புதன், 3 மார்ச், 2010

ஸ்....அப்பாடா ரொம்ப க(கு)ஸ்டமப்பா.....

கொஞ்ச நாட்களுக்கு முன்பு நம்ம ஆதிமூல கிருஷ்ணன் அண்ணன் தாமிராவா இருந்தபோது ஒரு கோட்டர் அடிக்க எவ்வளவு சிரமப்பட்டார் என்பதை மிக சிறப்பாக எழுதியிருந்தார்.அப்பக்கூட நான் நினச்சதுண்டு "என்னடா மனுசன் ரொம்ப மிகைப்படுத்தி எழுதுறாரோ"ன்னு ஆனா அது எவ்வளவு உண்மைன்னு அனுபவிச்ச பின்னாடிதான் நமக்கு புரியுது. இதோ அந்த அனுபவம்.

கீழக்கரையில மொத்தம் மூனு டாஸ்மாக் கடை. ஒன்னு புது பஸ்ஸ்டாண்டு பக்கமும் ஒன்னு பழய பஸ்ஸ்டாண்டுக்கு பக்கமும் மூனாவது இரண்டுக்கும் இடையிலும் இருக்குது. நம்ம எப்பவுமே சரக்கு வாங்க இந்த நடுக்கடைக்குத்தான் போவது வழக்கம். ஏன்னா இந்த கடைப் பகுதிதான் கொஞ்சம் இருட்டா இருக்கும். தெரிஞ்சவுங்க கண்ணுல படாம சரக்கு வாங்கலாம்.

தெரிஞ்சவங்க கண்ணுல படாம தண்ணியடிக்கிற யோக்கிய சிகாமனியா என்னை நினைச்சிடாதிங்க. இந்த தெரிஞ்சவுங்க டாஸ்மாக் பாரில் பழகித் தெரிஞ்சவுங்க. பய புள்ளைக பாத்தாங்கன்னா வந்தது நம்ம குவாட்டருக்கு ஆபத்து. "என்ன தம்பி ஆளையே காணோம்"ன்னு ஆரம்பிப்பாய்ங்க. அப்புறம் கூசாம "இருபது ரூபா இருந்தா கொடுங்க"ன்னு தலையை சொரிவாய்ங்க அதுக்கும் நம்ம மசியலன்னா "தம்பி ஒரு ரெண்டு அவுன்சாவது கொடுங்க"ன்னு மண்டைய பிய்க்க வைப்பாய்ங்க. இவய்ங்களுக்கு பயந்து பாட்டில டேபிள்ள வச்சுச் சரக்கு அடிக்காம இடிப்புல சொருகிகிட்டு அடிப்பது உண்டு.(கோட்டருக்கு ஒரு துளி குறைஞ்சாலும் நமக்கு ஆத்மதிருப்தி கிடைப்பதில்லை அதுனால சரக்க யாரோடும் பகிர்ந்து கொள்ள மனசு ஒப்புவதில்லை).

நம்ம ராசி எப்படின்னா எப்பவுமே கீழக்கரை பஸ் ஸ்டாண்டுல ராம்நாடு பஸ்ஸுக்கு நின்னா ஏர்வாடி தர்ஹா வண்டியா வரும். ஏர்வாடி போக வந்தோம்னா ராம்நாடு பஸ்ஸா வரும். அதே மாதிரி மூனு நாளைக்கு முன்னாடி தங்கமணி ஊர்ல இல்லாத நன்னாளில் எனக்கு தண்ணியடிக்க ஆசை வந்தது.

வழக்கம் போல நம்ம இருட்டுக் கடைக்கு தெரிஞ்சவுங்க கண்ணுல படாம வந்து பாத்தா கடை பூட்டிக் கிடக்கு. வாசல்ல உட்காந்துகிட்டு இருந்த பெருசுகிட்ட விபரம் கேட்டா அன்னைக்கு மீலாது நபியாம். விடுமுறையாம்.அடச்சேன்னு ஆசையை அடக்கிக்கிட்டு அடுத்த நாளும் அந்த கடைக்கு விசயம் செய்தேன். மணி சுமார் எட்டு இருக்கும் அந்நேரத்திலும் முத நாள் பேங்க் மூடியிருந்தா மறுநாள் ஒரு கூட்டம் வருமே அதே மாதிரி ஒரு கூட்டம் கடையை தேன்கூட்டை தேனிக்கள் சுத்தின மாதிரி கூடியிருந்தது.மெல்ல அதுக்குள் சக்கர வீயுகத்தை அபிமன்யு உடைச்ச மாதிரி உள்ளே புகுந்தேன்.

பாத்தா பயபுள்ளைக எல்லாம் ஒரு 62 கொடு 72 கொடு அப்படின்னே சரக்கு வாங்கிகிட்டு இருந்தாய்ங்க. என்னடா சரக்கு பேரை கேட்காம 62,72ன்னு கேட்குறாய்ங்களே நினைச்சுகிட்டு இருக்கும்போது கையிலிருந்த காசை டாஸ்மாக் விற்பனையாளர் பிடுங்கினார். "என்ன வேணும் 62ஆ 72ஆ?ன்னு ஒரு அதட்டல் வேறே. தொண்டையில் எச்சி விழுங்கிகிட்டே "ஒரு சீசர் கொடுங்க"ன்னேன்.

"இல்ல"ன்னு விற்பனையாளர் சொன்னதும் "அப்ப ஒரு கொரியர் கொடுங்க"ன்னேன். கூட்டத்தில இருந்த ஒருத்தன் "அட என்னய்யா நேரத்த வீனாக்கிகிட்டு சீக்கிரம் ஏதாவது 62ஐயோ 72ஐயோ வாங்கிட்டு இடத்த காலி பண்ணுவியா இப்பப் போயி சீசர் கோரியர்ன்னு பினாத்துரியே"ன்னு சவுண்டு விட்டான். உடனே விற்பனையாளர் "தம்பி ரம்மும் விஸ்கியும் தான் இருக்கு நீங்க ஒரு ஒன்பது ஒன்பதரைக்கு வந்திங்கன்னா நீங்க கேட்டது கிடைக்கும்"ன்னு வயித்துல பிராந்தியை வார்த்தார்.ரம்மை அடிச்சா மறுநாள் கழுத்தில வலிக்கும் மேலயும் அந்த வாடை நம்ம வாய்க்கே சமயத்துல பிடிப்பது இல்லை. விஸ்கியை அடிச்சா மறுநாள் தலை வலிக்கும் அதுனால் காத்திருந்தாவது பிராந்தி வாங்கி அடிப்போம்ன்னு அப்போதைக்கு வெளியில் வந்து விட்டேன்.

ஒன்பதரை மணிக்கு மறுபடியும் இருட்டுக் கடைக்கு படையெடுத்தேன். பாத்திங்கன்னா ஒரு லாரி நின்னுகிட்டு சரக்கை இறக்கிக்கிட்டு இருக்குது. வழக்கம் போலவே கொள்ளைக்கூட்டம். மறுபடியும் உள்ளே நுழைஞ்சு விற்பனையாளரை நெருங்கினா கையிலிருந்த காசை புடிங்கி நான் கேட்காமலயே ஒரு MC கோட்டரையும் சில்லரையும் கையில் திணிச்சார்.

பாருக்குள்ளே கூட்டம் இல்ல. எல்லா பயபுள்ளைகளும் பாரில் தண்ணியடிக்காது வீட்டுல போயிதான் அடிக்கும் போல. ஒரே ஒருத்தன் மட்டும் டேபிள்ளே தலையை வச்சு தூங்கிகிட்டு இருந்தான். கூட்டம் இல்லாததுனாலே நான் தைரியமா சரக்க டேபிள்ள வச்சு ஒரு கிளாசுல 90 ஊத்தி லிம்கா மிக்ஸ் பண்ணி வாயில வைக்கப் போணா எதுத்த மாதிரி எங்கூட ஸ்கூல்ல படிச்ச பசீரு. அவன் தான் அந்த பாருல தூங்கிகிட்டு இருந்தவன்னு எனக்கு லேட்டா புரிஞ்சுது. உடனே சுதாரிச்சிகிட்டு "பசீரு ரொம்ப நாளைக்கு அப்புறம் தண்ணியடிக்கிறேன் ஷேர் ஏதும் பண்ண முடியாது அதுனால எதுவும் கேட்காதே"ன்னு சொல்லிக்கிட்டு இருக்கும் போதே நான் சொன்னதை கொஞ்சம் கூட சட்டை செய்யாமல் பாட்டிலை கையில் எடுத்து ராவா குடிச்சிட்டு "அடேய் ரொம்ப நாளைக்கு அப்புறம் தண்ணியடிக்கிறே, கொஞ்சமா அடி"ன்னு கொஞ்சம் மொச்சைப் பருப்பை வாயில போட்டு போயிக்கிட்டே இருந்தான்.

மறுபடியும் சரக்கு வாங்க முடியாத நிலை. ஏன்னா பத்து மணிக்கு மேல ஆகி விட்டது.கடை மூடியாச்சு அடிச்ச 90 பசியைக் கிள்ள நாலு பரோட்டவ போடலாம்ன்னு எங்க ஊர்காரர் தவசியோட புரோட்டாக் கடைக்குப் போனேன்.

"என்ன தம்பி ஆச்சு ஏன் ஒரு மாதிரியா இருக்கிங்க"ன்னு தவசி அண்ணன் கேட்டார். நடந்தை எல்லாம் சொல்லி "அண்ணே புல்லா ஏறாம ஒரு மாதிரி ஏமாத்தமா இருக்குன்னே"னேன். தவசியண்ணன் கொஞ்சம் யோசிச்சு "தம்பி பக்கத்து பெட்டிக் கடையில ஒரு கோக் வாங்குங்க"ன்னார்."ஏண்ணே"ன்னு கேட்டதுக்கு "வாங்குங்க சொல்லுறேன்"ன்னு சொன்னார்.

கடையில ஒரு மூலையில் ஒரு பாதி குவாட்டர் ரம்மை எடுத்தார்."தம்பி இத அடிக்கிறிங்களா" ன்னு கேட்டார். ரம்மு நமக்கு ஒத்து வராதுன்னு வேதாந்தம் பேச என்னால் முடியவில்லை. எதக் கொடுத்தாலும் குடிக்கிற மனநிலையில் இருந்ததால் தலையாட்டினேன்.

தவசியண்ணன் சரக்கை ஒரு கிளாசுல ஊத்தி கொஞ்சம் கோக்கை மிக்ஸ் பண்ணி கொடுத்தார். மிச்ச கோக்கை அதே பாட்டில்ல ஊத்தி சரக்கு மாதிரி மறுபடியும் கடை மூலையில் வச்சிட்டார். "ஏன்னே இப்படி பண்ணுறிங்க"ன்னு கேட்டதுக்கு,"இது நம்ம ஊரு அண்ணமராசவுக்காக ரெகுலரா வாங்கி வைக்கிறது. ராம்நாடுல இருந்து பய வேலையை முடிச்சு வர பத்து மணிக்கு மேலாகும் என்பதால நான் எப்பவும் வாங்கி வைப்பேன்"ன்னார்.நான் உடன் ஆச்சர்யம் அடைந்து "என்னது அன்னமராசாவா அவன் மூடிய மோந்து பாத்தாலே கீழே விழுந்துடுவான் அவன் டெய்லி கட்டிங்க் அடிக்கிறானா?"ன்னேன், அதுக்கு தவசியண்ணன் சிரிச்சிக்கிட்டே" நீ சரக்கை குடி அப்புறம் வேடிக்கையை மட்டும் பாரு"ன்னு சொன்னாரு. நமக்கென்ன சரக்கு கிடைச்சாச்சுன்னு மறுபடியும் ஒரு 90 யைத்தாக்கிகிட்டு சாப்பிட ஆரம்பிக்கும் போது எங்க ஊரு அண்ணமராசா வந்தான் ராம்நாடுல இருந்து வேலையை முடிச்சுகிட்டு வர்றான் போல.

வந்தவன் உடனே பக்கத்துக் கடையில ஒரு கோக் வாங்கினான். தவசியிடம் ஜாடை காட்டினான். அவர் உடனே அந்த சரக்கு பாட்டிலை எடுத்துக் கொடுக்கவும் அண்ணமராசா இப்போது கோக்குக்கே கோக்கை மிக்ஸ் பண்ணிக் குடிக்க ஆரம்பிச்சான்.

ஒரு அரைமணி நேரம் கழிச்சு வீட்டுக்கு போகும் போது என்கூட வந்த அன்னமராசா சொன்னான் "அண்ணே ரம்மு மாதிரி சரக்கு எதுவும் இல்லன்னே, பாருங்க எனக்கு நல்லா போதை ஏறிக்கிட்டே இருக்கு"ன்னான். இருட்டுல நான் சிரிச்சது அவனுக்குத் தெரியாது.


3 கருத்துகள்:

பழமைபேசி சொன்னது…

அஃகஃகா!

தங்கராசு நாகேந்திரன் சொன்னது…

நன்றி பழமை பேசி அவர்களே
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

துபாய் ராஜா சொன்னது…

குவார்ட்டரடித்து வாழ்வாரே வாழ்வார் மற்றவரெலாம்
குப்புற அடித்துவிழுந்து தாழ்வார்.

கருத்துரையிடுக

ஏதாவது சொல்லிட்டு போங்க