காலையில் திருப்பள்ளி எழுச்சிச் சத்தம் வழக்கத்தினை விட அதிகமாகவே எனக்குக் கேட்டது.
"எந்திரிங்க மணி 71/2 ஆகுது இன்னும் என்ன தூக்கம். எந்திருச்சு போயி குளிங்க நான் ரூமைக் கழுவி விடனும்.
"ஏண்டி நான் படுத்திருக்கிறது கட்டில்ல நீ பாட்டுக்கு ரூமைக் கழுவிவிட்டுப் போக வேண்டியதுதானே"
"அது எங்களுக்குத் தெரியாதா எந்திரிங்க கட்டில நகட்டிட்டு கீழேயும் நல்லா கழுவனும்"
"ஏண்டி நானும் பாக்குறேன் நாலு நாளா தொடர்ந்து வீட்டக் கழுவுற அப்படி என்னதான் விசேசம் இன்னைக்கு"
"இன்னைக்கு மாத பிறப்பு"
"அப்ப நேத்து"
"ம் நேத்து அமாவாசை அதுக்கு முத நாளு பிரதோசம் அதுக்கும் முத நாளு வெள்ளிக்கிழமை இப்படி நாளு கிழமைகூட தெரியாம அப்படி என்னதான் படிச்சிங்களோ"
"ஆமாண்டி நான் படிச்ச இன்சினியரிங்க்ல அமாவாசைப் பத்தி ஒரு எலக்டிவ் பேப்பர் இருந்திச்சு நான் தான் எடுக்கல"
"இந்த வக்கனைக்கு ஒன்னும் குறைச்சலில்ல, போயி குளிச்சிட்டு கடைக்குப் போயி புடலங்காய் இருக்கான்னு பாத்துட்டு இருந்தா நல்லதா ஒன்னு வாங்கிட்டு வாங்க"
அதுக்கும் மேல படுத்திருந்தா சத்தம் ரொம்ப ஜாஸ்தியாகும்ன்னு நினச்ச்சுட்டு குளிக்கப் போனேன்.
இத்தனைக்கும் போன வாரம் தங்கமணிக்கு சரியான தொண்டைவலி ENT specialist XRAY எண்டோஸ்கோபில்லாம் எடுத்துப் பாத்துட்டு தொண்டையில் புண் இருக்குன்னு சொல்லி மாத்திர மருந்தெல்லாம் எழுதிக் கொடுத்துட்டு "சத்தமா பேசக் கூடாதும்மா"ன்னு வேற சொன்னாரு மருந்தெல்லாம் சாப்பிட்டபின்னே சத்தம் அதிகமாச்சே தவிர குறைஞ்ச மாதிரி தெரியல.
வெளியே நல்ல மழை இருந்தாலும் கையில ஒரு குடைய பிடிச்சுகிட்டு கொண்டவளின் கட்டளையை நிறைவேற்ற புடலங்காய் வாங்க கடைக்குப் போனேன்.
இருந்ததிலேயே பெரியதா நீளமா குட்டி மலைப்பாம்பு மாதிரி தொங்கிகிட்டு இருந்த ஒரு புடலங்காயை வாங்கி தங்கமணி கையில கொடுத்தேன்.
வாங்குனவுன அத ரெண்டா ஒடிச்சா. அவ்வளவுதான்.
"இங்க வந்து பாருங்க நீங்க வாங்கிட்டு வந்த பொடலங்காய உள்ளே விதையெல்லாம் சொத சொதன்னு சரியான முத்தல், எங்க விளைஞ்சதுன்னு கடைக்காரன்கிட்ட கேட்டு வாங்கினிங்களா தோட்டத்துலயா இல்ல ஏதாவது ஊரணிக்கரையிலயா?"
இப்ப பெஞ்சிகிட்டு இருக்கிற மழைக்கு ஊரணிக் கரையில பந்தல்லாம் போட்டு பொடலங்காய் வளர்க்க முடியுமான்னு தொண்டை வரை ஒரு கேள்வி வந்தாலும் அதனால் மண்டை உடையும் அபாயம் இருப்பதினால பல்லக் கடிச்சுகிட்டு "சரி இப்ப என்ன செய்ய" அப்படின்னு அமைதியாக் கேட்டேன்.
"என்ன செய்யவா வீட்டுல பேசுறாங்கன்னு சொல்லி புடலங்காயை கடையில் திருப்பி கொடுத்துட்டு காச வாங்கிட்டு வாங்க"ன்னு ஒரு குண்டப் போட்டா.
வீட்டுல பேசுறாங்கன்னு கடைக்காரனுக்கும் தெரியுமான்னு நினச்சுகிட்டு "ஏம்மா இப்படி உடைச்சு கொடுத்தா கடையில் மறுபடி வாங்குவான்னா"ன்னு முனகினேன்.
'அதெல்லாம் வாங்குவான் போயி கொடுத்துட்டு வாங்க"ன்னு உள்ளே போயிட்டா.
கடையில போயி அவமானப்பட தயங்கி கடைக்குப் போற வழியில இருந்த கருவேல மரப் புதரில புடலங்காய எரிஞ்சிட்டு கைக்காசப் போட்டு தங்கமணியை சமாளிக்கலாம்ன்னு ஒரு முடிவுக்கு வந்தேன்.
என் நிலமையப் பாத்து கண்ணீர் வடிக்கிற மாதிரி வானம் பொத்து ஊத்திகிட்டு இருந்திச்சு.
ரொம்பவும் மனசு புண்பட்டு போனதால அத ஒரு புகைய விட்டு ஆத்தலாம்ன்னு பக்கத்துல இருந்த பெட்டிக் கடைக்கு ஒதுங்கினேன்.
"என்னடா வாழ்க்கை இது, மீனு வாங்குனாலும் திட்டுறா காயி வாங்குனாலும் திட்டுறா இவகிட்ட நல்ல பேர எப்படி வாங்குறதுன்னு" யோசிச்சிகிட்டு இருக்கும் போது விதி ஒரு கோரைப்பாய் வியாபாரி ரூபத்துல அந்த கடைக்கு மழைக்கு ஒதுங்குச்சு.
எனக்கு பாயப் பாத்ததும் சடக்குன்னு மண்டையில ஒரு பல்பு எரிஞ்சுச்சு "வீட்டுல பாயி இருக்குற மாதிரி தெரியலயே இத வாங்கிட்டு போயி தங்கமணிகிட்டே நல்ல பேர வாங்குவோம்ன்னு பாய் வியாபாரிகிட்டே விலையக் கேட்டேன்.
" ஒன்னு வாங்குனா 65 ரெண்டு வாங்குனா நூத்திப்பத்து"ன்னான் வியாபாரி.
ஒரு வழியா பேரம் பேசி ரெண்டு பாயை 90 ரூபாய்க்கு வாங்கினேன்.
வீட்டுக்குப் போற வழியில ஒரு யோசனை வந்துச்சு "90 ரூபாயின்னு சொல்ல வேனாம் இன்னும் இருபது ரூபா குறைச்சு 70 ரூபாயின்னு" சொல்லி இன்னைக்கு தங்கமணிய அசத்திப் புடுவோம்ன்னு பெருமையா வீட்டுக்குப் போனேன்.
"என்னது இது காயைத்தான கொடுக்கப் போனிங்க இது என்ன பாயோட வந்துருக்கிங்க பேய் மாதிரின்னு விஜய டி ராஜேந்தர் மாதிரி அடுக்கு மொழியில கரடியாக் கத்த ஆரம்பிச்சா".
"இல்ல பாயி வாங்குனா வீட்டுக்கு ஆகுமேன்னு வாங்கிட்டு வந்தேன்" ஈனஸ்வரத்தில முனகினேன்.
"உங்ககிட்ட நான் பாயி வாங்கச் சொன்னேனா வீட்டுல எவ்வளவு பாயி இருக்குன்னு தெரியுமா?ன்னு சொல்லிகிட்டே பெட் ரூம்ல டைனிங் ஹால்ல மாடிக்கு போற ரூமிலன்னு எல்லா ரூமில உள்ள சேந்தி (loft ) சிலாப்புலயும் இருந்து பாயா எடுத்துப் போட்டா.
அதுல ஒரு பாயில மட்டும் பத்துபேரு படுக்கலாம் போல இருந்துச்சு அதப் பாத்ததும் எனக்கு நாக்கு உலர்ந்துருச்சு.
"என்ன விலை" அடுத்த அஸ்திரம் வந்து விழுந்திச்சு.
பயத்துல சொல்ல வந்த விலைய விட பத்து ரூபா குறைச்சு "ரெண்டு பாயி 60 ரூபாய்"ன்னேன்
"என்னது அறுபது ரூபாயா... ஒரு ஜோடிப் பாயி அம்பது ருபாய்தானே அதுவும் இந்த மாதிரி நாடா வச்ச பாயி (ஓரத்துல) இன்னும் விலைக் குறைச்சு வாங்கலாமே, இந்த பாயில்ல புறம் பாயி எது தலைப் பாயி எதுன்னே கண்டு பிடிக்க முடியாதே இதப் போயி வாங்கிகிட்டு வந்துருக்கிங்களே, ஒழுங்கா மரியாதையா கொண்டு போயிக் கொடுத்துட்டு காச திருப்பி வாங்கிகிட்டு வாங்க ....*@#$#@@#@#@#$$#ன்னா.
காயிலதான் முத்தல் இளசு இருக்குன்னாலும் பாயில கூடவா பொறம் பாயி தலைப்பாயின்னு இருக்குதுன்னு எனக்கு சித்த நேரம் கண்ணக் கட்டிடுச்சு.
அப்புறம் என்ன காதுல வழிஞ்ச ரத்தத்த தொடச்சுகிட்டே வழக்கம் போல கருவேலம் மரப் புதருக்கு கிளம்பிட்டேன்.
பின் குறிப்பு: வொய் பிளட் சேம் பிளட் அப்படின்னு இதைப் படிச்சதும் நீங்கள் நினைத்தால் உங்கள் பின்னூட்டங்களினால் எனக்கு ஆறுதல் கூறலாம்.
செவ்வாய், 17 நவம்பர், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
4 கருத்துகள்:
இந்த பொம்பளைங்கேல இப்படி தான் பாஸ்.. ஒன்னும் பண்ணமுடியாது.. அனுபவிங்க...
ஏதாவது ஆறுதல் சொல்லுவிங்கன்னு பாத்தா
அனுபவிங்கன்னு சொல்லிட்டு போறிங்களே....
நண்பரே,
வணக்கம்.அருமையான பதிவு. பொம்பளைங்க சில விஷயங்களுக்கு தாஙகதான் சரியான ஆள் அப்டின்னு நினைக்கிறாஙக! இது மாதிரி நெறய பேரு விலை கொறச்சு சொல்லி மாட்டிக்கிறாஙக பாஸ்!!பொம்பளைங்க முன்னால நாம்ப ரொம்ப அப்பாவி எதுவும் தெரியாதுன்ற மாதிரி பாவ்லா பண்ண தெரிஞ்சுகோஙக! வாலி படத்துல அஜித்-சிம்ரன் கிட்ட பண்ற மாதிரி!!!
செல்வம்
எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை அண்ணா . படித்தேன் சிரித்தேன் நன்றி
கருத்துரையிடுக
ஏதாவது சொல்லிட்டு போங்க