சனி, 6 மார்ச், 2010

மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை வரவேற்போம்

உலக மகளிர் தினம் தனது நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடப் போகும் எதிர் வரும் மார்ச்சு திங்கள் 8ம் நாள் இந்திய பாராளுமன்றத்தில் அரசு மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை அரசியல் சட்டத்திருத்தம் 108 மூலம் அமுல்படுத்த இருக்கிறது.

கடந்த 15 ஆண்டுகளாக இதோ அதோ என கிடப்பில் போடப்பட்டு இருந்த இந்த சிறப்பான ம்சோதா தற்போது நிறைவேறப் போகிறது.இதன் மூலம் பிற்படுத்தப் பட்டவரை விட, தாழ்த்தப் பட்டவரை விட, மலைஜாதி மக்களைவிட சமூக அநீதி இழைக்கப்பட்ட பெண்களுக்கு ஒரு விடிவுகாலம் வர இருக்கிறது.

உலக பொருளாதார மன்றம் 2009 (world economic forum) தனது அறிக்கை ஒன்றில் வளர்ந்த 134 நாடுகளில் சமூகத்தில் பாலியல் சம நிலை இல்லாத நாடுகள்(gender disparity) என்னும் பட்டியலில் இந்தியா 114ஆவது இடத்தினை வகிக்கிறது எனச் சொல்கிறது. இனி அந்த அவப் பெயர் வரப் போவதில்லை.

இந்த மசோதாவிற்கு முன் எப்போது இல்லாத அளவில் பிரதான எதிர்கட்சியான பா.ஜ.கவும் இடது சாரிக் கட்சிகளும் ஆதரவு தர முன் வந்திருக்கின்றன. இது ஒரு பாரட்டத்தக்க ஒரு அம்சம். வழக்கம் போல ராஷ்டிரிய ஜனதா தளமும் சமாஜ்வாடி கட்சியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதற்கு அவர்கள் பல்வேறு காரணங்கள் சொன்னாலும், முக்கியமான காரணம் இந்த மசோதா நிறைவேற்றப் பட்டால் இந்த கட்சிகளுக்கு வேட்பாளர்கள் கிடைக்காது என்பதே ஒரு காரணம் ஆகும்.

தமிழ்நாட்டில் அதிமுக ஜா ஜெ என பிரிந்து தேர்தலை 1989ல் தேர்தலை சந்தித்தபோது ஜானகி அணியில் சிவாஜி கணேசனுக்கு 50 இடங்கள் வழங்கப்பட்டன. இவ்வளவு பெரிய நடிகருக்கு வெறும் 50 இடங்கள்தானா என ஒருவர் வினவியபோது அப்போதைய ஜா கட்சியின் நிர்வாகி திரு ஆர்.எம். வீரப்பன் கேலியாக குறிப்பிட்டாராம் "முதலில் அவர்கள் 50 வேட்பாளர்களை கண்டு பிடிக்கட்டும் அப்புறம் பார்ப்போம்" என. இது வேடிக்கை என்றாலும் இதே போல ஒரு நிலைமைதான் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டால் லாலுவுக்கும் முலாயமுக்கும் ஏற்படும். ஏன் எனில் ரவுடிகள் கட்டப் பஞ்சாயத்துக்காரர்கள் குண்டர்கள் யாரும் பெண்களில் இல்லை என்பதே இவர்களின் எதிர்ப்புக்கு காரணம். அரசு இவர்களின் வெற்றுக் கூச்சலுக்கு பயப்படாது இந்த மசோதாவினை நிறைவேற்ற வேண்டும்.

இதுவரை பாராளுமன்றத்தில் 1 0 சதவீதம் மட்டுமே பெண்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டிருக்கிறது என கணக்கெடுப்புகள் சொல்லுகின்றன. அந்த பத்து சதவீதமும் இந்திரா, மீராகுமார் போல் தந்தையாலோ, சோனியாகாந்தி ரப்ரிதேவி போல் கணவனாலோ அல்லது ஜெயலலிதா மாயாவதி போல் ஆண் தலைவர்களால் வளர்க்கப்பட்டவர்களாக உள்ளனர். இந்த மசோதா நிறைவேற்றப் பட்டால் சுயமாக எந்த ஆணுடைய தயவுமின்றி பெண்கள் தங்களது பங்களிப்பை இந்த நாட்டுக்கு செய்வதற்கு உறுதுனையாக இருக்கும்.

கணவன் கொண்டு வந்து கொடுக்கும் பணத்தில் கட்டும் செட்டுமாக குடும்பம் நடத்தி பிள்ளைகளை படிக்க வைத்து குடும்பத்தினை வெற்றிகரமாக கொண்டு செல்லும் நிர்வாகிகள் பெண்கள் அவர்களுக்கு நாட்டை ஆளுவது ஒரு சாதாரன வேலையாகத்தான் இருக்கும்.மேலும் நிர்வாகமும் சுத்தமாக லஞ்ச லாவன்யம் இன்றி கட்டைப் பஞ்சாயத்துகள், கமிசன் இன்றி நேர்மையாக இருக்கும் என நம்பலாம்.

எனவே இந்த மகத்துவமான மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவினை மேல் உள்ள படத்தில் இருக்கும் பெண்களைப் போல் உற்சாகமாக விசிலடித்து வரவேற்போம்.


1 கருத்துகள்:

தியாவின் பேனா சொன்னது…

நன்றாக இருக்கிறது வாழ்த்துகள்

கருத்துரையிடுக

ஏதாவது சொல்லிட்டு போங்க