புதன், 26 ஜனவரி, 2011

சவுதியில் ஒரு வாய்க்காலுக்கு என்னுடைய பெயர்


பத்து நாளைக்கு முன்னே எங்க கம்பெனி போர்மென் அரங்கசாமி எனக்கு போன் பண்ணுனார். “சார் சைட்டுல ஒரு பிரச்சினை உடனே வாங்க.

அரங்கசாமி நம்ம ஊருக்காரருதான், சவுதில 20 வருசம் சர்வீஸ், சவுதி அல் ஹாசா மாவட்டத்துல அவருக்கு எல்லா இடமும் அத்துபடி.

சவுதி அல் ஹாசா மாவட்டத்துல பல இடத்தில கம்பெனிக்கு வேலை நடக்கிறதால “எங்கண்ணே வரனும்ன்னு நான் கேட்டேன்.

“பட்டாலியா சுல்த்தான் பள்ளிவாசலுக்கு கிழக்கே தணிகாசலம் வாய்க்காலுக்கு வந்துருங்கன்னு அரங்கசாமி சொன்னார்.

அல் ஹாசா மாவட்டம் சவுதி பாலைவனத்துலேயே ஒரு சோலை வனம். நம்ம ஊரு மாதிரியே இங்கே எல்லாவித பழமரங்களும் விளையும். குறிப்பா பேரீச்சை மரம் அதிகம். சவுதி அரசாங்கம் இந்த மாவட்டம் முழுவதும் வாய்க்கால்கள் மூலமாக பாசன வசதி செய்து கொடுத்திருக்கிறது. மேலும் கழிவு நீர் வெளியேறவும் அரசு வாய்க்கால் வசதிகளை செய்து கொடுத்திருக்கிறது. அதுனால எங்கப் பாத்தாலும் இந்த மாவட்டம் முழுவதும் சாலையின் நடுவிலும் ஓரத்திலும் வாய்க்கால்களாக இருக்கும்.வாய்க்கால்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு எண் உண்டு. டி1,டி2,டி3 என கணக்கிலடங்காத வாய்க்கால்கள் இந்த மாவட்டத்தில் உண்டு.

எனக்கு ஒரு ஆச்சர்யம், பெரும்பாலும் சவுதி சாலைகளுக்கே கிங்பாத் சாலை, அப்துல் அஜிஸ் சாலை, கிங் பைசல் சாலை என மன்னர்கள் பெயர் மட்டும்தான் இருக்கும். இதில் வாய்க்காலுக்கு தணிகாசலம் வாய்க்கால் என எப்படி பெயர் வந்தது?

ஆர்வம் மேலிடவே நான் அரங்கசாமியிடம் கேட்டேன். “என்னது தணிகாசலம் வாய்க்காலா? எப்படி அதுக்கு அந்த பெயர் வந்தது?

“இப்பத்தான சார் வந்துருக்கிங்க போகப் போக நீங்களே தெரிஞ்சிகிருவிங்கன்னு அந்த வாய்க்காலுக்கு வர்றதுக்கு வழியையும் சொன்னார். அவரு சொன்னமாதிரி அந்த வாய்க்காலுக்கு வண்டியில போய் சேர்ந்தேன்.

வாய்க்கால் ஆரம்பத்துல டி1 என்று மட்டும்தான் எழுதியிருந்தது. ‘என்னங்க தணிகாசலம் வாய்க்காலுன்னுதான் சொன்னிங்க இங்க எந்த போர்டையும் காணோமேன்னு கேட்டேன்.

“அது கவர்மெண்டு நம்பர் சார், ஆனா நம்ம கம்பெனிகாரங்களுக்கு இதை தணிகாசலம் வாய்க்காலுன்னு சொன்னாத்தான் தெரியும். அதுமட்டுமா இங்கே சர்புதின் வாய்க்கால், அஷ்ரப் வாய்க்கால், தாமஸ் வாய்க்காலுன்னு நம்ம கம்பெனி ஆட்கள் பேரில நிறைய வாய்க்கால் இருக்கு. ஏன் நாளைக்கே தங்கராசு நாகேந்திரன் வாய்க்காலுன்னு உங்க பேரிலயே ஒரு வாய்க்கால் வரும் அப்ப நீங்க புரிஞ்சுகிருவிங்கன்னு பூடகமாக முடித்தார்.

சரிதான் நம்ம மதுரையில பாண்டிங்கிற பேருல பல ஆட்கள் இருக்கும்போது அவர்களை தனித்தனியே இனம் காண குட்டைப் பாண்டி நெட்டைப்பாண்டி, வெள்ளைப்பாண்டின்னு பட்டப் பெயர் சொல்லி அழைப்பதை போல இதுல ஏதாவது விசயம் இருக்குமுன்னு நினைச்சுகிட்டேன். அப்போதைக்கு வேலைச் சிக்கலை தீர்க்க முனைப்பட்டதில் அந்த விசயம் மறந்து போனது.

இன்னிக்கு சவுதில நல்ல மழை. அதிகாலை 4 மணிக்கு புடிச்ச மழை 6 மணி வரைக்கும் விடவே இல்லை. அதுக்கப்புறம் 9 மணிக்கு நான் காரை எடுத்துக்கிட்டு பனிமான் என்கிற இடத்துக்கு ஆய்வுக்கு சென்றேன். தோட்டம் உள்ள மஜுரா பகுதிக்கு சென்றபோது நல்ல மழை பெய்திருந்ததால் மணல் சாலை வழுக்க ஆரம்பித்தது. கவனமாக வண்டி ஓட்டியும் ஒரு திருப்பத்தில் திருப்பும்போது சாலை வழுக்கியதால் வண்டி நடுவில் இருந்த வாய்க்காலில் இறங்கிவிட்டது. நல்ல வேளை வாய்க்கால் ஆழம் அதிகம் இல்லாததால் எனக்கு அடி ஒன்றும் படவில்லை.

அப்புறம் என்ன கம்பெனிக்கு போன் போட்டு கிரேன் கொண்டு வந்து வண்டியை தூக்கி திரும்பவும் கம்பெனிக்கு வந்தபோது அரங்கசாமி கேட்டார்.

“சார் அந்த வாய்க்கால் நம்பர் என்ன?

“ம் டி22AG ஏன் கேட்கிறிங்கன்னு கேட்டேன்.

அரங்கசாமி சொன்னார். “அது கவர்மெண்டு நம்பரு, இன்னைலருந்து அந்த வாய்க்காலுக்கு பேரு தஙகராசு நாகேந்திரன் கேனால்


6 கருத்துகள்:

எம் அப்துல் காதர் சொன்னது…

ஆஹா அருமையா சொல்லிடீங்க தல! நாங்க வந்தாலும் அதுல வழுக்கி விழுந்து தான் உங்கள பாக்க வரணுமா?? ஹா..ஹா..

Unknown சொன்னது…

அல் கொபரில் இரவு 12 மணிக்கே மழை ஆரம்பித்து விட்டது

தங்கராசு நாகேந்திரன் சொன்னது…

வாங்க அப்துல் காதர் உங்க வருகைக்கு நன்றி வாங்க ஹாஜா மொகைதீன் உங்க வருகைக்கும் நன்றி

அ.வெற்றிவேல் சொன்னது…

தம்பி நானும் ராமநாதபுரம் தான் என்னைத் தொடர்பு கொள்ளுங்களேன்.. 0508846903

வாவணன் சொன்னது…

இங்கே துபையில் அப்பா கடை, ஒன்றை ஏக்கர் இடம் என்று நம்ம ஊரு பெயரில் நிறைய இடங்கள் உண்டு.

ராம்ஜி_யாஹூ சொன்னது…

அருமை

கருத்துரையிடுக

ஏதாவது சொல்லிட்டு போங்க