எங்க ஊருல ஒரு ரொம்ப படிச்சவன் ஒருத்தன் இருந்தான். எப்பப் பாத்தாலும் பாக்குறவுங்ககிட்ட அல்ஜீப்ரா,போரியர் சீரிஸ்,இண்டகரல் கால்குலேசன்,டிப்பரன்சியல் கால்குலேசன்,லேப்லாஸ் டிரான்ஸ்பார்ம்ன்னு விளங்காத கிரகமெல்லாம் பேசிக்கிட்டு இருப்பான். அதுனால அவன எல்லோரும் கணக்குப்புலின்னு ஊருல கூப்பிடுவோம்.
அப்ப எங்க ஊருல ஒரு வெள்ளந்தி மனுசன் சொந்தமா வீடு கட்டிக்கிட்டு இருந்தாரு. வீட்டுக்கு நிலை ஜன்னல் கதவுக்குல்லாம் மரம் விலை கம்மியாக எடுக்கனும்னு நினைச்சாரு. செங்கோட்டை அல்லது கேரளா பார்டர் போனா மரத்த தடியா எடுத்து அறுத்து ரொம்ப கம்மியா வாங்கிடலாம்னு யாரோ அவரு காதுல ஓதுயிருக்கானுக. இவரும் அதக்கேட்டுட்டு செங்கோட்டை போகலாம்னு முடிவு செஞ்சாரு. ஆசாரியக் கூப்பிட்டுட்டு போனா கமிசன் செலவுல்லாம் ஆகும்னு நினச்சு வேற யாரை விவரமான ஆளக் கூப்பிட்டு போகலாம்னு நினைக்கும் போது நம்ம கணக்குப்புலி ஞாபகம் அவருக்கு வந்துச்சு.
போயி நம்ம கணக்குப்புலியை துணைக்கு கூப்புட்டாரு. கணக்குபுலியும் "பெரிய கணக்குல்லாம் போடுற என்ன போயி ஒரு சின்ன கண அடி கணக்கு போட கூப்புடுறியே பெருசு'ன்னு ரொம்ப பிகு பண்ணி ஒத்துக்கிட்டான்.
ரெண்டு பேரும் சேர்ந்து செங்கோட்டையில ஒரு பெரிய மரக்கடைக்கு போனாங்க.கடைக்காரர் பலதடியெல்லாம் காட்டுன பின்னாடி 2அடி விட்டமும் 10 அடி நீளமும் உள்ள ஒரு தடியை வாங்கிடலாம்னு பெருசு முடிவு செஞ்சாரு.விலை கேட்கும் போது ஒரு குழி (1 கண அடி) ஆயிரம் ரூபான்னு மரக்கடைக்காரர் சொல்லியிருக்காரு.அந்த மரம் எத்தனை குழிங்கன்னு கேட்க கடைகாரர் மனசுல கணக்கு போட ஆரம்பிக்கும்போது நம்ம கணக்குப்புலி அங்கிருந்த கால்குலேட்டர டப்பு டுப்புனு தட்டி 31.429 ன்னு ரொம்ப பின்னச்சுத்தமா விடையைச் சொல்லியிருக்கான்.
மரக்கடைக்காரரு சட்டுனு ஆச்சர்யமாப் பாத்து பெருசுகிட்டே யாரு இந்த தம்பி ரொம்ப புத்திசாலியா இருக்காரேன்னு பெருசுகிட்ட கேட்டாரு பெருசும் நம்ம ஊருதான் எங்க ஊருலயே ரொம்ப படிச்ச புள்ளன்னு சொல்லியிருக்காரூ "அட படிச்ச புள்ளன்னு பாத்தவுடனயே தெரியுதுன்னு சொல்லி யாருக்காகவும் விலைய குறைச்சதில்ல தம்பிக்காக ஒரு நூறு ரூவா குறைச்சு குழி தொள்ளாயிரம்னு தர்றேன்னு சொன்னாரு. பெருசும் பரவாயில்ல பயல கூட்டிட்டு வந்ததுக்கு நமக்கு 3000 ரூபாய் மிச்சம்னு சந்தோசப்பட்டுக்கிட்டே மரத்த வாங்கி அறுத்து ஒரு வண்டி புடிச்சு ஏத்தி ஊரு வந்து சேந்தாங்க.
வந்தவுடனே மறுநாளு மரத்தையெல்லாம் இழைக்குறதுக்காக உள்ளூருலயே உள்ள இழைப்புப் பட்டறைக்கு கொண்டு போனாரு பெருசு. இழைப்புக்கடைக்காரர் "எங்க எடுத்திங்க என்ன விலைனு விபரம் கேட்டுருக்காரு. பெருசும் தடி நீளம் அகலம்லாம் சொல்லி கணக்கு புலி தனக்கு 3000 ரூபாய் மிச்சம் புடிச்சு தந்தான்னு பீத்திக்கிட்டாரு.மனசுலயே கணக்குப் போட்ட இழப்புக்கடைக்காரர் கணக்குப்புலி கணக்குக்கும் மரக்கடைக்காரரோட கணக்குக்கும் உள்ள வித்தியாசத்தையும் சொன்னாரு.
கணக்குப்புலியின் கணக்கு
மரக்கடைக்காரரின் கணக்கு
"மரக்கடைக்காரர் போக்குலய கணக்குப் போட விட்டிருந்தா கூட குழி 1000 ருபாயின்னு வச்சுகிட்டாலும் உனக்கு 4000 ரூபாய் மிச்சமாயிருக்கும் வட்டத்துல சதுரம் போக எதுக்கும் உதவாத விறகுக்கும் கண அடி ரேட்டு போட்டு வாங்கிட்டு வந்துருக்குற உன்னை என்னனு சொல்லுறது"ன்னு இழப்புக்கடைக்காரர் பெருசுக்கு டோஸ் விட்டாரு. அதுலயிருந்து பெருசு நம்ம கணக்கு புலியை தேடிக்கிட்டு இருக்காரு.யாரும் பாத்தா சொல்லுங்கப்பு அப்படியே எனக்கு ஒரு ஓட்டையும் போட்டுட்டு போங்கப்பு.
பின் குறிப்பு: சத்தியமா அந்த கணக்குப்புலி நான் இல்லிங்க.
4 கருத்துகள்:
:-))
சூப்பர்!
சுவாரஸ்யமான சம்பவத்துடன் சொல்லப்பட்ட கணக்கியல் உண்மை. நல்ல யுக்தி. இதே ஸ்டைலில், இது மாதிரி விஷயங்கள் அவ்வப்போது எழுதுங்கள்..
http://kgjawarlal.wordpress.com
வாங்க kgjawarlal உங்க ஊக்கம் எனக்கு டானிக் சாப்புட்ட மாதிரி இருக்கு நன்றி
//பின் குறிப்பு: சத்தியமா அந்த கணக்குப்புலி நான் இல்லிங்க. //
ஆஹா.......அவனா நீ..........
கருத்துரையிடுக
ஏதாவது சொல்லிட்டு போங்க