செவ்வாய், 11 ஜனவரி, 2011

உள்ளூரில முசப் புடிக்க முடியாம


“கோடிக்கணக்கில் பணம் கொடுத்தான் அவன் கோவிலுக்கென்றே செலவழிப்போம் பெங்களூர் ரமணி அம்மாள் N73யிலிருந்து வேண்டிக் கொண்டிருந்தார்.

உறக்கம் கலைந்த மணி கண்டன் போர்வையிலிருந்து தலையைத் தூக்கி போனின் அலாரத்தை நிறுத்தி மணி பார்த்தான். அதிகாலை 3.30. நசீர் இருக்கிறானா என அவன் படுக்கையைப் பார்த்தான். இல்லை, “பய புள்ள நமக்கு முன்னாடியே எந்திரிச்சிட்டான் போலிருக்கே மனதுக்குள் நசீரைத் திட்டிக் கொண்டே பற்குச்சியில் சுவாச புத்துணர்ச்சியை பிதுக்கினான்.

பாத்ரூம் கதவு பூட்டியிருந்தது. ஆறு பேர் தங்கியிருக்கும் அறை அது. கழிவறை ஒன்றுதான். காலை ஆறு மணிக்கு எல்லோருக்கும் வேலை. தங்கியிருக்கும் முகாமிலிருந்து அவரவர் வேலை பார்க்கும் இடத்திற்கேற்ப பேருந்து 4 மணியிலிருந்து செல்லத் துவங்கும். மணி கண்டனுக்கு தூரத்தில் வேலை. அவனுக்கு கடைசிப் பேருந்து 5.00 மணிக்கு. கடைசிப் பேருந்தை விட்டு விட்டால் பணிக்கு செல்ல முடியாது. அப்புறம் கம்பெனியில் நாலு நாட்கள் சம்பளம் பிடித்தம் செய்வார்கள்.

பல்லைத் துலக்கிய பின்னும் பாத்ரூமிலிருந்து நசீர் வராதது மணிக்கு கவலையை ஏற்படுத்தியது.. மணி பலமுறை நசீரிடம் சொல்லியிருக்கிறான். வந்தா மட்டும் போ, வரலைன்னா போகாதே நீ வருது வருதுன்னு மணிக்கணக்கில் உட்காந்துகிட்டு இருந்தா வர்றவன் எங்கே போறது

உள்ளே கால் கழுவும் தண்ணீர் ஓசை கேட்ட்து. பசி கொண்ட நேரம் தாளிக்கும் ஓசை போல அந்த ஓசை மனதுக்கு நிம்மதியாக இருந்தது

காலைக்கடனை அவசரம் அவசரமாக முடித்து பாதுகாப்பு உடைகளையும் காலணிகளையும் அணிந்து கொண்டு முகாமிலிருக்கும் உணவுக்கூடத்திற்கு வந்தான். மணி 4.30. உணவுக்கூடத்தில் மிக நீண்ட வரிசை. உணவுக்கூடத்தில் இரண்டு வரிசைகள். ஒன்று இந்தியன் வரிசை, மற்றொன்று பிலிப்பினோ வரிசை. இந்தியன், நேபாளி, பாகிஸ்தானி, பங்களாதேசி, ஆப்கான், சிலோன்காரன் அனைவருக்கும் ஒரே வரிசைதான். பிலிப்பினோவுக்கு மட்டும் தனி வரிசை.

மணி கண்டன் தட்டை எடுத்துக் கொண்டு பிலிப்பினோ வரிசையில் நின்றுகொண்டான். இந்திய வரிசையில் நின்றால் சாப்பிட்டு வேலைக்குப் போக முடியாது என மணிக்கு தெரியும்.வரிசையில் முன் நின்ற பிலிப்பினோ ‘ஓ பரே யூ பிலிப்பினோவா என கேலி செய்தான். மணிக்கு அவனது கேலி பெரிதாக தெரியவில்லை.

‘நாய் திங்கிற பயலுக சாப்பாடு நினைக்கும் போதே மணிக்கு குடலைப் புரட்டியது. என்ன செய்ய, இந்திய வரிசையில் நின்றால் நேரத்துக்கு வேலைக்குப் போக முடியாது. வெந்தது வேகாதது என பேதம் பார்க்காமல் அவதி அவதியாக அள்ளித் தின்று முடித்து விட்டு ஓடிப் போய் புறப்பட தயார் நிலையில் இருந்த பேருந்தில் ஏறி அமர்ந்துகொண்டான்.

பனிக்காற்று ஊசிபோல குத்தியது. மணிகண்டன் மங்கி குல்லா எடுத்து அணிந்து கொண்டான். போட்டிருந்த ஸ்வெட்டர் பனி தாங்க வில்லை. சம்பளம் போட்டதும் நல்ல கணமான ஜெர்கின் ஒன்று வாங்க வேண்டும் என நினைத்துக் கொண்டான்.

சம்பளம் எப்ப வருமுன்னு தெரியவில்லை. கம்பெனியில் இப்படித்தான் சமயத்தில் அம்பது நாளுக்கொரு முறைதான் சம்பளம் வரும், எப்பவும் கம்பெனியில் மூன்று மாத சம்பளம் பாக்கி இருந்துகொண்டே இருக்கும். சென்ற வெள்ளிக்கிழமை வீட்டுக்கு போன் செய்த போது சின்னபையனுக்கு உடம்பு சரியில்லை என பொண்டாட்டி சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. இன்னிக்கு சம்பளம் போடாட்டி பங்காளி (பங்களாதேசி)கிட்ட வட்டிக்கு வாங்கியாவது வீட்டுக்கு பணம் அனுப்ப வேண்டும்.என நினைத்துக் கொண்டான்.

வேலை பார்க்கும் இடம் வந்து விட்டது. மணி இடுப்பு பெல்டை அணிந்து கொண்டு சரசரவென இரும்பு சட்டங்களில் ஏறினான். இரும்புச் சட்டம் பனிக்கு ஐஸ் கட்டிப் போல இருந்தது. சவுதி இப்படித்தான் வெயில் காலம் நெருப்பாய் சுடும். பனிக்காலம் கை கால் எல்லாம் விரைத்துப் போய் விடும். உயரமான இரும்புச் சட்டங்களில் ஒரு தடவை ஏறி விட்டால் சாயங்காலம் வேலை முடிந்தபின் தான் இறங்க முடியும். ஒன்னுக்குப் போவதென்றால் கூட பாட்டிலில் இருந்து தூக்கித்தான் போட வேண்டும்.

கீழே வேலை பார்க்கலாம்தான். மணிக்கு வாய்த்த போர்மென் பீகாரி. மணிக்கு இந்தி தெரியாது. அது மட்டுமல்ல தமிழன் ஒருவன் தான் என்ன வேலை கொடுத்தாலும் செய்வான் சட்டம் பேசமாட்டான். அது பீகாரிக்குத் தெரியும் அதனால்தான் மணிக்கு இரும்புச் சட்ட்த்தில் வேலை.

11 மணி இருக்கும். நோக்கியா இரண்டு தடவை சினுங்கியது. எடுத்துப் பார்த்தால் ஊரிலிருந்து தங்கச்சி ராணி. வெளிநாட்டில் இருக்கும் எல்லோருக்கும் ஊரிலிருந்து மிஸ் கால் மட்டும்தான் வருகிறது. சரியா ஒரு ரிங் அளவுக்கு மட்டும் மிஸ் கால் கொடுக்கும் கலையை எங்க இருந்துதான் படிக்கிறானுகளோ. மணி போன் எடுத்து பேலன்ஸ் பார்த்தான். 15 கலாலாதான் இருந்தது. லோக்கல் மிஸ் கால்தான் கொடுக்க முடியும்.

இருந்தாலும் மனசு கேக்கவில்லை மணிக்கு. லோடு அனுப்பும் ஜெயராமனுக்கு போன் போட்டான். “அண்ணே ஒரு பத்து ரியால் மட்டும் அனுப்புங்க கொஞ்சம் அவசரம்என்றான்.

பத்து நிமிடம் கழித்து லோடு வநது சேர்ந்தது.ராணிக்கு ஓரு போனைப் போட்டான். “என்னம்மா நல்லாருக்கியா என்ன விசயம் எனக் கேட்டான்.

“அண்ணே நீ போனதடவ வந்தபோது கொடுத்த போனை என் வீட்டுக்காரர் தொலைச்சிட்டாராம், அவருக்கு வேலை விசயமா போன் அவசியமாத் தேவைப்படுறதுனால உடனே யாராவது வந்தா ஒரு போன் கொடுத்து அனுப்புவியாம் சொல்லச் சொன்னாருதங்கை சொல்ல வந்ததை சொல்லி முடித்தாள். மணிக்கு மயக்கம் வந்தது. சும்மாவா தொலைத்த போன் 800 ரியாலுக்கு மேல் பெறும். அது மணியின் ஒரு மாத சம்பளம். 30 நாட்கள் வெயிலிலும் கடுங்குளிரிலும் கடினமாக வேலைப் பார்த்து சம்பாதித்த பணம். வேறு என்ன செய்ய மறுபடி வாங்கித்தான் கொடுக்க வேண்டும், தங்கை வாழ வேண்டுமே..

வெளிநாட்டில் வேலை பார்கிறவனுக்கு ஊரிலிருந்து போன் வந்தால் அது இரண்டு விச்யமாகத்தான் இருக்கும். ஒன்னு காசு அனுப்பு, இல்லையெனில் செல்போன் வாங்கிவா, டார்ச் லைட் வாங்கிவா, எமர்ஜன்சி லைட் வாங்கிவா சமயத்தில் கைலிவாங்கிவா குடை வாங்கிவா என்றெல்லாம் சொல்வார்கள். ஒரு போன் போட்டு எவனாவது நல்லா இருக்கியாப்பா சாப்பிட்டியா எனக் கேட்பதில்லை.ஊருக்குப் போனால் கூட எப்ப வந்த என்று எவனும் கேட்பதில்லை எனக்கு என்ன வாங்கிட்டு வந்தேன்னுதான் கேட்பானுக.

மணி 5 ஆகிவிட்டது. மதியம் ஒரு டப்பாவில் போட்டு கம்பெனி கொடுத்த சாப்பாடு எப்போதோ செரித்து விட்டது. போர்மெனைக் காணவில்லை. காலாகாலத்தில் முகாமுக்குப் போனால் குளித்து விட்டு வரிசையில் நின்று சாப்பாடு வாங்கி சாப்பிட்டு தூங்கலாம்.வேலை முடித்து மணி இரும்பு சட்ட்த்திலிருந்து கீழே இறங்கினான்.

பீகாரி வந்து விட்டான். வேலை அவசரமாம். மேனேஜ்மெண்டிலிருந்து ஓவர் டைம் கொடுப்பதாக கூறினார்களாம். மறுபடியும் எட்டு மணி வரை வேலை பார்க்க சொன்னான். மறுக்க முடியாது ஏன் எனில் தனியொருவனுக்காக முகாமுக்கு பேருந்து செல்லாது. மறுபடியும் மணி இரும்புச் சட்டத்தில் ஏறினான்.

எட்டு மணிக்கு வேலை முடிந்து பேருந்து பிடித்து முகாம் வந்தபோது மணி ஒன்பதரை ஆகியிருந்தது. உணவுக்கூடத்தில் கட்டி வைத்திருந்த டப்பா உணவை திறந்தபோதே அதன் நெடி உணவு கெட்டுப் போனதை சொன்னது. வேறு வழியில்லை இன்னைக்கு பட்டினிதான்.

அறைக்கு சென்றான் மணி. அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். சத்தமில்லாமல் காலணிகளை கழற்றி ஆடைகளை மாற்றக்கூட நினைப்பில்லாமல் படுக்கையில் விழுந்தான். அசதியும் அவலமும் அவன் கண்களை தூக்கமாக தழுவிக் கொண்டது.

மீண்டும் காலை விடிந்தது.

“கோடிக்கணக்கில் பணம் கொடுத்தான் அவன் கோவிலுக்கென்றே செலவழிப்போம் பெங்களூர் ரமணி அம்மாள் குரலோடு.


சனி, 8 ஜனவரி, 2011

போலீஸ் ஸ்டோரி


மேஜையில் கொட்டப்பட்ட சரக்கு அந்த அறையின் இருட்டிலும் டாலடித்தது.

ஜாபரின் முகத்தில் பரமதிருப்தி. “என்னடா நான் சொன்னது சரிதானாஎன்பது போல் கூட்டாளிகள் மாட்டு காசியையும் பங்க் பூபாலையும் ஒரு பார்வை பார்த்தான்.

“என்னப்பா பாத்துகிட்டே இருக்கிங்க சீக்கிரம் வாங்கிகிட்டு கிளம்புங்க எனக்கு வேற சோலி இருக்கு பரபரத்தான் ராமர்.

ராமர் எப்பவும் இப்படித்தான். எப்பவும் டென்சனாகத்தான் இருப்பான். அவன் வியாபாரம் அப்படி.

“எவ்வளவுன்னே சொல்லுறிங்க பங்க் பூபால் பேரத்தை ஆரம்பித்தான்.

“கைகள் இரண்டயும் தூக்கி பத்து விரல்களையும் காண்பித்தான் ராமர்.

‘என்னடா வழக்கத்தவிட ஜாஸ்தியாயிருக்கு ஜாபர் காதைக் கடித்தான் மாட்டு காசி.

“ஷ் வாயில் விரலைவைத்து கூட்டாளிகள் இருவரையும் அடக்கிய ஜாபர்,அண்ணே கேட்டத தரேன் பேக் பண்ணுங்கஎன்றான் ராமரிடம்.

ஜாபர் இப்படித்தான் ஒரு தடவ முடிவு பண்ணிட்டா அவன் பேச்ச அவனே கேட்க மாட்டான்.

பேரம் முடிந்து சரக்கை எடுத்துக் கொண்டு மூவரும் வெளியே வந்தனர். ஜாபர் சுற்றும் முற்றும் யாராவது தங்களை கவணிக்கிறார்களா என நோட்டம் பார்த்துக் கொண்டான். மூவரும் அவர்கள் வந்த வண்டியைப் பார்க்கிங் செய்திருந்த வாதாம் மரத்துக்கு வந்தனர்.

ஜாபர் வண்டியை ஸ்டார்ட் செய்ய பங்க் பூபால் முன்னாலும் மாட்டு காசி பின்னாலும் அமர்ந்து கொண்டனர்

“எந்த வழியுலடா போகப்போறே?’ மாட்டு காசி ஜாபரிடம் கேட்டான்.

‘ஏன் வந்த வழியிலதான் இது ஜாபர்

“வேணாம்டா, அந்த வழியிலெ போலிஸ் ஸ்டேசன் இருக்கு, பேசாம தட்டான் தோப்பு வழியா கொந்த கருணை அப்பா தர்ஹாவைச் சுத்திப் போயிடு, அந்த வழியாப்போனாத்தான் ஆள் நடமாட்டம் இருக்காது சொல்லும் போதே மாட்டு காசியின் குரலில் ஒரு மிரட்சி தெரிந்தது.

“போடா எலவெடுத்தவனே, ஏண்டா பயப்படுறே, இந் நேரம் போலிஸ் ஸ்டேசன்ல ஒரு பயலும் இருக்க மாட்டான், இருக்குற ஒன்னு ரெண்டு பேரும் மத்தியானம் சாப்புட்ட மப்புல தூங்கிகிட்டு இருப்பான் பேசாம வா பத்து நிமிசத்துல போயிச் சேந்துறலாம் ஜாபரின் குரலில் ஒரு தைரியம். போலிஸ் ஸ்டேசன் ஜாபருக்கு ஒன்னும் புதுசல்ல, அடிக்கடி போய் வருவதால் கூட்டாளிகளின் பேச்சை அலட்சியம் செய்து வண்டியை போலிஸ் ஸ்டேசன் வழியாகவே ஓட்டிச் சென்றான்.

போலிஸ் ஸ்டேசன் நெருங்கி விட்டது. இப்போது ஜாபரின் நெஞ்சிலும் படபடப்பு. சப் இன்ஸ்பெக்டருக்கு ஜாபரின் மொள்ளமாரித்தன்ங்கள் நன்கு தெரியும், அவர் கண்ணில் பட்டு விட்டால் போதும் வேற வினையே வேண்டாம். பேசாமல் கூட்டாளிகள் சொன்னதுபோல் கொந்த கருணை அப்பா தர்ஹாவைச் சுற்றியே போயிருந்திருக்கலாம் என நினைத்துக் கொண்டான். எப்படியோ சரக்கை பத்திரமாக சேர்த்தால் போதும் என வலது காலினால் வண்டியின் வேகத்தைக் கூட்டினான்.

விதி வேறுமாதிரி நினைத்தது. சரியாக போலிஸ் ஸ்டேசனுக்கு பத்தடிக்கு முன்னால் ரோட்டின் கிடந்த கல் மேல் வண்டி ஏறாமல் இருக்க வண்டியை இடது பக்கம் திருப்பியவன் எதிரே வந்த ஒரு கிழவியை கவணிக்காமல் அவள் மேல் வண்டியை மோதி நிறுத்தினான்.

‘அடப்பாவி கொண்ணுபுட்டிங்களடா பார்த்து பதைத்து கத்தியவர்களின் குரல் கேட்டு போலிஸ் ஸ்டேசனிலிருந்து காவலர்களும் வெளியே வந்தனர்.

போலிஸைப் பார்த்த்தும் ஓட எத்தனித்த மாட்டு காசியின் கையிலிருந்து சரக்கு கீழே விழுந்தது.

“சார் குண்டு வச்சிருக்கானுங்க சார், கீழே விழுந்த சரக்கைப் பார்த்த்தும் கூட்டத்தில் ஒருவன் கத்தினான்.

மூவரும் வசமாக மாட்டிக் கொண்டனர். ஜாபர் காவலர்களைப் பார்த்தான் புதுசு போல அவர்களுக்கு ஜாபரை அடையாளம் தெரியவில்லை.அவர்கள் மூவரையும் நெட்டித்தள்ளிய காவலர்கள் ஸ்டேசன் உள்ளே இன்ஸ்பெக்டரிடம் கொண்டு சென்றனர்.

“என்னய்யா பிரச்சினை இன்ஸ்பெக்டரின் குரலில் மதிய தூக்கம் கலைந்த கடுப்பு.

“சார் ஓவர் ஸ்பீடு சார், ஒரு கிழவி மேல ஏத்திப்புட்டானுக, பையில குண்டெல்லாம் வச்சிருக்கானுக சார் ஒரு காண்ஸ்டபிள் கீழே விழுந்த குண்டுகளை எடுத்து இன்ஸ்பெக்டரின் டேபிள் மீது பரப்பினார்

கையில் பிரம்பை எடுத்த இன்ஸ்பெக்டரைப் பார்த்ததும், மாட்டு காசி பயத்தில் ஒன்னுக்குப் போக ஆரம்பித்தான்.

“சீ சீ எருமை மாடு ஸ்டேசன அசிங்கம் பண்றியாடா ராஸ்கல் “ என மாட்டு காசியை நெருங்கிய இன்ஸ்பெக்டர் அந்த சூழ்நிலையிலும் அலட்சியமாக நின்று கொண்டிருந்த ஜாபரைக் கவனித்தார்.


“டேய், நீ சப் இன்ஸ்பெக்டர் அப்துல் ரஹ்மான் பையன்ல, உங்கப்பாவைப் பார்க்க அடிக்கடி இங்கே வருவில்ல ஜாபர் காதை திருகினார். “ஏண்டா சப் இன்ஸ்பெக்டரின் பையன்னா சைக்கிள்ள டிரிபிள்ஸ் போவியா அதுவும் போலிஸ் ஸ்டேசன் முன்னாடியே, படவா ராஸ்கல் ஸ்கூல் போயிட்டு வந்தா வீட்டுல படிக்கிற வேலைய விட்டுட்டு கோலிக்குண்டு வாங்கிட்டு திரியிரிகளடா, வா அப்படியே மூனு பேரும் காதைப் பிடிச்சுகிட்டு ஆளுக்கு அம்பது உக்கி போடு திட்டிய இன்ஸ்பெக்டர் காண்ஸ்டபிளைப் பார்த்து கேட்டார்.

‘ஏன்யா இவனுக வண்டில இடிச்ச கிழவி என்னயா ஆச்சு

“அது அப்பவே எந்திரிச்சு வீட்டுக்கு போயிருச்சு சார்


புதன், 5 ஜனவரி, 2011

சொல்லுப்பா என் பையன் சாப்பிட்டானா?

கீழக்கரை பேருந்து நிலையம் ஞாயிறு மாலை 5.00 மணி.

“யப்பா செந்தி,டிபன் பாக்ஸ்ல சாப்பாடு வச்சிருக்கேன், எல்லாத்தியும் சாப்பிடு, மறந்துராதே

“சரி சரி நீ கிளம்புமா, வண்டி புறப்படப்போகுது

“சரிப்பா நல்லபடியா போயிட்டுவா, இப்படி வருசத்துக்கு ஒரு தடவ வராமே, அடிக்கடி வந்து போ, வேலை முக்கியம்தான்,ஆனா பெத்தவளயும் பாக்குறதுக்கு கொஞ்சம் நேரம் ஒதுக்கு

“எங்கம்மா முடியறது, ஊருக்குப்பக்கத்திலே நான் படிச்ச படிப்புக்கு வேல கிடைக்கல, முன்னெல்லாம் நான் வாராவாரம் வந்துகிட்டுத்தான் இருந்தேன், கல்யாணம் முடிச்சு புள்ளகுட்டியாயிருச்சு, வேல வேற ஜாஸ்தியாடுச்சு, வர்றேம்மா வர்ற பொங்கலுக்கு உன் மருமகளையும் பேத்தியையும் கூட்டிக்கிட்டு கண்டிப்பா வர்றேன்.

“சரிப்பா போயிட்டு வா, நாகேந்திரா சாப்பாடு நிறய வச்சிருக்கேன், நீயும் செந்தியும் சேந்தே சாப்பிடுங்க கடயில கிடையில வாங்கிச் சாப்பிடவேணாம், என்ன?

திருமயம் சாலையோர உணவு விடுதி ஞாயிறு இரவு 9.00 மணி.

“நாகேந்திரா இத நீ சாப்பிடு, நான் ஒரு கலரு மட்டும் குடிச்சுகிறேன்

“என்னன்னே உங்கம்மா ஆசயாக் கொடுத்திருக்காங்க நீ சாப்பிடு, நான் கடயில பரோட்டா வாங்கி சாப்பிடுக்கிறேன்.

‘டேய் என்னால சாப்பிடமுடியாது, மத்தியானம் கறி மீனு முட்டைன்னு ஏகத்துக்கு எங்கம்மா சாப்பிட வச்சு வயிரு புல்லா இருக்கு, என்னால முடியாது நீயே சாப்பிடு

“அண்ணே இங்கப் பாரு தக்காளிசாதம் முட்டை ஊலா மீன் வறுத்து வச்சுருங்காங்க, இருந்தாலும் உங்கம்மாவுக்கு உன் மேல ரொம்பத்தான் பாசம்

“எங்கம்மா எப்பவும் இப்படித்தான், ஒத்தப் பிள்ள பாரு அதுனால கொஞ்சம் பாசம் ஜாஸ்திதான்,சரி சரி நீ எல்லாத்தையும் காலி பண்ணிரு, நான் போயி கடயில ஒரு கலர் வாங்கி குடிச்சிட்டு வர்றேன்

செங்கல்பட்டு புறவழிச்சாலை திங்கள் அதிகாலை 4.00 மணி

‘நாகேந்திரா வரவா, அப்புறம் பாக்கலாம்

‘சரின்னே போயிட்டு வா, அது சரி எப்படி நீ வீட்டுக்கு போவ டவுன் பஸ் ஏதும் வருமா இந்நேரத்தில

‘அதெல்லாம் தேவயில்ல நான் வர்றது என் மாமனாருக்குத் தெரியும், கொஞ்ச நேரத்துல பைக் எடுத்துட்டு வந்துருவாரு நான் போயிக்கிறுவேன், சரியா? நீ எப்படி சென்னை சேர்ந்ததும் உடனே வேலைக்கு போயிடுவியா?

“ஆமான்னே ரூமுக்குப் பக்கத்துலதான் ஆபிஸ் அதுனால போனவுடன் உடனே ஆபிஸ் போயிடுவேன், அப்புறம் உங்கம்மா சொன்னத மறக்காதே வர்ற பொங்கலுக்கு அண்ணி பிள்ளையெல்லாம் கூட்டிகிட்டு ஊருக்கு வா

“சரிடா பாக்குறேன், நீ போயிட்டு வா

சென்னை புதன் காலை 11.00 மணி

‘என்னம்மா, ரெண்டு தடவ ஆபிஸுக்கு போன் போட்டிங்களாம், நான் ஒரு முக்கியமான வேலையா வெளியே போயிருந்தேன், சொல்லுங்க என்ன விசயம்

‘நாகேந்திரா உனக்கு ஒரு முக்கியமான விசயம் சொல்லனும், நம்ம விசயா அத்தையோட மகன் செந்தி இன்னைக்கு ஆக்சிடெண்டுல இறந்துட்டானாம்

“என்னம்மா சொல்லுறிங்க முந்தா நேத்துதான் நானும் செந்தியும் ஊரில இருந்து ஒன்னாத்தான் வந்தோம்,எப்படிம்மா

“ஒன்னும் விவரம் சரியா தெரியல்ப்பா காலையில பைக்குல வேலைக்கு போகும்போது லாரி மோதிடுச்சுன்னு சொல்லுறாங்க, எல்லோரும் கிளம்பி வேன் புடுச்சு வந்துகிட்டு இருக்கோம்,நீ உடனே செங்கல்பட்டு போயிச்சேரு

“அடடா, விசயா அத்தை என்னம்மா செய்யிறாங்க

“அவங்களுக்கு பேச்சு மூச்சு இல்லப்பா அவங்களையும் கூட்டிக்கிட்டுத்தான் வர்றோம்

செங்கல்பட்டு வெள்ளி மாலை 3.00 மணி

“சரிம்மா நான் சென்னை கிளம்புறேன். சனிக்கிழமை எல்லோருக்கு வாரச்சம்பளம் கொடுக்கனும். நீங்க பத்திரமா ஊருக்குப் போங்க, விசயா அத்தையெல்லாம் எப்ப ஊருக்கு கிளம்புறாங்களாம்

“உடனே கிளம்ப முடியுமா பதினாறாம் நாள் கருமாந்திரமெல்லாம் முடிஞ்சுதான் போவாங்க, நாமளும் இருக்கலாம்தான் ஆனா உங்கப்பாவுக்கு ஏதோ முக்கியமான வேல இருக்காம், நாங்க சாயங்காலம் 5 மணிப்போல கிளம்பி ஊருக்குப் போறோம்.அப்புறம் தம்பி உங்கிட்ட விசயா அத்தை ஏதோ பேசனும்னு சொன்னாங்க

“ஏங்கிட்டயா எங்க இருக்காங்க வாங்க போயிப் பாக்கலாம்

“அத்த

“அழாதிங்கத்த ........... ஏதோ எங்கிட்ட பேசனும்ன்னு சொன்னிங்களாம் அம்மா சொன்னாங்க”

நாகேந்திரா...................... நான் கடைசியாக் கொடுத்த சாப்பாட்ட என் பையன் சாப்பிட்டானாப்பா?

சொல்லுப்பா ஏன் மரமா நிக்கிறே, சாப்பிட்டானா என் மகன்?...........................................................

திங்கள், 3 ஜனவரி, 2011

எள்ளுன்னா எண்ணையா நிக்கனும்.


ஒரு குடும்ப ஆய்வுக்கட்டுரை ஒன்னு சொல்லுறது, என்னன்னா பெரும்பாலும் தங்கமணிகள் தங்கள் மனதில் என்ன நினைக்கிறார்களோ அதை ரங்கமணிகளிடம் நேரடியாக கேட்பதில்லை.

மனதில் இருப்பது ஒன்று. வாயில் வருவது ஒன்று. இது புதுசா கல்யாணம் முடிச்சவுங்களுக்கு முதல்ல புரியாது. நம்மளுக்கு கல்யாணம் முடிச்சு அஞ்சு வருசம் மேலாச்சா. அதுனால எங்க வீட்டு தங்கமணி எதுனாச்சும் நம்மளைக் கேள்வி கேட்டா உடனே அதைப் புரிஞ்சுகிட்டு அவங்க உண்மையிலேயே என்ன நினைக்கிறாங்களோ அத உடனே செஞ்சு முடிச்சுடுவேன். சில நேரம் நல்ல பேரும் வாங்கிடுவேன்.

உதாரணத்துக்கு

மத்தியான நேரம் ஒரு மணிப்போல தங்கமணிகிட்டே இருந்து தொலைபேசி அழைப்பு வந்தா,“என்னங்கன்னு சொன்னாப் போதும். “ என்னம்மா என்ன வாங்கனும், ஏதாவது வாழையில வாஙகனுமா இல்ல அப்பளக்கட்டு ஏதாவது வாங்கனுமான்னு கேட்பேன். எப்படிங்க கரக்டா சொல்லுறிங்க, வீட்ல அம்மா ( அவுங்கம்மா) வந்திருக்காங்க ஒரு கட்டு இலை வாங்கிட்டு வாங்க"ன்னு சொல்லுவாங்க.

"இந்த கண்ணாப் பயல ஆளயே காணோமே" (கண்ணா தங்கமணியோட ஆஸ்தான டெய்லர்)ன்னு நம்மகிட்டே கேட்டா உடனே நான் சொல்லுவேன். “எந்த சேலைக்கும்மா, போனவாரம் வாங்கினியே அந்த கத்திரிப்பூ கலர் சேலைக்கா இல்ல போன மாசம் வாங்குன வாடாமல்லி கலர் (கத்திரிப்பூவும் வாடாமல்லியும் ஒரே நிறமாத்தான் எனக்குத் தெரியுது ஆனா அத அவ்ங்ககிட்டே சொல்ல முடியாது)சேலைக்கா எந்த சேலைக்கு ஜாக்கட் வாங்கனும்அதுக்கு அவுங்க சொல்லுவாங்க “ "அதெல்லாம் வாங்கிட்டேன், நேத்து ஒரு சிந்தாமணிக்கலருல ஒரு சேலை எடுத்தேன். அதுக்கு பிந்தி அடிச்சுட்டு வாங்கன்னு சொல்லுவாங்க.சிரமேற் கொண்டு சேலையை எடுத்துட்டு போக வேண்டியதுதான் கண்ணா கடைக்கு.

ஏங்க மாடிக்குப்போறீங்களான்னு காலையில கேட்டா உடனே வாஷிங் மெசின்ல்ல துவைச்சு முடிச்ச துணியெல்லாம் எடுத்து “இதோ போய் துணியெல்லாம் காயப் போட்டிரம்மான்னு சமத்தா சொல்லுவேன். அதையே “மாடிக்குப் போறிங்களான்னு சாயங்கால நேரத்தில கேட்டாஉடனே கடகடவென மாடிக்குப்போயி காயப்போட்ட துணியெல்லாம் மடிச்சு எடுத்துட்டு வந்துருவேன்.

“என்னங்க வந்து உங்க மகனைப் பாருங்கன்னு தங்கமணி சொன்னா நம்ம தலைவன் ஏதாவது சேட்டை பண்ணிகிட்டு இருக்கனும்ன்னு புரிஞ்சுகிட்டு “என்ன பண்ணுறான் அவன், இந்தா வர்றேன்ன்னு பாத்துகிட்டு இருக்குற வேலையை அப்படியே போட்டுட்டு கிளம்பிப் போயி நம்ம சேட்டைக்காரரைப் போயிப் பார்க்கனும். அதுவே “என்னங்க வந்து என் மகனைப் பாருங்கன்னு தங்கமணி சொன்னா உடனே புரிஞ்சுக்கனும் சேட்டைக்காரர் ஏதோ நல்ல விசயம் செஞ்சுருக்காருன்னு.

இராத்திரி சாப்பாட்டு நேரம் தாண்டி வீட்டுக்கு லேட்டாப் போனா தங்கமணிகிட்ட இருந்து “ ஏன் லேட்டுன்னு கேள்வி வரும். நான் உடனே காரணம் எல்லாம் சொல்ல மாட்டேன். கை கால கழுவிட்டு அடுப்படியிலே போயி என்ன இருக்கோ அள்ளி வயித்துல போட்டுகிட்டு அப்படியே தட்டெல்லாம் கழுவி வச்சிட்டு “ஏம்மா சோத்துல தண்ணி ஊத்திரவான்னு கேட்பேன். ஒரு மெளனம் பதிலா கிடைக்கும். அதையே சம்மதமா எடுத்துகிட்டு சோத்துல தண்ணியை ஊத்திட்டு படுத்துடுவேன்.

அப்புறம் ரொம்ப முக்கியமான கேள்வி தங்கமணிகிட்ட இருந்து அடிக்கடி வரும். இதை மத்த கேள்விகள் மாதிரி எடை போட முடியாது. அது என்னன்னா “உங்கம்மா போன் பண்ணுனாங்களா?. “ஆமா போன் பண்ணுனாங்கன்னு சொன்னா "என்னைப்பத்தி என்னமாவது சொன்னாங்களான்னு அடுத்த கேள்வி வரும். இல்லையே அப்படி ஒன்னும் சொல்லலியேன்னு சொன்னா “என்னவோ மறைக்கிறிங்க என்கிட்ட, என்னைப்பத்தி உங்கம்மா ஏதாவது சொல்லாம இருக்க மாட்டங்களேன்னு அடுத்தடுத்து அஸ்திரமா கேள்விகள் வரும். அதுனால உங்கம்மா போன் பண்ணுனாங்களான்னு தங்கமணி கேட்டா உடனே நான் ‘ஆமாம்மா மறந்தே போயிட்டேன். எங்கம்மா உன்னைப்பத்தி கேட்டாங்க எல்லா வேலையும் ஒத்தையாளா செய்வா கூடமாட ஒத்தாசை செய்யுடான்னு சொன்னாங்கன்னு நானே எனக்கு குழி வெட்டிக்கிறுவேன். உடனே நம்ம தங்கமணி "உங்கம்மாவுக்கு இருக்கிற அக்கறை உங்களுக்கு கொஞ்சம் கூட இல்லையேன்னு சொல்லிட்டு சரி சரி இந்த தேங்காயை துருவுங்க சட்டினி வைக்கனும்"ன்னு சொல்லுவாங்க.

இப்படி பல கேள்விகளை எள்ளுன்னா எண்ணையா புரிஞ்சிகிட்டு பதில் சொன்னாலும், எனக்கு ஒரு கேள்வியை மட்டும் எப்படி சமாளிப்பதுன்னு இன்னும் புரியல. ஒரு வேளை இன்னும்!!! அஞ்சு வருசம் போனா அதுவும் தன்னால புரிஞ்சுடும்ன்னு நினைக்கிறேன்.அது என்னன்னா எப்ப சோறு போட்டாலும் குழம்ப ஊத்திட்டு தஙக மணி கேட்கிற கேள்வி “ என்னங்க குழம்பு எப்படி இருக்கு பெரும்பாலும் நான் இந்த கேள்விக்கு வாயில சோத்தோட கண்ணுல தண்ணியோட (காரத்தினால் அல்ல) மண்டைய மேலும் கீழும் ஆட்டுவேன்.

அப்புறம் மேலே உள்ள சிங்கப்படத்துக்கும் இந்த பதிவுக்கும் எந்த வித சம்பந்தமுமில்லைங்கோ.....


ஞாயிறு, 2 ஜனவரி, 2011

இராமநாதபுரம்னா எல்லோருக்கும் ஒரு இளக்காரம்தேன்

நேத்திக்கு ஒரு பழைய பேப்பர் என் கண்ணுலபட்டது.அதுல தமிழ்நாடு அரசு தமிழ் இலக்கியத்துல வர்ற ஐவகை நிலங்களின் பேரில் ஐந்து பூங்கா அமைக்கப் போறதா ஒரு அறிவிப்பப் பாத்தேன்.

மலையும் மலையும் சேர்ந்த குறிஞ்சிப் பூங்கா நீலகிரியாம். காடும் காடும் சேர்ந்த முல்லைப்பூங்கா கோயமுத்தூராம். வயலும் வயலும் சேர்ந்த மருதப்பூங்கா தஞ்சாவூராம். கடலும் கடலும் சேர்ந்த நெய்தல் பூங்கா நாகப்பட்டினமாம். கடைசியில சொல்லியிருக்காங்க பாருங்க பாலையும் பாலைவனமும் சேர்ந்த பாலைப்பூங்கா இராமநாதபுரமாம்.

அடப்பாவிகளா, கடைசியிலே இராமநாதபுரத்த பாலைவனமுன்னே முடிவு பண்ணிட்டிங்களா? அது என்னன்னு தெரியல ரொம்பக்காலமா இராமநாதபுரம்னா எல்லோருக்கும் ஒரு இளக்காரம்தேன். படத்துல கூட என்னவோ இராமநாதபுரத்த ஒரு தண்ணியில்லா காடு மாதிரியும் மனுசங்க குடியிருக்க வசதியில்லாததும் மாதிரிதான் காட்டுறாங்க. அவங்களுக்கெல்லாம் உண்மையை புரிய வைக்க வேண்டியது இந்த இராமநாதபுரத்துக்காரன் கடமை.

தமிழ்நாட்டுலேயே மிக நீளமான கடற்கரை கொண்ட மாவட்டம் இராமநாதபுரம்தேன். வடக்கே தொண்டியிலிருந்து ஆரம்பிச்சா தெக்கே வேம்பார் வரைக்கும் இராமநாதபுரம் மாவட்டம்தேன். சுமாரா ஒரு 250 கீமீட்டர் நீளம் இருக்கும். இந்தளவுக்கு நீளம் நாகப்பட்டினத்தில கிடையாது. இருந்தாலும் அது நெய்தல் பூங்காவாம்.என்னா வில்லத்தனம் பாருங்க.

இதிகாச காலத்துல இருந்து ஆரம்பிச்சா.. ராமர் இருந்ததுக்கு அயோத்தில சான்று இருக்கோ இல்லியோ இராமநாதபுரத்துல நிறைய சான்று இருக்கு. இராமேஸ்வரத்துல இருந்து இலங்கைக்கு போற கடல் பாலம் ஒன்னு போதும். இருந்தாலும் ராமர் தலையில் புல்ல வச்சிகிட்டு தூங்குனதா சொல்லப்படுற திருப்புல்லானி, ராமர் பாலம் கட்டுறதுக்கு முன்னதா வழிபட்டதா சொல்லப்படுற சேதுக்கரை, இராமர் கடலில் அம்பு விட்டு நல்லதண்ணி எடுத்து பருகியதா சொல்லப்படுற வில்லூண்டித்தீர்த்தம் இப்படி பல சான்றுகள் இராமநாதபுரத்துல மட்டும்தான் இருக்கு.

அப்புறமா காசிக்கு அடுத்து இந்துக்களின் புண்ணியதலமான இராமேஸ்வரம் கோவில். உலகத்துலேயே மிக நீளமான பிரகாரம் இந்த கோவிலோடோ தெக்கு பிரகாரம்தேன். அதுமட்டுமா எல்லா தோஷங்களையும் நீக்குகிற நவபாஷனம் தேவிபட்டினம் கோவில், பச்சை மரகத நடராசர் ஆருத்ரா தரிசனப்புகழ் உத்திரகோசமங்கை கோவில் சேதுக்கரை கோவில் இப்படி சொல்லிக்கிட்டே போகலாம் இராமநாதபுரத்துல.

தமிழ்நாட்டுலேயே மிகநீளமான கடல் பாலம் அது இராமநாதபுரம் பாம்பன் பாலம்தேன். கப்பல் ஏதும் வந்தா வெள்ளைக்காரன் போட்ட தூக்குபாலம் திறந்து கப்பலுக்கு வழிவிடுற அழக கண்ணுகொட்டாம பாத்துகிட்டே இருக்கலாம்.

வெள்ளைக்காரன்னு சொன்னதும் ஒரு விசயம் ஞாபகத்துக்கு வருது. முதல் முதலா வெள்ளைக்காரன் ஆதிக்கத்த எதுத்து வீரபாண்டிய கட்டபொம்மன் “கிஸ்தி திரை வரி வட்டின்னு பேசுனாரு பாருங்க அந்த வீரக்காட்சி நடந்த இடம் இராமநாதபுரம் இராமலிங்க விலாசம் அரண்மனையிலதேன்.

அப்புறம், சீமான்களே சீமாட்டிகளே பேசிகிட்டு இருந்த கூட்டத்துல சகோதரர்களே சகோதரிகளேன்னு பேசி சிக்காகோவில புகழ்பெற்றாரே வீரத்துறவி விவேகானந்தர் அவருக்கு முதல் முதல்ல பாரட்டுக்கூட்டம் நடத்தி அவரை கௌரவிச்ச பாஸ்கரசேதுபதி இராமநாதபுரம்தேன்.

இன்னும் இலங்கையில கஷ்டப்படுற தொப்புள் கொடித்தமிழன் தமிழ்நாடு வந்தா அவன முத முதலா அரவணைச்சு ஆறுதலும் உதவியும் செய்யுறது இராமநாதபுரத்துக்காரன்தேன்.

தமிழ்நாட்டுலேயே பெரிய கண்மாய் அது ஆர் எஸ் மங்கலம் கண்மாய்தான். இன்னும் களரி கண்மாய். சக்கரக்கோட்டை கண்மாய், பெரிய கண்மாய்ன்னு கண்மாய் நிறைஞ்ச ஊரு இராமநாதபுரம்தான்.

மதுரை மல்லிய விட வாசம் உள்ளது எங்க இராமநாதபுரத்து மண்டபம் மல்லி.எங்க ஊருல விளையுற மொளகாய் ஆந்திர மிளகாயவிடக் காரம் உள்ளது. தென்னந்தோட்டம் ஏராளம் இங்கே. இதெல்லாம் பாலைவனத்துல கிடைக்குமா என்ன?

வேடந்தாங்கலுக்கு பறவைகள் வர்றதுல்லாம் பழய காலம் இப்ப வெளிநாட்டு பறவைங்க வர்றதுல்லாம் இராமநாதபுரம் கமுதிக்கு பக்கம் சித்திரங்குடி அப்புறம் சாயல்குடி பக்கம் மேலச்செல்வனூர் (நம்ம ஊரு)

மொத்ததுல பறவைகள் சரணாலயமய்யா இராமநாதபுரம்.

தமிழ்நாட்டுலேயே முதல் முதலா வந்த தனியார் பொறியியல் கல்லூரி அது கீழக்கரை முகமது சதக் பொறியியல் கல்லூரிதான்.அது மட்டுமா துபாயில இருக்கிற பெரிய கம்பெனியான இ டி ஏ அஸ்கான், மெல்கோ இந்தியாவுல பெரிய கட்டுமான நிறுவனமான ஈஸ்ட் கோஸ்ட் கம்பெனி இது எல்லாம் இராமநாதபுரத்துக்காரங்களுதுதான்.

வீரத்தின் இருப்பிடம் பசும்பொன் முத்துராமலிங்கதேவர்.

இந்திய அணுவியல் திலகம் அய்யா அப்துல் கலாம்

செத்துக் கொடை கொடுத்த சீதக்காதி

இந்தியாவிலேயே சிறந்த நடிகர் விருது வாங்கிய கலைக்குடும்பம்

கமல்ஹாசன்

சாருஹாசன்

சுஹாசினி

விக்ரம்

அரசியல் விமர்சகர் சோ ராமசாமி

வாழைப் பழக்காமடி செந்தில்

ராஜ் கிரன்

இளைய தளபதி விசய் தம்பியோட அப்பா சந்திரசேகர்

அப்புறம் எல்லோருக்கும் மேலே

வலையுலகபுகழ் எட்டாவது வள்ளல்

எங்கள் பாராளுமன்ற உறுப்பினர்

டாக்டர் ரித்திஷ் குமார்

இவங்கள்ளாம் இராமநாதபுரத்துகாரங்கதான்.

இன்னும் சொல்லிகிட்டே போகலாம் அப்புறம் அது தொடர் பதிவாயிடும். அதுனால இதோட நிறுத்திக்கிறேன். ஒன்னு மட்டும் சொல்லுறேன் இந்த சேது சமுத்திரம் திட்டம் மட்டும் நிறைவேறினாப் பாருங்க. இராமநாதபுரத்தில வேலைதேடி வெள்ளைகாரனுக எல்லாம் வந்திடுவான்

.

என்ன குடிக்க தண்ணி கிடைக்கிறது கொஞ்சம் கஷ்டம். அதுக்காக எங்க ஊரை பாலைவனம்ன்னு சொல்லுறதுல்லாம் ரொமப்வே ஓவரு. ஒரு வேளை அரபு நாடுக மாதிரி எங்க ஊரிலயும் இயற்கை எரிவாயுல்லாம் கிடைக்கிறதுனால இந்த முடிவுக்கு வந்துட்டாங்களோ என்னவோ.