வியாழன், 17 செப்டம்பர், 2009

அரிய நாள் காட்டி

நண்பர்களே

Excel சூத்திரங்கள் பற்றி நான் எழுதி வரும் பதிவுகளைப் படித்திருப்பீர்கள்.

அந்த வகையில் Excel சூத்திரங்களின் சிறப்பைச் சொல்லும் அரிய நாள் காட்டி ஒன்றினை எனது நண்பர் ஒருவர் வழங்கினார்.





நாட்காட்டியின் சிறப்பு என்ன என்றால் 1900 வருடம் முதல் 2078 வருடம் வரைக்கும் இந்த நாட்காட்டியினைப் பயன்படுத்தலாம். முழுவதும் சூத்திரங்களால் இது உருவாக்கப்பட்டது.





நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இதுதான்.



1.முதலில் இங்கு சென்று கோப்பினைத் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

2.தரவிறக்கத் தளத்தில் கடவுச்சொல் பெட்டியில் nagen என உள்ளிடுங்கள்.

3.தரவிறக்கம் செய்த கோப்பினைத் திறந்து மேல்புறம் உள்ள Enter year for calendar என்பதற்கு எதிரே உள்ள பச்சை நிற பெட்டியில் உங்களுக்கு வேண்டிய வருடத்தினை உள்ளிடுங்கள்.



அவ்வளவுதான் ஆயுளுக்கும் நாட்காட்டி தேவையில்லை.

பீர்பால் கதை ஒன்னு பிற்போக்கு கதை ஒன்னு


கதையைத் தொடங்கும் முன்....
"ஆகாச வானி" என தமிழர்க்கு
அந்நியமாய் செய்தி சொன்ன
அகில இந்திய வானொலியில்
அனுதினமும்
அரியபல தகவல்களை தம்
அழகுக் குரலால் சொல்லி உடன்
அருமை நகைச்சுவையும்
அள்ளி வழங்கிட்ட
அண்ணன் தென்கச்சி கோ சுவாமிநாதன்
அமரர் ஆன தகவல் கேட்டு
அல்லறுற்றது தமிழ் உலகம்
அன்னாரது பிரிவால் வாடும்
அவரது குடும்பத்தாருக்கு
ஆறுதல் பல கூறி
அன்னாரது ஆத்மா
ஆண்டவனில் கலந்திடவே
அனைவரும் வேண்டி நிற்போம்.

----------------------------------------------------------

பீர்பால் கதை ஒன்னு

மாமன்னர் அக்பரது அவையில் மந்திரியாய் இருந்த மதியூகி பீர்பாலுக்கு மன்னர் எப்போதும் தனிச்சிறப்பு கொடுத்திருந்தார். இது கண்டு பொறாமை கொண்ட மந்திரிகள் சிலர் மன்னரிடம் "எம்மிடம் இல்லாச் சிறப்பு என்ன கண்டீர் பீர்பாலிடம் "என நயந்து கேட்டனர்.குறுநகை ஒன்றையே பதிலாக தந்த மன்னர் குறுமதி படைத்த அந்த மந்திரிகளுக்கு பீர்பாலின் சிறப்பை உணர்த்த எண்ணிக் கொண்டார்.

ஒருநாள் மன்னர் அக்பர் அரசவைக்கு சற்றே கழுத்தைச் சாய்த்துக் கொண்டு அவைக்கு வந்தார்.அவையில் பீர்பால் உள்ளிட்ட அமைச்சர்கள் அனைவரும் இருந்தனர். வணங்கி அமர்ந்த அனைவரிடமும் அக்பர் சொன்னார் தமக்கு கழுத்து வலி வந்த காரணத்தை. "அவையோர்களே ஆன்றோர்களே நேற்று இரவு உறங்கும் போது கள்ளனைப் போல் வந்த ஒருவன் என் கழுத்திலே மிதித்து விட்டான்.கைகளால் என்னை அடித்தும் விட்டான்.என்னை உதைத்து மிதித்த அவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் சொல்லுங்கள்"என அவையோரை அக்பர் கேட்டார்.

பதைபதைத்த மந்திரிகள் பலரும் அவனது கைகளை வெட்டுங்கள் கால்களை முறியுங்கள் சிரச்சேதம் செய்யுங்கள் என ஆலோசனைகள் பல கூறினர். புன்னகைத்து அமர்ந்திருந்த பீர்பாலிடம் அக்பர் கேட்டார். "பீர்பால் அனைவரும் தங்கள் தண்டனையை கூறிவிட்டனர். அரசரை அவமதித்த அவனுக்கு என்ன தண்டனை வழங்கலாம் என உமது கருத்தினைக் கூறுங்கள்" என வினவினார்.

பீர்பால் எழுந்து சொன்னார் "மன்னா உங்களை உதைத்த கால்களுக்கு தங்க சிலம்பு பூட்டுங்கள்,அடித்த கைகளுக்கு வைரத்தில் வளையல் அணிவியுங்கள்"

துடித்துப்போன மற்ற மந்திர்கள் "ராஜ துரோகி, மன்னரை அடித்தவனுக்கு தண்டனை வழங்கச் சொல்லாமல் பரிசுகள் வழங்கச் சொல்லுகிறாயே இது அடுக்குமா என ஆர்ப்பரித்தனர். அவர்களை அடக்கிய மன்னர் சொன்னார். "பீர்பால் வழங்கிய தண்டனை சரிதான்"என்று கூறி அவையோருக்கு காரணத்தை விளக்க பீர்பாலிடம் கேட்டுக் கொண்டார்.

பீர்பால் சொன்னார்"மன்னா கட்டுக்காவல் மிகுந்த உங்கள் அந்தப்புரத்திற்கு அன்னியன் ஒருவன் வருவது அவ்வளவு இயலாத காரியம், மேலும் அடிக்கும் அளவுக்கு, கழுத்தில் உதைக்கும் அளவுக்கு மாவீரர் நீங்களும் அனுமதித்திருக்க மாட்டீர்கள் அவன் அன்னியனாய் இருக்கும் பட்சத்தில் அங்கேயே அவனுக்கு தண்டனை வழங்கியிருப்பீர்கள். எனவே இந்த அளவுக்கு உங்களிடம் குறும்பு செய்தவன் தங்கள் குழந்தையாகத்தான் இருக்கும் என முடிவு செய்து அடித்த கைகளுக்கு வளைகளும் உதைத்த கால்களுக்கு சிலம்பும் பரிசாகத் தரச் சொன்னேன்" எனக் கூறினார்.

பீர்பாலின் அறிவாற்றல் கண்டு அமைச்சர்கள் வியந்து நின்றனர். அவர் மேல் வீண் பொறாமை கொண்டதற்கும் வெட்கி நின்றனர்.

-------------------------------------------------------------------

பிற்போக்குக் கதை ஒன்னு

TMDK அதாவது (TASMAC MEMBERS DEVELOPMENT KINGDOM) என்னும் நாட்டில் ஒரு மன்னன் இருந்தார் கருப்பாக நம்ம எம்ஜியார் மாதிரி அழகா இருப்பார். அவர்கிட்ட பன் ரொட்டி ராமசாமின்னு ஒரு மதியூகி மந்திரி இருந்தார். பெரிய பதவி கொடுத்து அழகு பார்த்த கருப்பு மன்னன் எங்கே போனாலும் பக்கத்துலயே பன் ரொட்டி ராமசாமியை உட்கார வைச்சு பேசும் அளவுக்கு மந்திரிக்கு உரிமை கொடுத்திருந்தார். இது கண்ட பல அல்லக்கை மந்திரிகள் "மன்னா நாங்க பலரும் ஆரம்ப காலத்துலருந்து உங்ககிட்ட அடியும் உதையும் வாங்கி கூடவே இருக்கோம் ஆனா எங்கிருந்தோ வந்த இந்த பன் ரொட்டிக்கு நீங்க இவ்வளவு பவர் கொடுத்திருக்கிங்களே" என அங்கலாய்த்தனர்.காலம் கனியட்டும் அவர்களுக்கு பன் ரொட்டியின் அருமை பெருமையெல்லாம் உணர்த்துவேன் என மன்னன் நினைத்துக் கொண்டார்.

ஒருநாள் TMDK மன்னன் கழுத்து வலியோடு அரசவைக்கு வந்தார். வந்து மந்திரிககிட்ட சொன்னார்"நேற்று இரவு நான் ஒருத்தனை நல்லா அடிச்சிட்டேன் அவனும் மாவீரன் தான் ரொம்ப அவனை அடிச்சதுனால எனக்கு கழுத்து வலி வந்துருச்சு அடிச்ச அவனை என்ன பண்ணலாம் அவன் பேரு என்ன" அப்பிடின்னு மந்திரிககிட்ட புதிர் போட்டாரு.

அல்லக்கை மந்திரிக எல்லோரும் சொன்னாங்க 'மன்னா புயலடிச்சுப் பொழச்சவன் இருக்கலாம் ஆனா இந்த TMDK நாட்டின் பூபதி அடிச்சு பொழைச்சவன் இருக்க முடியாதே, அதுனால நீங்க அடிச்சவன் இன்னியேரம் செத்துப் போயிருப்பான் செத்தவன் பேரு நமக்கெதுக்கு'அப்படின்னு துதி பாடுனாங்க.

"போங்கடா அல்லக்கை முண்டங்களா" அப்படின்னு மன்னர் அவிய்ங்கள திட்டிபுட்டு பன் ரொட்டி ராமசாமியைப் பாத்து கேட்டாரு"அண்ணே நீங்க சொல்லுங்கண்ணே நேத்து ராத்திரி நான் அடிச்சவன் யாரு அவன என்ன பண்ணலாம்"னு

பன் ரொட்டி ராமசாமி சொன்னாரு" அரசே நீங்க அடிச்சவன் பேரு நெப்போலியன் அவன நேத்து ராத்திரி ரொம்ப அடிச்சதுனாலதான் உங்களுக்கு கழுத்து வலி வந்துருச்சு,ஒவர் ஹேங்கா இருக்கும்னு நினைக்கிறேன் அதான் உளறிகிட்டு இருக்கிங்க அதுனால அடிச்ச அவனை மறுபடியும் அடிச்சா சரியாப் போயிடும்"

மன்னனும் "சரிதான் நீங்க சொன்னது மறுபடியும் அவன அடிக்கப் போறேன் வரட்டா ஆங்க் ம் .... "அப்புடின்னு சொல்லிபுட்டு போயிட்டாரு.

"பக்கத்துல இருந்து ஊத்திக் கொடுத்த மாதிரியே சொல்லுறாரே" அப்புடின்னு அல்லக்கை மந்திரிகள் பன் ரொட்டியின் அறிவை நினைத்து தங்களுக்குள் வெட்கிக் கொண்டார்கள்.

---------------


செவ்வாய், 15 செப்டம்பர், 2009

PDF கோப்புகளைத் திருத்த ஒரு இலவச மென்பொருள்

PDF கோப்புகளை Excel ,Word கோப்புகளாக மாற்றுவதற்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட தாள்களை இணைப்பதற்கும், பிரிப்பதற்கும் மேலும் PDF கோப்புகளுக்கு Password கொடுத்து பாதுகாப்பதற்கும் பல பயனுள்ள மென்பொருள்கள் உள்ளன. அந்த வரிசையில் ஒரு பயனுள்ள மென்பொருள்தான் Foxit PDF Editor 2.1 .இதன் மூலம் நமது PDF கோப்புகளை நம் விருப்பதிற்கேற்ப திருத்தி சேமித்துக் கொள்ளலாம்.

இந்த தளத்தில் சென்று Other PDF Tools என்னும் தலைப்பில் கீழ் உள்ள Foxit PDF EDITOR 2.1 BUILD 0702 (.exe) என்ற கோப்பினைத் தரவிறக்கிக் கொண்டு அதை கணினியில் சேமித்துக் கொள்ளவும். பின் கோப்பினைத் திறந்து Run செய்து கணினியில் Install செய்து கொள்ளவும்.பின் Desktopல் உள்ள Icon வழியே Foxit editorரை திறந்து FILE/OPEN கிளிக் செய்து நீங்கள் திருத்த வேண்டிய PDF கோப்பினை திறந்து கொள்ளவும். திருத்த வேண்டிய வாக்கியத்தின் மேல கர்சரை வைத்து அழுத்தினால் கீழ்கண்ட படத்தில் உள்ளவாறு ஒரு பெட்டி தோண்றும்.



அதில் Text என்பதற்கு எதிரில் உள்ள உங்கள் பழைய வாக்கியத்தினை மாற்றி நீங்கள் சேர்க்க வேண்டிய வாக்கியத்தினை தட்டச்சு செய்யுங்கள். இது போல கோப்பு அனைத்தையும் நம் விருப்பம் போல திருத்தி மாற்றி சேமித்துக் கொள்ளலாம்.

திங்கள், 14 செப்டம்பர், 2009

Excel சூத்திரங்கள் - பாகம் 3

Excel சூத்திரங்கள் பற்றிய கடந்த பதிவில் lookup பற்றி எழுதுங்கள் என எனக்கு நண்பர் பினாத்தல் சுரேஷ் பின்னூட்டமிட்டிருந்தார்.அவர் கேட்டுக் கொண்டபடி இந்த பதிவில் Vlookup மற்றும் Hlookup பற்றி விளக்குகிறேன்.

Vlookup அதாவது vertical lookup என்பது நெட்டுவசத்தில் உங்களுக்குத் தேவையான தகவல்களை பெறுவதாகும். அதுபோல் H look up என்பது குறுக்குவசத்தில் தேவையான தகவல்களை பெறுவது.


உதாரணத்திற்கு நீங்கள் ஒரு Excel fileல் encoding செய்கிறீர்கள். Encoding valueவுக்கு சம்பந்தப்பட்ட தகவல் வேறு ஒரு Excel கோப்பில்லோ அல்லது அதே கோப்பின் வேறு தாளிலோ உள்ளது(source file) என கருதுவோம். ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து அந்த சம்பந்தப்பட்ட தகவல்களை உள்ளிடுவது கடினமான வேலை. இதற்குத்தான் தீர்வாக lookup சூத்திரம் உள்ளது.இப்போது கீழே உள்ள படத்தினை பெரிதாக்கிப் பாருங்கள்.



பல மாணாக்கர்கள் தங்கள் பாடங்களில் வாங்கிய மதிப்பெண்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.மொத்த மதிப்பெண்களும் அவர்களது தேர்ச்சி நிலையும் குறிப்பிடப்பட்டுள்ளது.இதுதான் source file என வைத்துக் கொள்வோம்.இனி சில குறிப்பிட்ட மாணாக்கரது கணிதம்,அறிவியல் மதிப்பெண்கள் மற்றும் தேர்ச்சி நிலை மட்டும் நமக்கு மற்றொரு Excel கோப்பில் தேவைப்படுகிறது எனில் vlookup சூத்திரத்தின் மூலம் அவற்றை எளிதாக பெறலாம்.கீழ்கண்ட படத்தினைப் பாருங்கள்.


சூத்திரம் தேவைப்படும் இடத்தில் =vlookup( என type செய்யும்போது சூத்திரம் பின்வருமாறு வரும்.vlookup(lookup value,table array,col.index num,(range look up)).இதில் lookup value என்பது நீங்கள் எந்த valueவுக்காக தகவல் தேடுகிறீர்களோ அது. மேலுள்ள படத்தின்படி ஹரிகரன் என்ற மாணாக்கரின் மதிப்பெண்களை தேடுகிறீர்கள் என்றால் ஹரிகரன் பெயர் உள்ள cell B5ல் கர்சரை அழுத்தவும். மாற்றாக =vlookup("Hariharan", எனவும் எழுதலாம். ஆனால் நீங்கள் எழுதுவது source fileல் உள்ள text போலவே இருக்க வேண்டும்.உதாரனத்திற்கு "Hariharan" என்பதற்குப் பதிலாக "hariharan" என எழுதினால் error தான் வரும்.எனவே முடிந்தவரை கர்சரை அழுத்தி B5 என்றே உள்ளிடுங்கள்.

அடுத்தது table array இதற்கு source file இருக்கும் இடத்துக்குச் செல்லுங்கள்.அங்கு நாம் தேடும் lookup value (Hariharan) எந்த columnத்தில் உள்ளதோ அதில் முதல் rowவிலிருந்து tableஐ தொடங்கி நமக்கு என்ன என்ன தகவல்கள் வேண்டுமோ அவை அடங்கியுள்ள columnத்தின் கடைசி row வரைக்கும் கர்சரை வைத்து இழுங்கள். உதாரனத்திற்கு மேலுள்ள source file படத்தில் Hariharan என்னும் பெயர் column B யில் உள்ளது எனவே அதன் முதல் rowவான B2 விலிருந்து ஆரம்பித்துஉங்களுக்கு தேர்வு நிலை pass or fail உள்ள column I யில் கடைசி row வரைக்கும் கர்சரை வைத்து இழுங்கள். இப்படி இழுத்த பின் உங்களது source file வேறு excel கோப்பாக இருந்தால் கோப்பின் பெயரோடு தாளின் பெயரோடு table array இப்படி வரும்(book#)sheet#!$B$2:$I$17 வரும்.ஆனால் ஒரே கோப்பின் அடுத்த தாளில் table array இழுக்கும் போது sheet#!B2:I17 என அமெரிக்க டாலர் சின்னம் இல்லாமல் வரும் எனவே நீங்கள் sheet#!B2:I17யில் நீல நிறத்தில் உள்ள table range ஆன (B2:I17 ) இதை formula barல்mouse ஆல்cover செய்து தட்டச்சு பலகையில் F4ஐ தட்டி இப்படி டாலர் சின்னத்தோடு (sheet#!$B$2:$I$17 ) மாற்ற வேண்டும் இல்லையெனில் உங்களது table array ஒவ்வொரு cellலுக்கும் மாறுபடும். சரியான விடையைப் பெற முடியாது.

மூன்றாவதாக column index num நீங்கள் உங்கள் source fileல் lookup valueவை(Hariharan படத்தின்படி) முதல் columnஆக வைத்து table array இழுத்திள்ளீர்கள் அல்லவா. இதில் lookup value உள்ள column த்தின் index no ஒன்று என எண்ணிக்கொள்ளுங்கள் அதிலிருந்து உங்களுக்கு தேவைப்படும் தகவல் உள்ள column எத்தனையாவது columnமோ அந்த எண்ணை உள்ளிடுங்கள். source fileபடத்தின் படி உங்களுக்கு தமிழ் மதிப்பெண் தேவைப்பட்டால் 2 எனவும் ஆங்கிலம் 3 கணிதம் 4 அறிவியல் 5 மொத்த மதிப்பெண்ணுக்கு 7 தேர்ச்சி நிலைக்கு 8 இப்படி உள்ளிடவேண்டும்.

இறுதியாக (range lookup) இதற்கு true எனக்கொடுத்தால் தோராயமான விடையும் false எனக்கொடுத்தால் சரியான விடையும் கிடைக்கும்.உதாரனத்துக்கு முன்பே சொன்னது போல் நீங்கள் Hariharan என்ற lookup value வுக்குதகவல் தேடும் போது soruce fileலிலும்Hariharan என இருந்தால் FALSE கொடுங்கள். மாறாக harikaran என இருந்தால் TRUE கொடுத்தால் விடை வரும். முடிந்தவரை FALSE என சரியான விடை கிடைக்குமாறு தேடவும்.நீங்கள் தேடக்கூடிய value எண்ணாக இருந்தாலும் text ஆக இருந்தாலும் FALSE இடும்போது சரியான விடையுடன் திரும்பி வரும். கீழுள்ள படத்தினைப் பார்க்கவும்.

அடுத்தது HLOOKUP
இதுவும் VLOOKUP போலவேதான்.கீழுள்ள படத்தினைப் பாருங்கள் அடுத்த columnத்தில் தகவல் தேவைப்பட்டால் vlookup பயன்படுத்துவது போல ஒரே வரிசையில் தகவல் தேவைப்படும்போது hlookup பயன்படுத்தலாம்.உதாரனத்திற்கு souce fileல் அன்பழகனுக்கு அடுத்த ஐந்தாவது பெயர் தேவைப்படுகிறது என வைத்துக் கொள்வோம் இதற்கு =hlookup(B2,(book#)sheet#!$B$2:$B$1000,5,false) என சூத்திரம் இடும்போது அன்பழகனுக்கு அடுத்த ஐந்தாம் இடத்தில் உள்ள பெயரான David வந்து விடும்.


கடைசியாக ஒரு தகவல்.

உங்களது lookupசூத்திரத்தின் விடை error ஆக வராமல் தடுக்க மெகா சூத்திரமாக இப்படி =iferror(vlookup(lookup value,table array,col.index num,(range look up)),0) எனக் கொடுத்தால் error வரும் இடங்களில் 0 என வந்துவிடும். மாறாக error வரும் இடங்களில் no என வரவேண்டும் என விரும்பினால் =iferror(vlookup(lookup value,table array,col.index num,(range look up)),"no") என சூத்திரத்தினை மாற்றி எழுதலாம். இவ்வாறு error வரும் இடங்களில் நீங்கள் விரும்பியவாறு விடையை வரவழைக்கலாம்.

மீண்டும் அடுத்த பதிவில் பல பயனுள்ள சூத்திரங்களோடு வருகிறேன் என உறுதி கூறி விடைபெறுகிறேன்.(அரசியல் கூட்டம் அடிக்கடி பாக்காதின்னா கேட்டியா....) நன்றி வணக்கம்.


ஒரு தேவதை என் எதிரில் வந்தால்...


ஊரெங்கும் தேவதை வந்து
உவந்திடுதாம் வரங்கள் பத்து
பதிவுலகில் படித்த நானும்
பழங்கதை ஒன்று நினைக்கலானேன்.

அந்தகன் வந்து அழைக்க மாட்டானா
என அல்லலுற்றிருந்தான்
ஏழை அந்தகன் ஒருவன்.
பார்ப்பதற்கு விழிகள் இல்லை
பரிவுகாட்டும் மொழிகள் இல்லை
செல்வம் ஈட்டிடவும் வழிகள் இல்லை
படும் துன்பங்களும் ஒழியவில்லை-என
விதிர்விதிர்த்து இருந்த அவன்முன்
எதிரில் வந்தாள் ஒரு தேவதை.

பாரெங்கும் உனைப்போல்
பலபேருக்கு கொடுக்க வேண்டும்
பத்துவரம் இல்லை மகனே
ஒரு ஒத்தைவரம் கேள் என்றாள்
கிடைப்பதோ வரம் ஒன்று -அது
போக்க வேண்டும் அவனை
வாட்டிடும் துயரை வென்று
யோசித்தான் அந்தகன்
கேட்டிட்டான் இப்படி
'அம்மா
என் பேரன் தங்கக் கிண்ணத்தில்
பால் அருந்துவதை
என் மாளிகை உப்பரிகையில் நின்று
உவப்புடனே நான் காண வேண்டும்"

என் எதிரிலும் தேவதை வந்தால்...
பத்து வரம் கேட்க வேண்டாம்
ஒரு ஒத்தை வரம் கேள் என்றால்
நயப்புடனே நானும் கேட்பேன்
நல்லதொரு வரம் ஒன்று.
'அம்மா
மறைந்த எம் மன்னவன்
மதயானை போல மீண்டு வந்து
மடிந்த எம் மக்கள் முன்பும்-உயிரை
மாய்த்த எம் முத்துகுமரன்கள்
கண்ணெதிரேயும்
மகிந்தா, கோத்தபையா
மற்றும் சரத் பொன்சேகா எதிரிகளையும்
'கை' காட்டும் கருணா போன்ற துரோகிகளையும்
கடிதில் கழுவேற்ற வேண்டுமென
கச்சிதமாய் கேட்பேன் வரம் ஒன்று.






சனி, 12 செப்டம்பர், 2009

"மானாட மயிலாட" எதற்கு?




அண்டை மாநிலத்தில்
அவளோட ராவுகளும்
அஞ்சரைக்குள்ள வண்டிகளும்
வந்திறங்கிய காலம் சொல்லும்
அங்கு
கம்யூனிஸ்டுகள் களப்பனியில்
தீவிரமாய் இருந்தார் என்று.




இந்திய முட்டாள்கள்
பதினோருபேர்
மூன்று ஐந்து நாள் ஆட்டமென்றும்
ஏழு ஒரு நாள் ஆட்டமென்றும்
வெளிநாடு
டூர் சென்ற தேதிகள் சொல்லும்
அன்று பாராளுமன்றத்தில்
எவ்வளவு பரபரப்பு இருந்தது என்று



இளைஞர்களின் சக்தி
இணையற்ற சக்தி
மாணவர்களின் சக்தி
மாபெரும் சக்தி
எழுச்சிப் பெற்றால்
என்ன ஆகும் என

பழம் தின்று கொட்டைப்போட்ட
பகுத்தறிவு பகலவன்களுக்குத்
தெரியாதா என்ன?



பெரியதிரை "டார்கெட்டு" உள்ள
சின்னத்திரை கூத்தாடிகளும்
பெரியதிரை"மார்கட்டு" இழந்து
சின்னத்திரை வந்த 'ஆத்தா'டிகளும்
அரிப்பை சொரிந்து கொள்ளும்
அழகினை பார்க்கும் வரைக்கும்



முத்துக்குமரன்களை
மறைத்து
"முத்தழகு" தங்கதாமரை
வாங்கியதை
தமிழன் நமக்குத்
தலையங்கமாய்
சொல்லுவார்கள்.

ஆட்சிமாறினால்

காட்சியும் மாறும்

"அய்யோ கொல்லுறாங்களே"

என்னும் படம் மட்டும்தான் ஓடும்.





வியாழன், 10 செப்டம்பர், 2009

பிலிப்பினோ சில சுவையான தகவல்கள்



இன்னியோட மூனு வருசம் ஆச்சுங்க இந்த பட்டிங்களோட (இங்கிலிஷ் buddy இல்லிங்க மலையாளத்து பட்டி காரணத்த கடைசில சொல்லுறேன்) குப்பைக் கொட்டி.

இந்தியனைக் கண்டாலே இவய்ங்களுக்கு ஆகவே ஆகாது.ஏன்னா சவுதில இவய்ங்களுக்கு வேலையில சவாலா இருக்கிறவன் இந்தியன் மட்டும்தான்.

நம்ம ஆள்களைப் பாத்தாவே ரொம்ப எகத்தாளமும் கிண்டலுமா தகாலுவில(அவுய்ங்க நாடோடி பாஷை) பேச ஆரம்பிச்சிடுவாய்ங்க. நம்ம ஆளுகளுக்கு அவுய்ங்க வச்சுருக்கிற பேரு டூ மச் கிர்கிர் கை (too much girgir guy) ஏன்னா நம்மாளு நாலு பேரு சேந்தா சதா பேசிகிட்டே இருப்பான்.

நம்ம சரிங்கிறதுக்கு தலையை இடமும் வலமும் ஆட்டுவோம்ல.அப்படி பண்ணுனா ரொம்ப கிண்டல் பண்ணுவாய்ங்க."நீ சரின்னு சொல்லுறே உன் தலை இல்லைன்னு சொல்லுதேன்னு" ரொம்ப நக்கலடிப்பாய்ங்க.

நம்ம தலைய ஆட்டுறத இவிய்ங்க கேலி பண்ணுற மாதிரி இவனுககிட்ட ஒரு வேடிக்கையான பழக்கம் ஒன்னு இருக்கு. அது வாயைப் பிளக்கிறது. யாராவது ஒரு கேள்வி கேட்டு நமக்கு புரியல்லன்னா நம்ம புருவத்த கொஞ்சம் உசத்துவம்ல, அதே மாதிரி இவனுக வாயைப் பிளப்பானுக கேள்வி புரியலைன்னா. கேள்விக்குத் தகுந்த மாதிரி இவனுக வாயைப் பிளக்குறது மாறுபடும். உள்நாக்கும் உணவுக்குழாயும் தெரியுறமாதிரி வாயைப் பிளந்துட்டானுகனா நீங்க கேட்ட கேள்வி அவனுக்கு சுத்தமா புரியலைன்னு அர்த்தம்.



இங்கிலிசு பேச ஆரம்பிப்பாய்ங்க பாருங்க. எல்லா வாக்கியத்துக்கும் முடிவில ஒரு ஆ சேத்துகுவாய்ங்க. யூ கோயிங்கா, ஐ கமிங்கா, வொர்க் பினிஷ்டா இப்படி எல்லாத்துக்கும் ஒரு ஆ சேத்துக்கனும் நம்ம இவங்க கிட்ட பேசயில தெளிவா பேசுனோம் உன் இங்கிலிஷ் சரியில்லடான்னு சொல்லிருவாய்ங்க இந்த அமெரிக்க காலனி ஆதிக்கத்துல இருந்த பயலுக.செட்யூல (schedule) ஸ்கெசூல்ன்னும் ட்ராயிங்(drawing) க ட்ராவிங்க்குன்னும் பேசுவாய்ங்க.

இந்தியர்களை இவனுகளுக்கு பிடிக்காம போனதுக்கு இன்னும் ஒரு காரணம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். ஆச்சர்யமா இருக்கா? காரணம் என்னன்னா நேதாஜி INA படை ஆரம்பிச்சு ஜப்பானோட கூட்டுச் சேந்து வெள்ளைக்காரன எதுத்து சண்ட போடும்போது ஒரு இந்தியப்படை அந்தக்காலத்துல ஜப்பானோட காலணி ஆதிக்கத்துல இருந்த பிலிப்பைன்ஸ்ல தங்கியிருந்துருக்கு அதுல சிலபேர் சண்டை முடிஞ்ச பின்னாடி அப்படியே செட்டிலாய்டாங்க (குறிப்பா பஞ்சாபி சர்தாரிகள்) . இந்த இந்தியர்கள் அங்கே 5-6 எனப் சொல்லப்படும் கந்துவட்டி (அதாவது 5ரூபா கொடுத்தா அடுத்த வாரம் 6ரூபா கொடுத்துடனுமாம் 100 க்கு 20 வட்டி) வியாபாரம் பண்ணுறாங்களாம். வட்டியை ரொம்ப கறாரா வசூல் பண்ணுவாங்க போலிருக்கு.



இவய்ங்கள வெளிநாட்டுக்கு அனுப்புற வேலையை பிலிப்பினோ கவர்மெண்ட்டே செய்யுறதுனால பெரும்பாலும் ஏதாவது டிரேட் (trade)ல வந்துடுவான் இங்க. பைப் பிட்டர் ரிக்கர்,மேசன்,கார்பெண்டர் அப்படின்னு ஒரே டிரேடாத்தான் இருக்கும் ஆனா அந்த டிரேடுக்குள்ள வேலை தெரியுமான்னா தெரியாது. பதிலுக்கு நம்ம இந்தியாவுல பெரும்பாலும் ஏஜண்ட்டுகங்க கிட்ட பணத்தக்கொட்டி இங்க வர்றவன் நூத்துக்கு அறுபது பேரு ஹெல்பர்ன்னு வருவான்.பட்டி சொல்லுவான் பாத்தியா நாங்க எல்லோரும் டிரேடு நீங்க எல்லாரும் ஹெல்பர்ன்னு நக்கலா. அதுக்கு நான் சொல்லுவேன் 'டேய் உங்களுக்கு அடுத்தவனுக்கு எப்படி ஹெல்ப் பண்ணனும்னு தெரியாது, அதுனால நீ அப்படி வர்றதில்ல நாங்க ஹெல்ப் பண்ணுறதுக்குன்னே பொறந்தவங்கடா அதுனால இப்படி வர்றோம்'ன்னு சமாளிக்கிறது.



சாப்புடுறதுல்ல இவுய்ங்க மன்னனுக. நிலத்துல கார் லாரி பைக்கு தவிர மத்த எல்லாத்தியும்,வானத்துல பறக்குறதுல பிளைட்டு ஹெலிகாப்டர் ராக்கட்டு சேட்டுலைட்ட தவிர மத்த எல்லாத்தியும்,கடலுல்ல கப்பல் பாறையைத்தவிர எல்லாத்தியும் திம்பாய்ங்க. மனுசனக்கூட விடுறதில்ல.நாயும் பன்னியும் இவய்ங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.இப்ப புரியுதா ஏன் பட்டின்னு பேரு வந்துச்சுனு. நாயை ஏன் ரொம்ப பிடிக்கும்னு கேட்டா சொல்லுவாய்ங்க "நாயிதான் அந்த விசயத்துலதான் கில்லாடி"ன்னு பன்னிக்கறி சாப்புடுறதுல்லயும் சில விசயம் இருக்கு. மிருகத்துல்ல பன்னி மட்டும்தான் தன்னோட செக்ஸ் பார்ட்னரை மத்த பன்னிங்களுக்கு தாரை வார்க்கும். அதுவும் இவய்ங்க விசயத்துல கரக்டாத்தான் இருக்கும்.ஒருத்தனுக்கு பல பொண்டாட்டி, ஒருத்திக்கு பல புருசன்ங்கிறதுல்லாம் இவனுகளுக்கு சர்வ சாதாரனம்.


இன வெறி இவனுகளுக்கு ரொம்ப அதிகம். கருப்பா இருக்குறவன MATRIXன்னு கிண்டல் பண்ணுறது கருப்பா இருக்குறவன் ரெண்டு பேரு வாடகை டாக்ஸியிலே உட்கார்ந்திருந்தா அவன் பக்கத்துல உட்கார மாட்டேன்னு அடம் பிடிக்கிறதுன்னு நிறைய அழும்பு பண்ணுவானுக. என்னையும் ரொம்ப சீண்டுவானுக.(நம்ம கொஞ்சம் கருப்பு) அப்பல்லாம் நான் அவய்ங்ககிட்ட சொல்லுவேன். "டேய் என் கருப்பு உன் தலையில இருக்கு உன் வெள்ளை என் காலுல இருக்குடான்னு" எவனும் பூர்விக பிலிப்பினோ கிடையாதுன்னு நினைக்கிறேன். ரொம்ப கர்வமா நான் ஹாப் ஜெர்மன்,ஹாப் அமெரிக்கன்,ஹாப் ஸ்பானிஷ் அப்பிடின்னு பெருமை பேசுவானுக. எனக்கிட்ட கேட்பாய்ங்க சிலநேரம் "நான் அவிய்ங்களுக்கு சொல்லுறது 'I AM 100% ETHNICAL TAMILIANடா"ன்னு.


ஒரே குறைகளா சொல்லுறேன்னு நினைச்சுடாதிங்க
நம்ம ஆளுகங்ககிட்ட இல்லாத நிறைகளும் இவனுககிட்ட இருக்கு.
1.காலம் தவறாமை.(6 மணி வேலைக்கு 5 மணிக்கெல்லாம் வந்துடுவானுக)
2.எல்லோரிடமும் இருக்கும் அடிப்படை ஆங்கில அறிவு,மற்றும் கணினி அறிவு.
3.இன ஒற்றுமை.(குறிப்பா அவனுக ஒரு ஆளு தப்பு பண்ணுனா கடைசிவரை எப்படியாவது அவன காப்பாத்த பார்ப்பானுக. காட்டிக்கொடுக்கவே மாட்டானுக)
4.பெண்களுக்கு திருமணம், கல்வி வேலை இப்படி எல்லாவற்றிலும் இவனுக கொடுத்திருக்கும் அளப்பரிய சுதந்திரம்.
5.வளைந்து கொடுக்கும் தன்மை(அடுத்தமாசம் உனக்கு 100 டாலர் சம்பளம் கம்மின்னு சொன்னாக்கூட யெஸ் பாஸ்ன்னு சொல்லுவானுக கோஷம் போடுறது கொடி பிடிக்கிறதுல்லாம் கிடையாது)
6.வரதட்சனை சுத்தமா கிடையாது.(charting,courting, dating &marriage)இதான் இவனுக திருமணம்.
7.கையெழுத்து எல்லோருடைய கையெழுத்தும் முத்துக்கோர்த்தது மாதிரி அழகா இருக்கும்.

சில பிலிப்பினோ(TAGALOG) வார்த்தைகள்.

நநாய்=அம்மா

டடாய்=அப்பா

அனக் லலாகே=மகன்,அனக் பபாயே=மகள்

கபடிட் லலகே=சகோதரன், கபடிட் பபயே=சகோதரி

அசாவா லலகே=கணவன், அசாவா பபயே=மனைவி

கபயான்=சகநாட்டினன் பரே=நண்பன்

மகவா=வேலை

தபோஸ்நா= முடிந்ததா?

இந்திபா தபோஸ்=முடியவில்லை

மகந்தங் உமாகா=காலை வணக்கம்

மகந்தங் கபி=மாலை வணக்கம்

கொமுஸ்தகா= நலமுடன் உள்ளாயா?

மபுதி=நலம்

அயோஸ்=நல்லது

அனோபலிதா=என்ன விசயம்

அனோஓரஸ்=நேரம் என்ன?

மராமி=ஏராளம்,கொண்டிலங்=கொஞ்சம்

சான்கா புபுந்தா=எங்கே போகிறாய்

சான் கா கலிங்=எங்கிருந்து வருகிறாய்

மகல்கிதா=நான் உன்னைக் காதலிக்கிறேன்

அகோ=நான்

இகாவ்=நீ

போகி=அழகு ,பாங்கிட்=அசிங்கம்

ஜிகே=ஓகே

சப்ஜாப்=சாப்பாடு

சலாமத்= நன்றி

காயின்=சாப்பிடு

இனோம்=குடி

உலன்=மழை

நடுலோக்=தூக்கம்

வலா=இல்லை

வலா அனுமான்=பரவாயில்லை

மகலிங்=புத்திசாலி

டங்னா=முட்டாள்

பலிவ்=பைத்தியம்

***********************

Directory to Text - ஒரு பயனுள்ள மென்பொருள்

எனக்கு பல இடங்களிலிருந்து பல்வேறு வரைபடங்கள் pdf கோப்புகளாக வரும். அவற்றினை ஒரே கோப்பில் சேர்த்து வைத்து இருப்பேன். சில சமயங்களில் ஒரே வரைபடத்துக்கே Rev 1 rev2 .. என்று தொடர்கதையாக பல மாற்றப்பட்ட வரைபடங்கள் இருக்கும். அந்த கோப்பினை யாருக்காவது கொடுக்கும் போது அதில் எவ்வளவு documents உள்ளது என Directoryயும் கேட்பார்கள். அப்போதல்லாம் start/run/cmd சென்று change directory cd comment கொடுத்து dir/b/directo text.xls என எக்செல் கோப்பாக விபரத்தினை மாற்றிக் கொடுப்பேன். கீழுள்ள படத்தினைப் பார்க்கவும்.


இந்த முறைக்குத் தீர்வாக ஒரு பயனுள்ள மென்பொருள் ஒன்று இணையத்தில் சமீபத்தில் கண்டேன். இது ஒரு இலவச மென்பொருள். இதை தரவிறக்கி கணினியில் சேமித்து கொள்ளுங்கள். பின் எந்த கோப்பில் Directory list வேண்டுமோ அந்த கோப்பில் இந்த மென்பொருளை copy and paste செய்து open செய்து பாருங்கள்

இப்படி வந்துவிடும் பின் இதிலிருந்து copy செய்து excel,word,text எதிலும் paste செய்து விடலாம் மிக எளிதான வேலை, cmd யில் dir/b/ என type அடிக்கும் தொல்லை மிச்சம்.


புதன், 9 செப்டம்பர், 2009

Excel சூத்திரங்கள்- பாகம் 2

வணக்கம் நண்பர்களே கடந்த பதிவில் LEFT,RIGHT,MID இந்த சூத்திரங்களைப் பற்றிப் பார்த்தோம். இந்த சூத்திரங்கள் பொதுவாக ஒரு cellலில் இருக்கும் charactors களை பிரிக்க உதவுகிறது. அதுபோல பல்வேறு cellகளில் உள்ள charactorsகளை இணைக்க உதவும் சில சூத்திரங்களைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

முதலில் ஒரு எளிதான வழி &
=cell1&cell2&cell3& ........என்று &இதை பயன்படுத்தி நம் விருப்பம் போல இணைத்துக் கொண்டே போகலாம்.கீழுள்ள படத்தை பாருங்கள்.

மற்றொரு எளிய வழி CONCATENATE

=CONCATENATE(cell1,cell2,cell3,........) இப்படி ஒவ்வொரு cell க்கு இடையே கமா , வைப்போட்டு இணைத்துக் கொண்டு போகலாம். கீழுள்ள படத்தினைப் பாருங்கள்.


இப்படி Cell களை இணைத்துக்கொண்டு போகும் போது அதோடு ஏதாவது ஒரு பொதுவான text ஐ இணைக்க வேண்டுமெனில் =Concatenate(cell1,cell2,"text") என இணைக்கலாம். இதில் முக்கியமான விபரம் என்னவென்றால் நீங்கள் இணைக்க வேண்டிய text ஐ மேற்குறியீட்டு கமாவுக்குள் "......." மட்டும்தான் இட வேண்டும் தவறினால் #NAME? என error வரும். கீழுள்ள படத்தினைப் பாருங்கள்.

CONCATENATEஐ பயன்படுத்தி cellகளை மட்டும்தான் இணைக்கலாம் என்றில்லை.வேறு பல சூத்திரங்களையும் இணைக்கலாம். உதாரனத்திற்கு 563535 எனும் ஒரு எண் ஒரு cellஇல் உள்ளதாக கருதுவோம்.இதற்கு முன்னால் 0000 என நான்கு பூஜ்யங்களை இணைக்க வேண்டுமானால் =concatenate("0000",cell1) என இணைக்கலாம். மாற்றுவழியாக =REPT(0,4)எனும் சூத்திரம் மூலம் 0000 என விடையைப் பெற்று அதனுடன் =concatenate(REPT(0,4),cell1) இந்த சூத்திரம் மூலமும் இணைக்கலாம். கீழுள்ள படத்தினைப் பாருங்கள்.


அடுத்து REPLACE பயன்படுத்தி இணைத்தல். அதற்கு முன்னால் REPLACE என்றால் என்ன எனப் பார்ப்போம். ஒரு cellல் உள்ள சில குறிப்பிட்ட charactors களை மாற்றி அதற்குப் பதிலாக வேறு charactors களை இணைக்க வேண்டும் என நினைக்கிறீர்கள். அதற்கு எளிய வழி REPLACE.
உதாரணத்திற்கு இந்த வாக்கியத்தை கவனியுங்கள்.
Cat Jumbed on the floor இதை மாற்றி Cat Jumbing on the floor என எழுத வேண்டும் என கருதினால் ed ஐ மாற்றி அதற்கு பதிலாக ing சேர்த்தால் மாறும்.சூத்திரத்தில் =Replace(old text,start no,no of charactors,new text ) என வரும்.இதில் old text என்பது உங்கள் பழைய text இருக்கும் cell ,start no என்பது மாற்றவேண்டிய edயில் முதல் வார்த்தையான e ஆரம்பிக்கும் இடமான 9(காலியிடம் கூட எண்ணப்பட வேண்டும் space also included in counting),அடுத்து no of charactor என்பது 2 (ed),அடுத்து new text ல் சேர்க்க வேண்டிய வாக்கியமான 'ing" ஐ இட வேண்டும். கவனம் சேர்க்க வேண்டிய வாக்கியம் முன் சொன்னது போல் கண்டிப்பாக கமாவுக்குள் இருக்க வேண்டும்.கீழுள்ள படத்தினைப் பாருங்கள்.
அடுத்து ஒரு எளிய விளக்கம் concatenate மற்றும் Replace மூலமாக textஐ மாற்றி இணைத்தல்.29-09-2009 எனும் ஒரு textஐ 29DAYS09MONTHS2009YEARS என்று மாற்ற வேண்டும் எனில் கீழ்கண்ட படத்தில் உள்ளவாறு சூத்திரம் இட்டு மாற்றலாம்.
REPLACEஐ பயன்படுத்தி textல் உள்ள charactors களை மாற்றாமலேயே புதிதாக charactorsகளை இணைக்கலாம். இதற்கு செய்ய வேண்டியதெல்லாம் =Replace(old text,start no,no of charactors,new text ) எனும் சூத்திரத்தில் மேலே சொன்னதுபோல சூத்திரம் இட்டு no of charactor என்பதில் மட்டும் பூஜ்யம் கொடுத்து விடுங்கள். உதாரணத்திற்கு 8421ABCWR எனும் textஐ 8421AB-CWR என மாற்ற வேண்டும் எனில் =REPLACE(old text(8421ABCWR),starting no(7வது இடம்),no of charactor(0),newtext('-"))என சூத்திரம் இடுங்கள்.(அடைப்புக்குறிக்குள் இருப்பது விளக்கம்).வலது இடது ஒரங்களில் charactors இணைக்க concatenate பயனுள்ளதாக இருப்பது போல் textல் மையத்தில் charactors களை செருக இந்த REPLACE மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


இறுதியாக REPLACE பயன்படுத்தி ஒரு மெகா சூத்திரம்.

மேலுள்ள படத்தில் column F ல் மூண்று text உள்ளது அவை P8421SBH000101,P8421SBCWR000101 & P8421SBDW000101 இவற்றை முறையே P-8421SB-H-0001-01,P-8421SB-CWR-0001-01 & P-8421SB-DW-0001-01 என மாற்ற வேண்டும் எனில் முதலில்
=REPLACE(F4,2,0,"-") எனும் சூத்திரத்தின் மூலம் P-8421SBCWR000101 எனும் விடையைப் பெறலாம். தொடர்ந்து =REPLACE(REPLACE(F4,2,0,"-"),9,0,"-') சூத்திரத்தின் மூலம் P-8421SB-CWR000101 எனும் விடையைப்பெறலாம். இதற்கடுத்துதான் சிக்கல் உள்ளது முதல் textல் H என்று ஒரு charactor மட்டும் உள்ளது. அடுத்ததில் CWR என மூண்று charactor உள்ளது.மூண்றாவதில் DW என இரண்டு மட்டும் உள்ளது எனவே இந்த சிக்கலைப்போக்க அடுத்து நாம் இடவேண்டிய charactor - எல்லாவற்றிலும் 0வுக்கு முன்னதாக இடவேண்டும் எனவே இதற்கு find சூத்திரத்தினைப் பயன்படுத்தி 0 இருக்கும் இடத்தினை கண்டறிந்து பின் charactor - ஐ புகுத்தலாம்.
எனவே சூத்திரம் இப்போது இப்படி =REPLACE(REPLACE(REPLACE(F4,2,0,"-"),9,0,"-'),FIND( "0", REPLACE(REPLACE(F4,2,0,"-"),9,0,"-'),(10)),0,"-")
இதில் முதல் REPLACE என்பது சூத்திரம் பச்சை நிறத்தில் உள்ளது old text, அடுத்து பிங்க் நிறத்தில் உள்ளது start no, நீல நிறத்தில் உள்ள பூஜ்யம்no of charactors, சிவப்பு நிறத்தில் உள்ளது new text இதன் மூலம் P-8421SB-CWR-000101 என விடையைப் பெறலாம். பின் இறுதியாக படத்த்தில் உள்ளது போல் மெகா சூத்திரம் இட்டு மொத்தமாக மாற்றிவிடலாம்.படத்தினை கிளிக் செய்து பெரிதாக்கிப் பார்க்கவும்.
இன்னும் நிறைய சூத்திரங்களோடு மறுபடியும் வருகிறேன் எனக் கூறி விடைபெறுகிறேன் வணக்கம். மேலும் உங்களுக்கு சூத்திரம் தொடர்பாக ஏதேனும் விளக்கங்கள் தேவைப்பட்டால் எனது vallankai@gmail.com மின்மடல் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.








செவ்வாய், 8 செப்டம்பர், 2009

தொடர்பதிவு (நாங்களும் ரவுடிதாண்டி)


தீடிர்னு நண்பர் 'தென்பொதிகை சாரல் காற்று எப்பவுமே கவிதை ஊற்று" துபாய் ராஜா அவர்கள் தொடர்பதிவு ஒன்று எழுத அழைத்தார்.வலையுலகிற்கு வந்தே ஒரு மாதம்தான் ஆகிறது இதுல பல்சுவைப் பதிவர்ன்னு பட்டம் வேற கொடுத்திருக்கார், அவரோட பதிவுல.நண்பருக்கு நன்றிகள் பல கூறி என்னால என்ன முடியுமோ அத எழுதுகிறேன்.

இதன் விதிகள்:

1.அழைத்தவரை அறிமுகம் செய்தல்.(ஏன் அழைச்சிங்க யாருங்க நீங்க)
2.விதிகளைப் பதிவிலிட வேண்டும்.(தண்டோரா போட்டது எல்லாருக்கும் கேட்டாச்சா)
3.எல்லா ஆங்கில எழுத்தில் உள்ள கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டும்.(அரசன் கொடுக்கிற ஆயிரம் பொண் பரிசும் எனக்கே கிடைக்கனும் சொக்கா...)
4.பதிவின் முடிவில் நான்கு பேரை மாட்டி விட வேண்டும் (அதுதான் நல்லா செய்வமே)
5.அந்த நால்வருக்கும் ஓலை அனுப்ப வேண்டும்.(யாம் பெற்ற இ(து)ன்பம் பெருக வையகம்)
6.அழைக்கப்பட்டவர்களையே அழைக்காமல் புதியவர்களை அழைக்க வேண்டும்.(அரியர் எழுத வழியில்லாம என்ன காலேஜி இது)
(நண்பர்களே அடைப்புக்குறிக்குள் இருப்பது விதியல்ல சொக்கனை நினைத்து நான் புலம்பியவை அவை)
*********

ஆரம்பிப்பமா?
(அய்யோ அய்யோ இன்னுமா நம்மள இந்த உலகம் நம்புது அவ்வ்வ்வ்வ்)


1. A – Avatar (Blogger) Name / Original Name :செல்வனூரான்/தங்கராசு நாகேந்திரன்

2. B – Best friend? :சின்ன வயசுலருந்தே எங்கண்ணன் சுந்தரமூர்த்திதான் இன்னும் ஊருல பலபேருக்கு நாங்க அண்ணன் தம்பின்னு தெரியாது.

3. C – Cake or Pie? :எதக்கொடுத்தாலும் ஓக்கேதான் இங்க சவுதில பாலைவனத்துல திங்குறதுக்கு எதா இருந்தாத்தான் என்ன?

4. D – Drink of choice? : பழயதுறவி பழயபீப்பாய் பிரஞ்சுமாவீரன் இப்படி எது கிடச்சாலும் ok (காஞ்சு கிடக்கிறமய்யா பாலைவனத்துல)

5. E – Essential item you use every day? : கைவிரல்கள்தான் (எவ்வளவு சம்மரி அடிச்சாலும் வலிக்காது)

6. F – Favorite color? : நம்ம மனசு மாதிரி எப்பவும் வெள்ளைதான்.

7. G – Gummy Bears Or Worms: என்னது ....கரடியும் புழுவுமா?..

8. H – Hometown? : செத்தும் கொடை கொடுத்த சீதக்காதி ஊரு.

9. I – Indulgence?: நிறைய உண்டு இப்ப அடிக்கடி பண்ணுறது "நான் ஒரு ப்லொக்கர்டா"ன்னு நண்பர்கள்கிட்ட அலப்பறை கொடுக்கிறது(indulge in tall talk).

10. J – January or February?: இந்த மாசத்துல வருசப்பிறப்பு ஒருநாளு,பொங்கலுக்கு மூனு நாளு,குடியரசுதினம் ஒருநாளு, ஞாயிற்று கிழமை நாலு நாளு ஆக மொத்தம் ஒம்பது நாளு லீவு ஆங்..ம்....(பசங்க படத்துல வர்றமாதிரி படிக்கவும்)

11. K – Kids & their names? - ஒன்னே போதும்னு நினைக்க வைச்சுகிட்டு இருக்கிற பையன், பேரு சிவகார்த்திக் (எங்கப்பன் முருகன் பேராக்கும்).

12. L – Life is incomplete without?- O2 அதாங்க ஆக்சிஜன் ஹி ஹி (நமக்கு O2 வேலைதாங்க)

13. M – Marriage date? : நல்லாத்தேன போயிகிட்டு இருந்துச்சு ஹி ஹி (12-04-2006)

14. N – Number of Siblings?:பொண்டாட்டியத்தவிர எல்லோரும் அக்கா தங்கச்சிங்கதான்.பாக்குற பழகுற எல்லோரும் அண்ணன் தம்பிதான்.

15. O – Oranges or Apples?: முதல்லயே சொல்லிட்டேன் காஞ்சு கிடக்குறோம் எதுனாலும் ஒகேதான்.

16. P – Phobias/Fears? -பைரவர் வாகனத்த கண்டா ரொம்ப பயம் ஒரு தெருவில அவரப்பாத்தா மறுபடி அந்த தெருப்பக்கமே போக மாட்டேன்.மத்தபடி சிங்கம் புலிக்கெல்லாம் நாங்க பயப்படுறது இல்ல.

17. Q – Quote for today?: "நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்"

18. R – Reason to smile?: சிரிச்சா உங்க கன்னத்துல விழுற குழி அழகா இருக்குன்னு என் பொண்டாட்டி அடிக்கடி சொல்லுவா.

19. S – Season? மழைக்காலம் (அந்த மண்வாசனை ரொம்ப பிடிக்கும்)

20. T – Tag 4 People?- சாருவைக் கூப்பிட ஆசைதான் ஆனா அதுக்கு முன்னாடி ரஜினியக் கூப்பிடனும்னு லக்கி ஏற்கனவே சூடு வாங்கியிருக்கிறதுனால நான் விரும்புற உச்ச நட்சத்திரங்கள் இவங்கள கூப்பிடுறேன்.
1.நண்பர் ஸ்டார்ஜன்

2.பிரபல பிரியாணி புகழ் கிளியனூர் இஸ்மத் பாய்
3.கவிஞர்.நெல்லைக்கவி சரவணக்குமார்
4.மரியாதைக்குரியதலைமை ஆசிரியர் 'ஜெரி ஈசானந்தா"

21. U – Unknown fact about me?: என்னத்த சொல்ல....ஒன்னுமே புரியல உலகத்துல..

22. V – Vegetable you don't like? -கருவேப்பிலையை கூட நான் விடுறதுல்ல. சாப்பிடும்போது கழிவில்லாம சாப்பிடனும்னு எங்கம்மா அடிக்கடி சொல்லுவாங்க.

23. W – Worst habit?: பொண்டாட்டிக்கு பயப்படுறது. மாத்த முடியல பழகிப்போச்சு.ஹி ஹி ...

24. X – X-rays you've had?: ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல, நான் மண்டை உடைபட்டு விழுந்ததை மறந்து செல்ல...(23 க்கும் 24க்கும் சம்பந்தமில்லைப்பா)

25. Y – Your favorite food? பழய கஞ்சிதான் இதப்பத்தி ஒரு பதிவு போடனும்னு நினைச்சுக்கிட்டு இருக்கேன்.(மதுரை வீரன் படத்துல கஞ்சி குடிச்சுகிட்டு கலைவானர் சொல்லுவாரு 'செல்லி இந்த பழயகஞ்சிய சாப்புட்டுபிட்டு கடசியில இருக்கிற தண்ணிய குடிக்கும் போது அடா அடா இததான் சொர்க்கம்னு சொன்னாய்ங்களோ")

26. Z – Zodiac sign? -மூல நட்சத்திரம்,தனுசு ராசி (மூல நட்சத்திரம் என்கிறதால பொண்ணு கிடைக்காம (எனக்கு பொன்னு கொடுத்தா மாமனார் மண்டையப் போட்டுறுவானாம்)அலைஞ்ச பழய கதை ஞாபகம் வந்துடுச்சு....)
****************************
இனி தமிழில்

1. அன்புக்குரியவர்கள் : அம்மாவும் அப்பாவும்
2. ஆசைக்குரியவர் : அடிச்சாலும் புடிச்சாலும் எப்பவும் நம்ம பொண்டாட்டிதான்.
3. இலவசமாய் கிடைப்பது : அறிவுரைகள்

4. ஈதலில் சிறந்தது : இடதுகை அறியாமல் வலது கை கொடுப்பது.
5. உலகத்தில் பயப்படுவது : உண்மை பேசாதவரைக் கண்டு
6. ஊமை கண்ட கனவு : சேதுசமுத்திரம் திட்டம்
7. எப்போதும் உடனிருப்பது : தன்னம்பிக்கை..
8. ஏன் இந்த பதிவு : நட்புக்காக
9. ஐஸ்வர்யத்தில் சிறந்தது : படுத்தா தூக்கம் வரனும்
10.ஒரு ரகசியம் : காதக் கொடுங்க சொல்லுறேன்
11.ஓசையில் பிடித்தது : துதிப்போர்க்கு வல்வினைபோம்...(சூலமங்களம் சகோதரிகள்)
12.ஔவை மொழி ஒன்று : ஊக்கமது கைவிடேல்

13.(அ)ஃறிணையில் பிடித்தது: யானை

அம்புட்டுதேன்... இனி அடுத்தவுங்க பாடு
ஸ் அப்பா இப்பவே கண்ணக்கட்டுதே......



திங்கள், 7 செப்டம்பர், 2009

நியுமராலஜி நித்யாணந்தாவின் தமிழக வருகை

நியுமராலஜி நித்யாணந்தா. இவர் பெயரியல் புலி. அமெரிக்கா,அய்ரோபா,சிங்கப்பூர்,மலேயா,இலங்கை மற்றும் பல நாடுகளில் கோபால் பல்பொடிக்கு அடுத்து புகழ் பெற்றவர்.(வாசகர்கள் நலன் கருதி இவரது புகைப்படம் பிரசுரிக்கப்படவில்லை. பொறுத்தருள்க) பல்வேறு நாடுகளில் சுற்றுப் பயணம் செய்து பல்வேறு அரசியல் தலைவர்களின் பெயர்களை மாற்றி அவர்களது வெற்றிக்கு வித்திட்டவர். இவர் சமீபத்தில் கடந்த ஏப்ரல் 1ம் தேதி தமிழகம் வருகை தந்தபோது அவரை பல்வேறு அரசியல் தலைவர்களும் சந்தித்து தங்களின் சங்கடங்கள் தீர தங்கள் பெயர்களை மாற்றியமைக்க வேண்டினர். அவர்களது குறைகள் தீர சுவாமி ஸ்ரீலஸ்ரீ நித்யாணந்தாவும் பெயர்களை மாற்றி ஆலோசனை வழங்கினார். இதை ஒரு ரகசிய கருவி மூலம் ஒட்டுக்கேட்ட நாம் அந்த செய்திகளை பரபரப்புடன் நக்கீரனை விட முந்தித் தருகிறோம்.

முதலில் வந்தவர் முதல்வர் கருணாநிதி. நேரம் அதிகாலை 4.00 மணி.



'வாங்க ஏன் உடம்புக்கு முடியலையா? மஞ்சத்துண்டால போத்திக்கிட்டு வர்றீங்களே"

'இலங்கைப் பிரச்சினை முடிஞ்சதாலே உடம்பு நல்லாத்தேன் இருக்கு. எனக்கு ஊருல பகுத்தறிவு பகலவன்னு பேரு இருக்கு அதுனால வேற யாரும் பாத்துட்டா பிரச்சினைன்னுதான் காலையில மஞ்சத்துண்டைப் போத்திகிட்டு வந்துட்டேன்"

"பகுத்தறிவு பகலவன்னு சொல்லுறிங்க உங்களுக்கு இந்த ஆருடம் ஜோசியம் இதில நம்பிக்கை இருக்கா"

'எனக்கு இல்லிங்க ஆனா தயாளு சொன்னா போயி பாக்கச் சொல்லி, எனக்கு பொண்டாட்டி பிள்ளைங்க மேல பாசம் அதிகம். அதுனால அவங்க மனசு கோணக்கூடாதுன்னு வந்தேன்"

"சரி பரவாயில்ல உங்க பேரு அப்புறம் உங்க பிரச்சினை என்னனு சொல்லுங்க"

'பேரு கருணாநிதி, பிரச்சினை எதுவும் இல்ல ஆனா ஒரே ஒரு ஆசை மட்டும் இருக்கு அது என்னன்னா என் மகன் பேரன் கொள்ளுப்பேரன் எள்ளுப்பேரன் இப்படி என் வாரிசுங்களே தமிழ்நாட்ட ஆளனும் அதுக்கு எப்படி என் பேர மாத்துனா நல்லா இருக்கும்'

"இதுக்குப் பேரு ஆசை இல்லிங்க பேராசை. சரி பரவாயில்ல அய்யாவோட பேரு கருணாநிதி பேருலயே நிதி இருக்கிறதுனால நிதிக்கு பஞ்சம் இருக்காதுன்னு நினைக்கிறேன்'

"ஆமாங்க அப்புடி இப்புடி ஆசியாவுலயே பெரிய பணக்காரன்ல நானும் ஒருத்தன்ங்க"

"சரி உங்க பேருல கடைசி ரெண்டு எழுத்து ஒகே ஆனா முதல் மூணு எழுத்து கருணான்னு வருது கருணான்னா காட்டிக் கொடுக்கிறது போட்டுக் கொடுக்கிறதுன்னு மக்களுக்கு நினைக்கத் தோனும் அதுனால உங்க பேர கர்ணான்னு மாத்தி அந்த கர்ணா மாதிரியே மக்களுக்கு இலவசமா நிதிய வாரி கொடுத்திக்கிட்டு இருந்திங்கன்னா உங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை அதுனால உங்க பேர கர்ணாநிதின்னு மாத்தி வச்சுங்கங்க"
-------------------------------------------------------------------------------------------------

அடுத்து வந்தவர் செல்வி ஜெயலலிதா நேரம் காலை 9 மணி 9 நிமிடம்.


"வாங்க என்ன விசயம் உங்க பேரு என்ன?

'ரொம்ப கேள்வி கேட்காதிங்க கேள்வின்னால எனக்கு அலர்ஜி அதுனாலதான் நான் சட்டசபைக்கோ கோர்ட்டுக்கோ சரியா போறதில்ல. சரி வந்த விசயத்த சொல்லுறேன் என் பேரு ஜெயலலிதா நான் எப்படியாவது மறுபடி ஆட்சிய புடிக்கனும் அதுக்கு என் பேர எப்படி மாத்துனா நல்லா இருக்கும்'

"ரொம்ப அவசரப்படுறிங்க சரி பரவாயில்ல. உங்க பேருல முதல் ரெண்டெழுத்துல் ஜெயம் இருக்குறதுனால பிரச்சினை இல்லை. ஆனா கடசி எழுத்து தா ன்னு முடியுது அதுனாலதான் நீங்க ஆட்சியத்தா அதிகாரத்த தா டான்சியத்தா டாலர் நோட்டத்தா ன்னு கேட்டுக்கிட்டே இருக்கிங்க. மேலும் இந்த தமிழ் நாட்டு மக்கள் ரொம்ப சுயமரியாதை உள்ளவுங்க அதுனால அவுங்களுக்கு தான்னு ஒருமையில சொல்லுறது புடிக்காது'

"இல்லியே ஏற்கனவே ரெண்டு தடவ நான் கேட்டப்ப கொடுத்தாங்களே"

"அப்ப நீங்க செல்லுலாயிட் பொம்ம மாதிரி இருந்திருப்பிங்க அதுனால பரிதாபப்பட்டு கொடுத்திருப்பாங்க இப்ப நீங்க அப்படி இல்லியே"

'சரி எப்படி மாத்தலாம் சொல்லுங்க'

'உங்க பேர ஜெயலலிதாங்க அப்படின்னு மாத்தி வச்சுக்குங்க அப்பத்தான் ஒரு மரியாதையா இருக்கும் நீங்களும் தாங்க போங்க ன்னு மரியாதையா கேட்குற மாதிரி இருக்கும் வந்தாரை வாழ வைக்கும் தமிழங்க உங்கள மறுபடியும் வாழ வைப்பாங்க"
---------------------------------------------------------------------------------------------

அடுத்து வந்தது புரட்சி புயல் வைகோ


"16ம் நூற்றாண்டில் ஏதென்ஸிலே......"

"பொறுங்க என்ன எடுத்த எடுப்புல ஏதென்சுக்கு போயிட்டிங்க அங்கெல்லாம் சுத்திட்டுத்தான் நான் இங்க வந்துருக்கேன் பேரு என்ன பிரச்சினை என்னன்னு மட்டும் சொல்லுங்க'

'பேரு வைகோ ங்க வாழ்க்கையில மறுமலர்ச்சியே இல்லிங்க"

"வைகோ ரொம்ப சின்ன பேரா இருக்கே இதுதான் உங்க சொந்த பேரா"

"கோபால்சாமி ங்கிறது முதல் பேருங்க அத சுருக்கி வைகோ ன்னு வச்சுகிட்டேன்"

"ம் ம் கோபால்சாமி இது பழய பேரு தமிழ் இலக்கணத்துல நெடிலுக்கு ரெண்டு மாத்திரை குறிலுக்கு ஒரு மாத்திரை ஒற்றுக்கு 1/2 மாத்திரை இதன் படி பாத்தா உங்க பழய பேருக்கு 7 1/2 மாத்திரை வருது அந்த ஏழரைய மாத்தி வைகோ ன்னு மூணு மாத்திரயா வச்சுருகிங்க உங்களுக்கே தெரியும் பரிட்சையில பாஸ் பன்னனும்னா குறஞ்சது நூத்துக்கு 35 மார்க்காவது வேணும் அப்ப பத்துக்கு நாலு மார்க்காவது வேணும் அதுனால உங்க பேர வைகோசான்னு மாத்தி வச்சுங்கங்க மாத்திரயும் அஞ்சு வரும் உங்களுக்கும் அஞ்சு சீட்டு கிடைக்கும்.பிகாசா மாதிரி நீங்களும் வைகோசான்னு பிரபலாமாயிடலாம்.

-------------------------------------------------------------------------------------------------
அடுத்து தமிழ் குடி தாங்கி ராமதாஸ்

"வாங்க உங்க பேரு என்ன பிரச்சினை என்ன'

'பேரு ராமதாஸ் அய்யா மரம் வெட்டி கட்சி வளர்த்தேன் காடு வெட்டி ன்னு ஒரு பய பேச்சக் கேட்டு எனக்கு நானே ஆப்பு அடிச்சுகிட்டேன் இதுக்கு ஒரு பரிகாரம் சொல்லுங்க"

"ராமதாஸ் உங்க பேருல முதல் ரெண்டு எழுத்து ராமான்னு வருது அதுனால நீங்களும் ஆடுறா ராமா ஆடுறா ராமான்னு குரங்கு குச்சிக்கு அந்த பக்கமும் இந்த பக்கமும் தாண்டுற மாதிரி தாண்டிகிட்டு இருந்திருப்பீங்க மக்களும் உங்க தாவலை முன்னாடி ரசிச்சிருப்பாங்க ஆனா உங்க பேருல மூணாவது எழுத்து தா அதுனால தா தா சொல்லிகிட்டு இருக்கிறவுங்க யாரோடயாவது நீங்க சேந்து உங்க பேருல கடைசி எழுத்து ஸ் மாதிரி உங்க ஆட்டமும் புஸ்ஸுன்னு முடிஞ்சு போயிருக்கும் சரியா நான் சொல்லுறது"

"அய்யா சரியா சொன்னிங்க இதுக்கு நான் என்ன செய்யனும் என்ன செஞ்சா அன்புவை மறுபடி மத்திய அமைச்சராக்கலாம் "

"உங்க முதல் ரெண்டெழுத்து ராமா வை மாத்திப் போடுங்க மாறான்னு வரும் அடிக்கடி கூட்டனி மாறிக்கிட்டு இருக்காம யாருக்காவது மாரா(றா)தாசன் ஆகுங்க எல்லாம் சரியாயிடும்"

-------------------------------------------------------------------------------------------------
அடுத்து திருமாவளவன்

"அடங்க மறு ஆர்த்தெழு'

'என்ன தம்பி வந்ததும் வளவளன்னு பேசுறிங்களே உங்க பேரு என்ன"

'திருமாவளவன் அய்யா'

"அதான் வளவளன்னு பேசுறிங்க உங்க பேர எப்படி மாத்துறது திருன்னா செல்வம் மரியாதை நல்ல பேருதான் மா ன்னாலும் பெரியன்னு அர்த்தம் வருது ஆனா இந்த வள ன்னு இருக்குறதுனால வள வளன்னு பேசிகிட்டு இருக்கிங்க வாள்ன்னு மாத்தினாலும் வாள்வாள்னு கத்திகிட்டு இருப்பிங்க அதுனால பேச்சைக்குறைச்சுகிட்டு திருமாவாழ்வன் அப்படின்னு மாத்தி வச்சுங்கங்க வாழ்வு நலமா இருக்கும்"

---------------------------------------------------------------------------------------------------------------------------------------





சனி, 5 செப்டம்பர், 2009

சும்மா அதிருதுல்ல.....


தமிழக உச்ச நட்சத்திரம் திரு.ரஜினிகாந்த் பேருந்து நடத்துனராக இருந்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். அவர் B.E. civil engineering படித்து விட்டு கட்டிட காண்ட்ராக்டராக பணியாற்றினால் என்ன பேசியிருப்பார் என்பதே இந்த கற்பனை.

1."நான் பிளான்ல வரையுறதையும் கட்டுவேன்

வரையாததையும் கட்டுவேன்"

2."நான் எப்பக் கட்டுவேன் எப்படிக் கட்டுவேன்னு எனக்குத் தெரியாது

ஆனா கட்ட வேண்டிய நேரத்துல கரக்டா கட்டுவேன்"

3."கண்ணா நான் ஒரு அடி பவுண்டேசன் போட்டா

நூறு அடி பவுண்டேசன் போட்ட மாதிரி"

4."அதிகமா மணல் போட்ட காங்கிரீட்டும்

கம்மியா சிமிண்ட் போட்ட கட்டிடமும்

ரொம்ப நாள் இருந்த்ததா சரித்திரமே இல்லை".

5.கண்ணா ஆண்டவன் கெட்டவனுக்கு நூறு கிமீ

தார்ரோடு காண்ட்ராக்ட் கொடுப்பான் ஆனா

கடைசியில் மழையை பெய்யவெச்சு அவன கைவிட்டுடுவான்

நல்லவனுக்கு ஒரு கிமீ பாலம் காண்ட்ராக்ட் கொடுப்பான்

கடைசியில கைதூக்கி விட்டுவான்"

6."என் பிளான் தனி பிளான்

பாக்காதே தாங்க மாட்டே"

7.சித்தாளு கூலி நாள் கணக்கு

மேஸ்திரி கூலி வாரக் கணக்கு

இஞ்சினியர் கூலி மாசக் கணக்கு

வீட்டுக்காரன் போடுறது எப்பவும் தப்புக் கணக்கு"

8."சும்மா அதிருதுல்ல" (நான் கட்டின கட்டிடம்)


வியாழன், 3 செப்டம்பர், 2009

மில்லியன் டாலர் கேள்வி இரண்டு

ரொம்ப நாளா என் மண்டைய குடைஞ்சுகிட்டு இருக்கிற இரண்டு மில்லியன் டாலர் கேள்வி இது. இதுக்கு வலையுலகில் இருந்து பதில் எதிர்பார்த்து இந்த பதிவ போடுறேன்.

முதல் கேள்வியைப் படிக்கிறதுக்கு முன்னாடி கீழே உள்ள படத்தப் பாருங்க.



ஒரு செம்மறி ஆட்டு மந்தை போயிகிட்டு இருக்கு.அதுல முன்னாடி ஒரு கருப்பு ஆடு மத்த செம்மறி ஆடுங்களை வழிநடத்திப் போகுது பாருங்க.






இதுதான் அந்த கருப்பு ஆடு. ஆனா வழக்குல இந்த ஆடை வெள்ளாடுன்னு சொல்லுவாங்க.இது ஒரு இனம். ஆனா இது வேற இனமான செம்மறி ஆடுங்கள வழி நடத்திப் போகுது.இப்ப இதுதான் மண்டைய குடையுற முதல் கேள்வி.

1.செம்மறி ஆடுக்கு சொந்த புத்தி இல்லையா?

---------------------------------------------------------------------------------------------------------------------------------------

அடுத்த கேள்விக்கு போகிறதுக்கு முன்னாடி கீழே உள்ள படத்தப் பாருங்க.





இவுங்க ஜெயலலிதா. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தானைத் தலைவி. திருமதி முகம் படைத்த திருவளர்செல்வி.சட்டசபையிலேயே 'நான் பாப்பாத்திதான்"ன்னு தான் சார்ந்த இனத்த உலகமறிய சொன்ன தங்கத் தலைவி.

பார்ப்பனர்னா மேற்கு ஜெர்மனியிலருந்து கைபர் போலன் கணவாய் வழியா இந்தியாவுக்கு வந்த ஆரிய இனம்னு சின்ன வயசுல புஸ்தகத்துல படிச்சுருக்கேன்.அதே புத்தகத்துல

தமிழ்நாடுங்கிறது திராவிட நாடுன்னும் இங்க உள்ள மக்கள் திராவிட மக்கள்னும் படிச்சுருக்கேன்.அப்ப அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துல இருக்கிறவுங்களும் திராவிடர்களாத்தான் இருப்பாங்க.

இப்ப இதுதான் மண்டையக் குடையுற ரெண்டாவது கேள்வி.

2.அண்ணாத் திராவிட முன்னேற்றக் கழகம் இது கட்சியோட பேரு.இந்த கட்சியில இருக்கிற திராவிட இன மக்களை ஆரிய பெண்மணியால் முன்னேற்ற முடியுமா?

-------------------------------------------------------------------------------------------------------------------------------

யாராச்சும் பதில் சொல்லுங்களேன், பிளீஸ் ரொம்ப நாளா மண்டைய குடையுது.


உங்க நேர்மை எனக்கு புடிச்சுருக்கு மாமா

என் பேரு கருணாகரன். படிச்சது B.A ஹிஸ்டரி இல்லை. B.E சிவில். நான் முன்னாடி ஊருல கவர்மெண்ட் இஞ்சினியரா வேலைப் பார்த்தேன். அதை விட்டுப்புட்டு இப்ப சவுதில வேலைப் பார்க்குறேன்.என்னடா 'காக்காசுனாலும் கவர்மெண்ட் வேலை பாக்கனும்"ன்னு நினைக்கிற ஊருல இவன் இஞ்சினியர் வேலையை விட்டுப்புட்டு ஏன் சவுதி வந்தான்னு நினைக்கிறிங்களா? கேளுங்க என் ஸ்டோரிய.....

எனக்கு ஒரு அத்தை மகள். பேரு அம்சவல்லி. என் மேல அவளும் அவ மேல நானும் ரொம்ப பாசம் வச்சிருந்தோம். காலையில் எங்க வீட்டு மொட்டமாடியில நான் தூங்கும் போது வந்து பாயில பக்கத்துல படுத்துக்கிட்டு பல்லு விளக்காம பக்கோடா சாப்பிடச் சொல்லி தொந்தரவு பண்ணுற அளவுக்கு புள்ள எம் மேல ரொம்ப பாசமா இருப்பா.

என்னதான் அத்தை மகளாயிருந்தாலும் முறைப்படி பொண்ணு கேட்கனுமேன்னு எங்க வீட்டுல போயி கேட்கயில எங்க மாமா என் கிட்ட சொன்னாரு "மாப்புளே நான் 1970ல்லே S S L C யிலே ஜில்லா பர்ஸ்ட்டா வந்தேன். படிச்சு முடிச்சதும் எனக்கு உடனே கவர்மெண்டு வேலை கிடச்சுருச்சு.எங்கூட படிச்ச மாப்பிள பெஞ்சுகாரனுல்லாம் இன்னைக்கு துபாய் சவுதின்னு போயி வீடு வாசல் கட்டி நல்லாருக்கும் போது நான் மட்டும் வாடகை வீட்டுலயே காலத்த தள்ளுறேன். அதுனால என் பொண்ண ஒரு துபாயி சவுதில வேலைபார்க்கிற கோடிஸ்வரனுக்குத்தான் கட்டித் தருவேனே தவிர உன்னை மாதிரி ஒன்னாம் தேதி சம்பளக்காரனுக்கு கட்டிக் கொடுக்க மாட்டேன்.அதுனால துபாய் கிபாயி போயி பணத்த சம்பாதிச்சு ஒரு கோடி ரூபாயை இந்த கையில கொடுத்துட்டு அந்த கையில பொண்ணக் கூட்டிட்டு போங்கன்னு' என் பீச்சாங்கையில அடிச்சு சொன்னாருங்க.

பீச்சாங்கையில அடிச்ச அடி வலிச்சாலும் வலிக்காத மாதிரி காட்டிக்கிட்டு "மாமா உங்க நேர்மை எனக்கு புடிச்சுருக்குன்னு" சொல்லிபுட்டு பாத்துகிட்டு இருந்த கவர்மெண்ட் வேலைய விட்டு புட்டு சவுதி வந்துட்டேன்.

சவுதி வந்ததுக்கு ஒரு காரணம் இருக்கு. சவுதிலதான் பொண்ணுங்கள பாக்க முடியாது, தண்ணி கிண்ணி அடிக்க முடியாது. காசு இருந்தாலும் செலவழிக்க முடியாது. அதுனால காசு மிச்சமாகும் சீக்கிரமா ஒரு கோடி தேத்திப்புடலாம்ன்னு வந்தேன்.

வந்து ஒரு அஞ்சு வருசம்னே. ராப்பகலா வேலை பாத்தேன். நாய் படாத பாடு பட்டேன்.மாசம் ரெண்டு லெச்ச ரூவா சம்பளம்னே. வீட்டுக்கு போன் பண்ணுனாக்கூட செலவாகும்னு சிக்கனமா காசு சேத்து ஒரு கோடி ருபா திரட்டிபுட்டேன்.

ரொம்ப சந்தோசமா வந்து மாமனப் பாத்து ஒரு கோடி ரூவாயை காட்டி "இப்ப பொண்ணக் குடுங்க"ன்னு கேட்டேன்னே. அதுக்கு அந்த ஆளு சொல்லுறாரு "மாப்பிளே நீ சவுதி போனவுடனே ஒரு துபாயி மாப்பிள வந்து ஒரு கோடி ரூபா கொடுத்துக் கேட்டாரு அவருக்கு நான் பொண்ணக் கொடுத்திட்டேன். அவளுக்கு கல்யாணமாயி அஞ்சு வருசமாச்சு இப்ப உள்ளூரிலதான் இருக்காங்கன்னு"ன்னு.

மனசு ரொம்ப வலிச்சிதுன்னே. இருந்தாலும் வலிக்காத மாதிரியே காட்டிகிட்டு 'உங்க நேர்மை எனக்கு பிடிச்சுருக்கு மாமா'ன்னு சொல்லிபுட்டு வந்துட்டேன்னே.

அதுக்கப்புறம் எனக்கு வாழ்க்கையே வெறுத்து போயிருச்சுன்னே. வீட்டுக்கு வர்ற வழியிலேயே ஒரு குவார்ட்டர் மானம் கெட்ட மானிட்டரையும் ஒரு பூச்சி கொல்லி மருந்தயும் சேத்தே வாங்கிட்டு வந்துட்டேன். வீட்டுல வந்து ரெண்டையும் கலக்கி குடிக்கப் போகையில யாரோ கதவ தட்டுற சத்தம் கேட்டுச்சு.

யாருடான்னு கதவைத்திறந்து பாத்தா ஒருத்தன் அரக்கப் பறக்க உயிரு போற அவசரத்துல ஓடி வந்தவன் மாதிரி ஒருத்தன் நிக்கிறான். மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்கிகிட்டே அவன் சொல்லுறான்" என் பேரு செந்தட்டிக் காளை உங்க அத்த பொண்ணு அம்சவல்லியைத்தான் நான் கட்டிருக்கேன். நீங்க வந்த விபரம் இப்பத்தான் மாமா சொன்னாரு.உங்க ஒருகோடி ருபா விசயத்தியும் சொன்னாரு. அதான் உங்களப் பாக்க ஓடோடி வந்தேன்"னு.

'என்ன விசயம்'னு அந்த துபாய் மாப்பிள்ளையை கேட்கும் போது அவன் சொல்லுறான்' தம்பி நான் ஒரு ரெண்டு கோடியா தந்துடுறேன். நீயே அம்சவல்லிய கூட்டிகிட்டுப் போப்பா'ன்னு

"என்னங்க சொல்லுறிங்க' அப்படினு நான் கேட்க

"தம்பி கொஞ்சம் நஞ்சமா படுத்துறா.. தீணியா திங்கிறா வாங்கி கொடுத்து மாள முடியல தீனி தின்ன நேரம் போக திட்டு திட்டுன்னு திட்டுறா தாங்க முடியல'ன்னு சொல்லி உட்காந்து கேவி கேவி அழுகிறான்.

அதுக்கு மேல கேட்டுக்கிட்டு இருக்கிறதுக்கு நான் கேனையானா? அடுத்த பிளைட்ட புடிச்சு மறுபடியும் சவுதி வந்துட்டேன்.

'ஒரு தின்னிப்பண்டாரத்த என் தலயில கட்டப்பாத்தானே"ன்னு அந்த துபாயி மாப்பிள்ளைய நினச்சு என் மனசு வலிச்சாலும் உண்மைய சொன்ன அவன் நேர்மை எனக்கு ரொம்ப புடிச்சுருக்குன்னே.


புதன், 2 செப்டம்பர், 2009

Excel சூத்திரங்கள் பாகம்-1

எல்லோரும் எழுதுவதைப் பார்த்து ஒரு வேகத்தில் நானும் ஒரு வலைப்பூவைத் தொடங்கினேன். மனதில் பட்டதையெல்லாம் எழுதி இதோ இந்த எனது 25 ம் பதிவுக்கு வந்து விட்டேன்.

இந்த நேரத்தில் நான் இருவருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். வலைப்பூவை வடிவமைக்க ஆலோசனைகள் வழங்கிய அன்புச் சகோதரி திருமதி சுமஜ்லா அவர்களுக்கு என் முதல் நன்றி.


அடுத்ததாக பின்னூட்டங்களால் எனக்கு உரமிட்டு என் எழுத்துக்கு ஆக்கமும் ஊக்கமும் தொடர்ந்து கொடுத்து வரும் நண்பர் துபாய்ராஜா அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் பற்பல.

MS Office Excelலில் உள்ள சூத்திரங்களைப் பற்றி மட்டும் இந்த பதிவு.எல்லாம் தெரிந்தவனில்லை நான், இருப்பினும் எனக்குத் தெரிந்தவற்றை பற்றி மட்டும் இதில் சொல்கிறேன்.ஆங்காங்கே வரும் ஆங்கில வார்த்தைகளுக்கு தயவு செய்து மன்னிக்கவும்.


முதலாவதாக LEFT,RIGHT & MID இவற்றின் பயன்பாடுகளைப் பார்ப்போம்.

முதலில் LEFT

ஒரு textல் இடது ஓரம் உள்ள charactorsஐ கண்டறிய இது பயன்படும்.

=left(text,no of charactors) இது சூத்திரம் கீழே உள்ள மாதிரியைக் காண்க.இதில உள்ள Drawing #யில் இடது புறம் உள்ள "P" மட்டும் நமக்குத் தேவையென்றால் சூத்திரம் ஃபார்முலா பாரில் உள்ளவாறு எழுதவேண்டும்.

அடுத்தது RIGHT

ஒரு textல் வலது புறம் உள்ள charactors களை கண்டறிய


=right(text,no of charactors) இது சூத்திரம் கீழே உள்ள மாதிரியைக் காண்க.இதில உள்ள Drawing #யில் வலது புறம் உள்ள 02 மட்டும் நமக்குத் தேவையென்றால் சூத்திரம் ஃபார்முலா பாரில் உள்ளவாறு எழுதவேண்டும்.



அடுத்தது MID


ஒரு textல் மையத்தில் உள்ள charactors களை கண்டறிய


=mid(text,start no,no of charactors) இது சூத்திரம் கீழே உள்ள மாதிரியைக் காண்க.இதில உள்ள Drawing #யில் வலது புறம் உள்ள AA மட்டும் நமக்குத் தேவையென்றால் சூத்திரம் ஃபார்முலா பாரில் உள்ளவாறு எழுதவேண்டும். இதில் நமக்கு வேண்டிய AA textல் 7வது இடத்தில் ஆரம்பிக்கிறது. AA எனும் 2 charactors நமக்குத்தேவை.


அடுத்தது RIGHT & LEFT (COMBINED FORMULA)


MID சூத்திரத்திற்குப் பதிலாக மையத்தில் இருக்கும் charactorsகளை கண்டறிய இந்த RIGHT&LEFT சூத்திரம் பயன்படும்.உதாரனத்திற்கு P-8421AB-H-0011-02 இந்த textல் 8421AB மட்டும் தேவைப்படுவதாக கொள்வோம். இது தோராயமாக வலது புறம் உள்ளது. கீழ்கண்ட ஃபார்முலா பாரில் உள்ள சூத்திரத்தினை கவனிக்கவும். இதில் =left(B4,8) எனும் சூத்திரத்தால் நமக்கு P-8421AB எனும் 8 charactors கொண்ட விடை கிடைக்கும் இதில் நமக்குத்தேவையான 8421AB எனும் 6 charactors இப்போது வலதுபுறம் உள்ளது(P-8421ABல்) எனவே நமது சூத்திரம் பின்வருமாறு அமைகிறது.


=RIGHT(LEFT(B4,8),6)


இனி LEFT & RIGHT (COMBINED FORMULA)


இதுவும் முன் சொன்னது போல்தான். மையத்தில் வலது ஓரமாக உள்ள charactors களை கண்டறிய பயன்படும்.உதாரனமாக கீழ்கண்ட இந்த P-8421AB-H-0011-02 textல் வலது ஓரமாக உள்ள 0011 மட்டும் தேவை எனில் அதற்கான சூத்திரம் பின்வருமாறு அமைய வேண்டும்.


=right(B4,7) இந்த சூத்திரத்தால் நமக்கு விடை இப்படி கிடைக்கும். 0011-02 இதில் இடது ஒரம் உள்ள 4 charactors மட்டும் நமக்குத்தேவை எனவே சூத்திரம் இப்படி அமைய வேண்டும்.


=left(right(B4,7),4)




அடுத்தது MID & FIND MEGA FORMULA

ஒரு textல் இரு குறிப்பிட்ட charactorகளுக்கிடையேயுள்ள charactors மட்டும் வேண்டுமெனில் இந்த சூத்திரம் மிக உபயோகமாக இருக்கும்.கீழே உள்ள அட்டவனையில் மூண்று drawing # உள்ளது.இதில் இரண்டாவது ஐபின் (-)னுக்கும் மூண்றாவது ஐபின்னுக்கும் இடையே உள்ள charactors மட்டும் தேவை என வைத்துக்கொள்வோம். இதற்கு =mid(B4,10,3) எனும் சூத்திரம் மூலம் cwr எனும் விடையை பெறலாம். ஆனால் இதே சூத்திரத்தை அடுத்த drawing # க்கு போட்டால் விடை H-0 என வரும். அதிகபட்சமான encodingல் இதுபோல ஒவ்வொன்றுக்கும் சூத்திரத்தை மாற்றிக் கொண்டிருக்க முடியாது. எனவேதான் கீழ்கண்ட பொதுவான சூத்திரத்தை பயன்படுத்த வேண்டும்.
=MID(B4,FIND("-",B4,(8))+1,FIND("-",B4,(11))-(FIND("-",B4,(8))+1)) இதில் FIND("-",B4,(8))+1 என்பது starting noக்கான சூத்திரம் எஞ்சியுள்ளது no of charactors க்கான சூத்திரம்.கீழே உள்ள படத்தினை சொடுக்கி பெரிதாக்கிப் பார்க்கவும்.



LEFT, LEN & FIND MEGA FORMULA

இதுவும் ஒரு மெகா சூத்திரம். இதன் மூலம் ஒரு textல் ஒரு குறிப்பிட்ட charactorருக்கு முன் புறம் அதாவது இடது புறம் உள்ள charactorsகளை பிரித்து எழுத இது பயன்படும். இதில் LEN என்பது ஒரு textன் மொத்த நீளத்தினை காட்ட பயன்படும் சூத்திரம். கீழே உள்ள படத்தினைப் பார்க்கவும்.

RIGHT, LEN & FIND MEGA FORMULA
இதுவும் ஒரு மெகா சூத்திரம். இதன் மூலம் ஒரு textல் ஒரு குறிப்பிட்ட charactorருக்கு பின் புறம் அதாவது வலது புறம் உள்ள charactorsகளை பிரித்து எழுத இது பயன்படும். இதில் LEN என்பது ஒரு textன் மொத்த நீளத்தினை காட்ட பயன்படும் சூத்திரம். கீழே உள்ள படத்தினைப் பார்க்கவும்.


இத்துடன் இந்த பதிவை முடித்துக் கொண்டு இனி வரும் பதிவுகளில் இன்னும் நிறைய சூத்திரங்களோடு வருகிறேன். வணக்கம்.