செவ்வாய், 24 நவம்பர், 2009

தமிழக சாலை அவலங்கள்

மேலே உள்ள படங்கள் உழுது போட்ட வயலோ அல்லது ஏரி கண்மாய் நிலங்களோ அல்ல. இவை தமிழகத்தின் பிரதான சாலைகள்.
50 நாட்கள் தாமதமாக ஆரம்பித்த பருவமழை 5 நாட்கள் கூட சரியாக பெய்யவில்லை. ஆனால் இருந்த சாலைகள் எல்லாம் இது போல் பயனற்றதாக பல நகரங்களில் ஆகிவிட்டது.
குறிப்பாக இராமநாதபுரம் நகரத்தில் வசிப்பவர்களை கேட்டால் தெரியும். கிட்டத்தட்ட நகரில் உள்ள அனைத்து சாலைகளும் சிதிலமடைந்து வண்டிகளின் பயன்பாடு மட்டுமன்றி மக்கள் நடக்கக் கூட லாயக்கற்றதாகி விட்டது. குறிப்பாக பேருந்து நிலையத்தில் இருந்து கேணிக்கரை செல்லும் வழி, சின்னக்கடைத்தெரு செல்லும் வழி, குமரயா கோவில் சாலை, அக்ரஹாரம் சாலை, தினகர் அரன்மனை சாலை என கிட்டத்தட்ட நகரின் பிரதான சாலைகள் அனைத்தும் குளம் போல தண்ணீர் தேங்கி மக்கள் வீதியில் நடமாடவே முடியாத அளவுக்கு மிக மிக மோசமாக உள்ளது. தேங்கிய தண்ணீரில் கொசுக்கள் பரவி வியாதிகளும் பரவ ஆரம்பித்து விட்டது.
கடந்த மூண்று தினங்களாக இராமநாதபுரம் மருத்துவனைகள் அனைத்தும் வயிற்றுப்போக்கு வாந்தி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளால் நிரம்பி வழிகின்றன.இவை அனைத்தும் சேதமடைந்த சாலைகளில் தேங்கி நின்ற நீரினால் வந்ததுதான் என சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
தமிழக சாலைகள் அனைத்தும் ஒரு மழைக்குக்கூட தாங்க முடியாத காரணம் என்ன?
முதல் காரணம் இந்த கேடுகெட்ட அரசியல்வாதிகளும் அதிகாரிகளும்தான்.
ஒரு சாலை போடுவதற்கு குறைந்தது எவ்வளவு செல்வாகும் என இந்த அதிகாரிகள் ஏற்கனவே நடப்பில் இருக்கும் விலையைக் கருத்தில் கொள்ளாமல் (Market Rate) இவர்களது அரசு விலைப் பட்டியலை அடிப்படையாக கொண்டு ஒரு மதிப்பீட்டை தயார் செய்வார்கள்.
பின்னர் டெண்டர் கோருவார்கள். யார் குறைந்த விலைக்கு கேட்கிறார்களோ அவர்களுக்கு இந்த அதிகாரிகள் வேலையைக் கொடுப்பார்கள். கொடுக்கும் போதே மாவட்டம் ஒன்றியம் 50000, 5000, வார்டு கவுன்சிலர் என ரகவாரியாக அரசியல் வாதிகளுக்கு கமிசன் கொடுப்பதற்காகவே குறைந்தது 20 சதவீதம் தொகையை எடுத்துக் கொண்டு வேலையை கொடுப்பார்கள். திட்ட மதிப்பீடும் குறைவு, 20 சதவீத கமிசன் வேறு இப்படி அடிமட்ட ரேட்டுக்கு வேலையை எடுத்த காண்ட்'ராக்டர் அவரும் லாபம் எடுக்க வேண்டும் அல்லவா இதில் தான் ஆரம்பிக்கிறது சாலையின் தரமற்ற நிலை. அரசியல் வாதிகளும் அதிகாரிகளும் எடுத்துக்கொள்ளும் 20 சதவீத கமிசன் காண்ட்'ராக்டரைப் போய் சேர்ந்தால் அவரால் தரமான் சாலையைப் போடமுடியும்.
இரண்டாவது காரணம் நிலத்தடி நீர் சம்பந்தப்பட்டது. எல்லா நிலத்துக்கு கீழும் Sub surface water எனப்படும் நிலத்தடி நீர் மட்டம் ஒன்று உண்டு. இந்த மட்டம் மாற்றம் அடையும் போது மண்ணின் தாங்குதிறனும் (Bearing capacity) மாறும். பெரும்பாலும் ஆற்றின் கரையோர சாலைகளும் கன்மாய் அல்லது ஏரிக்கரையோர சாலைகளும் சிதிலமடைவதற்கு இதுதான் காரணம். ஆற்றின் அளவுக்கு மேல் மணல் அள்ளுவதால் நிலத்தடி நீரின் மட்டத்தில் மாற்றம் ஏற்படும் அந்த மாற்றம் ஆற்றின் கரையோரம் உள்ள சாலைகளையும் பாதிக்கும். கண்மாய் ஏரிக்கரையோர ஆக்ரமிப்புக்களால் அந்தந்த கண்மாய் ஏரிகளுக்கு வழக்கமாக நீர் ஆதாரங்களிலிருந்து வரும் நீரின் அளவு குறையுமானால் அது அந்தப் பகுதியின் நிலத்தடி நீர் மட்டத்தில் மாற்றத்தினை ஏற்படுத்தும் இதுவும் சாலை சிதிலமடைவதற்கு ஒரு காரணம்.
ஆற்றில் அளவுக்கு மீறி மணல் அள்ளுபவர்களுக்கும் ஏரி கண்மாயை ஆக்ரமிப்பவர்களுக்கும் இந்த அரசியல் வாதிகளின் அதிகாரிகளின் ஆசி இல்லாமல் இல்லை.
இது போக ஒரு சாலையின் தாங்குதிறனை விட கூடுதல் சுமை உள்ள கனரக வாகனங்கள் அந்த சாலையில் செல்வதால் கூட சாலைகள் பாதிப்படையும். நிர்ணயிக்கப்பட்ட அளவினை மீறி சரக்கு எடுத்து செல்லும் வாகனங்களை முறைப்படுத்தினால் இந்த சாலை சேதத்தினை ஓரளவுக்குக் குறைக்கலாம்.
இது எல்லாத்தியும்விட இந்த சாலைகளின் மோசமான நிலைக்கு பிரதான காரணம் மழை முடிந்ததும் ஒட்டுப் போட்ட சாலைகளைப் பார்த்து திருப்தி கொண்டு கலர் டிவிகளையும் கவரில் வைத்த பணத்தையும் வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடும் நம்ம பொது சனம்.0 கருத்துகள்:

கருத்துரையிடுக

ஏதாவது சொல்லிட்டு போங்க