வியாழன், 11 பிப்ரவரி, 2010

பாம்பு புடிச்சா பத்து லட்சம்


அந்த இருட்டில் டார்ச் அடித்து மலைச்சாமி எதையோ தேடிக் கொண்டிருந்தது கடைவீதியில் இருந்து வீடு திரும்பிய சண்முகத்திற்கு வியப்பாக இருந்தது.

மலைச்சாமி சண்முகத்தின் சகலை. ஆரம்பப் பள்ளி ஒன்றில் ஆசிரியர். சனி ஞாயிறு விடுமுறைகளில் சண்முகத்தின் வீட்டில் வந்து தங்கிச் செல்வதுண்டு.
"என்ன தம்பி தேடுறீங்க எதையாவது பணத்த தொலச்சிட்டிங்களா"?
"இல்லண்ணே ஒரு பாம்பு வந்துச்சு அதத்தான் தேடிக்கிட்டு இருக்கேன்"
ஊரின் ஆரம்பத்தில் இருந்தது சண்முகத்தின் வீடு. கட்டி ஐந்து வருடம் ஆகி விட்டது. சுற்றிலும் தென்னை மரத்தோப்புகள், வீடு கட்டி வந்த காலம் தொட்டு பாம்பு ஏதும் சுற்றுப்புறத்தில் யாரும் பார்த்ததில்லை.
"என்ன தம்பி சொல்லுறிங்க பாம்பா பாத்தவுடனே அடிக்கக் கூடாதா" சிறுபிள்ளைகள் வீட்டில் இருப்பதால் சண்முகம் கவலையடைந்தான்.
"அடிக்கக்கூடாதுன்னே இந்த பாம்பு இருதலை மணியன் மாதிரி இருக்கு இத உயிரோட பிடிச்சுக் கொடுத்தா பத்து லட்ச ரூவா வரை கிடைக்கும்"
"எந்த கேனையன் தம்பி இதச் சொன்னான்"
"ச்சூ சும்மா இருங்கன்னே எங்கூட வேலைப் பார்க்குற வாத்தியாரோட மாமாதான் இதச் சொன்னாரு, இந்த மாதிரி இருதலை மணியன் பாம்புக்கு இப்ப நல்ல கிராக்கியாம். இதுல இருந்து கேன்சருக்கு மருந்து எடுக்கலாமாம்"மதிலோரமாகத் தேடிக்கொண்டே மலைச்சாமி கூறினான்.
சண்முகத்தின் மனத்திரையில் தன்னுடன் கல்லூரியில் பயின்ற சகாய ராசு வந்து போனான்.அவனும் இப்படித்தான் "கருப்புபூனை பிடிச்சா ஒரு லட்சம் கருநொச்சி செடி கிடைச்சா இரண்டு லட்சம், ஒரு மில்லியன் டாலர் நோட்டை மாத்துனா பல லட்சம்"ன்னு எப்பவும் புருடா விட்டுக்கிட்டுறுப்பான்.
"அண்ணே இங்க வந்து பாருங்க" மலைச்சாமி டார்ச் அடித்துக் காட்டிய இடத்தில் ஒரு மூண்றடி நீளமுள்ள பாம்பு மரவட்டை போல சுருண்டு படுத்துக் கிடந்தது.
"அண்ணே நான் இங்கய பாம்பு ஓடாமப் பாத்துகிறேன் நீங்க ஓடிப்போயி ஒரு அரிசிச்சாக்க எடுத்துட்டு வாங்க அப்படியே புடிச்சுடலாம்"
"தம்பி கொத்தி கித்தி வைக்கப் போகுது ஒரு குச்சிய எடுத்து அடிச்சுப் போடுங்க எதுக்குப் போயி புடிச்சுக்கிட்டு"
'அண்ணே இந்தமாதிரி பாம்பெல்லாம் கொத்தாதுன்னே, எந்த பாம்பு இரண்டு கலர் அல்லது இரண்டு டிசைனுக்கு மேல இருக்கோ அதுதான் விஷமுள்ள பாம்பு இதப் பாருங்க ஒரே கலரு ஒரே டிசைனு கொத்தாது போயி சாக்க எடுத்துட்டு வாங்க" மலைச்சாமி முனியாண்டி விலங்கியல் மூண்றாமண்டு மாதிரி பேசினான்.
சண்முகத்திற்கு கோபம் வந்தாலும் கொழுந்தியாப் புருசனாச்சேன்னு சாக்கு ஒன்னு எடுத்துட்டு வந்தான்.தவளையோ அல்லது எலியோ தின்ன மயக்கத்துல கிடந்த அந்த பாம்பு மலைச்சாமி ஒரு குச்சியை வைத்து தள்ளவும் சாக்கில் போயி சுகமாக படுத்துக் கொண்டது. சாக்கின் முனையை ஒரு சணலில் கட்டி பாம்போடு சாக்கை வீட்டுக்கு கொண்டு வந்து ஹாலில் ப்ரிட்ஜ் இருந்த ஓரத்தில் வைத்தான்.அப்புறம் செல்போனை எடுத்து யாருக்கோ பேச ஆரம்பித்தான்.
"அண்ணே பார்ட்டி வந்துகிட்டு இருக்காங்க, கண்பர்ம் பண்ணிட்டாங்கன்னா சுளையா பத்து லட்சம் கிடைக்கும் நைட்டோட நைட்டா லட்சாதிபதி ஆயிருவேன்" மலைச்சாமி உற்சாகமாக பேசினான்.
"சித்தப்பா எங்க வீட்டுலதான் பாம்ப புடிச்சுருங்கீங்க அதுனால எங்களுக்கும் பாதிக்காச கொடுத்துடனும்" சாக்கை கண் கொள்ளாமல் பார்த்துக் கொண்டிருந்த சண்முகத்தின் மகன் பேரம் பேசினான்.
அரைமணி நேரம் போயிருக்கும். வெளியே பைக் ஒன்று வந்து நிற்கும் சத்தம் கேட்டது. இரண்டு ஆசாமிகள் 40 வயதுக்கு மேல் இருக்கும். மக்களுடன் தான் கூட்டணி என்னும் மாநிலக் கட்சியின் கரை வேட்டி கட்டியிருந்தார்கள். இராம்நாடு மாவட்டத்துக்குரிய வகையில் முகத்தில் முக்கால்வாசி மீசை வைத்திருந்தார்கள்.அவர்கள் இருவரையும் ராம்நாடு பஸ் ஸ்டாண்டில் லாட்டரி சீட்டு வித்துக் கொண்டிருந்தபோது பார்த்ததாக சண்முகத்திற்கு நியாபகம்."லாட்டரிய கவர்மெண்டு ஒழிச்சதும் பய புள்ளைக இப்படி கிளம்புருச்சு போலருக்கே"ன்னு சண்முகம் நினைத்துக் கொண்டான்.
"சரக்கு எங்க தம்பி" வந்தவரில் ஒருவன் மலைச்சாமியிடம் கேட்டான்
"இந்தா இருக்குன்னே" சாக்கை அப்படியே தூக்கி அவர்களிடம் காட்டினான் மலைச்சாமி.
சாக்கைப் பிரித்து இருவரும் ஆராய்ச்சி செய்தனர். "தம்பி கண்பர்ம் இருதலை மணியனேதான். சரக்க எடுங்க இப்பவே இராம்நாடு போயி பார்ட்டியப் பாத்து பணத்த வாங்கிடுவோம்"
"அடப்பாவிகளா இவனுக பார்ட்டி கிடையாதா ஏஜண்டுக போலிருக்கே" சண்முகம் நினைத்துக் கொண்டான்.
"அண்ணே உங்க பைக்க எடுங்க ஒரு எட்டு ராம்நாடு போயிட்டு வந்துறலாம்" மலைச்சாமி கூறினான். மணி பதினொன்னுக்கு மேலாகி விட்டதால் ராம்நாடுக்கு பஸ் கிடையாது. தவிரவும் சரக்கை வைத்துக் கொண்டிருந்தால் சின்னப் புள்ளைகள் தூங்காது என்பதால் சண்முகம் பைக்கை எடுக்க உடன்பட்டான்.
ஒரு பைக்கில் சண்முகமும் மலைச்சாமியும் அமர்ந்து கொள்ள ஏஜண்டுகள் இருவரும் தாங்கள் வந்த பைக்கில் ஏறிக்கொண்டனர். சரக்கை மலைச்சாமி கையில் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். ஏஜண்டுகள் வழிகாட்ட அரைமணி நேரத்தில் ராம்நாடு பாரதிநகர் வந்தனர்.
உயர்தட்டு மக்கள் வசிக்கும் தெருபோல் எல்லா கட்டிடங்களும் வனப்புடன் இருந்தன. ஒரு பெரிய புதிய பங்களாவின் முன் ஏஜண்டுகள் வண்டியை நிறுத்தி அழைப்பு மணியை அழுத்தினர்.
கதவைத் திறந்த நபரை சண்முகத்திற்கு உடன் அடையாளம் பிடிபட்டது. சகாய ராசு சண்முகத்தின் கல்லூரி தோழன்.
"என்ன இந்நேரத்துல உள்ள வாங்க" என்று வரவேற்றவன் சன்முகத்தைப் பார்த்ததும் "சண்முகம் நல்லாருக்கியா"ன்னு கைப் பிடித்தான்.
மலைச்சாமி கையிலிருந்த சரக்கை சகாயராசுவிடம் காட்டினான். சரக்கப் பார்வையிட்ட சகாயராசு உதடு பிதுக்கினான்.
"வெயிட்டு ரொம்ப கம்மியா இருக்கு மூனு கிலோவுக்கு மேல இருந்தாத்தான் பத்து ரூபாக்கு மேல போகும் இப்ப வித்தா ரொம்ப கம்மியாத்தான் கேப்பாங்க, கொடுத்துட்டுப் போங்க ஒரு மண்பானையிலப் போட்டு முட்ட வெள்ளக் கருவ கொடுத்தம்னா ஒரு வாரத்துல மூனு கிலோவுக்கு மேல வந்துடும் பத்து ரூவாக்கு மேல கூட வித்துறலாம்" என்னவோ இறால் வளர்க்கிற மாதிரி சகாயராசு பேசினான்.
சகாயராசுவிடம் போன் நம்பர் வாங்கிக் கொண்டு மலைச்சாமியும் சண்முகமும் விடைப் பெற்றனர்.
ஒருவாரம் கழித்து மலைச்சாமி சோகமாக சண்முகம் வீட்டுக்கு வந்தான். "அண்ணே அந்த பாம்பு ஒடிப்போயிருச்சாம் சே கைகெட்டுனது வாய்கெட்டலியே"
"எனக்குத் தெரியாதா தம்பி இதெல்லாம் டுபாக்கூர்" சண்முகம் மலைச்சாமியை நக்கலாக பார்த்தபடி கூறினான்.
ஒரு மாதத்திற்கு அப்புறம் சண்முகம் அவன் பைக்கினை சர்வீஸ் செய்ய ராம்நாடு போயிருந்தான். பைக்கினை சர்வீஸ் செய்யக் கொடுத்து விட்டு திரும்பும் போது ராஜம் மோட்டரூக்கு பக்கத்த்தில் இருந்த டாடா சுமோ கார் ஷோரூம் வாசலில் அந்த ஏஜண்டுகள் இருவரையும் பார்த்தான். எண்ணன்னே இந்தப் பக்கம்" ஏஜண்டுகளிடம் சண்முகம் கேட்டான்.
"வண்டி ஒன்னு புக் பண்ண வந்தோம் தம்பி"
"இன்ஸ்டால்மெண்டான்னே" சண்முகம் கேட்டான்.
"இல்ல தம்பி ரெடிகேஷ்"
யோசனையுடன் வீடு திரும்பிய சண்முகத்திடம் மனைவி சொன்னாள். "என்னங்க உங்களுக்கு விசயம் தெரியுமா என் தங்கச்சி புருசன்{மலைச்சாமி} டிராக்டர் ஒன்னு வாங்கியிருக்காராம். தீடிருன்னு ஏது அவருகிட்ட இம்புட்டு காசு"
இப்பல்லாம் இருட்டானதும் சண்முகம் டார்ச்சு ஒன்னு எடுத்துக்கிட்டு மதிலோரமா தேடிக்கிட்டு இருக்கான்.

1 கருத்துகள்:

துபாய் ராஜா சொன்னது…

இயல்பா, நல்லா எழுதியிருக்கீங்க.எங்க ஊர்ப்பக்கமும் ரெண்டு, மூணு வருசமா இந்த கதை மாதிரி பாம்பு பிடிக்கிற கதைகள் நடந்துகிட்டுதான் இருக்கு.

பேசாம நாமளும் ஊர்ப்பக்கம் போய் டார்ச்சை எடுத்திகிட்டு ராத்திரி பாம்பு வேட்டைக்கு போயிடலாம்ன்னு தோணுது. :))

கருத்துரையிடுக

ஏதாவது சொல்லிட்டு போங்க