வெள்ளி, 4 பிப்ரவரி, 2011

துமாரா பாஷ மேராக்கோ மாலும் நஹியே


“என்னப்பா சொல்லுறே - ஆளு

எடுக்க வந்த ஆளு கேட்டான்.


ஆறடி உயரம் இருந்தான்

ஆந்திரத்துக்காரன் அவன்


அழகாய் தமிழ் பேசி

அருமையாய் கூப்பிட்டான்.


“காசு கூடன்னு பாக்காதே

கவலை கொஞ்சம் கூட படாதே


ஆறே மாசத்துல போட்ட காசை எடுத்திடலாம்

ஆயுசுக்கும் உட்காந்து நீ ஜம்முனு சாப்புடலாம்


உங்காளுக நிறைய உண்டு

எங்களோட கம்பெனில


உட்காந்து பேசிப் பாரு

உலகெமெல்லாம் புரியும் பாரு


கோழி உண்டு மீனு உண்டு

குப்பூஸ் ரொட்டி உண்டு


சாண்ட்விச்சு பர்கருன்னு

சலிக்காத சாப்பாடு உண்டு


ரெண்டு வருசம் வேலைபாரு-துபாய்

செண்டு போல வாழ்க்கை மணக்கும் பாரு


கொண்டு வந்து பணத்தக் கட்டி

குபேரனா மாறப் பாரு


ஆசை வார்த்தையில ஆளக்கவுத்திட்டான்

பாசமா பேசுறான்னு - நம்ம பயலும் நம்பி


காசப் புரட்டுறதுக்கு

கடுதியில் வீடு வந்தான்.


புஞ்ச நிலத்த வித்து

புரட்டினான் இருபதைஞ்சு


அஞ்சு வண்டி ஆறுமுகத்தேவர்கிட்ட

வாங்குனான் இருபதைஞ்சு


ரொக்கமா பதினைஞ்சு

இன்னும் தேவைப்பட- பொண்டாட்டி


வைக்கப்புரி தாலி சங்கிலியை

வங்கியில ஈடு வச்சான்


மாசம் ரெண்டு போயி

விசாவும் வந்து சேர


ஆசைக் கனவோடு நம்மாளு

தேசம் விட்டு தேசம் வந்தான்


கம்பெனின்னு சொல்லிபுட்டு

காட்டுக்குள்ள கூட்டி வந்தான்


ஆட்டு மந்தை மேய்க்கச் சொல்லி

தோட்ட வேலை கொடுத்துபுட்டான்


கஷ்டமான வேலைகளை-நம்மாளு

இஷ்டமாக செய்து வந்தான்


நஷ்டம் என்ன ஆச்சுதுன்னா

நம்மாளுக்கு நாதியில்ல தமிழ் பேச


நாளு வாரமாச்சு

வாரம் மாசமாச்சு


நம்மாளு தமிழ் மறந்து

நாலஞ்சு மாசமாச்சு


ஒருநாள் காலையில

திருநாள் வந்தது போல்


வறண்ட பாலையில

வருணன் வந்து விழுந்ததுபோல்


கருண மகராசா அரபி

கபில் முதலாளியோட


காருல வந்திறங்கினான்

ஊருல ஆளெடுத்த ஆந்திராக்காரன்


அவுத்து விட்ட கண்ணுக்குட்டி பால்குடிக்க

எடுத்துவுட்டு ஓடுவதுபோல்


வவுத்தக் கட்டி பொழைக்கும் பய-அந்த

சவத்த திங்கும் பயல்ட்டப் போனான்.


‘அய்யா தெரியுதாய்யா நானு

நீங்க ஆளெடுத்த ஏழைமகன்


நல்லா இருக்கிங்களா உங்களைப்

பாத்து நெடுநாளாச்சுன்னு


பொய்யாப் பொழைக்கும் அந்த

போர்ஜரிப் பய சொன்னான்


‘பய்யா கோனே தும் (யார் நீ),

துமாரா பாஷ மேராக்கோ மாலும் நஹின்னு

(உன் மொழி எனக்குத் தெரியாது)

புதன், 2 பிப்ரவரி, 2011

ஆரஞ்சுப் பழம் வாங்கி வைச்சியா?


சாயங்காலம் ஆட்டம் போட்டு

சாப்பிடாம தூங்கும் மகன்


எப்ப எந்திரிப்பான் என்ன கேட்பான்னு

எங்களுக்குத் தெரியாததாலே


கொக்கச்சி பாக்கட்டு ஒன்னு

குடமிளகாய் லேஸ் பாக்கட்டு ஒன்னு


மிக்சர் பாக்கட்டு ஒன்னு-பிரிட்டானியா

மில்க் பிக்கிஸ் பாக்கட்டு ஒன்னு


பச்சை வாழைப்பழம் ஒன்னு-நாட்டு

மஞ்ச வாழைப்பழம் ஒன்னு


டிக்டாக் பாக்கட்டு ஒன்னு-தித்திக்கும்

தேன்குழல் பாக்கட்டு ஒன்னு


வாங்கி வந்து வச்சிபுட்டா- தங்கமகன்

தூங்கி எந்திரிச்சா தொல்லையில்ல


தாங்கிக் கொள்ள முடியாதுங்க-செல்லமகன்

தேம்பி அழ ஆரம்பிச்சான்னா


இப்படித்தான் ஒருநாளு

நல்ல நட்ட நடுசாமத்தில


எப்படித்தான் தெரிஞ்சிட்டானோ

வீட்டில் இல்லாத பொருள் எதுன்னு


“அப்பா ஆரஞ்சுன்னு ஆரம்பிச்சான் தங்கமகன்

இப்ப கிடைக்காதுன்னா ஏத்துக்கல செல்லமகன்


வெக்கம் பாக்காம ராத்திரியில்

பழக்கடை கோவிந்தன் வீட்டுக் கதவு தட்ட


தூக்கம் பாக்காம அவனும் கடைதிறந்து

எம்மவன் ஏக்கம் தீர்த்து வச்சான்.


அப்பப்ப போன் போட்டு என் பொண்டாட்டிகிட்ட

ஆரஞ்சு வாங்கி வச்சியான்னு கேட்பதுண்டு.


இப்ப ரெண்டு நாளா என் மகன்

என்ன கேட்குறான்னா



‘அப்பா எங்கம்மா நான் அவரை

எப்பம்மா பார்ப்பேன்னு


துக்கம் அடைக்குதுங்க தொண்டைய

தூக்கம் வரலிங்க கண்ணுல


கடலைக் கடந்து வந்து சம்பாதிக்கிறது

காசு பணம் மட்டும்தாங்க


சனி, 29 ஜனவரி, 2011

நாங்க உங்களவிட கொஞ்சம் மேல்ஜாதி

எங்க கம்பெனில பாத்துகிட்டு இருந்த வேலைய இன்னிக்கு பலுதியா (நகராட்சி) அதிகாரிங்க ஆய்வு செய்யப் போறதா தகவல் வந்தது.

சவுதில தார்சாலையைத் தோண்டுறதா இருந்தா முறைப்படி பலுதியா அலுவலகத்தில் இருந்து அனுமதி வாங்கிட்டுத்தான் தோண்டனும். அதே மாதிரி தோண்டுன பகுதியை மூடுறதா இருந்தாலும் அவங்ககிட்ட காட்டிட்டுதான் மூடனும்.

பலுதியா அதிகாரிங்க எல்லாம் அரபிங்கதான். நம்ம பேசுற இங்கிலிசு அவங்களுக்கு புரியாது. அவங்க பேசுற இங்கிலிசு நமக்குப் புரியாது. அதுனால குழப்பம் வராம இருக்கிறதுக்காக பெரும்பாலும் இந்த மாதிரி ஆய்வுக்கு போகும்போது கூடவே கம்பெனில வேலைப்பார்க்குற சவுதி PROவை கையோடு கூட்டிட்டுப் போறது.

நான் எங்க கம்பெனி சவுதி PRO அபு பாகத் அல் கால்தின்னு பேரு. அவரைக் கூட்டிக்கிட்டு வேலை நடக்கிற இடத்துக்குப் போனேன்.

வேலை நடக்கிற இடம் சின்ன சந்துக்குள்ள இருந்ததாலே மெயின் ரோட்டுலேயே வண்டியை பார்க்கிங் செய்துவிட்டு கதவெல்லாம் அடைச்சிட்டு கிளம்பும்போது PRO சொன்னார். “சாதிக் உன் லேப்டாப்ப கையில் எடுத்துக்க, இது ஒன் டென் (110) ஏரியா கார் கண்ணாடியை உடைச்சு லேப்டாப்ப எடுத்துட்டு போயிடுவானுகன்னு.

வோல்டேஜ் கணக்குல நம்பர் சொல்றாரேன்னு எனக்கு குழப்பம் வந்தாலும் உள்ளூர்காரரு விசயமில்லாம சொல்ல மாட்டாருன்னு நான் லேப்டாப்ப கையில் எடுத்துக்கிட்டேன்.

“என்னய்யா சவுதில்ல திருட்டுப் பயம் கிடையாதுன்றானுக, நான் முத்தரபி, முனிசில்லா ஏரியாவெல்லாம் பலதடவை இந்தமாதிரி காருலயே லேப்டாப்ப வச்சிட்டு போயிட்டு வந்திருக்கேன், பத்திரமா இருக்குமே, யாரும் கண்ணாடியை உடைச்சதா இதுவரைக்கும் கேள்விப்படலியேன்னு கேட்டேன்.

அதுக்கு அவர் சொன்னாரு “சாதிக் அதெல்லாம் 220 ஏரியா, அங்கே தப்புத்தண்டாவெல்லாம் நடக்காதுன்னு.

“என்னது 220யா? 110க்கும் 220க்கும் அப்படி என்ன வித்தியாசம்ன்னு கேட்டேன்.

“ஏமன், சிரியா, சூடானிலிருந்து பஞ்சம் பொளைக்க சவுதிக்கு வந்து செட்டிலாயிட்டவனுக 110, சவுதியையே பூர்வீகமாக கொண்ட குடிமக்கள் 220ன்னு PRO விளக்கம் கொடுத்தார்.

“சரி சாதிக் நீங்க இதுல என்ன ஆளு 110ஆ 220யான்னு அவரைக் கேட்டேன்.

“நான் 380 இவங்களக் காட்டிலும் கொஞ்சம் மேல் ஜாதி, எங்க 380 ஆளுங்கதான் சவுதியிலே பெரிய ஜாதி சவுதில மன்னரா இருக்கிறவுங்களாம் 380தான், அந்த வகையில நான் மன்னருக்கு தூரத்துச் சொந்தமுன்னு எனக்கு ஒரு பீதியைக் கிளப்பினாரு மனுசன்.

வேலை முடிச்சு திரும்பி வரும்போது PRO கேட்டாரு “ஏன்பா உங்க ஊருல நிறைய ஜாதி இருக்குன்னு கேள்விப்பட்டிருக்கேன் இதுல எந்த ஜாதி உங்கள ஆளுறவுங்கன்னு கேட்டாரு

நான் சொன்னேன் எங்கள ஆளுறவுங்க எல்லாம் உங்க மன்னர் ஜாதி 380ஐக் காட்டிலும் பெரிய ஜாதின்னு

“அப்படியா என்ன அவுங்க நம்பரு PRO கேட்டாரு.

“அவுங்கள்ளாம் 420 ஜாதியை சேர்ந்தவுங்கன்னு சொல்லி முடிச்சேன்

வியாழன், 27 ஜனவரி, 2011

234 தொகுதிகளிலும் திமுக தனித்துப் போட்டி




ஆச்சர்யமா இருக்கா? வரவிருக்கும் தேர்தலில் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் திமுக தனித்தே போட்டியிடுகிறதுஇது குறித்து திமுகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட முதல்வர் கருணாநிதி இந்த தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார். தேர்தல் அறிக்கையின் சில முக்கியமான அம்சங்கள் பின் வருமாறு.இலங்கையில் பல்லாயிரக்கணக்கான தமிழ் உடன்பிறப்புக்களைக் காவு கொண்ட காங்கிரஸ் கட்சியுடன் இனி உறவு இல்லை. இதற்கு அடையாளமாக மத்திய அமைச்சரவையிலிருந்து திமுக அமைச்சர்கள் ராஜினாமா. ஆதரவும் உடன் வாபஸ்.

தமிழகம் முழுவதும் பூரண மதுவிலக்கு அமுல்படுத்தப்படும். டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்படும்.

கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஊழல் செய்த ராசா டி ஆர் பாலு போன்றவர்கள் கட்சியிலிருந்து உடனடி நீக்கம். அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் இனி எதிர்காலத்தில் யாரும் ஊழல் செய்யா வண்ணம் உடனடிச் சட்டம் இயற்றப்படும்.

அரசு ஊழியர்களுக்கு அள்ளி வழங்கப்படும் சலுகைகள் நிறுத்தப்படும்.பணிக்கு வராமல் தொழில் சங்க நடவடிக்கையில் ஈடுபடும் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவர்.

காலம் மாறி வருவதற்கேற்ப காவிரிநீர் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண பிரதமருக்கு மின் அஞ்சல் குறுஞ்செய்தி அனுப்பப்படும். கடிதம் எழுதுதல் தந்தி அடித்தல் போன்ற பழஞ்சடங்குகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் இலவசம் அனைத்தும் நிறுத்தம். மாறாக வீட்டுக்கு ஒருவருக்கு வேலை கொடுக்கப்படும். இனி மக்கள் இலவசங்களுக்கு வரிசையில் நிற்காமல் அவரவர் குடும்பத்தை அவரவரே கவணித்துக் கொள்ள அரசு அறிவுரை.

கட்சியில் குற்றப்பிண்ணனி கொண்டவர்கள் அனைவரும் களையெடுப்பு. முரட்டுப் பக்தர்கள் முதுகெலும்பு உடையும் வண்ணம் சட்டங்கள் கடுமையாக்கப்படும்.

வாழ்ந்து மறைந்த வள்ளுவரின் குறள்களை பின்னுக்குத் தள்ளி விட்டு பேருந்துகளில் எழுதப் பட்ட வாழும் வள்ளுவரின் அச்சு பிச்சு வாசகங்களான “நான் என்று சொன்னால் உதடு ஒட்டாது நாம் என்று சொன்னால்தான் உதடுகள்கூட ஒட்டும் போன்ற தத்துவங்கள் தார் கொண்டு அழிக்கப்படும்.

இனி இப்தார் நோண்புகளில் மட்டும் கஞ்சி குடிக்காமல் கொப்புடையம்மன் கோவிலில் ஆடிக்கூழும், குலசாமிக்கு படையல் வைத்து யார் கூப்பிட்டாலும் அங்கு வந்து பொங்கலும் தேங்காய் சில்லும் திங்க கருணாநிதி தயார்.

கட்சியின் சினிமாத் தொடர்பு முற்றிலும் அறுத்தெறியப் படும். உளியின் ஓசை, கண்ணம்மா, இளைஞன் போன்ற காப்பியங்களை இனி கலைஞர் எழுத மாட்டார்.உப்புமா படங்களுக்கு மக்கள் பணத்தில் வரி விலக்கு செய்யும் கூத்துகள் இனி நிறுத்தப்படும்.

கடலில் தூக்கிப் போட்டால் கட்டுமரமாய் வருவேன் செருப்பாய் தேய்வேன், பொறுப்பாய் இருப்பேன் என செண்டிமெண்ட் வசனங்களை இனி கலைஞர் பேசமாட்டார். மேலும் அய்யோ கொல்லுறாங்களே என நடுநிசியில் அழவும் மாட்டார்.

மொத்தத்தில் மக்கள் அனைவரும் சிரித்துக் கொண்டே இருக்கும் வண்ணம் இனி வரும் ஆட்சி அமையும் என கருணாநிதி தமிழக மக்களுக்கு உத்தரவாதம் வழங்குவதோடு இந்த அறிக்கையில் சொல்லாத பல நல்ல விசயங்களையும் செய்வதற்கு தமிழக மக்களிடமிருந்து கைமாறாக ஒரே ஒரு ஒற்றை வாக்குறுதி மட்டும் கேட்கிறார்.

அது என்னவென்றால்

தமிழகத்தின் 21ம் 22ம் 23ம் 24ம்25ம் முதலமைச்சராக

.

இவரையும்

26ம், 27ம்,28ம், 29ம் 30ம் முதலமைச்சராக இவரையும்

இவர் காலத்துக்குப் பின் முதலமைச்சராக மேல் உள்ள படத்தில் உள்ளவரின் மகனையோ மகளையோ மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதே அது.


புதன், 26 ஜனவரி, 2011

சவுதியில் ஒரு வாய்க்காலுக்கு என்னுடைய பெயர்


பத்து நாளைக்கு முன்னே எங்க கம்பெனி போர்மென் அரங்கசாமி எனக்கு போன் பண்ணுனார். “சார் சைட்டுல ஒரு பிரச்சினை உடனே வாங்க.

அரங்கசாமி நம்ம ஊருக்காரருதான், சவுதில 20 வருசம் சர்வீஸ், சவுதி அல் ஹாசா மாவட்டத்துல அவருக்கு எல்லா இடமும் அத்துபடி.

சவுதி அல் ஹாசா மாவட்டத்துல பல இடத்தில கம்பெனிக்கு வேலை நடக்கிறதால “எங்கண்ணே வரனும்ன்னு நான் கேட்டேன்.

“பட்டாலியா சுல்த்தான் பள்ளிவாசலுக்கு கிழக்கே தணிகாசலம் வாய்க்காலுக்கு வந்துருங்கன்னு அரங்கசாமி சொன்னார்.

அல் ஹாசா மாவட்டம் சவுதி பாலைவனத்துலேயே ஒரு சோலை வனம். நம்ம ஊரு மாதிரியே இங்கே எல்லாவித பழமரங்களும் விளையும். குறிப்பா பேரீச்சை மரம் அதிகம். சவுதி அரசாங்கம் இந்த மாவட்டம் முழுவதும் வாய்க்கால்கள் மூலமாக பாசன வசதி செய்து கொடுத்திருக்கிறது. மேலும் கழிவு நீர் வெளியேறவும் அரசு வாய்க்கால் வசதிகளை செய்து கொடுத்திருக்கிறது. அதுனால எங்கப் பாத்தாலும் இந்த மாவட்டம் முழுவதும் சாலையின் நடுவிலும் ஓரத்திலும் வாய்க்கால்களாக இருக்கும்.வாய்க்கால்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு எண் உண்டு. டி1,டி2,டி3 என கணக்கிலடங்காத வாய்க்கால்கள் இந்த மாவட்டத்தில் உண்டு.

எனக்கு ஒரு ஆச்சர்யம், பெரும்பாலும் சவுதி சாலைகளுக்கே கிங்பாத் சாலை, அப்துல் அஜிஸ் சாலை, கிங் பைசல் சாலை என மன்னர்கள் பெயர் மட்டும்தான் இருக்கும். இதில் வாய்க்காலுக்கு தணிகாசலம் வாய்க்கால் என எப்படி பெயர் வந்தது?

ஆர்வம் மேலிடவே நான் அரங்கசாமியிடம் கேட்டேன். “என்னது தணிகாசலம் வாய்க்காலா? எப்படி அதுக்கு அந்த பெயர் வந்தது?

“இப்பத்தான சார் வந்துருக்கிங்க போகப் போக நீங்களே தெரிஞ்சிகிருவிங்கன்னு அந்த வாய்க்காலுக்கு வர்றதுக்கு வழியையும் சொன்னார். அவரு சொன்னமாதிரி அந்த வாய்க்காலுக்கு வண்டியில போய் சேர்ந்தேன்.

வாய்க்கால் ஆரம்பத்துல டி1 என்று மட்டும்தான் எழுதியிருந்தது. ‘என்னங்க தணிகாசலம் வாய்க்காலுன்னுதான் சொன்னிங்க இங்க எந்த போர்டையும் காணோமேன்னு கேட்டேன்.

“அது கவர்மெண்டு நம்பர் சார், ஆனா நம்ம கம்பெனிகாரங்களுக்கு இதை தணிகாசலம் வாய்க்காலுன்னு சொன்னாத்தான் தெரியும். அதுமட்டுமா இங்கே சர்புதின் வாய்க்கால், அஷ்ரப் வாய்க்கால், தாமஸ் வாய்க்காலுன்னு நம்ம கம்பெனி ஆட்கள் பேரில நிறைய வாய்க்கால் இருக்கு. ஏன் நாளைக்கே தங்கராசு நாகேந்திரன் வாய்க்காலுன்னு உங்க பேரிலயே ஒரு வாய்க்கால் வரும் அப்ப நீங்க புரிஞ்சுகிருவிங்கன்னு பூடகமாக முடித்தார்.

சரிதான் நம்ம மதுரையில பாண்டிங்கிற பேருல பல ஆட்கள் இருக்கும்போது அவர்களை தனித்தனியே இனம் காண குட்டைப் பாண்டி நெட்டைப்பாண்டி, வெள்ளைப்பாண்டின்னு பட்டப் பெயர் சொல்லி அழைப்பதை போல இதுல ஏதாவது விசயம் இருக்குமுன்னு நினைச்சுகிட்டேன். அப்போதைக்கு வேலைச் சிக்கலை தீர்க்க முனைப்பட்டதில் அந்த விசயம் மறந்து போனது.

இன்னிக்கு சவுதில நல்ல மழை. அதிகாலை 4 மணிக்கு புடிச்ச மழை 6 மணி வரைக்கும் விடவே இல்லை. அதுக்கப்புறம் 9 மணிக்கு நான் காரை எடுத்துக்கிட்டு பனிமான் என்கிற இடத்துக்கு ஆய்வுக்கு சென்றேன். தோட்டம் உள்ள மஜுரா பகுதிக்கு சென்றபோது நல்ல மழை பெய்திருந்ததால் மணல் சாலை வழுக்க ஆரம்பித்தது. கவனமாக வண்டி ஓட்டியும் ஒரு திருப்பத்தில் திருப்பும்போது சாலை வழுக்கியதால் வண்டி நடுவில் இருந்த வாய்க்காலில் இறங்கிவிட்டது. நல்ல வேளை வாய்க்கால் ஆழம் அதிகம் இல்லாததால் எனக்கு அடி ஒன்றும் படவில்லை.

அப்புறம் என்ன கம்பெனிக்கு போன் போட்டு கிரேன் கொண்டு வந்து வண்டியை தூக்கி திரும்பவும் கம்பெனிக்கு வந்தபோது அரங்கசாமி கேட்டார்.

“சார் அந்த வாய்க்கால் நம்பர் என்ன?

“ம் டி22AG ஏன் கேட்கிறிங்கன்னு கேட்டேன்.

அரங்கசாமி சொன்னார். “அது கவர்மெண்டு நம்பரு, இன்னைலருந்து அந்த வாய்க்காலுக்கு பேரு தஙகராசு நாகேந்திரன் கேனால்