ஞாயிறு, 12 ஜூன், 2011

பாம்பென்றால் படையும் நடுங்கும்


எனக்கு நாகேந்திரன் என்று பெயர் வைத்தது எப்படி என என் அம்மா ஒரு கதை சொல்வார்கள். நான் பிறந்து முப்பது நாள் கழித்து புண்ணியாணம் (பெயர் சூட்டுவதற்காக) செய்வதற்கு நாள் குறித்து ஊரு சனமெல்லாம் கூடி அய்யர் வரவுக்காக காத்திருந்தார்களாம். அப்போது என் தாய் மாமனார் என்னைத் தூக்குவதற்காக சற்றே தொட்டிலை விலக்கினாராம். பார்த்தால் அங்கு ஒரு இரு தலை மணியன் பாம்பு தொட்டிலில் என்னோடு சேர்ந்து படுத்திருந்ததாம். உடன் என் மாமா பாம்பை அடித்துக் கொண்றாராம். சில நிமிடம் கழித்து வந்த அய்யர் இந்த சம்பவத்தினை கேள்விப்பட்டு கழுத்தில் பாம்பை மாலையாக அணிந்துள்ள சாட்சாத் சிவபெருமானின் அம்சம் என நம்மைக் கருதி நாகேந்திரன் என நாமம் சூட்டினாராம்.

இதற்கப்புறம் வளர்ந்து வாலிபன் ஆன வரை சினிமாவைத் தவிர பாம்பை நேரில் கண்டதில்லை. கல்லூரியில் பயின்று கொண்டிருந்த போது தேர்வுகளுக்கு இரவு கண் விழித்துப் படிப்பது வழக்கம். காலையில் தேர்வு எழுதி வந்ததும் உணவு அருந்திவிட்டு இரவு எட்டு மணிவரைக்கும் உறக்கம் கொண்டு பின் எழுந்து மறுநாள் தேர்வுகளுக்காக படிப்பது உண்டு. அப்படி ஒரு நாள் பகலில் துயில் கொண்டிருந்த போது என் தாயார் என்னை எழுப்பினார்கள். “டேய் அடுப்படிக்குள் ஒரு பாம்பு உள்ளே போயிருக்கு வந்து அடிடான்னு. அந்த அடுப்படி மிகவும் குறுகிய அடுப்படி. அதற்குள் போய் பாம்பை தேடும் போது கொத்திவிட்டால் பயம் பிடுங்கித் தள்ள நான் என் அம்மாவிடம் சள்ளென விழுந்தேன். “போங்க விடிஞ்சா எனக்குப் பரிட்சை இருக்கு இதுல பாம்பை எல்லாம் என்னால் தேடிக் கொண்டிருக்க முடியாது சொல்லிவிட்டு குப்புற படுத்துக் கொண்டேன்.

நீயெல்லாம் ஒரு ஆம்பளைப் பிள்ளைன்னு என் அம்மா திட்டிக் கொண்டே ஒரு விறகை எடுத்துக் கொண்டு அடுப்படி புகுந்தார்கள். சில நிமிடம் கடமுடா கடமுடாவென பாத்திரச் சத்தம் கேட்டது. அப்புறம் என் அம்மா அந்த பாம்பை அடித்து வெளியில் வீசி விட்டார்கள். அப்புறம் என் அப்பா வந்ததும் எனக்கு அர்ச்சனை விழுந்தது.

அப்புறம் ஒரு நாள் என் தங்கை திருமணத்திற்காக எக்ககுடி என்னும் ஊரில் உறவினருக்கு பத்திரிக்கை கொடுக்க வேண்டியிருந்தது. நல்லாங்குடியில் இறங்கி ஒரு வாடகை மிதி வண்டியை எடுத்துக் கொண்டு எக்ககுடி நோக்கிச் சென்றேன். நடு வழியில் இயறகையின் அழைப்பிற்காக மிதி வண்டியை விட்டு இறங்கி ஒரு காட்டுக் கருவை மரத்தின் ஓரமாக ஒன் பாத் போய்கொண்டிருந்த போது நமது நீரோட்டத்தால் பாதிக்கப் பட்ட ஒரு சர்ப்பம் படம் எடுத்து என்னை ஒரு முறை முறைத்தது. ஒரு கணம் இரத்த ஓட்டமெல்லாம் உறைந்து போய் மிதி வண்டியை எடுத்துக் கொண்டு திரும்ப நல்லாங்குடிக்கே வந்து விட்டேன். அப்புறம் அந்த எக்ககுடி உறவினர் எனக்கு ஏன் பத்திரிக்கை கொடுக்கவில்லை என என் தாயாரிடம் சடைக்கும் போதுதான் நான் என் அம்மாவிடம் நடந்த கதையினை சொன்னேன். நல்ல பேரு வச்சாண்டா அய்யர் உனக்கு. பாம்பைப் பார்த்தா காத தூரம் ஓடிவர்றே இதுல நீ பாம்புகளுக்கெல்லாம் தலைவனான்னு திட்டினாங்க.

அப்புறம் ஒரு நாள் நண்பர்களோடு பழனிக்கு பாத யாத்திரை சென்றேன். இரவில் வழியில் ஏதாவது கோவிலில் தங்கி விட்டு அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து காலைக் கடன் கழித்து மறுபடி பயணம் துவக்குவது வழக்கம். காரைக்குடி தாண்டி ஒரு ஊரில் இரவு தங்கி விட்டு காலையில் திறந்த வெளியில் காலைக் கடன் கழித்து காலைக் கழுவுவதற்காக அருகில் உள்ள ஒரு குளத்திற்கு சென்றேன். குளத்தின் படிக்கரையில் எனக்கு சற்று முன் சென்ற நண்பன் காலைக் கழுவாமல் நின்று கொண்டிருந்தான். “டேய் வெளிய போனா காலை சட்டுன்னு கழுவாம என்னடா யோசனைன்னு அவனைத் திட்டிக் கொண்டே குளத்தின் தண்ணீரில் காலை வைத்து உட்கார்ந்தேன் அவ்வளவுதான் என் காலை சுரீர் என ஒரு வலி தாக்கவே காலை எடுத்தால் பல் பதிந்த ஒரு தடமும் அதிலிருந்து இரத்தமும் வந்தது.

என்னைப் பார்த்து பக பகவென சிரித்த அந்த பாவி சொன்னான். நான் கழுவ வந்தபோது ஒரு பாம்பு கரையில் படுத்திருந்தது. என்னைப் பார்த்ததும் தண்ணீருக்குள் சென்றது. அதனால் கழுவுவதா வேண்டாமா என யோசித்துக் கொண்டிருக்கும் போது நீ முந்திக் கொண்டாய். மேலும் சிரித்த அந்த இளம் விலங்கியல் படித்த விலங்கு சொன்னான். கவலைப் படாதே இது தண்ணீர் பாம்புதான் விசம் ஏதும் கிடையாது. சும்மா கொஞ்ச நேரத்துக்கு வலிக்கும் அப்புறமா சரியாகிவிடும்ன்னான். அவன் சொன்னான் அத்தோடு ஒரு உபரி தகவலும் பாம்பை பற்றிச் சொன்னான்.

skin pattern)
உள்ளதோ அது விசமில்லாத பாம்பு. ஒன்றுக்கு மேல் கலரும் டிசைனும் இருந்தால் அது விசமுடைய பாம்பு. அவன் சொன்ன மாதிரியே கொஞ்ச நேரம் கழித்து வலி குறைந்து விட்டது.

அதுக்கப்புறம் திருமணம் முடிந்து மாமியார் வீட்டுக்கு ஒரு நாள் சென்று இருந்தேன். மாமியார் வீடு மண்டபத்தில் (ராமேஸ்வரம் அருகில்) மல்லிகை தோட்டம் ஏராளம். என் மாமியார் வீட்டின் கொல்லையிலும் மல்லிகை தோட்டமும் கனகாம்பரத் தோட்டமும் உண்டு. கொல்லையின் ஓரத்தில் கிணறும் கழிப்பறையும் உண்டு. இரவு எட்டு மணி இருக்கும். தங்கமணியிடமிருந்து ஒரு குரல் வந்தது.

என்னங்க இங்க சித்த வாங்க டாய்லெட்டுக்குள்ள ஒரு பாம்பு போயிருக்கு வந்து அடிங்கன்னு. விடிஞ்சா பரிட்சைன்னு எங்கம்மாகிட்ட சொன்னமாதிரி இவகிட்ட எதுவும் சொல்ல முடியாதேன்னு பயம் மனதை கவ்வியது. மல்லிகைத் தோட்டத்தில் நல்ல பாம்பு நடமாட்டம் அதிகமாக இருக்கும் என கேள்விப் பட்டிருக்கிறேன். மாமியார் வீட்டில் மானம் போகப் போகிறது என நினைத்தாலும் மனதை தேற்றிக் கொண்டு “எவ்வளவு நீளம் இருக்கும் என்ன கலர் எத்தனை டிசைன் இருந்தது என கேள்விக் கணைகளை தங்கமணியிடம் தொடுத்தேன்.

{இப்படின்னு பார்க்குறதுக்குள்ள ஓடி ஒளிஞ்சிருச்சுங்க என்னத்த கண்டேன் ஆனா ஒரே கலர்தான் நிறைய கலர் இல்லன்னு தங்கமணி என் வயிற்றில் பால் வார்த்தாள். அப்பாடா விசமில்லாத பாம்புதான்னு சந்தோசப் பட்டுகிட்டு பக்கத்தில் இருந்த கொய்யா மரத்தில் ஒரு கொப்பை ஒடித்துக் கொண்டு டாய்லெட் கதவை மெதுவாக திறந்தேன்.

உள்ளே நான் அடிக்காவிட்டாலும் அதுவாகவே செத்துப் போகிறமாதிரி ஒரு சின்னப் பாம்பு படுத்திருந்தது. குச்சியை வைத்து தலையில் ஒரு தட்டு தட்டவும் பொட்டென்று உயிரை விட்டது. அப்புறம் தங்கமணி அவர்களின் அம்மாவிடம் நான் பாம்பை அடித்த கதையை டமாரம் அடிக்க என் மாமியார் அந்த பாம்பை பார்த்து விட்டு அய்ய இது வெறும் ஓலைப் பாம்புதான் உன் வீட்டுக்காரர் மலைப் பாம்பை அடித்த மாதிரி பெருமை பட்டுக் கொள்ளாதேன்னு ஒரு முற்றுப் புள்ளி வைத்தார்.

இருந்தாலும் தங்கமணி அந்த இரவு நேரத்திலும் ஒரு தொலை பேசி அழைப்பைப் போட்டு என் அம்மாவிடம் இந்த விசயத்தினை சொல்ல உடனே எங்கம்மா “பெத்த தாய் பாம்படிக்க கூப்பிட்ட போது பரிட்சை இருக்குன்னு குப்புற படுத்தவன் இப்ப பொண்டாட்டி சொன்னதும் பாம்பை அடிச்சானா ? சரிதான் கல்யானம் ஆனது எல்லாப் பயலும் மாறித்தான் போயிரானுக வரட்டும் நேரில அவன வச்சிக்கிரேன்ன்னு எனக்கு ஒரு பாராட்டுப் பத்திரம் வாசிச்சாங்க.

2 கருத்துகள்:

Venkatraja சொன்னது…

Nice..!

பாவா ஷரீப் சொன்னது…

//இருந்தாலும் தங்கமணி அந்த இரவு நேரத்திலும் ஒரு தொலை பேசி அழைப்பைப் போட்டு என் அம்மாவிடம் இந்த விசயத்தினை சொல்ல உடனே எங்கம்மா “பெத்த தாய் பாம்படிக்க கூப்பிட்ட போது பரிட்சை இருக்குன்னு குப்புற படுத்தவன் இப்ப பொண்டாட்டி சொன்னதும் பாம்பை அடிச்சானா ? சரிதான் கல்யானம் ஆனது எல்லாப் பயலும் மாறித்தான் போயிரானுக வரட்டும் நேரில அவன வச்சிக்கிரேன்ன்னு எனக்கு ஒரு பாராட்டுப் பத்திரம் வாசிச்சாங்க.//

Ha ha ha..... sema comedy sir

கருத்துரையிடுக

ஏதாவது சொல்லிட்டு போங்க