அம்மா நான் பள்ளி செல்ல விரும்பவில்லை. நான் ஒரு சிறு குழந்தை அம்மா.யாராவது எனக்கு கதைகள் சொன்னால் நன்றாக இருக்கும். பட்டாம் பூச்சிகளும் தலைப்பிரட்டைகளும் என்ன சாப்பிடுகிறது அவை எங்கு தூங்குகிறது என நான் தெரிய ஆசைப்படுகிறேன். மலையின் மேல் ஏறி மேகத்தினைப் பிடித்து அவை எதனால் செய்யப்பட்டிருக்கிறது என அறிய ஆசைப்படுகிறேன். கைகளால் ஓடைநீரை அலசி மீன்கள் நீந்துவதை உணர ஆசைப்படுகிறேன்.
குட்டி செல்ல விலங்குகளுடன் ஓட ஆசைப்படுகிறேன். பறவை போல் கானம் பாட ஆசைப் படுகிறேன். காகிதப் படகு செய்து மழைநீரில் விட்டு விளையாட ஆசைப்படுகிறேன்.மிருதுவான பசும் புல்வெளியில் படுத்து காற்றின் சங்கீதத்தை கேட்க ஆசைப் படுகிறேன்.
இப்படி இவற்றை இயற்கையாக அனுபவித்த பின்னரே இவற்றை பாடங்களில் விளக்கமாக தெரிந்து கொள்ள ஆசைப் படுகிறேன். அம்மா இயற்கையைப் பற்றி என் கற்பனை சிறகுகள் விரிந்து கொண்டிருக்கின்றன.மேலும் மேலும் பலவற்றை தெரிந்து கொள்ள வேண்டும் என என் ஆர்வம் மிகுதியாகி கொண்டிருக்கிறது. ஏன் என்னும் விதை என் சிந்தனையில் விதைக்கப் பட்டிருக்கிறது.
ஆனால் அம்மா பொறியில் அகப்பட்ட சிறைக்கைதியைப் போல் நான் வகுப்பறையில் உள்ளேன். எதையாவது கேட்டால் "இதற்கு நேரமில்லை குறிப்பிட்ட காலத்துக்குள் நாம் பாடத்திட்டத்தினை முடிக்க வேண்டும்." என ஆசிரியர்களிடம் ஒரே மாதிரியான பதிலே வருகிறது.
எதையும் முழுமையாக தெரிந்து கொள்ளாமல் வெறும் மதிப்பெண்களுக்காக மட்டும் படிக்கும் இந்த படிப்பு மிகவும் அயர்ச்சியைத் தருகிறது.அம்மா நான் உயிர் காட்சி சாலைகளுக்கு வகுப்புத் தோழர்களுடன் சென்று அங்குள்ளவற்றை ஆசிரியர் விளக்க தெரிந்து கொள்ள ஆசைப் படுகிறேன்.
இயற்கை சுற்றுலாக்கள் சென்று இயற்கையான உயிரியல் வகுப்பைப் பற்றி தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
ஆழ்கடலில் வசிக்கும் விலங்குகள் பற்றியும் எரிமலைகள் பற்றியும் ஒளிக்காட்சிகள் மூலம் தெரிந்து கொள்ள ஆசைப் படுகிறேன்.
என் நகரத்தில் உள்ள எல்லா பள்ளி மாணவர்களும் சேர்ந்து என் நகரத்தில் உள்ள வரலாற்று சின்னங்களைப் பற்றி நேரில் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
தொலை நோக்கி மூலம் வானவியலைப் பற்றி தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
பாடப் புத்தகங்களில் மட்டும் நான் இவற்றை தெரிந்து கொள்ள விரும்பவில்லை அம்மா. கண்டு கேட்டு தொட்டு முகர்ந்து சுவைத்து நான் அறிய ஆசைப்படுகிறேன் நான் விரும்புவது படிப்பு அல்ல அனுபவம்.
ஏன் இந்த பள்ளிகள் இது போன்ற அனுபவத்தை வருடம் ஒருமுறை ஏற்பாடு செய்யக்கூடாது.
மேலும் அம்மா இனிமேலும் என்னால் பள்ளிப்புத்தகப் பையினைத் தூக்கி வளைய முடியாது. ஏற்கனவே என் முதுகு வளையும் அபாயத்தில் உள்ளது. ஏன் எல்லாப் புத்தகங்களையும் எல்லா நாளிலும் நான் தூக்கிச் செல்ல வேண்டும். ஏன் ஒருநாளைக்கு இரண்டு பாடம் மட்டும் படிக்கக் கூடாது.ஏன் மேலை நாடுகளில் உள்ளது போல் வகுப்பறை மேஜைகளில் லாக்கர் வசதி செய்யக் கூடாது. ஏன் தினமும் ஆட்டோக்களில் நெரிசல்களில் பிதுங்கி சிரமப்பட வேண்டும்.
தினமும் வீட்டுப்பாடம் விண்டர் புராஜக்ட், சம்மர் கிளாஸ் வீக்லி டெஸ்ட். காலாண்டு பரிட்சை. அரையாண்டு பரிட்சை. மிட் டெர்ம் டெஸ்ட் முழு ஆண்டுப் பரிட்சை வீக்லி டெஸ்ட் கோச்சிங் கிளாஸ் சிறப்பு வகுப்புகள் என மேலும் மேலும் தேர்வுகள். அழுத்தம் அழுத்தம் பேரழுத்தம்.
























