அப்ப ஒரு கொரியர் கொடுங்க"ன்னேன். கூட்டத்தில இருந்த ஒருத்தன் "அட என்னய்யா நேரத்த வீனாக்கிகிட்டு சீக்கிரம் ஏதாவது 62ஐயோ 72ஐயோ வாங்கிட்டு இடத்த காலி பண்ணுவியா இப்பப் போயி சீசர் கோரியர்ன்னு பினாத்துரியே"ன்னு சவுண்டு விட்டான். உடனே விற்பனையாளர் "தம்பி ரம்மும் விஸ்கியும் தான் இருக்கு நீங்க ஒரு ஒன்பது ஒன்பதரைக்கு வந்திங்கன்னா நீங்க கேட்டது கிடைக்கும்"ன்னு வயித்துல பிராந்தியை வார்த்தார்.ரம்மை அடிச்சா மறுநாள் கழுத்தில வலிக்கும் மேலயும் அந்த வாடை நம்ம வாய்க்கே சமயத்துல பிடிப்பது இல்லை. விஸ்கியை அடிச்சா மறுநாள் தலை வலிக்கும் அதுனால் காத்திருந்தாவது பிராந்தி வாங்கி அடிப்போம்ன்னு அப்போதைக்கு வெளியில் வந்து விட்டேன்.

ஒன்பதரை மணிக்கு மறுபடியும் இருட்டுக் கடைக்கு படையெடுத்தேன். பாத்திங்கன்னா ஒரு லாரி நின்னுகிட்டு சரக்கை இறக்கிக்கிட்டு இருக்குது. வழக்கம் போலவே கொள்ளைக்கூட்டம். மறுபடியும் உள்ளே நுழைஞ்சு விற்பனையாளரை நெருங்கினா கையிலிருந்த காசை புடிங்கி நான் கேட்காமலயே ஒரு MC கோட்டரையும் சில்லரையும் கையில் திணிச்சார்.

பாருக்குள்ளே கூட்டம் இல்ல. எல்லா பயபுள்ளைகளும் பாரில் தண்ணியடிக்காது வீட்டுல போயிதான் அடிக்கும் போல. ஒரே ஒருத்தன் மட்டும் டேபிள்ளே தலையை வச்சு தூங்கிகிட்டு இருந்தான். கூட்டம் இல்லாததுனாலே நான் தைரியமா சரக்க டேபிள்ள வச்சு ஒரு கிளாசுல 90 ஊத்தி லிம்கா மிக்ஸ் பண்ணி வாயில வைக்கப் போணா எதுத்த மாதிரி எங்கூட ஸ்கூல்ல படிச்ச பசீரு. அவன் தான் அந்த பாருல தூங்கிகிட்டு இருந்தவன்னு எனக்கு லேட்டா புரிஞ்சுது. உடனே சுதாரிச்சிகிட்டு "பசீரு ரொம்ப நாளைக்கு அப்புறம் தண்ணியடிக்கிறேன் ஷேர் ஏதும் பண்ண முடியாது அதுனால எதுவும் கேட்காதே"ன்னு சொல்லிக்கிட்டு இருக்கும் போதே நான் சொன்னதை கொஞ்சம் கூட சட்டை செய்யாமல் பாட்டிலை கையில் எடுத்து ராவா குடிச்சிட்டு "அடேய் ரொம்ப நாளைக்கு அப்புறம் தண்ணியடிக்கிறே, கொஞ்சமா அடி"ன்னு கொஞ்சம் மொச்சைப் பருப்பை வாயில போட்டு போயிக்கிட்டே இருந்தான்.

மறுபடியும் சரக்கு வாங்க முடியாத நிலை. ஏன்னா பத்து மணிக்கு மேல ஆகி விட்டது.கடை மூடியாச்சு அடிச்ச 90 பசியைக் கிள்ள நாலு பரோட்டவ போடலாம்ன்னு எங்க ஊர்காரர் தவசியோட புரோட்டாக் கடைக்குப் போனேன்.

"என்ன தம்பி ஆச்சு ஏன் ஒரு மாதிரியா இருக்கிங்க"ன்னு தவசி அண்ணன் கேட்டார். நடந்தை எல்லாம் சொல்லி "அண்ணே புல்லா ஏறாம ஒரு மாதிரி ஏமாத்தமா இருக்குன்னே"னேன். தவசியண்ணன் கொஞ்சம் யோசிச்சு "தம்பி பக்கத்து பெட்டிக் கடையில ஒரு கோக் வாங்குங்க"ன்னார்."ஏண்ணே"ன்னு கேட்டதுக்கு "வாங்குங்க சொல்லுறேன்"ன்னு சொன்னார்.

கடையில ஒரு மூலையில் ஒரு பாதி குவாட்டர் ரம்மை எடுத்தார்."தம்பி இத அடிக்கிறிங்களா" ன்னு கேட்டார். ரம்மு நமக்கு ஒத்து வராதுன்னு வேதாந்தம் பேச என்னால் முடியவில்லை. எதக் கொடுத்தாலும் குடிக்கிற மனநிலையில் இருந்ததால் தலையாட்டினேன்.

தவசியண்ணன் சரக்கை ஒரு கிளாசுல ஊத்தி கொஞ்சம் கோக்கை மிக்ஸ் பண்ணி கொடுத்தார். மிச்ச கோக்கை அதே பாட்டில்ல ஊத்தி சரக்கு மாதிரி மறுபடியும் கடை மூலையில் வச்சிட்டார். "ஏன்னே இப்படி பண்ணுறிங்க"ன்னு கேட்டதுக்கு,"இது நம்ம ஊரு அண்ணமராசவுக்காக ரெகுலரா வாங்கி வைக்கிறது. ராம்நாடுல இருந்து பய வேலையை முடிச்சு வர பத்து மணிக்கு மேலாகும் என்பதால நான் எப்பவும் வாங்கி வைப்பேன்"ன்னார்.நான் உடன் ஆச்சர்யம் அடைந்து "என்னது அன்னமராசாவா அவன் மூடிய மோந்து பாத்தாலே கீழே விழுந்துடுவான் அவன் டெய்லி கட்டிங்க் அடிக்கிறானா?"ன்னேன், அதுக்கு தவசியண்ணன் சிரிச்சிக்கிட்டே" நீ சரக்கை குடி அப்புறம் வேடிக்கையை மட்டும் பாரு"ன்னு சொன்னாரு. நமக்கென்ன சரக்கு கிடைச்சாச்சுன்னு மறுபடியும் ஒரு 90 யைத்தாக்கிகிட்டு சாப்பிட ஆரம்பிக்கும் போது எங்க ஊரு அண்ணமராசா வந்தான் ராம்நாடுல இருந்து வேலையை முடிச்சுகிட்டு வர்றான் போல.

வந்தவன் உடனே பக்கத்துக் கடையில ஒரு கோக் வாங்கினான். தவசியிடம் ஜாடை காட்டினான். அவர் உடனே அந்த சரக்கு பாட்டிலை எடுத்துக் கொடுக்கவும் அண்ணமராசா இப்போது கோக்குக்கே கோக்கை மிக்ஸ் பண்ணிக் குடிக்க ஆரம்பிச்சான்.

ஒரு அரைமணி நேரம் கழிச்சு வீட்டுக்கு போகும் போது என்கூட வந்த அன்னமராசா சொன்னான் "அண்ணே ரம்மு மாதிரி சரக்கு எதுவும் இல்லன்னே, பாருங்க எனக்கு நல்லா போதை ஏறிக்கிட்டே இருக்கு"ன்னான். இருட்டுல நான் சிரிச்சது அவனுக்குத் தெரியாது.