வியாழன், 13 ஜனவரி, 2011

உனக்கு இன்னிக்கு வியாழக்கிழமையாடா?


எங்க ஊருல எவனாவது ஒரு மாதிரியா மறை கழண்ட மாதிரி பேசுனா உடனே எல்லோரும் அவனைப் பாத்து சொல்லுற வார்த்தை “ஏண்டா உனக்கு இன்னிக்கு வியாழக்கிழமையாடா?

வியாழக்கிழமைல்ல அப்படி என்ன விசேசம், எங்க ஊருல இருந்து 9 கீமீ தள்ளி உள்ள ஏர்வாடி தர்ஹாதான் காரணம்.

ஏர்வாடின்னதும் இப்ப எல்லோருக்கும் புரிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறேன்.வாரத்தில் ஆறு நாள் வெறிச்சோடிக் கிடக்கும் ஏர்வாடி தர்ஹா வியாழக்கிழமையானதும் களை கட்டிடும். ஈயடிச்சுகிட்டு கிடக்கிற டீக்கடைகள் எல்லாம் வியாழக்கிழமை கல்லாக் கட்டிடும்.

தமிழ்நாட்டுல இருந்து மட்டுமல்ல, பிற மாநிலங்களில் இருந்தும் கூட்டம் வரும். குறிப்பா கேரளாவில் இருந்து. பேய் புடிச்சவன், பிசாசு புடிச்சவன், முனி அடிச்சவன், மோகினி பிடிச்சவன்ன்னு பல ரகமா வருவாங்க இதோடு மன நிலை பிறழ்ந்தவர்கள் ஏராளம் வருவாங்க.

வியாழக்கிழமைதான் தர்ஹாவில் அடங்கியுள்ள பாதுசா நாயகத்துக்கு உகந்த நாள். வந்து தர்ஹாவில் தங்கி பாத்தியா ஓதி சக்கரையை வாங்கி சாப்பிட்டுட்டு வசதி இருந்தா ஏதாவது லாட்ஜுலேயோ, வசதி இல்லாதவங்க தர்ஹா உள்ளேயும் படுத்துட்டு காலையில் எந்திரிச்சு ஊருக்குப் போவாங்க.

நம்ம வீட்டுல யாருக்காவது மன நலம் குன்றினால் ஆரம்பத்துல கையில காசு இருக்கிற வரைக்கும் ருத்ரன் மாதிரி டாக்டர்கிட்ட காட்டுவோம். அப்புறம் காசு இல்லைன்னா அதிலும் கொஞ்சம் அமைதியான பைத்தியமா இருந்தா வீட்டோட வச்சிக்கிறுவோம். வசதி இல்லாத வீட்டுல அடங்காத பைத்தியமா இருந்தா என்ன பண்ண முடியும். அண்டை அயலார்கள் என்ன சொல்லுவார்கள் ‘ போயி எங்கயாவது கோவிலோ தர்ஹாவிலோ கட்டுங்கப்பான்னு. இந்த மாதிரிதான் ஏர்வாடி நாகூருன்னு பைத்தியங்களை கொண்டு வந்து விடுவாங்க.

முன்னே ஏர்வாடில மனநலம் குன்றியவர்களைப் பராமரிக்கும் ஆசிரமம் (MENTAL ASYLUM) ஒரு தொழிலாகவே நடந்து வந்தது. இதை தங்கல்கள் என்னும் பொறுப்பளர்கள் நடத்தி வந்தனர்.ஒரு நபரை பராமரிப்பதற்கு ரூ 1000 முதல் 2000 வரை வசூலித்து வந்தனர். எந்த நிலையத்திற்கும் அரசு அனுமதி கிடையாது. எந்த நிலையத்திலும் அடிப்படை வசதி கிடையாது. உணவு கூட இவர்கள் வழங்குவதில்லை. தர்ஹா வரும் பக்தர்கள் நேர்த்தியாக செலுத்தும் முராது என்னும் காணிக்கை மூலமாகத்தான் உணவு வழங்கப்பட்டு வந்தது.

தென்னைஓலை வேயப்பட்ட குடிசைக்குள் வேலிக்கற்களில் மனநலம் குன்றியவர்களை சங்கிலியால் கட்டி வைத்திருப்பார்கள். குற்றாலம் குனசீலம் போல் மூலிகை சிகிச்சை எதுவும் கிடையாது. மாலை நேரமானதும் மனநோயாளிகளை கால்நடைகளை மேய்ச்சலுக்கு பத்திச் செல்வதுபோல் கைகளில் குச்சியை வைத்துக் கொண்டு காப்பாளர்கள் தர்ஹாவுக்கு கொண்டு செல்வார்கள். அங்கு தர்ஹாவினை ஒரு முறை வலம் வந்து திரும்ப ஆசிரமத்திற்கு கொண்டு வந்து கட்டிப் போடுவார்கள்.

தர்ஹாவில் அடங்கியிருக்கிற பாதுசா நாயகம் அவுலியா எப்ப இந்த தங்கல்கள் கனவில் வந்து சொல்லுகிறாரோ அதுவரை இந்த சிகிச்சை? மன நோயாளிகளுக்குத் தொடரும். எனக்குத் தெரிந்து எவன் கணவிலும் அவுலியாவோ அல்லது ஆண்டவனோ வந்து சொன்னதில்லை. ஒரு தடவை ச்ங்கிலியால் கட்டிபுட்டானுகனா அந்த மனநோயாளி செத்து சுண்ணாம்பாகி போகிற வரைக்கும் வச்சிருப்பானுக. மன நோயாளிகளின் உறவினர்களும் விட்டதுடா தொல்லைன்னு வந்து பாடியை வாங்கிட்டுப் போவானுக.

கடந்த 2001ல் நடந்த கோர சம்பவத்தில் இருபதுக்கும் மேற்பட்ட மனநோயாளிகள் சங்கிலியால் பினைக்கப்பட்டு இருந்ததால் தப்பிக்க வழியில்லாமல் கருகி துடிதுடித்து உயிர் இழந்த சம்பவத்திற்கு பின் மன நல காப்பகம் அனைத்தும் மூடப்பட்டது. இருப்பினும் மனநோயாளிகள் இன்னும் ஏர்வாடியில் சுத்திதான் திரியுறாங்க.

சில மனநோயாளிகளை பாத்தவுடன் கண்டுபிடிப்பது சுலபம். அழுக்கு மற்றும் கிழிந்த உடையுடன் நீண்டநாள் சவரம் செய்யப்படாத தாடியுடன் தனக்குத்தானே பேசிக் கொண்டோ சிரித்துக் கொண்டோ இருப்பார்கள். ஆனா சிலபேரை கண்டு கொள்வது கடினம். நம்ம வடிவேலுகிட்ட ஒருவர் ஒசாமா பின்லேடன் அட்ரஸ் கேட்பாரே அதுபோல் டீசண்டா பேசுவானுக. கொஞ்சம் பேசுன பின்னாடிதான் தெரியும் “ஆகா வியாழக்கிழமை ஆளுடான்னு

இப்படித்தான் ஒருநாளு ஒரு மலையாளி தர்ஹா வாசலில் இருக்கிற டீக்கடையிலே என்கிட்ட தமிழ் இலக்கியம் பத்தி பேசினான். ஆஹா மலையாளி தமிழ் இலக்கியத்தப் பத்தி பேசுறானேன்னு நானும் அவன் பேச்சைக் கேட்க ஆரம்பிச்சேன். பத்துப்பாட்டு எட்டுத்தொகை புறநானுறு அகநானுறுன்லாம் பேசிட்டு வந்தவன், என்கிட்ட கேட்டான். உனக்கு மலையாள இலக்கியம் தெரியுமான்னு நான் சொன்னேன் ‘எனக்கு மலையாளமே தெரியாது இதுல எப்படி மலையாள இலக்கியம் தெரியுமுன்னு. ஆரம்பிச்சான் பாருங்க ஏக வசனத்துல “ஏண்டா நான் தமிழைப் பத்தி தெரிஞ்சி வச்சிருக்கேன் நீ ஏன் மலையாளம் பத்தி தெரிஞ்சு வச்சிகலன்னு அப்பத்தான் எனக்கு புடிபட்டது “ஆஹா இவன் வியாழக்கிழமை ஆளுன்னு

அப்புறம் ஒரு நாளு ஏர்வாடில இருந்து கீழக்கரை வர பேருந்துக்கு காத்துகிட்டு இருக்கும்போது ஒருத்தன் கையில செல்போன் வச்சிப் பேசிகிட்டு இருந்தான். இவனும் மலையாளிதான்.ஆள் பாக்குறதுக்கு டீசண்டா பேண்ட் சட்டைல்லாம் போட்டு இன் பண்ணியிருந்தான். போன் பேசி முடிச்சவன் என் கிட்ட சொன்னான் ஒரு ஸ்டேடிக் (STATIC) சொல்லுது இந்தியாவுல 50 பெர்சண்டேஜ் பைத்தியமுன்னு நான் உடனே ஆர்வக்கோளாறாகி எப்படி சொல்லுறிங்கன்னு கேட்டேன். அதுக்கு அவன் அங்கே தலையை சொரிஞ்சுகிட்டு என்னை மாதிரி பேருந்துக்கு காத்திகிட்டு இருந்த ஒரு ஆளைக் காட்டி இவன் ஒரு பைத்தியமுன்னு சொன்னான்.

அந்தாளும் பாக்குறதுக்கு என் கண்ணுக்கு பைத்தியம் போலவே இருந்தான். அப்புறம் காரில் உட்கார்ந்து யாருக்காகவோ காத்துகிட்டு இருந்த ஒரு முதியவரைப் பார்த்து ‘இந்த கிழவனும் பைத்தியமுன்னு சொன்னான். கொஞ்ச நேரம் கழித்து யாருக்கோ போன் செய்தான். பின் தலையை இடதும் வலதுமாக பலமாக ஆட்டினான். இதுபோல தொடர்ந்து நான்கைந்து முறை செய்தான். நான் கேட்டேன் “என்ன டவர் கிடைக்கலியான்னு அதுக்கு அவன் சொன்னான் “குறுக்கே பேசாதே நான் போன் வேலை செய்யுதான்னு செக் பண்ணிகிட்டு இருக்கேன்னு அப்புறமா பாத்தா இரண்டு பெரியவர்கள் அவனைத் தேடி வந்து கையைப் பிடிச்சு இழுத்துட்டு போனாங்க.போறப்ப என்கிட்ட சொன்னாங்க “கொஞ்சம் பிராந்து ஏதாவது சொன்னானான்னு

அடப்பாவி காமாலைக்காரனுக்கு கணடெதெல்லாம் மஞ்சள்ன்னு மாதிரி இந்த பைத்தியம் இந்தியாவில் 50 பெர்செண்டேஜ் பேர் பைத்தியமுன்னு சொல்லிட்டானேன்னு எனக்கு சிரிப்பு வந்தது.

இந்த சிரிப்பு வீட்டுக்குப் போனதும் தொடர்ந்தது. என்னைப் பார்த்த எங்கம்மா சொன்னாங்கஏண்டா தன்னால சிரிச்சிகிட்டு இருக்கே இன்னிக்கு உனக்கு வியாழக்கிழமையான்னு கேட்டுகிட்டே வந்த என் பொண்டாட்டி சொன்னா “அம்மா உங்க மகனுக்கு எல்லா நாளும் வியாழக்கிழமைதான்னு

6 கருத்துகள்:

Unknown சொன்னது…

சுவையா எழுதியிருக்கீங்க. ஆனாலும் பதிவைப் படிச்சு முடிச்சவுடனே உங்க மனைவி மேலே அனுதாபம் பிறந்தது உண்மை தான்:-))))))

இன்னும் எழுதுங்க!

பழமைபேசி சொன்னது…

இராசா.... மண்ணுக்கு மகுடம் சூட்டுறதுன்னு முடிவு செய்துட்டீங்க... அடிச்சி விளையாடுங்க சும்மா!!

அஞ்சா சிங்கம் சொன்னது…

ரொம்ப அழகா எழுதிருக்கீங்க எனக்கும் இந்த மாதிரி அனுபவம் இருக்கு ...................

டக்கால்டி சொன்னது…

ஹி ஹி ஹி... வியாழக்கிழமைல இவளோ மேட்டரு இக்கீதா? சூப்பரு நைனா...

FARHAN சொன்னது…

வியாழ கிழமையில் இம்புட்டு மேட்டர் இருக்கா ??

sadic சொன்னது…

ennikhu viyalakalamai

கருத்துரையிடுக

ஏதாவது சொல்லிட்டு போங்க