திங்கள், 8 பிப்ரவரி, 2010

BRMS பட்டப்படிப்பை வரவேற்போம்

கிராமப்புற மக்களுக்கு சிறந்த மருத்துவ சேவை அளிக்கும் பொருட்டு BRMS ( Bachelor of Rural Medicine and Surgery) என்னும் மூன்றாண்டு பட்டப் படிப்பை அறிமுகப் படுத்தப் போவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் அறிவித்துள்ளார்.
MBBS படித்து முடித்த மருத்துவர்கள் ஓராண்டு கிராமப்புறங்களில் கட்டாயமாக சேவை செய்ய வேண்டும் என முன்னாள் நடுவன் அரசு சுகாதாரத் துறை அமைச்சர் மருத்துவர் அன்புமனி அறிவித்த போது மருத்துவர்கள் தரப்பில் அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் வேறு வழியின்றி இந்த பட்டப் படிப்பை அறிமுகப் படுத்துவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.


இன்றைய காலக்கட்டத்தில் மருத்துவம் பொறியியல் போன்ற தொழில் கல்வி படித்தோர் படித்து முடித்ததும் குறுகிய காலங்களில் தாங்கள் கல்விக்காக முதலீடு செய்த பணத்தினை எடுக்கும் பொருட்டு நல்லதொரு வேலையினை நகரத்திலோ வெளிநாட்டிலோ தேடிக் கொள்கின்றனரே ஒழிய யாரும் கிராமப் புறங்களில் சேவை செய்யும் நோக்கத்தில் முன்வருவதில்லை. அப்படியே வெகுசிலர் முன் வந்தாலும் கிராம மக்களிடமிருந்து அவர்களுக்கு சரியான வரவேற்பு கிடைப்பதில்லை. காரணம் கிராம மக்களிடம் உள்ள அறியாமை மற்றும் அவர்களின் மிகக் குறைந்த வருமானம்.
MBBS மருத்துவர்கள் சோதனை என்னும் பெயரில் வசூலிக்கும் (Diagnosing Charges) கட்டணங்கள் கிராமப் புற மக்களை குறைந்த செலவில் மருத்துவம் செய்யும் RHMS DHMS என பட்டங்கள் போட்டுக் கொண்டு மருத்துவம் செய்யும் சாலையோர மருத்துவர்களை(Quack doctors) நாட வைக்கிறது.

எனது இராமநாதபுர மாவட்ட கிராமப்புறங்களிலும் இது போன்ற போலி மருத்துவர்கள் (Quack doctors) நிறைய உண்டு. நோய்களுக்கு அவர்கள் அளிக்கும் வித்தியாசமான சிகிச்சை முறைகளை எந்த வித விஞ்ஞானத்திலும் அடக்க முடியாது.


எலும்பு முறிவு ஏற்பட்டால் எம் மக்கள் செல்வது நுடங்கட்டி வலசை என்னும் ஊருக்குத்தான். இங்கு முட்டைப்பத்து என்னும் சிகிச்சை மிகப் பிரபலம். நோயாளியுடன் உதவியாள் ஒருவர் பத்து நாள் தங்கி சிகிச்சை பெற கட்டணம் வெறும் ஆயிரம் மட்டுமே. இதையே நகரில் உள்ள எலும்பு முறிவு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தால் இரத்த சோதனை யூரின் சோதனை,ECG, X ray , Scan மற்றும் அறைவாடகை மருந்து என குறைந்தது இருபதாயிரம் வேண்டும்.நாட்பட்ட வயிற்று வலிக்கு மக்கள் செல்வது முதுகுளத்தூருக்கு. இங்குள்ள வைத்தியர் தன்னிடம் உள்ள ஒரு நீண்ட குழாய் ஒன்றை தன் வாயில் வைத்து மறு முனையை நோயாளியின் வாயில் வைத்து உறிஞ்சுகிறார். உடன் ஒரு கருப்பு நிறத்தில் ஒரு திடப் பொருளை எடுத்துக் காட்டி "இதுதான் உன் வயிற்றுக் கோளாறுக்குக் காரணம் இனி எந்த பயமுமில்லை" என வைத்தியம் செய்கிறார். இந்த வைத்தியத்திற்கு பெயர் மாந்தம் எடுப்பது.இதற்கான கட்டணம் வெறும் 100 ரூபாய் மட்டுமே. உண்மையில் அந்த திடப் பொருள் நோயாளி வயிற்றில் இருந்ததா அல்லது வைத்தியரின் வாயில் இருந்ததா என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம்.இதே முதுகுளத்தூரில் இன்னும் ஒரு வைத்தியம் உள்ளது. அது மஞ்சள் காமாலைக்கானது. பொதுவாக கிராமங்களில் மஞ்சள் காமாலை வந்தால் கீழாநெல்லி சாறினை கொடுத்து சரிசெய்யும் வைத்தியர்களை நாடுவதுண்டு. கீழக்கரை இலட்சுமிபுரம் உச்சிப்புளி ரெயில்வே கேட் காரைக்குடி போன்ற இடங்களில் இந்த வகை வைத்தியம் மிகப் பிரபலம். ஆனால் முதுகுளத்தூர் வைத்தியம் இதற்கு மாறுபட்டது. நோயாளி உள் மருந்து உட்கொள்ள தேவையில்லை. நோயாளி வைத்தியரை நேரடியாகப் பார்க்கவும் தேவையில்லை. ஒருவகையான் வேர் ஒன்றை மருத்துவர் தருகிறார். அதை நோயாளிக்கு வேண்டிய நபர் யாரவது வாங்கி வந்து நோயாளியின் கையிலோ அல்லது கழுத்திலோ கட்டி விட்டால் போதும் மஞ்சள் காமாலை குணமாகி விடுகிறதாம்.எங்கள் ஊர் கீழக்கரையிலும் ஒரு வினோத வைத்தியர் உண்டு அவர் பெயர் டிஸ்கோ ஆலிம்சா. டிஸ்கோ ஆடி குணமாக்குவதில்லை இவர் வியாதிகளை. மாறாக ஒரு குவளை தண்ணீரை மந்திரித்து நோயாளியின் முகத்திலும் தலையிலும் தெளிக்கிறார். இதற்கு இவர் வசூலிப்பது வெறும் முப்பது ரூபாய் மட்டுமே. வெள்ளி செவ்வாய் கிழமைகளில் இங்கு கூட்டம் "எமைக்காத கூட்டம்" என்பார்களே அப்படி ஒரு கூட்டம்.இதெற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் ஒரு வைத்தியம். அது மாவட்ட எல்லையான பார்த்திபனூரில். இங்குள்ள சுற்றுப் புற கிராம மக்கள் முதுகு மற்றும் கழுத்து வலி வந்தால் அனுகுவது ஒரு இஸ்லாமிய முதியவரை. நோயாளி அவரது வீட்டுக்கு இரண்டு சிறிய கூழாங்கற்களை எடுத்துச் செல்ல வேண்டும். வீட்டின் முன் நின்று வைத்தியரை அழைக்க வேண்டும். அவர் வந்து "கற்களை கீழேப் போட்டுவிட்டு திரும்பிப் பாராமல் செல்லுங்கள்" என சொல்லுகிறார். அதன் படி செய்தால் முதுகு வலி மற்றும் கழுத்துவலி குணமாகிறது என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை. இதற்கு வைத்தியர் கட்டணம் ஏதும் வசூலிப்பதில்லை.இதெல்லாம் போக "நோய்க்கும் பார் பேய்க்கும் பார்" என்னும் பழமொழி ஒன்று கிராமப் புறங்களில் பிரசித்தம். அதன்படி நோய்க்கு இதுபோல் போலி வைத்தியர்களிடம் வைத்தியம் செய்து கொண்டிருக்கும் போதே கோடாங்கி, குறிசொல்லி,துன்னூறு(திருநீறு)பொடுபவர்,கப்பலோடி முனி, ஒத்தைப்பனை முனி, முக்கு முனி, ஆலிம்சா, தர்கா என பல்வேறு நபர்களையும் துணைக்கழைப்பதுண்டு.இதெற்கெல்லாம் மூலகாரணம் நகரங்களில் உள்ள மருத்துவமனைகள் வசூலிக்கும் கட்டணங்கள் ஏழை மக்களுக்கு எட்டாக் கனியாக இருப்பதுதான்.காய்ச்சலோ அல்லது தலைவலியோ என வரும் நோயாளிகளிடம் நகர மருத்துவர்கள் தங்களிடம் உள்ள அதி நவீன கருவிகளுக்கு வருமானம் வரும் வகையில் இரத்த சோதனை, சிறுநீர் சோதனை, X RAY , ECG, SCAN, ENDOSCOPY என கறக்கத் தவறுவதில்லை.

சிக்கலான மருத்துவத்திற்கு இவற்றைப் பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால் சாதாரன காய்ச்சல் தலைவலி அஜீரனக் கோளாறுகளுக்குக் கூட இந்த சோதனைகளை பயன்படுத்துவதால் கிராமப் புற மக்களுக்கு நகர மருத்துவங்கள் நரக மருத்துவங்களாகி விடுகிறது. ஒரு முறை சென்று சூடு கண்ட பூனைகளாகி விட்ட யாரும் வியாதி வந்தால் நகர மருத்துவர்களை நாடுவதில்லை.

அரசு மருத்துவமனைகளின் அவலங்களும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.ஊழியர்களின் அலட்சியப்போக்கும் அரசு மருத்துவ மனைகளின் நீண்ட வரிசைகளும் கிராமப்புற மக்களை இது போல் முறையற்ற போலி வைத்தியம் செய்பவர்களிடம் செல்ல வைக்கிறது.

எனவே வருமானம் குறைந்த கிராமப் புற மக்களுக்கு BRMS படித்த மருத்துவர்கள் பணியிலமர்த்தப்பட்டால் போலி மருத்துவர்களிடமிருந்து விடுதலையும் அதே நேரத்தில் பாகுபாடற்ற தரமான் சிகிச்சையும் கிடைக்கும். கிராமப் புற மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இம் மருத்துவப் படிப்பின் பாடத்திட்டம் அமைய வேண்டும். அதே போல் இவர்களை பணியிலமர்த்தும் கிராமப் புறங்களில் குறைந்த பட்சம் இரத்த சிறுநீர் பரிசோதனைகள் இலவசமாக மக்களுக்கு கிடைக்க அரசு முன் வர வேண்டும். அவ்வாறு செய்யும் பட்சத்தில் இம் மருத்துவர்களுக்கு அமோக வரவேற்பு கிராம மக்களிடமிருந்து கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.

29 கருத்துகள்:

அண்ணாமலையான் சொன்னது…

நிச்சயம்...

Starjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…

நிச்சயமா வரவேற்போம் ...

நிலாமதி சொன்னது…

பயனுள்ள தகவல்.

புருனோ Bruno சொன்னது…

//MBBS படித்து முடித்த மருத்துவர்கள் ஓராண்டு கிராமப்புறங்களில் கட்டாயமாக சேவை செய்ய வேண்டும் என முன்னாள் நடுவன் அரசு சுகாதாரத் துறை அமைச்சர் மருத்துவர் அன்புமனி அறிவித்த போது மருத்துவர்கள் தரப்பில் அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் //

எதிர்ப்பு கிராமத்தில் பணிபுரிவதற்கு இல்லை

எதிர்ப்பு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு

விபரங்கள் இந்த சுட்டியில் உள்ளன
http://www.payanangal.in/2008/04/150.html

படித்து பார்த்து சந்தேகம் இருந்தால் கேட்கவும்

தயவு செய்து பொய்களை பரப்பாதீர்கள்

புருனோ Bruno சொன்னது…

//இன்றைய காலக்கட்டத்தில் மருத்துவம் பொறியியல் போன்ற தொழில் கல்வி படித்தோர் படித்து முடித்ததும் குறுகிய காலங்களில் தாங்கள் கல்விக்காக முதலீடு செய்த பணத்தினை எடுக்கும் பொருட்டு நல்லதொரு வேலையினை நகரத்திலோ வெளிநாட்டிலோ தேடிக் கொள்கின்றனரே ஒழிய யாரும் கிராமப் புறங்களில் சேவை செய்யும் நோக்கத்தில் முன்வருவதில்லை//

ஆதாரமில்லாத உண்மைக்கு புறம்பான தகவல்

புருனோ Bruno சொன்னது…

/இதெற்கெல்லாம் மூலகாரணம் நகரங்களில் உள்ள மருத்துவமனைகள் வசூலிக்கும் கட்டணங்கள் ஏழை மக்களுக்கு எட்டாக் கனியாக இருப்பதுதான்.//


ஏன் சார்

நீங்கள் குறிப்பிடுபவர்கள் எல்லாம் 21 நூற்றாண்டில் தான் புதிதாக வந்தார்களா
அல்லது பல நூற்றாண்டாக இருக்கிறார்களா

புருனோ Bruno சொன்னது…

//இதெற்கெல்லாம் மூலகாரணம் நகரங்களில் உள்ள மருத்துவமனைகள் வசூலிக்கும் கட்டணங்கள் ஏழை மக்களுக்கு எட்டாக் கனியாக இருப்பதுதான்.//

ஆடுமாடுகளுக்கு வைத்தியம் பார்க்கும் மருத்துவரே ஐந்து வருடம் படிக்க வேண்டியுள்ளது

கிராம மக்களை அதை விட கேவலப்படுத்துவதை வரவேற்கும் உங்களை பார்த்து அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை

புருனோ Bruno சொன்னது…

மூன்று வருடம் BSc Nursing படித்த ஏகப்பட்டவர்கள் nurseகள் இருக்கிறார்கள்

அவர்களை பணியில் அமர்த்தலாமே

ஏன் புது படிப்பு என்ற கேள்விக்கு உங்களிடம் விடை உள்ளதா

புருனோ Bruno சொன்னது…

நகர மக்களுக்கு முழு டாக்டர் கிராம மக்களுக்கு அரை டாக்டர் என்ற மாற்றந்தாய் திட்டத்தை நீங்கள் வரவேற்கும் அளவு உங்களுக்கு கிராம மக்கள் மேல் என்ன விரோதம்

புருனோ Bruno சொன்னது…

//ஆனால் சாதாரன காய்ச்சல் தலைவலி அஜீரனக் கோளாறுகளுக்குக் கூட இந்த சோதனைகளை பயன்படுத்துவதால் கிராமப் புற மக்களுக்கு நகர மருத்துவங்கள் நரக மருத்துவங்களாகி விடுகிறது. //
நுகர்வோர் நீதிமன்றங்களினால் தான் சோதனைகள் எடுக்க வேண்டியுள்ளது

புருனோ Bruno சொன்னது…

நகர மக்களுக்கு வைத்தியம் பார்க்க ஆறு வருடம் படிக்க வேண்டும்

ஆடு மாடுகளுக்கு வைத்தியம் பார்க்க ஐந்து வருடம்

கிராம மக்களுக்கு என்றால் மூன்று வருடம் போதுமா

என்ன கொடுமை சார்

புருனோ Bruno சொன்னது…

நகரத்தில் செவிலியர் வேலைக்கும் தேவைப்படும் மூன்று வருட படிப்பை கிராமத்தில் டாக்டர் வேலைக்கு போதுமென்று கூறுவது எவ்வளவு பெரிய அக்கிரமம்

--

கிராம மக்களை இதை விட கேவலப்படுத்த முடியாது

துபாய் ராஜா சொன்னது…

நல்லதொரு கருத்து.அமலுக்கு வரும்போதுதான் நடைமுறை சிக்கல்களை அறியமுடியும்.

வழக்கமாக அரசு மருத்துவமனை கல்லூரிகளில் இடம் கிடைக்காதவர்கள் தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 லட்சம் வரை நன்கொடையாக கொடுத்து சேர்ந்து விடுகிறார்கள். ஐந்தாண்டு படிப்பு,மேல்படிப்பு என ஆகும் சில,பல கோடிகள் செலவையெல்லாம் கிராமப்புறங்களில் பணி செய்து மீட்க முடியுமா என்பதும் ஒரு சாரார் கருத்து.

நீங்கள் குறிப்பிட்டுள்ள முட்டைப்பத்து,வாயில் குழாய் வைத்து உறிஞ்சுதல்,தண்ணீர் எறிதல் போன்றவை தற்போதும் தென்மாவட்ட கிராமங்கள் அனைத்திலுமே பெரும்பாலும் நடைமுறையில் உள்ளன.

ஜ்யோவ்ராம் சுந்தர் சொன்னது…

மருத்துவப் படிப்பில் ரூரல் என்ன அர்பன் என்ன? இந்தத் திட்டம் ஆபத்தானது எனத் தோன்றுகிறது.

புருனோ Bruno சொன்னது…

//வழக்கமாக அரசு மருத்துவமனை கல்லூரிகளில் இடம் கிடைக்காதவர்கள் தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 லட்சம் வரை நன்கொடையாக கொடுத்து சேர்ந்து விடுகிறார்கள். ஐந்தாண்டு படிப்பு,மேல்படிப்பு என ஆகும் சில,பல கோடிகள் செலவையெல்லாம் கிராமப்புறங்களில் பணி செய்து மீட்க முடியுமா என்பதும் ஒரு சாரார் கருத்து.//

அது சரி

தனியார் கல்லூரிகளில் படிக்கும் அரை டாக்டர்கள் கிராமத்தில் இருப்பார்கள் என்று எதை வைத்து கூறுகிறீர்கள்

என் கேள்விகளுக்கு விடையளிக்கலாமே

புருனோ Bruno சொன்னது…

// இதையே நகரில் உள்ள எலும்பு முறிவு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தால் இரத்த சோதனை யூரின் சோதனை,ECG, X ray , Scan மற்றும் அறைவாடகை மருந்து என குறைந்தது இருபதாயிரம் வேண்டும்.//

இது போன்றவர்களிடம் கட்டு போட்டு அதன் பிறகு காலை இழந்தவர்களின் சோகக்கதை உங்களுக்கு தெரியாதா

புருனோ Bruno சொன்னது…

//நல்லதொரு கருத்து.//

நகரத்தில் இருப்பவர்களுக்கு வேறு தரத்திலும், கிராமத்திலும் இருப்பவர்க்ளுக்கு வேறு தரத்திலும் சிகிச்சை அளிப்பது நல்ல கருத்தா ???

என்ன கொடுமை சார் இது

--

ஆடு மாடுகளுக்கு வைத்தியம் பார்க்கும் தரத்தை விட கிராம மக்களுக்கு தரம் குறைவு என்ற பின்னரும் இது நல்ல கருத்து என்று எப்படி உங்களால் கூற முடிகிறது

வருத்தமாக இருக்கிறது

துபாய் ராஜா சொன்னது…

//வருமானம் குறைந்த கிராமப் புற மக்களுக்கு BRMS படித்த மருத்துவர்கள் பணியிலமர்த்தப்பட்டால் போலி மருத்துவர்களிடமிருந்து விடுதலையும் அதே நேரத்தில் பாகுபாடற்ற தரமான் சிகிச்சையும் கிடைக்கும். கிராமப் புற மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இம் மருத்துவப் படிப்பின் பாடத்திட்டம் அமைய வேண்டும். அதே போல் இவர்களை பணியிலமர்த்தும் கிராமப் புறங்களில் குறைந்த பட்சம் இரத்த சிறுநீர் பரிசோதனைகள் இலவசமாக மக்களுக்கு கிடைக்க அரசு முன் வர வேண்டும். //


புரூனோ சார்,இதைத்தான் நல்ல கருத்து என்று குறிப்பிட்டேன்.

தனியார் மருத்துவகல்லூரிகள் வாங்கும் நன்கொடைகள் குறித்து நீங்கள் எதுவும் கருத்து சொல்லவில்லையே....

அரசு கொண்டுவரும் திட்டங்களின் குறை,நிறை கூறுவதுபோல் தனியார் மருத்துவ கல்லூரிகள் வாங்கும் நன்கொடைக்கும் எதிராக, ஏற்கனவே மருத்துவம் படித்த உங்களைப் போன்றவர்கள் போராட்டம் நடத்தி (நிச்சயம் இல்லாமல் செய்ய முடியாது) குறைக்கவாவது முயற்சி செய்தால் வருங்கால தலைமுறையாவது பலன்பெறுமே..

புதிய படிப்பு படித்தால் 'அரை டாக்டர்' என்று கூறுகிறீர்களே... 'முழு டாக்டர்' என்பவர் யார் என்பதையும் தெளிவுபடுத்தினால் நன்றாக இருக்கும். ஏன்னா பெரும்பான்மை டாக்டர்கள், நோய்கள் குறித்த ஏதாவது 'சிறப்பு படிப்பு' படித்து கொண்டேதான் இருக்கிறார்கள்.பல டாக்டர்களின் பெயருக்கு பின்னும் ஆங்கில எழுத்துக்கள் பலவற்றை பார்த்து,விசாரித்து தெரிந்து கொண்டது.

//இது போன்றவர்களிடம் கட்டு போட்டு அதன் பிறகு காலை இழந்தவர்களின் சோகக்கதை உங்களுக்கு தெரியாதா//

கதை என்ன சார் கதை...அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நடக்கும் அடுக்கடுக்கான அட்டூழியங்களை 'இந்தியன்','ரமணா' போன்ற பல படங்களில் அதிரடி இசையோடு சினிமாஸ்கோப் மற்றும் 70MM காட்சிகளாகவே பார்த்துட்டோம்.

புருனோ Bruno சொன்னது…

//வருமானம் குறைந்த கிராமப் புற மக்களுக்கு BRMS படித்த மருத்துவர்கள் பணியிலமர்த்தப்பட்டால் போலி மருத்துவர்களிடமிருந்து விடுதலையும் அதே நேரத்தில் பாகுபாடற்ற தரமான் சிகிச்சையும் கிடைக்கும்//

எப்படி

நகர மக்களுக்கு வைத்தியம் பார்க்க ஆறு வருடம் படிக்க வேண்டும்

ஆனால் கிராம மக்களுக்கு என்றால் மூன்று வருடம் போதும்

இது எவ்வளவு பெரிய பாகுபாடு
எவ்வளவு பெரிய தரக்குறைவு


இப்படி இருக்க இதை பார்த்து ஒருவர் ”பாகுபாடற்ற தரமான்” சிகிச்சை என்கிறார்.

அதை நீங்களும் நல்ல கருத்து என்கிறீர்கள்

கிராம மக்களை பாகுபாட்டிற்குள்ளாக்கி அவர்களுக்கு இரண்டாம், அல்ல ஆடு மாடுகளை விட தரக்குறைவான சிகிச்சை அளிக்கும் திட்டத்தை ”பாகுபாடற்ற தரமான்” என்பது நல்ல கருத்தா

என்ன கொடுமை சார் இது

//அரசு கொண்டுவரும் திட்டங்களின் குறை,நிறை கூறுவதுபோல் தனியார் மருத்துவ கல்லூரிகள் வாங்கும் நன்கொடைக்கும் எதிராக, ஏற்கனவே மருத்துவம் படித்த உங்களைப் போன்றவர்கள் போராட்டம் நடத்தி (நிச்சயம் இல்லாமல் செய்ய முடியாது) குறைக்கவாவது முயற்சி செய்தால் வருங்கால தலைமுறையாவது பலன்பெறுமே..
///

இதுவரை தனியார் கல்லூரிகளுக்கு எதிராக போராடியது மருத்துவ மாணவர்கள் தான்

மருத்துவ மாணவர்கள் மட்டுமே

என்ற உண்மை உங்களுக்கு தெரியுமா....

நீங்கள் போராடியிருக்கிறீர்களா :) :) :)

//புதிய படிப்பு படித்தால் 'அரை டாக்டர்' என்று கூறுகிறீர்களே... //

இது புதிய படிப்பு மட்டும் அல்ல
இது பாதி படிப்பு

இளங்களை மருத்துவம் டாக்டர் - 6 வருடம்
ஆடு மாடு வைத்தியம் பார்க்கும் வெட்டினரி டாக்டர் - 5 வருடம்
நர்சிங் - செவிலியர் - 3 வருடம்

கிராம மக்கள் என்றால் - 3 வருடம்

--

//'முழு டாக்டர்' என்பவர் யார் என்பதையும் தெளிவுபடுத்தினால் நன்றாக இருக்கும்.//

எத்தனை முறை எழுதிவிட்டேன். உங்கள் கணினித்திரை பாதி எழுத்துக்களை காட்டவில்லையா. :) :)

MBBS. மருத்துவ இளங்கலை படிப்பது தான் முழு டாக்டர்

// ஏன்னா பெரும்பான்மை டாக்டர்கள், நோய்கள் குறித்த ஏதாவது 'சிறப்பு படிப்பு' படித்து கொண்டேதான் இருக்கிறார்கள்.//

அது சிறப்பு படிப்பு : இது குறித்த விபரங்கள்
விபரங்கள் இந்த சுட்டியில் உள்ளன
http://www.payanangal.in/2008/04/150.html
இந்த சுட்டியையும் நான் ஏற்கனவே தந்து விட்டேன்
முழு விபரங்களும் உள்ளன

//பல டாக்டர்களின் பெயருக்கு பின்னும் ஆங்கில எழுத்துக்கள் பலவற்றை பார்த்து,விசாரித்து தெரிந்து கொண்டது.//

நான் அளித்த சுட்டியில் ஐந்து கட்டுரைகள் கொண்ட இடுகைத்தொடர் உள்ளது

ஒரு முறை வாசித்தால தெளிவு பெறலாம்.

மேற்கொண்டு சந்தேகம் என்றால் விளக்கத்தயார்

//கதை என்ன சார் கதை...அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நடக்கும் அடுக்கடுக்கான அட்டூழியங்களை 'இந்தியன்','ரமணா' போன்ற பல படங்களில் அதிரடி இசையோடு சினிமாஸ்கோப் மற்றும் 70MM காட்சிகளாகவே பார்த்துட்டோம்.//
சார் அது சினிமா

நான் சொன்னது போலி டாக்டர்களிடம் சென்று காலை இழந்தவர்களின் நிஜக்கதை

புருனோ Bruno சொன்னது…

கிராமப்புறங்கள் சாலை போடுவதற்கு ஒருவருடம் படித்த பொறியாளர் போதும் என்று யாராவது சொன்னால் உங்கள் கருத்து என்ன

கிராமப்புறங்களில் மின் விநியோகத்தை செயல்படுத்த ஒரு வருடம் படித்த பொறியாளர் போது என்றால் உங்கள் கருத்து என்ன

அது சரி

புருனோ Bruno சொன்னது…

//தனியார் மருத்துவகல்லூரிகள் வாங்கும் நன்கொடைகள் குறித்து நீங்கள் எதுவும் கருத்து சொல்லவில்லையே....//

தனியார் கல்லூரிகள் அனைத்து படிப்புகளுக்கும் நன்கொடை வாங்குகின்றன

நாளைக்கு இந்த அரை டாக்டர் படிப்பிற்கும் நன்கொடை வாங்கத்தான் செய்வார்கள்

புருனோ Bruno சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
புருனோ Bruno சொன்னது…

//அரசு கொண்டுவரும் திட்டங்களின் குறை,நிறை கூறுவதுபோல் தனியார் மருத்துவ கல்லூரிகள் வாங்கும் நன்கொடைக்கும் எதிராக, ஏற்கனவே மருத்துவம் படித்த உங்களைப் போன்றவர்கள் போராட்டம் நடத்தி (நிச்சயம் இல்லாமல் செய்ய முடியாது) குறைக்கவாவது முயற்சி செய்தால் வருங்கால தலைமுறையாவது பலன்பெறுமே..//

http://www.hinduonnet.com/fline/fl2011/stories/20030606006713300.htm

A LARGE section of the medical fraternity in Tamil Nadu, including principally about 12,000 medical students, is pitted against the State government over the issue of the virtual privatisation of medical education. The students, who initiated the struggle, have made another important demand: the scrapping of a quota of seats for non-resident Indians (NRIs) in government medical colleges, to which admissions are made on the basis of a higher payment structure. The students' agitation, which entered the 27th day on May 19, has the backing of the Tamil Nadu Government Doctors' Association. Doctors in government service pursuing their postgraduate education have joined the protest.

புருனோ Bruno சொன்னது…

//புதிய படிப்பு படித்தால் 'அரை டாக்டர்' என்று கூறுகிறீர்களே... 'முழு டாக்டர்' என்பவர் யார் என்பதையும் தெளிவுபடுத்தினால் நன்றாக இருக்கும். ஏன்னா பெரும்பான்மை டாக்டர்கள், நோய்கள் குறித்த ஏதாவது 'சிறப்பு படிப்பு' படித்து கொண்டேதான் இருக்கிறார்கள்.பல டாக்டர்களின் பெயருக்கு பின்னும் ஆங்கில எழுத்துக்கள் பலவற்றை பார்த்து,விசாரித்து தெரிந்து கொண்டது.//

ஒரு நோய்க்கு மூன்று அடுக்கு வைத்தியம் உண்டு

மேலும் விபரங்களுக்கு ஒரு நோய்க்கு மூன்று அடுக்கு வைத்தியம் வாசிக்கவும்

புருனோ Bruno சொன்னது…

//அரசு மருத்துவமனைகளின் அவலங்களும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.ஊழியர்களின் அலட்சியப்போக்கும் அரசு மருத்துவ மனைகளின் நீண்ட வரிசைகளும் கிராமப்புற மக்களை இது போல் முறையற்ற போலி வைத்தியம் செய்பவர்களிடம் செல்ல வைக்கிறது.//

நீங்கள் கடைசியாக சென்ற அரசு மருத்துவமனை எது
எந்த வருடம் என்று தெரிந்து கொள்ளலாமா

--

சில ஆரம்ப சுகாதார நிலையங்களின் தளங்களை பார்க்கவும்

தோகமலை ஆரம்ப சுகாதார நிலையம்
**
பெருங்கட்டூர் ஆரம்ப சுகாதார நிலையம்
**
அ.ஆ.சுகாதார நிலையம் அமரபூண்டி


--

ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிசேரியன் கூட நடைபெறுகிறது

http://ruraldoctors.blogspot.com/2008/12/blog-post.html

பத்திரிகை செய்தி 1 : மதுரை**
பத்திரிகை செய்தி 1 : திருச்சி


--

புருனோ Bruno சொன்னது…

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=16157


அரசின் மகப்பேறு நிதி உதவி வழங்க ரூ.500 லஞ்சம் வாங்கிய நர்ஸ் கைது
பிப்ரவரி 10,2010,00:00 IST

விழுப்புரம் : மகப்பேறு திட்டத்தின்படி நிதி வழங்க 500 ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம செவிலியர் கைது செய்யப்பட்டார்.


விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரத்தை அடுத்துள்ள சோழம்பட்டைச் சேர்ந்த மரியசெல்வம் மனைவி ஜெசிந்தாமேரி. கர்ப்பிணியாக இருந்த இவருக்கு, கடந்த 2008ம் ஆண்டு குழந்தை பிறந்தது. இவருக்கு, தமிழக அரசின் மகப்பேறு உதவித் திட்டத்தின் கீழ் 6,000 ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. சோழம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வரும் மாரியம்மாளிடம்(42), ஜெசிந்தாமேரியின் மகப்பேறு நிதியை வழங்க அவரது அண்ணன் ஆனந்தராஜ் கடந்த 6ம் தேதி நேரில் சென்று கேட்டார். ஆனந்தராஜிடம், மாரியம்மாள் 500 ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார். இது குறித்து ஆனந்தராஜ், விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரிடம் புகார் கொடுத்தார். இதன்படி நேற்று முற்பகல் 11.30 மணிக்கு மூரார்பாளையம் தெற்குத் தெருவில் பணியில் இருந்த செவிலியர் மாரியம்மாளிடம், ஆனந்தராஜ் லஞ்சமாக 500 ரூபாயை கொடுத்தார். அப்போது ரகசியமாக கண்காணித்துக் கொண்டிருந்த லஞ்ச ஒழிப்புத் துறை இன்ஸ்பெக்டர்கள் குப்புசாமி, வெங்கடேசன் தலைமையிலான போலீசார் லஞ்சம் வாங்கிய மாரியம்மாளை கையும், களவுமாக பிடித்தனர். மாரியம்மாளை கைது செய்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார், அவர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தங்கராசு நாகேந்திரன் சொன்னது…

நன்றி நண்பர் அண்ணாமலையான் அவர்களே,
நன்றி நிலாமதி அவர்களே,

நன்றி நண்பர் ஸ்டார்ஜன் அவர்களே
நன்றி நண்பர் துபாய்ராஜா அவர்களே

நன்றி டாக்டர் புருனோ அவர்களே தங்களது நீண்ட விளக்கங்களுக்கும் வருகைக்கும்

SUREஷ் (பழனியிலிருந்து) சொன்னது…

//எங்கள் ஊர் கீழக்கரையிலும் ஒரு வினோத வைத்தியர் உண்டு அவர் பெயர் டிஸ்கோ ஆலிம்சா. டிஸ்கோ ஆடி குணமாக்குவதில்லை இவர் வியாதிகளை. மாறாக ஒரு குவளை தண்ணீரை மந்திரித்து நோயாளியின் முகத்திலும் தலையிலும் தெளிக்கிறார். இதற்கு இவர் வசூலிப்பது வெறும் முப்பது ரூபாய் மட்டுமே. வெள்ளி செவ்வாய் கிழமைகளில் இங்கு கூட்டம் "எமைக்காத கூட்டம்" என்பார்களே அப்படி ஒரு கூட்டம்.//அவரிடம் ஒரு ஆயிரம் மாணவர்களை அனுப்பி பயிற்சி கொடுக்கச் சொல்லுங்கள். உலகம் முழுவதும் அனுப்பி நமது ஊரின் புகழை நிலை நிறுத்துவோம். மிகக் குறைந்த செலவில் சகலநோய்க்களுக்கும் நிவாரணம் .

இது போன்ற ஒரு படிப்பை, இது போன்ற ஒரு நிவாரணத்துக்காகத்தான் காத்துக் கொண்டு இருக்கிறோம்

SUREஷ் (பழனியிலிருந்து) சொன்னது…

//எனவே வருமானம் குறைந்த கிராமப் புற மக்களுக்கு BRMS படித்த மருத்துவர்கள் பணியிலமர்த்தப்பட்டால் போலி மருத்துவர்களிடமிருந்து விடுதலையும் அதே நேரத்தில் பாகுபாடற்ற தரமான் சிகிச்சையும் கிடைக்கும். //

இந்தப் படிப்பு படித்தவர்கள் கண்டிப்பாக கிராமங்களுக்கு வருவார்கள் என்பது என்ன உத்திரவாதம்?

இவர்களும் நகரத்திற்கு அல்லது புறநகரத்தில் அமர்ந்து கொள்ள மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?

பிரச்சனை கிராமங்களுக்கு மருத்துவர்கள் செல்வதற்கு உள்ள தடையை நீக்குவது தானே தவிர இது போன்ற குழப்பங்கள் அல்ல..,


உயிரோடு விளையாடி....., ஒரு கிராமப் புற மருத்துவம்

கிராமப் புற மருத்துவம் பாகம் 2

மூன்றரை வருடத்திய மருத்துவப் படிப்பு.

கிராமங்களுக்குச் செல்ல மருத்துவர்களுக்கு என்ன பயம்...

மருத்துவருக்கு வேட்டு வைப்பது எப்படி?

கருத்துரையிடுக

ஏதாவது சொல்லிட்டு போங்க