அனைவருக்கும் வணக்கம்
மீண்டும் உங்கள் அனைவரையும் பதிவுலகத்தில் சந்திப்பதில்
பெரு மகிழ்ச்சி.
இந்தப் பதிவின் மூலம் எனது சமீபத்திய சோதனையை பதிவுலக
நண்பர்கள் அனைவரின் முன்னும் வைக்கிறேன். அதில் யாரேனும்
ஒருவர் இந்த சோதனையைக் கடக்க வழி சொன்னால் மிகவும்
மகிழ்சி அடைவேன்.
சோதனை இதுதான்
கடந்த மூண்றாண்டுகளாக நான் சவுதி அரேபியாவில் வேலை
பார்த்தேன். என்னுடைய கடவுச்சீட்டு நான் சவுதியில் வேலைப்
பார்க்கும் போதே கடந்த 2007 வருடம் காலாவதியாகிவிட்டது.
எனவே அது சவுதி ரியாத் இந்திய தூதரகத்தில் புதுப்பிக்கப்பட்டது
இந்த கடவுச்சீட்டில் என்ன வேடிக்கை என்றால் வழக்கமாக பொறியாளர்களுக்கு
வழங்கப்படும் ECNR எனப்படும் "குடியேற்ற சோதனை தேவையில்லை" என்னும்
தகுதி வழங்கப்படவில்லை. நானும் அது குறித்து ஐயப்படவில்லை. ஏன் எனில்
அந்த கடவுச்சீட்டின் மூலம் நான் 3 முறை இந்தியாவுக்கும் இரண்டு
முறை சவுதிக்கும் பயணம் செய்திருக்கிறேன்.
ஆட்குறைப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்டு நான் கடந்த 2009 செப்டம்பர்
மாதம் தாயகம் திரும்பினேன். 9 மாதங்கள் ஊரிலேயே காலம் கழித்தபின்
கடந்த 2010 மே மாதம் மறுபடியும் சவுதி நிறுவனம் ஒன்றுக்கு
நேர்முகத்தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டேன். பயண ஏற்பாட்டினை
நேர்முகத்தேர்வி்னை ஏற்பாடு செய்த பயண அலுவலகமே பொறுப்பேற்றுக்
கொண்டது. அவர்களும் இந்த ECNR தகுதியை ஆராயாமல் எனக்கு விமான
பயணச்சீட்டு வழங்கினர். இதை எடுத்துக் கொண்டு சென்னை விமான
நிலையம் சென்ற எனக்கு சோதனை ஆரம்பம் ஆயிற்று. குடியேற்ற
சோதனை அதிகாரிகள் உனது கடவுச்சீட்டில் ECNR முத்திரை இல்லாததால்
நீ பயணம் செய்ய இயலாது என கைவிரித்தனர்.
உடன் பயணம் ஏற்பாடு செய்த அலுவலகத்தினை தொடர்பு கொண்டபோது
அவர்கள் நாங்கள் ஏதும் செய்ய இயலாது உடன் உங்கள் அருகாமையிலுள்ள
கடவுச்சீட்டு அலுவலகம் சென்று விண்ணப்பித்து முத்திரையை பெற்றுக்
கொண்டு பின் பயணம் செய்யவும். இதற்கு நீண்ட காலம் ஆகாது. காலையில்
கொடுத்தால் மாலையில் வழங்கி விடுவார்கள். செல்லும் போது உங்கள் பட்டச்
சான்றிதழ்களின் அசலைக் கொண்டு செல்லவும் என அறிவுரை வழங்கினார்கள்.
அதன்படி நான் என் ஊரின் அருகாமையிலுள்ள மதுரை கடவுச்சீட்டு அலுவலகம்
சென்று விண்ணபித்த போது அங்குள்ள அதிகாரி கூறினார். தம்பி உனது கடவுச்சீட்டு
சவுதியில் வழங்கப்பட்டுள்ளது. எனவே உனக்கு மாவட்ட காவல் துறை மூலம் ஆய்வு
செய்யப்பட்டே முத்திரை வழங்கப்படும். குறைந்தது அதற்கு பதினைந்து நாட்கள் ஆகும்
எனக்கூறி எனது பள்ளிச்சான்றிதழ் முதல் பட்டச்சான்றிதழ் வரை அசல் சான்றிதழ்களை
ஆய்வு செய்த பின் பணம் கட்டிச்செல் எனக்கூறினார்.அதன்படி நானும் பணம் கட்டி
எனது அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் அசல் கடவுச்சீட்டினையும் ஒப்படைத்து
வீடு திரும்பினேன்.
பத்து நாட்கள் கடந்தபின் எனக்கு உள்ளூர் காவல் நிலையத்தில் அழைப்பு வந்தது.எனது
அசல் சான்றிதழ்களை பார்வையிட்ட அதிகாரி எனது குடிமைப்பொருள் வழங்கும் அட்டையைப்
பார்வையிட்டப் பின் கூறினார். தம்பி உனது கடவுச்சீட்டில் ஒரு முகவரியும், குடிமைப்பொருள் வழங்கு
அட்டையில் ஒரு முகவரியும் உள்ளதே என வினவினார். ஆம் ஐயா நான் முதல் கடவுச்சீட்டு எடுக்கும்போது வாடகை வீட்டில் இருந்தேன். பின்னர் 6 வருடங்கள் கழித்து சொந்தவீடு கட்டி
மாறி விட்டேன் எனக் கூறினேன். மேலும் ECNR முத்திரைக்கு எனது பட்டச்சான்றிதழே போதுமானது
என கூறினேன். அதை ஏற்காத காவல் அதிகாரி இராமநாத்புரம் வட்ட வருவாய் அலுவலகம்
சென்று உனது பழைய குடிமைப்பொருள் வழங்கு அட்டையின் அசலை கொண்டு வந்தால்தான் நான் உனது விண்ணப்பத்தினை நிறைவு செய்து அனுப்புவேன் எனவே அதற்கான முயற்சியில் இறங்கு என வேறு அலுவலில் மூழ்கினார்.
வட்ட வருவாய் அலுவலகம் செல்வது என்பது எனக்கு பள்ளி பயிலும் காலம் தொட்டு
வேப்பங்காய் சுவைப்பது போல. பல முறைகள் இருப்பிடச்சான்றிதழ்களுக்கும் சாதி
சான்றிதழ்களுக்கும் அலைந்து திரிந்து அங்குள்ள அதிகாரிகளின் அலட்சியப்போக்கினையும்
காலம் கடத்தும் அவலத்தினையும் நன்கு அறிந்தவன்.
கசப்போடு வீடு திரும்பிய எனக்கு ஒரு இனிப்பான செய்தி காத்திருந்தது. அது அஞ்சலகம் மூலமாக
பதிவு அஞ்சலில் வந்த எனது அசல் கடவுச்சீட்டு. திறந்து பார்த்தபோது உள்ளே
இரண்டாம் பக்கத்தில் வழங்கப்பட்டிருந்த எனது ECR முத்திரை அழிக்கப்பட்டு ECNR வழங்கப்பட்டிருந்தது
மதுரை கடவுச்சீட்டு அலுவலகத்தினால்.
எந்த அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தேனோ அதே அலுவலகம் மூலம் கடவுச்சீட்டு வழங்கப்படும்
போது நான் வேறு என்ன செய்வேன் அப்பன் முருகனுக்கு நண்றி கூறிவிட்டு அடுத்த பேருந்தில் ஏறி
சென்னை சென்று விமான பயணச்சீட்டினை மாற்றி அன்றிரவே சவுதி வந்து சேர்ந்தேன்.
இங்கு வந்த பின் ஒரு மாதம் கழித்து என் தாயார் ஒரு முறை தொடர்பு கொண்டு உன்னை காவல்
அதிகாரி வந்து கேட்டார். அவரிடம் நீ சவுதியில் இருப்பதாக கூறினேன் என சொன்னார்.
நமக்கு கடவுச்சீட்டு வந்து விட்ட்து இவர் எதற்கு மறுபடியும் தேடுகிறார் என நானும் அந்த
தகவலுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. பின்னர் ஒரு மாதம் கழித்து என் தாயார்
எனக்கு கடவுச்சீட்டு அலுவலகத்தில் இருந்து ஒரு கடிதம் வந்ததாக மின் அஞ்சலில் அந்த கடிதத்தினை அனுப்பினார்.
அதில் கடவுச்சீட்டு அலுவலகம் இவ்வாறு கூறியிருந்தது.
உன்னைப்பற்றி காவல்துறை தகவல்கள் எதிர்மறையாக இருப்பதால்
இந்த கடிதம் கண்டதும் உடனே உனது கடவுச்சீட்டை மதுரை அலுவலகத்தில் ஒப்படைக்கவும்
தவறினால் உன் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எழுதியிருந்தது.
"அடப்பாவிகளா நீங்கள்தானே கடவுச்சீட்டை அஞ்சலில் அனுப்பினீர்கள் அதைக்கொண்டு நான்
சவுதி வேறு வந்து விட்டேன் இங்கிருந்து உனக்கு எப்படி நான் கடவுச்சீட்டை ஒப்படைப்பது
ஒன்னும் புரியவில்லையே என நான் ஒரு மின் அஞ்சல் மதுரை கடவுச்சீட்டு அலுவலகத்திற்கு
அனுப்பி வைத்தேன்.
அதற்கு பதில் அஞ்சல் அனுப்பிய அதிகாரி நீ ஊருக்கு வரும்போது உனது கடவுச்சீட்டை ஒப்படைக்கவும்
என எழுதியிருந்தார்.
இப்போது என் குழப்பமெல்லாம்
நான் ஊருக்கு வந்தால் என் கடவுச்சீட்டை பறிமுதல் செய்வார்களா?
மறுபடியும் வட்ட வருவாய் அலுவலகம் சென்று குடிமைப்பொருள் வழங்கு அட்டையினை
வாங்கச் சொல்வார்களா?
ஒரு பொறியாளனுக்கு குடிமையேற்ற சோதனை தேவை இல்லை என சொல்லுவதற்கு
அவனது பட்டச்சான்றிதழ் போதாதா?
நாட்டில் அவனவன் போலி கடவுச்சீட்டுகளை வைத்துக் கொண்டு பெயர் மாற்றம் செய்து
கொண்டு என்னென்ன போக்கிரித்தனமெல்லாம் செய்கிறான்கள் அவர்களை விட்டு விட்டு
அப்பாவி பொறியாளன் ஒருவனை காவல் துறை எதிர்மறை தகவல் என பயமுறுத்தும்
இந்த கடவுச்சீட்டு அலுவலகத்தினை என்ன செய்தால் தகும்?
பேசாமல் நான் ஒன்று செய்யலாம் என இருக்கிறேன். நாட்டுக்கு வந்து
போங்கடா நீங்களும் உங்கள் கடவுச்சீட்டும் என கடவுச்சீட்டை வீசியெறிந்து
விட்டு உள்ளுரிலேயே ஒரு பெட்டிக் கடை வைத்து பொழப்பைப் பார்க்க வேண்டியதுதான்!!!!!