நேற்று நிறுவனத்தில் எனக்கு புதியதொரு வாகனம் வழங்கப்பட்டது. பொறியாளர் பணியில் வாகனம் மிக அத்தியாவசியமான ஒன்று. ஆய்வுகளுக்கும் வேலை குளறுபடிகளைத் தீர்க்கவும் எந்த நேரத்திலும் பயணம் செய்ய தயாராக இருக்க வேண்டும். வாகனச் சாவியை வழங்கும் போது நிறுவன பொது மேலாளர் எனது வாகனம் ஓட்டும் திறமை குறித்து பாராட்டுக்களைத் தெரிவித்தார் (வாய்க்காலில் ஒரு நாள் விழுந்த கதை அவருக்குத் தெரியாது பாவம்)
எனது வாகனம் ஓட்டும் இப்போதைய நிலைக்கும் நான்கு வருடம் முந்திய நிலைக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. சற்றே ஒரு கொசுவர்த்தி ஏற்றி வைத்து பின்னோக்கி சென்றேன்.
வாகனம் பற்றிய எந்த அடிப்படை அறிவும் இல்லாத நிலையில் நான்கு வருடங்களுக்கு முன்னர் சென்னையில் ஒரு நேர்முகத்தேர்வுக்குச் சென்றேன். எனது சான்றிதழ்களைப் பார்த்து திருப்தி அடைந்த பிலிப்பினோ அதிகாரி இறுதியாக ‘உனக்கு வாகனம் ஓட்டத்தெரியுமா? என வினவினார்.
எங்கே தெரியவில்லை என்றால் நிராகரித்து விடுவாரோ என்ற அச்சத்திலும் எப்படியும் விசா போன்ற சம்பிராதயங்கள் முடிய ஓரிரு மாதங்கள் ஆகும் என்ற நம்பிக்கையிலும் கூசாமல் தெரியும் என பொய் பகர்ந்தேன்.”சரி வரும்போது உனது இந்திய ஓட்டுனர் உரிமத்தினை கொண்டு வா” என என்னைத் தேர்வு செய்தார் அந்த அதிகாரி.
ஊருக்கு சென்ற மறுநாளே எங்களது ஊரில் ஓட்டுனர் பள்ளி நடத்திவந்த ஒரு தம்பியை அணுகினேன். தம்பி என்று குறிப்பிடக் காரணம் அவர் நான் கல்லூரியில் பயின்றபோது பாலர் பள்ளியில் பயின்று கொண்டிருந்தார்.
LLR சான்றிதழ் வாங்கியபின்னால் ஒட்டுனர் பயிற்சி ஆரம்பமாகியது. என்னுடன் சேர்த்து எட்டுப் பேர் கீழக்கரைக்கும் இராமநாதபுரத்துக்கும் இடையில் உள்ள சாலையே பயிற்சிக் களம். மொத்தம் 16 கீமி ஒவ்வொருவருக்கும் நான்கு நான்கு கீ மீட்டராக பயிற்சி வழங்கினார். எனது முறை வந்தபோது கியர்களைப் பற்றி விளக்கிய தம்பி முதல் கியரைப் போட்டு வண்டியை எடுக்கச் சொன்னார். கியரைப் போட்டதும் வண்டி படுத்து விட்டது. “கிளட்சை மெதுவா விட்டுகிட்டே ஆக்சிலேட்டரை அழுத்துங்கண்ணே” என்று மரியாதையாக பேசிய தம்பி தொடர்ந்து நான்கைந்து தடவை வண்டியை எடுக்க முடியாமல் போகவும் “என்னய்யா மெதுவா விடு மெதுவா விடுன்னு சொல்றேன்ல” என மரியாதையைக் குறைத்தார்.
ஒரு வழியாக சமாளித்து வண்டியை எடுத்த பின்னர் பிடிமானம் இல்லாமல் அங்கும் இங்கும் அலைய மறுபடியும் தம்பி ஒருமையில் அர்ச்சித்தார். ஓரளவு நிதானம் வந்து ஓட்ட ஆரம்பிக்கையில் ’போதும் உங்க 4 கீமீ கோட்டா முடிந்து விட்டது மீதியை நாளைக்கு பார்க்கலாம்’ எனக் கூறினார் தம்பி.
இதுபோல் தினமும் பயிற்சி எடுத்தப் பின்னர் ஒரு மாதம் கழித்து எட்டு போட வேளை வந்தது.எட்டும் ஒரு உதறலோடுதான் முடிந்தது. எனது ஓட்டுதலைப் பார்த்து உதடு பிதுக்கிய பிரேக் இன்ஸ்பெக்டர் தம்பியைக் கூப்பிட்டு காதைக் கடித்தார். எனைத் தனியே அழைத்த தம்பி “என்னண்ணே இப்படி சொதப்புறிங்க உங்களை பாஸ் செய்யனும்னா தனியா 500 கொடுக்கனுமாம் இல்லைன்னா மறுபடி பயிற்சி எடுத்துட்டு வரச் சொல்லுறாரு எப்படி உங்க வசதின்னு தம்பி கேட்டார். எனக்கோ விசா வந்து விட்டது. ஓட்டுனர் உரிமம் ஒன்றுதான் பாக்கி. டக்குன்னு காந்தி நோட்டை தூக்கிப் போட்டுட்டேன். அடுத்த வாரத்திலேயே சவுதியும் வந்து சேர்ந்துட்டேன்.
சவுதி வந்ததும் இக்காமா (சவுதி உறைவிட உரிமம்) வர 1 மாதம் தாமதமானது. இந்த காலத்தில் நிறுவனத்தில் உள்ள ஒரு வண்டியை எடுத்துக் கொண்டு முகாமின் எதிரே ஆளில்லாத சாலை ஒன்றில் தினமும் பயிற்சி எடுத்து வந்தேன். ஒரு நாள் பயிற்சி எடுக்கும் போது அங்கு டிரய்லர் ஒன்றை நிறுத்தி ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த பாகிஸ்தான் ஓட்டுனர் ஒருவர் ‘என்னப்பா விசயம் குறுக்க நெடுக்க ஓட்டிட்டு இருக்கியே?ன்னார். நான் பயிற்சி எடுப்பதாக கூறினேன். ஊரில வண்டி ஓட்டியிருக்கியா?ன்னு கேட்டார். ஆமா நான் மாருதி கார் ஓட்டியிருக்கேன்னு ஒரு டுபாக்கூர் விட்டேன். அதுக்கு அவர் சொன்னார் நீ இதுக்கு முன்னாடி எந்த வண்டியையும் ஓட்டியிருக்க மாட்டே”ன்னார். உடனே நான் எனது இந்திய ஓட்டுனர் உரிமத்தை எடுத்துக் காட்டினேன். அதுக்கு அவர் சொன்னார் ‘லைசன்ஸ் கல்லிவெல்லி காசு கொடுத்தா இதுபோல ஆயிரம் லைசன்ஸ் கிடைக்கும்ன்னு சொல்லிட்டு நீ வண்டி ஓட்டுவே ஆனா பாஸ் ஆகிறதுக்கு நாள் ஆகும்ன்னு அருளாசி வழங்கினார்.
இக்காமா வந்ததும் முறையான ஆவணங்களோடு கண் பரிசோதனை முடித்து எனது நிறுவன சவுதி மக்கள் தொடர்பு அதிகாரி என்னை அல்ஹாசா மாவட்ட ஓட்டுனர் பள்ளிக்கு தேர்வுக்கு அழைத்துச் சென்றார்.
‘சாதிக் வண்டியில் உட்கார்ந்ததும் மறக்காம் சீட் பெல்டை போட்டுக்க, கண்ணாடி எல்லாம் சரியா இருக்கான்னு பாத்துக்க ஏன்னா காரில கண்ணாடிதான் ஓட்டுனருக்கு மூனாவது கண்மாதிரி அப்புறம் கிளட்சை மிதித்து கியர் நீயுட்ரல்ல இருக்கான்னு செக் பண்ணிக்க போலிஸ்காரர் போன்னு சொன்னப்புறம்தான் வண்டி எடுக்கனும். வண்டியை எந்தப் பக்கம் திருப்பினாலும் அதுக்கேத்த மாதிரி இண்டிகேட்டர் லைட்டைப் போட்டுக்க பாஸ் பண்ணிட்டேன்னா கம்ப்யூட்டர்ல ஒரு டெஸ்ட் வரும் உனக்கு இங்கிலிசு தெரியும் கம்ப்யூட்டரும் தெரியும் அதுனால் அது ஒன்னும் பிரச்சினையில்ல ஆல் தி பெஸ்ட்ன்னு ஆசி வழங்கி பள்ளியில் இறக்கி விட்டுட்டுப் போனார்.
முதல்ல சிக்னல் பத்தி அரைமணிநேரம் மன்னாகே பண்னாகேன்னு வகுப்பு எடுத்தாங்க. அதுக்கப்புறம் வரிசையா உட்கார வச்சு ஒவ்வொருத்தரா போலிஸ் கூப்பிட்டார். எனது முறை வந்தது. கந்த சஷ்டி கவசமெல்லாம் சொல்லி தயாரா இருந்த நான் அப்பன் முருகன் மேல பாரத்தப் போட்டுட்டு ஓட்டுனர் சீட்டில் உட்கார்ந்தேன். என்னுடைய இக்காமவை வாங்கிப் பார்த்த அதிகாரி “நீ மெகந்திசா (பொறியாளரா)ன்னு கேட்டார். ஆமாம்ன்னு சொல்லிட்டு சீட் பெல்டைப் போட்டு கண்ணாடிய ஒரு தடவை பார்த்துட்டு கிளட்சை செக் பண்ணிட்டு வண்டி சாவியைப் போடுறேன் வண்டி ஸ்டார்ட் ஆகல. என்னை ஒரு மாதிரியாப் பார்த்த அதிகாரி கிளட்சை அழுத்திகிட்டே சாவியைப் போடுன்னார். இது என்ன புதுசா இருக்கேன்னு அவர் சொன்ன மாதிரியே செஞ்சேன். வண்டி ஸ்டார்ட் ஆகி விட்டது. ம் போ என்று சொன்னார் அதிகாரி ஆக்சிலேட்டரை கொடுத்தா வண்டி உறுமுது ஆனா கிளம்பல. இந்த முறை தலையில் அடித்துக் கொண்ட அதிகாரி சொன்னார் “யேய் மெகந்திஸ் கியரைப் போடுன்னார்”
ஆஹா இவ்வளவு நேரம் கியர் போடமலா வண்டி ஓட்டினோம் என நினைத்துக் கொண்டே கியரைப் போட்டேன். ஊருல நடந்தது மாதிரி வண்டி படுத்து விட்டது.
“சரி இறங்கு போய் கம்ப்யூட்டர் டெஸ்டுக்குப் போ”ன்னு சொன்னார் அதிகாரி. அவ்வளவுதானா தேர்வு முடிந்ததா என்று குழப்பத்துடன் கம்ப்யூட்டர் தேர்வுக்கு சென்றேன். அங்கு மிக எளிதான கேள்விகள் 20 கேள்விகளுக்கு அடுத்தடுத்து விடை தெரிவு செய்யவும் கம்ப்யூட்டரிலேயே நீங்கள் வெற்றி பெற்றீர்கள்” என செய்தி வேறு வந்தது. சரிதான் நம்மதான் மெகந்திசாச்சே அதுனால டெஸ்டெல்லாம் நமக்குக் கிடையாது போலன்னு நினைச்சுட்டு நிறுவனம் வந்தடைந்தேன். மாலைவேளையில் வந்த PRO சொன்னார். உனக்கு ஒரு மாதம் பயிற்சி தேவைப்படுகிறது என போலிஸ் குறிப்பெழுதி உள்ளார். அதனால் ஓட்டுனர் பயிற்சிப் பள்ளியில் தினமும் பயிற்சி எடுத்து பின்னர் ஒரு மாதம் கழித்து சோதனை செல்ல வேண்டும் என அறிவுறுத்தினார்.
மறுபடியும் பயிற்சி. இந்த பயிற்சி தந்த தைரியத்தில் ஒரு நாள் வண்டி எடுத்துக் கொண்டு ஒரு கடை வரை சென்றேன். கடை முன் வண்டியை நிறுத்தி விட்டு ஒரு பெப்சி வாங்கி திரும்பினால் வண்டியைக் காணோம். சுற்றும் முற்றும் பார்த்தால் நேர் சாலையில் 100 மீட்டர் தள்ளி வண்டி நின்றது. நமட்டுச் சிரிப்போடு என்னைப் பார்த்த கடையின் முன் அமர்ந்திருந்த சவுதிகள் வண்டியை எங்கு நிறுத்தினாலும் ஹேண்ட் பிரேக்கைப் போடு. இப்ப பார்த்தியா நீ ஹேண்ட் பிரேக்கைப் போடல சாலை வழுக்குச் சாலை தன்னால உன் வண்டி ஓடிப் போய் நிற்குது. நல்ல வேளை யாரும் குறுக்க வரல்லேன்னு அறிவுரை வழங்கினார்கள்.
அதுக்கப்புறம் ஓட்டுனர் உரிமம் வாங்கி ஒரு மாதம் ஆகி விட்டது. நானும் வண்டியை எடுத்துக் கொண்டு பல இடங்களுக்கு செல்ல ஆரம்பித்தேன். ஒரு நாள் எனது கம்பெனி போர்மேன் அரங்கசாமியை அழைத்துக் கொண்டு ஒரு இடத்துக்கு சென்றேன். அரங்கசாமி சிறந்த ஓட்டுனர். எனது அருகில் அமர்ந்து வந்த அரங்கசாமி சொன்னார். “ சார் இப்ப எத்தனாவது கியரில் போறிங்க” நான் சொன்னேன் 5ன்னு. கிளட்சை அழுத்துங்கன்னு சொன்னார். நானும் கிளட்சை அழுத்தவே அவர் கியரை அசைத்து ஒரு கியரைப் போட்டார். இதுதான் 5ன்னு. பாருங்க வண்டி ஒரு வேகமாக போக ஆரம்பித்தது. அப்புறம்தான் அவர் சொன்னார் மூணைப் போடுறிங்க அதுக்கப்புறம் நாலு போடுறிங்க ஆனா ஐந்துன்னு நினைச்சுகிட்டு மறுபடியும் மூணைத்தான் போடுறிங்க இப்படி ஓட்டினா சீக்கிரம் இன்சின் படுத்து விடும்.
அதுக்கப்புறம் அரங்க சாமியை ஒரு மாதம் கூட வைத்துக் கொண்டு வண்டி ஓட்டினேன். அப்புறம் போகப் போக சித்திரமும் கைப் பழக்கம் செந்தமிழும் நாப் பழக்கம் என்பதற்கேற்ப இப்ப என்னோட ஓட்டுனர் திறமையைப் பார்த்து பலபேரு சொல்லுறாங்க காரை தேரு போல ஓட்டுறேனாம் ‘போங்க எதுக்கு தற்புகழ்சி”.
5 கருத்துகள்:
அதுக்கப்புறம் அரங்க சாமியை ஒரு மாதம் கூட வைத்துக் கொண்டு வண்டி ஓட்டினேன். அப்புறம் போகப் போக சித்திரமும் கைப் பழக்கம் செந்தமிழும் நாப் பழக்கம் என்பதற்கேற்ப இப்ப என்னோட ஓட்டுனர் திறமையைப் பார்த்து பலபேரு சொல்லுறாங்க காரை தேரு போல ஓட்டுறேனாம் ‘போங்க எதுக்கு தற்புகழ்சி”.
......Congratulations!!!!
உங்கள் தன்னடக்கத்தையும் பாராட்டுறோம். :-)
//இப்ப என்னோட ஓட்டுனர் திறமையைப் பார்த்து பலபேரு சொல்லுறாங்க காரை தேரு போல ஓட்டுறேனாம் //
பின்னால வர்ற காருக்கு வழிவிடாம தேரு போல ஓட்டறது நீங்கதானா... அவ்வ்..
ரொம்பவும் ரசித்து படித்தேன்
hahahahaha
நல்ல அனுபவம்
வாழ்த்துக்கள்
கருத்துரையிடுக
ஏதாவது சொல்லிட்டு போங்க