நேத்திக்கு ஒரு பழைய பேப்பர் என் கண்ணுலபட்டது.அதுல தமிழ்நாடு அரசு தமிழ் இலக்கியத்துல வர்ற ஐவகை நிலங்களின் பேரில் ஐந்து பூங்கா அமைக்கப் போறதா ஒரு அறிவிப்பப் பாத்தேன்.
மலையும் மலையும் சேர்ந்த குறிஞ்சிப் பூங்கா நீலகிரியாம். காடும் காடும் சேர்ந்த முல்லைப்பூங்கா கோயமுத்தூராம். வயலும் வயலும் சேர்ந்த மருதப்பூங்கா தஞ்சாவூராம். கடலும் கடலும் சேர்ந்த நெய்தல் பூங்கா நாகப்பட்டினமாம். கடைசியில சொல்லியிருக்காங்க பாருங்க பாலையும் பாலைவனமும் சேர்ந்த பாலைப்பூங்கா இராமநாதபுரமாம்.
அடப்பாவிகளா, கடைசியிலே இராமநாதபுரத்த பாலைவனமுன்னே முடிவு பண்ணிட்டிங்களா? அது என்னன்னு தெரியல ரொம்பக்காலமா இராமநாதபுரம்னா எல்லோருக்கும் ஒரு இளக்காரம்தேன். படத்துல கூட என்னவோ இராமநாதபுரத்த ஒரு தண்ணியில்லா காடு மாதிரியும் மனுசங்க குடியிருக்க வசதியில்லாததும் மாதிரிதான் காட்டுறாங்க. அவங்களுக்கெல்லாம் உண்மையை புரிய வைக்க வேண்டியது இந்த இராமநாதபுரத்துக்காரன் கடமை.
தமிழ்நாட்டுலேயே மிக நீளமான கடற்கரை கொண்ட மாவட்டம் இராமநாதபுரம்தேன். வடக்கே தொண்டியிலிருந்து ஆரம்பிச்சா தெக்கே வேம்பார் வரைக்கும் இராமநாதபுரம் மாவட்டம்தேன். சுமாரா ஒரு 250 கீமீட்டர் நீளம் இருக்கும். இந்தளவுக்கு நீளம் நாகப்பட்டினத்தில கிடையாது. இருந்தாலும் அது நெய்தல் பூங்காவாம்.என்னா வில்லத்தனம் பாருங்க.
இதிகாச காலத்துல இருந்து ஆரம்பிச்சா.. ராமர் இருந்ததுக்கு அயோத்தில சான்று இருக்கோ இல்லியோ இராமநாதபுரத்துல நிறைய சான்று இருக்கு. இராமேஸ்வரத்துல இருந்து இலங்கைக்கு போற கடல் பாலம் ஒன்னு போதும். இருந்தாலும் ராமர் தலையில் புல்ல வச்சிகிட்டு தூங்குனதா சொல்லப்படுற திருப்புல்லானி, ராமர் பாலம் கட்டுறதுக்கு முன்னதா வழிபட்டதா சொல்லப்படுற சேதுக்கரை, இராமர் கடலில் அம்பு விட்டு நல்லதண்ணி எடுத்து பருகியதா சொல்லப்படுற வில்லூண்டித்தீர்த்தம் இப்படி பல சான்றுகள் இராமநாதபுரத்துல மட்டும்தான் இருக்கு.
அப்புறமா காசிக்கு அடுத்து இந்துக்களின் புண்ணியதலமான இராமேஸ்வரம் கோவில். உலகத்துலேயே மிக நீளமான பிரகாரம் இந்த கோவிலோடோ தெக்கு பிரகாரம்தேன். அதுமட்டுமா எல்லா தோஷங்களையும் நீக்குகிற நவபாஷனம் தேவிபட்டினம் கோவில், பச்சை மரகத நடராசர் ஆருத்ரா தரிசனப்புகழ் உத்திரகோசமங்கை கோவில் சேதுக்கரை கோவில் இப்படி சொல்லிக்கிட்டே போகலாம் இராமநாதபுரத்துல.
தமிழ்நாட்டுலேயே மிகநீளமான கடல் பாலம் அது இராமநாதபுரம் பாம்பன் பாலம்தேன். கப்பல் ஏதும் வந்தா வெள்ளைக்காரன் போட்ட தூக்குபாலம் திறந்து கப்பலுக்கு வழிவிடுற அழக கண்ணுகொட்டாம பாத்துகிட்டே இருக்கலாம்.
வெள்ளைக்காரன்னு சொன்னதும் ஒரு விசயம் ஞாபகத்துக்கு வருது. முதல் முதலா வெள்ளைக்காரன் ஆதிக்கத்த எதுத்து வீரபாண்டிய கட்டபொம்மன் “கிஸ்தி திரை வரி வட்டின்னு பேசுனாரு பாருங்க அந்த வீரக்காட்சி நடந்த இடம் இராமநாதபுரம் இராமலிங்க விலாசம் அரண்மனையிலதேன்.
அப்புறம், சீமான்களே சீமாட்டிகளே பேசிகிட்டு இருந்த கூட்டத்துல சகோதரர்களே சகோதரிகளேன்னு பேசி சிக்காகோவில புகழ்பெற்றாரே வீரத்துறவி விவேகானந்தர் அவருக்கு முதல் முதல்ல பாரட்டுக்கூட்டம் நடத்தி அவரை கௌரவிச்ச பாஸ்கரசேதுபதி இராமநாதபுரம்தேன்.
இன்னும் இலங்கையில கஷ்டப்படுற தொப்புள் கொடித்தமிழன் தமிழ்நாடு வந்தா அவன முத முதலா அரவணைச்சு ஆறுதலும் உதவியும் செய்யுறது இராமநாதபுரத்துக்காரன்தேன்.
தமிழ்நாட்டுலேயே பெரிய கண்மாய் அது ஆர் எஸ் மங்கலம் கண்மாய்தான். இன்னும் களரி கண்மாய். சக்கரக்கோட்டை கண்மாய், பெரிய கண்மாய்ன்னு கண்மாய் நிறைஞ்ச ஊரு இராமநாதபுரம்தான்.
மதுரை மல்லிய விட வாசம் உள்ளது எங்க இராமநாதபுரத்து மண்டபம் மல்லி.எங்க ஊருல விளையுற மொளகாய் ஆந்திர மிளகாயவிடக் காரம் உள்ளது. தென்னந்தோட்டம் ஏராளம் இங்கே. இதெல்லாம் பாலைவனத்துல கிடைக்குமா என்ன?
வேடந்தாங்கலுக்கு பறவைகள் வர்றதுல்லாம் பழய காலம் இப்ப வெளிநாட்டு பறவைங்க வர்றதுல்லாம் இராமநாதபுரம் கமுதிக்கு பக்கம் சித்திரங்குடி அப்புறம் சாயல்குடி பக்கம் மேலச்செல்வனூர் (நம்ம ஊரு)
மொத்ததுல பறவைகள் சரணாலயமய்யா இராமநாதபுரம்.
தமிழ்நாட்டுலேயே முதல் முதலா வந்த தனியார் பொறியியல் கல்லூரி அது கீழக்கரை முகமது சதக் பொறியியல் கல்லூரிதான்.அது மட்டுமா துபாயில இருக்கிற பெரிய கம்பெனியான இ டி ஏ அஸ்கான், மெல்கோ இந்தியாவுல பெரிய கட்டுமான நிறுவனமான ஈஸ்ட் கோஸ்ட் கம்பெனி இது எல்லாம் இராமநாதபுரத்துக்காரங்களுதுதான்.
வீரத்தின் இருப்பிடம் பசும்பொன் முத்துராமலிங்கதேவர்.
இந்திய அணுவியல் திலகம் அய்யா அப்துல் கலாம்
செத்துக் கொடை கொடுத்த சீதக்காதி
இந்தியாவிலேயே சிறந்த நடிகர் விருது வாங்கிய கலைக்குடும்பம்
கமல்ஹாசன்
சாருஹாசன்
சுஹாசினி
விக்ரம்
அரசியல் விமர்சகர் சோ ராமசாமி
வாழைப் பழக்காமடி செந்தில்
ராஜ் கிரன்
இளைய தளபதி விசய் தம்பியோட அப்பா சந்திரசேகர்
அப்புறம் எல்லோருக்கும் மேலே
வலையுலகபுகழ் எட்டாவது வள்ளல்
எங்கள் பாராளுமன்ற உறுப்பினர்
டாக்டர் ரித்திஷ் குமார்
இவங்கள்ளாம் இராமநாதபுரத்துகாரங்கதான்.
இன்னும் சொல்லிகிட்டே போகலாம் அப்புறம் அது தொடர் பதிவாயிடும். அதுனால இதோட நிறுத்திக்கிறேன். ஒன்னு மட்டும் சொல்லுறேன் இந்த சேது சமுத்திரம் திட்டம் மட்டும் நிறைவேறினாப் பாருங்க. இராமநாதபுரத்தில வேலைதேடி வெள்ளைகாரனுக எல்லாம் வந்திடுவான்
.
என்ன குடிக்க தண்ணி கிடைக்கிறது கொஞ்சம் கஷ்டம். அதுக்காக எங்க ஊரை பாலைவனம்ன்னு சொல்லுறதுல்லாம் ரொமப்வே ஓவரு. ஒரு வேளை அரபு நாடுக மாதிரி எங்க ஊரிலயும் இயற்கை எரிவாயுல்லாம் கிடைக்கிறதுனால இந்த முடிவுக்கு வந்துட்டாங்களோ என்னவோ.
14 கருத்துகள்:
சிங்கம் சிலிர்த்திடுச்சு போல...
பகிர்வுக்கு நன்றிங்கோ!!
சாட்டையடி...
நாலு வருடம் ராம்நாட் உப்புத்தண்ணிய குடிச்சவன்.நானும் சப்போட்டிக்கிறேன்
அன்னிய செலாவனியை அதிகம் ஈட்டித் தரும் மாவட்டமும் இராமநாதபுரந்தேன்..!
Kalakkal...
நல்லா சொல்லியிருக்கீங்க..
மினரல் வாட்டரைவிட சுத்தமான தண்ணி கிடைக்கிற எங்க ஊறு புதுமடம் இராமனாதபுரம் மாவட்டத்தில்தாங்க இருக்கு.
Naan pirathathu valartatu yellam chennaithan 3 dadavi sontha vour peraiyurukku(pasumpon pakkam) poirukken. Namma vour perumaiyai refresh pannadhukku nandri.
Jawahar
முகவை மாவட்டம், அது தான்யா ராமநாதபுரம் புகழ் கேட்க மிக்க மிகழ்ச்சி.
சிவகங்கை பிரியுமுன் அதாவது நாங்கள் பள்ளியில் படிக்குங்கால் நாங்களும் அந்த மாவட்டக் காரர்கள் தான்.
ஆனால் பூங்கா பற்றி பேசுவோமானால் ராமநாதபுரம்-தேவிபட்டணம்-திருபபாலையூர் சாலையில் செல்லும் போது
ஒவ்வொரு முறையும் இது பாலை நிலம் என்றே தோன்றும். சீமைக் கருவை மட்டுமே தாவரம். (கொஞ்சம் தென்னையும் உண்டு). பாலை நிலப் பூங்காவுக்கு சரியான இடம் தான் என்று நினைக்கிறேன்.
nallaatthenirukku bathivukku nantri
கருத்துரையிடுக
ஏதாவது சொல்லிட்டு போங்க