வியாழன், 6 ஜூன், 2013

எதிர் நீச்சல்

குஞ்சிதபாதம்ன்னு பேரு வச்சிகிட்டு நம்ம சிவ கார்த்திகேயன் படுற பாடுகளை எதிர்நீச்சல் படத்தில பார்த்த பின்னர் நம்ம சமூகத்தில இதே மாதிரி பல சொந்தப் பெயருகளையும் பட்டப் பெயர்களையும் வச்சிகிட்டு நம்மாளுக பலரும் படுற அவஸ்தைகளைப் பற்றி இந்த பதிவு.

எங்க சமூகத்தில பெரும்பாலும் குடும்பங்களை ஊர் பெயர் சொல்லிதான் உறவினர்கள் அடையாளம் காண்பாங்க. எங்க குடும்பத்தினை செல்வனூரான் என்று சொல்வது போல் காமன் கோட்டையான் ரெகுநாதபுரத்தான், புதுமடத்தான், எலம்பாட்டான், சிக்கலான், பேரையூரான், காக்கூரான் மட்டியனேந்தலான் இப்படி ஊரை வச்சி சில பேரு இருக்கும். அப்புறம் ஊரில அவன் எந்த குடும்பத்துக்காரன் என்பதை தாத்தா முப்பாட்டனாருக்கு சில பட்டப் பேரு இருக்கும் பாருங்க அத வச்சிதான் கூப்புடுவாங்க.

அந்த பேருங்கள்ளாம் பாருங்க பெரும்பாலும் முன்னோர்கள் என்ன விரும்பிச் சாப்பிடுவாங்களோ அத வச்சிதான் பேரு இருக்கும். இல்லன்னா அவுங்க என்ன வேலை பாத்தாங்களோ அத வச்சி இருக்கும்.

கம்மங்கஞ்சி, சுண்டைக்காய், கல்கண்டு, சுத்தக் கள், வெந்தய குழம்பு மிளகுதண்ணி இப்படி சில பேரு. இதுல மிளகு தண்ணிங்கிற பேரு அவருக்கு எப்படி வந்ததுன்னா அவரு எந்த சொந்தக் காரங்க ஊருக்குப் போனாலும் சாப்பிட உட்காந்தாருன்னா முதல்ல இலை நிறைய சோற வாங்கிட்டு பின்னர் குழம்பை அதுல கொள கொளன்னு கொட்டுவாராம். பின்னர் குழம்பு அதிகமாயிருச்சு சோறப் போடுங்கன்னு சொல்லி அதுல அதிகமா சோறப் போட்டு மறுபடியும் குழம்ப ஊத்த சொல்லுவாராம். அதுனால இவர் வர்றாருன்னு தெரிஞ்சாலே எல்லாரும் மிளகுதண்ணிதான் (ரசம்)குழம்பா வைப்பாங்களாம்.

அப்புறம் தொழிலை அடிப்படையா வச்சி டெய்லர் , ஐஸ் கம்பெனிக்காரர், பண்ரொட்டிக்காரர்,லாஞ்சிக் காரர்,கரண்டுக்காரர், ஆப்பை கொத்துறவருன்னு பல பேரு இருக்கும். இதுல ரொமப பாதிக்கப் பட்டவரு எங்க ஊருல பண்ணி வாத்தியாருதான். வாத்தியாரு வேலை பார்த்த இவரு பார்ட் டைமா பண்ணிங்கள வளத்து வித்துகிட்டு இருந்தாரு. அதுனால பண்ணி வாத்தியாரு பண்ணி வாத்தியாருன்னு எல்லோரும் கூப்பிட ஆரம்பிச்சி அவரோட இயற்பெயர் என்னன்னே பலபேருக்கு தெரியாம போச்சு. அவரும் அத பெருசா எடுத்துகல. ஆனா பிள்ளைங்க தலையெடுத்தவுடன் பிள்ளைங்களையும் பண்னி வாத்தியாரு மகன், பன்னிவாத்தியாரு மருமகன்ன்னு எல்லாரும் சொல்ல ஆரம்பிங்கவும் அவரு ரொம்ப வருத்தமாகி பண்ணி வளர்ப்பு தொழிலை அடியோடு தலை முழுகிட்டு ஒரு பத்தாயிரம் நோட்டிஸ் அடிச்சு ஊருல்ல குஞ்சு குழுவானுகெல்லாம் கொடுத்தாரு. அதுல அவரு என்னை இனிமே யாரும் பண்ணி வாத்தியாருன்னு கூப்பிடக்கூடாதுன்னு ரொம்பவும் உருகி கேட்டுருந்தாரு. இருந்தாலும் யாரும் அதை சட்டை பண்ணல. இன்னும் அவங்க குடும்பத்துக்கு பெரிய லைன் வீடுங்களாம் இருக்கு. அதுக்கு பெயரே பண்ணி வாத்தியாரு காம்பவுண்டுதான்.

எங்க அய்யாவுக்கு இடதுகை பழக்கம் இருந்திருக்கும் போல அதுனால அவரோட பட்டப் பெயர் வல்லங்கை. அது எங்க பரம்பரைல்ல யாராவது ஒரு வாரிசுக்கு மட்டும் வாழையடி வாழையா வந்துகிட்டு இருக்கு. எங்கப்பா கூடப் பிறந்தவுங்கள்ள எங்க பெரியப்பாவுக்கும் எங்க தலைமுறையில எனக்கும் எங்களோட அடுத்த தலைமுறையில எங்க அண்ணன் மகனுக்கும் இடது கை பழக்கம்தான். என்னையவே யாரும் வல்லங்கைன்னு கூப்பிடும் போது எனக்கு ரொம்ப பெருமையாகவே இருக்கும்.

ஆனா நான் பள்ளியில படிக்கும் போது உயரம் தாண்டுதலில் கலந்துகிட்டேன் அதுல முதல் மூணு கட்டங்களை எளிதாக தாண்டிய நான் அதுக்கப்புறம் உயரத்தை அதிகரிச்சவுடன் ஒரு மாதிரி பல்டி அடிச்சு தாண்டினேன். அதப் பாத்திட்டு எங்க பி டி வாத்தியாரு கொசு உள்ளான் மாதிரி தாண்டினயாடான்னு பாராட்டினாரு பாருங்க. பசங்க அப்படியே புடிச்சிகிடானுக அதுல இருந்து என் கொசு உள்ளான்னு மாத்திட்டானுக. பத்தாவது படிக்கிற வரைக்கும் அந்த பேரக் கேட்டா எனக்கு பயங்கர காண்டாகிடும். அப்புறம் அது பழகிப் போயி இப்ப என்ன யாரும் கொசு உள்ளான்னு கூப்பிட்டா எனக்கு சட்டுன்னு புரிஞ்சிடும் அடடா இவன் நம்மளோட ஸ்குல்ல படிச்சவுன்னு.

அதுக்கப்புறம் காலேசுல படிக்கும் போது நான் பர்ஸ்ட் செமஸ்டருல நாலு அரியரை வாங்கிட்டேன். ரொம்ப துக்கமா போச்சு. அதுக்கப்புறம் அந்த அரியரையும் பாஸ் பண்ணி மூனாவது செமஸ்டருல்ல ஆல் பாஸ் பண்னுனேன் அதுவும் 78.5% மார்க்குல. தலை காலு தெரியாம கேட்கிறவுனுகெல்லாம் பார்ட்டி கொடுத்தேன். (சும்மா டிபன் பார்ட்டிதான்.) அதுல எல்லாரும் எனக்கு பார்ட்டின்னு பேரு வச்சிட்டானுக. காலேசுல படிச்சவுங்களுக்கு நான் எப்போதும் பார்ட்டிதான்.

மகனுக்கு அழகா குகன்னு பேரு வச்சேன். அவன தெருவுல எல்லோரும் குகான்னு கூப்பிடாம கூகா கூகான்னு கூப்பிட ஆரம்பிச்சிட்டாங்க. சரி அவனத்தான் அப்படி கூப்பிடுறாங்கன்னா என்னையும் கூகாப்பா கூகாப்பான்னு கூப்பிட ஆரம்பிச்சு கடைசியில நண்டு சிண்டெல்லாம் என்னை மபோகா ஆனந்த் மாதிரி கூகாபா நாகேந்திரன்னு கூப்பிடுதுக. பரவாயில்ல இதுவும் நல்லா இருக்கு.





1 கருத்துகள்:

இராஜராஜேஸ்வரி சொன்னது…

எதிர் நீச்சல் தான் ..!

கருத்துரையிடுக

ஏதாவது சொல்லிட்டு போங்க