சனி, 19 பிப்ரவரி, 2011

இங்கு எல்லோருக்கும் ஒரே பண்டிகைதான்


தலைப்பைப் பார்த்தவுடன் நான் ஏதோ ஆன்மிகத்தப் பத்தி எழுதப் போறேன்னு நினைச்சுடாதிங்க. இது வேற. பொதுவா வளைகுடா நாடுகளில் வேலை செய்யும் மக்களுக்கு அவர்கள் எந்த மதத்தச் சார்ந்தவரா இருந்தாலும் அனைவரும் ஆவலோட எதிர்பார்க்கும் பண்டிகை ஒன்னே ஒன்னுதான். அதுதான் Vacation விடுமுறை.


கடன உடன வாங்கி கஷ்டப்பட்டு வெளிநாடு வர்றவுங்க அந்த கடன அடைக்கும் வரைதான் ஊரைப்பத்தி நினைக்க மாட்டாங்க. கடனை அடைச்சுட்டா எல்லோருமே ஊருக்கு எப்பப் போவோம்னு நாளை எண்ண ஆரம்பிச்சுருவாங்க.


நல்லாப் படிச்சவுங்களுக்கு விடுமுறை 6மாசத்துக்கு ஒரு தடவையோ வருசத்துக்கு ஒரு முறையோ வரும். மத்தபடி எல்லோருக்கும் 2 வருசத்துக்கு ஒரு தடவையோ அல்லது 3 வருசத்துக்கு ஒரு முறையோதான் விடுமுறை வரும். இங்கே எல்லோரும் உழைக்கிறது எல்லாம் அந்த நாளை மனசுல வச்சுக்கிட்டுத்தான்.


சில பேரு வருசக்கணக்குல ஊருப்பக்கமே போகமாட்டாங்க. ஒரே மூச்சா பத்து பதினைஞ்சு வருசம் மொத்தமா இருந்துட்டு நாலு காச சேத்துட்டு ஊருல செட்டிலாயிடலாம்னு மாங்கு மாங்குன்னு உழைப்பாங்க. பெரும்பாலும் இந்தமாதிரி ஆளுங்க பொம்பளப் பிள்ளை பெத்தவுங்களா இருப்பாங்க. இல்லன்னா அக்கா தங்கச்சியை கரை சேர்க்கிற பொறுப்புல இருப்பாங்க. இது ரெண்டும் இல்லன்னா தங்கமணி தொந்தரவு தாங்காம பிக்க பிடுங்கல் இல்லாம இருக்கனும்னு நினைகிறவுங்களா இருப்பாங்க.

வெக்கேசனுக்கு அப்ளிகேசன் போட்டுடாங்கன்னா ஒரு மாதிரி மந்திரிச்சு விட்ட கோழி மாதிரி ஆயிடுவாங்க. எங்க கம்பெனி முகாம்ல மொத்த ஜனத்தொகை 20ஆயிரத்துக்கு மேல தாண்டும். இதுல வெக்கேசனுக்கு ரெடியா இருக்குறவுங்கள அவங்க நடந்துகிறதப் பொறுத்து ஈசியா அடையாளம் கண்டு பிடிச்சுடலாம்.


வேட்டைக்காரன் வீராச்சாமி படத்தப் பத்துதடவப் பாத்த மாதிரி சிடு சிடுன்னு மூஞ்ச வச்சுகிட்டு வருசக் கணக்குல வேலைப் பாத்துகிட்டு இருந்தவன் எல்லோரையும் பாத்து சினேகிதமா சிரிக்க ஆரம்பிச்சான்னா வெக்கேசன் எண்ணம் அவன் மனசுல வந்துருச்சுன்னு அர்த்தம்.


பாண்டா மார்கெட்டுல ஒரு மிக்சியைப் பாத்தேன், மாவு அரைக்குது, காயை வெட்டுது, பழத்தப் புழியுது ரொம்ப அருமையா இருக்குன்னு எலக்ட்ரானிக் பொருள்களைப் பத்தி பேச ஆரம்பிச்சாங்கன்னா ஆளு வெக்கேசன் அப்ளை பண்ணப் போறான்னு அர்த்தம்.


சுனாமி மாதிரி சொந்தபந்தங்கள் வந்து அடிச்சுட்டுப் போறதுக்கு கோடாரித் தைலம், யார்ட்லி பவுடர்,ஹீரோ பேனா, மேக்கப் பாக்ஸ், கால்குலேட்டர், எமர்ஜென்சி லைட், டார்ச் லைட்டு, லேடிஸ் வாட்ச், செண்டு பாட்டில், நோக்கியா போன், பேண்ட் பிட்டு, டீ சர்ட்டுன்னு சிறுக சிறுக பொருட்களைச் சேர்க்க ஆரம்பிச்சானுகனா வெக்கேசன் அப்ளை பண்ணிட்டான்னு அர்த்தம்.


சாயங்காலம் வேலைவிட்டு வந்தவுடன் ஷூவைக்கூட கழட்டாம சாப்பாட்டுக்கூடத்துக்கு போயி சாப்பிட்டுத் தூங்குறவன் சாப்பாடுக்கூடம் பக்கமே தலைவச்சு படுக்க மாட்டானுக. கேட்டா என்னன்னு தெரியல வயிறு ஒரு மாதிரி மந்தமா இருக்குன்னு சொன்னான்னா அவன் வெக்கேசன் மேலிடத்துல அப்ரூவல் ஆயிருச்சுன்னு அர்த்தம்.


இன்னிக்கு தங்கம் என்ன விலை, ரியால் எக்சேஞ் ரேட் என்னன்னு கேட்டான்னா வெக்கேசனுக்கு பதினைஞ்சு நாள் இருக்குன்னு அர்த்தம்.


ஊரே அடங்குன சாம நேரத்துலயும் ஒரு மூலையாப் பாத்து நின்னுகிட்டு காதில செல்போன வச்சுகிட்டுஇந்தா வந்துருவேம்மா, வந்தவுடன் பேசிக்கலாம், வரும்போது எல்லாம் வாங்கிட்டு வர்றேன்ன்னு ஒரு மணி நேரத்துக்கு மேல பேசிக்கிட்டு இருந்தான்னா வெக்கேசனுக்கு பத்துநாள் இருக்குன்னு அர்த்தம்.


ஏர் கார்கோ நல்லதா சீ கார்க்கோ நல்லதான்னு பட்டிமன்றம் நடத்துறமாதிரி பேச ஆரம்பிச்சான்னா பயபுள்ளைக்கு வெக்கேசன் ஒரு வாரம்தான் இருக்குன்னு அர்த்தம்.

“சார் ஒரு பிளைட்டு படத்துல என் பேரைப் போட்டு தம்மாம் டூ சென்னைன்னு நாலு பிரிண்டு போட்டுத் தாங்கன்னு கேட்டான்னா நாலு நாள்தான் இருக்குன்னு அர்த்தம்.


அப்புறம் கடைசியா ஆட்டுத்தாடி மாதிரி பிரஞ்சு பியர்ட் வச்சிகிட்டு திரிஞ்சவன், ஆட்டாம் புழுக்கை மாதிரி கீழ் உதட்டுக்கு கீழே நாலு முடி வச்சிகிட்டு திரிஞ்சவன், விருமாண்டி மாதிரி கிருதாவுக்கும் மீசைக்கும் கனைக்சன் கொடுத்துட்டு திரிஞ்சவன் மழு மழுன்னு சல்மான்கான் மாதிரி சேவ் செஞ்சுட்டு கார்னியர் அல்லது காத்ரேஜ் உபயத்துல தலையை கருப்பாக்கி பள பளன்னு ஆயிட்டான்னா புரிஞ்சுகிற வேண்டியதுதான் புள்ள நாளைக்கு ஊருக்குக் கிளம்பப் போகுதுன்னு.


அப்புறம் போகும் போது எல்லோர்ட்டயும் செல் நம்பர வாங்கிட்டு ஊருக்குப் போனது போன் பண்ணுறேன்னு சொல்வானுக. ஆனா ஏர்போர்ட்டுல கால வச்சதும் எல்லா நம்பரையும் மறந்துடுவானுக. அப்புறம் நாலஞ்சு மாசம் கழிச்சு பழையபடி மந்திரிச்சு விட்ட கோழி மாதிரியே திரும்பி வருவானுக.


“ஏண்டா ஊர்ல இருக்கும்போது ஒரு போன் கூட பண்ணலன்னு கேட்டா ‘பண்ணலாம்னுதாண்டா நினைச்சேன் பயபுள்ள இந்த சிம்கார்டு தொலஞ்சுப் போச்சுடான்னு சொல்லுவானுக.

8 கருத்துகள்:

பொன் மாலை பொழுது சொன்னது…

பின்னூட்டம் போடா ஏதாவது மிச்சம் வெச்சாதானே !? எல்லாத்தையும் சொல்லியாச்சு . மிச்சம் என்ன இருக்கு?
நீங்க வேகாதியன் போறீங்களா இல்லை போயிட்டு வந்த கேசா அது சொல்லுங்க.

தங்கராசு நாகேந்திரன் சொன்னது…

வாங்க கக்கு மாணிக்கம் நானு வெக்கேசன் நாலஞ்சு தடவ போயிட்டு வந்துட்டேன் அந்த அனுபவம்தான் இது

Asiya Omar சொன்னது…

அனுபவம் அருமை.வாசிக்க சுவாரசியமாக இருந்தது.

ப.கந்தசாமி சொன்னது…

நல்லாச்சொல்லீருக்கீங்க. பாராட்டுகள்.

Yowan1977 சொன்னது…

//அப்புறம் கடைசியா ஆட்டுத்தாடி மாதிரி பிரஞ்சு பியர்ட் வச்சிகிட்டு திரிஞ்சவன், ஆட்டாம் புழுக்கை மாதிரி கீழ் உதட்டுக்கு கீழே நாலு முடி வச்சிகிட்டு திரிஞ்சவன், விருமாண்டி மாதிரி கிருதாவுக்கும் மீசைக்கும் கனைக்சன் கொடுத்துட்டு திரிஞ்சவன் மழு மழுன்னு சல்மான்கான் மாதிரி சேவ் செஞ்சுட்டு கார்னியர் அல்லது காத்ரேஜ் உபயத்துல தலையை கருப்பாக்கி பள பளன்னு ஆயிட்டான்னா புரிஞ்சுகிற வேண்டியதுதான் புள்ள நாளைக்கு ஊருக்குக் கிளம்பப் போகுதுன்ன//

கலக்கல் தல

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

அனுபவம் சொந்தமானதோ?

Butter_cutter சொன்னது…

arumai

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

ரைட்டு.. உலவு, தமிழ் 10 என்னாச்சூ?

கருத்துரையிடுக

ஏதாவது சொல்லிட்டு போங்க