புதன், 5 ஜனவரி, 2011

சொல்லுப்பா என் பையன் சாப்பிட்டானா?

கீழக்கரை பேருந்து நிலையம் ஞாயிறு மாலை 5.00 மணி.

“யப்பா செந்தி,டிபன் பாக்ஸ்ல சாப்பாடு வச்சிருக்கேன், எல்லாத்தியும் சாப்பிடு, மறந்துராதே

“சரி சரி நீ கிளம்புமா, வண்டி புறப்படப்போகுது

“சரிப்பா நல்லபடியா போயிட்டுவா, இப்படி வருசத்துக்கு ஒரு தடவ வராமே, அடிக்கடி வந்து போ, வேலை முக்கியம்தான்,ஆனா பெத்தவளயும் பாக்குறதுக்கு கொஞ்சம் நேரம் ஒதுக்கு

“எங்கம்மா முடியறது, ஊருக்குப்பக்கத்திலே நான் படிச்ச படிப்புக்கு வேல கிடைக்கல, முன்னெல்லாம் நான் வாராவாரம் வந்துகிட்டுத்தான் இருந்தேன், கல்யாணம் முடிச்சு புள்ளகுட்டியாயிருச்சு, வேல வேற ஜாஸ்தியாடுச்சு, வர்றேம்மா வர்ற பொங்கலுக்கு உன் மருமகளையும் பேத்தியையும் கூட்டிக்கிட்டு கண்டிப்பா வர்றேன்.

“சரிப்பா போயிட்டு வா, நாகேந்திரா சாப்பாடு நிறய வச்சிருக்கேன், நீயும் செந்தியும் சேந்தே சாப்பிடுங்க கடயில கிடையில வாங்கிச் சாப்பிடவேணாம், என்ன?

திருமயம் சாலையோர உணவு விடுதி ஞாயிறு இரவு 9.00 மணி.

“நாகேந்திரா இத நீ சாப்பிடு, நான் ஒரு கலரு மட்டும் குடிச்சுகிறேன்

“என்னன்னே உங்கம்மா ஆசயாக் கொடுத்திருக்காங்க நீ சாப்பிடு, நான் கடயில பரோட்டா வாங்கி சாப்பிடுக்கிறேன்.

‘டேய் என்னால சாப்பிடமுடியாது, மத்தியானம் கறி மீனு முட்டைன்னு ஏகத்துக்கு எங்கம்மா சாப்பிட வச்சு வயிரு புல்லா இருக்கு, என்னால முடியாது நீயே சாப்பிடு

“அண்ணே இங்கப் பாரு தக்காளிசாதம் முட்டை ஊலா மீன் வறுத்து வச்சுருங்காங்க, இருந்தாலும் உங்கம்மாவுக்கு உன் மேல ரொம்பத்தான் பாசம்

“எங்கம்மா எப்பவும் இப்படித்தான், ஒத்தப் பிள்ள பாரு அதுனால கொஞ்சம் பாசம் ஜாஸ்திதான்,சரி சரி நீ எல்லாத்தையும் காலி பண்ணிரு, நான் போயி கடயில ஒரு கலர் வாங்கி குடிச்சிட்டு வர்றேன்

செங்கல்பட்டு புறவழிச்சாலை திங்கள் அதிகாலை 4.00 மணி

‘நாகேந்திரா வரவா, அப்புறம் பாக்கலாம்

‘சரின்னே போயிட்டு வா, அது சரி எப்படி நீ வீட்டுக்கு போவ டவுன் பஸ் ஏதும் வருமா இந்நேரத்தில

‘அதெல்லாம் தேவயில்ல நான் வர்றது என் மாமனாருக்குத் தெரியும், கொஞ்ச நேரத்துல பைக் எடுத்துட்டு வந்துருவாரு நான் போயிக்கிறுவேன், சரியா? நீ எப்படி சென்னை சேர்ந்ததும் உடனே வேலைக்கு போயிடுவியா?

“ஆமான்னே ரூமுக்குப் பக்கத்துலதான் ஆபிஸ் அதுனால போனவுடன் உடனே ஆபிஸ் போயிடுவேன், அப்புறம் உங்கம்மா சொன்னத மறக்காதே வர்ற பொங்கலுக்கு அண்ணி பிள்ளையெல்லாம் கூட்டிகிட்டு ஊருக்கு வா

“சரிடா பாக்குறேன், நீ போயிட்டு வா

சென்னை புதன் காலை 11.00 மணி

‘என்னம்மா, ரெண்டு தடவ ஆபிஸுக்கு போன் போட்டிங்களாம், நான் ஒரு முக்கியமான வேலையா வெளியே போயிருந்தேன், சொல்லுங்க என்ன விசயம்

‘நாகேந்திரா உனக்கு ஒரு முக்கியமான விசயம் சொல்லனும், நம்ம விசயா அத்தையோட மகன் செந்தி இன்னைக்கு ஆக்சிடெண்டுல இறந்துட்டானாம்

“என்னம்மா சொல்லுறிங்க முந்தா நேத்துதான் நானும் செந்தியும் ஊரில இருந்து ஒன்னாத்தான் வந்தோம்,எப்படிம்மா

“ஒன்னும் விவரம் சரியா தெரியல்ப்பா காலையில பைக்குல வேலைக்கு போகும்போது லாரி மோதிடுச்சுன்னு சொல்லுறாங்க, எல்லோரும் கிளம்பி வேன் புடுச்சு வந்துகிட்டு இருக்கோம்,நீ உடனே செங்கல்பட்டு போயிச்சேரு

“அடடா, விசயா அத்தை என்னம்மா செய்யிறாங்க

“அவங்களுக்கு பேச்சு மூச்சு இல்லப்பா அவங்களையும் கூட்டிக்கிட்டுத்தான் வர்றோம்

செங்கல்பட்டு வெள்ளி மாலை 3.00 மணி

“சரிம்மா நான் சென்னை கிளம்புறேன். சனிக்கிழமை எல்லோருக்கு வாரச்சம்பளம் கொடுக்கனும். நீங்க பத்திரமா ஊருக்குப் போங்க, விசயா அத்தையெல்லாம் எப்ப ஊருக்கு கிளம்புறாங்களாம்

“உடனே கிளம்ப முடியுமா பதினாறாம் நாள் கருமாந்திரமெல்லாம் முடிஞ்சுதான் போவாங்க, நாமளும் இருக்கலாம்தான் ஆனா உங்கப்பாவுக்கு ஏதோ முக்கியமான வேல இருக்காம், நாங்க சாயங்காலம் 5 மணிப்போல கிளம்பி ஊருக்குப் போறோம்.அப்புறம் தம்பி உங்கிட்ட விசயா அத்தை ஏதோ பேசனும்னு சொன்னாங்க

“ஏங்கிட்டயா எங்க இருக்காங்க வாங்க போயிப் பாக்கலாம்

“அத்த

“அழாதிங்கத்த ........... ஏதோ எங்கிட்ட பேசனும்ன்னு சொன்னிங்களாம் அம்மா சொன்னாங்க”

நாகேந்திரா...................... நான் கடைசியாக் கொடுத்த சாப்பாட்ட என் பையன் சாப்பிட்டானாப்பா?

சொல்லுப்பா ஏன் மரமா நிக்கிறே, சாப்பிட்டானா என் மகன்?...........................................................

3 கருத்துகள்:

மதுரை சரவணன் சொன்னது…

உங்கள் பதிவின் மூலம் நான் நல்ல உணவு அருந்தினேன். வாழ்த்துக்கள்.

Arul Senapathi சொன்னது…

என்னத்தை சொல்ல? உண்மையான அம்மாவின் தாய்ப்பாசத்தை கண் முன் நிறுத்தி உள்ளீர்கள்.
கதை என்று நம்ப முடிய வில்லை.

தங்கராசு நாகேந்திரன் சொன்னது…

வாங்க மதுரை சரவணன், உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி Arul Senapathi சொன்னது…
என்னத்தை சொல்ல? உண்மையான அம்மாவின் தாய்ப்பாசத்தை கண் முன் நிறுத்தி உள்ளீர்கள்.
கதை என்று நம்ப முடிய வில்லை வாங்க அருள் சேனாபதி (அடடா மதுரை சரவணன், அருள் சேனாபதி இரண்டுமே எங்கப்பன் முருகனா) இது நடந்த சம்பவம்தான், கதைபோல் எழுதியுள்ளேன், இன்னும் ஊருக்குப் போனால் நான் பார்க்க தவிர்க்கிற நபர் விசயா அத்தைதான் ஏன் எனில் அவங்க கேட்கிற கேள்விக்கு நான் பதில் சொல்ல முடியவில்லை

கருத்துரையிடுக

ஏதாவது சொல்லிட்டு போங்க