வியாழன், 6 ஜூன், 2013

மொய்
திருமணம் முடிந்தவுடன் நல்லா சாப்பிட்டுவிட்டு மொய் எழுதுற பழக்கத்தினை யார் ஆரம்பிச்சிருப்பாங்கன்னு தெரியல. கண்டிப்பா அந்த காலத்தில விசேசம் நடத்துனவுங்க வாயைத்திறந்து கேட்டிருக்க மாட்டாங்க. ஆனா யாராவது ஏழை எளியவுங்க கல்யாணத்துக்கு போன நாலு பெரிய மனுசனுங்க விசேசக்காரர் குறிப்பா பொண்னு வீட்டுக்காரங்க நல்லா இருக்கனுமுனு நினைச்சு நாலு காச கொடுத்திருப்பாங்கன்னு நினைக்கிறேன் அதுவே காலப் போக்கில நோட்டு போட்டு எழுதுற அளவுக்கு வாடிக்கை ஆயிருச்சு போல இருக்கு.

எங்க வீட்டு பீரோவுல எங்கம்மா ஒரு ஏழெட்டு மொய் நோட்டு வச்சிருக்காங்க. எல்லாம் எங்க அண்ணன் தம்பி அக்கா தங்கசிங்க கல்யாணத்துக்கு வந்த மொய் நோட்டுதான். யாராவது சொந்தக்காரங்க பத்திரிக்கை கொடுத்தாப் போதும். அவுங்க போன பின்னே கடைசியா நடந்த எங்க வீட்டு கல்யாணத்தில அவுங்க எவ்வளவு மொய் எழுதினாங்கன்னு எங்கம்மா அந்த நோட்டுல ரெஃபர் பண்ணிட்டுதான் பத்திரிக்கை வச்சவுங்களுக்கு எவ்வளவு மொய் எழுதனும்ன்னு முடிவு பண்ணுவாங்க. சில பேரு எவ்வளவு எழுதினாங்கன்னு எங்கம்மா மனப்பாடமா நினைவு வச்சிருப்பாங்க. ”சண்முகம் முத கல்யாணம் இப்பத்தான் பண்ணுறான் ஏற்கனவே நமக்கு அஞ்சு விசேசத்தில நூறு நூறு ரூபா எழுதியிருக்கான் அதனால அவனுக்கு ஒரு முன்னூறு ரூபா எழுதுவோம் அடுத்து ஒரு பையன் வச்சிருக்கான்ல அவனுக்குப் பாக்கி இருநூறு ரூபாயை எழுதுவோம்ன்னு கணக்கா பேசுவாங்க”.

அதே மாதிரி கல்யாணத்துக்கு பத்திரிக்கை கொடுக்க வந்தவுங்க அவுங்க நடந்துக்கிற அல்லது செய்முறையைப் பொறுத்து எங்கம்மாவோட மொய் அளவு மாறும். வந்தவுடனே வெந்நித்தண்ணியை காலில ஊத்துன மாதிரி கிளம்பிப் போயிட்டங்கன்னா 100ரூபா. ஒரு காப்பி தண்ணியவோ டீத்தண்ணியவோ குடிச்சி கிளம்புனாங்கன்னா 200 ரூபா சாப்பிட்டு போங்கன்னு சொன்னா இருந்து சாப்பிட்டு போனாங்கன்னா 500ரூபா. 11ரூபாயோ 21ரூபாயோ சுருள்வச்சு மச்சான்முறை பத்திரிக்கை கொடுத்தாங்கன்னா 1000ரூபா டிரஸ் எடுத்து கொடுத்து அது பூணம் ஷிபான் சேலையா இருந்தா 2000ரூபா பட்டு எடுத்து கொடுத்தாங்கன்னா ஆளப் பொறுத்து அரைப்பவுனோ காப்பவுனோ மோதிரம் போடுறத்துன்னு எங்கம்மா கணக்கே தனியா இருக்கும்.

எங்க ஊருல அரியமுத்து செட்டியாரு கல்யாண மண்டபம் வச்சிருக்காரு. அதுல கல்யாணம் யாரு முடிச்சாலும் அரியமுத்து செட்டியாரு அது டிபனோ சாப்பாடோ அங்கேயே சாப்பிடுவாரு. டிபனுக்கு 20ரூபா மொய். காய்கறி சாப்பாட்டுக்கு 30 ரூபா கறி சாப்பாட்டுக்கு 50 ரூபான்னு அவரு ஒரு கணக்கு வச்சு மொய் எழுதுவாரு. என் கூடப் படிச்ச விக்டர் இப்ப வாத்தியாரு வேலை பாக்கிறான். அவன் கல்யாண வீட்டுல சாப்பிட்டுட்டு சாப்பாடோட ருசியப் பொறுத்துதான் மொய்ய எழுதுவான்.

சிலபேரு கல்யாணத்துக்கு வந்து பேருக்கு ஒரு அஞ்சு நிமிசம் இருந்துட்டு தாலி கட்டுனாங்களா கல்யாணம் முடிஞ்சதான்னே கவலைப்படாமே மொய்ய சம்பந்தபட்டவுங்க பாக்கெட்டுல திணிச்சுட்டு போயிகிட்டே இருப்பாங்க. கல்யாணத்துக்கு பத்திரிக்கை கொடுக்கிறது என்பது தாலி கட்டுற நேரத்துல கரக்டா வந்து பொண்ணயும் மாப்பிளையும் ஆசிர்வாதம் பண்ணனும்ங்கிற மரபெல்லாம் யாரும் கடைப் பிடிக்கிற மாதிரி தெரியல. சில பேரு விசேசக்காரங்கள நேருல கூட பார்த்து வாழ்த்து சொல்ல நேரமில்லாம மொய்ய வேற யாருட்டயாவது கொடுத்து விடுவாங்க. அவங்களோட முக்கிய நோக்கம் மொய் நோட்டுல வரவு வச்சிடம்னா அது கல்யாணத்துக்கு வந்ததுக்கு சமம்ன்னு நினைக்கிறதுதான். அதே மாதிரி ஒரே நேரத்துல ரெண்டு கல்யாணம் நடந்து அதுல ஒரு வீட்டுல காய்கறி சாப்பாடும் இன்னொரு கல்யாணத்துல கறிச் சாப்பாடோ போட்டாங்கன்னா காய்கறி சாப்பாடு போடுற கல்யாணத்துல காலைச் சாப்பாடை சாப்பிட்டுட்டு அவசரம் அவசரமா மொய் எழுதிட்டு கறி சாப்பாட்டு பந்தியில இடத்த பிடிக்க அவசரம் அவசரமா ஓடுவாய்ங்க.

சில கல்யாணத்துல மொய் எழுத வந்தவுங்ககிட்ட மொய்ய வாங்கி அத நோட்டுல எழுதுறாங்க பாருங்க அது பெரிய கஷ்டமான வேலை. தங்கச்சிமடத்துல எங்க சின்னம்மா பையன் கல்யாணத்துக்கு மொய் எழுத என்னை உட்கார சொன்னாங்க. லில்லி பொப்பின்ஸ் செல்வி, தெரசா ஜெயம்மாள் கோனத், டேவிட் அருள் சகாயராஜ், ஸ்டீபன் பால் தேவசகாயம், பெர்னாந்து அருள் சூசைன்னு ஒவ்வொரு பேரும் முழ நீளத்துக்கு இருந்துச்சு. காதுல கேட்டு நோட்டுல எழுதுறதுக்குள்ள கொஞ்சம் ஆடித்தான் போயிட்டேன்.

கரூர்ல ஒரு காண்ட்ராக்டர்கிட்ட வேலை பார்க்கும் போது அவரு எங்க குருப்புல இருந்த பதினைஞ்சு பேருக்கும் பத்திரிக்கை கொடுத்து கல்யாணத்துக்கு அவசியம் வர சொன்னாரு. எவ்வளவு பெரிய மனுசன் பத்திரிக்கை கொடுத்து கூப்புடுராறேன்னு நாங்களும் அடிச்சுப் பிடிச்சு கல்யாணத்துக்கு போனோம். கல்யாண மண்டபத்துக்கு உள்ள நுழையும் முன்னே அவரோட அல்லக்கை ஆளுக்கு ஒரு கவர் கொடுத்து மொய் எழுதுற இடத்துக்கு கூட்டிட்டு போயி எங்க பேருல மொய் எழுத வச்சான். ஒவ்வொரு கவருலயும் பத்தாயிரம் ரூபா இருந்த்துச்சு. அப்பத்தான் புரிஞ்சுச்சு எங்கள மாதிரி ஆளுங்கள வச்சு அவரு கருப்பை வெள்ளையாக்கிட்டாருன்னு.

சில பொண்ணு வீட்டுக்காரங்களுக்கு இந்த மொய் வரவுதான் கல்யாணம் முடிஞ்சவுடன் மானம் காக்கிற சாமியா இருக்கும். அந்த அளவுக்கு மொய்யில தர்றேன் மொய் வந்தவுடன் தர்றேன் அப்படின்னு சொல்லி கறிக்காரன் காய்கறிகாரன் மேளம் மாலை சமையக்காரர் மண்டபம் வாடகை அப்படி இப்படின்னு ஏகப்பட்ட கடன்கள் மொய்யிலதான் அடைப்பாங்க. பார்க்க சில நேரம் பரிதாபமாக இருக்கும். அதுனால என்னோட மொய் அளவு எப்போதும் பொண்ணு வீட்டுக்காரங்களுக்கு அதிகமாகவே இருக்கும்.

எங்கப்பா ஒரு தடவை அவரோட வாத்தியார் நண்பர் மகள் கல்யாணத்துக்கு எனக்கிட்டே 100ரூபா கொடுத்து மொய் எழுதிட்டு வர சொன்னாங்க. கல்யாண வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி என் நண்பனோட ரூமுக்கு போனேன் அங்க 20ரூபா பெட்டு வச்சு நாலு செவன்ஸ் சீட்டு ஆட்டம் ஆடி 80ரூபாயை தோத்துட்டேன். கடைசியில மிஞ்சி இருந்த 20 ரூபாயை வச்சி மொய் எப்படி எழுதுறது. நாள பின்னே வாத்தியார் நோட்டப் பாத்து எங்கப்பாவை தப்பா நினைச்சாருன்னா. ஒரு ஐடியா பண்ணி இருந்த இருபது ரூபாயில 15 ரூபாய்க்கு ஒரு செஸ் போர்டு வாங்கி அத கலர் பேப்பரில சுத்தி ஒரு கிப்ட் பாக்ஸ் மாதிரி ரெடி பண்ணி அதுக்குள்ளே நான் அப்ப சார்ந்திருந்த கட்சியான சி பி ஐ எம் எல் லிபரேசனின் சி பி ஐ எம் எல்லில் சேருங்கள் நோட்டிஸில் இரண்டு வச்சு அதுல பொண்ணு மாப்பிள்ளை பேரையும் எழுதி பேக்கேஜை மாப்பிள்ளை கையில கொடுத்துட்டு பந்தாவா வந்துட்டேன். நாலு நாள் கழிச்சு வாத்தியாரு எங்கப்பாவை பார்த்து ஏண்டா கல்யாணத்துக்கு வந்து ஆசிர்வாதம் பண்ணுவியா? அத விட்டுட்டி பொண்ணையும் மாப்பிள்ளையும் நக்சல்பாரி இயக்கத்துல சேர அழைக்கிறியேன்னு சத்தம் போட்டிருக்காரு. வீட்டுக்கு வந்து எங்கப்பா என்னை ஒரு பிடி பிடிச்சு விட்டாரு. அதில இருந்து அந்த வாத்தியாரு இப்பவும் என்னை எங்க பாத்தாலும் முறைப்பாரு. ஒழுங்கா மொய் எழுதியிருந்தா இதெல்லாம் நடந்திருக்குமா?


4 கருத்துகள்:

Rathnavel Natarajan சொன்னது…

அருமை.

பெயரில்லா சொன்னது…

2,3 மொய் எழுதுன அனுபவம் எனக்கும் இருக்கு, ரெம்ப கஷ்டம்தான் Boss

Ganapathi DCW சொன்னது…

all above matters are really true.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

அருமையான தகவல்கள்..!

கருத்துரையிடுக

ஏதாவது சொல்லிட்டு போங்க