நகைச்சுவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நகைச்சுவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 22 ஜனவரி, 2011

ஆண்களிடம் இல்லாத நல்ல குணங்கள்


1. 1. ஆண்களுக்கு நன்றி விசுவாசம் கிடையாது. மார்கெட்டு உள்ளபோது நடிகைகளுக்கு கோவில் கட்டும் அளவுக்கு ரசிக்கும் ஆண்கள் அதே நடிகைகள் மார்கட்டு இழந்து சின்னத்திரையில் நடிக்கும்போது கண்டு கொள்வதில்லை.

2. ஆண்களுக்கு பெருந்தன்மை என்பது அறவே கிடையாது. ஆண்கள் கதாநாயகராய் நடிக்கும் புறா, நில்லு, பேட்டைக்காரன்,கோவலன் போன்ற மொக்கைப் படங்களை சகிப்புத்தன்மையுடன் பெண்கள் பார்க்கும் போது பெண்கள் கதைநாயகியாய் நடிக்கும் நல்ல தொலைக்காட்சித் தொடர்களை ஆண்கள் கண்டுகொள்வதே இல்லை.

3. ஆண்களுக்கு மனதைரியம் மருந்துக்கு கூட கிடையாது. 3 மணி நேர திரைப்படத்தினையே தொடர்ந்து பார்க்க முடியாமல் 5 தடவை சிகரட் அடிக்கப் போகும் பயந்தாங்கொள்ளிகள். பெண்களைப் போல் மூன்று வருடம் ஒரே சீரியலை தொடர்ந்து பார்க்க இவர்களுக்கு தைரியம் குறைவுதான்.

4. ஆண்களுக்கு கூர்ந்து கவனிக்கும் ஆற்றல் துளிக்கூட கிடையாது. தொலைக்காட்சித் தொடரில் நடிக்கும் கதாநாயகியாயினும் சரி, வில்லியாயினும் சரி, கதாநாயகியின் பாட்டியாயினும் சரி அவர்கள் போட்டிருக்கும் சேலை டிசைனிலிருந்து ஸ்டிக்கர் பொட்டு டிசைன் வரை நுணுக்கமாக பெண்கள் கவனிப்பதைப் போல் ஆண்களால் கவனிக்க முடியாது.

5. ஆண்களுக்கு காலம் தவறாமை சுத்தமாக கிடையாது. 71/2க்கு ஜாலங்கள், 81/2க்கு ரொட்டி ஒலி, 9மணிக்கு சித்தப்பா, 91/2க்கு வடக்கத்தி சின்னு, 10மணிக்கு பித்தளையான புருசன் என பெண்கள் காலம் தவறாமையை கடைப்பிடிப்பது போல ஆண்கள் கடைப்பிடிப்பது இல்லை.

6. ஆண்களுக்கு விடாமுயற்சி என்பதே கிடையாது. தொலைக்காட்சித் தொடர் பார்க்கும் போது விளம்பரத் தடை வந்தால் என்ன, வீட்டுக்காரர் கத்தினால் என்ன, பிள்ளைகள் கதறினால் என்ன, பெண்கள் எடுத்த காரியத்தினை முடிப்பது போல் ஆண்களால் எந்தக் காரியத்தையும் விடாமுயற்சியுடன் செய்ய முடியாது.

7. ஆண்களுக்கு சமநோக்கு கொஞ்சம் கூடக் கிடையாது. மூன்று நாட்கள் கூட ஓடாத மொக்கை படங்களுக்கு விமர்சனம் எழுதும் கேபிள் சங்கர், ஜாக்கி சேகர் போன்ற ஆண்கள் வர்க்கம் மூன்று வருடம் தொடர்ந்து பெண்கள் பார்க்கும் தொலைக்காட்சித் தொடர்களை நடுநிலை மனதுடன் விமர்சனம் எழுதுவதில்லை.

8. ஆண்களுக்கு சமூக அக்கறை துளிக்கூட கிடையாது. திங்கள் கிழமை தீபா கல்லூரி சென்றபோது தீடிரென நான்குபேர் வந்து காரில் கடத்திச் சென்றார்களே அவள் என்ன ஆனாள்?. புதன் கிழமை புவனாவின் நாத்தனாருக்கு நிச்சயதார்த்தம் நின்று போனதே அது நடந்ததா?. வெள்ளிக்கிழமை விமலாவுக்கு அவள் மாமியார் விஷம் கலந்த காப்பியைக் கொடுத்தாளே அவள் குடித்தாளா? செத்தாளா? என்பது போன்ற சமூக நிகழ்வுகளை பெண்கள் அறிந்து கொள்ளும் அளவுக்கு ஆண்களுக்கு சமூக அக்கறை அறவே கிடையாது.

9. ஆண்களுக்கு இரக்கம் என்பது கிஞ்சித்தும் கிடையாது. ஒரு தொலைக்காட்சித் தொடரில் ஒருவள் ஒருவாரமென்ன தொடர்ந்து ஒரு வருடம் அழுது கொண்டிருந்தாலும் அதைக் கண்டு கொள்ளாமல் குண்டு வெடித்து 100 பேர் பலி, பங்குச் சந்தை கவிழ்ந்தது, பாராளுமன்றத்தில் அமளி என்பது போன்ற குலை நடுங்கும் செய்திகளைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அது மட்டுமா, ஒரு சின்னஞ்சிறிய பந்தை பெரிய மட்டையால பத்து பதினோரு பேர் நையப்புடைத்து அடித்து துவம்சம் செய்வதை இரக்கமில்லா அரக்கர்கள் போல் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

10. ஆண்களுக்கு புரிந்து கொள்ளும் தண்மை அறவே கிடையாது. ஆண்கள் மொக்கைப் பதிவுகளை எழுதிக்கொண்டோ அல்லது படித்துக் கொண்டோ இருக்கும்போது ‘சரி பகலெல்லாம் ஆணி புடுங்கிய களைப்புத் தீர இப்படி செய்கிறார்கள் என பெண்கள் புரிந்துகொண்டு அவர்களை தொந்தரவு செய்யாமல் இருப்பதுபோல பகலெல்லாம் வீட்டு வேலைகள் செய்து பெண்கள் இரவு வேளைகளில் தொலைக்காட்சி தொடர் மூலம் நாட்டு நடப்புகளை அறிந்து கொள்ளும்போது அதைப் புரிந்து கொள்ளாமல் “சாப்பாடு ரெடியா பையனுக்கு சாப்பாடு போட்டியா என்று தொந்தரவு செய்யும் மங்குனிகள்.


திங்கள், 3 ஜனவரி, 2011

எள்ளுன்னா எண்ணையா நிக்கனும்.


ஒரு குடும்ப ஆய்வுக்கட்டுரை ஒன்னு சொல்லுறது, என்னன்னா பெரும்பாலும் தங்கமணிகள் தங்கள் மனதில் என்ன நினைக்கிறார்களோ அதை ரங்கமணிகளிடம் நேரடியாக கேட்பதில்லை.

மனதில் இருப்பது ஒன்று. வாயில் வருவது ஒன்று. இது புதுசா கல்யாணம் முடிச்சவுங்களுக்கு முதல்ல புரியாது. நம்மளுக்கு கல்யாணம் முடிச்சு அஞ்சு வருசம் மேலாச்சா. அதுனால எங்க வீட்டு தங்கமணி எதுனாச்சும் நம்மளைக் கேள்வி கேட்டா உடனே அதைப் புரிஞ்சுகிட்டு அவங்க உண்மையிலேயே என்ன நினைக்கிறாங்களோ அத உடனே செஞ்சு முடிச்சுடுவேன். சில நேரம் நல்ல பேரும் வாங்கிடுவேன்.

உதாரணத்துக்கு

மத்தியான நேரம் ஒரு மணிப்போல தங்கமணிகிட்டே இருந்து தொலைபேசி அழைப்பு வந்தா,“என்னங்கன்னு சொன்னாப் போதும். “ என்னம்மா என்ன வாங்கனும், ஏதாவது வாழையில வாஙகனுமா இல்ல அப்பளக்கட்டு ஏதாவது வாங்கனுமான்னு கேட்பேன். எப்படிங்க கரக்டா சொல்லுறிங்க, வீட்ல அம்மா ( அவுங்கம்மா) வந்திருக்காங்க ஒரு கட்டு இலை வாங்கிட்டு வாங்க"ன்னு சொல்லுவாங்க.

"இந்த கண்ணாப் பயல ஆளயே காணோமே" (கண்ணா தங்கமணியோட ஆஸ்தான டெய்லர்)ன்னு நம்மகிட்டே கேட்டா உடனே நான் சொல்லுவேன். “எந்த சேலைக்கும்மா, போனவாரம் வாங்கினியே அந்த கத்திரிப்பூ கலர் சேலைக்கா இல்ல போன மாசம் வாங்குன வாடாமல்லி கலர் (கத்திரிப்பூவும் வாடாமல்லியும் ஒரே நிறமாத்தான் எனக்குத் தெரியுது ஆனா அத அவ்ங்ககிட்டே சொல்ல முடியாது)சேலைக்கா எந்த சேலைக்கு ஜாக்கட் வாங்கனும்அதுக்கு அவுங்க சொல்லுவாங்க “ "அதெல்லாம் வாங்கிட்டேன், நேத்து ஒரு சிந்தாமணிக்கலருல ஒரு சேலை எடுத்தேன். அதுக்கு பிந்தி அடிச்சுட்டு வாங்கன்னு சொல்லுவாங்க.சிரமேற் கொண்டு சேலையை எடுத்துட்டு போக வேண்டியதுதான் கண்ணா கடைக்கு.

ஏங்க மாடிக்குப்போறீங்களான்னு காலையில கேட்டா உடனே வாஷிங் மெசின்ல்ல துவைச்சு முடிச்ச துணியெல்லாம் எடுத்து “இதோ போய் துணியெல்லாம் காயப் போட்டிரம்மான்னு சமத்தா சொல்லுவேன். அதையே “மாடிக்குப் போறிங்களான்னு சாயங்கால நேரத்தில கேட்டாஉடனே கடகடவென மாடிக்குப்போயி காயப்போட்ட துணியெல்லாம் மடிச்சு எடுத்துட்டு வந்துருவேன்.

“என்னங்க வந்து உங்க மகனைப் பாருங்கன்னு தங்கமணி சொன்னா நம்ம தலைவன் ஏதாவது சேட்டை பண்ணிகிட்டு இருக்கனும்ன்னு புரிஞ்சுகிட்டு “என்ன பண்ணுறான் அவன், இந்தா வர்றேன்ன்னு பாத்துகிட்டு இருக்குற வேலையை அப்படியே போட்டுட்டு கிளம்பிப் போயி நம்ம சேட்டைக்காரரைப் போயிப் பார்க்கனும். அதுவே “என்னங்க வந்து என் மகனைப் பாருங்கன்னு தங்கமணி சொன்னா உடனே புரிஞ்சுக்கனும் சேட்டைக்காரர் ஏதோ நல்ல விசயம் செஞ்சுருக்காருன்னு.

இராத்திரி சாப்பாட்டு நேரம் தாண்டி வீட்டுக்கு லேட்டாப் போனா தங்கமணிகிட்ட இருந்து “ ஏன் லேட்டுன்னு கேள்வி வரும். நான் உடனே காரணம் எல்லாம் சொல்ல மாட்டேன். கை கால கழுவிட்டு அடுப்படியிலே போயி என்ன இருக்கோ அள்ளி வயித்துல போட்டுகிட்டு அப்படியே தட்டெல்லாம் கழுவி வச்சிட்டு “ஏம்மா சோத்துல தண்ணி ஊத்திரவான்னு கேட்பேன். ஒரு மெளனம் பதிலா கிடைக்கும். அதையே சம்மதமா எடுத்துகிட்டு சோத்துல தண்ணியை ஊத்திட்டு படுத்துடுவேன்.

அப்புறம் ரொம்ப முக்கியமான கேள்வி தங்கமணிகிட்ட இருந்து அடிக்கடி வரும். இதை மத்த கேள்விகள் மாதிரி எடை போட முடியாது. அது என்னன்னா “உங்கம்மா போன் பண்ணுனாங்களா?. “ஆமா போன் பண்ணுனாங்கன்னு சொன்னா "என்னைப்பத்தி என்னமாவது சொன்னாங்களான்னு அடுத்த கேள்வி வரும். இல்லையே அப்படி ஒன்னும் சொல்லலியேன்னு சொன்னா “என்னவோ மறைக்கிறிங்க என்கிட்ட, என்னைப்பத்தி உங்கம்மா ஏதாவது சொல்லாம இருக்க மாட்டங்களேன்னு அடுத்தடுத்து அஸ்திரமா கேள்விகள் வரும். அதுனால உங்கம்மா போன் பண்ணுனாங்களான்னு தங்கமணி கேட்டா உடனே நான் ‘ஆமாம்மா மறந்தே போயிட்டேன். எங்கம்மா உன்னைப்பத்தி கேட்டாங்க எல்லா வேலையும் ஒத்தையாளா செய்வா கூடமாட ஒத்தாசை செய்யுடான்னு சொன்னாங்கன்னு நானே எனக்கு குழி வெட்டிக்கிறுவேன். உடனே நம்ம தங்கமணி "உங்கம்மாவுக்கு இருக்கிற அக்கறை உங்களுக்கு கொஞ்சம் கூட இல்லையேன்னு சொல்லிட்டு சரி சரி இந்த தேங்காயை துருவுங்க சட்டினி வைக்கனும்"ன்னு சொல்லுவாங்க.

இப்படி பல கேள்விகளை எள்ளுன்னா எண்ணையா புரிஞ்சிகிட்டு பதில் சொன்னாலும், எனக்கு ஒரு கேள்வியை மட்டும் எப்படி சமாளிப்பதுன்னு இன்னும் புரியல. ஒரு வேளை இன்னும்!!! அஞ்சு வருசம் போனா அதுவும் தன்னால புரிஞ்சுடும்ன்னு நினைக்கிறேன்.அது என்னன்னா எப்ப சோறு போட்டாலும் குழம்ப ஊத்திட்டு தஙக மணி கேட்கிற கேள்வி “ என்னங்க குழம்பு எப்படி இருக்கு பெரும்பாலும் நான் இந்த கேள்விக்கு வாயில சோத்தோட கண்ணுல தண்ணியோட (காரத்தினால் அல்ல) மண்டைய மேலும் கீழும் ஆட்டுவேன்.

அப்புறம் மேலே உள்ள சிங்கப்படத்துக்கும் இந்த பதிவுக்கும் எந்த வித சம்பந்தமுமில்லைங்கோ.....


சனி, 13 பிப்ரவரி, 2010

டுமீல் டுமீல் டுமீல்


ஒரு அரைச்செங்கலை எடுத்து மதுரையில் ஏதாவது ஒரு தெருவில் விட்டெறிந்தால் அது கண்டிப்பாக ஒரு பாண்டியின் தலையில்தான் விழும். அந்தளவுக்கு பாண்டிகளின் எண்ணிக்கை பாண்டி(யன்) தலைநகர் மதுரையில் அதிகம்.
ஒரு முக்கிலோ அல்லது ஒரு சந்திலோ பத்துப்பேர் நின்று பேசிக்கொண்டிருந்தால் அதில் எட்டுப்பேர் பாண்டியாகத்தான் இருப்பார்கள்.
சண்முகப்பாண்டி, சங்கரப்பாண்டி, சுந்தரப்பாண்டி, அழகுபாண்டி,வீரப்பாண்டி,செல்வப்பாண்டி,
முருகுப்பாண்டி,முத்துப்பாண்டி,வேல்ப்பாண்டி என பெயருக்கு முன் ஏதாவது ஒரு prefix இருந்தாலும் இவர்களையும் மக்கள் அழைப்பது என்னவோ பாண்டி என்றுதான்.
எனவே பெயர்க் குழப்பம் வரக்கூடாது என்பதற்காக இந்த பாண்டிகளை நெட்டைப்பாண்டி, குட்டைப்பாண்டி, கட்டைப்பாண்டி,வெள்ளைப்பாண்டி,கருத்தப்பாண்டி என தோற்ற ஆகு பெயர்களாலும் முனிச்சாலைபாண்டி,ஒத்தக்கடைப்பாண்டி,அனுப்பானடிப்பாண்டி என இட ஆகு பெயர்களாலும் பழக்கடைப்பாண்டி,உரக்கடைபாண்டி, கறிக்கடைப்பாண்டி என தொழில் ஆகு பெயர்களாலும் மக்கள் அழைப்பதுண்டு.
அந்த வகையில் வித்தியாசமானவர்தான் இந்தப் பதிவின் நாயகன் டுமீல் பாண்டி.
துப்பாக்கியில் இருந்து தோட்டாக்கள் வருவதுபோல் இவர் வாயிலிருந்து வரும் ஒவ்வோரு வார்த்தைகளும் எதிராளியைத் தாக்கி மயக்கம் அடையச் செய்யும். மறுமுறை இவரைக் காணும்போது ஒவ்வொருவருக்கும் குலை நடுக்கம் ஏற்படச்செய்யும் வகையில் இவர் சு(வி)டும் டுமீல்கள் நிலைகுலையச் செய்யும் திறன் கொண்டவை.
மாதிரிக்கு சில டுமீல்கள். படிப்பவர்களின் வசதிக்காக டுமீல் பாண்டியின் டுமீல்கள் கருப்பு வண்ணத்திலும் உண்மை நிலவரம் நீல வண்ணத்தில் அடைப்புக் குறியிலும் தரப்பட்டுள்ளன.
டுமீல் 1. டுமீல் பாண்டி ஆறாம் வகுப்பு படிக்கும்போது பள்ளியில் கொடைக்கானலுக்கு சுற்றுல்லா சென்றார்களாம். அங்கு இவரை ஒரு மலைப்பாம்பு கவ்வி விழுங்க முயற்சி செய்ததாம். டுமீல் பாண்டி தன்னிடமிருந்த காம்பஸ் உதவியுடன் பாம்பை கிழித்துக் கொண்றாராம். (சுற்றுலாவில் செத்த பாம்பு ஒன்றினை வழியில் பார்த்த டுமீல் தன் டிரவுசரில் இருந்த சேப்டி பின்னால் குத்தியிருக்கிறார்.)
டுமீல் 2. டுமீல் பாண்டி கோயமுத்தூரில் ஒரு கட்டிட காண்ட் ராக்ட் எடுத்து வேலை பார்த்திருக்கிறார். அந்த கட்டிடத்தின் மதிப்பு ஒரு கோடியாம். மேலும் இதில் சிறப்பம்சம் என்ன வெனில் அந்த ஒரு கோடி ரூபாய் கட்டிடம் ஒரு நாய்க்காக கட்டப்பட்டதாம். (ஒரு கோடி ரூபாய் கட்டிடத்தில் நாய்க்காக ஒரு பத்தாயிரம் ரூபாய் மதிப்பீட்டில் மரத்திலான் செட்டு ஒன்று மட்டுமே டுமீல் பாண்டி பார்த்த வேலை)
டுமீல் 3. டுமீல் பாண்டி வேலை பார்த்த ஒரு கட்டிடத்தில் இருந்து சித்தாள் ஒருவர் தவறி விழுந்து விட்டாராம். பல்வேறு மருத்துவர்கள் கைவிரித்த பின்னர் டுமீல் அவருக்கு வாய் வழியே ஒல்டு மங்க் ரம்மை குடிக்கக் கொடுத்திருக்கிறார். சித்தாள் பிழைத்துக் கொண்டாராம்.(உண்மையில் பிராந்தி விஸ்கி போன்றவையின் விலை ஏற்றத்தால் பாதிக்கப்பட்ட டுமீல் தற்போது அடிப்பது ஓல்ட் மங்க் மட்டுமே. எனவே ஓல்ட் மங்கின் பெருமை கூறவே இந்த டுமீல்).
டுமீல் 4. முன் சொன்னது போல் மருத்துவர்களால் கைவிடப்பட்ட ஒரு தீராத நோயை தீர்த்த அனுபவம் டுமீலுக்கு உண்டு. அது என்னவென்றால் ஒரு நோயாளி நீண்ட நாள்கள் தலையில் அரிவாள் வெட்டுப்பட்டக் காயத்தில் புழுக்கள் வந்து அவதிப்பட்டு வந்தாராம். எந்த மருத்துவராலும் அந்த புழுக்களை அகற்ற முடியவில்லையாம். டுமீல் பாண்டி ஆட்டுக்கறியின் தொடைக்கறியை 200 கிராம் வாங்கிவரச் செய்து அதனை புழுக்கள் உள்ள காயத்தில் வாழை மட்டை வைத்துக் கட்டி விட்டாராம். ஒரு மணி நேரத்தில் புழுக்கள் எல்லாம் கறியில் ஏறி விட இவர் நோயாளியை குணப்படுத்தினாராம் (டுமீல் கறிக்கடையில் தலைக்கறி வாங்க சென்று இருந்திருக்கிறார். அங்கு ஆட்டின் தலையில் அடம் பிடித்துக் கொண்டு வராமல் இருக்கும் புழுக்களை அகற்றும் போது பார்த்திருக்கிறார்.)
டுமீல் 5. டுமீலின் அண்ணன் மகளுக்கு திருமணம் நிச்சயமாகி இருந்திருக்கிறது.மாப்பிள்ளை வீட்டில் 100 பவுண் நகை கேட்டார்களாம். ஆனால் கையில் கொஞ்சம் கூட காசு இல்லை. டுமீலின் அண்ணன் மனைவி மிகவும் கவலை அடைந்திருக்கிறார். ஆனால் கவலையே படாத டுமீலும் டுமீலின் அண்ணனும் (பெரிய டுமீல்) தங்களிடம் பரம்பரை பரம்பரையாக இருந்து வந்த குவைகளின் ஒரு பகுதியை (பொற்கொல்லர் தங்கம் உருக்கப் பயன்படுத்தும் ஒரு மண்ணால் ஆன குவளை) உடைத்து உருக்கினராம். 100 பவுனுக்கு மேலேயே தங்கம் கிடைக்க அதை வைத்து ஜாம் ஜாம் என கல்யாணத்தினை நடத்தினராம். (உண்மையில் பெண் பிடித்துப் போன மாப்பிள்ளை வீட்டார் பத்துப் பவுனுக்குமேல் பரிசம் போட்டு தங்கள் செலவிலேயே திருமணத்தினை நடத்தினராம்).
டுமீல் பாண்டியின் டுமீல்களை கையும் களவுமாக பிடித்து அம்பலப் படுத்தினாலும் டுமீல் தன் டுமீல்களை விடுவதில்லை. இந்தப் பதிவுகூட டுமீலின் ஒப்புதலின் பேரிலேயே வெளியிடப்படுகிறது.

சனி, 5 செப்டம்பர், 2009

சும்மா அதிருதுல்ல.....


தமிழக உச்ச நட்சத்திரம் திரு.ரஜினிகாந்த் பேருந்து நடத்துனராக இருந்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். அவர் B.E. civil engineering படித்து விட்டு கட்டிட காண்ட்ராக்டராக பணியாற்றினால் என்ன பேசியிருப்பார் என்பதே இந்த கற்பனை.

1."நான் பிளான்ல வரையுறதையும் கட்டுவேன்

வரையாததையும் கட்டுவேன்"

2."நான் எப்பக் கட்டுவேன் எப்படிக் கட்டுவேன்னு எனக்குத் தெரியாது

ஆனா கட்ட வேண்டிய நேரத்துல கரக்டா கட்டுவேன்"

3."கண்ணா நான் ஒரு அடி பவுண்டேசன் போட்டா

நூறு அடி பவுண்டேசன் போட்ட மாதிரி"

4."அதிகமா மணல் போட்ட காங்கிரீட்டும்

கம்மியா சிமிண்ட் போட்ட கட்டிடமும்

ரொம்ப நாள் இருந்த்ததா சரித்திரமே இல்லை".

5.கண்ணா ஆண்டவன் கெட்டவனுக்கு நூறு கிமீ

தார்ரோடு காண்ட்ராக்ட் கொடுப்பான் ஆனா

கடைசியில் மழையை பெய்யவெச்சு அவன கைவிட்டுடுவான்

நல்லவனுக்கு ஒரு கிமீ பாலம் காண்ட்ராக்ட் கொடுப்பான்

கடைசியில கைதூக்கி விட்டுவான்"

6."என் பிளான் தனி பிளான்

பாக்காதே தாங்க மாட்டே"

7.சித்தாளு கூலி நாள் கணக்கு

மேஸ்திரி கூலி வாரக் கணக்கு

இஞ்சினியர் கூலி மாசக் கணக்கு

வீட்டுக்காரன் போடுறது எப்பவும் தப்புக் கணக்கு"

8."சும்மா அதிருதுல்ல" (நான் கட்டின கட்டிடம்)


புதன், 2 செப்டம்பர், 2009

இதுதாங்க தமிழகம் - 2040

2040 ஆண்டில் ஒரு நாளிதழில் கிடைத்த!!! முக்கியச் செய்திகள் இது. (எப்படி கிடைச்சதுன்னு மட்டும் கேட்காதிங்க)

1."வரும் ஜூன் 3ம் தேதி முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாளையொட்டி நியாய விலைக் கடைகளில் இட்டிலி சட்னி சாம்பார் வழங்கப்படும்" என முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு.

2."அடுத்த ஆண்டு மார்ச்சு 3ம் தேதி முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளுக்குள் சென்னையின் அனைத்து சாலைகளும் மேம்பாலமாக்கப்படும்" என ஆண்கள் சுய உதவி குழுவினருக்கு சுழல் நிதி வழங்கி துனை முதல்வர் உதயநிதி பேச்சு.

3."மதுரையில் நடக்கும் கட்டப்பஞ்சாயத்துகளுக்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை" என சிம்மக்கல் ஒத்தகடை மேம்பால திறப்பு விழாவில் மத்திய உரத்துறை அமைச்சர் அறிவுநிதி பேட்டி.

4.வடநாடு ஓய்வு முடித்து இன்று உடன்பிறவா சகோதரி கலாவுடன் சென்னை திரும்புகிறார் அ இ மா ம தி மு க (அனைத்திந்திய மானாட மயிலாட திராவிட முன்னேற்ற கழகம்) பொதுச் செயலாளர் திருமதி! குஷ்பு.

5.சத்தியமூர்த்தி பவன் சாக்கடை அடைப்பை சரி செய்ய ஆள் நியமனத்திற்கு அன்னை பிரியங்காவின் ஒப்புதல் பெற தமிழக காங்கிரசார் டெல்லி பயணம்.

6."தனது மகள்கள் இருவரும் இனி மத்திய அமைச்சரானால் முச்சந்தியில் நிறுத்தி மக்கள் என்னை திருக்கைவாலால் அடிக்கலாம்" பா ம க தலைவர் அன்புமணி பேட்டி.

7."இந்தியாவின் இரும்பு பெண்மணி குஷ்பூவால்தான் இலங்கைப் பிரச்சினையை தீர்க்க முடியும்" என ம தி மு க பொது செயலாளர் கோ வை(யாபுரி) பேச்சு.

8."காங்கிரஸ் தன்னை தலைவராக ஏற்றுக் கொண்டால் மட்டுமே கூட்டணி பற்றி பரிசீலிக்கப்படும்" என தேசிய பிற்போக்கு திராவிட கழக தலைவர் நடிகர் விஜய் பேட்டி.

9."வரும் பாராளுமன்றத் தேர்தலில் இந்தியாவின் 814 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி" இலட்சிய தி மு க தலைவர் விஜய சிலம்பரசன் அறிவிப்பு.

10."அரசியலில் இறங்குவது பற்றி காலம்தான் முடிவு செய்யும்" தந்திரன் பட இசைச் சுருள் வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேச்சு.

திங்கள், 31 ஆகஸ்ட், 2009

தங்கமணியும் தமிழ் இலக்கணமும்

காதலிக்கும்போது அவள் மைவிழிகளில்
ஒரு தண்மை இருந்தது அது அவள்
பண்புத்தொகையென நான்
பரவசமடைந்திருந்தேன்

படபடவென சலசலவென அவள்
இரட்டைக்கிளவியாய் பேசிய பாங்கில்
என் இதயத்தினை இழந்திருந்தேன்.

என்னங்க ஏங்க எப்படிங்க என்று
எப்போதும் வியங்கோள் வினைமுற்றாய்தான்
என்னை அவள் விளித்திருப்பாள்.

உவமைகளாலும் உவமேயங்களாலும்
அவளை நான் அவளை புகழ்கையில்
இன்னிசையளபடையாய்
புன்னகை புரிந்திருந்தாள்.

தெரிந்தே ஒருநாள் வினைமுற்றிற்று.
திருமணம் நடந்தது
காலமும் கடந்தது

பண்புத்தொகை வினைத்தொகையாயிற்று
திட்டினாள்
திட்டுகிறாள்
திட்டுவாள்

இரட்டைக்கிளவி
அடுக்குத்தொடராயிற்று
தினம் தினம்
ஆயிரம் ஆயிரம் கேள்விகள்

என்னங்க ஏங்க எனும்
வியங்கோள் வினைமுற்று
ஏய் ஓய் என
ஈறு கெட்ட எதிர்மறை பெயரெச்சமானது.

இன்னிசையளபடை தினம்
சொல்லிசையளபடையாயிற்று

வசந்தம் என்பதே என் வாழ்வில்
இறந்த கால வினைமுற்று ஆயிற்று

வடிவேலும் பார்த்திபனும் போல
தாமிராவும் ரமாவும் போல
என் வாழ்வும் பகாபதமாயிற்று.




செவ்வாய், 11 ஆகஸ்ட், 2009

வீரபாண்டிய கட்டபொம்மனும் ஜாக்சன் துரையும் சவுதி அரபியாவில் சந்தித்தால்

வீர பாண்டிய கட்டப் பொம்மன் திரைப்படத்தில் வீரபாண்டிய கட்டப்பொம்மனும் ஜாக்சன் துரையும் இராமநாதபுரம் அரண்மனை இராமலிங்க விலாசத்தில் சந்தித்து பேசும் வசனங்கள் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்று.மொழிபெயர்ப்பாளர் துணையின்றி ஜாக்சன் மிக சரளமாக தமிழ் பேசுவது ஆச்சர்யமே. படத்துக்காக இதை சுலபமாக எடுத்துக் கொண்டாலும் உண்மையில் ஆங்கிலம் மட்டும் தெரிந்த ஒரு நபரும் தமிழ் மட்டும் தெரிந்த ஒருவரும் துபாஷ் யாருமின்றி உரையாடுதல் கடினமே.

சவுதி அரபியாவில் எண்ணைக்கிணறு கட்டுமான நிறுவனங்களில் உலகம் மொத்தமுள்ள அனைத்து நாட்டினரும் வேலைப் பார்த்து வருகின்றனர்.ஆங்கிலமும் அரபியும் கலந்த ஒரு புதுமையான மொழிதான் இங்கே எல்லோருக்கும் பொது மொழி.இலக்கணமில்லாத காலங்களில்லாத ஆங்கிலத்துடன் கீழ்கண்ட அரபு வார்த்தைகளை சேர்த்து விட்டால் அந்த பாஷை ரெடி.

பி=ஆமாம், முடியும் மாபி= இல்லை, முடியாது சுகுல்=வேலை அலதுல்=நேராக, ஒரேடியாக சவாசவா=சேர்ந்து, உடன்,கூடவே மாலும்=தெரியும் கிர்கிர்=பேச்சு மொகத்=அறிவு, திறமை புலுஸ்=சம்பளம்,காசு ஐவா=சரி



சரி இப்பக் கதைக்கு வருவோம் சவுதியில் இபிஎஸ் (engineering ,procurement and supply)கம்பனியில் வேலைபார்த்த தற்போது கிழக்கிந்திய கம்பனியில் வேலை பார்க்கும் ஜாக்சன் துரையும் ஓலாயன் கம்பெனியில் வேலை பார்த்து தற்போது பாளையத்து மன்னராக இருக்கும் வீரபாண்டிய கட்டப்பொம்மனும் சவுதி தம்மாம் நகரில் சந்தித்துக் கொள்கின்றனர். இருவருக்கும் சவுதியில் ஏற்கனவே வேலை பார்த்த அனுபவம் இருப்பதால் மொழிபெயர்ப்பாளர் யாருமின்றி பேச்சைத் துவங்குகின்றனர்.

ஜாக்: யூ விர பண்டிய கெட்டபொம்மா?

வீரு: யூ மாபி மாலும் இங்கிலிஷ் ஐ வீரபாண்டிய கட்டபொம்மன் யூ ஜாக்சன் துரை.

ஜாக்: ஓகே ஓகே ஒய் லாங் மீட்டர் கமிங்.

வீரு: சம் படி ஸ்பீக் மீ யூ லைக் பிரண்ட்சிப் தட் வொய் ஐ கமிங்

ஜாக்: ஐ லைக் பிரண்ட்சிப் பட் யூ நோ குட் கை

வீரு: வீ தமிழ் மாலும் ஆல், யூ டோண்ட் டீச் லெசன்ஸ் பிகாஸ் யூ மாபி மொகத் கை

ஜாக்: யூ டூ மச் ஹெட் வெயிட் கை ஆஹ்

வீரு: ஹா ஹா ஹா தட் இஸ் சவாசவா கேரக்டர் பிரம் பெர்த்.

ஜாக்: ஐ ஃப்ளேம் யூ

வீரு: வாட் ஃபிளேம் ஸ்பீக் ஸ்பீக்

ஜாக்: டூ மச் ஃபிளேம் லிட்டில் டைம் நாட் எனாப்ஃ

வீரூ: யூ மாபி மாலும் அக்கவுண்டிங்

ஜாக்: ஸ்டுபிட் யூ ஸ்பீக் அபவுட் மீ மாபி மாலும் அக்கவுண்டிங் லிசன் ஐ ஸ்பீக்
லாங் டைம் யூ மாபி கிவ் கிஸ்தி சவாசவா யூ மாபி கிவ் டாக்ஸ் சவாசவா யூ மாபி கிவ் இண்ட்ரஸ்ட் பார் ஆல் பேலன்ஸ் புலுஸ்.

வீரு: கிஸ்தி டாக்ஸ் இண்டரஸ்ட் ஹா ஹா ரெயின் கமிங் எர்த் க்ரோயிங் வொய் ஐ சுட் கிவ் கிஸ்தி. யூ சவாசவா கம் டூ லேண்ட்,தேர் யூ போர் வாட்டர் டூ அவர் கிராப்ஸ்,ஆர் யூ பிளாண்ட் எனி சீட்ஸ்,ஆர் யூ பிளக் எனி வீட்ஸ்,ஆர் யூ பிரிங் கஞ்சி டூ அவர் பார்மர்ஸ்,ஆர் யூ கிரைண்டிங் எனி டர்மரிக் டூ அவர் மேடம்ஸ்,ஆர் யூ அங்கிள் ஆர் கசின் வொய் யூ ஆஸ்க் டாக்ஸ் ஹவ் யூ ஆஸ்க் இண்ட்ரஸ்ட் ஃஇப் அவர் பார்மர் மாலும் திஸ் மேட்டர் தே புரோக் யுவர் ஹெட் இன் பீஸ் பீஸ் பீ கேர்புல்.

ஜாக்: ஹெய் கைஸ் அரஸ்ட் திஸ் டூ மச் கிர்கிர் கை.
வீரூ: ஹா ஹவ் டேர் யூ டூ புட் யுவர் ஹேண்ட் ஆன் மறத்தமிழன் லேப்
இஃப் மை மம்மி மாலும் திஸ் மேட்டர் சி வில் கில் யூ பை ஹெர் சாங்
இஃப் மை மேடம் மாலும் திஸ் மேட்டர் சி வில் கில் யூ பை ஹெர் குழம்பு
இஃப் அவர் ஆக்டர் விஜய் மாலும் திஸ் மேட்டர் ஹி வில் கில் யூ பை ஹிஸ் வில்லு

மூன்றாவது வரியைக் கேட்டதும் ஜாக்சன் துரை மூர்ச்சையாகிறார் வீர பாண்டியனாரின் சவுதி சந்திப்பு வெற்றிகரமாக இனிதே முடிகிறது.