எங்க வீட்டில் ஒரு சேட்டைக்காரர் இருக்கிறார். அவர் இந்த வேட்டைக்காரனின் தீவிர ரசிகர். இதைப் பற்றி நான் ஏற்கனவே ஒரு பதிவு எழுதியிருக்கிறேன்.
ரமேஷ் தியேட்டரின் கேண்டின் காபி போல ஆறி அவலான ஒரு கதை. இயக்குனர் பாபு சிவன் கதைக்காக ரொம்ப யோசிக்கவில்லை. விஜயின் பழய திருப்பாச்சி கதையையே கொஞ்சம் மாற்றிப் போட்டிருக்கிறார். என்ன திருப்பாச்சியில் விஜய் திருப்பாச்சியிலிருந்து சென்னை செல்வார். இதில் தூத்துக்குடியிலிருந்து சென்னை செல்கிறார்.
பிளஸ் டூவில் நான்கு வருடம் பெயிலான கதாநாயகனுக்கு 21 வயதுதான் இருக்கும். 30க்கு மேல் போன விஜயை 21 வயது கல்லூரி மாணவனாக கற்பனை செய்ய முடியவில்லை. ஒரு வேளை பிளஸ் டூவில் நான்கு வருடம் பெயிலானது போல் ஒவ்வொரு வகுப்பிலும் நான்கு நான்கு வருடம் பெயிலாயிருப்பார் போலும் கதை போகிற வேகத்தில் இயக்குநர் இதை சொல்ல மறந்து விட்டார்.
அருந்தததீயில் கலக்கிய அனுஷ்காவிற்கு இதில் மிஸ்டர் பாரத் படத்தில் அம்பிகா கலக்கியது!!! போல ஒரு கனமான வேடம். மிக மிக நிறைவாக செய்திருக்கிறார்!!!!.
சத்யன் இறந்து அவரது உடல் பெட்டியில் வரும் போது என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த என் அண்ணன் மகன் பிரபு "சித்தப்பா இப்ப ஒரு காமடி வருது பாருங்க"ன்னான். என்னடான்னா விஜய் அழுவது அவனுக்கு காமடியாம். சின்னப் பையன் துள்ளாத மனம் துள்ளும் படத்தினை பார்த்திருக்க மாட்டான் போல இருக்கிறது. அவனுக்கு பழய வேட்டைக்காரன் எம்.ஜி. ஆர் அழுவதை ஒரு நாள் காட்டினால் அவன் கருத்தினை மாற்றிக் கொள்வான் என நினைக்கிறேன்.
என்கவுண்டருக்கு தப்பி நதியில் ஓடி அருவியில் விஜய் குதிக்கும் காட்சியைப் பார்க்கும் போது இயக்குநர் பாபு சிவன் நம்ம பிரேவ் ஹார்ட் புகழ் மெல் கிப்ஸனின் அகோபலிப்டா படத்தினைப் பார்த்திருப்பது சட்டென்ன பிடிபடுகிறது. குதிப்பது விஜய்தானா என நான் சந்தேகம் எழுப்ப உடனே என் பக்கத்தில் அமர்ந்து படம் பார்த்துக் கொண்டிருந்த என் மனைவி என் விலாவில் இடித்து " அவருக்கு பங்கி ஜம்பெல்லாம் தெரியும். ஏற்கனவே குஷி படத்தில் குதித்து இருக்கிறார்" என என் சிற்றறிவுக்குப் புரிய வைத்தாள். அப்பத்தான் எனக்கு ஒரு விஷயம் பிடிபட்டது. எப்படி எங்க வீட்டு சேட்டைக்காரர் வேட்டைக்காரனின் ரசிகர் ஆனார் என்பது. "தாயைப் போல் பிள்ளை".

படத்துல உண்மையான ஒரு ஆறுதல் பங்கெல்லாம் வச்சிகிட்டு மிரட்டியிருக்கிற செல்லா கேரக்டர். Really Hats off.
படம் பார்த்துட்டு வந்த மறுநாளு (நேத்து ) K டிவில மோனிஷ என் மோனலிசா படத்தினை எங்கண்ணன் பையன் பிரபு உட்கார்ந்து பாத்துகிட்டு இருந்தான். "எப்படிடா இந்த படத்தல்லாம் இவ்வளவு தைரியமா பார்க்குற எங்கிருந்துடா உனக்கு இவ்வளவு தைரியம் வந்தது"ன்னு கேட்டா அதுக்கு அவன் சொல்லுறான் " எல்லாம் வேட்டைக்காரன் படம் பாத்ததுனாலதான் சித்தப்பா"ன்றான். ஆஹா இந்த தமிழ் இளைய சமுதாயம் எதையும் தாங்கும் இதயம் பெற நம்ம விஜய் குருவி,வில்லு, வேட்டைக்காரன் அப்படின்னு அடுத்தடுத்து முயற்சி செஞ்சுகிட்டு இருக்கிறத நினைக்கும் போது அவரை எவ்வளவு பாரட்டுனாலும் தகும்.

ரமேஷ் தியேட்டர்ல ஒரு டிக்கட் விலை 100 ரூபாய். சேட்டைக்காரர் அடம் பிடிச்சதுனாலயும் மொஹரம் பண்டிகை விடுமுறைக்காக அண்ணன் பிள்ளைங்க தங்கச்சிப் பிள்ளைங்க எல்லாம் வீட்டுக்கு வந்ததாலயும் படை பட்டாளத்தோட தியேட்டருக்கு போனதுல 2000 ரூபா அவுட்டு.
இருந்தாலும் " நான் அடிச்சா தாங்க மேட்டேய் நாலு மாசம் தூங்க மேட்டேய் வீடு போயி சேர்ர்ற மேட்டேய்"ன்னு எங்க வீட்டு சேட்டைக்காரர் அப்பப்ப படிக்கும் போது படம் பாத்ததுல ஒரு சொல்லவொன்னா திருப்தி கிடைக்குது.