கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 11 ஜனவரி, 2011

உள்ளூரில முசப் புடிக்க முடியாம


“கோடிக்கணக்கில் பணம் கொடுத்தான் அவன் கோவிலுக்கென்றே செலவழிப்போம் பெங்களூர் ரமணி அம்மாள் N73யிலிருந்து வேண்டிக் கொண்டிருந்தார்.

உறக்கம் கலைந்த மணி கண்டன் போர்வையிலிருந்து தலையைத் தூக்கி போனின் அலாரத்தை நிறுத்தி மணி பார்த்தான். அதிகாலை 3.30. நசீர் இருக்கிறானா என அவன் படுக்கையைப் பார்த்தான். இல்லை, “பய புள்ள நமக்கு முன்னாடியே எந்திரிச்சிட்டான் போலிருக்கே மனதுக்குள் நசீரைத் திட்டிக் கொண்டே பற்குச்சியில் சுவாச புத்துணர்ச்சியை பிதுக்கினான்.

பாத்ரூம் கதவு பூட்டியிருந்தது. ஆறு பேர் தங்கியிருக்கும் அறை அது. கழிவறை ஒன்றுதான். காலை ஆறு மணிக்கு எல்லோருக்கும் வேலை. தங்கியிருக்கும் முகாமிலிருந்து அவரவர் வேலை பார்க்கும் இடத்திற்கேற்ப பேருந்து 4 மணியிலிருந்து செல்லத் துவங்கும். மணி கண்டனுக்கு தூரத்தில் வேலை. அவனுக்கு கடைசிப் பேருந்து 5.00 மணிக்கு. கடைசிப் பேருந்தை விட்டு விட்டால் பணிக்கு செல்ல முடியாது. அப்புறம் கம்பெனியில் நாலு நாட்கள் சம்பளம் பிடித்தம் செய்வார்கள்.

பல்லைத் துலக்கிய பின்னும் பாத்ரூமிலிருந்து நசீர் வராதது மணிக்கு கவலையை ஏற்படுத்தியது.. மணி பலமுறை நசீரிடம் சொல்லியிருக்கிறான். வந்தா மட்டும் போ, வரலைன்னா போகாதே நீ வருது வருதுன்னு மணிக்கணக்கில் உட்காந்துகிட்டு இருந்தா வர்றவன் எங்கே போறது

உள்ளே கால் கழுவும் தண்ணீர் ஓசை கேட்ட்து. பசி கொண்ட நேரம் தாளிக்கும் ஓசை போல அந்த ஓசை மனதுக்கு நிம்மதியாக இருந்தது

காலைக்கடனை அவசரம் அவசரமாக முடித்து பாதுகாப்பு உடைகளையும் காலணிகளையும் அணிந்து கொண்டு முகாமிலிருக்கும் உணவுக்கூடத்திற்கு வந்தான். மணி 4.30. உணவுக்கூடத்தில் மிக நீண்ட வரிசை. உணவுக்கூடத்தில் இரண்டு வரிசைகள். ஒன்று இந்தியன் வரிசை, மற்றொன்று பிலிப்பினோ வரிசை. இந்தியன், நேபாளி, பாகிஸ்தானி, பங்களாதேசி, ஆப்கான், சிலோன்காரன் அனைவருக்கும் ஒரே வரிசைதான். பிலிப்பினோவுக்கு மட்டும் தனி வரிசை.

மணி கண்டன் தட்டை எடுத்துக் கொண்டு பிலிப்பினோ வரிசையில் நின்றுகொண்டான். இந்திய வரிசையில் நின்றால் சாப்பிட்டு வேலைக்குப் போக முடியாது என மணிக்கு தெரியும்.வரிசையில் முன் நின்ற பிலிப்பினோ ‘ஓ பரே யூ பிலிப்பினோவா என கேலி செய்தான். மணிக்கு அவனது கேலி பெரிதாக தெரியவில்லை.

‘நாய் திங்கிற பயலுக சாப்பாடு நினைக்கும் போதே மணிக்கு குடலைப் புரட்டியது. என்ன செய்ய, இந்திய வரிசையில் நின்றால் நேரத்துக்கு வேலைக்குப் போக முடியாது. வெந்தது வேகாதது என பேதம் பார்க்காமல் அவதி அவதியாக அள்ளித் தின்று முடித்து விட்டு ஓடிப் போய் புறப்பட தயார் நிலையில் இருந்த பேருந்தில் ஏறி அமர்ந்துகொண்டான்.

பனிக்காற்று ஊசிபோல குத்தியது. மணிகண்டன் மங்கி குல்லா எடுத்து அணிந்து கொண்டான். போட்டிருந்த ஸ்வெட்டர் பனி தாங்க வில்லை. சம்பளம் போட்டதும் நல்ல கணமான ஜெர்கின் ஒன்று வாங்க வேண்டும் என நினைத்துக் கொண்டான்.

சம்பளம் எப்ப வருமுன்னு தெரியவில்லை. கம்பெனியில் இப்படித்தான் சமயத்தில் அம்பது நாளுக்கொரு முறைதான் சம்பளம் வரும், எப்பவும் கம்பெனியில் மூன்று மாத சம்பளம் பாக்கி இருந்துகொண்டே இருக்கும். சென்ற வெள்ளிக்கிழமை வீட்டுக்கு போன் செய்த போது சின்னபையனுக்கு உடம்பு சரியில்லை என பொண்டாட்டி சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. இன்னிக்கு சம்பளம் போடாட்டி பங்காளி (பங்களாதேசி)கிட்ட வட்டிக்கு வாங்கியாவது வீட்டுக்கு பணம் அனுப்ப வேண்டும்.என நினைத்துக் கொண்டான்.

வேலை பார்க்கும் இடம் வந்து விட்டது. மணி இடுப்பு பெல்டை அணிந்து கொண்டு சரசரவென இரும்பு சட்டங்களில் ஏறினான். இரும்புச் சட்டம் பனிக்கு ஐஸ் கட்டிப் போல இருந்தது. சவுதி இப்படித்தான் வெயில் காலம் நெருப்பாய் சுடும். பனிக்காலம் கை கால் எல்லாம் விரைத்துப் போய் விடும். உயரமான இரும்புச் சட்டங்களில் ஒரு தடவை ஏறி விட்டால் சாயங்காலம் வேலை முடிந்தபின் தான் இறங்க முடியும். ஒன்னுக்குப் போவதென்றால் கூட பாட்டிலில் இருந்து தூக்கித்தான் போட வேண்டும்.

கீழே வேலை பார்க்கலாம்தான். மணிக்கு வாய்த்த போர்மென் பீகாரி. மணிக்கு இந்தி தெரியாது. அது மட்டுமல்ல தமிழன் ஒருவன் தான் என்ன வேலை கொடுத்தாலும் செய்வான் சட்டம் பேசமாட்டான். அது பீகாரிக்குத் தெரியும் அதனால்தான் மணிக்கு இரும்புச் சட்ட்த்தில் வேலை.

11 மணி இருக்கும். நோக்கியா இரண்டு தடவை சினுங்கியது. எடுத்துப் பார்த்தால் ஊரிலிருந்து தங்கச்சி ராணி. வெளிநாட்டில் இருக்கும் எல்லோருக்கும் ஊரிலிருந்து மிஸ் கால் மட்டும்தான் வருகிறது. சரியா ஒரு ரிங் அளவுக்கு மட்டும் மிஸ் கால் கொடுக்கும் கலையை எங்க இருந்துதான் படிக்கிறானுகளோ. மணி போன் எடுத்து பேலன்ஸ் பார்த்தான். 15 கலாலாதான் இருந்தது. லோக்கல் மிஸ் கால்தான் கொடுக்க முடியும்.

இருந்தாலும் மனசு கேக்கவில்லை மணிக்கு. லோடு அனுப்பும் ஜெயராமனுக்கு போன் போட்டான். “அண்ணே ஒரு பத்து ரியால் மட்டும் அனுப்புங்க கொஞ்சம் அவசரம்என்றான்.

பத்து நிமிடம் கழித்து லோடு வநது சேர்ந்தது.ராணிக்கு ஓரு போனைப் போட்டான். “என்னம்மா நல்லாருக்கியா என்ன விசயம் எனக் கேட்டான்.

“அண்ணே நீ போனதடவ வந்தபோது கொடுத்த போனை என் வீட்டுக்காரர் தொலைச்சிட்டாராம், அவருக்கு வேலை விசயமா போன் அவசியமாத் தேவைப்படுறதுனால உடனே யாராவது வந்தா ஒரு போன் கொடுத்து அனுப்புவியாம் சொல்லச் சொன்னாருதங்கை சொல்ல வந்ததை சொல்லி முடித்தாள். மணிக்கு மயக்கம் வந்தது. சும்மாவா தொலைத்த போன் 800 ரியாலுக்கு மேல் பெறும். அது மணியின் ஒரு மாத சம்பளம். 30 நாட்கள் வெயிலிலும் கடுங்குளிரிலும் கடினமாக வேலைப் பார்த்து சம்பாதித்த பணம். வேறு என்ன செய்ய மறுபடி வாங்கித்தான் கொடுக்க வேண்டும், தங்கை வாழ வேண்டுமே..

வெளிநாட்டில் வேலை பார்கிறவனுக்கு ஊரிலிருந்து போன் வந்தால் அது இரண்டு விச்யமாகத்தான் இருக்கும். ஒன்னு காசு அனுப்பு, இல்லையெனில் செல்போன் வாங்கிவா, டார்ச் லைட் வாங்கிவா, எமர்ஜன்சி லைட் வாங்கிவா சமயத்தில் கைலிவாங்கிவா குடை வாங்கிவா என்றெல்லாம் சொல்வார்கள். ஒரு போன் போட்டு எவனாவது நல்லா இருக்கியாப்பா சாப்பிட்டியா எனக் கேட்பதில்லை.ஊருக்குப் போனால் கூட எப்ப வந்த என்று எவனும் கேட்பதில்லை எனக்கு என்ன வாங்கிட்டு வந்தேன்னுதான் கேட்பானுக.

மணி 5 ஆகிவிட்டது. மதியம் ஒரு டப்பாவில் போட்டு கம்பெனி கொடுத்த சாப்பாடு எப்போதோ செரித்து விட்டது. போர்மெனைக் காணவில்லை. காலாகாலத்தில் முகாமுக்குப் போனால் குளித்து விட்டு வரிசையில் நின்று சாப்பாடு வாங்கி சாப்பிட்டு தூங்கலாம்.வேலை முடித்து மணி இரும்பு சட்ட்த்திலிருந்து கீழே இறங்கினான்.

பீகாரி வந்து விட்டான். வேலை அவசரமாம். மேனேஜ்மெண்டிலிருந்து ஓவர் டைம் கொடுப்பதாக கூறினார்களாம். மறுபடியும் எட்டு மணி வரை வேலை பார்க்க சொன்னான். மறுக்க முடியாது ஏன் எனில் தனியொருவனுக்காக முகாமுக்கு பேருந்து செல்லாது. மறுபடியும் மணி இரும்புச் சட்டத்தில் ஏறினான்.

எட்டு மணிக்கு வேலை முடிந்து பேருந்து பிடித்து முகாம் வந்தபோது மணி ஒன்பதரை ஆகியிருந்தது. உணவுக்கூடத்தில் கட்டி வைத்திருந்த டப்பா உணவை திறந்தபோதே அதன் நெடி உணவு கெட்டுப் போனதை சொன்னது. வேறு வழியில்லை இன்னைக்கு பட்டினிதான்.

அறைக்கு சென்றான் மணி. அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். சத்தமில்லாமல் காலணிகளை கழற்றி ஆடைகளை மாற்றக்கூட நினைப்பில்லாமல் படுக்கையில் விழுந்தான். அசதியும் அவலமும் அவன் கண்களை தூக்கமாக தழுவிக் கொண்டது.

மீண்டும் காலை விடிந்தது.

“கோடிக்கணக்கில் பணம் கொடுத்தான் அவன் கோவிலுக்கென்றே செலவழிப்போம் பெங்களூர் ரமணி அம்மாள் குரலோடு.


வியாழன், 11 பிப்ரவரி, 2010

பாம்பு புடிச்சா பத்து லட்சம்


அந்த இருட்டில் டார்ச் அடித்து மலைச்சாமி எதையோ தேடிக் கொண்டிருந்தது கடைவீதியில் இருந்து வீடு திரும்பிய சண்முகத்திற்கு வியப்பாக இருந்தது.

மலைச்சாமி சண்முகத்தின் சகலை. ஆரம்பப் பள்ளி ஒன்றில் ஆசிரியர். சனி ஞாயிறு விடுமுறைகளில் சண்முகத்தின் வீட்டில் வந்து தங்கிச் செல்வதுண்டு.
"என்ன தம்பி தேடுறீங்க எதையாவது பணத்த தொலச்சிட்டிங்களா"?
"இல்லண்ணே ஒரு பாம்பு வந்துச்சு அதத்தான் தேடிக்கிட்டு இருக்கேன்"
ஊரின் ஆரம்பத்தில் இருந்தது சண்முகத்தின் வீடு. கட்டி ஐந்து வருடம் ஆகி விட்டது. சுற்றிலும் தென்னை மரத்தோப்புகள், வீடு கட்டி வந்த காலம் தொட்டு பாம்பு ஏதும் சுற்றுப்புறத்தில் யாரும் பார்த்ததில்லை.
"என்ன தம்பி சொல்லுறிங்க பாம்பா பாத்தவுடனே அடிக்கக் கூடாதா" சிறுபிள்ளைகள் வீட்டில் இருப்பதால் சண்முகம் கவலையடைந்தான்.
"அடிக்கக்கூடாதுன்னே இந்த பாம்பு இருதலை மணியன் மாதிரி இருக்கு இத உயிரோட பிடிச்சுக் கொடுத்தா பத்து லட்ச ரூவா வரை கிடைக்கும்"
"எந்த கேனையன் தம்பி இதச் சொன்னான்"
"ச்சூ சும்மா இருங்கன்னே எங்கூட வேலைப் பார்க்குற வாத்தியாரோட மாமாதான் இதச் சொன்னாரு, இந்த மாதிரி இருதலை மணியன் பாம்புக்கு இப்ப நல்ல கிராக்கியாம். இதுல இருந்து கேன்சருக்கு மருந்து எடுக்கலாமாம்"மதிலோரமாகத் தேடிக்கொண்டே மலைச்சாமி கூறினான்.
சண்முகத்தின் மனத்திரையில் தன்னுடன் கல்லூரியில் பயின்ற சகாய ராசு வந்து போனான்.அவனும் இப்படித்தான் "கருப்புபூனை பிடிச்சா ஒரு லட்சம் கருநொச்சி செடி கிடைச்சா இரண்டு லட்சம், ஒரு மில்லியன் டாலர் நோட்டை மாத்துனா பல லட்சம்"ன்னு எப்பவும் புருடா விட்டுக்கிட்டுறுப்பான்.
"அண்ணே இங்க வந்து பாருங்க" மலைச்சாமி டார்ச் அடித்துக் காட்டிய இடத்தில் ஒரு மூண்றடி நீளமுள்ள பாம்பு மரவட்டை போல சுருண்டு படுத்துக் கிடந்தது.
"அண்ணே நான் இங்கய பாம்பு ஓடாமப் பாத்துகிறேன் நீங்க ஓடிப்போயி ஒரு அரிசிச்சாக்க எடுத்துட்டு வாங்க அப்படியே புடிச்சுடலாம்"
"தம்பி கொத்தி கித்தி வைக்கப் போகுது ஒரு குச்சிய எடுத்து அடிச்சுப் போடுங்க எதுக்குப் போயி புடிச்சுக்கிட்டு"
'அண்ணே இந்தமாதிரி பாம்பெல்லாம் கொத்தாதுன்னே, எந்த பாம்பு இரண்டு கலர் அல்லது இரண்டு டிசைனுக்கு மேல இருக்கோ அதுதான் விஷமுள்ள பாம்பு இதப் பாருங்க ஒரே கலரு ஒரே டிசைனு கொத்தாது போயி சாக்க எடுத்துட்டு வாங்க" மலைச்சாமி முனியாண்டி விலங்கியல் மூண்றாமண்டு மாதிரி பேசினான்.
சண்முகத்திற்கு கோபம் வந்தாலும் கொழுந்தியாப் புருசனாச்சேன்னு சாக்கு ஒன்னு எடுத்துட்டு வந்தான்.தவளையோ அல்லது எலியோ தின்ன மயக்கத்துல கிடந்த அந்த பாம்பு மலைச்சாமி ஒரு குச்சியை வைத்து தள்ளவும் சாக்கில் போயி சுகமாக படுத்துக் கொண்டது. சாக்கின் முனையை ஒரு சணலில் கட்டி பாம்போடு சாக்கை வீட்டுக்கு கொண்டு வந்து ஹாலில் ப்ரிட்ஜ் இருந்த ஓரத்தில் வைத்தான்.அப்புறம் செல்போனை எடுத்து யாருக்கோ பேச ஆரம்பித்தான்.
"அண்ணே பார்ட்டி வந்துகிட்டு இருக்காங்க, கண்பர்ம் பண்ணிட்டாங்கன்னா சுளையா பத்து லட்சம் கிடைக்கும் நைட்டோட நைட்டா லட்சாதிபதி ஆயிருவேன்" மலைச்சாமி உற்சாகமாக பேசினான்.
"சித்தப்பா எங்க வீட்டுலதான் பாம்ப புடிச்சுருங்கீங்க அதுனால எங்களுக்கும் பாதிக்காச கொடுத்துடனும்" சாக்கை கண் கொள்ளாமல் பார்த்துக் கொண்டிருந்த சண்முகத்தின் மகன் பேரம் பேசினான்.
அரைமணி நேரம் போயிருக்கும். வெளியே பைக் ஒன்று வந்து நிற்கும் சத்தம் கேட்டது. இரண்டு ஆசாமிகள் 40 வயதுக்கு மேல் இருக்கும். மக்களுடன் தான் கூட்டணி என்னும் மாநிலக் கட்சியின் கரை வேட்டி கட்டியிருந்தார்கள். இராம்நாடு மாவட்டத்துக்குரிய வகையில் முகத்தில் முக்கால்வாசி மீசை வைத்திருந்தார்கள்.அவர்கள் இருவரையும் ராம்நாடு பஸ் ஸ்டாண்டில் லாட்டரி சீட்டு வித்துக் கொண்டிருந்தபோது பார்த்ததாக சண்முகத்திற்கு நியாபகம்."லாட்டரிய கவர்மெண்டு ஒழிச்சதும் பய புள்ளைக இப்படி கிளம்புருச்சு போலருக்கே"ன்னு சண்முகம் நினைத்துக் கொண்டான்.
"சரக்கு எங்க தம்பி" வந்தவரில் ஒருவன் மலைச்சாமியிடம் கேட்டான்
"இந்தா இருக்குன்னே" சாக்கை அப்படியே தூக்கி அவர்களிடம் காட்டினான் மலைச்சாமி.
சாக்கைப் பிரித்து இருவரும் ஆராய்ச்சி செய்தனர். "தம்பி கண்பர்ம் இருதலை மணியனேதான். சரக்க எடுங்க இப்பவே இராம்நாடு போயி பார்ட்டியப் பாத்து பணத்த வாங்கிடுவோம்"
"அடப்பாவிகளா இவனுக பார்ட்டி கிடையாதா ஏஜண்டுக போலிருக்கே" சண்முகம் நினைத்துக் கொண்டான்.
"அண்ணே உங்க பைக்க எடுங்க ஒரு எட்டு ராம்நாடு போயிட்டு வந்துறலாம்" மலைச்சாமி கூறினான். மணி பதினொன்னுக்கு மேலாகி விட்டதால் ராம்நாடுக்கு பஸ் கிடையாது. தவிரவும் சரக்கை வைத்துக் கொண்டிருந்தால் சின்னப் புள்ளைகள் தூங்காது என்பதால் சண்முகம் பைக்கை எடுக்க உடன்பட்டான்.
ஒரு பைக்கில் சண்முகமும் மலைச்சாமியும் அமர்ந்து கொள்ள ஏஜண்டுகள் இருவரும் தாங்கள் வந்த பைக்கில் ஏறிக்கொண்டனர். சரக்கை மலைச்சாமி கையில் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். ஏஜண்டுகள் வழிகாட்ட அரைமணி நேரத்தில் ராம்நாடு பாரதிநகர் வந்தனர்.
உயர்தட்டு மக்கள் வசிக்கும் தெருபோல் எல்லா கட்டிடங்களும் வனப்புடன் இருந்தன. ஒரு பெரிய புதிய பங்களாவின் முன் ஏஜண்டுகள் வண்டியை நிறுத்தி அழைப்பு மணியை அழுத்தினர்.
கதவைத் திறந்த நபரை சண்முகத்திற்கு உடன் அடையாளம் பிடிபட்டது. சகாய ராசு சண்முகத்தின் கல்லூரி தோழன்.
"என்ன இந்நேரத்துல உள்ள வாங்க" என்று வரவேற்றவன் சன்முகத்தைப் பார்த்ததும் "சண்முகம் நல்லாருக்கியா"ன்னு கைப் பிடித்தான்.
மலைச்சாமி கையிலிருந்த சரக்கை சகாயராசுவிடம் காட்டினான். சரக்கப் பார்வையிட்ட சகாயராசு உதடு பிதுக்கினான்.
"வெயிட்டு ரொம்ப கம்மியா இருக்கு மூனு கிலோவுக்கு மேல இருந்தாத்தான் பத்து ரூபாக்கு மேல போகும் இப்ப வித்தா ரொம்ப கம்மியாத்தான் கேப்பாங்க, கொடுத்துட்டுப் போங்க ஒரு மண்பானையிலப் போட்டு முட்ட வெள்ளக் கருவ கொடுத்தம்னா ஒரு வாரத்துல மூனு கிலோவுக்கு மேல வந்துடும் பத்து ரூவாக்கு மேல கூட வித்துறலாம்" என்னவோ இறால் வளர்க்கிற மாதிரி சகாயராசு பேசினான்.
சகாயராசுவிடம் போன் நம்பர் வாங்கிக் கொண்டு மலைச்சாமியும் சண்முகமும் விடைப் பெற்றனர்.
ஒருவாரம் கழித்து மலைச்சாமி சோகமாக சண்முகம் வீட்டுக்கு வந்தான். "அண்ணே அந்த பாம்பு ஒடிப்போயிருச்சாம் சே கைகெட்டுனது வாய்கெட்டலியே"
"எனக்குத் தெரியாதா தம்பி இதெல்லாம் டுபாக்கூர்" சண்முகம் மலைச்சாமியை நக்கலாக பார்த்தபடி கூறினான்.
ஒரு மாதத்திற்கு அப்புறம் சண்முகம் அவன் பைக்கினை சர்வீஸ் செய்ய ராம்நாடு போயிருந்தான். பைக்கினை சர்வீஸ் செய்யக் கொடுத்து விட்டு திரும்பும் போது ராஜம் மோட்டரூக்கு பக்கத்த்தில் இருந்த டாடா சுமோ கார் ஷோரூம் வாசலில் அந்த ஏஜண்டுகள் இருவரையும் பார்த்தான். எண்ணன்னே இந்தப் பக்கம்" ஏஜண்டுகளிடம் சண்முகம் கேட்டான்.
"வண்டி ஒன்னு புக் பண்ண வந்தோம் தம்பி"
"இன்ஸ்டால்மெண்டான்னே" சண்முகம் கேட்டான்.
"இல்ல தம்பி ரெடிகேஷ்"
யோசனையுடன் வீடு திரும்பிய சண்முகத்திடம் மனைவி சொன்னாள். "என்னங்க உங்களுக்கு விசயம் தெரியுமா என் தங்கச்சி புருசன்{மலைச்சாமி} டிராக்டர் ஒன்னு வாங்கியிருக்காராம். தீடிருன்னு ஏது அவருகிட்ட இம்புட்டு காசு"
இப்பல்லாம் இருட்டானதும் சண்முகம் டார்ச்சு ஒன்னு எடுத்துக்கிட்டு மதிலோரமா தேடிக்கிட்டு இருக்கான்.

வியாழன், 17 செப்டம்பர், 2009

பீர்பால் கதை ஒன்னு பிற்போக்கு கதை ஒன்னு


கதையைத் தொடங்கும் முன்....
"ஆகாச வானி" என தமிழர்க்கு
அந்நியமாய் செய்தி சொன்ன
அகில இந்திய வானொலியில்
அனுதினமும்
அரியபல தகவல்களை தம்
அழகுக் குரலால் சொல்லி உடன்
அருமை நகைச்சுவையும்
அள்ளி வழங்கிட்ட
அண்ணன் தென்கச்சி கோ சுவாமிநாதன்
அமரர் ஆன தகவல் கேட்டு
அல்லறுற்றது தமிழ் உலகம்
அன்னாரது பிரிவால் வாடும்
அவரது குடும்பத்தாருக்கு
ஆறுதல் பல கூறி
அன்னாரது ஆத்மா
ஆண்டவனில் கலந்திடவே
அனைவரும் வேண்டி நிற்போம்.

----------------------------------------------------------

பீர்பால் கதை ஒன்னு

மாமன்னர் அக்பரது அவையில் மந்திரியாய் இருந்த மதியூகி பீர்பாலுக்கு மன்னர் எப்போதும் தனிச்சிறப்பு கொடுத்திருந்தார். இது கண்டு பொறாமை கொண்ட மந்திரிகள் சிலர் மன்னரிடம் "எம்மிடம் இல்லாச் சிறப்பு என்ன கண்டீர் பீர்பாலிடம் "என நயந்து கேட்டனர்.குறுநகை ஒன்றையே பதிலாக தந்த மன்னர் குறுமதி படைத்த அந்த மந்திரிகளுக்கு பீர்பாலின் சிறப்பை உணர்த்த எண்ணிக் கொண்டார்.

ஒருநாள் மன்னர் அக்பர் அரசவைக்கு சற்றே கழுத்தைச் சாய்த்துக் கொண்டு அவைக்கு வந்தார்.அவையில் பீர்பால் உள்ளிட்ட அமைச்சர்கள் அனைவரும் இருந்தனர். வணங்கி அமர்ந்த அனைவரிடமும் அக்பர் சொன்னார் தமக்கு கழுத்து வலி வந்த காரணத்தை. "அவையோர்களே ஆன்றோர்களே நேற்று இரவு உறங்கும் போது கள்ளனைப் போல் வந்த ஒருவன் என் கழுத்திலே மிதித்து விட்டான்.கைகளால் என்னை அடித்தும் விட்டான்.என்னை உதைத்து மிதித்த அவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் சொல்லுங்கள்"என அவையோரை அக்பர் கேட்டார்.

பதைபதைத்த மந்திரிகள் பலரும் அவனது கைகளை வெட்டுங்கள் கால்களை முறியுங்கள் சிரச்சேதம் செய்யுங்கள் என ஆலோசனைகள் பல கூறினர். புன்னகைத்து அமர்ந்திருந்த பீர்பாலிடம் அக்பர் கேட்டார். "பீர்பால் அனைவரும் தங்கள் தண்டனையை கூறிவிட்டனர். அரசரை அவமதித்த அவனுக்கு என்ன தண்டனை வழங்கலாம் என உமது கருத்தினைக் கூறுங்கள்" என வினவினார்.

பீர்பால் எழுந்து சொன்னார் "மன்னா உங்களை உதைத்த கால்களுக்கு தங்க சிலம்பு பூட்டுங்கள்,அடித்த கைகளுக்கு வைரத்தில் வளையல் அணிவியுங்கள்"

துடித்துப்போன மற்ற மந்திர்கள் "ராஜ துரோகி, மன்னரை அடித்தவனுக்கு தண்டனை வழங்கச் சொல்லாமல் பரிசுகள் வழங்கச் சொல்லுகிறாயே இது அடுக்குமா என ஆர்ப்பரித்தனர். அவர்களை அடக்கிய மன்னர் சொன்னார். "பீர்பால் வழங்கிய தண்டனை சரிதான்"என்று கூறி அவையோருக்கு காரணத்தை விளக்க பீர்பாலிடம் கேட்டுக் கொண்டார்.

பீர்பால் சொன்னார்"மன்னா கட்டுக்காவல் மிகுந்த உங்கள் அந்தப்புரத்திற்கு அன்னியன் ஒருவன் வருவது அவ்வளவு இயலாத காரியம், மேலும் அடிக்கும் அளவுக்கு, கழுத்தில் உதைக்கும் அளவுக்கு மாவீரர் நீங்களும் அனுமதித்திருக்க மாட்டீர்கள் அவன் அன்னியனாய் இருக்கும் பட்சத்தில் அங்கேயே அவனுக்கு தண்டனை வழங்கியிருப்பீர்கள். எனவே இந்த அளவுக்கு உங்களிடம் குறும்பு செய்தவன் தங்கள் குழந்தையாகத்தான் இருக்கும் என முடிவு செய்து அடித்த கைகளுக்கு வளைகளும் உதைத்த கால்களுக்கு சிலம்பும் பரிசாகத் தரச் சொன்னேன்" எனக் கூறினார்.

பீர்பாலின் அறிவாற்றல் கண்டு அமைச்சர்கள் வியந்து நின்றனர். அவர் மேல் வீண் பொறாமை கொண்டதற்கும் வெட்கி நின்றனர்.

-------------------------------------------------------------------

பிற்போக்குக் கதை ஒன்னு

TMDK அதாவது (TASMAC MEMBERS DEVELOPMENT KINGDOM) என்னும் நாட்டில் ஒரு மன்னன் இருந்தார் கருப்பாக நம்ம எம்ஜியார் மாதிரி அழகா இருப்பார். அவர்கிட்ட பன் ரொட்டி ராமசாமின்னு ஒரு மதியூகி மந்திரி இருந்தார். பெரிய பதவி கொடுத்து அழகு பார்த்த கருப்பு மன்னன் எங்கே போனாலும் பக்கத்துலயே பன் ரொட்டி ராமசாமியை உட்கார வைச்சு பேசும் அளவுக்கு மந்திரிக்கு உரிமை கொடுத்திருந்தார். இது கண்ட பல அல்லக்கை மந்திரிகள் "மன்னா நாங்க பலரும் ஆரம்ப காலத்துலருந்து உங்ககிட்ட அடியும் உதையும் வாங்கி கூடவே இருக்கோம் ஆனா எங்கிருந்தோ வந்த இந்த பன் ரொட்டிக்கு நீங்க இவ்வளவு பவர் கொடுத்திருக்கிங்களே" என அங்கலாய்த்தனர்.காலம் கனியட்டும் அவர்களுக்கு பன் ரொட்டியின் அருமை பெருமையெல்லாம் உணர்த்துவேன் என மன்னன் நினைத்துக் கொண்டார்.

ஒருநாள் TMDK மன்னன் கழுத்து வலியோடு அரசவைக்கு வந்தார். வந்து மந்திரிககிட்ட சொன்னார்"நேற்று இரவு நான் ஒருத்தனை நல்லா அடிச்சிட்டேன் அவனும் மாவீரன் தான் ரொம்ப அவனை அடிச்சதுனால எனக்கு கழுத்து வலி வந்துருச்சு அடிச்ச அவனை என்ன பண்ணலாம் அவன் பேரு என்ன" அப்பிடின்னு மந்திரிககிட்ட புதிர் போட்டாரு.

அல்லக்கை மந்திரிக எல்லோரும் சொன்னாங்க 'மன்னா புயலடிச்சுப் பொழச்சவன் இருக்கலாம் ஆனா இந்த TMDK நாட்டின் பூபதி அடிச்சு பொழைச்சவன் இருக்க முடியாதே, அதுனால நீங்க அடிச்சவன் இன்னியேரம் செத்துப் போயிருப்பான் செத்தவன் பேரு நமக்கெதுக்கு'அப்படின்னு துதி பாடுனாங்க.

"போங்கடா அல்லக்கை முண்டங்களா" அப்படின்னு மன்னர் அவிய்ங்கள திட்டிபுட்டு பன் ரொட்டி ராமசாமியைப் பாத்து கேட்டாரு"அண்ணே நீங்க சொல்லுங்கண்ணே நேத்து ராத்திரி நான் அடிச்சவன் யாரு அவன என்ன பண்ணலாம்"னு

பன் ரொட்டி ராமசாமி சொன்னாரு" அரசே நீங்க அடிச்சவன் பேரு நெப்போலியன் அவன நேத்து ராத்திரி ரொம்ப அடிச்சதுனாலதான் உங்களுக்கு கழுத்து வலி வந்துருச்சு,ஒவர் ஹேங்கா இருக்கும்னு நினைக்கிறேன் அதான் உளறிகிட்டு இருக்கிங்க அதுனால அடிச்ச அவனை மறுபடியும் அடிச்சா சரியாப் போயிடும்"

மன்னனும் "சரிதான் நீங்க சொன்னது மறுபடியும் அவன அடிக்கப் போறேன் வரட்டா ஆங்க் ம் .... "அப்புடின்னு சொல்லிபுட்டு போயிட்டாரு.

"பக்கத்துல இருந்து ஊத்திக் கொடுத்த மாதிரியே சொல்லுறாரே" அப்புடின்னு அல்லக்கை மந்திரிகள் பன் ரொட்டியின் அறிவை நினைத்து தங்களுக்குள் வெட்கிக் கொண்டார்கள்.

---------------


வியாழன், 3 செப்டம்பர், 2009

உங்க நேர்மை எனக்கு புடிச்சுருக்கு மாமா

என் பேரு கருணாகரன். படிச்சது B.A ஹிஸ்டரி இல்லை. B.E சிவில். நான் முன்னாடி ஊருல கவர்மெண்ட் இஞ்சினியரா வேலைப் பார்த்தேன். அதை விட்டுப்புட்டு இப்ப சவுதில வேலைப் பார்க்குறேன்.என்னடா 'காக்காசுனாலும் கவர்மெண்ட் வேலை பாக்கனும்"ன்னு நினைக்கிற ஊருல இவன் இஞ்சினியர் வேலையை விட்டுப்புட்டு ஏன் சவுதி வந்தான்னு நினைக்கிறிங்களா? கேளுங்க என் ஸ்டோரிய.....

எனக்கு ஒரு அத்தை மகள். பேரு அம்சவல்லி. என் மேல அவளும் அவ மேல நானும் ரொம்ப பாசம் வச்சிருந்தோம். காலையில் எங்க வீட்டு மொட்டமாடியில நான் தூங்கும் போது வந்து பாயில பக்கத்துல படுத்துக்கிட்டு பல்லு விளக்காம பக்கோடா சாப்பிடச் சொல்லி தொந்தரவு பண்ணுற அளவுக்கு புள்ள எம் மேல ரொம்ப பாசமா இருப்பா.

என்னதான் அத்தை மகளாயிருந்தாலும் முறைப்படி பொண்ணு கேட்கனுமேன்னு எங்க வீட்டுல போயி கேட்கயில எங்க மாமா என் கிட்ட சொன்னாரு "மாப்புளே நான் 1970ல்லே S S L C யிலே ஜில்லா பர்ஸ்ட்டா வந்தேன். படிச்சு முடிச்சதும் எனக்கு உடனே கவர்மெண்டு வேலை கிடச்சுருச்சு.எங்கூட படிச்ச மாப்பிள பெஞ்சுகாரனுல்லாம் இன்னைக்கு துபாய் சவுதின்னு போயி வீடு வாசல் கட்டி நல்லாருக்கும் போது நான் மட்டும் வாடகை வீட்டுலயே காலத்த தள்ளுறேன். அதுனால என் பொண்ண ஒரு துபாயி சவுதில வேலைபார்க்கிற கோடிஸ்வரனுக்குத்தான் கட்டித் தருவேனே தவிர உன்னை மாதிரி ஒன்னாம் தேதி சம்பளக்காரனுக்கு கட்டிக் கொடுக்க மாட்டேன்.அதுனால துபாய் கிபாயி போயி பணத்த சம்பாதிச்சு ஒரு கோடி ரூபாயை இந்த கையில கொடுத்துட்டு அந்த கையில பொண்ணக் கூட்டிட்டு போங்கன்னு' என் பீச்சாங்கையில அடிச்சு சொன்னாருங்க.

பீச்சாங்கையில அடிச்ச அடி வலிச்சாலும் வலிக்காத மாதிரி காட்டிக்கிட்டு "மாமா உங்க நேர்மை எனக்கு புடிச்சுருக்குன்னு" சொல்லிபுட்டு பாத்துகிட்டு இருந்த கவர்மெண்ட் வேலைய விட்டு புட்டு சவுதி வந்துட்டேன்.

சவுதி வந்ததுக்கு ஒரு காரணம் இருக்கு. சவுதிலதான் பொண்ணுங்கள பாக்க முடியாது, தண்ணி கிண்ணி அடிக்க முடியாது. காசு இருந்தாலும் செலவழிக்க முடியாது. அதுனால காசு மிச்சமாகும் சீக்கிரமா ஒரு கோடி தேத்திப்புடலாம்ன்னு வந்தேன்.

வந்து ஒரு அஞ்சு வருசம்னே. ராப்பகலா வேலை பாத்தேன். நாய் படாத பாடு பட்டேன்.மாசம் ரெண்டு லெச்ச ரூவா சம்பளம்னே. வீட்டுக்கு போன் பண்ணுனாக்கூட செலவாகும்னு சிக்கனமா காசு சேத்து ஒரு கோடி ருபா திரட்டிபுட்டேன்.

ரொம்ப சந்தோசமா வந்து மாமனப் பாத்து ஒரு கோடி ரூவாயை காட்டி "இப்ப பொண்ணக் குடுங்க"ன்னு கேட்டேன்னே. அதுக்கு அந்த ஆளு சொல்லுறாரு "மாப்பிளே நீ சவுதி போனவுடனே ஒரு துபாயி மாப்பிள வந்து ஒரு கோடி ரூபா கொடுத்துக் கேட்டாரு அவருக்கு நான் பொண்ணக் கொடுத்திட்டேன். அவளுக்கு கல்யாணமாயி அஞ்சு வருசமாச்சு இப்ப உள்ளூரிலதான் இருக்காங்கன்னு"ன்னு.

மனசு ரொம்ப வலிச்சிதுன்னே. இருந்தாலும் வலிக்காத மாதிரியே காட்டிகிட்டு 'உங்க நேர்மை எனக்கு பிடிச்சுருக்கு மாமா'ன்னு சொல்லிபுட்டு வந்துட்டேன்னே.

அதுக்கப்புறம் எனக்கு வாழ்க்கையே வெறுத்து போயிருச்சுன்னே. வீட்டுக்கு வர்ற வழியிலேயே ஒரு குவார்ட்டர் மானம் கெட்ட மானிட்டரையும் ஒரு பூச்சி கொல்லி மருந்தயும் சேத்தே வாங்கிட்டு வந்துட்டேன். வீட்டுல வந்து ரெண்டையும் கலக்கி குடிக்கப் போகையில யாரோ கதவ தட்டுற சத்தம் கேட்டுச்சு.

யாருடான்னு கதவைத்திறந்து பாத்தா ஒருத்தன் அரக்கப் பறக்க உயிரு போற அவசரத்துல ஓடி வந்தவன் மாதிரி ஒருத்தன் நிக்கிறான். மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்கிகிட்டே அவன் சொல்லுறான்" என் பேரு செந்தட்டிக் காளை உங்க அத்த பொண்ணு அம்சவல்லியைத்தான் நான் கட்டிருக்கேன். நீங்க வந்த விபரம் இப்பத்தான் மாமா சொன்னாரு.உங்க ஒருகோடி ருபா விசயத்தியும் சொன்னாரு. அதான் உங்களப் பாக்க ஓடோடி வந்தேன்"னு.

'என்ன விசயம்'னு அந்த துபாய் மாப்பிள்ளையை கேட்கும் போது அவன் சொல்லுறான்' தம்பி நான் ஒரு ரெண்டு கோடியா தந்துடுறேன். நீயே அம்சவல்லிய கூட்டிகிட்டுப் போப்பா'ன்னு

"என்னங்க சொல்லுறிங்க' அப்படினு நான் கேட்க

"தம்பி கொஞ்சம் நஞ்சமா படுத்துறா.. தீணியா திங்கிறா வாங்கி கொடுத்து மாள முடியல தீனி தின்ன நேரம் போக திட்டு திட்டுன்னு திட்டுறா தாங்க முடியல'ன்னு சொல்லி உட்காந்து கேவி கேவி அழுகிறான்.

அதுக்கு மேல கேட்டுக்கிட்டு இருக்கிறதுக்கு நான் கேனையானா? அடுத்த பிளைட்ட புடிச்சு மறுபடியும் சவுதி வந்துட்டேன்.

'ஒரு தின்னிப்பண்டாரத்த என் தலயில கட்டப்பாத்தானே"ன்னு அந்த துபாயி மாப்பிள்ளைய நினச்சு என் மனசு வலிச்சாலும் உண்மைய சொன்ன அவன் நேர்மை எனக்கு ரொம்ப புடிச்சுருக்குன்னே.


ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2009

இது ஒரு சவுதி ஆதியின் கதை

இடம்:சவுதி அரேபியா தம்மாம் நாள் 10-08-09 நேரம்: காலை 9.00

"வாங்க மூர்த்தி என்ன விசயம்"

"சார் போனவாரம் நம்ம ஆர்டர் பண்ணுன ஸ்டீல் பிளேட் கிடைக்கலியாம். பர்சேஸ் டிபார்ட்மெண்ட்டுலருந்து போன் பண்ணுனாங்க.அது வந்தாத்தான் பேப்ரிகேசன் முடிக்க முடியும். இந்த வாரம் புரடக்சன் ரேட்டு கொடுக்கலின்னா புராஜக்ட் மேனேஜர் திட்டித்தீர்த்துடுவாரு. அதான் உங்ககிட்ட ஐடியா கேட்கல்லாமுன்னு"

"என்ன பிளேட் மூர்த்தி,ஸ்பெசிபிகேசன் என்ன?"

"A333 சார்"

"கெமிக்கல் காம்போசிசன் பாருங்க மூர்த்தி, A333க்கு பதிலா A516 வாங்கலாம்.516 மார்க்கெட்டுல சுலபமா கிடைக்கும்.அத வாங்கி வேலையை முடிங்க. அப்படியே கிளையண்டுக்கும் இன்பார்ம் பண்ணிச்சொல்லிடுங்க."

"சரி சார் அப்படியே பண்ணிடுறேன் சார். அதெப்படி சார் எதையும் ரெபர் பண்னாம கரக்டா சொல்லுறிங்க."

"பர்சேஸ்ல பத்து வருசம் அனுபவம் மூர்த்தி. எந்த பொருள எப்படி வாங்கனும்னு நமக்கு அத்து படி"
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இடம்:சவுதி அரேபியா தம்மாம் நாள் 12-08-09 நேரம்: மாலை 7.00

"அட பாஸ்கர் என்ன இந்தப்பக்கம்"

"அடுத்த மாசம் ஊருக்கு போறேன் சார் அதான் பர்சேஸ் பண்ணலாம்னு வந்தேன், நீங்க கூட அடுத்த வாரம் ஊருக்குப் போறிங்கன்னு கேள்விப்பட்டேன்"

"ஆமா பாஸ்கர் பட் நான் எல்லா பர்சேஸையும் முன்னாடியே முடிச்சிட்டேன்."

"உங்களப்பத்திதான் தெரியுமே சார் எனக்கு நீங்கதான் எந்த பொருளையும் பார்த்து பார்த்து வாங்கிறதுல கில்லாடியாச்சே"

"ரொம்ப புகழாதிங்க பாஸ்கர், கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறோம் அந்த காசுக்கு சரியான பொருளை வாங்குனாத்தானே நம்மல்லாம் விவரமான ஆளுன்னு அர்த்தம்"

'எனக்கு கூட இப்ப ஒரு லேப்டாப் வாங்கனும் சார், உங்களுக்கு நேரமிருந்தா வரமுடியுமா சார்"

"அதுக்கென்ன பாஸ்கர் வாங்க நல்ல லேப்டாப்பா பாத்து வாங்கிடுவோம் எனக்குத் தெரியாததா?"
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இடம்:தமிழ்நாடு கீழக்கரை நாள்:19-08-09 நேரம்:காலை 11.00

"மீனு வாங்கப்போயி இவ்வளவு நேரமா? இந்நேரத்துக்கு கடல்லய போயி மீன புடிச்சு கொண்டாந்திருக்கலாம்"

"கடைல்ல கூட்டமா இருந்துச்சு புள்ளே, அதான் லேட்டு"

"எங்கயாவது கூட்டாளிகளோட வெட்டி அரட்டை அடிச்சுட்டு வந்துட்டு கடையில கூட்டமுன்னு ஏன் பொய் சொல்லுறிங்க கொண்டாங்க அந்த மீன குழம்பக் கூட்ட"

"இந்தா, என்னைக் குறை சொல்லாம உனக்கு பொழுது விடியாதே"

"அய்யய்யே என்ன மீனு இது எந்தக் கடையில வாங்கினிங்க"

"ஏன் எல்லாம் தெரிஞ்ச கடைதான் இப்ப என்ன அதுக்கு"

"இப்ப என்ன அதுக்கா? பாருங்க எல்லா மீனும் நொந்து போயிருக்கு. மீனு வாங்கும் போது செவுள திறந்து நல்லா சிவப்பா இருக்கான்னு பாத்து வாங்கனும் அந்த திறமைல்லாம் உங்ககிட்ட இருந்தாதான் உள்ளூரிலயே பொழைப்பிங்களே.என்னை ஏமாத்துங்கன்னு நெத்தில எழுதி வச்சிகிட்டுதான் கடைக்கு போவிங்களோ, நீங்கள்ளாம் சவுதில எப்படி பொழைக்கிறிங்கன்னே தெரியல்லியே.......-@#$$%$$##@@##$@#@@#"
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

புதன், 19 ஆகஸ்ட், 2009

இன்னைக்கும் புளிச்சாறும் பொட்டுக்கடலை துவையலும்தானா

கடைசி கொச்சைக் கயிற்றை கரண்டியால் வெட்டி சாரக்கம்பை எடுத்து கீழே போட்டான் இன்பராசு.ரெண்டு எட்டு விலகி தலையை அண்ணாந்து அவன் கொஞ்சம் முன்னாடி பூசுன சுவத்த ஏற இறங்க ஒரு பார்வை பாத்தான்.
"ம்ம்" ஒரு திருப்தியோட மண்டைய ஆட்டிக்கிட்டு கைலில்ல சட்டையில ஒட்டிக்கிட்டு இருந்த சிமிட்டிக் கலவையை ஒரு உதறு உதறினான். டவுசர் பாக்கட்லருந்து செய்யது பீடி ஒன்னு எடுத்து பத்த வச்சு ஆழமா புகையை ஒரு இழுப்பு இழுத்தான்.

"கலவை கொஞ்சம் மிஞ்சியிருக்கே என்னங்க பண்ணுறது"சித்தாள் ஆராயி இன்பாவை கேட்டாள்."நாலு சட்டி மண்ணப்போட்டு பிறட்டி வை.நாளைக்கு சேத்து பிறட்டிக்கலாம்" னு சொல்லிட்டு பக்கத்துல இருந்த குடத்துல தண்ணி எடுத்து கை கால் முகம் கழுவி கைலியிலேயே முகத்த துடைச்சிகிட்டான்.

மறுபடியும் டிரவுசர் பாக்கட்ல கையை விட்டு பணத்த எடுத்து எண்ணிப்பார்த்தான்."இருநூத்திப்பத்துதான் இருக்கு வீட்டுல அமுதாவுக்கு காசு கொடுத்து நாலு நாளாச்சு நாளக்கி மேஸ்திரிகிட்ட காசு வாங்கனும்"னு நினைச்சுகிட்டு ஆராயிக்கு கூலி கொடுத்தான். "நாளைக்கு வெள்ளன வா எப்பவும் மாதிரி ஒம்போதரைக்கு மேல ஆடி அசைஞ்சு வராதே"ன்னு சொல்லிட்டு அங்கன காம்பவுண்ட் சுவத்துல சாத்தியிருந்த சைக்கிள எடுத்து மிதிச்சு செக்கடிக்கு வந்தான்.

செக்கடி எப்பவும் போல கசகசன்னு கூட்டமா இருந்தது.வேலை முடிஞ்சு வீட்டுக்குப் போறதுக்காக சித்தாளு கொத்தனாரு,நிமிந்தாளு வேலை பார்க்குறவுங்க பஸ்ஸ எதிர்பார்த்து நின்னுகிட்டு இருந்தாங்க. தெரிஞ்சவுங்களப் பாத்து சிரிச்சுக்கிட்டே இன்பா சைக்கிள மனிஸு பேக்கரி முன்னாடி நிறுத்தினான். ஒவ்வொரு மேஸ்திரிக்கும் வேலைக்கு ஆளு பிரிச்சு விடறுத்துக்கு ஒரு டீக்கடை இருக்கும் வேலைக்கு ஆளு பிரிச்ச மாதிரியும் ஆச்சு வேலை பாத்து வர்றவுங்களுக்கு டீ வாங்கி கொடுத்த மாதிரியும் ஆச்சு.மேஸ்திரிய பார்க்க முடியாட்டா ஊருக்குப் போறதுக்கு அஞ்சு பத்து கடன் கூட கடையில கிடைக்கும். இன்பாவோட மேஸ்திரிக்கு மனிஸ் பேக்கரிதான் ஆளுங்கள பிரிச்சு விடுற இடம்.

"டீ போடவா இன்பா"ன்னு டீ மாஸ்டர் முனியசாமி கேட்டான். "வேனாம் முனி காலயிலருந்து சாரத்துல நின்னு உடம்பு பூரா வலிக்குது பெரிய டீ சாப்பிட்டாத்தான் சரியா வரும். என் சைக்கிள சித்தப் பாத்துக்க இந்தா வந்துற்றேன்'னு சொல்லிபுட்டு இன்பா நாலு கடை தள்ளியிருக்கிற டாஸ்மாக் கடைக்குப் போனான்.

"ஒரு எம்சி குடுங்க"ன்னு வாங்கி கடைஒரமா சந்துவிட்டு உள்ள இருந்த பாருக்குப் போனான்."அண்ணே ஒரு அவிச்ச முட்ட, தண்ணி ப்பாக்கட்டு ஒன்னு கொடுங்க"ன்னு கேட்டு வாங்கினான். பெரிய சர்பத்து கிளாஸ்ல பாட்டில் தலைய திருகி எல்லாத்தியும் ஊத்தினான். கிளாஸ் விளிம்புலருந்து ரெண்டு இஞ்சு மட்டும் குறைவா இருந்த சரக்குமேல கொஞ்சூண்டு தண்ணிய ஊத்தினான்.ஒரு கையில் கிளாசயும் இன்னொரு கையில முட்டையையும் எடுத்து கிளாஸ மோந்து பாத்து முகத்த ஒரு சுளிப்பு சுளிச்சு கடகடன்னு சரக்க வாயில கவுத்தி அதுக்கு பின்னாடியே அவுச்ச முட்டையையும் அனுப்பினான்."எவ்வளவு ஆச்சுனே" ன்னு பார் வச்சிருந்தவருட்ட கேட்டான் காச கொடுத்துபுட்டு "நாளைக்கு பாப்போன்னே"ன்னு சொல்லி வெளியே வந்தான்.

மனிஸ் பேக்கரி முன்னாடி இப்ப கூட்டம் இல்லை. பஸ்ஸு வந்து போயிருக்கும்ன்னு நினைச்சுகிட்டு 'வர்றேன் முனி நாளக்கு பாப்போம்"ன்னு சைக்கிள எடுத்தான் டீ பட்டறையை விளக்கி சுத்தம் பண்ணிகிட்டு இருந்த முனியசாமியின்"டெய்லி குடிக்கிற பாத்துக்கப்பா உடம்ப"ன்னு வந்த கரிசனத்த அலட்சியப்படுத்தி சைக்கிள மிதிக்க ஆரம்பிச்சான்.
இன்பாவோட ஊருக்கு பஸ்ஸு ஏழு மணிக்கு மேல கிடையாது. நினைச்ச நேரத்துக்கு சுத்திப்புட்டு ஊருக்குப் போகமுடியாது.சைக்கிள்ள போனா ரொம்ப லேட்டாகும்னாலும் அதான் அவனுக்கு வசதி.

வீட்டுக்கு வந்து சைக்கிள நிறுத்தி முள்ளு வேலியில பனைமட்டயால அமுதா செஞ்சி வச்சிருந்த படலைத்தள்ளி சைக்கிளை நிப்பாட்டி ஸ்டாண்ட போட்டு பூட்டினான். வீட்டுக்கதவு ஒருக்களிச்சு சாத்தியிருந்தது.குழந்தைகளோட தூங்கிகிட்டுருந்த அமுதா புருசன் சத்தம் கேட்டு கண்ணு முழிச்சா. "ஒம்போது மணிக்குள்ள என்ன தூக்கம் பொம்பளக்கி வந்து சோத்தப்போடு பசி வயித்த கிள்ளுது"ன்னு இன்பா சத்தம் போட்டுக்கிட்டே சட்டையை கழட்டி சுவத்துல ஆணியில மாட்டிப்புட்டு சாப்பிட உட்கார்ந்தான்.

அமுதா தட்டுல சோத்தப்போட்டு மூடி வச்சுருந்த வெஞ்சன கிண்ணத்த எடுத்து இன்பா பக்கத்துலா வச்சா."லூசு சிறுக்கி இன்னைக்கும் புளிச்சாறும் பொட்டுக்கடலை துவையலும்தானா? மீனு கருவாடு ஆக்கக்கூடாது ஒரு கருவாட கிருவாட சுட்டு வச்சா குறைஞ்சா போயிடுவே" இன்பா பசி ஆத்திரத்துல கத்துனான்."எங்க மறுபடியும் சொல்லு. எத்தன நாளிக்கு முன்னாடி நீ செலவுக்கு காசு கொடுத்த தெரியுமா நாலு நாளிக்கு முன்னாடி அதுவும் நூறு ரூவா.ரெண்டு பிள்ளகள வச்சிகிட்டு அது எவ்வளவு நாளக்கி வரும்.காலையில ஐஸ் வண்டிக்காரன் வந்து வாங்கிதரலேன்னு சின்னவன் எப்புடிக் கத்துனான்னு உனக்கு தெரியுமா பச்ச பிள்ளங்களுக்கு ஒரு பண்டம் பச்சனம் வாங்கி தர்றதுக்கு கூட நீ தர்ற காசு பத்தாது ஒரு நா ஒரு பொழுது குடிக்காம இருந்துருக்கியா குடிச்சு கொள்ளயில போற காச கையில கொடுத்தா ஆக்கிப் போட மாட்டேன்னா சொல்லுறேன் மீனு வேனுமாம்ல மீனு இஷ்டமிருந்தா சாப்பிடு இல்ல பொத்திக்கிட்டு படு"ஆங்காரமாய் அமுதா சாமியாடினாள்.அதோடு அவன சட்டை பண்ணாம பாயில் புள்ளங்களோட மறுபடியுடி படுத்துகிட்டா.


"இந்த கருமத்த யாரு தின்பா"பசி ஆத்திரத்தில் இன்பா வெஞ்சனக் கிண்ணத்த எடுத்து சுவத்துல எறிஞ்ச்சான். பொட்டுக்கடலை தொவயலு சுவத்துல பல்லி மாதிரி ஒட்டிக்கிருச்சு.பக்கத்துலயே அவனும் சுருண்டு படுத்துக்கிட்டான்.
கொஞ்ச நேரத்துக்கப்புறம் யாரோ தட்டுகள உருட்டுற மாதிரி சத்தம் கேட்டு அமுதா தலய தூக்கிப் பாத்தா.இன்ப ராசுதான் தட்டுல சோத்த அவதி அவதியா அள்ளி வாயில போட்டுக்கிட்டுருந்தான்.தலைய திருப்பி சுவத்த பாத்தா அமுதா.

அதுல தொவயல் இல்ல. வழிச்ச தடம் மட்டும் இருந்தது.



ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2009

வெள்ளை எம்ஜியாரு நல்லவரான கதை

ரொம்ப காலத்துக்கு முன்னாடி ஒரு காட்டுல ஒரு வழிப்பறி திருடன் இருந்தான்.ஆளு வெள்ள வெள்ளேருன்னு சிவப்பா அழகா இருந்ததுனால அவன எல்லோரும் வெள்ள எம்சியாருன்னு கூப்பிடுவாங்க.அவனுக்கு ஒரு மகன் அவன் கருப்பா கொஞ்சத்துக்கு கொஞ்சம் களையா இருப்பான் அதுனால அவன கருப்பு எம்சியாருன்னு எல்லோரும் கூப்புடுவாங்கன்னு நினைச்சிங்கன்னா அது தப்பு. ஆனா அவன் மட்டும் தன்னைத்தானே கருப்பு எம்சியாருன்னு கூப்பிட்டுக்கிட்டுருந்தான்.

அந்த காட்டுப்பக்கம் வண்டி கட்டிக்கிட்டு போற ஆளுகங்கிட்ட ஒரு அட்டைக்கத்தியைக் காட்டி வழிப்பறி பண்ணுறது வெள்ளை எம்சியாரோட தொழிலு. காசு பணத்த பறி கொடுத்தவுங்க அவன திட்டி தீர்ப்பாங்க, ஊருல்ல அவனுக்கு நல்ல பேரும் கிடையாது. இப்படி இருக்கையில ஒருநாளூ அவனுக்கு உடம்பு ரொம்ப முடியாம போயிடுச்சு.சாகுற நிலைமையில இருக்கும் போது அவன் மகன் கருப்பு எம்சியாரா நினைச்சுகிட்டு இருக்குறவன கூப்பிட்டு "அட கருப்பா நான் சாகப்போறேன் நானோ ஒரு திருடன் அதுனால இந்த சனமெல்லாம் என்ன கெட்டவன்னு கூப்புடுது நீ என்ன செய்வியோ ஏது செய்வியோ எனக்குத் தெரியாது. ஆனா இந்த உலகம் என்னை நல்லவன்னு கூப்புடனும்"ன்னு சொல்லிட்டு கண்ண மூடிப்புட்டான்.

என்னடா அப்பா இப்படிச் சொல்லிட்டாங்க அவுகளோ பக்காத் திருடன் அவுகளப் போயி எப்படி நல்லவனாக்குறதுன்னு கருப்பன் தன்னோட புள்ளிவிபரம்ல்லாம் உளர்ற வாயில டாஸ்மாக் சரக்க ஊத்திக்கிட்டே யோசிச்சான். பளிச்சுனு அவனுக்கு ஒரு ஐடியா வந்தது.

மறுநாள் இவனும் அவுங்க அப்பன மாதிரியே காட்டுல வழிப்பறிக்கு யாரோடயும் கூட்டுச் சேர்க்காம ஒத்தையாளா கிளம்புனான்.காட்டு வழியே வந்தவுங்கள கால சுழட்டி சுழட்டி அடிச்சு எல்லாத்தையும் புடுங்குனான். அத்தோட அவங்கப்பன் பண்ணாத இன்னோரு வேலையும் செஞ்ச்சான் காசு பணத்த பறி கொடுத்தவுங்க கோவனத்தையும் உறுவி எடுத்துக்கிட்டான்.

இப்ப ஊருல்ல எல்லோரும் என்ன சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க 'அப்பன்காரன் வெள்ளை எம்சியாரு ரொம்ப நல்லவன் காசு பணத்த மட்டும்தான் புடுங்குனான். ஆனா இந்த கருப்பன் இருக்கிற கோவணத்த கூடல்ல உறுவுறான் ரொம்பக் கெட்டவனா இருக்கானே"ன்னு புலம்ப ஆரம்பிச்சிட்டாங்க.
இப்படி ஒருவழியா கருப்பன் அவன் அப்பன ரொம்ப நல்லவனாக்கிட்டான்

பின் குறிப்பு: இது முழுக்க முழுக்க கற்பனைக் கதையே யாரையும் குறிப்பிடுவது அல்ல.நீங்க யாரையும் கற்பனை பண்ணிக்கிட்டிங்கனா அதுக்கு நான் பொறுப்பு இல்லை, என கரம் சிரம் தாழ்த்தாமல் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.