வெள்ளி, 14 மே, 2010

மஹா பாரதமும் மானங் கெட்ட மானிட்டரும்



புதிதாக நாட்காட்டி வாங்கினால் அதில் வள்ளலார் தினம் ,மீலாது நபி , மகா வீரர் ஜெயந்தி, திருவள்ளுவர் தினம் என மிக மிக முக்கியமான நாட்களை மட்டும் ஞாபகம் வைத்து கொள்ளும் அளவுக்கு நம்முடைய தண்ணி அடிக்கும் பழக்கம் இருந்தது. 13 வருடம் வனவாசமும் 1 வருடம் அஞ்ஞாத வாசமும் போய் சிரமப்பட்ட பாண்டவர்கள் போல் எனக்குள்ளும் இந்த பழக்கத்தை நிறுத்த வேண்டும் என ஒரு குரல் என் மனதில் பல்லாண்டுகளாக ஓலித்துக் கொண்டிருந்தது.

இறுதியில் இந்த அடங்காத மனது கௌரவர்கள் போல் சண்டித்தனம் செய்யவே வேறு வழியில்லாமல் ஒரு குருஷேத்ரப் போரை ஆரம்பிக்க வேண்டியதாயிற்று.


பீஷ்ம வதம்: எந்த கெட்ட பழக்கத்திற்கும் அடிப்படை இந்த ஆசைதான். இது மகாபாரத்தில் வரும் பீஷ்மரைப் போன்றது. எப்படி கௌரவர்கள் மற்றும் பாண்டவர்களுக்கு பிதாமகர் பீஷ்மரோ அது போல் தான் இந்த ஆசையும். குருஷேத்ரப் போரில் முதல் பத்து நாட்கள் பீஷ்மரை எதிர்த்துத்தான் பாண்டவர்கள் போர் புரிய நேர்ந்தது. அது போல் தண்ணியடிப்பதை நிறுத்த வேண்டும் என நினைத்ததும் இந்த ஆசையோடு பத்துநாள்கள் தொடர்ந்து போராட்டம். எப்படி பல மாவீரர்களாலும் வெல்ல முடியாத பீஷ்மர் சிகண்டியைப் பார்த்ததும் கையறு நிலையில் நின்றாரோ அதுபோல் ஓல்ட் மங்க், ஓல்ட் காஸ்க், மெக்டோவல், சிக்னேச்சர், கார்டினல், அக்கார்ட், நெப்போலியன்,சீசர், கொரியர்,ஈவினிங்க் வாக்கர், பேக் பைப்பர் என பல்வேறு சரக்குகள் அடித்தும் அடங்காத ஆசை மானங்கெட்ட மானிட்டரை அடித்ததும் நாக்குழறி கைகால் தடுமாறி இரண்டு பேர் கைத்தாங்கலாக என்னை வீடு கொண்டு போய் சேர்த்ததும் பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்தது போல் ஆசை படுத்துப் போய் விட்டது. கவனிக்கவும் ஆசை இறந்து விடவில்லை, படுத்துத்தான் இருந்தது.

துரோணாச்சாரியர் வதம். ஆசை பீஷ்மரைப் போல் அம்புப் படுக்கையில் படுத்தாயிற்று. தண்ணி அடிப்பதையும் நிறுத்தியாயிற்று. ஆனால் இந்த அறிவு துரோணாச்சாரியர் போல் போர் செய்ய வந்தது. "ஏன் தண்ணியடிப்பதை நிறுத்த வேண்டும் எவ்வளவோ பேர் அடித்துக் கொண்டு நன்றாகத்தானே உள்ளனர். தினந்தோறும் குடிக்காவிட்டாலும் வாரம் ஒருமுறை சனிக்கிழமை குடிக்கலாமே" என ஆயிரம் கேள்விகளை அம்புகளாக அறிவு வீசியது.இப்படி ஐந்து நாட்கள் அறிவோடு போராட்டம்.எப்படி தருமரின் நாவில் இருந்து வந்த "அஸ்வாத்தமன் இறந்தான்" என்ற வார்த்தையால் துரோணர் நிலை குலைந்தாரோ அதுபோல் என் தருமப் பத்தினியிடம் இருந்து வந்த ஒரு தகவல் என்னை நிலைகுலைய வைத்தது. "என்னங்க எப்பவும் தண்ணியடிச்சுக்கிட்டே திரிவாரே என் ஒன்னு விட்ட அக்காவோட புருசன் அழகப்பன் அவரு நேத்து குடிச்சுட்டு வந்து படுத்தவுடனே குடல் குடலா இரத்த வாந்தி எடுத்து செத்துப் போயிட்டாராம்."

வேறு யார் வந்து சொன்னாலும் நம்பாத துரோணர் தருமரின் வாக்கை நம்பி நிலை குலைந்து இறந்தது போல் என் தருமப்பத்தினியின் வார்த்தையை கேட்டதும் அறிவும் நிலைகுலைந்து போனது.


கர்ணவதம் . ஆசையும் அறிவும் அடங்கிப்போய் விட்டது. பதினேழாம் நாள் போரை கர்ணன் தலைமையேற்று நடத்தியது போல் எனக்கு பதினேழாம் நாள் சோதனையாக வந்தது, நான் தண்ணியடிக்கும் போது டாஸ்மாக் பாரில் செய்த தான தருமங்கள். போதை ஏறி விட்டால் யாருக்காவது பாரில் தண்ணிப் பாக்கட்டாகவோ பிங்கர் டிஷ் எனப்படும் சைட் டிஷ்களாவோ, கட்டிங்குகளாகவோ நான் பலருக்கு தானம் செய்ததுண்டு. அப்படி நான் கர்ணப்பிரபுவாய் செய்த தானங்களினால் பலன் பெற்றவர்கள் வேலை விட்டு வீடு திரும்பும் வழியில் (டாஸ்மாக் வழியாகத்தான்) நின்று கொண்டு " என்னன்னே ஐந்து நாளா உங்களை ஆளையே காணோம் என்னன்னே பிரச்சினை மாசக் கடசி காசு இல்லன்னாலும் பரவாயில்ல வாங்கண்ணே நான் வாங்கித் தாரேன். " என ஆளாளுக்கு கடைக்கு கூப்பிட்டாய்ங்க பாருங்க ஒரு சபலம் நாகாஸ்திரம் மாதிரி வந்து தாக்கியது. ஒரு செகண்டுதான் மனசை மாத்திக்கிட்டு நான் ஒரு அஸ்திரத்த அர்ச்சுனன் போல் அந்த கருண மகாராசாக்களிடம் வீசினேன். "வர்றேன் ஆனா சாப்பிட்ட பிறகு டிபன் நீதான் வாங்கித்தரனும்".
இந்த தண்ணியடிக்கிறவங்ககிட்ட உள்ள ஒரு விசேசமான குணம் இதுதான். பசிக்குதுடா ஒரு பத்து ரூவா கொடுடான்னா கொடுக்க மாட்டானுக ஆனா அதே நேரத்துல ஒரு கட்டிங்க் வாங்கி கொடுடான்னா நாப்பது ரூவா செலவழிச்சு வாங்கி கொடுப்பானுக.அஸ்திரதுக்கு உடன் பலன் இருந்தது கர்ண மகாராசாக்கள் துண்டக் காணோம் துணியக் காணோம்ன்னு ஓடியேப் போயிட்டாய்ங்க.
துரியோதன வதம். கடைசியா துரியோதனன். இது யாருன்னா நம் மனசையும் அறிவையும் கெடுக்கிற அசைவப் பழ்க்கம்தான் அது. ஆடு கோழி மீனு நண்டு இறாலுன்னு தின்னு தீர்த்தவுடன் உடம்பு மிதப்பாகி தண்ணியடிக்கிற சபலத்தினை தூண்டுதுன்னு என் மனசுக்கு ஒரு தெளிவு வந்தது. தொடையில கதையால அடிச்சு துரியோதனன் கதைய பீமன் முடிச்ச மாதிரி ஆட்டுத்தொடைக்கறி கோழித் தொடைக்கறி (லெக் பீஸ் ) இப்படி சாப்பிட்டுகிட்டு இருந்த நான் பதினெட்டாம் நாள் சைவத்துக்கு மாறினேன்.

குருஷேத்ரப் போர் முடிந்தாயிற்று. நானும் தண்ணியடிப்பதை முற்றிலும் நிறுத்தியாயிற்று.

"எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்"






1 கருத்துகள்:

ஜெய்லானி சொன்னது…

################
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்..
http://kjailani.blogspot.com/2010/07/blog-post.html

அன்புடன் > ஜெய்லானி <
################

கருத்துரையிடுக

ஏதாவது சொல்லிட்டு போங்க