செவ்வாய், 11 ஜனவரி, 2011

உள்ளூரில முசப் புடிக்க முடியாம


“கோடிக்கணக்கில் பணம் கொடுத்தான் அவன் கோவிலுக்கென்றே செலவழிப்போம் பெங்களூர் ரமணி அம்மாள் N73யிலிருந்து வேண்டிக் கொண்டிருந்தார்.

உறக்கம் கலைந்த மணி கண்டன் போர்வையிலிருந்து தலையைத் தூக்கி போனின் அலாரத்தை நிறுத்தி மணி பார்த்தான். அதிகாலை 3.30. நசீர் இருக்கிறானா என அவன் படுக்கையைப் பார்த்தான். இல்லை, “பய புள்ள நமக்கு முன்னாடியே எந்திரிச்சிட்டான் போலிருக்கே மனதுக்குள் நசீரைத் திட்டிக் கொண்டே பற்குச்சியில் சுவாச புத்துணர்ச்சியை பிதுக்கினான்.

பாத்ரூம் கதவு பூட்டியிருந்தது. ஆறு பேர் தங்கியிருக்கும் அறை அது. கழிவறை ஒன்றுதான். காலை ஆறு மணிக்கு எல்லோருக்கும் வேலை. தங்கியிருக்கும் முகாமிலிருந்து அவரவர் வேலை பார்க்கும் இடத்திற்கேற்ப பேருந்து 4 மணியிலிருந்து செல்லத் துவங்கும். மணி கண்டனுக்கு தூரத்தில் வேலை. அவனுக்கு கடைசிப் பேருந்து 5.00 மணிக்கு. கடைசிப் பேருந்தை விட்டு விட்டால் பணிக்கு செல்ல முடியாது. அப்புறம் கம்பெனியில் நாலு நாட்கள் சம்பளம் பிடித்தம் செய்வார்கள்.

பல்லைத் துலக்கிய பின்னும் பாத்ரூமிலிருந்து நசீர் வராதது மணிக்கு கவலையை ஏற்படுத்தியது.. மணி பலமுறை நசீரிடம் சொல்லியிருக்கிறான். வந்தா மட்டும் போ, வரலைன்னா போகாதே நீ வருது வருதுன்னு மணிக்கணக்கில் உட்காந்துகிட்டு இருந்தா வர்றவன் எங்கே போறது

உள்ளே கால் கழுவும் தண்ணீர் ஓசை கேட்ட்து. பசி கொண்ட நேரம் தாளிக்கும் ஓசை போல அந்த ஓசை மனதுக்கு நிம்மதியாக இருந்தது

காலைக்கடனை அவசரம் அவசரமாக முடித்து பாதுகாப்பு உடைகளையும் காலணிகளையும் அணிந்து கொண்டு முகாமிலிருக்கும் உணவுக்கூடத்திற்கு வந்தான். மணி 4.30. உணவுக்கூடத்தில் மிக நீண்ட வரிசை. உணவுக்கூடத்தில் இரண்டு வரிசைகள். ஒன்று இந்தியன் வரிசை, மற்றொன்று பிலிப்பினோ வரிசை. இந்தியன், நேபாளி, பாகிஸ்தானி, பங்களாதேசி, ஆப்கான், சிலோன்காரன் அனைவருக்கும் ஒரே வரிசைதான். பிலிப்பினோவுக்கு மட்டும் தனி வரிசை.

மணி கண்டன் தட்டை எடுத்துக் கொண்டு பிலிப்பினோ வரிசையில் நின்றுகொண்டான். இந்திய வரிசையில் நின்றால் சாப்பிட்டு வேலைக்குப் போக முடியாது என மணிக்கு தெரியும்.வரிசையில் முன் நின்ற பிலிப்பினோ ‘ஓ பரே யூ பிலிப்பினோவா என கேலி செய்தான். மணிக்கு அவனது கேலி பெரிதாக தெரியவில்லை.

‘நாய் திங்கிற பயலுக சாப்பாடு நினைக்கும் போதே மணிக்கு குடலைப் புரட்டியது. என்ன செய்ய, இந்திய வரிசையில் நின்றால் நேரத்துக்கு வேலைக்குப் போக முடியாது. வெந்தது வேகாதது என பேதம் பார்க்காமல் அவதி அவதியாக அள்ளித் தின்று முடித்து விட்டு ஓடிப் போய் புறப்பட தயார் நிலையில் இருந்த பேருந்தில் ஏறி அமர்ந்துகொண்டான்.

பனிக்காற்று ஊசிபோல குத்தியது. மணிகண்டன் மங்கி குல்லா எடுத்து அணிந்து கொண்டான். போட்டிருந்த ஸ்வெட்டர் பனி தாங்க வில்லை. சம்பளம் போட்டதும் நல்ல கணமான ஜெர்கின் ஒன்று வாங்க வேண்டும் என நினைத்துக் கொண்டான்.

சம்பளம் எப்ப வருமுன்னு தெரியவில்லை. கம்பெனியில் இப்படித்தான் சமயத்தில் அம்பது நாளுக்கொரு முறைதான் சம்பளம் வரும், எப்பவும் கம்பெனியில் மூன்று மாத சம்பளம் பாக்கி இருந்துகொண்டே இருக்கும். சென்ற வெள்ளிக்கிழமை வீட்டுக்கு போன் செய்த போது சின்னபையனுக்கு உடம்பு சரியில்லை என பொண்டாட்டி சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. இன்னிக்கு சம்பளம் போடாட்டி பங்காளி (பங்களாதேசி)கிட்ட வட்டிக்கு வாங்கியாவது வீட்டுக்கு பணம் அனுப்ப வேண்டும்.என நினைத்துக் கொண்டான்.

வேலை பார்க்கும் இடம் வந்து விட்டது. மணி இடுப்பு பெல்டை அணிந்து கொண்டு சரசரவென இரும்பு சட்டங்களில் ஏறினான். இரும்புச் சட்டம் பனிக்கு ஐஸ் கட்டிப் போல இருந்தது. சவுதி இப்படித்தான் வெயில் காலம் நெருப்பாய் சுடும். பனிக்காலம் கை கால் எல்லாம் விரைத்துப் போய் விடும். உயரமான இரும்புச் சட்டங்களில் ஒரு தடவை ஏறி விட்டால் சாயங்காலம் வேலை முடிந்தபின் தான் இறங்க முடியும். ஒன்னுக்குப் போவதென்றால் கூட பாட்டிலில் இருந்து தூக்கித்தான் போட வேண்டும்.

கீழே வேலை பார்க்கலாம்தான். மணிக்கு வாய்த்த போர்மென் பீகாரி. மணிக்கு இந்தி தெரியாது. அது மட்டுமல்ல தமிழன் ஒருவன் தான் என்ன வேலை கொடுத்தாலும் செய்வான் சட்டம் பேசமாட்டான். அது பீகாரிக்குத் தெரியும் அதனால்தான் மணிக்கு இரும்புச் சட்ட்த்தில் வேலை.

11 மணி இருக்கும். நோக்கியா இரண்டு தடவை சினுங்கியது. எடுத்துப் பார்த்தால் ஊரிலிருந்து தங்கச்சி ராணி. வெளிநாட்டில் இருக்கும் எல்லோருக்கும் ஊரிலிருந்து மிஸ் கால் மட்டும்தான் வருகிறது. சரியா ஒரு ரிங் அளவுக்கு மட்டும் மிஸ் கால் கொடுக்கும் கலையை எங்க இருந்துதான் படிக்கிறானுகளோ. மணி போன் எடுத்து பேலன்ஸ் பார்த்தான். 15 கலாலாதான் இருந்தது. லோக்கல் மிஸ் கால்தான் கொடுக்க முடியும்.

இருந்தாலும் மனசு கேக்கவில்லை மணிக்கு. லோடு அனுப்பும் ஜெயராமனுக்கு போன் போட்டான். “அண்ணே ஒரு பத்து ரியால் மட்டும் அனுப்புங்க கொஞ்சம் அவசரம்என்றான்.

பத்து நிமிடம் கழித்து லோடு வநது சேர்ந்தது.ராணிக்கு ஓரு போனைப் போட்டான். “என்னம்மா நல்லாருக்கியா என்ன விசயம் எனக் கேட்டான்.

“அண்ணே நீ போனதடவ வந்தபோது கொடுத்த போனை என் வீட்டுக்காரர் தொலைச்சிட்டாராம், அவருக்கு வேலை விசயமா போன் அவசியமாத் தேவைப்படுறதுனால உடனே யாராவது வந்தா ஒரு போன் கொடுத்து அனுப்புவியாம் சொல்லச் சொன்னாருதங்கை சொல்ல வந்ததை சொல்லி முடித்தாள். மணிக்கு மயக்கம் வந்தது. சும்மாவா தொலைத்த போன் 800 ரியாலுக்கு மேல் பெறும். அது மணியின் ஒரு மாத சம்பளம். 30 நாட்கள் வெயிலிலும் கடுங்குளிரிலும் கடினமாக வேலைப் பார்த்து சம்பாதித்த பணம். வேறு என்ன செய்ய மறுபடி வாங்கித்தான் கொடுக்க வேண்டும், தங்கை வாழ வேண்டுமே..

வெளிநாட்டில் வேலை பார்கிறவனுக்கு ஊரிலிருந்து போன் வந்தால் அது இரண்டு விச்யமாகத்தான் இருக்கும். ஒன்னு காசு அனுப்பு, இல்லையெனில் செல்போன் வாங்கிவா, டார்ச் லைட் வாங்கிவா, எமர்ஜன்சி லைட் வாங்கிவா சமயத்தில் கைலிவாங்கிவா குடை வாங்கிவா என்றெல்லாம் சொல்வார்கள். ஒரு போன் போட்டு எவனாவது நல்லா இருக்கியாப்பா சாப்பிட்டியா எனக் கேட்பதில்லை.ஊருக்குப் போனால் கூட எப்ப வந்த என்று எவனும் கேட்பதில்லை எனக்கு என்ன வாங்கிட்டு வந்தேன்னுதான் கேட்பானுக.

மணி 5 ஆகிவிட்டது. மதியம் ஒரு டப்பாவில் போட்டு கம்பெனி கொடுத்த சாப்பாடு எப்போதோ செரித்து விட்டது. போர்மெனைக் காணவில்லை. காலாகாலத்தில் முகாமுக்குப் போனால் குளித்து விட்டு வரிசையில் நின்று சாப்பாடு வாங்கி சாப்பிட்டு தூங்கலாம்.வேலை முடித்து மணி இரும்பு சட்ட்த்திலிருந்து கீழே இறங்கினான்.

பீகாரி வந்து விட்டான். வேலை அவசரமாம். மேனேஜ்மெண்டிலிருந்து ஓவர் டைம் கொடுப்பதாக கூறினார்களாம். மறுபடியும் எட்டு மணி வரை வேலை பார்க்க சொன்னான். மறுக்க முடியாது ஏன் எனில் தனியொருவனுக்காக முகாமுக்கு பேருந்து செல்லாது. மறுபடியும் மணி இரும்புச் சட்டத்தில் ஏறினான்.

எட்டு மணிக்கு வேலை முடிந்து பேருந்து பிடித்து முகாம் வந்தபோது மணி ஒன்பதரை ஆகியிருந்தது. உணவுக்கூடத்தில் கட்டி வைத்திருந்த டப்பா உணவை திறந்தபோதே அதன் நெடி உணவு கெட்டுப் போனதை சொன்னது. வேறு வழியில்லை இன்னைக்கு பட்டினிதான்.

அறைக்கு சென்றான் மணி. அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். சத்தமில்லாமல் காலணிகளை கழற்றி ஆடைகளை மாற்றக்கூட நினைப்பில்லாமல் படுக்கையில் விழுந்தான். அசதியும் அவலமும் அவன் கண்களை தூக்கமாக தழுவிக் கொண்டது.

மீண்டும் காலை விடிந்தது.

“கோடிக்கணக்கில் பணம் கொடுத்தான் அவன் கோவிலுக்கென்றே செலவழிப்போம் பெங்களூர் ரமணி அம்மாள் குரலோடு.


5 கருத்துகள்:

மதுரை சரவணன் சொன்னது…

//வெளிநாட்டில் வேலை பார்கிறவனுக்கு ஊரிலிருந்து போன் வந்தால் அது இரண்டு விச்யமாகத்தான் இருக்கும். ஒன்னு காசு அனுப்பு, இல்லையெனில் செல்போன் வாங்கிவா, டார்ச் லைட் வாங்கிவா, எமர்ஜன்சி லைட் வாங்கிவா சமயத்தில் கைலிவாங்கிவா குடை வாங்கிவா என்றெல்லாம் சொல்வார்கள். //

நிஜவாழ்வை கதை பிரதிபலிக்கிறது . வாழ்த்துக்கள்.

தங்கராசு நாகேந்திரன் சொன்னது…

வாங்க சரவணன், பதிவு போட்ட பத்தாவது நிமிசத்துலேயே வருகைபுரிந்ததற்கும் கருத்துரை வழங்கியதற்கும் நன்றிகள் பல

ஹாஜா மொஹைதீன் சொன்னது…

நிஜவாழ்வை கதை பிரதிபலிக்கிறது . வாழ்த்துக்கள்.

சரவணன், சவுதியில் பலருடைய நிலைமையை தான் பிரபலிதுள்ளார் நாகேந்திரன்
பகல் 1 மணிக்கும் என்ன குளிர் தெரியுமா?
இப்படி கஷ்டப்பட்டு சம்பாதிப்பது ஊரில் உள்ளவர்களுக்கு இங்குள்ளவர்கள் பணங்காச்சி மரம் போல தெரிகிறது

தங்கராசு நாகேந்திரன் சொன்னது…

வாங்க ஹாஜா மொகைதீன் //இப்படி கஷ்டப்பட்டு சம்பாதிப்பது ஊரில் உள்ளவர்களுக்கு இங்குள்ளவர்கள் பணங்காச்சி மரம் போல தெரிகிறது// சரியா சொன்னிங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் பல

பெயரில்லா சொன்னது…

மிக அருமை.யோகி செந்தில்

கருத்துரையிடுக

ஏதாவது சொல்லிட்டு போங்க