சனி, 26 மார்ச், 2011

நீதிக்குத் தலை வணங்கு


சின்ன வயசுல நினைவு தெரிய ஆரம்பிச்சப்ப பாத்த முதல் படம் நீதிக்குத் தலை வணங்கு. பசுமரத்தாணி போல மனசுல பதிஞ்சு போன இந்தப் படத்தப் பத்தி இந்த பதிவு.

எங்கம்மா ஒரு தீவிர எம்ஜியார் ரசிகை. சிவாஜி படத்துக்குப் போனா அழுகையா வரும்ங்கிறதால் எம்ஜியார் படத்த மட்டும்தான் பார்ப்பாங்க.அப்படி போகும்போது சின்ன வாண்டுகளா இருக்கிற எங்களையும் கூட்டிப்போயி எங்களையும் எம்ஜியார் ரசிகர் ஆக்கிட்டாங்க.

கீழக்கரையில முன்ன அப்சரான்னு ஒரு தியேட்டர் மட்டும்தான். நல்லா கடற்கரை ஒரத்துல பேருந்து நிலையத்துக்கு பக்கத்தில இருக்கும். எம்ஜியார் படத்துக்கு மட்டும் அப்படி ஒரு கூட்டம் வரும். அப்பல்லாம் ஒரு கூட்டு மாட்டு வண்டியில மைக்கக் கட்டிகிட்டு ஊரு ஊராப் போயி நோட்டிஸ் வீசி படத்தப் பத்தி விளம்பரம் செய்வாங்க.

பாடல்கள் ஆறு, அத்தனையும் தேனாறு. பாடல்கள் எட்டு, அத்தனையும் தேன் சொட்டுன்னு எதுகை மோனையில் விளம்பரம் செய்வாங்க. இந்த விளம்பரம் செய்யுறதுக்குன்னே தியேட்டர்ல கஜினி காக்கான்னு ஒருத்தர் வேலை செஞ்சுகிட்டு இருந்தாரு. நல்ல கணீர்ன்னு குரல் வளம் அவருக்கு.

எம்ஜியாருன்னு பளிச்சுன்னு பேரு சொல்லிட மாட்டாரு கஜினி காக்கா. பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் ஏழைகளின் தோழன், அண்ணாவின் இதயக்கனி,மீனவ நண்பன் படகோட்டின்னு ஆரம்பிச்சு பல பட்டங்களைச் சூட்டி வாத்தியார் சின்னவர் எம்ஜியார் நடிக்கும்ன்னு முடிச்சு படத்தோட பேரச் சொல்லுவாரு.

எம்ஜியாருக்கு மட்டுமல்ல எல்லா நடிகருக்கும் ஏதாவது ஒரு அடைமொழி சொல்லித்தான் பேரச் சொல்லுவாரு கஜினி காக்கா. சிம்மக்குரலோன் சிவாஜி கணேசன் காதல் மன்னன் ஜெமினி கணேசன் அபிநய சரஸ்வதி கன்னடத்துப் பைங்கிளி சரோஜாதேவின்னு எல்லோருக்கும் தெரிஞ்ச பட்டங்களையும் சொல்லுவாரு. சில பேருக்கு பட்டங்கள் இல்லைன்னா ரவா லட்டு லதான்னு இவரே சில பட்டங்களைச் சூட்டிடுவாரு. இப்படித்தான் ஒரு கன்னட மொழி மாற்றுப் படம். ஹீரோ அம்பரிஷ் ஹீரோயின் அம்பிகா. கஜினி காக்கா விளம்பரம் பண்ணும்போது ஆணழகன் அம்பரிஷ் அழகுமயில் அம்பிகான்னு அடைமொழி சூட்டி விளம்பரம் பண்ணுனாரு.

சரி நான் நீதிக்கு தலை வணங்கு படத்துக்கு வர்றேன். படத்தோட கதைப்படி எம்ஜியார் ஒரு பணக்கார வீட்டுப் பிள்ளை. காலேஜில படிக்கிறவரு?. அதே காலேஜுல கூட நம்பியாரும் படிப்பாரு.அடேங்கப்பா 60 வயசுல காலேசுல படிச்சவங்க இவங்களாத்தேன் இருக்க முடியும்.எம்ஜியாரு அப்பாதேன் நம்பியாரை காலேசுல படிக்க வைக்குறாரு.

நம்பியாரு பெயிலான மார்க்கைல்லாம் பாஸ் மார்க்கா மாத்தி எம்ஜியார் அப்பாகிட்ட காட்டி சமத்துப் பிள்ளையா வலம் வருவாரு. எம்ஜியாரு அப்படியெல்லாம் பண்ணாம நீதிக்குத் தலைவணங்கி அப்பாகிட்ட கெட்டபேர வாங்கிகிட்டு இருப்பாரு.

எம்ஜியாரோட அம்மாவா ஜி.வரலட்சுமி நடிச்சிருப்பாங்க. அஜந்தா கொண்டை போட்டுகிட்டு பட்டுப் புடவையும் நகையுமா கணீர்ன்னு வெங்கலக் குரல்ல ‘இந்த பச்சைக்கிளிக்கொரு முத்துச்சரம்ன்னு பாடுவாங்க.அனேகமா எல்லாப் படத்துலயும் யார்மேலயாவது பாசம் காட்டனும்னா சில காட்சிகள்தான் பொதுவா வைப்பாங்க. அது என்னன்னா தூங்கும்போது போர்வை போத்தி விடுறது, சாப்பிடும்போது விக்குனா தண்ணீர் தர்றது இல்லைன்னா தலையை தட்டி விடுறது, வாப்பா உனக்கு பிடிச்ச வத்தக்குழம்பு வச்சிருக்கேன் அப்படின்னு சாப்பிடக்கூப்பிடுறது.

இந்தப் படத்துலயும் எம்ஜியாருக்கு போர்வைல்லாம் போத்தி தூங்கவைப்பாங்க அவங்க அம்மா. ஆனா எம்ஜியாரு அந்தப் பாசத்த அம்மாகிட்ட காட்டாமே ரவாலட்டு லதாகிட்ட காட்டுவாரு.

படத்தோட ஆரம்பத்துல ஒரு பைக் ரேஸ் சீன் வரும். அதுல தலைவரு 5ம் நம்பர் சட்டை போட்டுகிட்டு எண்ட்ரி ஆவாரு. தலையில் ஹெல்மெட்டு போட்டுகிட்டு 5ம் நம்பர் சட்டையோட பைக்குல தலைவரு உட்காந்து இருக்கிற காட்சி அனேகமா இந்த படத்தோட எல்லா வால் போஸ்டருலயும் இருக்கும்.

அப்புறமா நம்பியாரோட கார் ரேஸ்ல களம் இறங்குற தலைவரு, வண்டிய வேகமா ஓட்டிட்டு போகும்போது குறுக்க வர்ற பள்ளிக் குழந்தைகளின் மேல் மோதாம இருக்க வயல்ல இறங்குறாரு. அங்க வந்துகிட்டு இருக்குற ஒரு பெரியவர் மேலயும் இன்னொரு ஆள் மேலயும் மோதிடுவாரு. இதுல பெரியவர் பலியாகிவிட இன்னொரு ஆளுக்கு கண்பார்வை போயிடுது.

சட்டம் தண்டனை தராட்டாலும் மனசாட்சி உறுத்தவே தலைவரு வீட்டை விட்டு வெளியேறி லதா வீட்டுல பட்லர் வேலைப் பார்த்துகிட்டு பார்ட் டைமா அவரால பாதிக்கப்பட்ட குடும்பத்தலைவரை இழந்த குடும்பத்த காப்பாத்துறாரு.

இவரால் கண் பார்வை பறிபோன ஆளுக்கு பார்வை வர உதவி செய்யுறாரு. பார்வை வந்ததும் எம்ஜியார பழிக்குப் பழி வாங்கத் துடிக்கிறவர் எம்ஜியாரோட நல்ல குணத்தப் புரிஞ்சிகிட்டு மன்னிப்பு கேட்க கடைசியில் எல்லாம் சுபமா முடியுது.

படத்துல இந்த பச்சைக்கிளிக்கொரு முத்துச்சரம்ன்னு ஜி வரலட்சுமி குரல்லயும் ஜேசுதாஸ் குரல்லயும் ரெண்டு பாட்டு. அப்புறம் நல்லநேரம் பட்த்துல முன் கொத்து முடியோட தலைவரு இருக்குற போட்டாவை பாத்துகிட்டே லதா கனவு காணுற மாதிரி ‘கனவுகளே ஆயிரம் கனவுகளேன்னு ஒரு பாட்டு.

தலைவரு வீட்டை விட்டு வெளியேறும் போது ஜெயச்சந்திரன் குரல்ல ‘எத்தனை மணிதர்கள் உலகத்திலேன்னு ஒரு பாட்டு. அப்புறம் பாக்கப் பாக்க சிரிப்பு வருது அடக்க முடியலேன்னு ஒரு பாட்டு வரும். அதுல நீ சமைச்சு வச்ச வாழைக்காய வாயில் வக்க முடியல நீ பொரியல் செஞ்ச புடலங்காயில் கருக நாத்தம் சகிக்கலன்னு லதா சொல்ல அதுக்கு தலவரு ‘கண்ட கண்ட உரத்தப் போட்டு காய்கறிய வளர்க்கிறான் அந்த உரத்துல் கூட ஊழல் பண்ணி எங்கப் பேர கெடுக்கிறான்னு கருணாநிதிய ஒரு வாரு வாரியிருப்பாரு. அப்ப உரத்துல இருந்த ஊழல் 3ஜி ஸ்பெக்ட்ரம் வரை தொடர்ந்துகிட்டுதான் இருக்கு.

கடைசியா நான் பாத்தா பைத்தியக்காரன் உன் பாட்டனுக்கு வைத்தியம் பார்ப்பேன், பெற்றெடுத்த தாயாக மத்தவங்கள நான் நினைச்சு பிள்ளையென வாழ்பவண்டான்னு கருணாநிதிக்கு அட்வைசும் பண்ணியிருப்பாரு.

படத்தில எம்ஜியார் வேலை பாத்துகிட்டு இருக்கிற லதா வீட்டுக்கு எம்ஜியாரொட அம்மா வரலட்சுமி வந்துடுவாங்க. எம்ஜியார் முகத்தக் காட்டாம முதுக மட்டும் காட்டிகிட்டு அவங்கம்மாட்ட பேசுவாரு. அவங்கம்மாவுக்கும் எம்ஜியார அடையாளம் தெரியாது. படம் முடிச்சு வீட்டுக்கு வரும்போது நான் எங்கம்மாட்ட கேட்டேன். ஏம்மா நான் முன்ன போனா நீங்க என் முதுக பாத்து போறது நாந்தான்னு கண்டு பிடிக்க மாட்டிங்களான்னு.

அதுக்கு எங்கம்மா சொன்னாங்க நான் என்ன வரலட்சுமியா உலகத்துலேயே ஒரு வித்தியாசமான குரலு எம்ஜியாரோடதுதான் அந்த குரல வச்சே அடையாளம் கண்டு பிடிக்கத் தெரியாதவ முதுக வச்சா கண்டு பிடிக்கப் போறா? இது சினிமாடா அப்பு பட்த்தப் பாத்தமா வந்தமான்னு இருக்கனும் தொண தொணன்னு கேள்வி கேட்க்கூடாதுன்னாங்க.

அதுக்கப்புறம் நான் எந்த எம்ஜியார் படம் பாத்தாலும் அதுல லாஜிக்கெல்லாம் பாக்குறதில்ல. லாஜிக்க மறந்திட்டா எம்ஜியார் படம் எம்ஜியார் படம்தான்.


5 கருத்துகள்:

Chitra சொன்னது…

இந்த பதிவை இரண்டு தடவைகள் ரசித்து வாசித்தேன்.... so cute!

தங்கராசு நாகேந்திரன் சொன்னது…

நன்றி சகோதரி சித்ரா உங்களது ரசனையான பாராட்டுக்கும் வாக்குக்கும்

shanmugavel சொன்னது…

நல்ல நினைவலைகள்.வாழ்த்துக்கள்.

Vaanampadi சொன்னது…

Naanum kuda antha absara Theatre padam patthu erukken ....

Nalla pathivu...

ttpian சொன்னது…

Delhi pandarams never allowed coastal towns to grow: all dirty poilitcs VAPPAA!

கருத்துரையிடுக

ஏதாவது சொல்லிட்டு போங்க