வியாழன், 17 செப்டம்பர், 2009

பீர்பால் கதை ஒன்னு பிற்போக்கு கதை ஒன்னு


கதையைத் தொடங்கும் முன்....
"ஆகாச வானி" என தமிழர்க்கு
அந்நியமாய் செய்தி சொன்ன
அகில இந்திய வானொலியில்
அனுதினமும்
அரியபல தகவல்களை தம்
அழகுக் குரலால் சொல்லி உடன்
அருமை நகைச்சுவையும்
அள்ளி வழங்கிட்ட
அண்ணன் தென்கச்சி கோ சுவாமிநாதன்
அமரர் ஆன தகவல் கேட்டு
அல்லறுற்றது தமிழ் உலகம்
அன்னாரது பிரிவால் வாடும்
அவரது குடும்பத்தாருக்கு
ஆறுதல் பல கூறி
அன்னாரது ஆத்மா
ஆண்டவனில் கலந்திடவே
அனைவரும் வேண்டி நிற்போம்.

----------------------------------------------------------

பீர்பால் கதை ஒன்னு

மாமன்னர் அக்பரது அவையில் மந்திரியாய் இருந்த மதியூகி பீர்பாலுக்கு மன்னர் எப்போதும் தனிச்சிறப்பு கொடுத்திருந்தார். இது கண்டு பொறாமை கொண்ட மந்திரிகள் சிலர் மன்னரிடம் "எம்மிடம் இல்லாச் சிறப்பு என்ன கண்டீர் பீர்பாலிடம் "என நயந்து கேட்டனர்.குறுநகை ஒன்றையே பதிலாக தந்த மன்னர் குறுமதி படைத்த அந்த மந்திரிகளுக்கு பீர்பாலின் சிறப்பை உணர்த்த எண்ணிக் கொண்டார்.

ஒருநாள் மன்னர் அக்பர் அரசவைக்கு சற்றே கழுத்தைச் சாய்த்துக் கொண்டு அவைக்கு வந்தார்.அவையில் பீர்பால் உள்ளிட்ட அமைச்சர்கள் அனைவரும் இருந்தனர். வணங்கி அமர்ந்த அனைவரிடமும் அக்பர் சொன்னார் தமக்கு கழுத்து வலி வந்த காரணத்தை. "அவையோர்களே ஆன்றோர்களே நேற்று இரவு உறங்கும் போது கள்ளனைப் போல் வந்த ஒருவன் என் கழுத்திலே மிதித்து விட்டான்.கைகளால் என்னை அடித்தும் விட்டான்.என்னை உதைத்து மிதித்த அவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் சொல்லுங்கள்"என அவையோரை அக்பர் கேட்டார்.

பதைபதைத்த மந்திரிகள் பலரும் அவனது கைகளை வெட்டுங்கள் கால்களை முறியுங்கள் சிரச்சேதம் செய்யுங்கள் என ஆலோசனைகள் பல கூறினர். புன்னகைத்து அமர்ந்திருந்த பீர்பாலிடம் அக்பர் கேட்டார். "பீர்பால் அனைவரும் தங்கள் தண்டனையை கூறிவிட்டனர். அரசரை அவமதித்த அவனுக்கு என்ன தண்டனை வழங்கலாம் என உமது கருத்தினைக் கூறுங்கள்" என வினவினார்.

பீர்பால் எழுந்து சொன்னார் "மன்னா உங்களை உதைத்த கால்களுக்கு தங்க சிலம்பு பூட்டுங்கள்,அடித்த கைகளுக்கு வைரத்தில் வளையல் அணிவியுங்கள்"

துடித்துப்போன மற்ற மந்திர்கள் "ராஜ துரோகி, மன்னரை அடித்தவனுக்கு தண்டனை வழங்கச் சொல்லாமல் பரிசுகள் வழங்கச் சொல்லுகிறாயே இது அடுக்குமா என ஆர்ப்பரித்தனர். அவர்களை அடக்கிய மன்னர் சொன்னார். "பீர்பால் வழங்கிய தண்டனை சரிதான்"என்று கூறி அவையோருக்கு காரணத்தை விளக்க பீர்பாலிடம் கேட்டுக் கொண்டார்.

பீர்பால் சொன்னார்"மன்னா கட்டுக்காவல் மிகுந்த உங்கள் அந்தப்புரத்திற்கு அன்னியன் ஒருவன் வருவது அவ்வளவு இயலாத காரியம், மேலும் அடிக்கும் அளவுக்கு, கழுத்தில் உதைக்கும் அளவுக்கு மாவீரர் நீங்களும் அனுமதித்திருக்க மாட்டீர்கள் அவன் அன்னியனாய் இருக்கும் பட்சத்தில் அங்கேயே அவனுக்கு தண்டனை வழங்கியிருப்பீர்கள். எனவே இந்த அளவுக்கு உங்களிடம் குறும்பு செய்தவன் தங்கள் குழந்தையாகத்தான் இருக்கும் என முடிவு செய்து அடித்த கைகளுக்கு வளைகளும் உதைத்த கால்களுக்கு சிலம்பும் பரிசாகத் தரச் சொன்னேன்" எனக் கூறினார்.

பீர்பாலின் அறிவாற்றல் கண்டு அமைச்சர்கள் வியந்து நின்றனர். அவர் மேல் வீண் பொறாமை கொண்டதற்கும் வெட்கி நின்றனர்.

-------------------------------------------------------------------

பிற்போக்குக் கதை ஒன்னு

TMDK அதாவது (TASMAC MEMBERS DEVELOPMENT KINGDOM) என்னும் நாட்டில் ஒரு மன்னன் இருந்தார் கருப்பாக நம்ம எம்ஜியார் மாதிரி அழகா இருப்பார். அவர்கிட்ட பன் ரொட்டி ராமசாமின்னு ஒரு மதியூகி மந்திரி இருந்தார். பெரிய பதவி கொடுத்து அழகு பார்த்த கருப்பு மன்னன் எங்கே போனாலும் பக்கத்துலயே பன் ரொட்டி ராமசாமியை உட்கார வைச்சு பேசும் அளவுக்கு மந்திரிக்கு உரிமை கொடுத்திருந்தார். இது கண்ட பல அல்லக்கை மந்திரிகள் "மன்னா நாங்க பலரும் ஆரம்ப காலத்துலருந்து உங்ககிட்ட அடியும் உதையும் வாங்கி கூடவே இருக்கோம் ஆனா எங்கிருந்தோ வந்த இந்த பன் ரொட்டிக்கு நீங்க இவ்வளவு பவர் கொடுத்திருக்கிங்களே" என அங்கலாய்த்தனர்.காலம் கனியட்டும் அவர்களுக்கு பன் ரொட்டியின் அருமை பெருமையெல்லாம் உணர்த்துவேன் என மன்னன் நினைத்துக் கொண்டார்.

ஒருநாள் TMDK மன்னன் கழுத்து வலியோடு அரசவைக்கு வந்தார். வந்து மந்திரிககிட்ட சொன்னார்"நேற்று இரவு நான் ஒருத்தனை நல்லா அடிச்சிட்டேன் அவனும் மாவீரன் தான் ரொம்ப அவனை அடிச்சதுனால எனக்கு கழுத்து வலி வந்துருச்சு அடிச்ச அவனை என்ன பண்ணலாம் அவன் பேரு என்ன" அப்பிடின்னு மந்திரிககிட்ட புதிர் போட்டாரு.

அல்லக்கை மந்திரிக எல்லோரும் சொன்னாங்க 'மன்னா புயலடிச்சுப் பொழச்சவன் இருக்கலாம் ஆனா இந்த TMDK நாட்டின் பூபதி அடிச்சு பொழைச்சவன் இருக்க முடியாதே, அதுனால நீங்க அடிச்சவன் இன்னியேரம் செத்துப் போயிருப்பான் செத்தவன் பேரு நமக்கெதுக்கு'அப்படின்னு துதி பாடுனாங்க.

"போங்கடா அல்லக்கை முண்டங்களா" அப்படின்னு மன்னர் அவிய்ங்கள திட்டிபுட்டு பன் ரொட்டி ராமசாமியைப் பாத்து கேட்டாரு"அண்ணே நீங்க சொல்லுங்கண்ணே நேத்து ராத்திரி நான் அடிச்சவன் யாரு அவன என்ன பண்ணலாம்"னு

பன் ரொட்டி ராமசாமி சொன்னாரு" அரசே நீங்க அடிச்சவன் பேரு நெப்போலியன் அவன நேத்து ராத்திரி ரொம்ப அடிச்சதுனாலதான் உங்களுக்கு கழுத்து வலி வந்துருச்சு,ஒவர் ஹேங்கா இருக்கும்னு நினைக்கிறேன் அதான் உளறிகிட்டு இருக்கிங்க அதுனால அடிச்ச அவனை மறுபடியும் அடிச்சா சரியாப் போயிடும்"

மன்னனும் "சரிதான் நீங்க சொன்னது மறுபடியும் அவன அடிக்கப் போறேன் வரட்டா ஆங்க் ம் .... "அப்புடின்னு சொல்லிபுட்டு போயிட்டாரு.

"பக்கத்துல இருந்து ஊத்திக் கொடுத்த மாதிரியே சொல்லுறாரே" அப்புடின்னு அல்லக்கை மந்திரிகள் பன் ரொட்டியின் அறிவை நினைத்து தங்களுக்குள் வெட்கிக் கொண்டார்கள்.

---------------


5 கருத்துகள்:

துபாய் ராஜா சொன்னது…

தென்கச்சி திரு.கோ சுவாமிநாதன் ஆன்மா சாந்தியடைய ஆண்டவன் அருள்வானாக....

'அ' 'ஆ'வில்
அஞ்சலி கவிதை
அருமையான
ஆறுதல்.

துபாய் ராஜா சொன்னது…

TMDK = (TASMAC MEMBERS DEVELOPMENT KINGDOM)

அருமை.அருமை.

எப்படியெல்லாம் யோசிக்கறீங்கய்யா.. !! :))

துபாய் ராஜா சொன்னது…

//'மன்னா புயலடிச்சுப் பொழச்சவன் இருக்கலாம் ஆனா இந்த TMDK நாட்டின் பூபதி அடிச்சு பொழைச்சவன் இருக்க முடியாதே, அதுனால நீங்க அடிச்சவன் இன்னியேரம் செத்துப் போயிருப்பான் செத்தவன் பேரு நமக்கெதுக்கு'அப்படின்னு துதி பாடுனாங்க.//

இந்த டயலாக் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு... :))

துபாய் ராஜா சொன்னது…

//போங்கடா அல்லக்கை முண்டங்களா" அப்படின்னு மன்னர் அவிய்ங்கள திட்டிபுட்டு பன் ரொட்டி ராமசாமியைப் பாத்து கேட்டாரு"அண்ணே நீங்க சொல்லுங்கண்ணே நேத்து ராத்திரி நான் அடிச்சவன் யாரு அவன என்ன பண்ணலாம்"னு

பன் ரொட்டி ராமசாமி சொன்னாரு" அரசே நீங்க அடிச்சவன் பேரு நெப்போலியன் அவன நேத்து ராத்திரி ரொம்ப அடிச்சதுனாலதான் உங்களுக்கு கழுத்து வலி வந்துருச்சு,ஒவர் ஹேங்கா இருக்கும்னு நினைக்கிறேன் அதான் உளறிகிட்டு இருக்கிங்க அதுனால அடிச்ச அவனை மறுபடியும் அடிச்சா சரியாப் போயிடும்"

மன்னனும் "சரிதான் நீங்க சொன்னது மறுபடியும் அவன அடிக்கப் போறேன் வரட்டா ஆங்க் ம் .... "அப்புடின்னு சொல்லிபுட்டு போயிட்டாரு.


"பக்கத்துல இருந்து ஊத்திக் கொடுத்த மாதிரியே சொல்லுறாரே" அப்புடின்னு அல்லக்கை மந்திரிகள் பன் ரொட்டியின் அறிவை நினைத்து தங்களுக்குள் வெட்கிக் கொண்டார்கள்.//

சிரிச்சி சிரிச்சி முடியலை.

நல்ல நகைச்சுவை.

தொடரட்டும் இதுபோன்ற அதிர்வேட்டுக்கள்.

கலாட்டாப்பையன் சொன்னது…

ஏன் இந்த கொல வெறி நம்ப கருப்பு எம் ஜி ஆர் மேல.

கருத்துரையிடுக

ஏதாவது சொல்லிட்டு போங்க