சமூகம்-கோபம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமூகம்-கோபம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 24 நவம்பர், 2009

தமிழக சாலை அவலங்கள்





மேலே உள்ள படங்கள் உழுது போட்ட வயலோ அல்லது ஏரி கண்மாய் நிலங்களோ அல்ல. இவை தமிழகத்தின் பிரதான சாலைகள்.
50 நாட்கள் தாமதமாக ஆரம்பித்த பருவமழை 5 நாட்கள் கூட சரியாக பெய்யவில்லை. ஆனால் இருந்த சாலைகள் எல்லாம் இது போல் பயனற்றதாக பல நகரங்களில் ஆகிவிட்டது.
குறிப்பாக இராமநாதபுரம் நகரத்தில் வசிப்பவர்களை கேட்டால் தெரியும். கிட்டத்தட்ட நகரில் உள்ள அனைத்து சாலைகளும் சிதிலமடைந்து வண்டிகளின் பயன்பாடு மட்டுமன்றி மக்கள் நடக்கக் கூட லாயக்கற்றதாகி விட்டது. குறிப்பாக பேருந்து நிலையத்தில் இருந்து கேணிக்கரை செல்லும் வழி, சின்னக்கடைத்தெரு செல்லும் வழி, குமரயா கோவில் சாலை, அக்ரஹாரம் சாலை, தினகர் அரன்மனை சாலை என கிட்டத்தட்ட நகரின் பிரதான சாலைகள் அனைத்தும் குளம் போல தண்ணீர் தேங்கி மக்கள் வீதியில் நடமாடவே முடியாத அளவுக்கு மிக மிக மோசமாக உள்ளது. தேங்கிய தண்ணீரில் கொசுக்கள் பரவி வியாதிகளும் பரவ ஆரம்பித்து விட்டது.
கடந்த மூண்று தினங்களாக இராமநாதபுரம் மருத்துவனைகள் அனைத்தும் வயிற்றுப்போக்கு வாந்தி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளால் நிரம்பி வழிகின்றன.இவை அனைத்தும் சேதமடைந்த சாலைகளில் தேங்கி நின்ற நீரினால் வந்ததுதான் என சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
தமிழக சாலைகள் அனைத்தும் ஒரு மழைக்குக்கூட தாங்க முடியாத காரணம் என்ன?
முதல் காரணம் இந்த கேடுகெட்ட அரசியல்வாதிகளும் அதிகாரிகளும்தான்.
ஒரு சாலை போடுவதற்கு குறைந்தது எவ்வளவு செல்வாகும் என இந்த அதிகாரிகள் ஏற்கனவே நடப்பில் இருக்கும் விலையைக் கருத்தில் கொள்ளாமல் (Market Rate) இவர்களது அரசு விலைப் பட்டியலை அடிப்படையாக கொண்டு ஒரு மதிப்பீட்டை தயார் செய்வார்கள்.
பின்னர் டெண்டர் கோருவார்கள். யார் குறைந்த விலைக்கு கேட்கிறார்களோ அவர்களுக்கு இந்த அதிகாரிகள் வேலையைக் கொடுப்பார்கள். கொடுக்கும் போதே மாவட்டம் ஒன்றியம் 50000, 5000, வார்டு கவுன்சிலர் என ரகவாரியாக அரசியல் வாதிகளுக்கு கமிசன் கொடுப்பதற்காகவே குறைந்தது 20 சதவீதம் தொகையை எடுத்துக் கொண்டு வேலையை கொடுப்பார்கள். திட்ட மதிப்பீடும் குறைவு, 20 சதவீத கமிசன் வேறு இப்படி அடிமட்ட ரேட்டுக்கு வேலையை எடுத்த காண்ட்'ராக்டர் அவரும் லாபம் எடுக்க வேண்டும் அல்லவா இதில் தான் ஆரம்பிக்கிறது சாலையின் தரமற்ற நிலை. அரசியல் வாதிகளும் அதிகாரிகளும் எடுத்துக்கொள்ளும் 20 சதவீத கமிசன் காண்ட்'ராக்டரைப் போய் சேர்ந்தால் அவரால் தரமான் சாலையைப் போடமுடியும்.
இரண்டாவது காரணம் நிலத்தடி நீர் சம்பந்தப்பட்டது. எல்லா நிலத்துக்கு கீழும் Sub surface water எனப்படும் நிலத்தடி நீர் மட்டம் ஒன்று உண்டு. இந்த மட்டம் மாற்றம் அடையும் போது மண்ணின் தாங்குதிறனும் (Bearing capacity) மாறும். பெரும்பாலும் ஆற்றின் கரையோர சாலைகளும் கன்மாய் அல்லது ஏரிக்கரையோர சாலைகளும் சிதிலமடைவதற்கு இதுதான் காரணம். ஆற்றின் அளவுக்கு மேல் மணல் அள்ளுவதால் நிலத்தடி நீரின் மட்டத்தில் மாற்றம் ஏற்படும் அந்த மாற்றம் ஆற்றின் கரையோரம் உள்ள சாலைகளையும் பாதிக்கும். கண்மாய் ஏரிக்கரையோர ஆக்ரமிப்புக்களால் அந்தந்த கண்மாய் ஏரிகளுக்கு வழக்கமாக நீர் ஆதாரங்களிலிருந்து வரும் நீரின் அளவு குறையுமானால் அது அந்தப் பகுதியின் நிலத்தடி நீர் மட்டத்தில் மாற்றத்தினை ஏற்படுத்தும் இதுவும் சாலை சிதிலமடைவதற்கு ஒரு காரணம்.
ஆற்றில் அளவுக்கு மீறி மணல் அள்ளுபவர்களுக்கும் ஏரி கண்மாயை ஆக்ரமிப்பவர்களுக்கும் இந்த அரசியல் வாதிகளின் அதிகாரிகளின் ஆசி இல்லாமல் இல்லை.
இது போக ஒரு சாலையின் தாங்குதிறனை விட கூடுதல் சுமை உள்ள கனரக வாகனங்கள் அந்த சாலையில் செல்வதால் கூட சாலைகள் பாதிப்படையும். நிர்ணயிக்கப்பட்ட அளவினை மீறி சரக்கு எடுத்து செல்லும் வாகனங்களை முறைப்படுத்தினால் இந்த சாலை சேதத்தினை ஓரளவுக்குக் குறைக்கலாம்.
இது எல்லாத்தியும்விட இந்த சாலைகளின் மோசமான நிலைக்கு பிரதான காரணம் மழை முடிந்ததும் ஒட்டுப் போட்ட சாலைகளைப் பார்த்து திருப்தி கொண்டு கலர் டிவிகளையும் கவரில் வைத்த பணத்தையும் வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடும் நம்ம பொது சனம்.



திங்கள், 14 செப்டம்பர், 2009

ஒரு தேவதை என் எதிரில் வந்தால்...


ஊரெங்கும் தேவதை வந்து
உவந்திடுதாம் வரங்கள் பத்து
பதிவுலகில் படித்த நானும்
பழங்கதை ஒன்று நினைக்கலானேன்.

அந்தகன் வந்து அழைக்க மாட்டானா
என அல்லலுற்றிருந்தான்
ஏழை அந்தகன் ஒருவன்.
பார்ப்பதற்கு விழிகள் இல்லை
பரிவுகாட்டும் மொழிகள் இல்லை
செல்வம் ஈட்டிடவும் வழிகள் இல்லை
படும் துன்பங்களும் ஒழியவில்லை-என
விதிர்விதிர்த்து இருந்த அவன்முன்
எதிரில் வந்தாள் ஒரு தேவதை.

பாரெங்கும் உனைப்போல்
பலபேருக்கு கொடுக்க வேண்டும்
பத்துவரம் இல்லை மகனே
ஒரு ஒத்தைவரம் கேள் என்றாள்
கிடைப்பதோ வரம் ஒன்று -அது
போக்க வேண்டும் அவனை
வாட்டிடும் துயரை வென்று
யோசித்தான் அந்தகன்
கேட்டிட்டான் இப்படி
'அம்மா
என் பேரன் தங்கக் கிண்ணத்தில்
பால் அருந்துவதை
என் மாளிகை உப்பரிகையில் நின்று
உவப்புடனே நான் காண வேண்டும்"

என் எதிரிலும் தேவதை வந்தால்...
பத்து வரம் கேட்க வேண்டாம்
ஒரு ஒத்தை வரம் கேள் என்றால்
நயப்புடனே நானும் கேட்பேன்
நல்லதொரு வரம் ஒன்று.
'அம்மா
மறைந்த எம் மன்னவன்
மதயானை போல மீண்டு வந்து
மடிந்த எம் மக்கள் முன்பும்-உயிரை
மாய்த்த எம் முத்துகுமரன்கள்
கண்ணெதிரேயும்
மகிந்தா, கோத்தபையா
மற்றும் சரத் பொன்சேகா எதிரிகளையும்
'கை' காட்டும் கருணா போன்ற துரோகிகளையும்
கடிதில் கழுவேற்ற வேண்டுமென
கச்சிதமாய் கேட்பேன் வரம் ஒன்று.






சனி, 12 செப்டம்பர், 2009

"மானாட மயிலாட" எதற்கு?




அண்டை மாநிலத்தில்
அவளோட ராவுகளும்
அஞ்சரைக்குள்ள வண்டிகளும்
வந்திறங்கிய காலம் சொல்லும்
அங்கு
கம்யூனிஸ்டுகள் களப்பனியில்
தீவிரமாய் இருந்தார் என்று.




இந்திய முட்டாள்கள்
பதினோருபேர்
மூன்று ஐந்து நாள் ஆட்டமென்றும்
ஏழு ஒரு நாள் ஆட்டமென்றும்
வெளிநாடு
டூர் சென்ற தேதிகள் சொல்லும்
அன்று பாராளுமன்றத்தில்
எவ்வளவு பரபரப்பு இருந்தது என்று



இளைஞர்களின் சக்தி
இணையற்ற சக்தி
மாணவர்களின் சக்தி
மாபெரும் சக்தி
எழுச்சிப் பெற்றால்
என்ன ஆகும் என

பழம் தின்று கொட்டைப்போட்ட
பகுத்தறிவு பகலவன்களுக்குத்
தெரியாதா என்ன?



பெரியதிரை "டார்கெட்டு" உள்ள
சின்னத்திரை கூத்தாடிகளும்
பெரியதிரை"மார்கட்டு" இழந்து
சின்னத்திரை வந்த 'ஆத்தா'டிகளும்
அரிப்பை சொரிந்து கொள்ளும்
அழகினை பார்க்கும் வரைக்கும்



முத்துக்குமரன்களை
மறைத்து
"முத்தழகு" தங்கதாமரை
வாங்கியதை
தமிழன் நமக்குத்
தலையங்கமாய்
சொல்லுவார்கள்.

ஆட்சிமாறினால்

காட்சியும் மாறும்

"அய்யோ கொல்லுறாங்களே"

என்னும் படம் மட்டும்தான் ஓடும்.