சனி, 13 பிப்ரவரி, 2010

டுமீல் டுமீல் டுமீல்


ஒரு அரைச்செங்கலை எடுத்து மதுரையில் ஏதாவது ஒரு தெருவில் விட்டெறிந்தால் அது கண்டிப்பாக ஒரு பாண்டியின் தலையில்தான் விழும். அந்தளவுக்கு பாண்டிகளின் எண்ணிக்கை பாண்டி(யன்) தலைநகர் மதுரையில் அதிகம்.
ஒரு முக்கிலோ அல்லது ஒரு சந்திலோ பத்துப்பேர் நின்று பேசிக்கொண்டிருந்தால் அதில் எட்டுப்பேர் பாண்டியாகத்தான் இருப்பார்கள்.
சண்முகப்பாண்டி, சங்கரப்பாண்டி, சுந்தரப்பாண்டி, அழகுபாண்டி,வீரப்பாண்டி,செல்வப்பாண்டி,
முருகுப்பாண்டி,முத்துப்பாண்டி,வேல்ப்பாண்டி என பெயருக்கு முன் ஏதாவது ஒரு prefix இருந்தாலும் இவர்களையும் மக்கள் அழைப்பது என்னவோ பாண்டி என்றுதான்.
எனவே பெயர்க் குழப்பம் வரக்கூடாது என்பதற்காக இந்த பாண்டிகளை நெட்டைப்பாண்டி, குட்டைப்பாண்டி, கட்டைப்பாண்டி,வெள்ளைப்பாண்டி,கருத்தப்பாண்டி என தோற்ற ஆகு பெயர்களாலும் முனிச்சாலைபாண்டி,ஒத்தக்கடைப்பாண்டி,அனுப்பானடிப்பாண்டி என இட ஆகு பெயர்களாலும் பழக்கடைப்பாண்டி,உரக்கடைபாண்டி, கறிக்கடைப்பாண்டி என தொழில் ஆகு பெயர்களாலும் மக்கள் அழைப்பதுண்டு.
அந்த வகையில் வித்தியாசமானவர்தான் இந்தப் பதிவின் நாயகன் டுமீல் பாண்டி.
துப்பாக்கியில் இருந்து தோட்டாக்கள் வருவதுபோல் இவர் வாயிலிருந்து வரும் ஒவ்வோரு வார்த்தைகளும் எதிராளியைத் தாக்கி மயக்கம் அடையச் செய்யும். மறுமுறை இவரைக் காணும்போது ஒவ்வொருவருக்கும் குலை நடுக்கம் ஏற்படச்செய்யும் வகையில் இவர் சு(வி)டும் டுமீல்கள் நிலைகுலையச் செய்யும் திறன் கொண்டவை.
மாதிரிக்கு சில டுமீல்கள். படிப்பவர்களின் வசதிக்காக டுமீல் பாண்டியின் டுமீல்கள் கருப்பு வண்ணத்திலும் உண்மை நிலவரம் நீல வண்ணத்தில் அடைப்புக் குறியிலும் தரப்பட்டுள்ளன.
டுமீல் 1. டுமீல் பாண்டி ஆறாம் வகுப்பு படிக்கும்போது பள்ளியில் கொடைக்கானலுக்கு சுற்றுல்லா சென்றார்களாம். அங்கு இவரை ஒரு மலைப்பாம்பு கவ்வி விழுங்க முயற்சி செய்ததாம். டுமீல் பாண்டி தன்னிடமிருந்த காம்பஸ் உதவியுடன் பாம்பை கிழித்துக் கொண்றாராம். (சுற்றுலாவில் செத்த பாம்பு ஒன்றினை வழியில் பார்த்த டுமீல் தன் டிரவுசரில் இருந்த சேப்டி பின்னால் குத்தியிருக்கிறார்.)
டுமீல் 2. டுமீல் பாண்டி கோயமுத்தூரில் ஒரு கட்டிட காண்ட் ராக்ட் எடுத்து வேலை பார்த்திருக்கிறார். அந்த கட்டிடத்தின் மதிப்பு ஒரு கோடியாம். மேலும் இதில் சிறப்பம்சம் என்ன வெனில் அந்த ஒரு கோடி ரூபாய் கட்டிடம் ஒரு நாய்க்காக கட்டப்பட்டதாம். (ஒரு கோடி ரூபாய் கட்டிடத்தில் நாய்க்காக ஒரு பத்தாயிரம் ரூபாய் மதிப்பீட்டில் மரத்திலான் செட்டு ஒன்று மட்டுமே டுமீல் பாண்டி பார்த்த வேலை)
டுமீல் 3. டுமீல் பாண்டி வேலை பார்த்த ஒரு கட்டிடத்தில் இருந்து சித்தாள் ஒருவர் தவறி விழுந்து விட்டாராம். பல்வேறு மருத்துவர்கள் கைவிரித்த பின்னர் டுமீல் அவருக்கு வாய் வழியே ஒல்டு மங்க் ரம்மை குடிக்கக் கொடுத்திருக்கிறார். சித்தாள் பிழைத்துக் கொண்டாராம்.(உண்மையில் பிராந்தி விஸ்கி போன்றவையின் விலை ஏற்றத்தால் பாதிக்கப்பட்ட டுமீல் தற்போது அடிப்பது ஓல்ட் மங்க் மட்டுமே. எனவே ஓல்ட் மங்கின் பெருமை கூறவே இந்த டுமீல்).
டுமீல் 4. முன் சொன்னது போல் மருத்துவர்களால் கைவிடப்பட்ட ஒரு தீராத நோயை தீர்த்த அனுபவம் டுமீலுக்கு உண்டு. அது என்னவென்றால் ஒரு நோயாளி நீண்ட நாள்கள் தலையில் அரிவாள் வெட்டுப்பட்டக் காயத்தில் புழுக்கள் வந்து அவதிப்பட்டு வந்தாராம். எந்த மருத்துவராலும் அந்த புழுக்களை அகற்ற முடியவில்லையாம். டுமீல் பாண்டி ஆட்டுக்கறியின் தொடைக்கறியை 200 கிராம் வாங்கிவரச் செய்து அதனை புழுக்கள் உள்ள காயத்தில் வாழை மட்டை வைத்துக் கட்டி விட்டாராம். ஒரு மணி நேரத்தில் புழுக்கள் எல்லாம் கறியில் ஏறி விட இவர் நோயாளியை குணப்படுத்தினாராம் (டுமீல் கறிக்கடையில் தலைக்கறி வாங்க சென்று இருந்திருக்கிறார். அங்கு ஆட்டின் தலையில் அடம் பிடித்துக் கொண்டு வராமல் இருக்கும் புழுக்களை அகற்றும் போது பார்த்திருக்கிறார்.)
டுமீல் 5. டுமீலின் அண்ணன் மகளுக்கு திருமணம் நிச்சயமாகி இருந்திருக்கிறது.மாப்பிள்ளை வீட்டில் 100 பவுண் நகை கேட்டார்களாம். ஆனால் கையில் கொஞ்சம் கூட காசு இல்லை. டுமீலின் அண்ணன் மனைவி மிகவும் கவலை அடைந்திருக்கிறார். ஆனால் கவலையே படாத டுமீலும் டுமீலின் அண்ணனும் (பெரிய டுமீல்) தங்களிடம் பரம்பரை பரம்பரையாக இருந்து வந்த குவைகளின் ஒரு பகுதியை (பொற்கொல்லர் தங்கம் உருக்கப் பயன்படுத்தும் ஒரு மண்ணால் ஆன குவளை) உடைத்து உருக்கினராம். 100 பவுனுக்கு மேலேயே தங்கம் கிடைக்க அதை வைத்து ஜாம் ஜாம் என கல்யாணத்தினை நடத்தினராம். (உண்மையில் பெண் பிடித்துப் போன மாப்பிள்ளை வீட்டார் பத்துப் பவுனுக்குமேல் பரிசம் போட்டு தங்கள் செலவிலேயே திருமணத்தினை நடத்தினராம்).
டுமீல் பாண்டியின் டுமீல்களை கையும் களவுமாக பிடித்து அம்பலப் படுத்தினாலும் டுமீல் தன் டுமீல்களை விடுவதில்லை. இந்தப் பதிவுகூட டுமீலின் ஒப்புதலின் பேரிலேயே வெளியிடப்படுகிறது.

வியாழன், 11 பிப்ரவரி, 2010

பாம்பு புடிச்சா பத்து லட்சம்


அந்த இருட்டில் டார்ச் அடித்து மலைச்சாமி எதையோ தேடிக் கொண்டிருந்தது கடைவீதியில் இருந்து வீடு திரும்பிய சண்முகத்திற்கு வியப்பாக இருந்தது.

மலைச்சாமி சண்முகத்தின் சகலை. ஆரம்பப் பள்ளி ஒன்றில் ஆசிரியர். சனி ஞாயிறு விடுமுறைகளில் சண்முகத்தின் வீட்டில் வந்து தங்கிச் செல்வதுண்டு.
"என்ன தம்பி தேடுறீங்க எதையாவது பணத்த தொலச்சிட்டிங்களா"?
"இல்லண்ணே ஒரு பாம்பு வந்துச்சு அதத்தான் தேடிக்கிட்டு இருக்கேன்"
ஊரின் ஆரம்பத்தில் இருந்தது சண்முகத்தின் வீடு. கட்டி ஐந்து வருடம் ஆகி விட்டது. சுற்றிலும் தென்னை மரத்தோப்புகள், வீடு கட்டி வந்த காலம் தொட்டு பாம்பு ஏதும் சுற்றுப்புறத்தில் யாரும் பார்த்ததில்லை.
"என்ன தம்பி சொல்லுறிங்க பாம்பா பாத்தவுடனே அடிக்கக் கூடாதா" சிறுபிள்ளைகள் வீட்டில் இருப்பதால் சண்முகம் கவலையடைந்தான்.
"அடிக்கக்கூடாதுன்னே இந்த பாம்பு இருதலை மணியன் மாதிரி இருக்கு இத உயிரோட பிடிச்சுக் கொடுத்தா பத்து லட்ச ரூவா வரை கிடைக்கும்"
"எந்த கேனையன் தம்பி இதச் சொன்னான்"
"ச்சூ சும்மா இருங்கன்னே எங்கூட வேலைப் பார்க்குற வாத்தியாரோட மாமாதான் இதச் சொன்னாரு, இந்த மாதிரி இருதலை மணியன் பாம்புக்கு இப்ப நல்ல கிராக்கியாம். இதுல இருந்து கேன்சருக்கு மருந்து எடுக்கலாமாம்"மதிலோரமாகத் தேடிக்கொண்டே மலைச்சாமி கூறினான்.
சண்முகத்தின் மனத்திரையில் தன்னுடன் கல்லூரியில் பயின்ற சகாய ராசு வந்து போனான்.அவனும் இப்படித்தான் "கருப்புபூனை பிடிச்சா ஒரு லட்சம் கருநொச்சி செடி கிடைச்சா இரண்டு லட்சம், ஒரு மில்லியன் டாலர் நோட்டை மாத்துனா பல லட்சம்"ன்னு எப்பவும் புருடா விட்டுக்கிட்டுறுப்பான்.
"அண்ணே இங்க வந்து பாருங்க" மலைச்சாமி டார்ச் அடித்துக் காட்டிய இடத்தில் ஒரு மூண்றடி நீளமுள்ள பாம்பு மரவட்டை போல சுருண்டு படுத்துக் கிடந்தது.
"அண்ணே நான் இங்கய பாம்பு ஓடாமப் பாத்துகிறேன் நீங்க ஓடிப்போயி ஒரு அரிசிச்சாக்க எடுத்துட்டு வாங்க அப்படியே புடிச்சுடலாம்"
"தம்பி கொத்தி கித்தி வைக்கப் போகுது ஒரு குச்சிய எடுத்து அடிச்சுப் போடுங்க எதுக்குப் போயி புடிச்சுக்கிட்டு"
'அண்ணே இந்தமாதிரி பாம்பெல்லாம் கொத்தாதுன்னே, எந்த பாம்பு இரண்டு கலர் அல்லது இரண்டு டிசைனுக்கு மேல இருக்கோ அதுதான் விஷமுள்ள பாம்பு இதப் பாருங்க ஒரே கலரு ஒரே டிசைனு கொத்தாது போயி சாக்க எடுத்துட்டு வாங்க" மலைச்சாமி முனியாண்டி விலங்கியல் மூண்றாமண்டு மாதிரி பேசினான்.
சண்முகத்திற்கு கோபம் வந்தாலும் கொழுந்தியாப் புருசனாச்சேன்னு சாக்கு ஒன்னு எடுத்துட்டு வந்தான்.தவளையோ அல்லது எலியோ தின்ன மயக்கத்துல கிடந்த அந்த பாம்பு மலைச்சாமி ஒரு குச்சியை வைத்து தள்ளவும் சாக்கில் போயி சுகமாக படுத்துக் கொண்டது. சாக்கின் முனையை ஒரு சணலில் கட்டி பாம்போடு சாக்கை வீட்டுக்கு கொண்டு வந்து ஹாலில் ப்ரிட்ஜ் இருந்த ஓரத்தில் வைத்தான்.அப்புறம் செல்போனை எடுத்து யாருக்கோ பேச ஆரம்பித்தான்.
"அண்ணே பார்ட்டி வந்துகிட்டு இருக்காங்க, கண்பர்ம் பண்ணிட்டாங்கன்னா சுளையா பத்து லட்சம் கிடைக்கும் நைட்டோட நைட்டா லட்சாதிபதி ஆயிருவேன்" மலைச்சாமி உற்சாகமாக பேசினான்.
"சித்தப்பா எங்க வீட்டுலதான் பாம்ப புடிச்சுருங்கீங்க அதுனால எங்களுக்கும் பாதிக்காச கொடுத்துடனும்" சாக்கை கண் கொள்ளாமல் பார்த்துக் கொண்டிருந்த சண்முகத்தின் மகன் பேரம் பேசினான்.
அரைமணி நேரம் போயிருக்கும். வெளியே பைக் ஒன்று வந்து நிற்கும் சத்தம் கேட்டது. இரண்டு ஆசாமிகள் 40 வயதுக்கு மேல் இருக்கும். மக்களுடன் தான் கூட்டணி என்னும் மாநிலக் கட்சியின் கரை வேட்டி கட்டியிருந்தார்கள். இராம்நாடு மாவட்டத்துக்குரிய வகையில் முகத்தில் முக்கால்வாசி மீசை வைத்திருந்தார்கள்.அவர்கள் இருவரையும் ராம்நாடு பஸ் ஸ்டாண்டில் லாட்டரி சீட்டு வித்துக் கொண்டிருந்தபோது பார்த்ததாக சண்முகத்திற்கு நியாபகம்."லாட்டரிய கவர்மெண்டு ஒழிச்சதும் பய புள்ளைக இப்படி கிளம்புருச்சு போலருக்கே"ன்னு சண்முகம் நினைத்துக் கொண்டான்.
"சரக்கு எங்க தம்பி" வந்தவரில் ஒருவன் மலைச்சாமியிடம் கேட்டான்
"இந்தா இருக்குன்னே" சாக்கை அப்படியே தூக்கி அவர்களிடம் காட்டினான் மலைச்சாமி.
சாக்கைப் பிரித்து இருவரும் ஆராய்ச்சி செய்தனர். "தம்பி கண்பர்ம் இருதலை மணியனேதான். சரக்க எடுங்க இப்பவே இராம்நாடு போயி பார்ட்டியப் பாத்து பணத்த வாங்கிடுவோம்"
"அடப்பாவிகளா இவனுக பார்ட்டி கிடையாதா ஏஜண்டுக போலிருக்கே" சண்முகம் நினைத்துக் கொண்டான்.
"அண்ணே உங்க பைக்க எடுங்க ஒரு எட்டு ராம்நாடு போயிட்டு வந்துறலாம்" மலைச்சாமி கூறினான். மணி பதினொன்னுக்கு மேலாகி விட்டதால் ராம்நாடுக்கு பஸ் கிடையாது. தவிரவும் சரக்கை வைத்துக் கொண்டிருந்தால் சின்னப் புள்ளைகள் தூங்காது என்பதால் சண்முகம் பைக்கை எடுக்க உடன்பட்டான்.
ஒரு பைக்கில் சண்முகமும் மலைச்சாமியும் அமர்ந்து கொள்ள ஏஜண்டுகள் இருவரும் தாங்கள் வந்த பைக்கில் ஏறிக்கொண்டனர். சரக்கை மலைச்சாமி கையில் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். ஏஜண்டுகள் வழிகாட்ட அரைமணி நேரத்தில் ராம்நாடு பாரதிநகர் வந்தனர்.
உயர்தட்டு மக்கள் வசிக்கும் தெருபோல் எல்லா கட்டிடங்களும் வனப்புடன் இருந்தன. ஒரு பெரிய புதிய பங்களாவின் முன் ஏஜண்டுகள் வண்டியை நிறுத்தி அழைப்பு மணியை அழுத்தினர்.
கதவைத் திறந்த நபரை சண்முகத்திற்கு உடன் அடையாளம் பிடிபட்டது. சகாய ராசு சண்முகத்தின் கல்லூரி தோழன்.
"என்ன இந்நேரத்துல உள்ள வாங்க" என்று வரவேற்றவன் சன்முகத்தைப் பார்த்ததும் "சண்முகம் நல்லாருக்கியா"ன்னு கைப் பிடித்தான்.
மலைச்சாமி கையிலிருந்த சரக்கை சகாயராசுவிடம் காட்டினான். சரக்கப் பார்வையிட்ட சகாயராசு உதடு பிதுக்கினான்.
"வெயிட்டு ரொம்ப கம்மியா இருக்கு மூனு கிலோவுக்கு மேல இருந்தாத்தான் பத்து ரூபாக்கு மேல போகும் இப்ப வித்தா ரொம்ப கம்மியாத்தான் கேப்பாங்க, கொடுத்துட்டுப் போங்க ஒரு மண்பானையிலப் போட்டு முட்ட வெள்ளக் கருவ கொடுத்தம்னா ஒரு வாரத்துல மூனு கிலோவுக்கு மேல வந்துடும் பத்து ரூவாக்கு மேல கூட வித்துறலாம்" என்னவோ இறால் வளர்க்கிற மாதிரி சகாயராசு பேசினான்.
சகாயராசுவிடம் போன் நம்பர் வாங்கிக் கொண்டு மலைச்சாமியும் சண்முகமும் விடைப் பெற்றனர்.
ஒருவாரம் கழித்து மலைச்சாமி சோகமாக சண்முகம் வீட்டுக்கு வந்தான். "அண்ணே அந்த பாம்பு ஒடிப்போயிருச்சாம் சே கைகெட்டுனது வாய்கெட்டலியே"
"எனக்குத் தெரியாதா தம்பி இதெல்லாம் டுபாக்கூர்" சண்முகம் மலைச்சாமியை நக்கலாக பார்த்தபடி கூறினான்.
ஒரு மாதத்திற்கு அப்புறம் சண்முகம் அவன் பைக்கினை சர்வீஸ் செய்ய ராம்நாடு போயிருந்தான். பைக்கினை சர்வீஸ் செய்யக் கொடுத்து விட்டு திரும்பும் போது ராஜம் மோட்டரூக்கு பக்கத்த்தில் இருந்த டாடா சுமோ கார் ஷோரூம் வாசலில் அந்த ஏஜண்டுகள் இருவரையும் பார்த்தான். எண்ணன்னே இந்தப் பக்கம்" ஏஜண்டுகளிடம் சண்முகம் கேட்டான்.
"வண்டி ஒன்னு புக் பண்ண வந்தோம் தம்பி"
"இன்ஸ்டால்மெண்டான்னே" சண்முகம் கேட்டான்.
"இல்ல தம்பி ரெடிகேஷ்"
யோசனையுடன் வீடு திரும்பிய சண்முகத்திடம் மனைவி சொன்னாள். "என்னங்க உங்களுக்கு விசயம் தெரியுமா என் தங்கச்சி புருசன்{மலைச்சாமி} டிராக்டர் ஒன்னு வாங்கியிருக்காராம். தீடிருன்னு ஏது அவருகிட்ட இம்புட்டு காசு"
இப்பல்லாம் இருட்டானதும் சண்முகம் டார்ச்சு ஒன்னு எடுத்துக்கிட்டு மதிலோரமா தேடிக்கிட்டு இருக்கான்.

திங்கள், 8 பிப்ரவரி, 2010

BRMS பட்டப்படிப்பை வரவேற்போம்

கிராமப்புற மக்களுக்கு சிறந்த மருத்துவ சேவை அளிக்கும் பொருட்டு BRMS ( Bachelor of Rural Medicine and Surgery) என்னும் மூன்றாண்டு பட்டப் படிப்பை அறிமுகப் படுத்தப் போவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் அறிவித்துள்ளார்.
MBBS படித்து முடித்த மருத்துவர்கள் ஓராண்டு கிராமப்புறங்களில் கட்டாயமாக சேவை செய்ய வேண்டும் என முன்னாள் நடுவன் அரசு சுகாதாரத் துறை அமைச்சர் மருத்துவர் அன்புமனி அறிவித்த போது மருத்துவர்கள் தரப்பில் அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் வேறு வழியின்றி இந்த பட்டப் படிப்பை அறிமுகப் படுத்துவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.


இன்றைய காலக்கட்டத்தில் மருத்துவம் பொறியியல் போன்ற தொழில் கல்வி படித்தோர் படித்து முடித்ததும் குறுகிய காலங்களில் தாங்கள் கல்விக்காக முதலீடு செய்த பணத்தினை எடுக்கும் பொருட்டு நல்லதொரு வேலையினை நகரத்திலோ வெளிநாட்டிலோ தேடிக் கொள்கின்றனரே ஒழிய யாரும் கிராமப் புறங்களில் சேவை செய்யும் நோக்கத்தில் முன்வருவதில்லை. அப்படியே வெகுசிலர் முன் வந்தாலும் கிராம மக்களிடமிருந்து அவர்களுக்கு சரியான வரவேற்பு கிடைப்பதில்லை. காரணம் கிராம மக்களிடம் உள்ள அறியாமை மற்றும் அவர்களின் மிகக் குறைந்த வருமானம்.




MBBS மருத்துவர்கள் சோதனை என்னும் பெயரில் வசூலிக்கும் (Diagnosing Charges) கட்டணங்கள் கிராமப் புற மக்களை குறைந்த செலவில் மருத்துவம் செய்யும் RHMS DHMS என பட்டங்கள் போட்டுக் கொண்டு மருத்துவம் செய்யும் சாலையோர மருத்துவர்களை(Quack doctors) நாட வைக்கிறது.

எனது இராமநாதபுர மாவட்ட கிராமப்புறங்களிலும் இது போன்ற போலி மருத்துவர்கள் (Quack doctors) நிறைய உண்டு. நோய்களுக்கு அவர்கள் அளிக்கும் வித்தியாசமான சிகிச்சை முறைகளை எந்த வித விஞ்ஞானத்திலும் அடக்க முடியாது.


எலும்பு முறிவு ஏற்பட்டால் எம் மக்கள் செல்வது நுடங்கட்டி வலசை என்னும் ஊருக்குத்தான். இங்கு முட்டைப்பத்து என்னும் சிகிச்சை மிகப் பிரபலம். நோயாளியுடன் உதவியாள் ஒருவர் பத்து நாள் தங்கி சிகிச்சை பெற கட்டணம் வெறும் ஆயிரம் மட்டுமே. இதையே நகரில் உள்ள எலும்பு முறிவு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தால் இரத்த சோதனை யூரின் சோதனை,ECG, X ray , Scan மற்றும் அறைவாடகை மருந்து என குறைந்தது இருபதாயிரம் வேண்டும்.



நாட்பட்ட வயிற்று வலிக்கு மக்கள் செல்வது முதுகுளத்தூருக்கு. இங்குள்ள வைத்தியர் தன்னிடம் உள்ள ஒரு நீண்ட குழாய் ஒன்றை தன் வாயில் வைத்து மறு முனையை நோயாளியின் வாயில் வைத்து உறிஞ்சுகிறார். உடன் ஒரு கருப்பு நிறத்தில் ஒரு திடப் பொருளை எடுத்துக் காட்டி "இதுதான் உன் வயிற்றுக் கோளாறுக்குக் காரணம் இனி எந்த பயமுமில்லை" என வைத்தியம் செய்கிறார். இந்த வைத்தியத்திற்கு பெயர் மாந்தம் எடுப்பது.இதற்கான கட்டணம் வெறும் 100 ரூபாய் மட்டுமே. உண்மையில் அந்த திடப் பொருள் நோயாளி வயிற்றில் இருந்ததா அல்லது வைத்தியரின் வாயில் இருந்ததா என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம்.



இதே முதுகுளத்தூரில் இன்னும் ஒரு வைத்தியம் உள்ளது. அது மஞ்சள் காமாலைக்கானது. பொதுவாக கிராமங்களில் மஞ்சள் காமாலை வந்தால் கீழாநெல்லி சாறினை கொடுத்து சரிசெய்யும் வைத்தியர்களை நாடுவதுண்டு. கீழக்கரை இலட்சுமிபுரம் உச்சிப்புளி ரெயில்வே கேட் காரைக்குடி போன்ற இடங்களில் இந்த வகை வைத்தியம் மிகப் பிரபலம். ஆனால் முதுகுளத்தூர் வைத்தியம் இதற்கு மாறுபட்டது. நோயாளி உள் மருந்து உட்கொள்ள தேவையில்லை. நோயாளி வைத்தியரை நேரடியாகப் பார்க்கவும் தேவையில்லை. ஒருவகையான் வேர் ஒன்றை மருத்துவர் தருகிறார். அதை நோயாளிக்கு வேண்டிய நபர் யாரவது வாங்கி வந்து நோயாளியின் கையிலோ அல்லது கழுத்திலோ கட்டி விட்டால் போதும் மஞ்சள் காமாலை குணமாகி விடுகிறதாம்.



எங்கள் ஊர் கீழக்கரையிலும் ஒரு வினோத வைத்தியர் உண்டு அவர் பெயர் டிஸ்கோ ஆலிம்சா. டிஸ்கோ ஆடி குணமாக்குவதில்லை இவர் வியாதிகளை. மாறாக ஒரு குவளை தண்ணீரை மந்திரித்து நோயாளியின் முகத்திலும் தலையிலும் தெளிக்கிறார். இதற்கு இவர் வசூலிப்பது வெறும் முப்பது ரூபாய் மட்டுமே. வெள்ளி செவ்வாய் கிழமைகளில் இங்கு கூட்டம் "எமைக்காத கூட்டம்" என்பார்களே அப்படி ஒரு கூட்டம்.



இதெற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் ஒரு வைத்தியம். அது மாவட்ட எல்லையான பார்த்திபனூரில். இங்குள்ள சுற்றுப் புற கிராம மக்கள் முதுகு மற்றும் கழுத்து வலி வந்தால் அனுகுவது ஒரு இஸ்லாமிய முதியவரை. நோயாளி அவரது வீட்டுக்கு இரண்டு சிறிய கூழாங்கற்களை எடுத்துச் செல்ல வேண்டும். வீட்டின் முன் நின்று வைத்தியரை அழைக்க வேண்டும். அவர் வந்து "கற்களை கீழேப் போட்டுவிட்டு திரும்பிப் பாராமல் செல்லுங்கள்" என சொல்லுகிறார். அதன் படி செய்தால் முதுகு வலி மற்றும் கழுத்துவலி குணமாகிறது என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை. இதற்கு வைத்தியர் கட்டணம் ஏதும் வசூலிப்பதில்லை.



இதெல்லாம் போக "நோய்க்கும் பார் பேய்க்கும் பார்" என்னும் பழமொழி ஒன்று கிராமப் புறங்களில் பிரசித்தம். அதன்படி நோய்க்கு இதுபோல் போலி வைத்தியர்களிடம் வைத்தியம் செய்து கொண்டிருக்கும் போதே கோடாங்கி, குறிசொல்லி,துன்னூறு(திருநீறு)பொடுபவர்,கப்பலோடி முனி, ஒத்தைப்பனை முனி, முக்கு முனி, ஆலிம்சா, தர்கா என பல்வேறு நபர்களையும் துணைக்கழைப்பதுண்டு.



இதெற்கெல்லாம் மூலகாரணம் நகரங்களில் உள்ள மருத்துவமனைகள் வசூலிக்கும் கட்டணங்கள் ஏழை மக்களுக்கு எட்டாக் கனியாக இருப்பதுதான்.காய்ச்சலோ அல்லது தலைவலியோ என வரும் நோயாளிகளிடம் நகர மருத்துவர்கள் தங்களிடம் உள்ள அதி நவீன கருவிகளுக்கு வருமானம் வரும் வகையில் இரத்த சோதனை, சிறுநீர் சோதனை, X RAY , ECG, SCAN, ENDOSCOPY என கறக்கத் தவறுவதில்லை.

சிக்கலான மருத்துவத்திற்கு இவற்றைப் பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால் சாதாரன காய்ச்சல் தலைவலி அஜீரனக் கோளாறுகளுக்குக் கூட இந்த சோதனைகளை பயன்படுத்துவதால் கிராமப் புற மக்களுக்கு நகர மருத்துவங்கள் நரக மருத்துவங்களாகி விடுகிறது. ஒரு முறை சென்று சூடு கண்ட பூனைகளாகி விட்ட யாரும் வியாதி வந்தால் நகர மருத்துவர்களை நாடுவதில்லை.

அரசு மருத்துவமனைகளின் அவலங்களும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.ஊழியர்களின் அலட்சியப்போக்கும் அரசு மருத்துவ மனைகளின் நீண்ட வரிசைகளும் கிராமப்புற மக்களை இது போல் முறையற்ற போலி வைத்தியம் செய்பவர்களிடம் செல்ல வைக்கிறது.

எனவே வருமானம் குறைந்த கிராமப் புற மக்களுக்கு BRMS படித்த மருத்துவர்கள் பணியிலமர்த்தப்பட்டால் போலி மருத்துவர்களிடமிருந்து விடுதலையும் அதே நேரத்தில் பாகுபாடற்ற தரமான் சிகிச்சையும் கிடைக்கும். கிராமப் புற மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இம் மருத்துவப் படிப்பின் பாடத்திட்டம் அமைய வேண்டும். அதே போல் இவர்களை பணியிலமர்த்தும் கிராமப் புறங்களில் குறைந்த பட்சம் இரத்த சிறுநீர் பரிசோதனைகள் இலவசமாக மக்களுக்கு கிடைக்க அரசு முன் வர வேண்டும். அவ்வாறு செய்யும் பட்சத்தில் இம் மருத்துவர்களுக்கு அமோக வரவேற்பு கிராம மக்களிடமிருந்து கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.





புதன், 3 பிப்ரவரி, 2010

அதுக்கு நான் கல்யாணம் பண்ணாம இருந்துருக்கனும்.

"நீ எப்பவாது தனியா உட்கார்ந்திருக்கியாடா" தீடிர்ன்னு நண்பன் ஜாபர் கேட்டான்.

ஜாபர் என் பள்ளித்தோழன். சென்னையில் தொழில் செய்கிறான். நான் சென்னை போகும் போதெல்லாம் இவனைப் பார்க்க தவறுவதில்லை. சமீப காலமாக குண்டலினி சக்தி,ஜீவ முக்தி இப்படித்தான் பேசிக் கொண்டிருக்கிறான்.

"என்னடா கேட்டதுக்கு பதில் சொல்லு என்னைக்காவது தனியா உட்கார்ந்திருக்கியாடா" மறுபடியும் கேட்டான்.

"ஏன் இல்லை தினமும் காலையில் வெளிக்கி இருக்கும் போது தனியாத்தாண்டா உட்காந்திருக்கேன்."

"அப்ப முக்கிக்கிட்டு இருப்ப, நான் கேட்டது எந்த வித எண்ணங்களும் இல்லாம அம்மாவோட கருப்பையில் இருந்தோமே அதே மாதிரி."

"நீ என்ன சொல்ல வர்றே தியானத்தப் பத்தியா"

"ஆமா தினமும் காலையில் ஒரு பத்து நிமிசம் பத்மாசனம் போட்டு உட்கார்ந்து இரண்டு புருவ முடிச்சுக்கிடையே உள்ள மையத்தினை நோக்கி உன் மனத்த குவிச்சுப் பாரு. ஒரு வித்தியாசமான அனுபவத்த உணர்வே"

"புரியும் படியா சொல்லுடா"

"அதாவது மனுசனாப் பிறந்த எல்லோரும் ரெண்டு வித எண்ணங்களோடத்தான் இருக்கிறாங்க. ஒன்னு கடந்தகாலத்த அசைப் போட்டுகிட்டு இருக்கிறது. இது மைனஸ் 1,2,3 ....மாதிரி. இல்லன்னா அடுத்து என்ன செய்யனும்னு யோசிச்சுகிட்டு இருப்பாங்க இது +1,2,3 மாதிரி. இது மாதிரி இல்லாம நம்ம மனத்த தியானத்தின் மூலமா எந்த வித சிந்தனையும் இல்லாம ஒரு பத்து நிமிசம் 0 பூஜ்ய மனநிலைக்கு கொண்டு வந்தோம்னா அது பின்னாடி நம்முடைய ஜீவமுக்திக்கு ரொம்ப உபயோகமா இருக்கும்".

"ஜீவ முக்தியா ஏண்டா சாகப் போறதுக்கு இப்பவே பயிற்சி எடுக்கச் சொல்லுறியா?".

"ஒருவிதத்துல அப்படித்தான்னு வச்சிக்கோ. மனுசன் இறக்கும் போது அவனுக்கு ஏற்படும் வலி இருக்கே அத சொல்லவோ விவரிக்கவோ முடியாது. பொண்டாட்டி பிள்ளைங்க சொத்து சுகம் இது எல்லாம் விட்டுட்டு போறம்ன்னு ஒரு பெரிய வேதனையா இருக்கும்.ஆனா இந்த தியானத்தப் படிப்படியா செய்வதின் மூலம் உன் ஜீவன் உன் உடலை விட்டு வெளியே போய் வருவத நீ நிதர்சனமா உணரலாம். இந்தப் பயிற்சி மரணத்தினை தைரியமாக எதிர்கொள்ள வைக்கும். அது மட்டுமல்ல நீ இந்த புற உலகில் என்னவெல்லாம் சந்தோசம்ன்னு நினைக்கிறாயோ அது உனக்குள்ளேயே இருக்கு என்பதையும் நீ உணரலாம்".

"எப்படி ஐஸ்கீரீம் சாப்பிடம்ன்னு நினைச்சா அது இந்த தியானத்து மூலமா கிடைக்குமா."

"கண்டிப்பா அதுமட்டுமல்ல மாம்பழ தாகத்த தீர்த்துக்கனும்னு நினச்சாலும் சரி ஓல்ட் மங்க் குவார்ட்டர் அடிக்கனும்னு நினைச்சாலும் சரி அதுனால உனக்குக் கிடைக்கிற சந்தோசம் இந்த தியானத்து மூலமா கிடைக்கும்"ன்னு சொல்லி ஓசோ சுவாமி நித்யானந்தர் எழுதிய சில புத்தகங்களக் கொடுத்தான்.

"சரி முயற்சி செய்து பார்ப்போம், சரியா வந்துச்சுனா கருணாநிதிக்கு ஒரு கடிதம் போட்டு டாஸ்மாக் கடையெல்லாம் மூடச் சொல்லிட்டு அதுக்குப் பதிலா தியான மண்டபங்களக் கட்ட சொல்லுவோம்ன்னு நினைச்சுகிட்டு "சரிடா நீ சொன்னமாதிரியே தினமும் பத்து நிமிசம் உட்காருகிறேன் எப்ப உட்காரனும் காலையிலா மாலையிலா?"ன்னு கேட்டேன்.

"காலையிலதான் ஆனா அதுக்கு முன்னாடி காலைக்கடன்லாம் முடிச்சுகிட்டு வயித்த சுத்தமா வச்சிகிட்டு பண்ணு"ன்னான்.

ஊருக்கு வந்தவுடன் முத நாளு காலையில வெளியெல்லாம் போயிட்டு மொட்டமாடியில ஒரு பத்மாசனத்தப் போட்டு ஜாபர் சொன்னமாதிரி இரண்டு புருவமுடிச்சுகிடையே உள்ள மையத்தின நோக்கி மனசை குவிக்க ஆரம்பிச்சேன்.

"என்னங்க" தங்கமணியின் குரல்.

ஆரம்பத்துலேயே அபசகுனமா "என்னடி" என்றேன் எரிச்சலுடன்.

"இங்க வந்து பாருங்க"

கீழே வந்து பாத்தா நம்ம சேட்டைக்காரர் நடு ஹாலில் ஆய் இருந்து அதுமேல ஆட்டோ பொம்மை வச்சு ஓட்டிக்கிட்டு இருந்தாரு.

"ஏண்டி பாத்துகிட்டு இருக்கியே கழுவிவிடக்கூடாதா"

"அடுப்படியில கைவேலையா இருக்கேன்லே தூக்கிகிட்டு போயி கழுவிவிட்டு அப்படியே இத அள்ளி கொல்லையில போட்டுட்டு டெட்டால் வச்சு தரைய தேய்ச்சு விடுங்க"ன்னு அடுக்கடுக்கா பல ஆணைகள் போட்டா.

ஆணைகளை சிரமேற்கொண்டு நிறைவேற்றியதில் அன்னைக்கு தியானம் பண்ணுறதுக்கு வழியில்லாம போச்சு.

தொடர்ந்த நாள்களில்.................

"என்னங்க தண்ணிதொட்டி நிறையிற சவுண்டு கேட்குது பாருங்க போயி மோட்டர அமத்துங்க"

வாஷிங்மெசின் சத்தம் கொடுக்குது பாருங்க போயி துணியெல்லாம் எடுத்து காயப் போடுங்க"

"என்னங்க அடுப்புல சட்டிய வச்சிருக்கேன் கொல்லையில ரெண்டு கருவேப்பிலை ஒடிச்சிகிட்டு வாங்க"

"சித்த இந்த தேங்காய துருவிக் கொடுங்க"

"சித்த இந்த சின்ன வெங்காயத்த உரிச்சுக் கொடுங்க"

"சாமிபடத்துக்கு பூவப் போடுங்க"

"சேந்தி (loft) சிலாப்புல இருந்து முக்குளி சட்டிய எடுத்துக் கொடுங்க".........

@#$%##@$#@#$#@#@#@#.................................................................................

ஒருவாரம் கழிச்சு ஜாபர் போன் போட்டான். "தம்பி என்ன நான் சொன்னத முயற்சி பண்ணிப் பாத்தியா?.

என்னத்த சொல்ல தலைப்பத்தான் அவனுக்கு நான் பதிலா சொன்னேன்.


புதன், 27 ஜனவரி, 2010

அப்பாடி அடிச்சாச்சு அரைச்சதம்


இந்த பதிவு எனக்கு மிகவும் மகிழ்சியாகவும் அதே நேரத்தில் மலைப்பாகவும் உள்ளது.

ஏதோ தமிழ் திரட்டிகளைப் படித்தோமா பின்னூட்டம் இட்டோமா என இருக்கையில் சகோதரி சுமஜ்லாவின் பதிவைப் பார்த்து நானும் ஒரு வலைப்பூவை எழுத ஆரம்பித்தேன்.

ஆரம்பத்தில் ஒரு வேகத்தில் எதைப் பற்றியும் கவலைப்படாமல் எழுதிக் கொண்டிருந்தேன்.

குதிரைக்கு கடிவாளம் போடுவது போல அருமை நண்பர் துபாய் ராஜா அவர்கள் தன்னுடைய பின்னூட்டங்களின் மூலம் எனக்கு கடிவாளம் இட்டதுடன் நான் செல்ல வேண்டிய பாதை பற்றியும் எடுத்துக் கூறி எனக்கும் இன்றும் சிறந்த ஆசானாக உள்ளார். அவருக்கும் அவரது அன்புக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் எப்போதும்.


அப்புறம் எனது பதிவுகளுக்கு தங்களது மேலான பின்னூட்டங்களின் மூலம் என் வலைப் பூ வாடாமல் நீர் வார்த்து உரமிட்ட கீழ் கண்ட அன்பு சகோதர நெஞ்சங்களுக்கு எனது நன்றிகள் பற்பல.


அ.நம்பி
அத்திவெட்டி ஜோதிபாரதி
அமுதா கிருஷ்னா
அருண்
அன்பு
அன்புடன் அருனா
இராகவன் நைஜீரியா
இல்யாஸ்
இளங்குமரன்
இளைய கவி
எட்வின்
கலாட்டாப் பையன்
கவிதை காதலன்
கார்கோட நாகன்
கார்ணம் ஆயிரம்
கிளியனூர் இஸ்மத்
குடிகாரன்
குடுகுடுப்பை
கோசலன்
கோவி கண்ணன்
ச செந்தில் வேலன்
சதிஷ்
சந்தனமுல்லை
சபரிநாதன் அர்த்தநாரி
சபி
சிவன்
சின்ன அம்மினி
சுப்பு
சூப்பர் சுப்ரா
செல்லாதவன்
சென்ஷி
டாக்டர் புருனோ
தண்டோரா
திகழ்
துபாய் ராஜா
துளசி கோபால்
தேவன் மாயம்
தேனீ
தோழி
நாமக்கல் சிபி
நாளும் நலமே விளையட்டும்
நிகழ்காலத்தில்
நிலா
நிஜாமுதீன்
நெகம்ம்
பதி
பராரி
பழமைபேசி
பா வேலன்
பாலகுமார்
பிரியமுடன் வசந்த்
பினாத்தல் சுரேஷ்
மயூ
மஸ்தான்
மிரட்டல்
முனைவர் குணசீலன்
யுவகிருஷ்னா
யூர்கன் க்ருகியர்
யெஸ்.பால பாரதி
யோகன் பாரிஸ்
ரமேஷ் ரொம்ப நல்லவன்
ரமேஷ் விஜய்
ரஹ்மான்
ராம்
ராஜா/KVR
ரேகா ராகவன்
ரோஸ்விக்
லோகு

வடகரைவேலன் அண்ணாச்சி
வால்பையன்
ஜெய் சங்கர் ஜெகநாதன்
ஜெரி ஈசானந்தா
ஜோ
ஸ்டார்ஜன்
ஸாதிகா
GERSHOM
kgjawarlal
Mrs.Menakasathiya
Nats
Sachanaa
STAR
ttpian


இதில் யாரவது விடுபட்டிருந்தாலும் அவர்கள் என்னை மன்னிக்கவும். அவர்களுக்கும் எனது நன்றி.


சரி ஓகே.

50வது பதிவை சும்மா நன்றி அறிவிப்புடன் விடாமல் ஒரு சின்னக் கவிதையோடு முடிக்கிறேன்


டாஸ்மாக்
உன்னைக் காணாவிடில்

முன்னிரவு தூக்கமில்லை

கண்டுகொண்டால்

பின்னிரவு தூக்கமில்லை.

சத்தியமா இந்தப் பதிவு டாஸ்மாக் சென்று வந்தபின் எழுதியது அல்ல என கூறிக்கொள்கிறேன்.


புதன், 13 ஜனவரி, 2010

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்


நாளை தமிழர் திருநாள். பொங்கல் பண்டிகை. அத்துடன் அரசு அறிவித்தபடி நாளைதான் தமிழ் புத்தாண்டு.

என்னைப் பொறுத்தவரை கலைஞர் கருணாநிதி செய்த உறுப்படியான நல்ல விடயங்களில் தலையாயது இந்த தைத் திங்கள் முதல் நாளை தமிழர் புத்தாண்டாக அறிவித்ததுதான்.

அறிவித்தபடி யாரும் பொங்கல் திருநாளை தமிழர் புத்தாண்டாக கொண்டாடுகிறார்களா எனப் பார்த்தால் இல்லை என்றே வருத்தத்துடன் சொல்ல வேண்டும்.

நாட்காட்டிகளில் பார்த்தால் வழக்கம் போல் சித்திரை முதல் நாளையே தமிழர் புத்தாண்டாக சொல்லியிருக்கிறார்கள். இன்னும் மக்களுக்கு அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வரவில்லை என்று கருத வேண்டியிருக்கிறது.

ஒரு ஆண்டில் பாதி நாட்களை விடுமுறையாக கொண்டாடும் நாட்டில் பொங்கல் திருநாளை தமிழர் புத்தாண்டாக அறிவித்ததால் சித்திரை முதல் நாள் விடுமுறை குறையுமே என்று தமிழ் சமுதாயம் கருதுகிறதோ என்னவோ.

பொங்கலுக்கு அடுத்தடுத்து மாட்டுப் பொங்கல் திருவள்ளுவர் தினம் என தமிழர் பெருமை கூறும் நல்ல நாட்கள் இருந்தாலும் தீபாவளியை கொண்டாடும் அளவுக்கு சில தமிழர் பொங்கலை கொண்டாடுவதில்லை. ஆயுதபூசையை கொண்டாடும் அளவுக்கு மாட்டுப் பொங்கலை கொண்டாடுவதில்லை. இளைய சின்ன வீரத் தளபதிகளின் பிறந்த நாளை கொண்டாடும் அளவுக்கு திருவள்ளுவர் தினத்தை கொண்டாடுவதில்லை.

இந்த சில தமிழர்கள் எங்கு இருக்கிறார்கள் என்றால் கண்டிப்பாக நகரங்களில்தான். குறிப்பாக தமிழன் தலைநகர் சென்னையில். பொங்கலும் மாட்டுப் பொங்கலும் உழவர்கள் தொடர்புடையது அதை உழவுத்தொழிலே செய்யாத நகரங்களில் ஏன் கொண்டாட வேண்டும் என இந்த நகரவாசிகள் நினைக்கலாம்.

தமிழ்நாட்டுக்கு தொடர்பே இல்லாத கிருட்டினன் நரகாசுரன் கட்டுக்கதைகளை அடிப்படையாக கொண்ட தீபாவளியை சிறப்பாக கொண்டாடும் போது அதில் பத்தில் ஒரு பங்காவது நம் உண்ணும் உணவை நமக்குத் தர உழைக்கும் உழவ்னுக்கும் கால் நடைகளுக்கும் மரியாதை தரும் பொங்கல் திருநாளுக்கு தர தமிழர்கள் முன் வர வேண்டும்.

அரசு வெறும் அறிவிப்புடன் நின்று விடாமல் பொங்கல் திருநாளை தமிழர் புத்தாண்டாக அனைவரும் கொண்டாடும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அதற்கு முன்னதாக சித்திரை முதல் நாள் அரசு விடுமுறை இருந்தால் அதை முழுமையாக நீக்க வேண்டும்.

நாளை தமிழர் புத்தாண்டு என சிறப்பிதழ் வெளியிடுகின்ற பார்ப்பன ஏடுகள் குறிப்பாக தினமலர் போன்றவற்றினை அரசு அவ்வாறு செய்யக்கூடாது என கண்டிப்புடன் அறிவுறுத்த வேண்டும். நாட் காட்டிகளில் தைத் திங்கள் முதல் நாளை தமிழர் புத்தாண்டாக அறிவிக்க செய்ய வேண்டும்.

குக் பன்னி செர்வ் பன்னி ஈட் பன்னி டைஜிஸ்ட் பன்னி டெபகேட் பன்னி என பன்னித் தமிழ் பேசும் தமிழன் காதில் செவுடன் காதில் சங்காக இது ஒலித்தாலும் என்றாவது ஒருநாள் காது கேட்கும் என முயற்சியை கை விடாது தமிழ் அறிஞர்கள் அனைவரும் தொடர வேண்டும்.

அதற்கான என்னால் ஆன முயற்சியே இந்த பதிவு.

எனவே தமிழ் கூறும் நல்லுலகம் அனைவருக்கும் என் இனிய

தமிழ்
புத்தாண்டு
வாழ்த்துக்கள்.

இந்த தமிழ் புத்தாண்டில் அனைவரும் எல்லா வளங்களும் பெற தமிழ் கடவுளாம் அப்பன் முருகனை வேண்டுகிறேன்.

புதன், 30 டிசம்பர், 2009

"வேட்டைக்காரன்"- விமர்சனம்





எங்க வீட்டில் ஒரு சேட்டைக்காரர் இருக்கிறார். அவர் இந்த வேட்டைக்காரனின் தீவிர ரசிகர். இதைப் பற்றி நான் ஏற்கனவே ஒரு பதிவு எழுதியிருக்கிறேன்.


வேட்டைக்காரனைப் பார்க்க தீடிரென எங்க வீட்டு சேட்டைக்காரர் அடம் பிடித்ததால் வேறு வழியில்லாமல் உயிரைப் பணயம் வைத்து இராமநாதபுரம் ரமேஷ் திரையரங்குக்கு செல்ல வேண்டியதாயிற்று.



ரமேஷ் தியேட்டரின் கேண்டின் காபி போல ஆறி அவலான ஒரு கதை. இயக்குனர் பாபு சிவன் கதைக்காக ரொம்ப யோசிக்கவில்லை. விஜயின் பழய திருப்பாச்சி கதையையே கொஞ்சம் மாற்றிப் போட்டிருக்கிறார். என்ன திருப்பாச்சியில் விஜய் திருப்பாச்சியிலிருந்து சென்னை செல்வார். இதில் தூத்துக்குடியிலிருந்து சென்னை செல்கிறார்.




பிளஸ் டூவில் நான்கு வருடம் பெயிலான கதாநாயகனுக்கு 21 வயதுதான் இருக்கும். 30க்கு மேல் போன விஜயை 21 வயது கல்லூரி மாணவனாக கற்பனை செய்ய முடியவில்லை. ஒரு வேளை பிளஸ் டூவில் நான்கு வருடம் பெயிலானது போல் ஒவ்வொரு வகுப்பிலும் நான்கு நான்கு வருடம் பெயிலாயிருப்பார் போலும் கதை போகிற வேகத்தில் இயக்குநர் இதை சொல்ல மறந்து விட்டார்.



அருந்தததீயில் கலக்கிய அனுஷ்காவிற்கு இதில் மிஸ்டர் பாரத் படத்தில் அம்பிகா கலக்கியது!!! போல ஒரு கனமான வேடம். மிக மிக நிறைவாக செய்திருக்கிறார்!!!!.



சத்யன் இறந்து அவரது உடல் பெட்டியில் வரும் போது என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த என் அண்ணன் மகன் பிரபு "சித்தப்பா இப்ப ஒரு காமடி வருது பாருங்க"ன்னான். என்னடான்னா விஜய் அழுவது அவனுக்கு காமடியாம். சின்னப் பையன் துள்ளாத மனம் துள்ளும் படத்தினை பார்த்திருக்க மாட்டான் போல இருக்கிறது. அவனுக்கு பழய வேட்டைக்காரன் எம்.ஜி. ஆர் அழுவதை ஒரு நாள் காட்டினால் அவன் கருத்தினை மாற்றிக் கொள்வான் என நினைக்கிறேன்.



என்கவுண்டருக்கு தப்பி நதியில் ஓடி அருவியில் விஜய் குதிக்கும் காட்சியைப் பார்க்கும் போது இயக்குநர் பாபு சிவன் நம்ம பிரேவ் ஹார்ட் புகழ் மெல் கிப்ஸனின் அகோபலிப்டா படத்தினைப் பார்த்திருப்பது சட்டென்ன பிடிபடுகிறது. குதிப்பது விஜய்தானா என நான் சந்தேகம் எழுப்ப உடனே என் பக்கத்தில் அமர்ந்து படம் பார்த்துக் கொண்டிருந்த என் மனைவி என் விலாவில் இடித்து " அவருக்கு பங்கி ஜம்பெல்லாம் தெரியும். ஏற்கனவே குஷி படத்தில் குதித்து இருக்கிறார்" என என் சிற்றறிவுக்குப் புரிய வைத்தாள். அப்பத்தான் எனக்கு ஒரு விஷயம் பிடிபட்டது. எப்படி எங்க வீட்டு சேட்டைக்காரர் வேட்டைக்காரனின் ரசிகர் ஆனார் என்பது. "தாயைப் போல் பிள்ளை".


ஹீரோக்களுக்கு பில்ட் அப் கொடுப்பதற்காக ஒரு குத்துலயே ஆட்டோ மேல் விழுந்து கை கால்களை உடைச்சுகிட்டு விழும் சண்டை நடிகர்களுக்கு ஒரு ராயல் சல்யூட். இந்தப் படத்துல உண்மையிலேயே ரொம்ப உழைச்சிருக்காங்க. காட்டுல சிங்கத்தோட ஒரு அடி 140 பவுண்ட் எடை இருக்குமாம். படத்தப் பார்க்கும்போது விஜயின் ஒரு அடி 140 டன் இருக்கும் போல இருக்கு.


படத்துல உண்மையான ஒரு ஆறுதல் பங்கெல்லாம் வச்சிகிட்டு மிரட்டியிருக்கிற செல்லா கேரக்டர். Really Hats off.



படம் பார்த்துட்டு வந்த மறுநாளு (நேத்து ) K டிவில மோனிஷ என் மோனலிசா படத்தினை எங்கண்ணன் பையன் பிரபு உட்கார்ந்து பாத்துகிட்டு இருந்தான். "எப்படிடா இந்த படத்தல்லாம் இவ்வளவு தைரியமா பார்க்குற எங்கிருந்துடா உனக்கு இவ்வளவு தைரியம் வந்தது"ன்னு கேட்டா அதுக்கு அவன் சொல்லுறான் " எல்லாம் வேட்டைக்காரன் படம் பாத்ததுனாலதான் சித்தப்பா"ன்றான். ஆஹா இந்த தமிழ் இளைய சமுதாயம் எதையும் தாங்கும் இதயம் பெற நம்ம விஜய் குருவி,வில்லு, வேட்டைக்காரன் அப்படின்னு அடுத்தடுத்து முயற்சி செஞ்சுகிட்டு இருக்கிறத நினைக்கும் போது அவரை எவ்வளவு பாரட்டுனாலும் தகும்.






ரமேஷ் தியேட்டர்ல ஒரு டிக்கட் விலை 100 ரூபாய். சேட்டைக்காரர் அடம் பிடிச்சதுனாலயும் மொஹரம் பண்டிகை விடுமுறைக்காக அண்ணன் பிள்ளைங்க தங்கச்சிப் பிள்ளைங்க எல்லாம் வீட்டுக்கு வந்ததாலயும் படை பட்டாளத்தோட தியேட்டருக்கு போனதுல 2000 ரூபா அவுட்டு.





இருந்தாலும் " நான் அடிச்சா தாங்க மேட்டேய் நாலு மாசம் தூங்க மேட்டேய் வீடு போயி சேர்ர்ற மேட்டேய்"ன்னு எங்க வீட்டு சேட்டைக்காரர் அப்பப்ப படிக்கும் போது படம் பாத்ததுல ஒரு சொல்லவொன்னா திருப்தி கிடைக்குது.