சனி, 13 பிப்ரவரி, 2010

டுமீல் டுமீல் டுமீல்


ஒரு அரைச்செங்கலை எடுத்து மதுரையில் ஏதாவது ஒரு தெருவில் விட்டெறிந்தால் அது கண்டிப்பாக ஒரு பாண்டியின் தலையில்தான் விழும். அந்தளவுக்கு பாண்டிகளின் எண்ணிக்கை பாண்டி(யன்) தலைநகர் மதுரையில் அதிகம்.
ஒரு முக்கிலோ அல்லது ஒரு சந்திலோ பத்துப்பேர் நின்று பேசிக்கொண்டிருந்தால் அதில் எட்டுப்பேர் பாண்டியாகத்தான் இருப்பார்கள்.
சண்முகப்பாண்டி, சங்கரப்பாண்டி, சுந்தரப்பாண்டி, அழகுபாண்டி,வீரப்பாண்டி,செல்வப்பாண்டி,
முருகுப்பாண்டி,முத்துப்பாண்டி,வேல்ப்பாண்டி என பெயருக்கு முன் ஏதாவது ஒரு prefix இருந்தாலும் இவர்களையும் மக்கள் அழைப்பது என்னவோ பாண்டி என்றுதான்.
எனவே பெயர்க் குழப்பம் வரக்கூடாது என்பதற்காக இந்த பாண்டிகளை நெட்டைப்பாண்டி, குட்டைப்பாண்டி, கட்டைப்பாண்டி,வெள்ளைப்பாண்டி,கருத்தப்பாண்டி என தோற்ற ஆகு பெயர்களாலும் முனிச்சாலைபாண்டி,ஒத்தக்கடைப்பாண்டி,அனுப்பானடிப்பாண்டி என இட ஆகு பெயர்களாலும் பழக்கடைப்பாண்டி,உரக்கடைபாண்டி, கறிக்கடைப்பாண்டி என தொழில் ஆகு பெயர்களாலும் மக்கள் அழைப்பதுண்டு.
அந்த வகையில் வித்தியாசமானவர்தான் இந்தப் பதிவின் நாயகன் டுமீல் பாண்டி.
துப்பாக்கியில் இருந்து தோட்டாக்கள் வருவதுபோல் இவர் வாயிலிருந்து வரும் ஒவ்வோரு வார்த்தைகளும் எதிராளியைத் தாக்கி மயக்கம் அடையச் செய்யும். மறுமுறை இவரைக் காணும்போது ஒவ்வொருவருக்கும் குலை நடுக்கம் ஏற்படச்செய்யும் வகையில் இவர் சு(வி)டும் டுமீல்கள் நிலைகுலையச் செய்யும் திறன் கொண்டவை.
மாதிரிக்கு சில டுமீல்கள். படிப்பவர்களின் வசதிக்காக டுமீல் பாண்டியின் டுமீல்கள் கருப்பு வண்ணத்திலும் உண்மை நிலவரம் நீல வண்ணத்தில் அடைப்புக் குறியிலும் தரப்பட்டுள்ளன.
டுமீல் 1. டுமீல் பாண்டி ஆறாம் வகுப்பு படிக்கும்போது பள்ளியில் கொடைக்கானலுக்கு சுற்றுல்லா சென்றார்களாம். அங்கு இவரை ஒரு மலைப்பாம்பு கவ்வி விழுங்க முயற்சி செய்ததாம். டுமீல் பாண்டி தன்னிடமிருந்த காம்பஸ் உதவியுடன் பாம்பை கிழித்துக் கொண்றாராம். (சுற்றுலாவில் செத்த பாம்பு ஒன்றினை வழியில் பார்த்த டுமீல் தன் டிரவுசரில் இருந்த சேப்டி பின்னால் குத்தியிருக்கிறார்.)
டுமீல் 2. டுமீல் பாண்டி கோயமுத்தூரில் ஒரு கட்டிட காண்ட் ராக்ட் எடுத்து வேலை பார்த்திருக்கிறார். அந்த கட்டிடத்தின் மதிப்பு ஒரு கோடியாம். மேலும் இதில் சிறப்பம்சம் என்ன வெனில் அந்த ஒரு கோடி ரூபாய் கட்டிடம் ஒரு நாய்க்காக கட்டப்பட்டதாம். (ஒரு கோடி ரூபாய் கட்டிடத்தில் நாய்க்காக ஒரு பத்தாயிரம் ரூபாய் மதிப்பீட்டில் மரத்திலான் செட்டு ஒன்று மட்டுமே டுமீல் பாண்டி பார்த்த வேலை)
டுமீல் 3. டுமீல் பாண்டி வேலை பார்த்த ஒரு கட்டிடத்தில் இருந்து சித்தாள் ஒருவர் தவறி விழுந்து விட்டாராம். பல்வேறு மருத்துவர்கள் கைவிரித்த பின்னர் டுமீல் அவருக்கு வாய் வழியே ஒல்டு மங்க் ரம்மை குடிக்கக் கொடுத்திருக்கிறார். சித்தாள் பிழைத்துக் கொண்டாராம்.(உண்மையில் பிராந்தி விஸ்கி போன்றவையின் விலை ஏற்றத்தால் பாதிக்கப்பட்ட டுமீல் தற்போது அடிப்பது ஓல்ட் மங்க் மட்டுமே. எனவே ஓல்ட் மங்கின் பெருமை கூறவே இந்த டுமீல்).
டுமீல் 4. முன் சொன்னது போல் மருத்துவர்களால் கைவிடப்பட்ட ஒரு தீராத நோயை தீர்த்த அனுபவம் டுமீலுக்கு உண்டு. அது என்னவென்றால் ஒரு நோயாளி நீண்ட நாள்கள் தலையில் அரிவாள் வெட்டுப்பட்டக் காயத்தில் புழுக்கள் வந்து அவதிப்பட்டு வந்தாராம். எந்த மருத்துவராலும் அந்த புழுக்களை அகற்ற முடியவில்லையாம். டுமீல் பாண்டி ஆட்டுக்கறியின் தொடைக்கறியை 200 கிராம் வாங்கிவரச் செய்து அதனை புழுக்கள் உள்ள காயத்தில் வாழை மட்டை வைத்துக் கட்டி விட்டாராம். ஒரு மணி நேரத்தில் புழுக்கள் எல்லாம் கறியில் ஏறி விட இவர் நோயாளியை குணப்படுத்தினாராம் (டுமீல் கறிக்கடையில் தலைக்கறி வாங்க சென்று இருந்திருக்கிறார். அங்கு ஆட்டின் தலையில் அடம் பிடித்துக் கொண்டு வராமல் இருக்கும் புழுக்களை அகற்றும் போது பார்த்திருக்கிறார்.)
டுமீல் 5. டுமீலின் அண்ணன் மகளுக்கு திருமணம் நிச்சயமாகி இருந்திருக்கிறது.மாப்பிள்ளை வீட்டில் 100 பவுண் நகை கேட்டார்களாம். ஆனால் கையில் கொஞ்சம் கூட காசு இல்லை. டுமீலின் அண்ணன் மனைவி மிகவும் கவலை அடைந்திருக்கிறார். ஆனால் கவலையே படாத டுமீலும் டுமீலின் அண்ணனும் (பெரிய டுமீல்) தங்களிடம் பரம்பரை பரம்பரையாக இருந்து வந்த குவைகளின் ஒரு பகுதியை (பொற்கொல்லர் தங்கம் உருக்கப் பயன்படுத்தும் ஒரு மண்ணால் ஆன குவளை) உடைத்து உருக்கினராம். 100 பவுனுக்கு மேலேயே தங்கம் கிடைக்க அதை வைத்து ஜாம் ஜாம் என கல்யாணத்தினை நடத்தினராம். (உண்மையில் பெண் பிடித்துப் போன மாப்பிள்ளை வீட்டார் பத்துப் பவுனுக்குமேல் பரிசம் போட்டு தங்கள் செலவிலேயே திருமணத்தினை நடத்தினராம்).
டுமீல் பாண்டியின் டுமீல்களை கையும் களவுமாக பிடித்து அம்பலப் படுத்தினாலும் டுமீல் தன் டுமீல்களை விடுவதில்லை. இந்தப் பதிவுகூட டுமீலின் ஒப்புதலின் பேரிலேயே வெளியிடப்படுகிறது.

3 கருத்துகள்:

சரவணன் சொன்னது…

//டுமீல் பாண்டியின் டுமீல்களை கையும் களவுமாக பிடித்து அம்பலப் படுத்தினாலும் டுமீல் தன் டுமீல்களை விடுவதில்லை. இந்தப் பதிவுகூட டுமீலின் ஒப்புதலின் பேரிலேயே வெளியிடப்படுகிறது.//

இதே ஒரு டுமீல்தானே எனச் சொல்லும் உங்கள் தோழமை டுமீல்.

‍‍சரவணன்
சார்லட்.

சரவணகுமரன் சொன்னது…

ஹா ஹா ஹா

நல்ல தமாசு...

லோகு சொன்னது…

இப்படித்தான் ஒரு தடவ .....

சரி வேண்டாம், விடுங்க. உண்மைய சொன்னா யார் கேக்கறீங்க..

கருத்துரையிடுக

ஏதாவது சொல்லிட்டு போங்க