அலாரம் அடிக்காமல்
கலைகிறது உறக்கம்.
அடுத்தவன் காத்திருப்பான் என்ற
அச்சமில்லை கழிவறையில்
உறைந்து போன முதுகின்
அழுக்குக்கு விடுதலை.
உப்பு இது உறைப்பு இது என
நாக்கு உணரத் தலைப்படுகிறது.
கருத்த மீசைக்காட்டில்
முளைத்த வெள்ளைப் பூக்களை
கவணித்துப் பறிக்க முடிகிறது
ஆறு நாள் மறந்து போன
ஆறுமுகத்திற்கு
ஐந்து நிமிடம் ஒதுக்க முடிகிறது.
கண்ட்ரோல் சியிலும்
கண்ட்ரோல் வியிலும்
களைப்படைந்த விரல்கள்
காப்பிக் கோப்பையை பிடித்திருக்கிறது.
இரக்கமில்லாமல்
“இரு அப்புறம் பேசுகிறேன்”
எனத் துண்டிக்கும் தொடர்பு
”என்னமா வேறு என்ன விசயம்” என
இணக்கமாய் நீள்கிறது.
சிவப்பு விளக்கு காத்திருப்பில்
ஊர் பற்றி சிந்தனை இல்லை.
பச்சை விளக்கு கண்டதும்
பரபரப்பும் வருவதில்லை.
இங்கே வா அங்கே போ
எனும் ஏவல் மொழிகள்
காதில் கேட்கவில்லை
இன்று குளிர் அதிகம் என்று
எவரிடமும் சம்பிரதாயப்
பேச்சு ஆரம்பிக்கவில்லை
.
இரும்புச் சட்டங்களின் முன்
காத்திருக்கும் என் நிசான் குதிரை
அரும்பு விட்ட பூக்களின் முன்
இளைப்பாறுகிறது.
.
7 கருத்துகள்:
இரக்கமில்லாமல்
“இரு அப்புறம் பேசுகிறேன்”
எனத் துண்டிக்கும் தொடர்பு
”என்னமா வேறு என்ன விசயம்” என
இணக்கமாய் நீள்கிறது.
..... so sweet!
இன்று குளிர் அதிகம் என்று
எவரிடமும் சம்பிரதாயப்
பேச்சு ஆரம்பிக்கவில்லை//
அருமையாக இருக்கிறது நண்பரே! ஆமா நீங்க எந்த நாட்டில் இருக்கிறீர்கள்?
கவிதையே நீங்கள் அயல்நாடு புலபெய்றந்த தமிழர் என்பதை உணர்த்துகிறது...
ஒவ்வொரு வரியையும் ரசித்தேன்..நிஸ்ஸான் குதிரை,குளிர் அதிகம், பச்சை விளக்கு, கழிப்பறை கலக்கம் என்று வரிக்கு வரி நிதர்சனம், உண்மை...
சுருங்க சொன்னால் கலக்கல்...
அருமையான நீண்ட கவிதை சூப்பர்.....
அருமையான நீண்ட கவிதை .பகிர்வுக்கு நன்றி
வித்தியாசமான பார்வை! நெருடாத சொற்கள்! நல்ல கவிதை!
கவிதை நல்லா எழுதறீங்க.அருமை.
கருத்துரையிடுக
ஏதாவது சொல்லிட்டு போங்க